பொருளடக்கத்திற்கு தாவுக

நட்பும்,  தயையும், கொடையும் …

  சித்திரமும் கைப் பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்

வைத்ததொரு கல்வி மனப்பழக்கம் – நித்தம் நடையும் நடைப்பழக்கம்

 நட்பும் தயையும் கொடையும் பிறவிக் குணம் – ஔவையார் தனிப்பாடல்கள்

பள்ளி ஆண்டு  விடுமுறை ஆரம்பித்தாயிற்று.

அந்த அடுக்கு மாடி குடியிருப்பின் இளம் ( வருங்கால)  கிரிக்கெட் வீரர்கள் கிளம்பினர்.  பாவை நோன்புக்கு அழைக்கும் பெண்கள் போல ஒவ்வொரு வீட்டில் இருந்தும் நண்பர்களை அழைத்தபடி மாடிப்படிகளில் இறங்கினார்கள்.  கீழே  இறங்கியதும்  பத்து பேர் தானே இருக்கோம். மீதி பேரும்  வரட்டும் என்றான் ஒருவன்.  சுரேஷ் வீட்டில அவன் அம்மா வந்து கதவை திறந்தாங்க – அவன் வர மாட்டான் ஒன்பதாம் வகுப்பு வந்தாச்சு இல்ல – அவன் படிக்கனும் – அதனால் இனிமே விளையாட  வர மாட்டான்னு சொல்லிட்டாங்க.  அதைக் கேட்டே  என்னவோ, கீழ் ப்ளாட்  வீட்டு மாதவன் வீட்டுலேயும் அப்படியே அவன் வர மாட்டான்னு சொல்லி கதவை சாத்திட்டாங்க. அவனும் இந்த வருஷம் ஒன்பதாம் வகுப்பு தானே.

ரொம்பத்தான் –  என்றவன், சரி நாம மட்டும்  போய் விளையாடலாம் என்று  சொல்லவும், அவர்கள்  கிளம்பினார்கள்.   மட்டை, பந்து இத்யாதி சாதனங்கள் ஆளுக்கு ஒருவராக தூக்கிக் கொண்டனர். மாது வீட்டில போய் பந்தை வாங்கிட்டு வாடா என்று ஒருவனை சொல்லிக் கொண்டிருக்கும் போதே அவனே வந்தான்.  எங்கம்மா போக க்கூடாதுன்னு சொல்லிட்டாங்க. பந்தை மட்டும் குடுத்துட்டு வரேன் ன்னு சொல்லிட்டு வந்தேன் எனவும் கூடியிருந்தவர்கள் பாவம் டா என்றனர்.   கிரியும் தான் ஒன்பதாம் வகுப்பு அவன் வரானே –

வழக்கமாக விளையாடும் இடத்தில் ஏதோ மீட்டிங். பந்தல் போட்டு சேர் அடுக்கி வைத்திருந்தது.

கிரிக்கெட் வீரர்கள் வேறு இடம் தேடி நகர்ந்தார்கள்.  நடந்து நடந்து இடம் தேடி விசாலமான வெற்றிடம் வா வா என்று அழைப்பது போல இருக்கவும், ஸ்டம்பை நட்டு வெளி வட்டம் குச்சியால் வரையும் போது தான் கவனித்தார்கள் , அது ஏரிக் கரை. புதர் மறைத்தது. ஏரியில் அதிசயமாக   தண்ணீர் நிறைந்து இருந்தது. கரை ஓரம் சேறாக இருக்கலாம்.  சிக்ஸர் அடிக்க முடியாது.

ஜாக்கிரதை,   ரொம்ப வேகமா அடிக்க வேண்டாம் . இந்த கோட்டுக்கு வந்தாலே சிக்ஸ் ன்னு வச்சுப்போம் . புதருக்குள்ள விழுந்துட்டா தெரியாது.  கீழே இறங்கி தேடவும் முடியாது,  பூமி ஈரமாக இருந்தது, போன வார மழையில்  நனைஞ்சு இருக்கும். 

ஏய் கிரி பேட்டிங்  சிக்ஸ் அடிப்பான். பாத்து  என்று கத்திக் கொண்டே பார்த்தா  பந்தும் கையுமாக  ஓடிக் கொண்டே – அவன் தான் கேப்டன் –  எச்சரித்தான்.  நினைவாக மெள்ள  பந்தை வீசினான். கிரி யோசியாமல்  வழக்கம் போல தூக்கி பலமாக அடிக்க அண்ணாந்து பார்த்துக் கொண்டிருந்த சிறுவர்கள் கண்ணுக்கு  பந்து புலப்படவேயில்லை. எங்க போய் இருக்கும்.   .  

அனைவரும் சேர்ந்து தான் இந்த தீர்மானம் போட்டது.  கிரியும் தான் இருந்தான்.  இப்ப வேகமா பந்தை அடிக்கவும், அதுவும் கன காரியமாக வானத்தை அளப்பது போல போனது தான் கண்ணில் பட்டது  – எங்க போச்சு?

 ஏழு எட்டு வகுப்பில் படிக்கும் மாணவர்கள்.   இந்த கூட்டத்தில் கிரி மட்டும் தான் உயரம். மற்றவர்கள் அவன் தோளுக்குத் தான் வருவார்கள்.  பார்த்தா திட்ட வந்தவன் பேசாமல் இருந்தான்.  கிரியை பாக்க பாவமாக இருந்தது. அவனே வருத்தப் படுகிறான். சொல்லி வேற காட்டுவானேன்.

சுற்றி சுற்றி தேடினர்.  நடந்து கொண்டே புதருக்குள் எட்டி எட்டி பார்த்தபடி – சற்று நேரத்தில் தேடுவது அலுக்கவும், நீள நடந்து கொண்டே இருந்தனர். வெய்யில் ஒரு பக்கம் சுட்டாலும், ஏரியிலிருந்து குளிர்ந்த காற்று அதை ஈடு செய்து விட்டது.   பன்னண்டு பேர் இருந்தாலே  ஒருவன் அம்பயராக இருப்பான். அடுத்த பாலில் விக்கெட் கீப்பர்.  இப்ப பத்து பேர்ல எப்படி வராத இருவரின் இடத்தை நிரப்புவது? பெரிய கேள்விக் குறி அது தான். 

பேசியபடியே  ஏரிக் கரையின் மேல் அமைந்திருந்த பாதை வழியாகச் சென்றனர். மறுபுறம் பெரிய வாழைத் தோட்டம்.  வரிசையாக வாழை மரங்கள்,  வாழைக் காய்களை குலைகளாக  அவர்கள் கண்டதேயில்லை.  அந்த பசுமை மனதை தொட்டது.  ஒரு சிறுவன் கம்பி வேலியில் ஏறி நின்று வெகு தூரம் வரை தெரிந்த மரங்களைப் பார்த்து பிரமித்தான்.  யாருமேயில்லையே?  எதுக்கு? என்றான் மற்றவன்.  இது தான் கடையில் வர வாழைப் பழமாக ஆகுமான்னு கேட்கனும் என்றான்.

அடுக்கு மாடி வீடுகளில் அரளி போன்ற குட்டை மரங்கள், புதராக வளரும் சில செடிகள் உண்டு. சில இடங்களில் வண்ண மயமான போகன் வில்லா கொடிகள் பல வண்ணங்களில் இருக்கும். வேப்ப மரம் தெரியும். கோவிலுக்குப் போனால் அரச மரம் பார்த்திருக்கோம். தென்னை மரமும்  தான் எங்கோ பார்த்த நினைவு.  ஆனால் கவனித்ததே இல்லையே.   இது போல கவனத்தை இழுத்த தோட்டம் போல – முழு வாழை மரமும் கூட தென் பட்டதேயில்லை.  வியப்பு  நீங்காமலே நடந்தனர்.  அடுத்து வந்த வாழைத் தோட்டத்து மரங்களில் இலைகள் மட்டுமே. நீண்ட குறுத்துகள் – அதன் இளம் பச்சை நிறம் என்று ஒவ்வொன்றாக ரசித்தனர். மடித்து வச்சிருக்கா – இதில காய் இல்லடா என்று ஒருவன் சொல்லவும் மற்றவர்களும் கவனித்து ஆமா..ம் என்றனர்.   அந்த தோட்டத்தில் சிலர் உலர்ந்த இலைகளை அகற்றிக் கொண்டிருந்தனர். அதில் ஒருவர் அருகில் வந்தார். என்ன தம்பிகளா- என்ன பாக்கறீங்க என்றார்.  இதுல ஏன் காய் இல்லை? இதெல்லாம் இலைக்காக வளக்கறது.  கல்யாண வீட்டில் இலைல சாப்பிட்டிருப்பீங்களே –  கல்யாணங்களுக்கு எப்பவோ போனது-  என்ன சாப்பிட்டோம், எதுல சாப்பிட்டோம் எதுவும் நினைவு இல்லை.  மேலும் பேசிக் கொண்டே நடந்தனர்.   தோட்டத்தின் வேலியோரமாக நடந்தவர்கள் அது முடிந்து ஏரி நீர் கண்ணில் படவும் சுற்று முற்றும் பார்த்தனர்.  அந்த இடத்தில் நீரோட்டம் வளைந்து திசை மாறி ஓடிக் கொண்டிருந்தது. குறுக்கே ஒரு பாலம் எதிர் பக்கம் போக வசதியாக.  பாலத்தின் நடுவில் நின்று  நீரை, சள சளவென்ற அதன் ஓசையை ரசித்தனர். திரும்ப அதே போல தாங்களும் சொல்லிப் பார்த்து மகிழ்ந்தனர்.   

அதுவும் அலுக்கவும், பாலத்தைக் கடந்து மறு புறம் பெரிய வீதியை அடைந்தனர்.

வெகு தூரம் வந்த பின் திரும்பி பார்த்தால்..  

எங்கயோ வந்துட்டோம்டா  – இங்க எல்லாம் பெரிய பெரிய பங்களாவா இருக்கே..

வீடு – பள்ளிக்கூடம் வழி தான் காலுக்கே  தெரியும். கிளம்பினால் நேர  கொண்டு விட்டு விடும்.  இது என்ன இடம்?  திடுமென பசி வந்தது.  

அந்த இடமே  மாயா ஜாலம் போல இருந்தது.    இது வரையில் கண்டதேயில்லை- சினிமால  தான்  அது போல பங்களா- வாசல்ல கேட்டு, கதா நாயகன் ஏறி குதிச்சு உள்ள வந்துடுவான். அப்ப மட்டும் இந்த காவல் காப்பவன் இருக்க மாட்டான்.  இவர்களைப் பார்த்து ஏதோ திருட வந்தவர்களைப் போல நினைத்தானோ வேகமாக விரட்ட வந்தான். அவன் கண்ணில் படாமல் நகர்ந்த பின் ஆளாளுக்கு அவனை திட்டினர்.  அடுத்த வீடு அதை விட பெரிசு- பெரிய ஆளுயர நாய் வேற.    ஒவ்வொரு வீடும் பாக்க அழகா – தோட்டம், ஊஞ்சல் தவிர வட்ட மேஜை நாற்காலிகள் என்று இருந்தன, இரண்டு கால் பிராணி மனுஷன் தான் இல்லடா என்றான் ஒருவன்.  இது வரை நடந்த தூரம் அந்த ஒரு தெருவை கடக்கவே நடந்து விட்டிருந்தனர். 

தெரு மூலையில் இருந்த வீட்டுத் தோட்டமே வீட்டை விட பெரியதாக இருந்தது.  சுற்றுச் சுவர் உயரமாக தோட்டத்தை மறைத்துக் கொண்டு.  அதனடியில்  பூனைக் குட்டிகள் போல இருக்கோம் ன்னு தாங்களே சிரித்துக் கொண்டனர். அதைச் சுற்றிக் கொண்டு மெயின் ரோடு வந்தனர்.   பசி, வீடு இருக்கும் திக்கும் தெரியவில்லை. 

நடந்தனர். யார் கிட்டயும் காலணா கூட இல்ல. எங்க போய் கேட்போம்.  ஒரு கல்யாண சத்திரம் தென்பட்டது.  தட தடவென ஒரு டிரக் வந்து அவர்களை தாண்டிக் கொண்டு அதன் வாசலில் நின்றது. நாளை மறு நாள் யாருக்கோ கல்யாணம்.  சமையல் செய்பவர்கள் சாமான்களை இறக்கிக் கொண்டிருந்தனர்.  ஏக்கத்துடன் பார்த்தபடி தயங்கி நின்றனர்.  சாமான்களை இறக்கிக் கொண்டிருந்தவர்கள் வேகமாக செயல் பட்டுக் கொண்டிருந்தனர். அடுத்து ஒரு சின்ன டெம்போ, அதிலிருந்து வாயில் வெற்றிலையை குதப்பிக் கொண்டு ஒருவர் இறங்கினார்.  டெம்போவில் மூட்டைகள்.  

சற்றும் எதிர்பாராமல் இவர்கள் அருகில் வந்தார்.  வாயில் வெற்றிலையால் பேச முடியவில்லையோ,  பார்த்தவர்,   எதுவும் பேசாமல் உள்ளே மறைந்தார்.  நிராசையுடன்  உட்கார கூட இடம் இல்லாத மெயின் ரோடு, திடுமென அவர் விசாரிக்கவும் நிமிர்ந்தனர்.  என்னடா பசங்களா, வேகாத வெய்யில்ல சுத்தனுமா என்றபடி அருகில் வந்தார்.  பார்த்தா முன்னால் போய் யார் என்ன என்று சொன்னான். ஒருவன் அவன் கேக்காம விட்டுட போறானே என்பது போல, பசிக்கிறது என்றான்.  அடடா – அசட்டு பசங்களா, வீடு எங்கே என்றார். அந்த அடுக்கு மாடி கட்டிடம் விலாசம் சொன்னதும் ரொம்ப தூரம் – சரி சரி உள்ள வாங்க – -யாரோ ஒருவரை பெயர் சொல்லி அழைத்து ஏதோ சொன்னார்.  கல்யாண சத்திரம் – உள்ளே போய் கை கால் சுத்தம் செய்து கொண்டு வந்தவர்களுக்கு முதலில் தண்ணீர் குடிக்க கிடைத்ததே பெரும் நிம்மதியாக இருந்தது. இனிமேல் தான் சுத்தம் பண்ணி லைட் போட்டு பண்ணுவா போல இருக்கு என்றான் ஒருவன்.  அதற்குள் வாங்கடா கிரிக்கெட் வீரர்களா என்ற குரல் கேட்டது.  தூக்கி கட்டிய வேஷ்டியும் பனியனுமாக அந்த பெரியவர் தான் அழைத்தார். தரையில் இருந்த  பாயை காட்டினார்.  அமர்ந்தனர். அவசர விருந்து- பூரி, கேசரி கொதிக்க கொதிக்க – அமுதமாக இருக்க அவர்கள் பசி தீர்ந்த பின் கண்களில் ஜலம் வழிய கேப்டன் பார்த்தா மாமா! தாங்க்ஸ் என்றான்.  

அவர் எதுவும் சொல்லவில்லை. முதுகில் தட்டிக் கொடுத்தார். ஒரு வேலையாள் அவசரமாக சட்டையை மாட்டிக் கொண்டு டெம்போவை கிளப்பினான்.  ஜாக்கிரதையா கொண்டு விட்டுட்டு சீக்கிரம் வா. பாத்து போங்கடா, வீட்டுக்கு போய் தூங்குங்கோ என்று சொல்லி வழியனுப்பினார்.

இப்படித்தான் பாகவத காலத்தில இடையர் சிறுவர்கள்  மாடுகளை மேய்த்தபடியே, வெகு தூரம் சென்று விட்டனர்.  வழியில் யாரோ சிலர்  யாகம் செய்து கொண்டிருந்தனர்.  பெரியவர்கள் பலர் இருந்தனர். மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. க்ருஷ்ணன் ஒரு பையன அனுப்பினான். நானும் பலராமனும் வந்திருக்கோம்னு சொல்லு, வழி தவறி வந்துட்டோம், பசிக்கிறது ன்னு சொல்லு.   யாகம் தானே பண்றா, முடிஞ்ச உடன அதுல கலந்துக்க வந்தவாளுக்கு சாப்பாடுன்னு  நிறைய பேருக்கு ஏற்பாடு பண்ணியிருப்பா என்றான்.  அந்த பையன் போய் சொன்னான்.    மாடு கன்றை விரட்ட பயன்படும்  கம்பை தோளில்  குறுக்கே வைத்து ஒரு கையால் பிடித்துக் கொண்டு மற்ற கையை ஒரு இடைச் சிறுவன்  தோளில் வைத்தபடி நின்று கொண்டிருந்த கிருஷ்ணனைப் பார்த்தனர்.  அந்த யாகம் செய்து கொண்டிருந்தவர்களுக்கு நிர்பந்தம், நடுவில் வேறு பேச்சு பேசக் கூடாது.இருந்தாலும் ஏதாவது பதில் சொல்லி இருக்கலாம்.  திரும்பி வந்தனர்.  க்ருஷ்ணன் விட வில்லை. இந்த வழியா சமையலறை கிட்ட போய் அந்த வீட்டுப் பெண்களைக் கேள் என்று சொல்லி அனுப்பினான்.  மாடு கன்னுகளை ஓட்டிக் கோண்டு ரொம்ப தூரம் வந்துட்டோம், க்ருஷ்ணனும் பலராமனும் கூட வந்திருக்கா – ன்னு சொல்லி முடிக்கல்ல – ஆ அப்படியா என்றவர்கள் ஆளுக்கு ஒரு பெரிய பாத்திரம் நிறைய அன்னமும், பாயசம், காய்கறிகள் கூட்டும், பக்ஷணமுமாக வந்தனர்.  உடனே ஏற்றுக் கொள்ளாமல், பூஜை முடிஞ்சாச்சா என்று க்ருஷ்ணன் கேட்கவும், அது இருக்கட்டும், நீங்க சாப்பிடுங்கோ, திரும்ப பண்ணிக்கிறோம்-  என்று அன்புடன் பரிமாறினர்.  அது தான் பிறவிக் குணம்னு ஔவையார் சொன்னது.

சுதர்சன சக்கரம்

சுதர்சன சக்கரம்

 வெளி நாட்டில் ஒரு சினேகிதன், அவன் பரம்பரை வீடு ஒரு கிராமத்தில் இருக்காம். அவனுடைய உடன் பிறந்தவர்கள் எவரும் அங்கு போகவும் இல்லை. பெற்றோரை இங்கு கூட்டி வந்து விட்டேன்.  எங்கள் உறவினர் அங்கு வசிக்கிறார். ஏதோ தகராறாம்.  கிராமத்தை விட்டு நான் வந்து நிறைய வருடங்கள் ஆகி விட்டன.  நீ போய் பார்க்கிறாயா என்று ஒரு பழைய நண்பன் எழுதியிருந்தான். அவனைப் பார்த்தே பல வருடங்கள் ஆகி விட்டன.  யார் என்று எப்படி அறிமுகப் படுத்திக் கொள்வேன்?   வக்கீலாக இதே தொழில், என்பதால்  தான் அவனுக்கும் என் நினைவு வந்திருக்கிறது. போய் பார்க்கலாம் என்று தோன்றியது.  வழி விசாரித்துக் கொண்டு வந்து இறங்கினேன்.  

அழகான கிராமம்.  வீடுகள்  தோளோடு தோளாக கை கோர்த்தாற் போன்ற வரிசை வீடுகள். வீதியின் ஒரு புறம் ஒரு கோவில், மறு புரம் ஏரியோ குளமோ  என்று நினைவு.  பாதை போடுவதற்காக நடுவில் ஒரு வீட்டை இடித்து வழி செய்து கொண்டிருந்தனர்.  நிறைய மாறுதல்கள்.  விசாரித்துக் கொண்டு அந்த வீட்டின் வாசலில் நின்றேன்.

பரம்பரை வீடு, பல வருடங்கள் ஆனது போல இல்லை.  கல் கட்டிடமோ ?  வாசலில் மூன்று அடுக்கு திண்ணை.   எட்டு படிகளுக்கு மேல் பெரிய கதவு.  யாரோ வசிப்பது வாசலின் கோலத்தில் தெரிந்தது.    

கதவைத் தட்டினேன். வயதான  ஒரு மாது திறந்தாள்.  யார் என்ற விவரங்கள் சொன்ன பின், உள்ளே அழைத்தாள்.  அந்த நாளைய வீடுகள் என்ற வர்ணனைக்கு ஏற்ற வீடு. நடுவில் திறந்த வெளியும்  பச்சை வர்ணம் அடித்த தூண்களும்.  தகராறு என்றானே, என்னவாக இருக்கும்  என்ற கேள்வி எழுந்தது.   அந்த அம்மாள்  அவர் கணவரிடம் சொன்னாள்.  அவர் வந்து தன்னை காசிராஜன் என்று அறிமுகப் படுத்திக் கொண்டார்.  பின், அவரே சொன்னார். என் மனைவி நாணாவுக்கு  தூரத்து உறவுக்காரி, இவளுக்கு சகோதர உறவு ஆனவன்,வீட்டை பாத்துக்கோ ன்னு சொல்லி,   சொல்லிட்டு போனான்.  இதே போல எங்கள் வீடும் இருந்தது  எங்கள் அப்பா காலத்தில. வித்துட்டு சென்னை போனோம்.  பதவி ஓய்வு பெற்றபின் நான் வந்து சில மாறுதல்கள் செய்து கொண்டேன். தரையை மாத்தி, சுண்ணாம்பு பூசி ன்னு அவசியமானது மட்டும்.  பின்னால் பெரிய தோட்டமும், மாடு கட்ட இடமும் இருக்கு. மாடு இல்ல -ஆனா தோட்டம் குப்பையாக கிடந்ததை  இந்த ஆறு வருடத்தில் முடிந்தவரை சரியாக்கி இருக்கிறேன்.   இந்த வரிசை பூரா இருபது வீடுகள்.  இரண்டு ஒன்று தான் பழையபடி திண்ணை யோட இருக்கு.  மத்தவா அவாவா சௌகர்யத்துக்கு மாத்தி இருக்கா.

அவருடன் வீட்டைச் சுற்றி பார்த்தேன். மாடிப் படி ஏறல்ல. அங்கும் இரண்டு அறைகள் இருப்பதாகச் சொன்னார்.  ஏதோ பிரச்னை ன்னு, என் சினேகிதன் சொன்னான்.  நாங்கள் இருவரும் ஒன்றாக இங்கேயே படித்தவர்கள்.  பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் தனித் தனியாக அவரவர் படிப்பும் வாழ்க்கையும் அமைந்தது. பல நாட்களாக தொடர்பே இல்லை.  இங்க ஏதோ பிரச்னை  போய் பார் என்றான்.   

சரியாகத்தான்  போய் கொண்டிருந்தது.  ரோடு போட வந்த பொழுது வெளியூர் காரா உள்ளே வந்தா. யார் கண் பட்டதோ,  போட்டி போட்டுக் கொண்டு வாங்க வரா- என்னால் என்ன முடியும்?  தினமும் வந்தவா கிட்ட என்ன சொல்ல.  பிடுங்கல் தாங்க முடியல்ல. அடி மட்ட விலைக்கு கேட்கிறான். பயமுறுத்தல் வேற.  இருக்கற வரைக்கும் இருப்போம்  ன்னு – அமைதியா, திருப்தியா  இருந்தோம்.  அக்கம் பக்கமும் பழகிடுத்து.  இந்த பெரிய வீட்டை பெருக்கி துடைத்து வைக்கவே சரியா இருக்கு. அதான் அவனுக்கு எழுதினேன்.  நாங்களும்  இந்த கிராமத்துக்காரா தானே.   அரசு வேலையில் இருந்து சர்வீஸ் முடிந்த பின்  வயசான காலத்தை கிராமத்தில் இருக்கலாம் என்று வந்தவர்கள் தான். நாணா வந்து சும்மா கொடுத்தாலும் குடுக்கலாம்,  நான் அந்த பொறுப்பை ஏத்துக்க முடியுமா? அது தான் உங்க கிட்ட சொல்லிட்டான் போல.  நீங்க யாரு?

வீட்டப் பார்த்த பின் எனக்கே ஆசையாகத் தான் இருக்கு.  மனதில் என்றோ  இந்த தெருவில்  இருந்த சமயத்து  நினைவுகள் மெள்ள எட்டிப் பார்த்தன.  இந்த வீட்டில் ஒரு dressing table இருந்தது.  நவராத்திரி சமயம் அதைப் பாக்கவே வருவோம். விலை உயர்ந்த  கண்ணாடி ன்னு அதுக்கு வலை போட்டுருப்பா. கிராமபோன்  பெட்டி மேலே ஸ்பீக்கரோட  இருக்கும்.  வடு மாங்காய் மரம் இருக்குன்னு என் பாட்டி சொல்லித் தெரியும். அதெல்லாம் எங்க போச்சோ – மனிதனுக்குத் தான்  என்ன என்ன ஆசை, வசதி இருந்தா சாமானா வாங்கி குவிக்கிறான்- இது போல யாரோ வந்து பிடிங்கிண்டு போகவா?  வாங்கனும்னு ஆசையா இருந்தா,   விக்கறதானா எனக்கு குடுன்னு சொன்னா சரி.  பயமுறுத்துவது என்ன நியாயம்?

என்னைப் பற்றிச் சொன்னேன். அவரும் உயர் அதிகாரியாக இருந்தவர். அவரே திணறுகிறார் என்றால் என்னால் என்ன முடியும்?  அவரிடமே கேட்டேன்.  ரிடையர்டு ன்னு  சொன்ன உடனே,கை குலுக்க நீட்டிய கையை இழுத்துக்கறா.  அவ்வளவு தான் மதிப்பு.  என்னால்  முடிந்ததை இந்த கிராமத்து ஜனங்களுக்கு செய்கிறேன். அவர்கள் மரியாதையாக இருக்கிறார்கள்.  வெளி ஆட்களுக்கு இந்த பெரிய வீடு மட்டும் தான் தெரிகிறது. இதில் உள்ள உயிரோட்டம் தெரியுமா?   எந்த இடத்து தண்ணிய குடிக்கனும்னு பகவானே எழுதி தான் அனுப்புகிறான்- ஆசைப் பட்டு வந்தோம். என் குழந்தைகளும் நகரத்தில் இருக்கிறார்கள், அங்கு போய் விடுவோம். நகர வாழ்க்கை வேண்டாம், முன் காலத்தில் தவம் செய்ய வனத்துக்கு போவார்களாம் என்று படித்திருக்கிறோமே, நாம் கிராமத்துக்கு போவோம் என்று வந்தோம். அவ்வளவு தான் எங்களுக்கு இந்த நீலா நதியின் தண்ணீர் போலும்.

ஊரைச் சுற்றி அந்த ஆறு ஓடும் என்றும் சொன்னார்.  அருகில் சென்று பார்த்த பொழுது தான் அது ஒருநாள் இரு கரைகளையும் தொட்டு ஓடிக் கொண்டிருந்த நதி, தற்சமயம் நடுவில் ஓடையாக மட்டுமே தெரிந்தது, முடிந்தவரை ஆக்கிரமித்து இருந்தார்கள். கம்பு நட்டு சின்னச் சின்ன கடைகள். கிடைத்த இடத்தில் சிலர் கீரை, வெள்ளிரி பயிரிட்டிருந்தனர். அவரவருக்கும் வாழ்க்கை பிரச்னை.  சில சிறுவர்கள் பாறையிருந்து நீரில் குதித்து நீந்திச் சென்று கரையை அடைந்து பின் திரும்ப பாறைக்கே வந்தனர். அவர்கள் இதில் முழு மனதுடன் ஈடுபட்டிருந்தனர்  என்பதை முக மலர்ச்சியே காட்டியது.

இது ஒரு அழகு.  பெரு நகரங்களில் வசிப்பவர்கள்  இங்கு வந்தால் எவ்வளவு ரசிப்பார்கள்.  இரண்டு நாள், பின் நகர வாழ்க்கையின் ஓட்டம் பழகியவர்களுக்கு அலுத்து விடும்.  எதனால் இந்த போட்டி, பயமுறுத்தல் ? ஏதோ பின்னால் காரணம் இருக்கும்.

யாரோ புதியவன் என்பதால் ஒருவர் வந்து விசாரித்தார். நான் யார் என்பதையும், காசிராஜன் பெயரைச் சொல்லி  அவரை பார்க்க வந்ததாகச் சொன்னேன். அவர்கள் அவரை அறிந்திருந்தனர். பல நாட்களுக்கு முன் இந்த நதி  முழுமையாக இருந்ததாக என் அப்பா சொன்னார். அவர் பார்த்தவர்.  தற்சமயம் ஏன் இப்படி இருக்கிறது என்றும் கேட்டேன்.  அவன் பதில் சொன்னான்.  ‘நான் இங்கு வந்ததில் இருந்து இப்படித் தாங்க இருக்கு. வெள்ளம் வரும், அல்லாத்தையும் அடிச்சித் தள்ளும்.  அப்ப பாக்கனும் – கல கலன்னு  ஓடற தண்ணிய பாக்கறதே சந்தோஷம். கொஞ்ச நாளில் வத்திடும். அது வரை காட்டுக்குள்ள இருப்போம்.  துணி மணி, கடைச் சாமான்களை மட்டும்  கொண்டு போவோம். பின்னால் திரும்பி வந்து உடைஞ்சதை, அடிச்சிட்டு போனதை சரி செஞ்சுக்குவோம். பளகிடுச்சுங்க. ‘  என்றான். ஆனா உங்க சொந்தக் கார பெரியவர்  வந்த பொறவு எங்களை ஊருக்குள்ள பள்ளிக் கூட கட்டிடத்தில இருக்க வசதி பண்ணிட்டாரு. பத்து நா இல்ல பதினஞ்சு நா, தண்ணி வத்திடும். இப்படியே நடந்தீங்கன்னா பூமி சரிஞ்சு கொஞ்சம் பள்ளம் போல இருக்கும். இந்த இடம் மேடு,  அதனால் தண்ணி பள்ளத்துல விழுந்து அந்த ஏரில ரொம்பிடும். 

வெள்ளத்தால் பாதித்தவர்களுக்கு உதவி செய்யறதாக சொல்வாங்களே. இதற்குள் அவர்களைச் சுற்றி குளித்து  கொண்டிருந்த பையன்கள், தவிர மேலும் சிலர் வந்து கூடினர். நமுட்டுச் சிரிப்புடன் அவர்கள் தங்களுக்குள் எதோ சொல்லிக் கொள்வது போல தெரிந்தது. “நீங்க யாருங்க? ‘ என்றார் ஒருவர். ரிபோர்டரா? கட்சிக்காரனா?

ஏன்? என்றேன். கட்சிக் காரன் – ஓட்டு போடுன்னுவான். ரிபோர்டர்னா எப்ப குடுத்தாங்க, எத்தின கொடுத்தாங்க ன்னு கேப்பாங்க.   அது தான். வேற ஒன்னும் இல்ல

பெரியவர் இந்த ஊருக்கு வந்தது எங்க நல்ல காலம் தான். புள்ளங்கள பள்ளிக் கூடம் போக வச்சாரு. மதிய சாப்பாடு ஆனதும் ஓடி வந்துடுங்க. அதனால பள்ளிக்கூடத்தில் விளையாட சாமான்கள் நிறைய வாங்கி குடுத்தாரு. பெல் அடித்த பிறகு தான் விளையாட முடியும். அதனால் முழுக்க எல்லா வகுப்பும் முடிந்து விளையாடி விட்டு வருவாங்க.  அதுக்கு ஏத்தாப்பல நல்ல உடற்பயிற்சி டீச்சரும் வந்தாரு. யோகா கூட கத்து தராங்க.

அவங்க தோட்டத்துல விளையற கறிகாய்கள் ஸ்கூலுக்கு குடுத்துடுவார். அதனால் மதிய உணவும் பசங்களுக்கு நல்லா கிடைக்கும்.  நான் கேட்டேன். வெள்ளம் வந்தா? அதென்ன பத்து பதினைஞ்சு நாள். இங்க  நிறைய பேர் குயவர்கள், மண் பாண்டம் செய்பவர்கள், கயிறு செய்வோம், பாய் முடைவோம். முன்னாடியே கண்டுக்குவோம். எங்க பாட்டன் முப்பாட்டன் காலத்தில இருந்து அந்த விவரம் தெரியுங்க. 

திரும்பி வந்து அவரிடம்  இந்த சம்பாஷனையை சொன்னேன், அவர் சொன்னார்    இது பற்றி பாகவதம் சொல்கிறது-  வெகு நாட்களுக்குப் பின், கம்ச வதமும் ஆன பின்,  நந்த கோபனை  சந்தித்த வசுதேவர், அவரிடம் தன் நன்றியை மன மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறார்.  குழந்தையை மாற்றிக் கொண்டு        வந்ததை, முன் யோசித்து, விரும்பி செய்தது அல்ல. அந்த காலத்தின் கட்டாயம், நான் நினைக்க கூட இல்லை. அதில் உங்க குழந்தையை காப்பாத்தி இருந்தால் என் மனம் அமைதியாக இருந்திருக்கும். வருத்தத்துடன் கண்களில் நீர் மல்க சொல்கிறார்.  அந்த சமயம் மாடு மேய்க்கும் இடையர் குலத்தையே உயர்வாக சொல்லிக் கொண்டு வரும் பொழுது ‘ யமுனையில் வெள்ளம் வரும் முன்  அதன் நீரோட்டத்திலேயே கண்டு கொள்ளும் திறமை உள்ளவர்கள் நீங்கள்.  நதிக் கரைக்கு வளர்ப்பு மிருகங்களை  போக விடாமல் பாதுகாப்பாக  வைக்கத் தேவையான அந்த அறிவு உங்களிடம் மட்டும் தான் உள்ளது’   இன்னமும் பல விதமாக அவர்களுடைய பெருந்தன்மையை பாராட்டுகிறார்.‘

மதிய உணவை சேர்ந்து சாப்பிட்டோம்.  எப்படி சமாளிப்பது? அவரே பாகவத கதையைச் சொன்னார். துர்வாச முனிவர் க்ருத்தி என்று ஒரு துர்தேவதையை உருவாக்கி அம்பரீஷனை அழிக்க அனுப்பினார்.  பகவானின்  சுதர்சன சக்கரமே யாரிவன், இந்த சாது அரசனை படுத்த வந்திருக்கான்  ன்னு தானே அதை அந்த துர்தேவதையை அழித்து விட்டு அவரையே துரத்தியது. காப்பாத்து காப்பாத்துன்னு துர்வாசர் தான் ஓடினார்.  அப்படி எங்கிருந்தாவது உதவி வரும்.  அந்த சக்கரம் போல இப்ப நீங்க வந்திருக்கேள்.

மாமா, உங்க பையன் வயசு எனக்கு, எனக்கு ஏன் இந்த மரியாதை? உங்க மகனா நினச்சுக்கோங்கோ.  நான் தான் நமஸ்காரம் பண்ணனும். நீங்களே வழி சொல்லுங்கோ.  ஊருக்குள்ள உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கு. அதுதான் உங்களுக்கு பகவானுடைய சக்கரம். அனாவசியமா ஒருவன் பேராசையால் கேட்டால் கொடுத்துடனுமா?  உங்க தோட்டம் தான் அவனுக்கு குறி. வரிசைக்கு ஒன்பதாக ஐந்து வரிசை  தென்னை மரங்கள் இருக்காமே – நான் இன்னும் பாக்கல்ல.  உங்க தோட்டக்காரன் சொன்னான்.  அவர்களுக்கு விவரம் சொல்லி விவசாயம் விஷயமா நிறைய உதவி உங்கள் மூலம் கிடைச்சிருக்காம்.   உங்களை பாக்க வந்த எனக்கே அந்த அளவு உபசாரம் பண்றா.   நான் வந்த காரியம் பத்தி சொல்லவே இல்ல.

தோட்டத்தை பார்க்க போனோம்.  வரிசையாக தென்னை, இடை பயிராக வேறு சில மரங்கள்.  நடு நடுவில் சில கறிகாய் செடிகளின் பாத்திகள்.  கத்திரி, வெண்டை. தக்காளி என்று.  அவரே சொன்னார். மரங்களுக்கும் நண்பன், விரோதி உண்டு.  சாதகமான வாழை மரம் இருந்தா இரண்டுமா வளரும். ஒன்னு காய்ச்சு ஓயும்  போது மத்தது காய்க்கும்.  இதுல நிறைய விவரங்கள் இருக்கு.

வாங்க வந்தவனுக்கு ஆசை காட்டியது தோட்டம் தான் என்பது தெரிந்தது.  உயர் ரக  தென்னை மரமும் பல காலம் நீடித்து பலன் தரும்.

இரவு. என் போனில் வந்த செய்திகளை படித்துக் கொண்டிருந்தேன்.  எனக்கு மகிழ்ச்சி அளித்த ஒரு செய்தி, எங்கள் பள்ளி மாணவர்கள் ஒன்றாக சந்திக்க இந்த ஊருக்கே வருவது பற்றிய ஒரு அறிவிப்பு.  யாரெல்லாம் வருவார்கள் என்பதை பொறுத்து  இடம் வசதிகள் செய்து கொள்ள வேண்டும் – எனக்கு பொறி தட்டியது போல ஒரு எண்ணம் வந்தது.  எங்கேயோ படித்தது  வீணாக கலகம் செய்பவனை அடக்க, அவனை விட உனக்கு பக்க பலம் அதிகம் என்று காட்டிக் கொள் என்ற அறிவுரை.  உடனே செயல் பட்டேன், இன்னாளைய துரித செய்தி பரிமாற்ற வசதிகளுக்கு நன்றி சொல்லியபடியே, என் சம்மதத்துடன்,  நான் இங்கு வந்திருப்பதையும் தெரிவித்தேன். அடுத்த இருபத்து  நாலு மணி நேரந்துக்குள்  சுமார் முப்பது பேர் வர தயாராக இருப்பதாக தெரிய வந்தது.   பெரியவரிடம் போய் முப்பது பேருக்கு இந்த ஊரில் தங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றவுடன், அவர் முகம் மலர்ந்து ஆஹா, இந்த வீடு இருக்க, வேற இடம் தேடுவானேன் என்றார். இந்த வீட்டில் நிறைய கல்யாணங்கள் நடந்திருக்கின்றன,  முப்பது பேர் தானே,  நாணாவையும் கூப்பிடுங்கோ என்றார்.  சக்கரம் சுழல ஆரம்பித்து விட்டது, இனி பயமில்லை.  இந்த மாத இறுதியில் அனைவரும்  இந்த வீட்டில் கூடுவோம்.  அது போதும் – வெத்துவேட்டு ஆளை விரட்ட.

 2)  பஞ்சவர்க்கு தூது நடந்தானை

பாடிக் கொண்டிருந்தவர் நிறுத்தினார்.  வாசலில் பள்ளியின் பேருந்து நிற்பதை ஜன்னல் வழியாக பார்த்து விட்டது தான் காரணம். இதோ பேத்தி சைலஜா வந்து விடுவாள்.  ஆவலுடன் எதிர் பார்த்துக் கொண்டிருந்தார். 

ஏட்டீ

அவளைக் கூப்பிட்டார்.  இன்னமும் என்ன ஏட்டி, வளர்ந்து விட்டாள். பெயர் சொல்லி கூப்பிட்டால் என்ன என்று மருமகளின் குரல் வந்தது.  மாலை சிற்றுண்டியை சுவைத்துக் கொண்டிருந்த மகன் கூப்பிட்டால் என்ன? அவருக்கு தன் மனைவியை, என் அம்மாவை கூப்பிட்ட பழக்கம்.  என்றான். இது தினமும் நடக்கும் வாக்குவாதம்.

என்ன தாத்தா என்று அருகில் வந்த பேத்தி சைலஜா , தொலைக் காட்சியில் ஒரு காட்சியை நிறுத்தி வைத்திருந்த தைப் பார்த்தாள். தாத்தா, அப்பாவின் தாத்தா -தொண்ணூற்று ஆறு வயதாகிறது. காது தான் கேட்கவில்லை. மற்றபடி திடமாக இருந்தவர்  அருகில் வந்தாள். 

அந்த செய்தியை தெரிந்து கொள்ளாவிட்டால் அவருக்கு தூக்கம் வராது. காது கேட்பது இல்லை, கருவிகளும் ஓரளவு தான் உதவும் என்ற நிலையில் தெரிந்து கொள்ள ஆவல் மட்டுமே, சைலஜா தான் ஒரே நம்பிக்கை.  என்ன நடக்கிறது.  அவள் அவரிடம் இருந்த பத்திரிகையில் பார்த்து விட்டு, அதை விவரித்தாள்.  இரு அரசியல் தலைவர்கள் பேசிக் கொண்ட செய்தி உலகம் முழுவதும் பேசப் பட்டது.  என்ன ஆச்சு? என்றவருக்கு அவள் விவரித்தாள்.  அடுத்த முறை பேச ஒரு நாளைச் குறித்துக் கொண்டார்கள் அவ்வளவு தான்.  அவருக்கு புரியும்.  அரசாங்க அதிகாரியாக இருந்தவர். பலமுறை கண் துடைப்பாக நடக்கும் மீட்டிங்குகளில் பங்கு கொண்டவர்.   அந்த சமயத்தில் கூச்சல் போடுபவர்களை அடக்க ஒரு கூட்டம் நடக்கும். பல பேருக்கு பிரயாண சலுகை, இருப்பிட வசதிகளோடு நாட்டின் ஏதோ ஒரு ஊரில் கலந்துரையாடல் நடக்கும்.  முடிவு வராமல் ஏதோ ஒரு பிரச்னை, ஒரு பிரதி  நிதியின்  எதிர்ப்பு ஒலிக்கும்.  ஒரே வழி ஒத்திப் போடுவது தான்.

என்னவாம் என்றார். சைலஜா விவரித்தாள். எதிர்பார்த்த படி நடக்கவில்லை.  வெளி நாட்டில் இருந்து வந்தவர் அதிக தீர்மானமாக இருந்திருக்கிறார். சுலபமாக வளைக்கலாம் என்று உள்ளூருக்கு அழைத்தவர் முகம் வாடி விட்டது. அவர் சொல் எடுபடவில்லை.  அவர் முகம் வாடி விட்டது, சைலா எழுந்து தொலைபெட்டியின் திரையில் இருந்தவர்களை விரலால் தொட்டு விளக்கம் சொன்னாள்.  பாதி சைகை, அவளுக்குத் தான் தாத்தாவுடன் பேச பொறுமையும், திறமையும் உண்டு. விடாமல் அவரும் விளக்கம் கேட்க, திரையில் இருந்த மற்றவர்களைப் பற்றியும் காட்டி விளக்கினாள்.

அது தான், என்றார் தாத்தா.  கையில் சிற்றுண்டி தட்டுடன் அருகில் அமர்ந்தவள். என்ன அது தான் ? அன்னிலிருந்து நடக்கிறது தான்.  துரியோதனனை சந்தித்து போர் வேண்டாம், எங்களுக்கு சின்ன  ராஜ்யம் கொடு போதும், என்று சொல்லுங்கள் என்று தர்மராஜன் க்ருஷ்ண பகவானிடம் சொன்னான். மற்றவர்கள் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அவன் க்ருஷ்ணனையே அடித்து விட்டால் என்றனர்.

வாயில் உணவோடு, சைலா சொன்னால். இங்கயும் அப்படித்தான்  – சிங்கத்தின் குகைக்குள் தலையை கொடுப்பது போல ,வெட்டி சாய்த்து விட்டால்? ன்னு  பயந்தாளாம்.   

பெரியவர் தொடர்ந்தார். க்ருஷ்ணனை எதுவும் செய்ய மாட்டார்கள். அங்கும் பெரியவர்கள் இருக்கிறார்களே  என்ற தர்ம புத்திரன், ராஜ்யம் தராவிட்டால் ஐந்து கிராமங்கள் தரச் சொல்லுங்கள், என்றான்.   என்ன செய்வா ஐந்து கிராமத்தை வச்சுண்டு என்றால் சைலா.  அவாளுக்கும் குடும்பம் பெருசாயிடுத்து, தனித் தனியா மீதி வாழ் நாளை ஓட்டலாம் ன்னு நினச்சு சொல்லியிருக்கலாம்.

அதுக்கு துரியோதனனை கெஞ்சுவானேன். தாங்களே பாத்துக்க வேண்டியது தானே. – சைலா.

அங்க தான் பாரதம் கதை. உரிமைன்னு சொன்னா.  ராஜாக்களுக்கு அது கடமையாம். வழி வழியா ராஜ்யம் அவாளுக்கு தங்கள் காலம் ஆனவுடன் அடுத்த தலை முறைக்கு கொடுத்துடனுமாம்.  தவிர ஒரே தாத்தாவின் பேரன்கள், பங்காளிகள்  எங்களுக்கும் பாத்யதை உண்டு என்றனர். விடு -இந்த கதை என்னாச்சு என்றார்.

இங்கயும் ஏதோ கேட்டிருக்கா, அதை கொடுப்பது இவர் கையில் இல்லை. சைலா திரையில் மனிதர்களை அடையாளம் காட்டினாள்.  அப்புறம் என்னாச்சு தாத்தா?  க்ருஷ்ணர் போனாரா?

போனார்.  அவருக்கும் இது முழுக்க சம்மதமா இல்லை.  எதுவும் உருப்படியாக நடக்காதுன்னு தெரியும். இருந்தும் மாட்டேன்னு சொல்லாம போனார். அவர் போட்ட கணக்கு வேற.  ரொம்ப கூட்டம் – பூமியால் தாங்க முடியல்ல- அதைக் குறைக்கனும்னு நினைச்சார்  போல – சண்டையை நிறுத்த போகல்ல – சொல்லுவோம்,  சந்தர்ப வசத்தால் அவன் கேட்டால் சரி – எப்படியும் தனக்கு ஆபத்து வராதுன்னு தைரியமா போனார்.

தாத்தா, தனியாவா ? என்றாள்.  ஆமாம்.

துரியோதனனோ  தீர்மானமா இருந்தான். முடியாதுன்னு போய் சொல்லுங்கோ. ஐந்து  கிராமம்  என்ன ஐந்து வீடு கூட குடுக்க மாட்டேன்னான்.  வந்த காரியம் ஆகனுமே, க்ருஷ்ணர் தன் கட்சியை சொல்ல வாயெடுத்தார். அவன் கத்தினான். ‘ஏய் என்ன மேல மேல் பேசற. நான் தான் சொல்லிட்டேனே, முடியாது. போய் சொல்லு சண்டை போட்டு ஜயிச்சாச எடுத்துக்கச் சொல்லு- அதோடு நிக்காம இவனை பிடிச்சு கட்டுங்கடா ந்னு உத்தரவு போட்டான். ஒத்தனும் நகரல்ல, தானே வந்தான்

துரியோதனன்  கத்தினான்.   அந்த காலம். இப்ப யாரானாலும் வாய் விட முடியுமா?  கோபத்தைக் காட்டாமல் சிரிச்சுண்டே தான் பேசனும், இந்த கையை அப்படியே திருக மாட்டோமா ன்னு கோபம் வந்தாலும் முகத்தில் காட்டாமல் கை குலுக்கனும்.  வெளியில் வந்து  பத்திரிகை காரா கிட்ட சுமுகமாக பேச்சு வார்த்தை நடந்தது.    அடுத்து எங்க ஊர்ல மந்திரிகளுடன் கலந்து பேசி விட்டு திரும்ப இந்த கூட்டத்தை   தொடருவோம் ந்னு சொல்லிட்டு நகர்ந்துடனும்.   தாத்தா படிச்சுட்டார். கேக்கல்ல ங்கறது தான் குறை.   அவன் கையில் அகப்படாம க்ருஷ்ணன் சட்டென்று தப்பிச்சுட்டார்.  . அதெல்லாம் பாரதம் விவரமா சொல்லும்.  எப்படியோ, தூது  போன மாதிரியும் ஆச்சு, அவனை கிளப்பி விட்ட மாதிரியும் ஆச்சு, நடக்கிற படி நடக்கட்டும் . சில சமயம் கிளறி விட்டுத் தான் அடக்கனும்.  செடியில் பூச்சி வந்து விட்டால், வேரோடு தான் பிடுங்கனும்.  தாத்தா பாட்டைத் தொடர்ந்தார்.  பஞ்சவர்க்கு தூது நடந்தானை  – தொண்டை கமறியது.  சைலா தண்ணி பாட்டிலை எடுத்துக் கொடுத்தாள்.  

Rajatharangini -7 harsha charitham

ராஜ தரங்கிணீ – 7 வது அலை

சிவ பெருமானை துதிக்கிறார். தேவி பார்வதியுடன் இருக்கும் சிவ பெருமான் என்னை காக்கட்டும்.  சந்த்யா ஜபம் செய்பவரை தேவி சீண்டுவதாக பாடல். நான் அருகில் இருக்கும் பொழுது சந்த்யா (என்ற பெண்) எதற்கு?

அரசனாக இருப்பவன்,பூமியை பொறுமையுடனும், பெருந்தன்மையான மனதாலும், வீரர்களான   சேனைத் தலைவர்களை சக்தி வாய்ந்த  தன் புஜ பலத்தாலும்  வெற்றி கொள்கிறான்.

அரசி மறைந்தவுடன், அவள் பக்க பலமாக இருந்து வளர்த்த துங்கனும் தன் பதவியை துறப்பான் என்று எதிர் பார்த்திருந்தனர்.  சந்த்யா காலத்துடன் பகலவன் விடை பெறுவது போல. ஆனால் அவன் அனவரையும் எதிர்த்து நின்று வளர்ந்தான். படைத்தவனுடைய விளையாட்டு.  எதை, யாரால், எப்படி செய்வான்  என்பதை சாதாரண மனிதர்கள் அறியவா முடியும்?  தீரனாக முக்ய மந்திரி பொறுப்பை வகித்த சந்திரகரன் என்பவனும் கால கதி அடையவும், அவன் கை ஓங்கியது.  புண்யாகரன் என்ற செல்வந்தனின் இரு மைந்தர்கள், அலுவலகத்தை திறமையாக கவனித்துக் கொண்டிருந்தவர்களும் மறைந்தனர்.  இப்படி அனுபவம் மிக்க அரச அதிகாரிகள் இன்றி ஆன பின் வேறு வழியின்றி அரசாட்சியில் முன்  அனுபவம்  உள்ளவன் என்ற காரணத்தால் துங்களை அனுமதிக்க வேண்டியதாயிற்று.  தவிர, உயிர் போகும் முன் அரசி தித்தாவும் அவர்கள் இருவரையும் ஒற்றுமையாக இருக்கச் சொல்லியிருந்தாள்.  துங்கனும் சாமர்த்யமாக அரசாட்சி பொறுப்பை தான் ஏற்றுக் கொண்டு அரசு கட்டிலில் அமர்ந்த சங்க்ராம ராஜனை அரசருக்குரிய மரியாதைகளுடன், அதனுடன் இணைந்த போகங்களை அனுபவித்தால் போதும் என்ற அளவில் நிறுத்தி விட்டான். அதற்கு ஏற்றாற் போல பொருத்தமில்லாத மனைவிகள் வாய்த்தனர்.  அதனாலும் அவன் பெயர் கெட்டது. 10

தித்தா நிறுவிய ஒரு மடத்தின் தலைவரான அந்தணர் தன் மகள்  லோடிகா என்பவளை அரசன் ஸங்க்ராம ராஜனுக்கு  கொடுத்தார். தொழில் வேறு, அதனால் வாழ்க்கை முறைகளும் வேறு,  அரசனாக கொடை என்பது அவனுக்கு விதிக்கப் பட்ட ஒன்று, அந்தணன் தானம் வாங்கிக் கொள்ள அனுமதிக்கப் பட்டவன்.  சமூகத்தில் இவர்கள் இருவரும் இரு முனைகளில் இருப்பவர்கள்.  அந்த அந்தணரோ, வந்தவுடன் துங்கனை எதிர்த்து தனக்கு சாதகமாக சிலரை தூண்டி விட பரிகாசபுரத்தில் ஒரு கூட்டம் கூடியது.  சில முன்னாள் மந்திரிகளும் சேர்ந்து  கொண்டனர். அரசன் சங்க்ராம ராஜனால் சமாளிக்க முடியவில்லை. துங்கனை நீக்கு என்ற கோஷம் வலுத்தது.

தெரிந்த முரடன். அவனுக்கு பக்க பலமாக பலர் இருந்தனர். ஒரு அந்தணன் இறந்தான். அவன் உடலை துங்கன் வீட்டில் தகனம் செய்து அந்திம கிரியைகள் செய்வோம் என்று அறிவித்தான். பொய்யாக ஒரு கிணற்றிலிருந்த இறந்த ஒரு உடலைக் கொண்டு வந்து அந்திம கிரியைகள் செய்வதாக பாவனை காட்டினர்.  ஒரு துண்டு கேசத்தை எரித்து க்ருத்யா என்ற ஏவல் என்ற செயலை செய்ததாக அவள் உங்களைத் துரத்துவாள் என்று பயமுறுத்தினான். எல்லை மீறிய இந்த செயலை எதிர்பாராத அந்தணர்கள் தங்களுக்கு ஆதரவாக இருந்த ராஜ கலசன் என்பவர் வீட்டில் அடைக்கலம் புகுந்தனர்.  (இப்படி ஒரு செயல் அந்தணர்கள் தங்கள் தூய்மையை இழந்தால் அவர்களுக்குள் நடக்குமாம் – ஒரு தவற்றை திருத்த  பயன்படுத்தப் பட்டு வந்த செயல், துங்கன் கையில் ஆயுதமாக ஆயிற்று – உண்மையில் அதை அவனால் செய்ய முடியாது. வெற்று பயமுறுத்தல் மட்டுமே. அதையறியாமல் பயந்து ஓடி விட்டனர்.)  மற்ற மந்திரிகள் வந்து சமாதானம் செய்தும், அந்த நேரத்தில் அடங்கிய கலகம் நீறு பூத்த நெருப்பாக இருந்து மந்திரிகளை, அரச ஆலோசகர்களை கொன்று தீர்த்தும், அவமானப் படுத்தியும் இந்த கூட்டம் தங்கள் வெற்றியைக் கொண்டாடியது. பூதி கலசன் என்ற மற்றொரு மந்திரியும் தன் மகன் ராஜகன் என்பவனோடு ஊரைவிட்டே வெளியேறி ஸூர மடம் சென்று விட்டார்.  துங்கனின் பக்கம் தெய்வம் இருந்ததோ, பரிகாச புரத்தில் ஆரம்பித்த எதிர்ப்பு அடங்கியது.  அவமானப் படுத்தப் பட்ட அந்தணர்கள் அனைவரும் வேறு தேசங்களுக்குச் சென்று விட்டனர்.

அதன் பின் குணதேவ என்ற மந்திரி அரசனிடம் பேசினார்.  பூதி கலச என்ற மந்திரி  கங்கையில் நீராடி பிராயச் சித்தம் செய்து கொள்ள சென்று விட்டிருந்தார்.  அவரையும் சமாதானப்படுத்தி வரவழைத்தனர்.

இவர்கள் அரசாட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின் அரசன் சங்க்ராமன் தானே ஒற்றர்களை அனுப்பி துங்கனை கண்காணிக்கச் செய்தான்.  இதை எதிர்பார்த்தவன் போல துங்கன்  பூதி கலசனை மகனுடன் நாட்டை விட்டு விரட்டி விட்டான்.  ஒவ்வொருவராக, மகளைக் கொடுத்து அரச பதவியை அடைய விரும்பிய பிரேமன் என்ற அவள் தந்தை, மற்றொரு சந்திரகர என்பவரின் மகன்  என்று தன்னை எதிர்த்தவர்களை கொன்றோ. விரட்டியோ அட்டகாசம் செய்தான்.  அதன் பின், துங்கனும் அவன் சகோதர்களும் எந்த வித இடரும் இன்றி ராஜ்ய சுகத்தை அனுபவித்தனர்.

நதிக் கரையில் ஓங்கி வளர்ந்த அரச மரம் அந்த நீர் வளத்தால் பாதுகாக்கப் பட்டது போல பல காலம் நிலைத்து இருக்கும். வெள்ளம் வரும் வரை. வெள்ளம் கரையை அரிக்கும் சமயம் அதே நீர் மரத்தடி மண்ணை கரைத்து மரத்தை விழச் செய்யும்.  அதே போல, துங்கன் சில காலத்திலேயே தான் தன் திறமை என்று  மக்கள் மனதில்  ஏற்படுத்தியிருந்த நல்லெண்ணம் மறைந்தது.  தனக்கு உதவியாக அவன் நியமித்த காயஸ்தன்-  பத்ரேஸ்வரன் என பெயர் கொண்டவன்,  சமூகத்தில் கீழ் மட்டத்து வியாபாரி, மாட்டுச் சாணி, விறகு முதலியவை விற்பவன், சமயத்தில் மாமிசத்துக்காக விலங்குகளை வெட்டும் குலத்தவன், அவனை வீடுகளில் தோட்டக் காரனாக பயன்படுத்தி வந்தனர்.  அவன் தானே ஒரு தடிமனான கம்பளத்தை போர்த்திக் கொண்டு அரச அலுவலகத்தில் நீர் நிரப்பவும், எடுபிடி வேலைகளைச் செய்பவனாகவும் நுழைந்து கொண்டான்.  மந்திரிகளையும், ஆலோசகர்களையும், கற்றறிந்த அறிஞர்களையும், தன் மனம் போன போக்கில் பந்தாடிய துங்கன் இவனிடம் ஏமாந்தான். 

அரச பொறுப்பில், வரவு செலவுகளை நிர்வகிக்கும் பொறுப்பை இவனிடம் ஒப்படைத்தான். அறிவோ, அனுபவமோ, குணமோ இல்லாதவன் வந்த உடன் முதல் காரியமாக, தெய்வ காரியங்கள், பசுக்களுக்கான செலவுகள், எளிய ஏழைகளுக்கான உதவித் தொகைகள்,  அனாதைகள் பாதுகாப்பு, அந்தணர்களுக்கான சன்மானங்கள், விருந்தினர் வருகைக்கான செலவினங்கள்,  அரசனுடைய அந்தரங்க உறவினரின் சலுகைகளைக் கூட நிறுத்தி விட்டான்.  காபாலிகன் என்று சவத்தின் மேல் ஆடும் கொடூரன் கூட தன்னைச் சார்ந்தவர்களை பாதுகாப்பான். இவன் அதையும் விட்டான்.

சித்திரை மாதம் இவனை நியமித்தான், ஆடி மாதம் துங்கனின் சகோதரன் சுகந்தீசிஹ  என்பவன் மடிந்தான். முழு பொறுப்பையும் ஏற்று சிறப்பாக நிர்வகித்த சகோதரன் இறந்தது, கை ஒடிந்தது போல, தானே தன்னை இழந்தவன் போல ஆனான்.

 (Mahmud மாமூது உடன் நடந்த போரில் அந்தபாலன் என்ற அரசன் தோற்றான்.  என்னை வெற்றி கொண்டவன், மற்றொருவன் உன்னை வெற்றி கொள்ள விட மாட்டேன். என் படையை அனுப்புகிறேன். அல்லது என் மகன்  திரிலோசனபாலன்  இதே போல இரண்டு பங்கு படையுடன் வருவான். ஒரு சேனை -5000ம்குதிரை வீர்கள், 10 ஆயிரம் காலாட்படையினர், 10 யானைகள் படை கொண்டது. திரிலோசனபாலன் முகம்மது அரசருடன் நட்பையே விரும்பினான்- ரஞ்சித் சீதாராம பண்டிட்)

அந்த சமயம் பிரபலமாக இருந்த ராஜபுத்திர அரசன்  திரிலோசனபாலன்- காபூல்-காந்தார தேசங்களை ஆண்ட வம்சம். துருக்கிய குஷாண் வம்சத்தினருடன் போரிட்டவர்கள்.  காஸ்மீர அரசன்  சங்க்ராம ராஜனை  உதவிக்கு அழைத்தான். அரசன் துங்கன் தலைமையில் ஒரு படையை  அதே ஆண்டு மார்கழி மாதம் அனுப்பினான். அவர்கள் ராஜபுத்திரர்களின் பெரும் படை பல உயர் அதிகாரிகள், சேனைத் தலைவர்களுடன் புறப்பட்டது.

ஊருக்குள் வந்த பின் ஐந்தாறு நாட்களுக்குப் பின் சாஹி என்ற அந்த தேசத்து அரசன் வந்து பார்த்தான். துருக்கர்களுடன் போரிடுவது சுலபமல்ல.  உள்ளபடி எப்படி போரிடுவது என்பதை அறிந்து கொண்டு செயலில் இறங்கு. அது வரை  அந்த மலையடிவாரத்தில் காவல் இரு என்றான்.  பெரும் படை வீர்களுடன் போரிடும் உத்வேகத்துடன் வந்திருந்த துங்கனுக்கு அது ரசிக்கவில்லை.  திருலோசனபாலன் சொன்ன இந்த ஆலோசனையை புறக்கணித்து, உடனடியாக போர் புரியவே விரும்பினான்.  ராஜ்யத்தில் இரவு வேளையில் காவல் இல்லை. தற்காப்பு படைகளோ, எதிர்பாராத தாக்குதல்களை முறியடிக்க திட்டங்களும் இல்லை என்பதை குறித்துக் கொண்டான்.

ஹம்மீரா – போர் வீரன்   –  சிறிய படையுடன் ஒரு போர் வீரனை துருக்க அரசன் அந்த இடத்து இயற்கை அமைப்புகளை ஆராய அனுப்பினான். துங்கன்  தௌஷீ என்ற நதிக் கரையில்  அந்த படையை  முறியடித்து விட்டான்.   இதையறிந்தும், அவனுடைய திறமையை புரிந்து கொள்ளாமல் திரிலோசனன் முன் சொன்னபடியே பொறுத்து இரு, புரிந்து கொண்டு செயல் படுவோம். எதிரியின் பலம் தெரிந்து கொள்வோம் என்றான்.   திரும்பத் திரும்ப இதையே சொல்கிறான், அவன் போர் புரிந்த அனுபவன் உடையவன் என்று எண்ணாமல், துங்கன் போர் வெறியிலேயே இருந்தவன் அந்த அறிவுரையை ஏற்றுக் கொள்ளவில்லை. 

ஒருவனுடைய முடிவு நெருங்கி விட்டதால், தானே ஆபத்தின் அருகில் வேகமாக போய் கொண்டிருப்பவன்,  அந்த நிலையில் என்னதான்  நல்ல அறிவுரை என்றாலும் அவன் காதில் ஏறாது என்பது அனுபவ பூர்வமான செய்தி.

விடிந்தவுடன் துருக்க சேனத் தலைவன் பெரும் கோபத்துடன்  வந்து தந்திரமான செயல்களும், அதர்மமான போர் முறைகளாலும் அடிக்க ஆரம்பித்தான். போர்க்கலை அறிந்தவன்.   திடுமென துங்கனின் படை சலசலத்து பிரிந்தது. எல்லையின்றி பரவியிருந்த  சாஹி சைன்யம் சிதறியது.  எதிர்பாராத தாக்குதல்.  சாஹி சைன்யம் புறமுதுகிட்டு,  கலைந்தாலும் அதன் பின்னும் ஜயசிம்ஹன் தொடர்ந்து போராடினான்.  தாமர சங்க்ராமனின் வழி வந்தவர்களான ஸ்ரீவர்தனனும் விப்ரமார்கனும் தங்கள் நாட்டின் பெருமையை நிலை நிறுத்த போர் முனையில் தங்கள் வீரத்தைக் காட்டினர்.  ஸ்ரீ திரிலோசன பாலன் அன்றைய போரில் எதிரி படையுடன் போரிட்டதை வார்த்தைகளால் விவரிக்கவே இயலாது என்பது போல அந்த பெரும் எதிரிபடைக்குள் புகுந்தவன் அபாரமாக  போர் புரிந்தான். கல்ப முடிவில் முக்கண்ணன் சிவ பெருமான் கையில் தீப்பிழம்புடன் போரிட்டது போல இருந்ததாம்.  தாய் நாட்டின் பெருமையை காக்கவே முனைந்து இருந்தனர்.

சாரி சாரியாக வந்த எதிரிகளின் கணக்கற்ற கவசம் அணிந்த வீரர்கள் – அவர்களை எதிர்த்து நின்ற        ஸ்ரீ திரிலோசனன்  ஒரு நிலையில் தப்பி விட்டான். அவனைத் தொடர்ந்த அவன் வீரர்களும் கண்ணுக்கு எட்டாத தூரம் செல்லவும் இருள் பரவவும் சரியாக இருந்தது,    புயல் காற்று தாக்கிய புற்றிலிருந்து ஈசல்கள் விழுந்து கிடப்பது போல போர்க் களம் குப்பையாக மனித, மிருக உடல்களும் ஆயுதங்களுமாக காட்சி அளித்தது. முகமதுவின் வீரன் ஹம்மீரனால் வெற்றியை ருசிக்க இயலவில்லை. உடல் முழுவதும் காயம், ரத்தம் ஆறாக பெருகி ஓட, ஸ்ரீ திரிலோசனின் வீரத்தை வியந்து கொண்டிருந்தான்.   இதற்குள் திரிலோசனன், தங்கள் யானைப் படையை தயார் செய்து கொண்டு, திரும்ப போரிடத் தயாரானான்.   ஹம்மீரன் வெற்றி பெற்றதாக நினைக்கவில்லை. ஸ்ரீ த்ரிலோசனின் சௌர்யம்- உடல் வீரமும் மன ஆற்றலும் இணைந்த போர் திறமை-  அமானுஷம் – மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்றே நினைத்தான்.  அதனால் எதிர்த்து நிற்காமல் திரும்பினான்.

தேவையின்றி வெளி தேசத்திலிருந்து வந்து போர் முற்றுகையிட்ட துருக்க வீரர்களை ஓட ஓட விரட்டியவன், அவன் சாகசமும், செயற்கரிய செயல்களும் போற்றப் பட வேண்டியவை.  முழு விவரங்களும்  சொல்ல சரித்திர ஆசிரியர்கள் மறந்து விட்டனரா, சாதாரண சிறு குறிப்பு மட்டுமே நமக்கு கிடைத்திருக்கிறது என்று கவி அங்கலாய்க்கிறார். சமயோசிதமாக செயல் பட்டு, நாட்டின்  பெருமையைக் காக்க உயிரைக் கொடுத்த வீரன்.    கனவிலும் நினைக்க முடியாத வீரச் செயல்கள்.  வசதிகள் குறைந்த அந்த நாட்களிலேயே தான் ஒருவனாக சாதித்த பெருமை உடையவனாக இருந்தான். வெறும் மனித யத்தினத்தால் முடியாது தெய்வம் துணையிருந்தால் மட்டுமே செயற்கரியன செய்ய முடியும்.  அவர்களே பெரியோர்கள்.  சாஹி வம்சத்தினரின் ராஜ்யமும் – ராஜ புத்திரர்கள்- வெகு தூரம் பரவி இருந்திருக்கிறது. காந்தார, காபூல்- இணைந்த தேசம். சங்கரவர்மன் காலத்தில் செழிப்பாக, நல்ல முறையில் பரி பாலிக்கப் பட்ட தேசத்தின் வரலாறு மிக் குறைந்த அளவிலேயே சரித்திரத்தில் இடம் பெற்றிருப்பதும் வருந்த தக்கது என்பது கவி கல்ஹணாவின் கருத்து.  கிடைத்த அளவு விவரங்களே அறிஞர்கள் வியக்கும் அளவு உள்ளதாம். சாஹி தேசம், அரசர்கள்.  மதி நிறைந்த மந்திரிகள், அரசனுடைய உள் நாட்டு வெளி நாட்டு அரசியல் அறிவு, பொதுவாக ராஜ்ய பரிபாலனம் பிரஜைகளின் நன்மையே குறிக்கோள் என்பது போன்ற ஆட்சி இவைகள்  நன்றியுடைய பிரஜைகளின் எழுத்துக்களில், நாட்டுப் பாடல்களில் இன்றளவும் நினைக்கப்படுகின்றன.

துருக்கர்களை விரட்டி அடித்த பின், தன்னளவில் எதுவும் சாதிக்காமல் தோற்றதாக எண்ணி மனம் ஒடிந்த துங்கன், நினைக்க நினக்க வருந்தி பொருமினான். நரியை விரட்டுவது போல விரட்டப் பட்டேன். அதனால் எழுந்த கோபத்தை யாரிடம் காட்ட முடியும்?  மெள்ள தன் ஊரை நோக்கி வந்தான்.  ஸ்ரீ திரிலோசனின் குணத்தை பாராட்டாமல் இருக்க முடியவில்லை. தைரியம் என்றால் அதுதான் – நாம் எதற்கு வருந்த வேண்டும் என்று சமாதானம் செய்து கொண்டாலும் எதனால் தனது தோல்வி என்றும் யோசித்தான். அடிமைத்தனம்- என சொந்த பொருளா, பசுக்கள் போல விரட்ட விரட்ட ஓடியவன் தானே. துங்கனின் மகன் கந்தர்ப சிங்கனும் ஸ்ரீ திரிலோசன அரசனை மிக்க மதிப்புடன் நினைத்தான்.  அரசனாக இருந்தால் அந்த அளவு சௌர்யம் இருக்க வேண்டும்.  இப்படி புகழ்ந்து பேசிய மகனை அசூயையுடன் பார்த்தான்.

துங்கனின் சகோதரன் விக்ரஹராஜா, தன்னளவில் வேறு விதமாக யோசித்துக் கொண்டிருந்தான். ராஜா, எப்படி ஆட்சி செய்கிறான், அவனுடைய பலவீனம் என்ன என்று விசாரித்து தெரிந்து கொண்டிருந்தான்.  தானே  அனாமத்து கடிதங்களை எழுதி துங்கனுக்கு எதிராக ஆக்கி விட்டான். அரசனோ, தாங்கள் இருவருமாக சேர்ந்து உறுதி மொழி எடுத்துக் கொண்டதை நினைத்து எதுவும் துங்கனுக்கு விரோதமாக செய்யத் துணியவில்லை.  கொல்வது எப்படி? உடன் பிறந்தவர்கள் போல வளர்ந்தவர்கள். அப்படியே வாழ்ந்தவர்கள். இதுவரை இருவரிடையில் எந்த ரகசியமும் இல்லை. அப்படி இருக்க  திடுமென அவன் மறைந்தால் என்ன செய்வோம்.    

அவன் மகனுடன் போய் இருக்கிறான். திரும்பி வரட்டும். என்று சொல்லி  காலம் தாழ்த்தினான்.    ஒருவேளை இந்த செய்திகள் உண்மையானால், அதே அளவு அவனும் என்னிடம் சந்தேகப்பட்டால், இந்த அளவு யோசிக்க கூட மாட்டான். என் மரணம் நிச்சயம்.  என்றான்.   இப்படி யோசித்து யோசித்து விதை போல மனதில் விழுந்த சந்தேகம் நாளடைவில் வளர்ந்து மரமாகி விட்டது.

அரசனின் சொல் விக்ரஹராஜாவுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. இந்த பயத்தையே  பெருக்கும் விதமாக திட்டம் தீட்டினான்.   உடன் இருந்தவர்களுடன் அது போன்ற ஒரு காட்சியை செயற்கையாக அரசன் அறியாமல் செய்து விட்டிருந்தனர். 

ஆறு மாத காலம் மெள்ள பிரயாணம் செய்தபடி துங்கன் வந்து சேர்ந்தான்.  ஐந்து மெய்க் காப்பாளர்கள், மற்றும் மகனுடன் அரச சபைக்கு வந்தான்.  பின்னாலேயே வந்த பர்வ,சர்காரகா என்ற சகோதரர்கள், அரசன் எதுவும் பேச ஆரம்பிக்கும் முன் தங்கள் வாட்களால் இருவரையும் அடிக்கலாயினர்.

இதைக் கண்டு திடுக்கிட்டாலும் மகாரதன் என்ற மந்திரி, பரம்பரையாக அரச சபையில் இருந்த மந்திரிகள் வம்சத்தில் வந்தவர், கையில் ஆயுதம் இல்லாமலே, துங்கனை காப்பாற்ற விரைந்து வந்தார்.  துங்கனின் முன் நின்று வாளால் அடிபடும் முன் தடுத்து விட்டார்.  முதல் அடியில் துங்கன் திகைத்து மூச்சே வராமல் இருந்தவனை கண்ட அரசன் நிம்மதி பெருமூச்சு விட்டான்.

ஆஸ்தான மந்திரி தர்மன் என்பவன்,  துஷ்டனான பார்தா, கங்கன் என்ற மற்றொருவன்- இவர்கள் அனைவரும் துங்கனுக்கு அணுக்கமாக இருந்தவர்களே.அந்த சமயம் துங்கனின் மகன் அருகில் இருந்தும், கையில் ஆயுதம் இருந்தும் பயந்தவர்களாக.செய்வதறியாது, குலை நடுங்க,  மனம் கலங்க,  பேசாமல் நின்றனர்.    அரசன், துங்கனின்,  அவன் மகன் இருவரையும் தலையைச் சீவி, கோட்டைக்கு வெளியில் எறிய ஆணையிட்டான்.  அதன் பின் துங்க ஆதரவாளர்கள் சிலரை தண்டித்தான். மேலும் சிலர் தாங்களே வெளியேறி விட்டனர்.  அவர்களில் ஒருவன் துங்கனுடன் போர்க் களம் சென்றவன், அவனுடைய அசராத போர் முறைகளை கண்டு வெகுவாக மதிப்பு உடையவனாக இருந்தான்.  ஒரு மந்திரிக்கு, அந்தண மனைவியிடம் பிறந்தவன், புஜங்கன் என்ற பெயருடைய துங்கனின் சேவகன்,  சங்க்ராம அரசனை துரத்தி அடித்தான். தலை நகரம் முழுவதும் வீட்டுக்கு வீடு ஓடி ஒளிய முன்றவனை  தான் ஒருவனே இழுந்து வந்து அடித்தான்.  அரச சபையில் இருந்த காவல் இருபது வீரர்களை அடித்து நொறுக்கி விட்டான். பொக்கிஷ அதிகாரியாக இருந்த த்ரைலோக்ய ராஜா, கய்யன் மந்தகன் என்ற இடத்தில் வசித்து வந்த அபினவா என்ற போர் வீரன்.  அந்த ராஜ சபையில் துங்கனுடைய பாதுகாப்புக்காக ஏகாங்கா- எனப்படும் மெய்க் காப்பாளர்கள் முப்பது பேர் இருந்தனர்.  அவர்களும் புஜங்கனுடன் சேர்ந்து துங்க விரோதிகளை அழிப்பதில் தங்கள் உயிரைக் கொடுத்தனர். 94

அந்த கூட்டத்தில் இருந்த பத்மராஜன் என்பவன் மட்டும் தான் உயிர் பிழைத்தான். அவனும் மனம் தாங்காமல், தீர்த்த யாத்திரை கிளம்பி விட்டான்.  மீதி இருந்த சபையினர் தங்கள் ஆயுதங்களை கீழே வைத்து அரச சேவகமே வேண்டாம் என அவரவர் சொந்த ஊர்களுக்கு கிளம்பி சென்று விட்டனர்.  சண்டா என்பவன் குறி தவறாமல் அடிக்க கூடியவன். அர்ஜுனன் மத்ய தேசத்திலிருந்து வந்தவன்,  டாமரன் ஹேலசக்ரன் மூவரும் ஆயுதங்களை கீழே வைத்தவுடன் புரட்சி செய்தவர்களால் கொல்லப் பட்டனர்.  துங்கனுடைய வீட்டை ஸூறையாடினர்.   

ஆஷாட மாதம், வளர் பிறை துவாதசியன்று, துங்கன், அவன் மகன் இருவரையும், உள்ளுக்குள் இருந்து ஸூழ்ச்சி செய்த துரோகிகளின் பேச்சைக் கேட்டு நம்பிய அரசனால் கொல்லப் பட்டனர். துங்கன் தன் சமயோசிதமான செயல்களால் அறிவும் அனுபவமும் பெற்றவனாக  இருந்தான்,  உடன் இருந்து முதுகில் குத்தும் ஈனச் செயலை செய்பவன் அல்ல.  மகன் அவனுடன் இருந்து அறிந்து கொண்டவனாக அதிக அனுபவம் மிக்கவனாக வளர்ந்திருந்தான்.  இவர்களை தங்கள் சுயனலத்துக்காக ஏமாற்றி வதைத்த கயவர்கள் கையில் அரசாட்சி சென்றது.

நாகன் என்ற துங்கனின் சகோதரன் சேனைத் தலைவன் ஆனான். அரசன் சங்க்ராம ராஜன் மனதை கலைத்து, தன் சகோதரனையே கொலை செய்து,  பல தவறான நடவடிக்கைகளால் மக்களின் கோபத்துக்கும் ஆளானவன், தன் குடும்பத்தையே அழித்தவன், அரசாட்சியை கைப்பற்றினான். க்ஷேமா என்ற கந்தர்பசிங்கனின் மனைவியை  பலவந்தமாக தனக்கு அடி பணியச் செய்தான்.  நாலே நாட்களில், அந்த துங்கனுடைய மருமகள், சாஹி அரசனின் மகள் தீக்குளித்தாள்.

கந்தர்பனுடைய முதல் மனைவியிடம் அவனுக்கு விசித்ர சிம்ஹன், மாத்ருசிம்ஹன் என்ற இரு புதல்வர்கள் இருந்தனர்.  மம்மா என்ற அவர்கள் தாயார், மகன்களையும், துங்கனின் மற்றொரு ,மனைவி மங்கானா என்பவள்- அவளையும், அவளை அங்கு விட்டு வைத்தால் தனியாக தவிப்பாள் என்பதால் -அழைத்துக் கொண்டு ராஜபுரி என்ற ஊரில் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டாள்.

துங்கனின் இடத்தில் பத்ரேஸ்வரா வந்தான். கோவில்களை கொள்ளையடித்தவன்.  பூதேஸ்வர ஆலய பொக்கிஷங்களை திருடியவன்.  மற்றொரு பதவிக்கு தகுதியற்றவன் என்று தெரிந்தும் பார்த்தாவை நியமித்தான்.  தீய எண்ணங்களே உருவானவன், செய்வதெல்லாம் தீதே எனும்படி இருந்த வெறுக்கத்தகுந்த மனிதன் அவனையும் அவனைச் சார்ந்தவர்களுமே சாஜ சபையில் அதிகாரிகளாக அமர்த்தப் பட்டனர். இந்த அரசனின் புத்தியை என்ன சொல்வது?  சகோதரன் மனைவியையே அபகரித்தவன்,  துஷ்டன் என்று நாட்டு மக்கள் தூற்றுவர்.  அவன் நகராதிபனாக வலம் வந்தான். கொலை  கொள்ளை எதையும் விடவில்லை.  கூட்டம் கூட்டமாக மக்களை அடித்து வதம் செய்தான். எந்த நல்ல செயல் என்று அவனுக்கு அந்த பதவி?  தம்பத்துக்காக  பவித்ரமான ப்ரவரேஸவரனின் சன்னிதியில் ரங்க பீடத்தில் – கருவறை நுழைந்தான்.   மந்தங்கா என்ற சிந்துவின் மகன், கஞ்சன், அவன் பொக்கிஷ அதிகாரியாக ஆனான். அவனால் ஆனது மக்களிடம் வரி என்ற பெயரில் முடிந்த வரை கறந்தான். தின்பண்டம் விற்பவன், தேவமுகன் என்பவன், சந்திரமுகன் என்பவனை அரசன் கொண்டாடி அருகில் வைத்துக் கொண்டான். அவன் வியாபாரம் செழித்தது. கோடீஸ்வரனாக ஆனான்.  அரசன் அருகில் இருந்து உபாயனம்- அன்பளிப்பு என்ற பெயரில் காண வருபவர்கள் கொடுத்த பொருட்களை விற்று தனக்கு எடுத்துக் கொண்டான்.  வலுவான உடல் வாகுடையவன், பசித்தால் வேண்டிய அளவு தானே உண்பான், அதற்கு ஏற்றபடி இந்த இடத்தில் ஏன் கேட்பாரின்றி உண்டு கொழுத்தான். ஒரு நிலையில் உடல் நிலை ஏளனத்துக்கு உரியதாக ஆகியது.  செய்த பாபங்களுக்கு பரிகாரமாக சாகும் பொழுத்து ரனேஸ்வர கோவிலுக்கு தன் செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கு கொடையாக அளித்தான். அவன் புதல்வர்கள் துங்கன் இருந்த பொழுதே சேனையில் உயர் பதவிகளில் நியமிக்கப் பட்டிருந்தனர்.  மக்கள் இவர்களுக்கு கிடைத்த பதவிகளைப் பற்றி தங்களுக்குள் சிரித்துக் கொண்டனர்.  காதில் அணியாக,   பொன் அணியும் இடத்தில் ஒரு கோதுமையை உமியுடன்   வைப்பது போல என்று உதாரணம்.  அறிவில்லாத அரசன் துருக்கன் நாட்டை முற்றுகையிட்ட பொழுது இவர்களை அனுப்பினான். அலறி அடித்துக் கொண்டு திரும்பி வந்தவர்கள், தங்கள் சொந்த ஊருக்கே போய் சேர்ந்தனர். 118

திறமையில்லாத அதிகாரிகள், அவர்களைத் தட்டிக் கேட்க இயலாத அரசன், கீழ்நிலை அலுவலகர்கள் மிகவும் பாதிக்கப் பட்டனர்.  அவர்களும் டாமர தலைவர்களும் சேர்ந்து கொண்டு கலகம் செய்யலாயினர்.  அரசனின் மகள் லோடிகா என்பவள்  லோடிகா மடம்  என்பதை நிர்மாணித்தாள். தாயார் திலோத்தமா என்ற பெயரில் மற்றொரு மடமும் எழுந்தது.  அரசன் சங்க்ராமன்  குடும்பத்திலும் ஒருவள் இப்படி குணவதியாக இருந்து, மக்களுக்கு நன்மை செய்தாள்.  பத்ரேவரனும், ஒரு விஹாரம் என்பதை அமைத்தான்.  ஒரு நல்ல காரியம். இந்த அளவு கூட அரசன் சங்க்ராமன் செய்யவில்லை. கால் நடைகளுக்கான நீர்த் தொட்டி கூட கட்டவில்லை.

புகழ் பெற்ற யசோமங்கலா என்பவரின் மகள், ஸ்ரீலேகா என்பவளுக்கு வாய்த்தவன்  எந்த விதத்திலும் சாமர்த்யம் இல்லாதவனாக இருந்தான்.  சுகந்தீசீஹன் – துங்கனின் சகோதரன், ஜயலக்ஷ்மி என்ற மகளிடம் பிறந்த வல்லபன் என்பவன் அவளைக் கவர்ந்தான்.  கூர்மையான அறிவும், பேச்சுத் திறமையும் உடையவனாக, தானே ஜயகரகஞ்சா- ஜயகர என்ற பெயரில் பணத்தை சேமித்து வைக்கும் இடம்- என்பதை ஆரம்பித்தான்.  ஜயகர என்பவனும் ராணி ஸ்ரீ லேகாவின் அன்புக்கு பாத்திரமானான்.

நாலாம் ஆண்டு, ஆஷாட மாதத்து முதல் நாள், தன் மகன் ஹரி ராஜா என்பவனுக்கு பட்டம் சூட்டி விட்டு, சில நாட்களில் அரசன் சங்க்ரமரஜா மறைந்தான்.   1028 AC

ஹரி ராஜா வந்தது வசந்த காலம் வந்து விட்டது போல மக்கள் மகிழ்ந்தனர்.  அவனை வளர்த்தவர்கள் நல்ல பண்புடைய பெரியோர்கள்.  அறிவும், உத்சாகமும், புதியன செய்வதில் ஆர்வமும் உடையவன், அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தான்.   நாலா திசைகளிலும் பரவும் மலர்களின் மணம் போல அவனுடைய நல்லெண்ணமும் செயல் திறமையையும் அனைவரும் உணர்ந்தனர்.

மீற முடியாத கட்டளைகள் பிறப்பித்தான்.  திருட்டு என்பதை ஒழிக்க, கடைவீதிகளில் இரவு கடைகளை மூடுவதை தடைச் செய்தான்.   நிலவு உதித்தால் தோன்றும் புத்துணர்வுன் இவனது ஆட்சியில் தோன்றியதாம்.  அரண்மனை அதிகாரிகள் தங்கள் வேலைகளை ஒழுங்காக செய்ய முடிந்தது. குறிக்கீடுகள் அறவே நின்றன. இருபத்து நான்கு நாட்களே நீடித்த இந்த அரசு  அதே ஆஷாட வளர்பிறை எட்டாம் நாளே முடிவடைந்தது.  பிரகாசமாக வேணிற் கால நடு இரவில் சிமிட்டும் தாரகை போல மக்கள் மனதில் நிலைத்தவனாக திடுமென மறைந்தான்.  அரிதாக  உலகில் பிறக்கும் மிகச் சிறந்த மனிதர்கள்  அதிக நாள் வாழ்வதும் இல்லை. வேணிற்காலத்து நடு நிசியில் மேகங்கள் இல்லாத வானத்தில் பளீரென்று ஒளி வீசும் தாரகை போன்றவர்கள்.

அவன் தாயே, அவளுடைய தவறான வாழ்க்கை முறையை  எதிர்த்ததால், மகன் என்றும் பாராமல் தீவினை வைத்து கொன்று விட்டாள் என்று வதந்தி.   1028 AC

அடுத்து,   ஸ்ரீலேகா  என்ற ராணி, தான் ராணியாகப் போவதாக நினைத்து, நீராடி பட்டாடைகள், ஆபரணங்கள் அணிந்து கொண்டு வரும் முன், மெய்க்காப்பாளன் ஒருவனுடைய சகோதரன் சாகரன் குழந்தையை வளர்த்த தாத்ரீயின் மகன்  அனந்தா என்ற சிசுவை பட்டம் கட்டி அரியணையில் அமர்த்தி விட்டனர்.  1028-1063 AC

ரத்னம் பாம்பின் தலையில் இருக்கும் . மிகவும் சிரமப்பட்டு அதை வளர்த்தவன், கண் முன்னே மற்றவன் அபகரித்து விட்டால் எப்படி இருக்கும்?  அரசியின் நிலை அது தான். மகன் என்றும் பாராமல் கொலைக்கே துணிந்தவன் ராஜ்யம் கைவிட்டுப் போனால் அப்படி இருந்தது.  பேராசை. அரசியாக வாழ விரும்பியவள், ஒரு சாதாரண தாயாக கூட இல்லாமல் மகனை கொல்லச் செய்தது.

அதே சமயம், விக்ரஹராஜா என்ற  வயதான தந்தை வழி உறவினன்,  இளவரசன் மறைந்ததைக் கேட்டு லோஹாராவில் இருந்தவர், அவசரமாக  வந்தார். தானே அரியணையில் அமரப் போவதாக கிளம்பியவர்  வந்து சேர இரண்டரை நாட்கள் ஆகி விட்டன.  ஸ்ரீ நகரத்தில் தன் படைகளுடன் வந்து சேரவும், ஸ்ரீலேகா அனுப்பிய அவளுடைய படைகள் வழியிலேயே லோதிக மடம் என்பதில் எதிர் மறித்து, தங்கியிருந்த  மடத்துக்கு தீ வைத்து விட்டனர். 141

தன் வாழ் நாளில், இரண்டு மடங்களைக் கட்டி  ஒன்று தன் கணவன் பெயரில் மற்றது தன் மகன் பெயரில் என்று பிராயசித்தம் போல செய்து விட்டாள்.  அவை தவிர அரசியாக  ஆடம்பரமாக தன் விருப்பம் போல வாழ்ந்தாள்.   அவள் மகனும் அடுத்த பட்டத்துக்குரிய இளவரசனும், கர்பேஸ்வரன்- கருவிலேயே திரு உடையவன் – பிறக்கும் முன்பே அரசனாக அறிவிக்கப் பட்டவன்-  அதே குணங்களுடன் வளர்ந்தான்.  சாஹி வம்ச  ஒரு இளவரசனும், ருத்ரபாலன் என்பவனும்   அவனுக்கு நண்பர்களாக ஆனார்கள், ஏராளமான ஊதியம் கொடுத்து அவர்களை அரசவையில் பணிக்கு அமர்த்தினான். தானும் தாராளமாக செலவழித்தான். அப்படியும் ருத்ர பாலன் அமைதியாகவில்லை. தித்தாபாலன்,  எதுவும் செய்ய இலயாத நிலையில் பரிதவித்தான்.  ருத்ர பாலனின் அடியாட்களாக இருந்த அரசு அதிகாரிகள் பிரஜைகளை கசக்கி பிழிந்தனர்.   ருத்ரபாலனுக்கு நாட்டில் இருந்த அனைத்து தீய சக்திகளும் உற்ற நண்பராயினர்.  (ருத்ரபாலன் முதலான ஐவர்-துங்கன் சாஹி அரசனுக்கு உதவச் சென்ற சமயம் நண்பனானவர்கள்).  உத்பல என்ற மூத்தவன் மட்டும் கண் தெரியாதவர்களுக்கான ஒரு ஸ்தாபனத்தை கட்டிக் கொடுத்தான்.  அரசு பதவியை ஏற்ற  அனங்கபாலன் அசுர குணம் கொண்டவனாக இருந்தான்.   எந்த கோவிலில்  தேவ, தேவிகளின் எந்த பொற் சிலையை உடைக்கலாம் என்றே கனவு கண்டு கொண்டிருந்தானாம்.

(முதன் முதலில் சிலையை உடைப்பவனாக அனங்கபாலன் வரலாற்றில் அறிமுகம் ஆகிறான். அரசன் ஹர்ஷன் வந்த பின் தான் அதை எதிர்த்து சிலைகளுக்கு பாதுகாப்பாளராக இருந்தார் என்று சரித்திரம்)

ஆசாமதி என்ற நிலவு போன்ற முகம் உடைய பெண்ணை அவள் அழகுக்காக மணந்திருந்தான்.  பின்னர், ஜலந்தர தேசத்து அரசனின் இந்து சந்திரா என்பவரின்  அழகிய மகளை  அரசன்  அனந்ததேவன்  மணந்தான்.  இந்து சந்திரா  திரிபுரேஸ்வர என்ற இடத்தில் ஒரு பௌத்த மத மடத்தை மகள் பெயரில் கட்டியிருந்தார்.   பின்னர் இளையவளான ஸூர்யமதி என்பவளையும் மணந்தான்.

ருத்ர பாலனை அருகில் வைத்துக் கொண்டது துரியோதனன் கர்ணனுக்கு இடம் கொடுத்ததை ஒத்து இருந்ததாம்.  அரசன் காதில் அவன் ஓதுவது  அனேகமாக தவறான செய்கைகளாகவே ஆகும்.

த்ரிபுவன என்ற சேனைத் தலைவன், தாமரர்களை அடக்கி அவர்கள் உதவியுடன் இந்த (அனந்த தேவ) அரசனை வீழ்த்த முற்றுகையிட்டான்.  மெய்க் காப்பாளர்கள் தவிர மற்ற போர் வீரர்கள் அனைவரும் அவன் வசம் ஆகி விட்டிருந்தனர்.  கவசங்களை அணிந்து அனந்த தேவன்  எதிர்த்து நின்று போரிட்டான்.  ஆனால் உடல் வலு இல்லாதவன்.  வாய் வழிய உதிரம் பெருக விழுந்தான். ஆயினும் வாளினால் தாமரர்களின் ஈட்டியை வீழ்த்தியதைக் கண்ட திரிபுவனன் திகைத்தான். எதிர்ப்பே இருக்காது என்று எண்ணி வந்தவன், சிறுவனின் பராக்ரமத்தின் முன் தாக்கு பிடிக்க முடியாமல் பின் வாங்கினான்.  ஸமால தாமரன், அபினவ என்பவன், சாலாஸ்தலம்  என்ற அவர்கள் ஊரில் பிரபலமான வீரர்கள்.  சமயோசிதமாக செய்த அமோகமான வீரச் செயல்.  தாக்க வந்தவர்களை பயமுறுத்தி ஓடச் செய்தவன். உடல் முழுவதும் காயமும், பெருகிய உதிரமுமாக பைரவ அவதாரம் போல இருந்தானாம். விழுந்து கிடந்த மெய்க் காப்பாளர்கள், ஏகாங்க படையினர்- அடிபட்டு கிடப்பதைப் பார்த்து மனம் வருந்தி அவர்களுக்கு சிகித்சை செய்யவும், ஓய்வு எடுக்கவும், ஊதியத்துடன் விடுப்பு கொடுத்து அனுப்பினான். அதன் பின் உயிரைக் கொடுத்தும் அரசை காப்பதாக உறுதி எடுத்துக் கொண்ட ஏகாங்க வீர்களுக்கு பல விதமான நிதி உதவிகளைச் செய்தான்.  ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைத்து பாராட்டினான்.  அக்ஷபடலம் என்ற இடத்தில் நிரந்தரமாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையையும்   தளர்த்தினான். வெற்றி வீரனாக திரும்பிய அரச குமாரனுக்கு, உடல் மேல் தைத்திருந்த ஆயுத நுனிகளை நீக்கி சிகித்சை செய்து பாலால் நீராட்டினர்.   162

திரிபுவனன்  திரும்ப வந்து மன்னிப்பு கேட்டவுடன், அவனை மன்னிக்கவும், திரும்ப பதவியில் அமர்த்தவும் அரசன் அனந்தன் ஆணையிட்டதை பலரும் புகழ்ந்தனர்.   தோற்றது தவிர திரிபுவனன் வறுமையாலும் வாடி இருந்தான் என்பதும் ஒரு காரணம்.  ப்ரும்ம ராஜன் என்ற ஒரு உறவினனை பொக்கிஷ அதிகாரியாக நியமித்தான். அவன் ருத்ரபாலனுக்கு இணங்காததால் பதவி நீக்கம் செய்யப் பட்டிருந்தான்.  தாமரர்கள் உதவியும், ஏழு  மிலேச்சர்கள் எனப்படும் வெளிநாட்டு அரசர்களின் முக்ய அதிகாரிகள்  தரதா- அசல மங்களா -Darada, achalamangala-  என்பவர்களின் ஆதரவும் பெற்று ஊர் திரும்பி கொண்டிருந்தவனை,  ருத்ரபாலன் க்ஷீரப்ரஸ்தா  இடத்தில் எதிர்த்து தன் படையுடன் தாக்கினான்.  மறுநாள் முறையாக போர் என்று அறிவித்து இரு பக்கமும் தயார் செய்து கொண்டிருந்தனர்.

தரத தலைவன் ஊருக்குள் நுழைந்தவன் எதேச்சையாக  பிண்டாரகன் என்ற நாகர் தலைவனைப் பற்றி கேள்விப் பட்டவன், அவன் இருப்பிடம் சென்று சந்தித்தான்.  தன் போக்கில் எதையும் குறிப்பாக யோசியாமல் சென்று கொண்டிருந்தவன், மற்றவர்கள் தடுத்தும் கேளாமல் நீரில்  துள்ளிக் கொண்டிருந்த ஒரு மீனின் மேல் தன் ஈட்டியை எறிந்தான்.  திடுமென ஒரு நாகர் தலைவன் குள்ளநரி போல வேடத்துடன் நீரில் இருந்து துள்ளி எழுந்தான். முன் யோசனையின்றி அந்த தரத தலைவன் அதையும் வேட்டையாடவே பின் தொடர்ந்தான்.  

கையில் ஈட்டியுடன் ஓடுபவனைப் பார்த்த ருத்ரபாலனின் வீரர்கள்  நாளை போர் துடங்குவோம் என்று சொல்லி விட்டு, இவன் இன்றே அடிக்க வருகிறான், இரு பக்கமும் சேர்ந்து எடுத்த முடிவு, அதை மீறி விட்டான் என சந்தேகித்து அந்த படை உண்மையாகவே போரைத் துவங்கி விட்டது.

அதன் பின் இரு படையினரின் ஆயுதங்களும் பயங்கர ஓசையுடனும், தீப்பொறி பறப்பது போன்ற ஒளியுடனும் மோதிக் கொண்டது  ஏதோ தேவ லோக அழகிகள், இவர்களின் வீர விளையாட்டை ரசிப்பது போல எண்ணி விட்டார்களோ, அல்லது தாங்களே இதோ அந்த உலகம் சென்று நேரில் அந்த அழகிய பெண்களைக் காணப் போகிறோம் என்று மகிழ்ந்தார்களோ என்று கவி வர்ணிக்கிறார். 

ருத்ரபாலன் நிஜ ருத்ரன் போலவே ஆனான். தரத தலைவனின் தலையைக் கொய்து தன் ஆயுதத்தால் தூக்கிப் பிடித்தான்.  அதே வேகத்துடன் மிலேச்ச அதிகாரிகளையும் தாக்கி வதைத்தும் சிறை பிடித்தும் அவர்களின் ஆபரணங்களை கைப்பற்றினான்.  பொன்னும், மணியும், முத்துமாக அலங்கரிக்கப் பட்ட தரத தலைவனின் மகுடத்தை அரசன் அனந்தனிடம் சமர்ப்பித்தான்.  

உதயனவத்சன் என்ற சகோதரன் ஏதோ தகராறு செய்தான்.  தானே தூண்டி விட்டு அந்தணர்களை உண்ணாவிரதம் இருக்கச் செய்தான்.  இதற்குள் லூடா – என்ற தாபஜ்வரம் வந்து ருத்ரபாலன் மடிந்தான்.  அதே தொத்து வியாதியால், மற்ற சாஹி இளவரசர்களும் மறைந்தனர். இவர்களுடன் பாலன் என்ற அடை மொழியுடன் அழைக்கப் பட்டவர்கள் ஒரு முடிவுக்கு வந்தனர். புயல் அடித்து ஓய்ந்தது போல, என்று அனந்தனின் மனைவி ஸூர்யமதி மகிழ்ந்தாள்.  தன் கணவனின்  கண்ணாடி போன்ற தெளிவான உள்ளம் அவர்களின் சகவாசத்தால்  மலினமாகி இருந்தது, அது விலகி தற்சமயம்  பரிசுத்தமானதாக ஆகி விட்டது என்றாள்.   அவளுடைய மற்றொரு பெயர் சுபடா.  கௌரீஸ்வர- என்ற வழிபாட்டு ஸ்தலம் விதஸ்தா ஏரியின் கரையில் அமைத்தாள். உடன் சுபடாமாதா என்ற தேவியின் ஆலயமும் எழுந்தது.   சதாசிவ ஆலயம் பூர்த்தியாகி, யாகங்கள் நடந்தன.  அதன் அங்கமாக நாட்டு மக்களுக்கு ஏராளமான பொருளும், தனமும், பசுக்களும், பொன்னும், ஆபரணங்களும் என்று பலவிதமாக  கொடுத்தாள்.   பல ஏழை அந்தணர்கள் தங்கள் வறுமையில் இருந்து மீண்டனர்.

தன் இளவல், ஆசாசந்திரன் – கல்லனா என்று அழைக்கப் பட்டவன், அவளுக்கு பிரியமான சகோதரன் .அவன் பெயரில் ஒரு மடாலயமும், அக்ரஹாரம் எனும் குடியிருப்பும் கட்டினாள். மற்றொருவன் சில்லானா என அழைக்கப் பட்டவன், அவன் பெயரில் விஜயேச என்ற ஆலயத்தின் அருகில்  ஒன்றும் மற்றொன்று, தன் கணவரின் பெயரில் அமரேச ஆலயத்தின் அருகிலும் மடாலயங்கள் கட்டினாள்.  அதில் த்ரிசூலம், பாணம், லிங்கம் என்ற சிவாலய சிறப்புகளும் பிரதிஷ்டை செய்யப் பட்டன. மறைந்த தங்கள் மகனுக்காக,சதாசிவன் ஆலயத்தின் அருகிலேயே தாங்களும் குடியிருக்கலாயினர்.   இயல்பாகவே தெய்வ நம்பிக்கையும்  நற்குணங்களும் நிறைந்தவள் விஜயேஸ்வர ஆலயத்தில்  பணியில் இருந்த அந்தணர்களுக்கு  நூற்று எட்டு அக்ரஹாரங்கள் கட்டுவித்தாள்.

பழைய அரண்மனைகள், காலம் காலமாக அரச குடும்பத்தினர் வாழ்ந்த இடங்களை விட்டு இந்த மடாலயங்கள், ஆலயங்களில்  வாழ்ந்தனர்.   பின் வந்த அரசர்களும் அதே போல இந்த வீடுகளில் வாழ்ந்தனர்.

அரசனுக்கும் குதிரைகளின் மீது ஈடுபாடு இருந்தது.  அதனால் குதிரைகள் கட்டி வைத்து பராமரிக்கும் சேவகர்கள் பழக்கமாயினர்.  குதிரையேற்றம், அதில் அமர்ந்து போரிடுதல்  முதலிய செயல்களை அறிந்து கொண்டான்.  அவன் பிறக்கும் முன்பே அரண்மனை விகடகவி ஒருவன் அனைவருக்கும் பரிச்சயமானவன் இருந்தான். பிரஜைகளை வற்புறுத்தி தனக்கு தரச் சொல்லி செல்வம் சேர்க்கிறான் என்பது தெரிய வந்தது. டல்லகன் என்ற மத்ய சமவெளி பிரதேசத்தில் இருந்து வந்தவன். 

மாளவ தேசத்தை ஆண்ட போஜ ராஜா  பிரசித்தமான அரசன். தாம்பூல பிரியன். பத்ம ராஜன் என்பவன் அரசனுக்கு இடை விடாது தாம்பூலம் தயார் செய்து அளிப்பவனாக இருந்தான்.  போஜ ராஜன்,  கபாடேஸ்வர என்ற இடத்தில் பாப சூதன என்ற புண்ய தீர்த்தம் வரும்படி குளம் வெட்ட பல பொற்காசுகள் செலவழித்தான்.  – அதன் பாவனமான நீரால் வாய் கொப்பளித்து வருவதை வழக்கமாக்கிக் கொண்டிருந்தான்.  இந்த தேவையையும் பத்ம ராஜன் தானே முனைந்து கொண்டு வந்து கொடுத்தான். அதற்காக கண்ணாடி குடுவைகள் தயாரித்து, தினமும் புதிய குடுவையில் நீரைக் கொண்டு வந்து கொடுப்பான்.  அதனால் அரசன் போஜனுக்கு அருகில் அடிக்கடி  செல்வதால்  அரசன் கண்டவுடன் அறிந்து கொள்ளும் அளவு பரிச்சயம் ஏற்பட்டது.  அவன் கொண்டு வந்து கொடுத்த தாம்பூலம் நாகரகண்ட (?) மற்றும் வெற்றிலை முதலியவைகள் கொண்டு தயாரிக்கப் பட்டவைகளுக்கு அரசன் செலவழித்த பணம் கணக்கில் அடங்காது. பொக்கிஷமே காலியாகும் அளவு என்று கவி சொல்கிறார்.  ஐந்து நிலவு போன்ற அமைப்புகள் ரத்தினங்கள் பதித்து செய்யப் பட்ட அரசனது கிரீடத்தையும், அரியாசனத்தையும்  கடன் கொடுத்தவனுக்கு அடகு வைக்கும் படி ஆயிற்றாம்.  அரச சபையில் அமர வேண்டிய நாட்களில் மட்டும் கொண்டு வந்து வைப்பானாம். ஏனெனில் அரச சபையில் அவையின்றி அரசன் நீதி விசாரனைகள் செய்ய முடியாது என்பதால். 

ஸுர்யமதி  என்ற அந்த அரசனின் மனைவி, பத்மராஜன் தான் இந்த நிலைக்கு கொண்டு வந்து விட்டான் என்று அவனை நீக்கி விட்டாள்.   இதற்கு முன் தல்லக என்ற விகடகவியை நீக்கிய பொழுது அரசவையில் எந்த எதிர்ப்பும் இல்லை.  அரசன் அவளுக்கு முழு சுதந்திரமும் அளித்து அரச சபையின் சீர் திருத்தங்களைச் செய்ய அனுமதித்தான்.  தனது கவனமின்மை என்பது தெரிந்து விட்டது.  அவளால் சீர் செய்ய முடியுமானால் தடுப்பானேன்.  அவர்கள் இருவரும் மனம் ஒத்து இந்த ஏற்பாட்டை செய்து கொண்ட பின் அரசன் சிவ பூஜையில் முனைந்து இருந்தான்.  நீராடுதலும், நித்ய பூஜைகளான, அபிஷேக ஆராதனைகளை சிரத்தியுடன் செய்பவனாக அரசன் அனந்த தேவன் தவம் செய்யும் முனிகளுக்கு சமமாக ஆனான்.   

இளவயது கன்னிப் பெண்கள் தங்களுக்கான துணையை கண்டு கொள்வது போன்ற முனைப்புடன் அரச பதவிகளுக்கு அலுவலக பணியாளர்கள் முயன்றனர்.   ஒரு நாவிதன், க்ஷேமா என்பவன், தான் செய்யும் வேலைக்கு ஊதியத்தை போலி கணக்கு, இல்லாத ஆட்களின் எண்ணிக்கை என்பது  போன்ற தகிடு தத்தங்களால் பன்னிரண்டில் ஒரு பாகம் அதிகமாக  பெற்றுக் கொண்டிருந்தான்.

கேசவன் என்ற மந்திரி , நல்லவன் தான், திரிகர்த்த என்ற இடத்திலிருந்து வந்த அந்தணன்   சந்திர ஒளியுடையது என்று சொல்லி அரசனுக்கு குடை பிடிப்பான்.  திடுமென அவன் வறியவனாக , தனியாக நகரில் சுற்றிக் கொண்டிருப்பதை மக்கள் கண்டனர்.  மின்னல் போன்று நிலையற்றது செல்வம் என்று சும்மாவா சொன்னர்கள்.  

செல்வம் அவனவன் வினைப் பயன் என்பர். குடும்பச் சொத்து என்பர்.  தான் தன் முயற்சியால் பெற்றது என்பர்.  எப்படி கிடைத்திருந்தாலும் ஒரு நாள் கை விட்டு போக போவதே.  அதில் வீணாக

பெருமை கொள்வது அறிவுடமை அல்ல. 

கௌரிச, பூதி, வைஸ்ய, என்பவர்களுக்கு ஹலதர, வஜ்ர, வராஹ  என்ற புதல்வர்கள் இருந்தனர். 

ஸூரியமதி இந்த ஹலதரனை பதவியில் அமர்த்தினாள்.  அவனும் நாள் தோறும் பணியில் இருந்து கற்றுக் கொண்டவனாக பதவி உயர்வு பெற்றான்.  சகல அதிகாரங்களுடன் முக்யமந்திரியாக ஆனான்.

அறிவும் ஆற்றலும் உடையவன் ஆனதால் சுற்றியுள்ள தேசங்களையும்  கைப் பற்றி, அரசை விரிவு படுத்தினான். மனவியுடன் அனந்தன் தங்கள் தேவைகளுக்கே  அவனை எதிர்பார்க்கும் நிலை வந்து விட்டது. 

க்ஷேமா போன்றவர்களின் கையாடலை நிறுத்தினான். ஏதோ ஒரு  அரசன் செய்த ஒரு ஏற்பாடு. நாலில் ஒரு பங்கு வரி என்பதை இந்த ஹலதரன் அனைத்து நிர்வாக துறைகளுக்கும் வரியாக வசூலித்து விட்டான்.

பொது மக்களின் சேமிப்பான தங்கத்தை சோதித்து மதிப்பிடுவதாக சொல்லி அந்த தங்கத்தையும் அரசனுக்கு தெரிவிப்பதாக ஒரு சட்டம் இருந்தது. பொருள் கை மாறாது. அரசன் கவனத்தில் இருக்கும்.  இன்னாரிடம் இன்ன சேமிப்பு என்ற கணக்கு. அறிவுள்ள ஹலதரன் அதை மறுத்தான். ஒருவனுடைய சேமிப்பு அவன் உரிமை. அதை சோதிப்பதோ, தண்டிப்பதோ நியாயம் அல்ல.  அதனால் அந்த சோதனையையும், மதிப்பீடலையும் நிறுத்தி விட்டான். பின்னால் எதோ ஒரு அரசன் அதற்கு வரி விதிக்கக் கூடும், அல்லது அபகரிக்க கூடும் என்பதால்.

சதுரங்கம் போன்ற விளையாட்டுகள் மூலம் பொது ஜனங்களை ஆசை காட்டி அவர்கள் பணத்தையும், மனைவி மக்களையும் இழப்பதை தடுத்தான்.  எந்த காரணம் கொண்டும்  மற்ற மனிதர்களை ஏமாற்றுவதோ, நிர்பந்தப்படுத்தி பிடுங்குவதோ தவறு என்று ஆணையிட்டான்.

ஆலயங்களில் தகுதி இல்லாதவர்கள், தாங்களாக பணி செய்வது என்ற பெயரில் நியமித்துக் கொண்டு இருந்ததை தடுத்தான்.  விதஸ்தா சிந்து நதிக் கரைகளில் இருந்த ஆலயங்கள், செப்பனிடப் பட்டு, ஒழுங்கான வழிபாடுகளும் உத்சவங்களுமாக ஆயின.  ஆலயங்களின் பொன்னால் ஆன சிலைகள், அலங்காரங்கள் பொன்னின்  ஒளிவீசும்படி சுத்தம் செய்யப் பட்டன.  அதே போல பாடசாலைகள், அக்ரஹாரங்களும் சீராக்கி, சுத்தமாக விளங்கச் செய்தான்.

அதே சமயம் அவன் சகோதரர்களும், புதல்வர்களும் பழகிய தோஷம்,  தற்சமயம் வளமாக வாழ்ந்தாலும், மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டியவர்கள்,  பழையபடி ஆலயங்களுக்கு வருபவர்களிடம்  பரிசு பொருட்கள், அன்பளிப்பு போன்ற சில்லறைகளை விட முடியாமல் தவித்தனர்.  வராஹனின் மகன் பிம்பன் என்பவன், வாயில் காப்பவர்களுக்கு அதிகாரியாக இருந்தான்.  தானம் கொடுப்பதில், மேகம் நீரை  பொழிவது போல கொடுப்பனாம்.  சிறந்த வீரனும் கூட. டாமர குலத்தினரை ருடன்  சிறிய படையுடன் சென்று அவர்களை வென்றான். காலம்ருத்யு போன்று அவர்களுக்கு பயங்கரமாக இருந்தானாம். அதுவே காசா -खाशा -என்ற இடத்தில்  குறைவான ஆட்படையே காரணமாக தோற்க நேர்ந்தது.  புற முதுகு காட்டாமல், அந்த போரில் உயிரிழந்தான்.

சம்பா என்ற இடத்தில் அரசன் அனந்தனே முன்னின்று போரில் வென்றான். சால என்ற அரசன் போரில் மடியவும், தானே வேறொருவனை அரசனாக அரியணையில் அமர்த்தினான்.  அந்த வெற்றி தந்த உத்சாகம், யோசியாமல் மேலும் பல ராஜ்யங்களை முற்றுகையிட்டு வெற்றி பெற்றான். அதுவே சுற்றிலும் இருந்த சிற்றரசர்களுக்கு குலை நடுக்கம் வரச் செய்தது.

துக்கா என்பவனின் மகன் கலசன் என்பவன்  தனது சைன்யம் வருந்துவதைக் கண்டு பொறுக்காமல் கலகம் செய்தான்.  ஹலதரன் முன் யோசனையுடன் அவனை அந்த வல்லாபுரம் என்ற இடத்திலிருந்து வேறு இடத்துக்கு மாற்றி விட்டான்.  அரசன் அனந்தன் உரஸா என்ற தேசத்தை தாக்கியபொழுது, எதிரி அரசன் பாதைகளை அடைத்து தடுப்புகள் போட்டிருந்தான்.  சேனைத் தலைவன் அந்த நுழைய முடியாத வழிகளை சமப்படுத்தி, அரசனை பத்திரமாக வெளியேற வழி செய்து விட்டான்.

அனந்தனின் ஆட்சி காலத்தில்  பலவிதமாக இன்னல்கள் முளைத்தன. உட் பூசல், ஏதோ ஒரு காரணமாக கலகம் என்று அவ்வப்போது தோன்றி மறையும்.  அரசனுக்கு ஆதரவாக இருந்த பத்ரேஸ்வரா என்பவனின்  மகன் ராஜேஸ்வரா என்ற எல்லைப் பகுதியின் காவல் பொறுப்பில் இருந்தவனை க்ரமராஜ்யா என்ற தாமரன் கொன்று விட்டான். அத்துடன் மேலும் பல வீரர்களும் அவனால் கொல்லப் பட்டனர்.

நியாயம், தர்மவழி என்று பார்த்தால் இந்த செயல்கள் அத்து மீறல்களாகத் தெரியும்.  அரச அரண்மனையில் பணி செய்யும் சேவகர்கள் தங்கள் பதவியை தக்க வைத்துக் கொள்ளவே நினைப்பவர்கள்.  இவைகளை எதிர்க்கவா முடியும்? நெருப்புடன் விளையாடுவது போன்றது அரச வாழ்வும். ராஜ நீதியே வேறு.

இந்த அளவு நன்மைகளே செய்த ஹலதரனும் அரசியை அடிக்கடி சந்திக்கிறான் என்பதை வைத்து ஒரு  வதந்தியை கிளப்பி விட்டனர். ஆசாசந்திரன்  போன்ற கைக்கூலிகள் அதை பரப்பினர்.

அரசன் ஹலதரனை சிறைக்கு அனுப்பினான். அவன் பதவி, செல்வம் அனைத்தும் பறி போயிற்று. சீக்கிரமே, அரசன் அவனை விடுவித்து விட்டான். நடுவில் விலகியிருந்த திருமகளின் அருள் பார்வை அவன் பால் திரும்பியதோ எனும்படி பழைய செல்வாக்கை அடைந்தான்.  அதை அடைந்த பின் மற்ற பெருமைகள் தானே வந்து ஒட்டிக் கொண்டன போலும். ஆயினும் கற்ற பாடம், கவனமாக இருந்தான். அரச குலம் ஒரு வினாடி நேரத்தில் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்ளவும், தண்டிக்கவும் துணியும். மழைக் கால வானம் போல திடுமென கறுத்து மழை பொழிவதும் கொட்டித் தீர்த்த பின் வெளுத்து ஸூரிய ஒளியில் பள பளத்துக் காண்பதும் போல.

நேர் வழி  மட்டுமே அறிந்திருந்த அரசனுக்கு மனைவியின் மூலமே உயர்வும், அவள் காரணமாகவே தொல்லைகளும் அதிகரித்தன.   இதற்குள் மகன் கலசனுக்கு பட்டம் சூட்டவேண்டும் என்ற முனைப்போடு அரசி செயல் பட்டாள்.  ஓயாமல் அதே எண்னமும் பேச்சும்.  ஹலதரன் மற்றும் சில அறிஞர்கள், அரசனிடம் அதிகாரம் மமதையை கொண்டு வரும் என்பதையும், பின்னால் வருந்த நேரிடும் என்பதையும் வலியுறுத்தி வந்தனர்.  அரசி அந்த நிலைக்கு வரக் காரணமே அவள் கை ஓங்கி இருந்ததே. அரசன் பொறுக்க மாட்டாமல் சம்மதித்தான்.  அது மட்டுமா, தானும் தன் மகனிடம் இருந்த பாசத்தால்,அரசுரிமையை அளித்து கலசனை அரியணையில் அமர்த்த சம்மதித்தான்.

அரண்மனை காரியஸ்தன் ரணாதித்யனிடம் முடி ஸூட்டு விழாவுக்கான ஏற்பாடுகள்  ஒப்படைக்கப் பட்டன. முப்பத்து ஒன்பதாவது ஆண்டு, கார்த்திகை மாத வளர்பிறை ஆறாம் நாள் அரச குமாரன் மேல் அபிஷேக ஜலம் தெளிக்கப் பட்டது.  அரச மரியாதைகளுடன் அந்த அரச குமாரனை இதோ யுவராஜா அனந்தன் என்று சொல்லிய படியே தந்தையிடம் கொண்டு வந்து சேர்த்தான்.

என்ன நினைத்தோ அனந்த ராஜா வெகுண்டான். வெடுக்கென்று திரும்பி, கன்யா குப்ஜ வழக்கம் இது. இதை ஏன் இங்கும் கொண்டு வருகிறாய்” என்றான்.   

திடுக்கிட்ட  ரணாதித்யன் சொன்னான். ‘ கன்யாகுப்ஜ அரச வம்சம் மட்டுமல்ல பல இடங்களிலும் இது தான் நடைமுறை.  வேறு எப்படி அறிவிப்போம்.    ‘  ராஜ்யத்தை துறந்து முனிவனாக இருந்தவன் தானே. அந்த அரச குலத்து அபிமானம், தற்பெருமை அவ்வளவு சீக்கிரம் விலகுமா என்ன?  

மந்திரியின் தொலை நோக்கு பார்வை அரசனின் மனதைத் தொட்டது.  அந்த சொற்களைக் கேட்ட பின் பதில் சொல்ல வாயெழவில்லை.  

மறுநாளே ராஜாவுக்குரிய மரியாதைகளும், அரச சபையினரின் வண்ணக்கங்களையும் ஏற்றவனாக அரியணையில் அமர்ந்திருந்தான்.   பழைய அரசனை (அனந்தனை) சில முதிய ஏவலர்களே ஸூழ்ந்து இருந்தனர்.

ஹலதரனும் தன் உணர்வை காட்டிக் கொள்ளாமல் அரசனிடம் வந்து பணிவாக, “அரசே ! இந்த பாலகன் மீது இவ்வளவு பெரிய பொறுப்பை சுமத்தி விட்டீர்கள். இளம் வயது சுதந்திரமாக விளையாடவோ அனுபவிக்கவோ ஏற்றது. முதுமையை எட்டிக் கொண்டிருக்கும் உங்களுக்கு ஓய்வு தேவைப்படுகிறது.  ஆயினும் இது எனக்கு சரியாக படவில்லை. நீங்கள் நிர்வாக பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். உங்கள் மகன் இன்னும் கற்றுக் கொள்ளவும், அனுபவிக்கவும் நிறைய இருக்கிறது. உங்கள் மேற் பார்வையிலேயே வைத்துக் கொள்வது தான் சரி”

அரசனுக்கு இது சம்மதமாக ஆயிற்று. கலசன் பெயரளவில் அரசனாகவும், அரசாட்சி அனந்தனின்  கையிலுமாக  தொடர்ந்தது.  அரச சபையில் அவன் அரியணையில் இருந்து  பொது மக்கள் குறை கேட்பதானாலும், ஆயுத சாலையில் ஆயுதங்களுக்கு வணக்கம் செலுத்துவதானாலும் அவன் முன்னிலையில் அரசன் செய்வதாக ஆயிற்று.  புரோஹிதர் என்ற குரு அருகில் நின்று சொல்ல சிஷ்யன் செய்வது போல தோற்றமளித்தது. 

தன்னடக்கம் இல்லாதவர்கள், சுகம் என்றால் துள்ளி குதிப்பதும், துக்கம் என்றால் முகம் வாடி செயலற்று போவதும் இயல்பே. காரணம் எதுவும் வேண்டாம். இவர்கள் மனதில் திடமாக ஒரே கொள்கை பிடிமானம் இல்லாத குறை தான்.

பிடிவாதம் பிடித்து மகனுக்கு ஆட்சி என்று தன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொண்ட தாயான அரசி  தன் மதிப்பும், அரசனின் மதிப்பும் தாழ்ந்தது தவிர வேறு எதையும் அடையவில்லை. அதுவே அவளுக்கு தன் தவற்றை சுட்டிக் காட்டியது போல ஆயிற்று.  விளைவு, மகனிடம் அன்பு குறைந்தது.   பொறாமை தீயாக  சுட்டது.  மருமக்கள் அரச உடையை, அலங்காரங்களை, விலையுயர்ந்த ஆபரணங்களை அணிவதைக் கண்டும் அரசனின் இள மனைவிகள் என்ற மதிப்புடன் வளைய வருவதையும்  பொறுப்பாளா?  தன் அறையிலேயே அவர்களுக்கு இடை விடாது ஏதாவது பணி செய்ய கொடுத்து தனக்கு அருகிலேயே இருக்கும்படி வைத்துக்  கொண்டாள். சுத்தம் செய்யும் பணிகளைத் தவிர மற்றவைகளைச் செய்தனர்.

ஒரு நாள் அரசனின் தந்தை வழி சகோதரனான உறவினன்,  விக்ரஹ ராஜனின் மகன் க்ஷிதிராஜன் என்பவன் யதேச்சையாக அரசனைக் காண வந்தான். அவன் தன் மனதை வருத்திய செய்தியை பகிர்ந்து கொண்டான்.  அவன் மகன் புவன ராஜா பட்டத்துக்கு வர விரும்பி கிளர்ச்சி செய்தான். நீலபுரா  என்ற ராஜ்யத்தில் அடைக்கலம் புகுந்து விட்டான்.  தந்தை என்றும் பாராது அவர்களின் படை பலத்துடன் தன்னையே எதிர்த்து போரிட வந்து விட்டான்.  மூடன், நான் எந்த அளவு பாகவதத்தை மதிக்கிறேன், பூஜைக்குரியதாக போற்றுகிறேன் என்பதை அறிந்தும், பாகவத நூலில் வரும் பாத்திரங்களின் பெயர்களை தன் நாய்களுக்கு வைத்தும், அவைகளுக்கு உபனயனம் செய்வித்தும் அவமானப் படுத்துகிறான். அதனால் மனைவி தடுத்தும் கேளாமல் க்ஷிதிராஜன் இயல்பாகவே ஆன்மீக நாட்டமுடியவன் ஆனதால் முழுமையாக துறவி ஆகி விட்டான். 

அரச குடும்பத்திலும் பூசல் ஆரம்பித்தது. அரசனின் முதல் மனைவி ராமலேகா என்பவளின் மகன் தான் மூத்தவன். மூத்தவன்  உத்கர்ஷன் இருக்க இளையவன் ஆட்சி பொறுப்பை ஏற்றது அந்த குடும்பத்தினருக்கு சம்மதமாக இல்லை. ராஜ ரிஷிகள் போல இருந்த பல அரச ஆலோசகர்களும் பதவி விலகி அவர்கள் அனைவரும் தீர்த்த யாத்திரை சென்று விட்டனர்.

பல ஆண்டுகள் அரசன் அனந்தன் பொறுப்புடன் அரசை நிர்வகித்தான்.   பரம வைஷ்ணவன்- பகவான் விஷ்ணுவை பூஜிப்பவன். சக்ரதரன் என்று விஷ்ணுவின் பெயர்.  அந்த பெயரையே தியானித்து நல்ல மனதுடைய அரசன் அனந்தன் ஸ்ரீ விஷ்ணு பதம் அடைந்தான்.

போஜ ராஜனும் நிறைய தானம் செய்தும் தானே அறிவும், கலையுணர்வும் உடையவனாக சிறந்த அரசனாக வாழ்ந்து மறைந்தவன். இருவரும் பல விஷயங்களில் ஒரே விதமான குணங்களால் மக்களின் மதிப்புக்கு ஆளானவர்கள்.  கவிகளுக்கு பந்துக்களாக இருந்தவர்கள். 

தந்தை வழி பங்காளியான ஒரு சகோதரன் அவன் மகன், தன்வங்கன் என்ற அரசன்  அவன் மடியில் தன் பேரனை கிடத்தி ராஜ்யத்தையும் சிசுவையும் பாலிக்கச் சொல்லி வேண்டிக்கொண்டு அனந்த ராஜா விஷ்ணு பதம் அடைந்தான்.  (இடையில் நடந்த சம்பவங்கள் தெரியவில்லை)

தன்வங்கனும் அந்த பொறுப்பை ஏற்று, சிசுவை நல்ல படியாக வளர்த்து, திரும்ப காஸ்மீர தேசம் வந்து அவன் வளர்ந்து பொறுப்பை ஏற்கும் வரை  உயிருடன் இருந்து உதவிய பின்,  சக்ரதர என்ற இடத்திலேயே இயற்கை எய்தினான்.   சக்ரதரன் – சக்கரம் என்ற ஆயுதம் உடைய ஸ்ரீ மகா விஷ்ணுவின் வைகுண்டம் சென்றடைந்தார்.  

இதுவரை காஸ்மீர தேசத்தை ஆண்ட அரசர்கள் நியாயமாகவே ஆண்டனர். துரோகம் என்ற களங்கம் அரச குலத்தை அண்ட விடவில்லை.  ராஜ நீதியை மதித்தவர்கள், பொதுவான அரச போகங்களை அனுபவத்தவர்களாக, எல்லை மீறாமல், ஆண்டனர்.

அனந்த பூபதியின் ஆட்சி காலத்தில் அவ்வப்போது ஏற்படும் இடர்களை, கலகங்களை அடக்கி அரசு இயந்திரம் சீராக செல்ல வேண்டியவைகளைச் செய்து பாதுகாத்து வந்த ஹலதரனும் கால கதி அடைந்தான்.  சக்ரதர என்ற இடத்தில் மரண படுக்கையில் இருந்தவனை அனந்த அரசனும் அரசியும் அருகில் வந்து அது வரை அவன் அரசுக்கு செய்த சேவைகளை பாராட்டி, தங்கள் முனமுவந்த அன்பையும் வெளிபடுத்தி உணர்ச்சி வசப்பட்டனர்.  ”  ஹலதரா! உன்னால் பல முறை நல் வழி காட்டப் பட்டோம். அனாவசியமாக பிற நாடுகளுக்கு படையெடுக்காதே என்றாய்..   உடனடியாக எழும் வேகத்தால், பர பரத்து யோசியாமல் சாகசத்தைக் காட்டாதே.  கலகம் செய்தவனை உன் முன் யோசனையால் வல்ல புரத்து அனுப்பியதும் நன்மைக்கே.   அவன் போன்றவர்கள் முள்ளாக உறுத்திக் கொண்டிருந்தவர்கள். “  அவன் சொன்னான்.” இதோ, ஜிந்து ராஜன்.  வளர்ந்து விட்டான். வீரமும் துடிப்பும் உள்ள இளைஞன்  தனித் தன்மையுடைவன்.  அவனை கண்காணித்து உன் வசம் வைத்துக் கொள். ஜயாந்தன் தன் மகனுடன்  உங்களுக்குள்  மன வேற்றுமையை,  பிளவை உண்டாக்க நினைப்பவன். “

அதன் பின் வந்த இந்து ராஜன் அவன் மகன்  புத்த ராஜன் அவன் மகன் சித்தராஜா அவன் மகன் மதனராஜன் என்பவன் மிகுந்த வீர்யம் உடையவனாக இருந்தான்.  அது வரை வம்சம்  சிறப்பாக எதுவும் இன்றி அமைதியாக இருந்தது. அடுத்து வந்த ஜிந்துராஜா ஆணவம் மிக்கவனாக இருந்தான்.

 வெளி நாடுகளுக்குச் செல்ல தந்தை அனுமதிக்கவில்லை. தன் புஜ பலத்தில் நம்பிக்கை வைத்தவன் இதனால் மன வருத்தம் அடைந்தவன் உள்ளூற தந்தையை வெறுத்தான்.  அந்த சமயம் தாமர ராஜ வம்சத்தில் உட் பூசல் கிளம்பியது.  அந்த தேசத்து அரசி தாமரர்களின் போர் குணம், அடாவடி அரசியல் இவற்றை வெறுத்தாள்.  ஜிந்துராஜாவின் வீரம், ஆற்றல் இவைகளை அறிந்தவுடன், தானே வந்து அவனை அழைத்துச் சென்று தாமர ராஜ்யத்தின் தலைமை மந்திரியாகவும் சேனாபதியாகவும் நியமித்தாள்.  ஒற்றைக் கண்ணன்- ஒரு கண் தெரியாதவன்-   சோபா என்பவன்  தேக்ராம என்ற பிரதேசத்தில் கலஹம் செய்து கொண்டிருந்தான்.  அவனை ஜிந்துராஜ அடக்கி கப்பம் கட்ட வைத்தான்.  அதே போல சில ராஜ புரியைச் சேர்ந்த சிற்றரசர்கள்  அவர்களையும் அடக்கி கப்பம் கட்ட வைத்தான்.

ஹலதரன் சொன்னது  தான் நடந்தது. ஜயானந்தன் கோணல் புத்திக்காரன். சூழ்ச்சி செய்து அரசன் கலசனை தன் வசம் ஆக்கிக் கோண்டான்.  அவன் அருகில் இருந்த பணியாளர்களும் பொறுக்கி எடுத்த துஷ்டர்கள்.  ஜயாநந்தனின் கையாட்கள்.  அரசனுக்கு சபலம் உண்டாக்கி, தீய வழிகளைக் காட்டினர். பிஜ்ஜா, பித்தராஜா, பாஜா என்பவர்கள் சாஹி வம்சத்தில் வந்தவர்கள்.   பொக்கிஷ அதிகாரியான நாகன் நம்பகமான அதிகாரியாக இருந்தவன்,  அவனை ஜயானந்தன்  குறுக்கு வழிகளில் செல்லவும், தவறான செயல்களை செய்யவும் போதித்தான்.  அமரகாந்த என்ற சிறந்த ஆசிரியர், காலகதி அடைந்து சிவலோகம் சென்ற பின் அவன் மகன்  ப்ரமதகண்டன் ஆசிரியராக வந்தான்.  கலசன் என்ற அந்த அரசன், இயல்பாகவே நற்குணம் இல்லாதவன்.  அவனை குருவாக வந்த அயோக்யன் பலவிதமான செய்யக் கூடாத செயல்களில் ஈடுபடுத்தினான். பெண்கள் சகவாசம் முதலியன.  நல்லது எது  தீயது எது என்று தானாக அறிந்து கொள்ள வேண்டிய அரச பதவியில் இருந்தவன் இந்த சொற்களில் மயங்கினான். தன் மகளையே இந்த தகாத செயலுக்கு அரசனிடன் அனுப்பிய துஷ்டன் என்ன தான் செய்ய மாட்டான்.

ராஜகுரு என்ற உயர்ந்த பதவி. அதை அலங்கரித்தவர்கள் தன்னலமற்ற தியாகிகளாக இருந்தவர்கள்.  தயக்கமின்றி அரசனின் தவற்றை சுட்டிக் காட்ட அவர்களுக்கு மன திடம் இருந்தது. அரசனாக இருந்தவனும் ராஜகுருவின் சொல்லை மதிப்பவனாக இருந்ததால் அரசாட்சி நல்ல முறையில் நடந்தது. பகவான் பைரவ அவதாரமாகவே ராஜ குருவை சொல்வர்.   அப்படிப்பட்ட பதவிக்கு குணமற்ற ஒருவன் வந்து அனைத்தையும் கெடுத்தான்.  ஆசிரியர்கள் மண்டியிட்டு நிற்கும்படி ஆயிற்று. கொடுங்கோலனாக பூணை விற்பவன் போல ? –  சுதந்திரமாக வளைய வந்த ஆலோசகர்கள், தலையில் கை வைத்து வருந்தினர்.

ஒரு சமயம் ஒரு வியாபாரி கறுப்பு பூணையை மடியில் கட்டிக் கொண்டு வந்தானாம். கரும் பூணை அபசகுனமாக கருதப் படும். அதனால் அந்த நிகழ்ச்சி மற்றவர்களுக்கு வினோதமாக தெரிய அதுவே தவறான நடத்தைக்கு மாற்றுச்  சொல் ஆயிற்று.  வழி காட்ட குரு என்ற பதவிக்கு வந்தவனே, தவறான வழியைக் காட்டியதால் சீக்கிரமே அந்த அரசாட்சி  முடிவடைந்தது.  மழை நாளில் கரு மேகம் மறைக்க  பகல் பொழுது வழக்கத்தை விட சீக்கிரம் முடிவது போல.  நெடு நேரம் விழித்திருப்பதும், கண்ட சமயத்தில் அளவுக்கு மீறி உண்பதும், அஜீர்ணம் முதலான கோளாறுகளால் உடல் பெருத்து, கழுத்து இருக்கும் இடம் தெரியாமல் போக,  பலவகையான ரோகங்களால் தாக்கப் பட்டான்.   அரண்மனை கேலி கூத்தாக ஆனதை பொறுக்க மாட்டாமல் ஹலதரனுடைய மகன் கனகன்  தலையிட்டு அந்த பெண்களின் கூட்டத்தை வெளியேற்றி,  வேணு வாத்யம் இசைப்பதாகச் சொல்லிக் கொண்டு வந்த விடலை ஒருவனை விரட்டி  கம்பத்தில் கட்டி வைத்து பணியாளர்களை கொண்டு அடித்து விட்டான்.  மூக்குடைந்தாலும் அவன் விலகாமல் அங்கேயே சுற்றிக் கொண்டிருந்தான்.   இப்படி ஒருவன் கையில் நாடு சிக்கி தவித்தது. கல்ஹன கவி ஏன் இதை விவரிக்கிறார் என்றால், ஒன்பது ரசம் என்று காவ்யாலங்கார நியதிகளில் பீபத்சம் -அருவருப்பு என்பதும் ஒன்று.  பெயருக்கு சிறிது கோடி காட்ட நினைத்திருக்கலாம்.  கலசன்

ஒரு நாள் ஜிந்து ராஜாவின் மருமகளைப் பற்றி அறிந்து, அந்த வீட்டிற்குச் சென்று விட்டான். காவல் காப்பவர் யாரோ திருடன் என்று நினைத்து நைய புடைத்து விட்டனர்.  நடு நிசியில் ஊர் நடுவில் விழுந்து கிடந்தான் என்று தூக்கி வந்தனர். வயதான பெற்றோர், ஏற்கனவே மனமுடைந்து போய் இருந்தனர்.  வேறு வழியில்லாமல் அவனை சிறையில் அடைத்து விட்டு  தன்வங்கனின் பேரன் பப்பிகா -Bappika – என்பவனின் மகன் ஹர்ஷன் என்பவனை அரசனாக்க தீர்மானித்தனர்.  விடிந்ததும்  இதைக் கேள்விப் பட்டு கலசனும், அவன் அடியாட்களும் வந்து தடுத்தனர்.  முதியவர்கள் எதுவும் செய்ய இயலாமல் விஜயேஸ்வரம் சென்று விட்டனர்.  கலசன் அரசனானான்.  அங்கும் வந்து கலசன் கலஹம் செய்வதும், பெரியவர்கள் சமாதானம் செய்வதுமாக சில காலம் சென்றது.  அவன் நடவடிக்கைகளும் துர்குணமும் பல வதந்திகளை பரப்பியது. தந்தையை எதிர்ப்பானா மகன் என்றனர். சிலர் ஒரு படி மேலே போய் ராணியின் மகன் பிறந்த உடன் இறந்து விட்டான், யாரோ ஒருவருடைய குழந்தையை மாற்றி வைத்து விட்டனர் என்றனர்.  தந்தை தானே கத்தியால் குத்திக் கொண்டு இறந்தார். ஐம்பத்து ஏழாம் ஆண்டு, கார்த்திகை பௌர்ணமியன்று, விஜயேஸ்வர பகவானின் சன்னிதியில் மகனின் குணக் கோளாறால், கண்டிக்க விடாமல் தடுத்த மனைவி, இவைகளால்  மனம் உடைந்து உயிரை விட்டான் . ஒரு மாதமே அதன் பின் வாழ்ந்த அரசியும் தன் வாழ்வை முடித்துக் கொண்டாள்.  அரச குடும்பத்தினருக்கான மரியாதைகள் எதுவும் இன்றி அவர்கள் வாழ்க்கை முடிந்தது. தற்கொலை என்பதை சொல்லாமல் வயதானவர் தொலை தூரம் பிரயாணம் செய்த காரணத்தால் ரத்த நாளம் வெடித்து இறந்தார் என்ற செய்தியை பரப்பினர்.  கலசன் வருவான் என்று எதிர் பார்த்த ராணியும் ஏமாந்தாள். உடன் இருந்தவர்கள் வர விடாமல் தடுத்து விட்டனர்.  தந்தையின் அந்திம கடமைகளைக் கூட செய்ய வரவில்லை.  அவர்கள் அனைவரையும் அழிவார்கள் என்று சாபம் இட்டாள். விதஸ்தா நீரை குடித்தவர்கள் மேலுகம் செல்வார்கள் என்ற நம்பிக்கையுடன் ராணி உயிரை விட்டாள். அது தான் பலித்ததோ  எனும்படி ஜயநந்தன், ஜிந்து ராஜா அவர்களைச் சேர்ந்த அனைவரும் சீக்கிரமே மறைந்தனர்.

ஒரு சிலர் அரச விசுவாசிகள் அவர்கள் மறைந்த பின் துறவிகளாக வெளியேறினர்.  மற்றும் சிலர் அரண்மனை பணியில் இருந்தவர்களும் அதிக நாட்கள் இருக்கவில்லை.  விஜயேஸ்வர சன்னிதியில் சிலர் தங்கினர். 

இது இயற்கையின் சுழற்சி.  மனித மனம் ஒரு விந்தையான குணம் கொண்டது.  கண்ணாடி குடுவை போன்றது.  அதில் நிரப்பியதை உள்ளபடி காட்டும். அதில் நற்குணங்கள் நிறைந்தால், சரியாக பராமரித்தால்,  தேவ லோக நீர், கங்கை போல பவித்திரமாக ஆகும்.  அதன் போக்கில் விட்டால் விளவு விபரீதம் ஆகும் என்பதற்கு இந்த வரலாறு உதாரணம். அறுபத்தோரு ஆண்டுகள் இந்த ஆட்சி நீடித்தது. தன்வங்க ராஜாவின் மகன் கள், நாலாம்  நாள் அவ்விருவரின் அஸ்தியை கங்கையில் கரைத்தனர்.   485

பாட்டனாரின் பொக்கிஷமும், பரிவாரங்களுடனும் அரசன் விஜயேஸ்வரம் வந்தான்.  தந்தையுடன் மனஸ்தாபம்.  முதல் முறை இருவருக்கும் இடையே இந்த மனவேற்றுமை தோன்றிய போது  பாட்டனார் ஸ்ரீ விஜயேஸ்வரத்திலும் தந்தை நகரத்தில் எல்லையில் என்றும் இருந்தனர்.  அதிகம் செலவழிக்கிறான் என்று பாட்டனார் மகனை கண்டித்தார்.  அவர் சில திடமான கொள்கைகள் உடையவர்.  மகன் தூதுவர்களை அனுப்பி தந்தையுடன் சமாதானம் செய்து கொண்டான்.  அதன் பின் அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொண்டனர்.  முடிந்தவரை நல் வார்த்தைச் சொல்லி பேரனை திருத்த முயன்றார்.  ஒரு வழியாக இருவரும் சம்மதித்து இணைந்தனர்.  பெரியவருக்கு வழி வழியாக வந்த பொக்கிஷத்தை காக்கவும், அரசாட்சியை நிலை நிறுத்தவும் வேண்டும், தன் மகன் என்ற பாசமும் அவன் நலமாக இருக்கவும் வேண்டியிருந்தது. .  அதனால்  நாள் தோறும்  ஊதியம் போல ஒரு தொகையை தருவதாக ஒப்புக் கொண்டார்.

ஒரு முறை விஜயேஸ்வரம் வந்தவர், எரிந்து போன வீடுகள் அவர் கண்களை உறுத்தின, , மக்களின் ஆதங்கம் கடும் வார்த்தைகளாக செவிகளை சுட்டன.  மகனை அழைத்துக் கொண்டு திரும்பியவர், பொக்கிஷ அறையை பூட்டி, மகன் பெயர் பொறித்த நாணயங்கள் மட்டுமே புழங்குவதாக ஏற்பாடு செய்து விட்டார்.  வயது முதிர்ந்த பின் அரசன் கலசனின் மனம் மாறியது.   தர்ம வழியில் சிந்தனை சென்றது. .  செல்வத்தின் அருமை தெரிந்தது.  வறுமையும் பாடம் கற்பிக்கக் கூடும் போலும்.  பல வழிகளிலும் அறிவு தெளியலாயிற்று. வீண் செலவு செய்வது நின்றது.

செல்யபுரம் என்ற ஊரில் ஒரு சாதாரண இல்லறத்தான், அவன் மகன் ஜய்யக்கா என்பவன் புத்திசாலியாக இருந்தான். தன் முயற்சியால் தாமர Damara- என்ற அளவு உயர்வை அடைந்து விட்டான்.  அவர்களின் நிலத்தில் விளைச்சலும் கணிசமாக இருக்க, வெளி இடங்களுக்குச் சென்று வியாபாரம் செய்தான்.  திருமகளின் அருள் பெற்றவன் போல தனம் சேரவும் லோபமும் அதிகரித்து சேமித்த தனத்தை பொற்காசுகளாக ஓரிடத்தில் புதைத்து வைத்தான்.    அடையாளத்துக்காக அதைச் சுற்றி தானியங்களை விதைத்தான்.  இரவு நேரத்தில் மேலும் மேலும் டினார்களாக அதில் சேர்த்தான்.  நாளடைவில் இதற்கு உதவி செய்த தொழிலாளர்கள் மேல் சந்தேகம் வர அவர்களைத் தீர்த்துக் கட்டினான்.  ஒரு சமயம் பாங்கில என்ற இடத்துக்கு குதிரை மீது ஏறிக் கொண்டு சென்றான்.  வழியில் ஒரு திராக்ஷை தோட்டம். அதை அடைந்த சமயம் குதிரை முரண்டு பிடித்தது.  உடன் வந்தவர்களிடையில் ஏதோ கலகம் வேறு சண்டையாக வலுத்தது.  காவல் இருந்த சேவகன் வந்து தடுக்க, அவன் கை கம்பினால் தாக்கப் பட்டு ஜய்யக்கா உயிரிழந்தான்.  அவன் மட்டுமே அறிந்த புதையல், வாழ்நாள் சேமிப்பு.  அது அரசன் கையில் கிடைத்து, அவன் அதன்பின் வாழ் நாள் முமுவதும் வறுமை என்பதையே அறியாதவனாக வாழ்ந்தான்.  மண் மூடிக் கிடந்த நாணயங்களை விதஸ்தா ஏரியில் கழுவி எடுத்து அந்த நீரே கலங்கி விட்டதாம். பல மாதங்கள் ஆயிற்றாம் கலங்கிய நீர் தெளிய. 500

தங்கள் உழைப்பால் தேடி சேர்த்த தனத்தை – பொருளை, தங்கள் வாழ் நாளில் தானமோ, போகமோ செய்து அனுபவிக்கத் தெரியாதவர்கள் (கருமி)   பூமியின் அடியில் வாழும் பாம்பும் ஒரே ஜாதி எனலாம்.  யாருக்காகவோ செல்வத்தை காப்பாற்றுகின்றனர்.  பாம்பு நிலத்தின் அடியில் இருந்து கொண்டு காற்றை புசித்து வாழும்.  இருட்டில் ஒளிந்து கொண்டு,  பெண் பாம்புடன் இருக்க   மறைவிடம் தேவைப் படும் பொழுதும்,  அதிக சீதளமான காலத்தில் ஆடை இன்றி தாங்க முடியாமல் போகும் பொழுதும்,  எலிவளை மற்றும் சில சிறு விலங்குகளின் வளையில் வாழ்கின்றன.  படமும், தலை ரத்தினமும் யாருக்காக ? அதற்கு பயன் படாது போவது போல, இந்த அறிவற்ற மனிதர்களிலும் சிலர் தானும் அனுபவிக்காமல், யாருடனும் பகிர்ந்தும் கொள்ளாமல் ஒளித்து வைத்து சம்பந்தமில்லாத மற்று ஒருவர் அனுபவிக்க இடம் கொடுக்கின்றனர். (பாடு பட்டு பணத்தை தேடி புதைத்து வைத்த மனிதர்காள், கேளுங்கள், கூடு விட்டிங்கு ஆவி தான் போயினபின், யாரே அனுபவிப்பார் அத்தனம்-ஔவையார்)    பொருள் இல்லாதவன், பரோபகாரம் செய்தாலே மதிப்பை பெறுகிறான். அவனுக்கு லோபம் என்ற குணம் இடையூறு செய்வதில்லை.

இந்த அரசனின் நல்வினை, மேலும் பல முனைகளில் இருந்தும் பொருள் வந்து சேர்ந்தது.   நதிகள் சமுத்திரத்தில் தாங்களாக வந்து சேருவது போல.  ஒரு சிலருடைய பாக்கியம் என்று தான் சொல்ல வேண்டும்.  நூற்றுக் கணக்கான நன்மைகள்  தானே வந்து சேருகின்றன.    பல திசைகளிலும் பகல் முழுவதும் திரிந்த பறவைகள் மரத்தில் வந்து இரவு அடைக்கலம் அடைவது போல, அருவிகள் வேகமாக பூமியில் விழுந்து வரப் போகும் வேணிற் கலத்துக்காக  பூமியில் நீரை சேர்த்து வைப்பது போல, ( நீர் நிலைகளாக பரவி கிடக்கின்றன).  நிலத்தடி நீர் ஒரு பக்கம், அருவி நீர்  விழுவது ஒரு பக்கம்  பூமியை நீரின்றி தவிக்க விடுவதில்லை.  அது போல, அந்த அரசனுக்கு அனைத்து வழிகளும் திறந்தே இருந்தன போலும்.   நாலா வழிகளிலும் செல்வம் சேர்ந்தது.

தன்னை திருத்திக் கொண்டவனாக கலசன் மக்கள் நலனை கவனிக்கலானான். ஒரு வியாபாரி போல கணக்கு வழக்குகளை திறமையுடன் குறித்து வைத்தான். தன் பார்வையிலேயே வைத்துக் கொண்டான்.  வரவும் செலவும் அவனறியாமல் நடக்காது என்ற நிலை வந்தது.  அரசனாக, தன் பிரஜைகளை தன் புதல்வர்களாக பார்க்கத் தெரிந்து கொண்டான், ஒரு தந்தையைப் போலவே.  பிரஜைகளின் நல் வாழ்த்துக்களும் பெற்றவனாக கலசன் குசலமாக- நலமாக இருந்தான்.  பிரஜைகளின் நல் வினை தானோ,  புத்தி கூர்மையுடன், தானே வணிக கூட்டங்களில் பங்கெடுத்து தீர்மானங்களைச் செய்தான்.  கணித அறிவும் கிடைக்கப் பெற்றான்.  தேவையான செலவுகளை தாராளமாக செய்தான். மக்கள் நலனுக்கு பெரும் பகுதி நிதியை  ஒதுக்கினான். வருங்கால செலவுகளுக்கு திட்டங்கள், ஒரு அரசு அலுவலக அதிகாரி போலவே கவனமாக விவரங்களுடன் எழுத கற்றான். தன் भूर्ज –பூர்ஜ மரத்தின் மட்டைகள் எழுத பயன்படுபவை, அதன் மேல் சாக்கு கட்டியால் எழுதுவது  வழக்கம் – அந்த மட்டையும், சாக்கு கட்டியும் அவன் அருகிலேயே இருந்தனவாம்.  நற்செயல்கள் எதுவானாலும் தாராளமாக செலவழித்தான்.  விலையுயர்ந்த பொருட்களை, பொன்னோ, மணியோ, ஆபரணங்களோ தானே பார்த்து வாங்குவான். இடைத் தரகர்கள் என்ற கூட்டமே நெருங்க விடவில்லை. 

நாளின் மூன்று பாகங்களாக தன் செயல்களை வரையறுத்துக் கொண்டான்.  முற்பகல் அரச பாலனம். பிற்பகல் யாருமறியாமல் எங்கோ சென்று விடுவான்.  தன் தேவை, பிறர் தேவை என்பதை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பவன், அந்த சமயம் ஒற்றர்களுடன் செலவிடுவானாம். ராஜ்யத்தில் அவன் அறியாதது உண்டானால், அது மக்களின் கனவில் வருவது தான். இல்லறத்தான் தன் குடும்பத்தைப்  பற்றி உள்ளும் புறமும் அறிந்திருப்பது போல தன் மக்களை அறிந்திருந்தான் என்றும், அதனால் எவருமே செல்வக் குறைவோ, உடல் நலக் குறைவோ வருந்த விடவில்லை என்றும் சொல்லப் படுகிறது.  512

மனிதர்களின் தராதரம் அறிந்து அருகில் வர அனுமதித்தான்.  பாதையில் குறுக்கிடும் முள் போன்றவர்களை அறவே தவிர்த்து விட்டான்.   எந்த தண்டனையும், திருடனுக்கு கூட மறைவாகவே கொடுத்தான். பகீரங்கமாக யாரும் தண்டிக்கப் படவில்லை என்பதும் ஒரு சிறப்பு.  முன் இருந்த மந்திரிகள் செய்த தவறான நடவடிக்கைகளை தொடராமல் விட்டு விட்டான்.    மந்திரிகளின் தேவைகளுக்கேற்ப அவர்கள் செய்வதையோ, செலவு செய்வதையோ மறுக்கவும் இல்லை.  அவர்கள் தங்கள் சொந்த பணத்தை செலவு செய்திருந்தாலும் திருப்பிக் கொடுத்தான்.  விவாகம், யாகங்கள், யாத்திரைகள், மகோத்சவங்கள் இவை நூற்றுக் கணக்காக நடை பெற்றன. அவைகளுக்கு எந்த இடையூறும், பற்றாக்குறையும் இருக்க விடவில்லை. இவைகள் அவசியமான செலவினங்கள் என ஏற்றுக் கொள்ளப் பட்டன.

மற்ற அரசர்கள் இவைகளைக் கேள்விப் பட்டு அதிசயித்தனர். அவர்களின் உணவிலிருந்து உடை, நடை முறைகளை மந்திரிகளே கவனித்து வந்தனர்.  அவர்கள் இன்றி கூட அரசனால் இருக்க முடியுமா?   அதுவரை இந்த நடைமுறைகளே அரண்மனைகளில் இருந்தன என்பதால் வந்த வழக்கங்கள்.

தன்வங்கனின் மூன்று புதல்வர்களும், தக்கனா முதலியவர்கள், அவர்கள் புதல்வர்கள், குங்கா, மல்லா முதலியவர்கள், மற்றும் முன் மறைந்தவர்களின் இளைய சகோதர்கள்,  அனைவரும் வந்தனர். அவர்களுக்கு தகுந்த வசதிகள் செய்து கொடுத்தான்.  தன் கலைகளால் அமுதத்தை பொழியும் நிலவு போல, தேவர்களோ, பித்ருக்களோ, பூ லோக வாசிகளோ, ஒரே விதமாக குளிர்விப்பது போல எனலாம்.

பழைய சகவாசத்தால், பெண்கள் சபலம் மட்டும் இன்னும் விலகவில்லை.  உல்லி என்ற டக்கன் வெளி தேசங்களிலிருந்தும், துருக்க பெண்களையும் கூட  வாங்கி வந்தான். முன்  தானே கண்டவுடன் அபகரித்தோ, மணந்தோ, கொண்டு வந்த அந்த:புர பெண்களையும்  சேர்த்து எழுபத்திரண்டு மனைவிகள்.   தன் உணவில் மீனைச் சேர்த்துக் கொண்டும், மீன் எண்ணெய்யை அதிகமாக பயன் படுத்தியும்,  உடல் நலத்தை பாதுகாத்துக் கொண்டதாக கவி சொல்கிறார்.

இது சற்று உறுத்தலாக இருக்கவே, பரிகாரமாக,  முன் தீக்கு இரையான விஜயேச என்ற சிவன் கோவிலை, கற் கோவிலாக இருந்ததை, வானளாவிய பொன்னால் ஆன கோபுரத்துடன், பொற் குடை, யானை பிம்பங்கள் இவைகளுடன்  கட்டி முடித்தான்.  த்ரிபுரேஸ்வர கோவிலில் பினாகி எனும் சிவபெருமானுக்கு,   நெல்லிக் கனிகள்  அளவில்  மணிகள் பொன்னால் செய்து மாலையாக அணிவித்தான்.  அதை அடுத்து கலசேஸ்வரா என்ற கற்சிலையால் சிவ பெருமானின் உருவச் சிலையைச் செய்து மிகப் பெரிய கோவிலை, பொன்னால் இழைத்து அலங்கரித்தான்.  கோபுரத்தின் உச்சியில்  தேர்ந்த சில்பிகளால், பொன்னால் ஆன கண்டா மணிகள், மற்றும் பல அலங்காரமான பட்டயங்கள் நிறுவச் செய்தான். அதற்கு மேலும் ஏதோ சேர்க்க எண்ணியவன் அருகில் ஒரு துருக்க தேசத்து சில்பி தான் செய்வதாக சொன்னான்.  ஏற்றுக் கொண்ட பின் தாமிர தகட்டில் பொன் தகடுகளை பொருத்தி ரகசியமாக ஏதோ செய்வதை நோனாகா என்ற மந்திரி, தானே சில்ப கலையை கற்றவர் ஆனதால்  கண்டு கொண்டார்.  அது வரை அரச மரியாதையுடன் விருந்துண்டவன்,  அகப்பட்டான்.  அவனிடம் கொடுத்த வேலை மறுக்கப் பட்டது. வந்த வழியே சென்றான். அரசன் எண்ணிய பெரிய குடை சிறிதளவு பொன்னே பயன்படுத்தி, செய்யப் பட்டது.

அனந்தேச என்ற கோவிலில் பாண லிங்கம் என்பது இருந்தது.  அது போல  பெருமை வாய்ந்த பல கோவில்களை புனருத்தாரணம் செய்தும், இந்திரனை தோற்கடிக்கும் செல்வந்தனாக ஆன அரசன் பல புதிய அலங்காரங்களுடன் அழகுற நிர்மானித்தான்.

அந்த சமயம் ராஜபுரியின் அரசன் இயற்கை எய்தினான். அவன் மகன் சங்க்ராமபாலன் பட்டத்துக்கு வந்தான்.  ஒரு தந்தை வழி உறவினன்  தன் சிசுவான  மதனபாலன் என்ற மகனை பட்டத்துக்கு கொண்டு வர ஸூழ்ச்சி செய்தான்.  இதையறித்த ஸங்க்ராமனின் சகோதரி,  மற்றும் தக்குர  ஜஸராஜா என்பவரும் கலசனிடம் வந்து உதவி கேட்டனர்.  அரசனும் முன்  ஜயநந்தனுடன் இருந்து விவரம் அறிந்த  வீரர்களான  விஜ்ஜன்  முதலியோரை அனுப்பினான். 536

அவர்களும் அங்கு சென்று கலகத்தை அடக்கி அமைதி வரச் செய்தனர். அங்கேயே தங்கி விடுவார்களோ என்று பயந்த சங்க்ராமனின் மந்திரிகள் இவர்களை திருப்பி அனுப்புவதில் மும்முரமாக இருந்தனர்.  எப்படி கிளப்புவது? அவரவர்க்கு தோன்றியதைச் செய்தனர்.  இதை ஊகித்தவன் போல விஜ்ஜா அசையவில்லை.  ராஜபுதன வீர்கள், அவர்களுடைய குணமே பயமின்றி இருத்தல். வீரமும் நேர்மையும் உடையவர்கள்.  விஜ்ஜனுக்கு கோபம் வரும்படி செய்தனர். ஆங்காங்கு கைக்கூலிகளுக்கு பணம் கொடுத்து, நயமாக வேண்டிக் கொள்ளச் செய்தனர்.  சில நாட்கள் பொறுத்து, பின் ஒரு நாள்,  அரச சபையில் தாங்களே விடை பெறுவது போல பேசி, தங்கள் படையில் ஒரு பகுதியை பாதுகாப்புக்காக வைத்து விட்டு, ஊர் திரும்பினர்.

அந்த ராஜபுரி நட்பு நாடாக ஆனதில்  அரசன் கலசன் பல நன்மைகளைக் கண்டான்.  அரச நீதியை உள்ளும் புறமுமாக, அதன் நெளிவு சுளிவுகளோடு  அறிந்து கொண்டு விட்டவன் ஆனதால் மகிழ்ந்தான். 

நாளடைவில் விஜ்ஜா முதலானவர்கள் அரசனின் நன்றிக் கடனாக அரசில் பெரும் பதவி அல்லது ஏதோ ஒரு நன்மையை எதிர்பார்க்கலானார்கள். ஜயானந்தன் உதவியை நாடினர்.

அந்த சமயம் ஜயானந்தன் வயது முதிர்வால் நோய் வாய்ப் பட்டிருந்தான்.   நலம் விசாரிக்க வந்த அரசனிடம் ரகசியமாக ஜயானந்தன்  ஒருவிஷயம் சொல்ல வேண்டும் என்றவன்,  மற்றவர்கள் வெளியேறும் வரை காத்திருந்தான்.  ராஜ புரீ கதையை அனைவரும் விஸ்தாரமாக பேசிக் கொண்டிருந்தனர்.  சில அந்தணர்களுடன் விஜ்ஜனும்  இருந்தான். அரசன் கிளம்பினான்.  விஜ்ஜன் தாம்பூலத்தை துப்ப நகர்ந்த   வினாடி நேரத்தில், வழியனுப்பும் சாக்கில்  ஜயானந்தன் உடன் வந்தான்.  அரசன் எதற்கு அலட்டிக் கொள்ள வேண்டும், நான் கிளம்புகிறேன், என்றவனை கையைப் பிடித்து சங்கேதம் செய்தான்.   நிமிர்ந்து பார்த்து கண்களாலேயே வினவிய அரசனிடம், ரகசியமாக, நிச்சயமாக தெரியவில்லை. ஆனாலும் விஜ்ஜன் இந்த அளவு செய்து காட்டியதன் பின்னணியில் ராஜன்! கவனமாக இருக்க வேண்டும். உனக்கே எதிராக ஏதாவது செய்யக் கூடும். அவன் தன் ஊதியத்துக்கும் மேல் பல பங்கு செல்வம் சேர்த்து விட்டான். கணக்கில் வராத தனம்– இதைச் சொல்லி முடிக்கும் முன் களைத்தவனாக நிறுத்தவும் விஜ்ஜன் அருகில் வரவும் சரியாக இருந்தது.

திரும்ப அரண்மனை வரும் வழியில் அரசனின் கவனம் மாறியிருந்ததைக் கண்டு கொண்ட விஜ்ஜன், தான் வெளிநாடு செல்ல அனுமதி தர வேண்டினான்.  அரசனும் சற்று மறுத்து, நிர்பந்தித்து என்று சந்தேகம் வராமல் பேச்சைத் தொடர்ந்து விட்டு, உள் மனதில் தோன்றிய நிம்மதியை மறைத்துக் கொண்டு அனுமதி தந்தான்.  

தன் வீடு சென்றவன் ஏற்பாடுகளைச் செய்து கொண்டு தேவையான பொருட்களையும் எடுத்துக் கொண்டு தன் சகோதரர்களிடம் விடை பெற்று அரசனிடம் சொல்லிக் கொள்ள வந்தான்.

 கவி சொல்கிறார்: அரசனுக்கும் அந்தரங்க விசுவாசியாக இருக்கும் அடுத்த நிலை அதிகாரிக்கும் இடையில் ஒரு பதட்டம் இருந்து கொண்டே இருக்கும்.  அரச மரியாதைகள், தங்கள் கௌரவம் இவை தடுக்கும். உண்மையான விசுவாசி என்று நேற்று வரை நடந்து கொண்டதற்கும் இன்று வழியனுப்புவதற்கும் இடையில் தோன்றிய பெரும் பிளவு, இருவரும் அதை மறைக்க முயன்று கொண்டிருந்தனர்.  மனப் பூர்வமாக அரசன் தடுத்து நிறுத்தவில்லை.  விஜ்ஜனும் தன் மனத் தாங்கலை காட்டிக் கொள்ளவில்லை. உண்மையாக உழைத்தவன், இவ்வளவு தானா என்ற எண்ணம் வெளிப்பட்டு விடாமல் கவனமாக பேசி விடை பெற்றான். கூடவே நடந்து வந்த அரசனிடம் அட்டகாசமாக பேசுவது போல பேசினாலும் அந்த மனக் குறை விம்மலாக  வெளிப்பட்டது.

இது நடப்பது தான். இறக்கும் தறுவாயில் ஜிந்து ராஜனை ஹலதரன் காட்டிக் கொடுத்தான். அதே போல ஜயானந்தனும் தன் மரணத் தறுவாயில் விஜ்ஜனை மாட்டி விட்டு விட்டான். 554

 ஊர் மக்கள் திரண்டு வந்து விஜ்ஜனை வழியனுப்பினர்.  பலர் அவனை தடுத்து நிறுத்தவும் முயன்றனர். அரச சபையிலிருந்து யாரும் வராதது ஏமாற்றமளித்தது.

அரச சபையில் மற்ற மந்திரிகள் விஜ்ஜன் விடை பெற்ற பின், அரசனிடம் விஜ்ஜன் நாட்டிற்காக நிறைய செய்து விட்டான். என்றும் அவன் புகழ் தங்கியிருக்கும் என்று பேசியவர்கள், சில நாட்களில் அவன் சொத்துக்களை அரசுடமையாக்க வேண்டும் எனலாயினர்.  அரசன் அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. அவன் சேமிப்பு. அதில் கை வைக்க வேண்டாம் என்று மறுத்து விட்டான்.

ஐந்து நாட்கள் தூக்கம் வராமல் அரசன் விஜ்ஜனின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்ற கவலையுடன் கழித்தான்.   ஸூரபுரம் சென்ற பின் உடன் சென்றவர்கள் மட்டுமாக திரும்பி வந்தபின் அரசன் தன் சந்தேகத்தை மற்ற மந்திரிகளுடன் பகிர்ந்து கொண்டான்.  ‘விஜ்ஜன் அதன் திறமையால் சங்க்ராமனுக்கு உதவியதும், கலகத்தை அடக்கியதும் அனைவரும் அறிவர்.   அவனுடைய மதிப்பு பொது மக்களிடையே உயர்ந்து உள்ளது.  ஆனாலும் நமக்கு அதுவே நமக்கு கவனமாக இருக்க ஒரு அறிவிப்பு ஆகும்.’  மந்திரிகள் வியந்தனர். அரசனுக்கு விவேகம் இருந்திருக்கிறது. அதனால் தான் நாம் சொல்வதை உடனே ஏற்றுக் கொள்ளவில்லை என்று  அறிந்தனர்.

போகும் இடங்களில் விஜ்ஜனும் அவன் பரிவாரமும் நல்ல வரவேற்பை பெற்றன.  பல இடங்களுக்குச் சென்றான்.  விஜ்ஜன் அரசன் கலசனுக்கு உண்மையாக இருப்பதாக உறுதி மொழி எடுத்துக் கொண்டவன்.  உண்மையான ராஜபுதன வீரன் ஆனதால்  அது அவன் இயல்பான  குணம். அதிலிருந்து எள்ளளவும் விலகாமல் தன் சேவையை செய்தவன்.  கலசனை தான் வணங்கும் தெய்வத்துக்கு சமமாக மரியாதையுடன் அணுகி இருந்தவன்.

ஜயானந்தன் ஸூர்யமதியின் சாபம் பெற்றவன். சில நாட்களில் கால கதியடைந்தான்.  அதே சமயம் ஜிந்துராஜாவும் அதே போல சாபம் பெற்றவனே, அவன் காலமும் இயற்கையின்  வசம் முடிந்தது.

விஜ்ஜன் பல இடங்களுக்கும் சென்று பலவிதமாக கொண்டாடப் பட்டு, அந்தந்த தேசத்து அரசர்களால் வரவேற்கப்பட்டவனும் கௌட தேசம் வந்த பின் கால கதியடைந்தான்.  திடுமென பரவிய ஒரு  தொற்று நோய் தாக்கி அவனும் அவன் உடன் பிறந்தவர்களும் அடுத்தடுத்து மறைந்தனர். கலசனின் இளமையில் தீய வழியில் அவனை இட்டுச் சென்ற கூட்டத்தில் இருந்த மற்றொருவன் காட்டு வழியில் வன விலங்குகளால் அடித்து கொல்லப் பட்டான்.  மதனன் என்ற ஒருவன் சில காலம் இருந்தான்.  இன்னமும் கெடுக்க நினைத்தவர்கள்.  ஏதோ மீதி இருப்பது போல.

ஜயானந்தனின் புதல்வர்களுக்கு காவலனாக இருந்த வாமனன் என்பவனை அரசன் கலசன் முதன் மந்திரியாக நியமித்தான்.  இந்த அரச சபையில் இருந்த மந்திரிகள், அவர்களின் செயல்கள் பல , முதியவர்கள் வாயிலாக சொல்லி சொல்லிக் கேட்டு மக்களிடையே பரவியது.

அவந்திவர்மன் காலத்தில் அவன் வசம் இருந்த சில கிராமங்கள், அங்கு நிர்மாணிக்கப் பட்ட கோவில்கள்  இவைகளை நிர்வகிக்க அரசன் கலசன் ஒரு தனி நிர்வாக துறையை ஏற்படுத்தினான்.  பேராசையே காரணம்.  அதற்கு கலச கஞ்சா என பெயரிட்டான். (கலசனின் பொக்கிஷம்)

நோனக என்ற மந்திரி பொறுப்பாக நிதி நிர்வாகத்தை செய்து வந்தவர்,  அவர் வரையில் நியாயமாக அரசின் நிதி நிலையை சீராக வைத்துக் கொண்டிருந்தவர்,   அவரையும் கலசன் சந்தேகக் கண் கொண்டு பார்க்கலானான்.  ‘பாதாக்ர’  என்ற உயர் பதவியை கொடுக்காமல் இருந்தான். அவருக்கு மக்களிடையே நன் மதிப்பு இருந்தது  ஒரு காரணம்.

ராஜகலசனின் மகன் கள், ப்ரசாத கலசன் முதலானவர்கள் அரசனுக்கு நெருக்கமாக ஆனார்கள். தன் வாழ்க்கையே படிப்பினையானதால், கலசன் இளைஞர்களை கண் காணித்தான்.  கட்டுக் கடங்காமல் செல்ல விழைந்தவர்களை ஆரம்பத்திலேயே கண்டித்தான், அல்லது விலக்கி விட்டான். 573

இதற்குள் வளர்ந்து விட்ட மதனபாலன், ராஜ புரியின் தலைமையை எதிர்த்தான். பப்படா -Bappatta -என்பவன் தலைமையில் ஒரு சிறு படையை கலசன் அனுப்பினான்.  மதனபாலனுக்கு அந்த உள் நாட்டிலேயே ஆதரவும் இல்லை. எனவே, பப்படா, அவனை சிறை பிடித்து காஸ்மீரம் அனுப்பி விட்டான்.

வராஹதேவனின் சகோதரன் கந்தர்பன் என்பவன் அரச சேனையில் வேரூன்றி விட்டான். எல்லை பகுதியை தாமரர்களிடம் இருந்து பாதுகாக்க  அவனை அனுப்பி வைத்தான்.  அந்த தாமரர்கள் நம்பகமானவர்கள் அல்ல. தங்களுக்கு சாதகமான பக்கம் சாய்பவர்கள்.  அவர்களை சமாளிக்க ஜிந்து ராஜன் கடை பிடித்த கொள்கைகளை உடன் இருந்து அறிந்தவன் ஆதலால் கந்தர்பன் மிகப் பொறுமையாக இருந்து அவர்களையும் பகைக்காமல் எல்லைப் பகுதியின் பாதுகாப்பையும் கவனித்துக் கொண்டான்.  ஜிந்து ராஜனின் ராஜ தந்திரங்கள் அறிந்தவன், தலைமை மந்திரியாக, சேனாபதியாக பதவி வகித்தவன்.  ராஜபுரியை வென்றவன், மேலும் பல பிரதேசங்களை எதிர்த்து போரிட்டவன், தன் தகுதிக்கு இந்த வேலை ஏற்புடையதல்ல என்று  மிகவும் சினந்தான்.  அடிக்கடி பதவி விலகுவதும். அரசன் தலையிட்டு மீண்டு வருவதுமாக இருந்தான்.

மதனனை படைத் தலைவனாக ஆக்கினான்.  அவனும் பல அரச தகுதி, ஆதரவுகளுடன்  தாமரர்களை எதிர்த்து போராடி அழித்தான்.  நகர பாலனாக இருந்த ஸ்யேனபாலன்- கழுகுகளை வளர்ப்பவன், விஜயசிம்ஹன் என்பவனை பல திருடர்களை அவன் பிடித்து தண்டித்தான் என்பதை பாராட்டி.  ஸ்ரீ நகர கமிஷணராக- ஆணையாளராக  நியமித்தான்.   

கந்தர்பன், உதயசிம்ஹ மற்றும் சிலருடன்  பரிவாரங்களோடு சென்று புவனராஜா என்ற அரசனை அவனுடைய நாட்டை விட்டே துரத்தி விட்டான்.  நீலபுரம் என்ற தேசத்து அரசன், கீர்த்திராஜா என்பவன் எதிர்த்தான்.  அவன் மகள் புவனமதி என்பவளை விவாக சம்பந்தம் என்ற முறையில் ஏற்றுக் கொண்டு சமாதானம் செய்து கொண்டான், 582

குங்கா என்பவனின் மகன் மல்லா என்பவனை எல்லக் காவலுக்கு நியமித்து விஜய சிம்ஹனை விடுவித்து விட்டான். மல்லன் ஆடம்பரமாக மணிகள் பதித்த பதவி அடையாளங்களுடன் பெருமையாக வளைய வந்தான்.

உத்தரனுடன்  படை பலம் இன்றி போருக்குச் சென்ற  மகா பாரத அர்ஜுனன்  செயலை நினைவு படுத்திக் கொண்டு தானும் அதே போல, தற் பெருமை, கர்வம் இவைகளுடன், ஐம்பது குதிரை வீர்களுடன் கிருஷ்ணா   நதியை கடந்து சென்று உரசா என்ற பிரதேசத்து Abayaa அபயா என்றஅரசனை வென்றான்.  அந்த அரசன் மேலும் படைகள் வருவதாக நினைத்து பயந்து சரணடைந்து விட்டான்.

இப்படி சென்ற இடமெல்லாம் நயமான நடவடிக்கைகளால் ராஜ்யத்தை விஸ்தரித்து வந்தான்.  அதன் பின், ஒரே சமயத்தில் எட்டு அரசர்கள்  அரசனைக் காண வந்தனர்.   கீர்த்தி, நீலாபுர தலைவன், ஆசாடா சம்பா என்ற பிர தேச ராஜா,  தக்காவின் மகன் கலசன், வல்லபுரம் என்பதை ஆண்டவன்,  சங்க்ராமபாலன் என்ற ராஜபுரி அரசன்,   உத்கர்ஷா லோஹர பிரதேச அரசன்,  ஔர்வசோ என்ற முங்கனின் மகன்சங்கடா  கம்பீராசிஹா காந்தேசம் என்ற தேசத்து அரசன் மற்றும் காஷ்டவாட தேசத்து அரசன், உத்தமராஜா என்பவர்கள்.

விதஸ்தா ஏரி பனியில் உறைந்து இருந்த போதிலும் இவர்கள் அனைவரும் பலவிதமான உபசாரங்களுடன் மகிழ்ச்சியாக சிறிது காலம் வசித்தனர்.  அவர்கள் நினைத்தே பார்த்திராத அளவு வசதிகளையும், நல்ல உணவு, இருப்பிடங்களையும் வாமனன் – முக்ய மந்திரி ஏற்பாடு செய்திருந்தான். வெள்ளம் பெருகி வரும் சமயம் எது எந்த நதி ஜலம் என்பதைக் கண்டு பிடிக்க முடியாமல் போவது போல அரசர்கள் அவர்கள் பரிவாரங்கள், யார் யார் என்பது தெரியாமல் போன போது கூட யாரும் மனத் தாங்கல் அடையாத படி ஏற்பாடுகள் சிறப்பாக இருந்தன என்று பாராட்டி விட்டுச் சென்றனர்.

அவர்கள் சென்ற பின் அரச அதிகாரிகளில் சில மாற்றங்கள் வந்தன.  மல்லன் பதவி விலகினான்.  கந்தர்பன் எல்லைக் காவல் பதவியை ஏற்றான்.   முக்யமந்திரி எந்த பதவியையும் விரும்பாமல் தானே

தன் சொந்த செலவிலும், படை பலத்துடனும் ஸ்வாபிகா என்ற கோட்டையை கைப்பற்றி விட்டான். அரசன் வேண்டிக் கோண்ட பின்னும் கலசனின் கீழ் எதையும் பெற விருப்பம் இன்றி, ஸ்ரீநகரத்தில்  தங்கி விட்டான். பிரசஸ்த கலசன் அந்த பதவிக்கு வந்தான்.  பொறுமையோ, வாக்கு வன்மையோ இல்லாதவன், எளிதில் கோபமடைபவன், அரசனின் மகன் என்ற தகுதி மட்டுமே என்று வந்தவன்,  தனது என்று தனி படையைச் சேர்த்துக் கொண்டு, தன் தம்பி ரத்னகலசனை எல்லை காவலில் அமர்த்திக் கொண்டான். புலியின் இடத்தை பூணை பிடிக்க முடியுமா? என்ன தான் வேஷம் போட்டாலும், பூணை பூணை தான்.   அரசன் கலசன் இதைக் கண்டு கந்தர்பனையே,   தானே சென்று சமாதானப்படுத்தி அந்த இடத்துக்கு வரவழைத்துக் கொண்டான்.

ஒரு சமயம் ஒரு திருடனை அதிகமாக அடித்ததில் அவன் மரணம் அடைந்து விட்டான். அதனால் பெரிதும்  மனம் வருந்தியவனாக வேலையை துறந்து கங்கை கரைக்கு சென்று விட்டான்.

இவ்வாறாக பல ஏற்றங்களும் தாழ்வுகளும்,  சிறந்த மந்திரிகள் உண்மையாக உழைத்து வளர்ந்த அரசு அதை நிர்வகிக்க வேண்டியிருந்தது.  உடன் நடனம் ஆடும் நாட்டிய கலைஞர்களை ஒன்று கூட்டி சமாளித்து தன் நிகழ்ச்சியை சரிவர அமைக்கும் நடன ஆசிரியர் போல என்று உவமை.

 ஜயவனம் என்ற இடத்தின் ஒரு புதிய, பெரிய நகரத்தை உருவாக்குவதில் முனைந்தான். நிரந்தரமாக அரண்மனை வளாகம்.  அதன் பகுதியாக தன் பெயரைப் பொறித்த மிகப் பெரிய நகரம். மடாலயங்கள், அக்ரஹாரங்கள்,  பெரிய மாளிகைகள், வசதிகள் அனைத்தும் கொண்ட பெரிய வீடுகள். நீர்  நிலையம் அருகில் விசாலமான உபவனங்கள், என்று மிக கவனமாக திட்டமிட்டு வேலைகள் ஆரம்பித்தன.

அந்த சமயம் தான் பிரசித்தமான அரசன்  ஹர்ஷன்  என்ற அரச குமாரன் ஆளுமையும், ஆற்றலும் உடையவனாக மற்ற எந்த அரசர்களிடமும் இல்லாத பல நற்குணங்களோடு பல மொழிகளை அறிந்தவனாக, அனைத்திலும் கவி பாடக் கூடிய திறமையாளனாக, கல்விக் கடல் எனும்படி பல விஷயங்களையும் கற்றவனாக, நாடு கடந்தும் புகழ் பெற்றவனாக  இருந்தான். 610

(தன்வங்கனின் பேரன் பப்பிகா -Bappika – என்பவனின் மகன் ஹர்ஷன் – தனக்குப் பின்  அரசன் ஆக முன் அரசன் அனந்த தேவன் பரிந்துரைத்தும், கலசன் அரசனானான், வரலாற்று  பிரசித்தி பெற்ற ஹர்ஷ சக்க்ரவர்த்தியா என்பது உறுதியாக தெரியவில்லை)

தந்தை ஒரு கருமியாக இருந்தான்.  அரசவையினரில் சிலர், அரசனின்  இந்த குணத்தால் பாதிக்கப் பட்டனர். பல இடங்களில் இருந்தும் வந்தவர்கள்,  இந்த சிறுவன் பொறுமை, , வீரம், ஆற்றல் போன்ற நற்குணங்கள் நிரம்பியவனாக இருந்ததை கவனித்தனர்.  மகனுக்கே ஊதியம் போல ஒரு தொகை கொடுத்த அரசனிடம் வெறுப்பும் வந்தது.  ஊதாரிகள்,  தேவையின்றி செலவழித்து விட்டு ஒரு நிலையில் செலவை சமாளிக்க முடியாமல் ஒரு வேளை உணவையே தியாகம் செய்ய வேண்டி வந்தது.

அரசனும் இசையை விரும்புபவன் என்பதால்  அரச சபையில் அவன் முன் பாடுவதை ஹர்ஷன் வழக்கமாக கொண்டிருந்தான்.  அதற்கான சன்மானமும் பெறுவான்.  தன் தினசரி தேவைகளுக்கு அது உதவியாக இருந்ததால்,  அரச சபையில்,  அரசன் முன்னிலையில் உத்சாகமாக பாடுவான்.  ஒரு நாள்  அரசன் முன்  பாடிக் கொண்டிருந்த பொழுது,  சபையினர் ரசித்து உத்சாகமாக ஹ ஹா என்ற சமயம், எதேச்சையாக செய்வது போல அரசன் எழுந்து உள்ளறை சென்று விட்டான்.  அவன் சென்றது இயற்கையின் அவசரமாக கூட இருந்திருக்கலாம்.   இது ஒரு அவமானமாக ஹர்ஷனுக்குப் பட்டது. யாரானாலும் நல்ல பாடகன் அல்லது கவிஞன்,  ஏதோ ஒரு கலையில் விற்பன்னன் இவர்கள் இறைவன் அருள் பெற்றவர்களே.  செல்வமோ, ஊதியமோ அவர்களுக்கு இதற்குப் பின் தான். ரசிக மக்களின் தலையாட்டல், ரசனையை வெளிப்படுத்துவது  கோடிக் கணக்காக கொடுப்பதற்கு சமம்.  மகன் தானே, அரசன் ஏன் அலட்சியப்படுத்தினான்?

கோபமும் தாபமுமாக தலை குனிந்து அமர்ந்திருந்தான். தன் அதிகாரி பொறுமையின்றி, தன் ஆற்றலை மதிக்காமல் இருப்பதும்,  நண்பனாக இருப்பவன் உடன் இருந்து ஏமாற்றுபவனாக இருப்பதும், மனைவி கடும் சொல் சொல்பவளாக இருந்தாலும்,  மகன் கர்வியாகவோ, உன்மத்தனாகவோ,  பரிஜனங்கங்கள் – உதவிக்காக வைத்துக் கொண்ட பணியாளர்கள் அலட்சியமாக இருந்தாலோ, இவைகளை பொறுக்க முடியும், ஆனால்,  தன் திறமையை கேட்டு அறிந்து பாராட்ட வேண்டியவர் அவமதித்தால்,  கண்களில் அடி பட்டது போன்ற துயரம், இதயமே உடைந்து விடும் போன்ற அவமானம், தந்தையே ஆனாலும் தாங்க முடியாத துயரம். 

ஒரு பணியாளன் அருகில் வந்தான். விச்சாவட்டன் என் பெயருடையவன்.  விடன்.= குணமற்றவன்.  ‘ஏன் வருந்துகிறாய், ராஜ்யத்தை கைப் பற்றிக் கொள், அரசனை வதைத்தால் ஆயிற்று ‘  பல்லைக் காட்டிக் கொண்டு இளித்தபடி ஏதோ நன்மையைச் சொல்பவன் போல அறிவுரை சொல்லலானான்.  ஹர்ஷனின் துக்கம் கோபமாக மாறியது. அவனை திட்டி இனி இப்படி பேசினாயோ, பார் என்று விரட்டி விட்டான்.  அவன் அருகில் இருந்த தம்மடன் என்பவனிடம் சொன்னான்.

இப்படி ஒரு சிலர் அரச சபைகளில் இருப்பர். தாங்கள் போகங்களை அனுபவிக்க யார் என்ன செய்கிறார்கள் என்று நோட்டம் விடுவதே தொழில்.  அனுதாபமாக பேசுவது போல அருகில் வந்து, இருபக்கமும் சண்டையை தூண்டி விடுவர். வயதான அரசன், இனி அதிகம் எதிர் பார்க்க முடியாது, வரும் கால அரசனுக்கு இச்சகமாக பேசி உள் நுழைவது இவர்கள் வழக்கம்.  விலை மாது போன்ற குணம்.  திரும்பி வந்த அரசன் அவனை பாராட்டி சன்மானமும் அளித்தார்.  பிரியமாக பேசி அருகில் அமர்த்திக் கொண்டு உணவருந்தினார். அடுத்த நாளும் அதே போல அவருடனேயே இருந்து அவருடன்  மதிய உணவையும் சாப்பிட்ட பிறகு தன் வீடு வந்தான்.  போகும் வழியில் விச்சாவடன் அருகில் வந்து அதே விஷயத்தை ரகஸ்யமாக சொன்னான்.  தடுத்தும் கேளாமல்  பின் தொடர்ந்தவனை கோபித்து விரட்டினான். அதன் பின்னும் அவன் தொடர்ந்து வந்து அதையே சொல்லிக் கொண்டிருந்தான். பொறுக்கமாட்டாமல்  ஓங்கி கையால் அடித்து விட்டான்.  அவன் மூக்கில் உதிரம் வழியலாயிற்று.  அதைப் பார்த்து மனம் இளகிய ராஜ குமாரன்,  தன் அணுக்க பணியாளர்களை அழைத்து அவனுக்கு சிகித்சை செய்யச் செய்தான்.   வீடு வரை கொண்டு விட ஏற்பாடு செய்தான்.

 காமினீ எனும் பெண்கள் மென் சிரிப்பாலேயே தங்கள் பக்கம் வரவழைத்துக் கொள்வது ஒரு திறமை என்றால் இது போல கீழ் நிலையில் உள்ள பணியாட்கள் தங்களாகவே முன் வந்து அட்டை பூச்சி போல ஒட்டிக் கொள்தும் அவர்கள் திறமையே.   அவர்கள் வேண்டியதை அடைந்த பிறகு அந்த பூச்சி போலவே விலகி விடுவர். இவர்களுக்கு இடம் கொடுத்தால், அட்டை விலகியவுடன்  உதிரம் பெருக நிற்பவன் கதி தான் ஆகும்.

 யதேச்சையாக சந்திப்பது போல அடிக்கடி எதிர் படுவான்.   சமயம் கிடைத்த பொழுது தம்மடனும் சம்மதிக்கிறான் அவனும் உதவ தயாராக இருக்கிறான் என்று பேச்சு வாகில் சொல்வது போல சொல்வான்.  பாபிகள், அவன் மனதைக் கலைத்து அரசனை கொல்வது தான் வழி என்று சொல்லிக் கொண்டிருந்தனர்.

சினேகம் என்பது துளி கூட இல்லை, ஆனால் சதா கண்ணில் பட்டுக் கொண்டிருந்தனர். ஹர்ஷனுக்கு விரட்டி அடித்தும் வருவதை தடுக்க சொல்லி சொல்லி அலுத்து விட்டதோ,  மௌனம் சாதித்தான்.  அந்த விச்சாவடன் அரசனிடம் சென்று இதையே தங்களுக்குள் நடந்த பேச்சாக அரசனிடம் தெரிவித்து விட்டான்.  முதியவர் திடுக்கிட்டார்.  அன்றைய தினம் பார்த்து, பயந்தவனாக, மத்யான்ன உணவருந்த அரசவைக்கு வரவில்லை.   தந்தையின் தூதர்கள் வந்து அழைத்த பொழுது கூட வெளி வரவில்லை.

அவனை எதிர் பார்த்து இருந்தவர், வரவில்லையென்றதும் சந்தேகம் விலகியது, ஆனாலும் மகன் வரவில்லையே என்ற துக்கம் தானும் உணவருந்த மனம் வராமல் இருந்தார்.  பரி ஜனங்களும் என்ன காரணம் என்று கலங்கினர்.   தக்கனன் தன் சகோதரனுடன் காண வந்தான், (இருவரும் தன்வங்கனின் மகன் கள்) இருவரும்  மறு நாள் காலை வந்த பொழுது  அவர் மடியில், தலை வைத்து  என் மகனே என்னை கொல்லப் பார்க்கிறான் என்று சொல்லி விசித்து அழுதான். 632

தம்மடன் பற்றி சொல்லி விட்டு, எதுவானாலும் செய்,  என்ன செய்தாலும் சரி எனவும் எங்களிடம் விட்டு விடு, நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் எங்கள் கடமை அது.   உன் ராஜ்யத்தில் ராஜன்! உன் அனுமதி இருக்கும் பொழுது நாங்கள் இருவரும் வரும் ஆபத்தை கடக்க என்றே விரதம் பூண்டவர்கள். என்றனர். வாசலில் காவல் இருப்போம்.  எல்லா திசைகளிலும் காவல் ஆட்களை நியமித்து விடுகிறோம் என்றனர்.  அதே போல தம்மடனையும் அவன் கூட்டாளியும் பிடித்து  விட்டனர்.  ரகசியமாக நாடு கடத்த  வெளியில் தெரியாமல் இருவரையும் நடுவில் நிறுத்திக் கொண்டு  அரசனிடம் கொண்டு வந்தனர்.  தங்கள் சூழ்ச்சி அரசனுக்கு தெரிந்து விட்டது இனி சிரச்சேதம் தான் என்று பயந்த இருவரும் அரசன் காலில் விழுந்தனர்.  அரச துரோகம் மன்னிக்க முடியாதது.  உயிர் பிழைத்தால் போதும் என தாங்களே. நாட்டை விட்டு வெளியேறுவதாக வாக்களித்தனர்.  தன்வங்கனின்  புதல்வர்கள்,  ராஜ்யத்தின் எல்லை தாண்டி இருந்த    ஒரு மடாலயத்தில் சேர்த்து விட்டனர்.  அது ஒரு வித தண்டனை. மடாலயத்தின்  நிர்வாகிகள் அறியாமல் வெளியேற முடியாது என்பதால் சிறை போலத்தான்.    அரச துரோகத்துக்கு தண்டனை கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும்.  நாட்டை விட்டு விலக செய்வது ஒரு வழி. வழியில் யாராவது அவர்களைக் கொன்று விட்டால் அரசன் பேரில் சந்தேகம் வரும் என்பதால் படை பலத்தோடு அனுப்பி வைத்தனர்.

தன்வங்க புதல்வர்கள் விடை பெற்றுச் சென்றனர். அரண்மனை வெறிச்சோடியதாக அரசன் உணர்ந்தான். மகனை அழைத்து வர ஆணையிட்டான்.  ஹர்ஷனைப் பார்த்து அரசன் சொன்னான்: ‘மகனே, இந்த உலகம் முழுவதிலும் எல்லா இடத்திலும், தந்தை- மகன்  என்ற உறவு தான் நிலைத்து நின்று வம்சமாக ஆகிறாது.  அதைத் தான் பொதுவாக மக்களும் அங்கீகரிக்கிறார்கள்.  அத்ரி மகரிஷியின் மகன் சீதாம்சு என்றே அழைக்கப் படும் சந்திரன்.  மூவுலகிலும் சந்திரனின் ஒளி பரவி அதனால் பெரும் புகழ் அத்ரி மகரிஷிக்கு பெருமை சேர்க்கிறது. மகனே, அதே போலத் தான் உன்னால் நான் பெருமை பெறுகிறேன். என்னை நன்மகனைப் பெற்றவன் என்று போற்றுகின்றனர்.   அதனால் நீ உன் வரை நல் குணம் வாய்த்தவர்களிலும் முதலாக எண்ணப் படுபவனாக,  களங்கமில்லாத புகழ் பெற்று அசட்டு மக்கள் போகும் அத்வான-ம் காட்டு வழியைத் தவிர்த்து உன் வாழ்க்கை பாதையை அமைத்துக் கொள். இப்பொழுது சொல், எந்த வழியை தேர்ந்தெடுக்கிறாய்?  என் கடமை என் மூத்தோர்கள் பரம்பரையாக சேர்த்த செல்வத்தை ராஜ்யத்தை இம்மியளவு கூட குறையாமல் உன் கையில் ஒப்படைக்க வேண்டும்.  ஏன் எதற்கு என்று கூட விசாரித்து தெரிந்து கொள்ளாமல் தவறாக என்னை குற்றம் சொல்கிறாய்.  அரசன் போதுமான செல்வம் இல்லாமல் இருக்க கூடாது. எந்த செயலும் செல்வம் இல்லை என்பதால் நிறக் கூடாது. அப்படி கையை விரித்தால், பொது மக்கள் மட்டுமல்ல தனக்குத் தானே அவமானமாக உணர்வான்.   இவ்வாறு நினைத்து தான் பொக்கிஷத்தை பாதுகாத்து, செலவை குறைத்து என் ஆட்சியை முடித்து உன் கையில் கொடுக்கும் வரை , இந்த செல்வத்துக்கு நான் உரிமை கொண்டாடவில்லை, பாதுகாக்கும் பொறுப்பைத் தான் செய்து வருகிறேன்.     உனக்கு முடி ஸூட்டி விட்டு நான் வாரணாசி போகிறேன்.  அல்லது  நந்தி க்ஷேத்திரம் போகிறேன்.  ராஜ்யத்துக்கும், ராஜ்யத்தின் அனைத்து செல்வங்களுக்கும் நீ உரியவனாய் ஆவாய். அதிக நாள் காத்திருக்க வேண்டாம்.  என்ன காரணம், இப்படி ஒரு அனார்ய- பெருந்தன்மையில்லாத, அறிவில்லாத  ஒரு செயலை செய்ய முனைந்தாய்?  அந்த துஷ்டர்கள் என்னிடம் சொன்னது தவறாக இருக்கவேண்டுமே என என் மனம் வேண்டிக் கொள்கிறது.  என் மகன்  அப்படி நினைக்க மாட்டான் என்று உள் மனம் சொல்கிறது.  அதனால் உண்மையைச் சொல். இந்த களங்கம் நீங்கட்டும்.  உன்னை தெளிவு படுத்திக் கொள்.  உன் வரையில் தூய்மையானவன், எந்த கெட்ட எண்ணமும் இல்லை என்பதை நிரூபித்துக் காட்டு.  தந்தையிடம்  அன்புடையவன் தான் என்று அறிவேன். எதுவானாலும் தயக்கமின்றிச் சொல். இதற்குள் ஏதோ இருவருக்கிடையில் தகராறு என்று நாட்டிற்குள் வதந்தி பரவினாலும், நாம் இணைந்து பதில் சொல்லியாக வேண்டும். ‘

ஹர்ஷன் திக்கு முக்காடினான். என்ன சொல்வது? தந்தை அழகாக அன்புடன் உணர்ச்சி பூர்வமாக  நிலைமையை கணித்தவராக பேசியது மனதை தொட்டது. வணங்கி விட்டு அதை அவரிடமே பாராட்டி சொன்னான். சொல்கிறேன், உள்ளபடி நடந்ததை நம் இருவருக்கும் பொதுவான நலம் விரும்பிகள் முன் சத்யமாக சொல்கிறேன். இந்த  சம்பவம் முழுவதும் இடையில் புகுந்து கெடுக்க எண்ணிய ஒரு சிலரின் தன்னலமே குறியான செயலே –   என்றவன் பேச முடியாமல் துக்கம் தொண்டையை அடைக்க வெளியேறினான்.

அரசன் உடன் செல்ல அனுப்பிய தூதனையும் விலக்கி விட்டு தன் இருப்பிடம் சென்றான்.  அவனை அந்த துஷ்டர்கள் எதுவும் செய்யாமல் இருக்க வேண்டுமே, என்ற எண்ணம் வரவும் ஹா மகனே என்று புலம்பிய அரசன் தன் தலையில் அடித்துக் கொண்டு அவனுக்கு ஏதாவது தீங்கு நிகழ்ந்தால் நான் ஏன் இருப்பேன், என்னை கொன்று விடுங்கள் என்று கதறினான்.  அவனை பாதுகாக்க ஆயுதம் தாங்கிய வீர்களை அனுப்பினான்.

அரசன் சொன்னதைக் கேட்டுக் கொண்டிருந்த  ஒருவன், தண்டன் என பெயர் உடையவன்,  தான் வேறு விதமான செயல் திட்டங்களோடு தன் ஆட்களோடு வெளியேறினான்.  ஹர்ஷணின் வீட்டு வாசலில் அரசனின் சேவகர்கள் காவல் இருந்தனர்.  அவர்களைத் தள்ளிக் கொண்டு உள்ளே சென்றனர்.

நுழைந்தவர்கள், ஹர்ஷனை உள்ளே வைத்து வாசல்  கதவுகளை அடைத்து, அரச குமாரனை பார்த்து கடுமையாக பேசினர்.  ‘ ஏன் இப்படி ராஜ துரோகமான செயலைச் செய்கிறாய், உனக்காக உன் தந்தை என்ன வேண்டுமானாலும் செய்வார். உன்னை எந்த துன்பமும் அண்டாமல் காவல் இருக்கும் தந்தையை பகைத்துக் கொள்ள என்ன காரணம் படித்தவன் தானே, சாஸ்திரங்கள், சஸ்திரங்கள்  அனைத்தையும் கற்றவன் தானே

‘ என்று நிஷ்டூரமாக பேசினர்.  கண்டபடி பேசினர்.   உன் தாய் என்ன அரச குல பெண்தானா? ஏதோ காரணம் மரணம் நிச்சயம். அவளும் மரிப்பாள்.  எதற்காக தண்டம் வைத்திருக்கிறாய்? எடு உன் ஆயுதத்தை,  உன் தாயை நல்ல க்ஷத்திரிய குலப் பெண்தான் என்று நிரூபி.  வா, நான் முன் செல்கிறேன், விபத்தோ, விஜயமோ உன் திறமை, வீரம் இருந்தால் இதில் காட்டு.  எழுந்திரு. முதலில் நகம், கேசம் இவைகளை சரி செய்து கொள்.  வீரனுக்குரிய உடைகள், கவசம் இவைகளை அணிந்து கொள். உன் மனைவியை மணந்த அன்று அணிந்த மாலையை அணிந்து கொள். ‘ இவ்வாறு சொல்லி அரசனுக்குரிய ஆயுத பலத்தைக் காட்டத் தூண்டினான்.

உள்ளறைக்கு அழைத்துச் சென்ற பின், வெளீயில் நின்ற ராஜசேவகர்களைப் பார்த்து, ‘உங்கள் அரசகுமாரன் எங்கள் வசம் உள்ளான். என்ன செய்வீர்களோ, செய்யுங்கள்’ என்றான்.

துர் தேவதைகள் தாக்கியோ, கிரகங்களின் கோளாறினால் உடல் நலம் கெட்டாலோ, அதற்கான மருந்துகள் சிகித்சைகள் செய்ய வேண்டும். எதிரி வந்து முற்றுகையிட்டால், தன் வீர்களுடன் எதிர்க்க வேண்டும்.  பூமியை ஆளும் அரசன் நாலா திசைகளிலும் பல விதமான அச்டுறுத்தல்களை சமாளிக்க அறிந்து கொள்ள வேண்டும்.   சமயோசிதமான முறைகளால், புத்தியை பயன்படுத்தி எதிரியை அழிக்க

 வேண்டும்.  

அரச சேவகர்கள் போர் புரியும் அட்டகாச ஒலிகளோடு, மாளிகையின் தடுப்புச் சுவர்களின் மேல் ஏறித் தாண்டி குதித்து உள்ள வந்தனர்.  வெளியில் வந்தால் தாக்க வசதியாக அறைகளைச் சுற்றி நின்றனர்.  இரண்டு, மூன்று சேவகர்கள் எந்த வழியிலும் வெளியேறலாம் என்பதால் நடுவில் நின்றனர்.   தண்டனின் ஆட்கள் ஒவ்வொருவராக வெளியே வந்தனர்.  வாய் வார்த்தையாக ராஜ சேவகர்களை அடிக்க வேண்டாம் என்று எச்சரித்து விட்டு தங்களுக்குள்ளேயே போர் முறைகளை பயிலுபவர்கள் போல யுத்தம் தொடர்ந்தது.  ஒரு சிலர் ஓடி ஸூர்யமதி கௌரீச ஆலயங்களில் சரண் அடைந்தனர்.  சிலர் சதாசிவ ஆலயம் அருகில் கொலை வெறியோடு ஓடினர்.  அரசன் தன் சேவகர்களிடம் கருணை உடையவன், அவன் நம்பிக்கைக்கு பாத்திரமான எவரையும் கொல்லக் கூடாது என்று திட்டமிட்டிருந்தாலும் சகஜன் என்ற ஒருவன் மடிந்தான்.  ராமதேவன் என்ற பண்டிதன், சாஸ்திரம் அறிந்தவன், வீரன், அவனும், கேஸி என்ற மற்றொருவன் இருவரும் கர்ணாட  தேசத்தினர் போரில் அடி பட்டு வீழ்ந்தனர்.  தண்டகனின் ஆட்களில் சிலர் ஆயுதங்களை போட்டு விட்டு ஓடினர்.  சிலர் தங்களை மாய்த்துக் கொண்டனர்.  சிலர் கைதாகினர்.  கோழைகள்.  

அறுபத்து நான்காம் ஆண்டு வளர் பிறை ஆறாம் நாள்,  சில கலக விரும்பிகளால், தந்தை மகனிடையே  மன வேற்றுமையை உண்டாக்கினர்.   அனாவசியமாக அரச குமாரன் சிறைப் பட்டான்.  அதையறிந்த ராணி புவனமதி தானே தன் கழுத்தில் கத்தியால் குத்திக் கொண்டு இறந்தாள். 677

தேவையற்ற அளவுக்கு மீறிய  ஆடம்பர ஆசை, பிரியமான பெண்ணின் போதனை, துஷ்டர்களின்  சகவாசம்,  பெற்றோர் தங்கள் செயல்களில் மூழ்கி தன் குழந்தைகளிடம் அன்பு காட்டாமல் இருத்தல்,  மந்திரிகளிடம் ஒத்து போகாமை, உடன் பிறந்தவர்களின்  குறுக்கீடு, மாற்றாந்தாயின் பொறாமை, இவை அரச பதவிக்கு காத்திருக்கும் இளம் அரச குமாரர்களை பாதிக்கும்.  பெரும் பாலும் இவர்கள்  செய்வதின் நோக்கம்  தந்தை  மகனுக்கு இடையில் விபரீதமாக சொல்லி, இருவரிடையே பூசலை ஏற்படுத்துவது தான்.

மந்திரிகள் மூலமாக நடந்ததை அறிந்த அரசன், மகன் நிரபராதி, அவனை ஆட்டுவித்த துஷ்டர்கள் விலகி விட்டனர் என்பதால் மன நிம்மதி அடைந்தான். அதன்பின் மகன் குடும்பத்தினருக்கு தேவையானதை தானே முன்னின்று கவனித்து செய்தான்.  அந்தரங்க ஆலோசகன் பிரயாக ராஜனை கூட சந்தேகப் பட்டோமே என்று வருந்தினான்.   நோனகனோ,  நீயே செய் அல்லது யாரையாவது அனுப்பி கண்களை தாக்கு, அல்லது அழித்து விடு  என்று உபதேசித்ததை நினைத்தான்.  அரசன் தன்னையே நொந்து கொண்டான்.  எந்த அளவு இறங்கி இருக்கிறோம், பசுக்கள் போல காமத்தை அடக்க மாட்டாமல், மகனுடைய மனைவிகளை கூட அனுபவித்தோம்.  அவர்களில் ஒருவள் ஸுகலா என்பவள் இதற்கு ஒத்து பாடினாள். அவள் துக்கா என்ற அரசனின் பேத்தி.  நோனகாவும் அவளுமாக ஹர்ஷனுக்கு விஷம் கொடுக்க இரண்டு சமையல் வேலை செய்பவர்களை கைக்குள் போட்டுக் கொண்டு திட்டமிட்டனர்.  ஆனால், மற்றொரு சமையல்காரன் ஹர்ஷனுக்கு தெரிவித்து விட்டான். அவன் மெய்க் காப்பாளர்கள், அதை இரு நாய்களுக்கு கொடுத்து பரிசோதித்து அவை இறந்து விட்டன என்று வந்து சொன்னார்கள்.  ஹர்ஷன், இதுவும் தந்தையின் வேலையோ என்றே சந்தேகித்தான்.  அதன்  பின் அரண்மனையிலிருந்து வரும் உணவை கையால் தொட்டு விட்டு வைத்து விடுவான்.  தானே தயாரித்த உணவை ஏதோ சாப்பிட்டு ஜீவித்தான்.  அவன் உணவை சாப்பிடுவதில்லை என்பது அரசன் காதுக்கு எட்டியது.  அவன் சமையல் செய்பவர்களை விசாரித்தான். அந்த இருவரையும்,  அடையாளம் காட்டினான். ராஜா உடனே ப்ரயாகனை வரவழைத்து விசாரிக்கச் செய்தான்.  அவனும் அவர்களை சோதித்து விஷம் அளித்த நிகழ்ச்சியை தானே வந்து அரசனிடம் தெரிவித்தான். அதன் பின் பிரயாகன் தானே கொண்டு வந்து தராவிட்டால் அரச குமாரன் உணவை  தொடுவதே இல்லை.

ஒவ்வொரு நாளும் போவதே ஒரு யுகமாக இருந்தது. அரச குமாரன் தன்னம்பிக்கையை இழந்து கொண்டிருந்தான்.

அந்த சமயம் அரசனிடம் பெரும் மாறுதல் தோன்றியது. தன் வாழ் நாள் முடிவை நெருங்கியதாக உணர்ந்தானோ என்பது போல, சில பரிகாரங்கள் செய்யலானான்.  தாம்ரஸ்வாமியை தான் அதனிடத்தில்,இருந்து அபகரித்துக் கொண்டு வந்த தாம்ர மயமான ஸூரியனின் உருவம், அதை அதன் மூல ஸ்தானத்தில் நிறுவினான்.  விஹாரங்களில் இருந்து அபகரித்துக் கொண்டு வந்த பொருட்களை திருப்பிக் கொடுத்தான். மகனோ, மகளோ இன்றி மரித்தவர்களின் சொத்தை அரசுடமையாக்கியதை மாற்றினான்.   ஆரியர்கள் என்ற அறிஞர்கள் அவர்களுக்கு மரியாதையாக கொடுத்து வந்த சன்மானத்தை நிறுத்தி இருந்தான். அதையும் திரும்ப அளிக்க ஏற்பாடுகள் செய்தான்.   697

கர்வமும், தான் என்ற அகம்பாவமும் நிறைந்து இருந்த நாட்களில் செய்த தவறுகள் நினைவுக்கு வந்தன.  ஒரு சாபம்.ஹரன்-சிவன் கோவில் குட முழுக்கு நடந்த சமயம் அவன் மூக்கிலிருந்து வழிந்த உதிரம் கும்பத்தில் விழுந்தது. எதேச்சையாக நடந்தது தான் என்றாலும் அதில் ஈடுபட்டிருந்த பெரியவர்கள் அது நல்ல சகுனம் அல்ல என்றனர். அரசனா தன் தவற்றை ஒத்துக் கொள்வான்.  தொடரச் சொல்லி விட்டான்.  பெரியவர்கள் வாய் விட்டு சொல்லா விட்டாலும் அவர்கள் சாபம் அவன் மேல் விழுந்திருக்கும் என்று நினைத்தான்.  அளவுக்கு அதிகமான சம்போகம். பெண்களுடன் சகவாசம், எந்த தாயார் சபித்தாளோ, மனம் அலை பாய்ந்தது.  வாழ் நாள் ஒரு முடிவது இயற்கை தான் என அமைதியாக இருக்க முடியவில்லை. இன்று விடாது மூக்கிலிருந்து உதிரம் பெருகி பழி வாங்குகிறது என்ற வருத்தம் படுக்கையில் தள்ளியது.  கண்களின் நீரும் வற்றாமல், கிடந்தவன் எலும்பும் தோலுமாக ஆனான். தேய்பிறை சந்திரன் போல நாளுக்கு நாள் தேய்ந்தான். மந்திரிகள் பராமுகமாக இருந்தனர். அரசை ஹர்ஷன் கையில் ஒப்படைத்து விட்டு போக வேண்டும்.   மந்திரிகள் ஹர்ஷனுக்கு ஆதரவாக இல்லை. லோஹராவிலிருந்து உத்கர்ஷனை வரவழைக்க ஏற்பாடு செய்தான்.   அதன்;புரத்து பெண்கள் ஒவ்வொருவரும் தங்கள் மகனுக்கு பட்டம் என்று போட்டி போட்டனர்.  பொறாமைத் தீ அங்கு பற்றி எரிந்தது.

ஹர்ஷனுக்கு நிறைய செல்வம் கொடுத்து நாடு கடத்தி விடுகிறேன் என்று எண்ணி ஹர்ஷனை வரவழைக்க மந்திரிகளிடம் சொன்னான்.  அவர்களோ,  அரண்மனை பணியாளர்கள் அனைவரையும் மாற்றி தக்குர   என்ற லோஹரா தேசத்து ஆட்களை நியமித்து விட்டிருந்தனர்.  அவர்களோ, ஹர்ஷனை அரண்மனைக்குள்ளேயே ஒரு அறையில் சிறை வைத்து விட்டனர்.

அரசன் தான் செல்லா காசு ஆகி விட்டதை உணர்ந்தான். ஏதோ ஒரு மடாலயம் சென்று உயிரை விடுவேன், தாம்ர ஸ்வாமின் என்ற கோவில் விக்ரகத்தை சிதைத்து  அப்புறப்படுத்தியது உறுத்தியது.  மார்த்தாண்ட கோவில் சென்று பரிகாரமாக வேண்டிக் கொள்வேன் என அவசரமாக , அரண்மனையை விட்டு வெளியேற தீர்மானித்தான். இது தெய்வ கோபம் தான். அந்த தெய்வத்திடமே சரணடைகிறேன் என மனப் பூர்வமாக விரும்பினான்.   

உயர் அதிகாரியாக இருக்கும் வரை மற்றவர்களை விரட்டி, வேலை வாங்குவதே குறியாக, தனக்கு கீழ் இருப்பவர்களை புல் போல துச்சமாக நினைப்பவனே, காலம் வந்தால் உடல் நலிந்தால், அடி மட்ட தொழிலாளியைக் கூட வணங்கத் தயங்க மாட்டான்.  மூர்க்கன், ஆசிரியர்களிடம் மரியாதையின்றி, சரியாக கற்காதவன்,  கடைசி காலத்தில் ஏங்குவதும் அது போலத்தான்.

உயிர் பிரியும் நேரம், சக்திகள் ஒடுங்கி இருக்கும் பொழுது, ஓடி ஓடி ஆணைகளை நிறைவேற்றியவர்கள் வாளா இருப்பர். அரசனே ஆனாலும் அவனது சொல் எடுபடாது. அந்த சமயம் புரியும் இது வரை வாழ்ந்தது கனவு என்று.  அரசனோ, ஆண்டியோ மரணம் தரும் வேதனை ஒன்றே,

மார்கழி மாதம், மூன்றம் பிறையன்று அரசன் அரண்மனையை விட்டு மடாலயம் புறப்பட்டான். பேரி முதலிய வாத்யங்களுடன் அரச சேவகர்கள் உடன் வந்தனர். படகில் ஏறி நீர் வழியாகவே யாத்திரை கிளம்பியது.  மார்த்தாண்ட ஆலயம் வந்து சேர்ந்தனர்.  ஒரு பொற் சிலையை கோவிலுக்கு அர்ப்பணித்தான்.  தன் மூத்த மகனை எண்ணி ஏங்கினான்.  அவன் ஆணையை கேட்பார் இல்லை.  

யாரோ ஒருவன் ஹர்ஷன் பாடிய பாடலை பாடினான். அதைக் கண்ணீர் வழிய கேட்டான். துக்கம் அதிகமாகியது.  உத்கர்ஷனிடம் ,  சில பொருட்களை ஹர்ஷனிடம் கொடுத்து விடு என்று சொன்னான்.  அவன் தானே மூத்தவன். அதைக் கேட்ட நோனகா ஒரு முகம் பார்க்கும் கண்ணாடியை கொண்டு வந்து கொடுத்தான்.  அதை தள்ளி விட்டு கண்களை மூடி தியானத்தில் ஆழ்ந்தவன், இரண்டரை நாட்கள் அதே நிலையில் இருந்தவன் கையசைத்து  அதே மந்திரிகளை அழைத்தான். அவர்களே அவனை மார்த்தண்டரின் சன்னிதிக்கு கொண்டு போகும் படி செய்து விட்டான்.

நாற்பத்து ஒன்பதாம்  ஆண்டு ஒரு பகல் பொழுதில், மார்கழி மாதம், அறுபத்தைந்து வருஷம்  சஷ்டி திதியில், நிறைவடைந்தான்,  1089 AC

மும்மணிகா முதலான ஏழு ராணிகள், விவாக பந்தத்தால் மனைவி ஆனவர்கள், ஒரு ஆசை நாயகி ஜய மதி அரசனை பின் தொடர்ந்து உயிர் விட்டனர்.  மிகவும் பிரியமான ஒருவள், அரசனிடம் ஏராளமான வசதிகளையும், பொருட்களையும் அனுபவித்தவள் அவனையே மறந்தவள்  போல தன் வழி சென்று விட்டாள்.

உத்கர்ஷனின் மகுடாபிஷேகத்திற்காக ஏற்பாடுகள்  நடந்து கொண்டிருந்தன. நன்றி மறவாத  வாமனன் என்ற அந்தரங்க பணியாளன் தான் அரசனுக்கு நீர் கடன்களைச் செய்தான்.  கோலாகலமான அரச பதவி ஏற்பு வைபவத்தில் ஊர் மக்களும் மறந்தே போனார்களோ எனும் படி அந்த நிகழ்ச்சி ஒருவரும் அருகில் இன்றி நடந்தேறியது.

கலச அரசனின் பத்மஸ்ரீ என்ற மனைவியிடம் பிறந்த விஜய மல்லன் என்பவன், ஹர்ஷனுக்கு  அரசன் கொடுத்த மாதாந்திர ஊதியம் போன்ற ஒரு பங்கு செல்வம், அதை தனக்கு கொடுக்கும் படி உத்கர்ஷனிடம் கேட்டு வாங்கிக் கொண்டான். அதைக் கண்ட கய்யா என்பவளின் மகன் ஜய ராஜனுக்கும் அதே போல வேதனம்  மந்திரிகள் பரிந்துரைத்து கொடுக்கச் செய்தனர்.  அந்த:புர பெண்கள் அனைவரும் பரிதவித்தனர்.  இது பல இடங்களில் கண்டிருந்தாலும் தங்களுக்கு என்று வரும் சமயம் தான் தன் தாக்கம் தெரிகிறது.

ஹர்ஷதேவன், தந்தையின் மரணம் பற்றி அறிந்தவன், அன்றைய தினம் உணவின்றி உபவாசம் இருந்தான். நான்கு சுவர்களுக்குள் அடை பட்டு கிடந்தவன் என்ன செய்வான்.  மறு நாள் உடன் இருந்த லோஹராவிலிருந்து வந்திருந்த தாக்குரர்கள், அவனை வாற்புறுத்தி உணவருந்தச் செய்தனர்.  தங்கள் நாட்டின் அரசை ஹர்ஷன் ஏற்றுக் கொள்ள வேண்டினர்.  இரண்டு ராஜ்யங்களும் ஒருவன் கையில் ஏன் இருக்க வேண்டும்? நாங்கள் உதவுகிறோம் என்று வாக்களித்தனர்.

 உத்கர்ஷன் ஆடம்பரமாக ஸ்ரீ நகரம் வந்தவன் தூதர்களை அனுப்பி ஹர்ஷனை  தந்தை மரணத்திற்கு மகன் செய்ய வேண்டிய நீராடல் முதலியவைகளைச் செய்ய அனுமதிக்கச்  சொன்னான்.  நீராடும் சமயம் முடி சூட்டலுக்கான பேரி நாதம் கேட்கவும் ஹர்ஷன்  மனதில் புத்துணர்வு உண்டாயிற்று.  இனி தான் சுதந்திரமானவனே. யாருக்கும் அடங்கியவன் இல்லை என்ற எண்ணம் தைரியம் கொடுத்தது. ஏனோ அந்த வாத்ய இசை இடி போலவும், மழை வரும் என்று உயிர்கள் மகிழ்வது போலவும் அவன் கவி உள்ளம் நினைத்தது.  இது ஒரு சுப நிமித்தம். தாக்குரர்களின் ஆதரவும், தன் முன்னேற்றமும் அந்த சுப நிமித்த செய்தியாக மனதில் மகிழ்ச்சியை அளித்து அடுத்து செய்ய வேண்டியதை நினத்தான்.

அடுத்த நாள் அரசனுடைய அடியாள், போஜனம் கொண்டு வந்ததை மறுத்து விட்டு என்னை சிறையிலிருந்து விடுவிக்கச் சொல், நான் தேசத்தை விட்டு வெளியேறுகிறேன்  என்று சொல்லி அனுப்பினான்.   மறுத்தால் உண்ணாவிரதம் இருந்து மடிவேன் என்றான்.  உத்கர்ஷன்  சம்மதிப்பது போல, நாளை விடுவிக்கிறேன், உணவை ஏற்கச் சொல் என்று சொல்லி அனுப்பினான்.  நாளை என்ற நாள் வரவே இல்லை. கேட்டால் நாளை என்றே சொல்லிக் கொண்டிருந்தான். பயம் ஹர்ஷன் வெளிவந்தால் புரட்சி வெடிக்கும் என்பதை அறிந்தவன்.

தன்னுடைய காதணியை கையில் கொடுத்து பிரயாக ராஜனை விஜய மல்லனிடம் ரகசியமாக செய்தி சொல்லி அனுப்பினான்.  ‘உனக்கு மூத்தவன் ஹர்ஷன் சொல்கிறான், குமார, நீங்கள் அரச போகத்தை அனுபவிக்கும் பொழுது நான் மட்டும் சிறையில் வாடுகிறேனே’ என்று சொல்வது  போல செய்தி. விஜய மல்லன் உண்மையாக வருந்தினான். சகோதரா! உயிரை விடாதே, உன்னை விடுவிக்க நானும் முயற்சி செய்கிறேன் என்று சொல்லி  ப்ரயாக ராஜன் மூலமாகவே பதில் செய்தி அனுப்பி விட்டு யோசித்தான்.

உத்கர்ஷன் பதவி ஏற்றாலும் எந்த செயலையும் செய்யவில்லை. கந்தர்பன் போன்ற மந்திரிகளே ஆட்சியை செய்தனர்.  கவனம் முழுவதும் பொக்கிஷத்திலேயே இருந்தது.  எது எங்கே, என்று அறிந்து கொள்வதிலும், அதில் உள்ளது தனக்கே, அதை எப்படி செலவழித்துக் கொள்வது என்ற திட்டமே அவன் மனதில் இருந்தது. 756 தினசரி வேலையே பொக்கிஷ அறைக்குச் சென்று என்ன என்ன இருக்கின்றன, என்ன எடை, என்ன விலை போகும் என்பதையே பார்த்துக் கொண்டிருந்தான். ஒரு வேலையும் செய்யவில்லை என்பதை அந்த;புர மக்கள் அறியாமலா இருப்பார்கள்.   அவர்களுக்கு உணவும் பயத்தம் பருப்புடன் அன்னம் கொடுத்தான். (பயத்தம் பருப்பு மிக எளிமையான பருப்பு. அதை உயர்வாக, ருசியானதாகவோ  சொல்வதில்லை,) கருமி என்ற பெயர்  அவர்கள் மூலம் பரவியது.  உடல் பலமோ, வீரமோ இல்லாதவன்.  பெருந்தன்மையான குணமும் இல்லை. விரைவில் மக்களின் அதிருப்திக்கு ஆளானான். 759 வாக்களித்தபடி விஜய மல்லனுக்கு மாதாந்திர ஊதியமும் தரவில்லை. அதனால் அவன் கோபித்துக் கொண்டு தேசாந்திரம் செல்ல புறப்பட்டான். தனது பாதுகாப்புக்காக   அவன் உடன் இருந்த வீர்களையும் கூட்டிக் கொண்டான். லவனோத்வம்பு வரை சென்றனர். ஒரு இரவு அங்கு தங்கிய பின் புறப்பட்டனர். உடன் வந்தவர்கள் ஒரு சந்தேகத்தை கிளப்பினர்.  தங்கள் எண்ணத்தைச் சொன்னார்கள்.  (சமவெளியில் இருந்து வந்தவர்கள்  அவர்களை மத்ய தேசத்தினர் என காஸ்மீர வாசிகள் சொல்வர். மலை பிரதேசத்தினர் பஹாடி ) ஹர்ஷனை சிறை வைத்துள்ளான். நீயும் ஊரை விட்டு விலகினால் அரசனுக்கு தன் விருப்பம் போல ஹர்ஷனை வதைக்க இடம் கொடுத்தது போலாகும்.  

இதைக் கேட்டபின் விஜய மல்லன் யோசித்தான். இப்படி ஒரு சந்தர்பம் நாமே கொடுத்து விலகினால் ஹர்ஷன் வெளியில் வரவே முடியாமல் நிரந்தரமாக சிறை இருப்பான் அல்லது வதைக்கப் படுவான் என்ற செய்தியில் உண்மை புரிந்தது.  அதனால் விடிந்தவுடன் ஊர் திரும்பி விட்டான். அங்கிருந்த பல தாமர வீரர்களும் உடன் வந்தனர்.  மதுராவட்டன் என்ற சேனாபதி, குதிரைப் படைத் தலைவனின் மகன், முதலியவர்  அரசகுமரனை பின் தொடர்ந்தனர். மத்ய தேசத்து வீரர்கள் அவர்களுக்கும் பின்னால் வந்தனர். அவன் மகன் நாகா  என்ற நெடு நாளைய அரச படைத் தலைவன் பத்மபுரம் என்ற இடத்தில் இருந்தவன்,  ராஜ குமாரனின் உதவிக்காக தன் குதிரை வீரர்களுடன் வந்து சேர்ந்து கொண்டான்.  அவன் வந்து சேர்ந்ததும், தாமர வீர்களின் உதவி கிடைத்ததும் அதுவரை  அரசியலோ, பொதுவாக விவரமோ அறியாத அரச குமாரன் அவைகளை நற்சகுனங்களாக நினைத்து மகிழ்ந்தான்.  உத்சாகத்துடன் ஸ்ரீ நகரம் நோக்கி கிளம்பியவன் முன் பின் யோசனையின்றி தீப்பந்தங்களுடன் வந்த வீரர்கள் வழியில்  வீடுகளை தீக்கிரையாக்க சம்மதித்தான். அரண்மனையை சுற்றி நின்று முற்றுகையிட்டனர்.  உத்கர்ஷனின் பக்கம் இருந்த ஜயராஜன் என்ற இளவரசனும் விஜய மல்லன் பக்கம் வந்து விட்டான்.  இரண்டு ராஜ குமாரர்களும் உத்கர்ஷனை பதவி இறக்கம் செய்ய திட்டம் வகுத்தனர்.  புதிதாக கவிதை எழுத முயலும் இரு கவிகள் போல என்று உவமை.

ஹர்ஷ தேவனை விடுவித்தால் தான் நிறுத்துவோம் என்ற முழக்கத்தோடு, யானை குதிரைகளை அவிழ்த்து விட்டு அந்த கொட்டகைகளை தீக்கிரையாக்கினர்.  இடியுடன் பொழியும் பிரளய கால மழை போன்றவன் ஹர்ஷதேவன்.  அவனை விடுவிக்க வேண்டும்.  இந்த அரசன் கசன்- खश-(வணிக ஜாதி) வியாபாரி, கருமி,  செலவழிக்காமல் செல்வத்தை கட்டிக் காப்பது மட்டுமே அறிவான்.  அரச பதவியில் இவன் இருக்கவே விட மாட்டோம்.  அவனை நீக்க வேண்டும் என்ற முழக்கங்கள் அதிகரித்தன.  வழியில் ஊர் மக்களும் கலந்து கொண்டனர்.  ஒரு சிலர் ஹர்ஷன் இருந்த சிறைக்குச் சென்று ஜன்னல் வழியாக மலர்களை வீசி வாழ்த்தினர். 

ஹர்ஷன் புரிந்து கொண்டான்.  உத்கர்ஷனுக்கு சைன்யத்தின் ஆதரவும் இல்லை, மக்கள் ஆதரவும் இல்லை. இது தான் சமயம் என்றாலும் தாக்குரர்களை நிதானமாக செயல் பட அறிவுறுத்தினான். புரட்சி செய்பவர்களுக்கும் செய்தி அனுப்பினான். ‘தற் சமயம் நான் சிறைப் பட்டிருக்கிறேன். என்னை முதலில் விடுவியுங்கள்.  நான் வெளியில் வந்த பின் அடுத்து செய்ய வேண்டியதை முடிவெடுப்போம். இல்லாவிட்டால், அரசன் உடனடியாக என்னை கொல்லவே துணிவான்’ .  

இதைக் கேட்டவர்கள் அது சரியே, என்று அந்த மாளிகையின் வாசல் கதவை உடைக்க முற்பட்டனர். தாக்குரர்களே, கதவைத் திறவுங்கள் என்று கத்தினர். ஹர்ஷன் தானே முன் சென்று கதவை உடைத்து விட்டான். கண்களில் மட்டுமே உயிர் இருந்த து போல உடல் பலவீனமான நிலையிலும் அசராது தன் திறமையைக் காட்டினான்.  வாயில் காப்பவர் பதினாறு பேர் இருந்தனர்.  லோஹார தேசத்திலிருந்து  வரவழைத்த சேவகர்கள்.  சமயம் பார்த்து ஹர்ஷனைக் கொல்லவே அனுப்பப் பட்டவர்கள்.  நோனகன் இடை விடாது உத்கர்ஷனுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தான்.  ஹர்ஷன் தலை உருண்டால் தான் நாட்டில் அமைதி நிலவும் என்பதாக.  ஆனால் கிளம்பிய வீரர்களிடம் உத்கர்ஷன் ரகஸ்யமாக ‘இந்த மோதிரம் உங்கள் கையில் நான் கொடுத்தால் மட்டுமே தாக்குரர்களை எதிர்த்து அழித்து விட்டு ஹர்ஷனை தீர்த்துக் கட்டுங்கள்.  நான் சொல்லும் சமயம்  ஹர்ஷனை சிறையிலிருந்து விடுவித்து விடுங்கள் என்றும் சொல்லியிருந்தான்.  நோனகாவுக்கு சில செயல்கள் ஆக வேண்டி இருந்தன. அவை ஹர்ஷனால் மட்டுமே முடிக்க முடியும். அதனால் பின்னால் தனக்கு தேவை என்பதால் அவனை கொல்லவும் விரும்பவில்லை. உத்கர்ஷனுக்கு இதமாக சொல்லிக் கொண்டிருந்திருக்கிறான்.
அவர்கள் மேலும் சொன்னார்கள். பலமுறை எங்களுக்கு சமயம் வாய்த்தது. ஆனால் அனுமதி மோதிரம் இல்லாமையால்  செயல் படுத்தவில்லை.

ஹர்ஷன் அவர்களை உள்ளே அழைத்து தன் எதிரில் அமரச் செய்தான். ஒவ்வொருவையும் பெயர் சொல்லி அழைத்து தாம்பூலம் கொடுத்து உபசரித்தான். எதிர் பாராத உபசாரம், அதுவும் அரசகுமாரனே அளித்த மரியாதை,  இந்த செயலால் அந்த சேவகர்கள்  வெட்கினர். .  தாம்பூலத்தை ஏற்றுக் கொண்டதே கையிலிருந்த ஆயுதங்களையும், மனப் பூர்வமாக ஏற்றுக் கொண்ட செயலான  கொல்வதையும் கை விடுவதாக வாக்களித்தனர்.  நோனகனுடைய ஏற்பாடு என்றவுடன் ஹர்ஷனுக்கு ஏதோ புரிந்தது போல இருந்தது.

गो – கோ என்ற பதம் சமஸ்க்ருத மொழியில் பசுவைக் குறிக்கும், மேலும் பல பொருள்களும் இருந்தாலும் கோ- வாய் சொல்லையும் குறிக்கும்.  இங்கு கவி அந்த ஒரு சொல்லை காமதேனு பசு போல, நல்ல சொல் என்று ஆரம்பிக்கிறார். இரண்டும் வேண்டியதை கொடுக்கும் வல்லமை உள்ளவை.  செல்வத்தை கொண்டு வந்து சேர்க்கும், புகழை உண்டாக்கும், குற்றங்களை களைந்து விடும், நட்பை வளர்க்கும், விரோதிகளைக் கூட நண்பர்களாக்கி விடும் என்றால் கேட்பானேன்.   வழி நடையில் வழி கேட்டாலோ, ஏதாவது வினவினாலோ பதில் கிடைக்கும்.  நல்ல மனிதர்களுக்கு அனுகூலமாக இருக்கும். எந்த இடுக்கண் வந்தாலும் தடுக்கும்.  வாக்கு வன்மை – இனிமையான சமயோசிதமான சொல் எதைத் தான் செய்யாது?

ராஜ குமாரன் அவர்கள் வெட்கி தலை குனிந்து நிற்பதைப் பார்த்துச் சொன்னான். ‘நீங்கள் ஏன் தலை குனிய வேண்டும். இதில் வெட்கப்படவும் எதுவும் இல்லை.  சொன்னதைச் செய்ய வேண்டியது தான் உங்கள் வேலை.   ஆயினும் சற்று பொறுக்க வேண்டும்.  இந்த திடீர் மாற்றம் எந்த வித விளைவுகளை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்து அடுத்த அடி வைப்போம்.  பல மாற்றங்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக கூட வரலாம்.

வானத்தில் சில சமயம் மேகங்கள் பல உருவங்களாகத் தெரியும். யானைகளாக,  பாயும் புலிகளாக, ஊர்வனவாக, குதிரைகளாக பல உருவங்களை நாமே கூட கற்பித்துக் கொள்வோம்.  காலத்தின் கோலமும் அப்படியே. பல ஏற்ற இறக்கங்கள், அது போல சௌம்ய- சாதுவான, க்ரூர, கொடுமையான, நேர் வழி, கோணல் வழி, என்று மனித மனமே பலவிதமாக சிந்திக்கும்.  அதனால், என் மனதில் உடனே எந்த மாறுதலும் தோன்றவில்லை.  நீங்களும் எதையும் வெளிக் காட்டிக் கொள்ள வேண்டாம். இது வரை இருந்தது போலவே காவல் வேலையைச் செய்யுங்கள்.  கவனமாக நல்ல நேரத்தை எதிர் நோக்கி இருப்போம். மற்றொரு கலகம் வரும்.  அரியணையில் ஏறத் தயாரான நிலையில் கூட ராஜ குமாரர்களுக்கு ஏதோ ஒரு இடையூறு வந்து தடுக்கும், விஷம் கொடுத்து மகுடாபிஷேகம் நடை பெற  விடாமல்  தடுப்பவரும் உண்டு.  ப்ராண சங்கடம் எந்த இடத்திலிருந்தும் ராஜ குமாரனுக்கு வரலாம்.

வேணிற் காலத்தில் தாபம் அதிகமானால் மழை வரும் அடையாளம். இருள் அதிகமாக தெரிந்தால்,   விடியல் நெருங்கி விட்டதாக அறியலாம்.  ஏதோ ஒரு எதிர் பாராத நன்மை வரும் முன் உயிரினங்கள் பெரும்  துன்பம் அனுபவித்தால், விடிவு நெருங்கி விட்டது என்பதைப் புரிந்து கொள்ளலாம். 795

என் உயிர் உடலில் நிலைத்து இருப்பதே ஒரு நல்ல சகுனம் என்று கொள்வோம்.  பலர் பலவிதமான

துன்பங்களை அனுபவித்து முடிவில் நன்மையைக் கண்டிருக்கிறார்கள் என்பதை வரலாறு நமக்குச் சொல்கிறது.

அவர்கள் தாங்களாக சிந்திக்க இடம் கொடுத்தவன் போல சற்று நிறுத்திய பின் ஹரி சந்திரனுடைய கதையைச் சொன்னான். அவர்கள் அமைதி அடைவது ஒரு பலன் என்றால் வெளியில் தெரியாத மற்றொரு பலன் அவர்கள் வெளி உலகத்தில் நடப்பதை அறியாமல் கதை கேட்பதில் ஆழ்ந்திருந்தார்கள்.  அரச குமாரன் ஹர்ஷன் அதை எதையோ பார்த்திருந்தான்.

அவன் எதிர்பார்த்தது போலவே வெளியில் பல வதந்திகள் பரவின.  அரசு யாருக்கு என்ற விவாதங்கள்,  யார் யாருக்கு நண்பன் அல்லது விரோதி,  தேவி காளி நாடெங்கும் சுற்றுலா செல்வது போல  பல நூறு முறை அலைந்து கொண்டிருந்தாள். (போராட்டங்கள் வெடித்தன, பல நஷ்டங்கள், மரணங்கள்)

உத்கர்ஷன் இதைக் கண்டு பயந்து ஹர்ஷனை விடுவிக்கச் சொன்னான், உடன் இருந்தவர்கள் கொல்வதை ஆதரித்தனர்.  அனுமதி மோதிரம் கொடுத்ததே  மறந்து விட்டிருந்தது.   அந்த உத்தரவை அப்படியே அனுசரித்த காவல் வீரர்கள்  அனுமதி மோதிரம் இன்றி செயல் பட மறுத்து விட்டனர்.

ரஜபுத்திர வீரன் ஒருவன் ஸூர என்பவன் கையில் அனுமதி மோதிரத்தைக் கொடுத்து அனுப்பினான். தெய்வத்தின் செயல் அது உண்மையான மோதிரம் அல்ல. அதே போல மாற்று மோதிரம். அதில் அரச் முத்திரை இருக்கவில்லை.

முன்னொரு சமயம் வ்ருத்த க்ஷத்ரன் என்ற சிந்து தேசத்து அரசன் மற்றவர்களைக் கொல்ல தவம் செய்து ஒரு வரம் பெற்றான். அதே வரம் அவன் தலையையே கொய்தது. இதைத்தான் விதியின் விளையாடல் என்று பெரியவர்கள் சொல்வார்கள். தன் கதையால் ஸ்ருத யுத என்ற அரசனைக் கொல்ல ஓங்கியவன்,  தன் தலையிலேயே அது விழ, தானே மடிந்தான்.  மற்றவன் மடிந்து விழுவான்,  தான் பிழைத்திருக்க வேண்டும் என்று எண்ணியவனின் தலையில் விதி வசத்தால் தை என்ற ஆயுதமே  விழுந்தது.

உத்கர்ஷன் தவறாக நினைத்தே பார்த்திராத  படி தவறான மோதிரத்தைக் கொடுத்து தானே தன் நாசத்தை விலை கொடுத்து வாங்கிக் கொண்டவன் போல ஆனான்.
 இதற்குள் ஹர்ஷனைச் சுற்றியிருந்த காவலர்கள் அவனுக்கு ஆதரவாகவும்,   உத்கர்ஷ விரோதிகளாக ஆகி விட்டிருந்தனர்.   ஸூரன் பெரும் கோபத்துடன் ஹர்ஷனை கொல்ல வந்தவன் மோதிரத்தை காட்டியவுடன்,  அவர்கள் வெகுண்டு எழுந்தனர். பெயரளவில் ஸூரன், இந்த எழுச்சியை எதிர் பாராத தால் அவர்களுடன் சேர்ந்து தானும் ஹர்ஷனை ஆதரிக்கலானான்.  ஹர்ஷனின் காலில் விழுந்து வணங்கி, சிறையை விட்டு வெளியேறும் படி வேண்டினர்.  அந்த ராஜ குமாரன் அதை நம்பவில்லை. சற்று தாமதித்தான்.  அதே சமயம் ஹர்ஷ தேவனை கொன்று விட்டார்கள் என்ற வதந்தி வேகமாக பரவி விஜ்ய மல்லனின் காதுகளை எட்டியது.   ராஜ தானியையே கொளுத்துங்கள் என்று தன் ஆட்களுக்கு உத்தரவிட்டான்.  நிலைமை கை மீறி போனதை அறிந்த உத்கர்ஷனின் ஆதரவாளர்கள், அரண்மனையில் இருந்தவர்கள், சுகளா என்ற ஹர்ஷனின் முன் மனைவியாக இருந்தவளை, அரசனின் காதணியை ஏந்தியவளாக அவர்கள் முன் அனுப்பினர். அவளைக் கண்டதும் விஜய மல்லனின் படை வீரர்கள் சற்று அடங்கினர்.  நோனகன், ப்சஸ்த கலசன் முதலானோர் ஹர்ஷனுடைய இருப்பிடம் சென்றனர்.  அவன் கை கட்டுகளை அவிழ்த்து, சிறையிலிருந்து விடுவித்தனர்.  அந்த வினாடியே புயல் போல வெளியே வந்த ஹர்ஷன் குதிரையில் ஏறிக் கொண்டு வெளி வரவும் மக்களின் மகிழ்ச்சி ஆரவாரமும், மழையாக பொழிந்த மலர்களும் சூழ, விஜய மல்லன் அருகே வந்து நின்றான்.   அவனை சமாதானப் படுத்தி, , பொறு, யோசித்து செய்வோம் என்று சொல்லி, இருவருமாக அரண்மனை நோக்கிச் சென்றனர்.

ஹர்ஷதேவன் விடுவிக்கப் பட்ட செய்தியை அறிந்ததுமே, உத்கர்ஷன், அவனுடைய அடியாட்களான சில மந்திரிகள், பொக்கிஷ அறையில் இருந்த விலையுயர்ந்த பொருட்களை அபகரித்துக் கொண்டனர்.    

ஹர்ஷ தேவன் அனுபவித்த கொடுமைகளை கேட்டு வருந்தியும், தப்பி வந்ததால் மகிழ்ச்சியும் சேர விஜய மல்லன் உணர்ச்சி வசப்பட்டு நின்றவன், சட்டென்று குனிந்து ஹர்ஷனின் காலில் விழுந்து வணங்கினான்.  யாரோ ஒருவன், விஜய மல்லனுக்கு இது தான் சமயம் நீ ராஜ்யத்தை கைப் பற்ற என்று ரகசியமாக சொன்னதையும், விஜய மல்லன் மறுத்து பதில் அளித்தையும், இங்கிதத்தால்  ஹர்ஷன் புரிந்து கொண்டான்.  ஒரு க்ஷணம், இரு சகோதர்களும் கழுகு போல தன் உடலை வேண்டுகிறார்களோ, தனக்கு படை பலமும் இல்லையே என சிந்தித்தவன், குதிரையின் மேல் அமர்ந்தபடி, சுற்றி வந்து தனக்கு ஆதரவாக வந்து வாழ்த்திய பொது மக்களுக்கு கையாட்டி நன்றி சொல்லிய படி சென்றான்.  இடி விழுந்து நதிக் கரையில் இருந்த மரம் உடைந்தது. அதில் இருந்த மனிதன் தலை குப்புற நதியில் விழுந்தான். விழுந்தவன் நேரே ஒரு முதலையில் வாயின் விழுந்தான், அந்த முதலையுடன் மகா சமுத்திரத்தை அடைந்தான் என்று ஒரு கதை நீளமாக போகும்.  அது போல தன் நிலை ஆகி விட்டதோ – ஒரு வினாடி நேரம் தான்,  ஹர்ஷனைத் தொடர்ந்து வந்த தாமர, தாக்குர வீரர்கள்  அவனருகில் வந்து நின்று விட்டனர்.

விஜய மல்லனுடன் கலந்து ஆலோசித்தபடி அரண்மனை வாசலுக்கு வந்தனர்.  விஜய மல்லன் உள்ளே நுழைய விடாமல் தடுத்தான்.  இப்பொழுது  தான் மரணத்தில் பிடியில் இருந்து தப்பி வந்திருக்கிறாய். திரும்ப அதன் அருகில் ஏன் செல்கிறாய், என்றவன்,  சந்தேகத்துக்கு இடமில்லாமல் சோதித்த பின் உள்ளே நுழைவோம்.  அவனுடைய சேவகர்கள் உள்ளே சென்று சோதித்த பின், உள்ளறையில் இருந்த அரியாசனத்தைக் கொண்டு வரவும் இருவரும் உள்ளே நுழைந்தனர்.   உடனடியாக ஹர்ஷ தேவன் அதில் அமர்த்தப் பட்டான்.  தன் சதிச் செயல்களை மறைத்துக் கொண்டு சுகளா அருகில் அமர்ந்தாள், பட்டத்து ராணியாகும் உரிமையோடு.   

பாடுபவர்களும், வாத்யங்கள் இசைப்பவர்களும் கோலாகலமாக வந்து மகுடாபிஷேக வைபவத்தை அறிவிக்கவும், எங்கிருந்தோ பழைய மந்திரிகளும் அலுவலர்களும் வந்து கூடினர். இடி சத்தம் கேட்டாலே, நீர் வரவை எதிர் பார்த்து தாங்களாக நதியில் வந்து கூடும் சாதக பறவைகள் போல. அரியாசனத்தில் அமர்ந்தவனை பொறாமையுடனும் வருத்தத்துடனும் உத்கர்ஷன் பார்த்தான். செல்வம் எவரிடம் நிலைத்து நிற்கிறது?  விஜய சிம்மன் தான் செய்ததை தெரிவித்தான்.

உத்கர்ஷன் எதுவும் நடவாதது போல, தன் பரிவாரங்களோடு வந்தவனை விஜய மல்லன் எதிர் கொண்டான்.  தாக்குர வீரர்கள் ஹர்ஷனுக்கு ஆதரவாக இருந்தவர்களே அரண்மனைக் காவலில் அமர்த்தப் பட்டனர்.  அத்துடன் விஜய மல்லனிடம் தோன்றிய சந்தேகமும் விலகியது.  தன் வீடு செல்லக் கிளம்பியவனை, அரசனின் தூதுவர்கள் அருகில் அழைத்து வந்தனர்.  கை கூப்பி அவனுக்கு நன்றியைத் தெரிவித்த ஹர்ஷதேவன், ‘ என் உயிரையும், உரிமையான அரசையும் உன்னால் தான் திரும்பப் பெற்றேன்’ என்று மனப் பூர்வமாகச் சொன்னவன்.  விஜய மல்லனுக்கு தகுந்த பதவியையும் ஆசனத்தையும் கொடுத்தான்.

இது வரை பட்ட கஷ்டங்களுக்கு மாற்றாக நல் வினையால், அரசனாக பொறுப்பு ஏற்ற ஹர்ஷனால், ஆட்சி மாற்றம் எந்த இடரும் இன்றி நடந்தேறியது.  இன்னமும் சிறை உடையிலேயே இருப்பதைக் கூட எவரும் கவனிக்கவில்லை போல அங்கு மகிழ்ச்சியே நிறைந்து இருந்தது.   விரைவாக தன் வாழ்வில் வந்து விட்ட மாற்றங்களை உள் வாங்க முடியாமல் சற்று நேரம் கண் மூடி இருந்தான்.

உத்கர்ஷன் சிறை பிடிக்கப் பட்டான். என்ன செய்யலாம் என்று தன் ஆலோசகர்களைக் கேட்டவனுக்கு,   நோனகன் கோபத்துடன் பதில் சொன்னான் ‘ நான் படித்து படித்துச் சொல்லியும் நீ கேட்கவில்லை. கோழை நீ. உன் அறியாமை, செயலற்ற தன்மை இவைகளின் பலனை அனுபவிப்பாய் ‘ என்றான்.  நீ அவனுக்கு கொடுத்த அதே சிறை உணவு உனக்கும் காத்திருக்கிறது.  போராடவும் வழியில்லை உயிரை விடவும் வழியில்லை,  பேசிக் கோண்டே போனவனை எவரும் தடுக்கவும் இல்லை, கேட்கவும் இல்லை.    

சகஜா என்ற மனவியுடன் தன் வீட்டினுள் நுழைந்தவன், துணியை வெட்டும் கத்தரிக் கோலால்  திடுமென தானே தன்  கழுத்தை அறுத்துக் கொண்டு விழுந்தான். முன்னால் சென்று விட்ட சகஜா சத்தம் கேட்டு திரும்பியவள் ரத்த வெள்ளத்தில் கிடந்த கணவனைக் கண்டாள்.  வஜ்ரத்தால் அடிபட்ட மலை போல கிடந்தான்.  லோஹாரா அரண்மனைக்கு விஷயம் தெரிவிக்கப் பட்டது.  நோனகா பதவி விலக மறுத்தவனை வற்புறுத்தி விலகச் செய்தனர்.    சில நாட்கள் காத்திருந்தான்.  நோனகா, சில்ஹர, பட்டாரா, ப்ரசஸ்த கலச என்ற அந்த கூட்டமே சிறைக்குச் சென்றனர்.

ஒரே நாளில் தலை கீழாக மாறி விட்ட ஹர்ஷ தேவனுக்கு எதிரில் கரடு முரடான பாதை காத்திருந்த து. செய்ய வேண்டிய சீர் திருத்தங்கள்,  நேர்மையும், பொறுப்பும் உள்ளவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும். அரச நிர்வாகத்தை தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டவனுக்கு பல கடமைகள்.  வாழ்த்துக்களும், அன்பளிப்புகளும் குவிந்தன.  மற்றொரு பக்கம் ஸூறையாடும் கூட்டமும் கை வரிசையைக் காட்டத் தயாராக இருந்தன.  ஹர்ஷ தேவன் தன்னுடைய மென்மையான உள்ளன்புடன் அணுகியது ஒரு பக்கம் பாராட்டைப் பெற்றது. மறுபக்கம் கடுமையாக தண்டனையும் கொடுத்தான் என்று வரலாறு சொல்கிறது.  உதவியவர்கள் பலர், எதிர்த்தவர்கள் பலர்,  கருணை, சமயங்களில் கண்டிப்பு, அறிவுடையவர்களின் ஆதரவு இருந்தால், அதே சமயம் வறியவர்களின் ஆற்றாமையையும் கேட்க வேண்டி இருந்தது. ஹர்ஷ தேவனின் ஆட்சி காலம் வரலாற்றில் வெகுவாக பரவி போற்றப் பட்டது.  அவனை படைத்த இறைவன் பொறுக்கி எடுத்த நல்ல பரமாணுக்களால் படைத்து விட்டான் என புகழ் பெற்றான். தெய்வ பலம் இன்றி இத்தகைய மகத்தான செயல்களை செய்ய முடியாது என்று சிலர்.  உலகில் அரச பதவியில் அமர்ந்த பலரின் தோற்றமோ, வாழ்வோ எண்ணப் படுவதில்லை. அவர்கள் செயல்களே சாட்சி.  வழி கடுமையானது கரடு முரடானது என்று நதி ஓய்வதில்லை.  கல கலவென்று ஓடும் நதி நதி நீரின்  உத்சாகம் உல்லாசமே நிறைந்து வழி காட்டுகிறது.  உத்சாகம், மனத் தெளிவு தான் அனைத்து நற்காரியங்களுக்கு தாய்.  நீதிகள் தானே அந்த இடத்தில் வந்து அமர்கிறது. சாஸனம் – அரச கட்டளை அதன் மதிப்பை இழக்காமல் உடன் இருப்பவர்களால் கடை பிடிக்கப் படுவதும், அரசனின் கட்டளை அதே விதமாக ஏற்றுக் கொண்டு அனுசரிக்கப் படுவதும் அரசனின் திறமையாலே.  தியாக குணம் செல்வத்தை பகிர்ந்தளிக்கவும், பெற வேண்டிய இடத்தில் பெறவும் அரசனின் மன திடம் தேவையாகிறது.  கருணை சுலபமாக அறியப் படுகிறது. ஹிம்சை- தண்டனை பயங்கரமாக உணரப் படுகிறது. நல்லன செய்யும் போது பாராட்டையும், பாபத்தை வேரறுக்கும் பொழுது  களங்கம் கற்பிப்பதையும் சமமாக ஏற்க மன திடம்  வேண்டும்.  மனதுக்கு உகந்ததை செய்யும் பொழுதே,  வாழ்த்தும், நிந்தனையும் கலந்து தான் வரும்.  பல விதமான மக்கள், பலவிதமான  விருப்பு வெறுப்புகள்.  பலவித எதிர் பார்ப்புகள்.  அரசனின் செயல்களை விமரிசிக்கும் அறிஞர்கள் பெரும்பாலும்  அரியனவை நன்மைகளை மட்டுமே குறித்து வைக்கிறார்கள். மற்றவைகள் நாளா வட்டத்தில் மறக்கப் படுகின்றன.  இவைகளுடன்  ஹர்ஷ தேவனின் வரலாற்றை வர்ணிக்கிறோம். 873

சக்தி வாய்ந்த பரமாணுக்கள் மட்டுமே பயன்படுத்தி படைப்புக் கடவுள் இந்த மனிதனை படைத்திருக்க வேண்டும் என்பதில் ஐயமேயில்லை. இல்லாவிடில், மனித பிறவி தானே, தாயின் வயிற்றில் பிறந்தவன் தானே, மகத்தான ஆற்றல்களுடன் எப்படி பிறந்திருக்க முடியும்?  மனிதர்களில் மட்டுமல்ல, தேவர்களில் கூட இப்படி ஒரு உருவம் காணமுடியாது. தானவர்களில் இருக்கலாம் ஆனால் அதில் அதிகமாக உயர்வு  நவிற்சியணி – மிகைப் படுத்திச் சொல்வது – என்ற காவியங்களில் பயன்படுத்தும் அலங்கார சொற்களே அதிகம். அதைச் சொல்வதும்  ப்ராஞர்கள் – சாதாரண அறிவை விட பல மடங்கு அதிக அதிக அறிவு உடையவர்கள் –  அவர்கள் தான் நயம் பட சொல்வார்கள்.

தற்கால super man – என்றால் மிகையாகாது.   ஸூரிய ஒளியை மிஞ்சும் ஒளி மிக்க காதணிகள், குண்டலங்கள், தலை மேல் மகுடம் தூக்கித் தெரியும் படி சுற்றிலும் தலைப்பாகை யுடன் இருக்கும்.  சிங்கத்தின் பிடர் மயிர் போல சிலிர்க்கும் அடர்ந்த தாடி, மீசைகள், காளை போன்ற தோள்கள், நீண்ட கைகள்,  கருமையும் சிவந்த நிறமும் கலந்த உடல் நிறம், பரந்த மார்பும், குறுகிய இடையும், மேகத்தின் நாதம் போன்ற குரல், கம்பீரமாக பேசும் தோரணை, துடிப்பும், சமயோசிதமாக பேசும் திறனும் யாவரையும் கவரும்.  

அரண்மனையின் பிரதான வாசல்- சிம்ஹ த்வாரம் எனப்படும்-  அதில் பெரிய மணி கட்டச் செய்தான். யார் வந்து  எதை வேண்டினாலும் அரசன் காதுக்கு எட்டும்படி ஏற்பாடுகள் செய்திருந்தான்.  குறைகளைச் சொல்லி பரிகாரம் தேடுபவர்,  விண்ணப்பங்களை தர வந்தவர்கள்  அதிக நேரம் காத்திருக்க தேவையில்லாமல் இந்த மணி ஓசையே அரசனை எழுப்பி விடும்.  மழை மேகத்தைக் கண்டு மகிழ்ந்து கூடும் சாதக பக்ஷிகள் போல வந்தவர்கள் குறை தீர்ந்து மகிழ்ந்து திரும்புவர். ஆடம்பரமான ஆடைகளோ, ஆபரணங்களோ இன்றி எளிய உடையுடன்,  சிறிய காவல் படையே மெய்க் காப்பாளர்களாக அருகில் இருப்பர்.   அரண்மனையில் தலைப்பாகை இன்றி யாரையும் காண முடியாது. அரசனை அதிகமாக சிம்ஹத்வாரம் என்ற நுழை வாயிலில் தினமும்  காணலாம்.  பலவிதமான மக்கள் அங்கு வந்து அரசனிடம் நேரில் பேசி பலன் பெறுவர்.  உள் நாட்டு வெளி நாட்டு பிரதி நிதிகளை கூட அங்கு காணலாம்.

மந்திரிகள், அந்தரங்க பணியாளர்கள்,  என்று கணக்கிலடங்கா எண்ணிக்கையில் அரண்மனை வளாகத்தில் பொன் வண்ண கை கங்கணங்கள், இடுப்பு பட்டைகள் அணிந்தவர்களாக நிரம்பி இருப்பர்.  சுந்தரன், கண்ணுகினியான் என்றே போற்றப் பட்ட சாம்ராஜ்யாதிகாரி, விஜய மல்லனுக்கு குருவாக மதிப்புக்குரியவனாக திகழ்ந்தான்.  பூமியின் நாயகன் நன்றி மறவாமல் அவனுக்கு அளித்த பதவி அரசனுக்கு இணையான மதிப்பை பெற்றவனாக,  அரண்மணை நிர்வாகத்தில் சுதந்திரமாக செயல் படும் அதிகாரமும் உள்ளவனாக இருந்தான்.  கந்தர்பன் போன்ற தந்தையின்  பழைய விசுவாசமுள்ள மந்திரிகள் தொடர்ந்தனர்.  கந்தர்பன் பழைபடி எல்லையில் பொறுப்பிலும், மதனன்  சேனைத் தலைவனாகவும், விஜயசிம்ஹ தன் பழைய பொறுப்பிலேயே இருக்கும் படி வைத்தான். ஆட்சி மாற்றத்தால் அரச நிர்வாகம் பாதிக்கப் படாமல் இருக்க வேண்டும் என்பதால்.

சில நாட்கள் பொறுத்து கோப தாபங்கள் குறையவும், ப்ரசஸ்த கலசன் முதலானோர் சிறையிலிருந்து விடுவிக்கப் பட்டனர்.  நோனகனின்  மிக கடுமையான செயல்களுக்கான தண்டனையை குறைக்க முடியாமல், மரண தண்டனையே அளித்தான்.  அதுவும் சங்கடமாகவே மனதை வாட்டியது. நிர்வாகத் திறமை உடையவன். அரசனுக்கு அந்தரங்கமாக இருந்தவன்.  நல்ல புத்தி கூர்மையும், செயல் திறமும் உடையவன்.  அவனால் பல நன்மைகளையும் நாடு அடைந்தது.  நெருப்பு போன்றவன்.  பயனுடையது அது பாதுகாப்பாக கையாளும் வரை. அதுவே வீட்டை எரிக்குமானால் அணைக்கத்தானே வேண்டும்.  தன் மனைவியின் கண்ணெதிரில் அவன் மூக்கையும், காதுகளையும் வெட்டச் செய்தான்,  விச்சாவடன்,  பட்டன் போன்றவர்கள் சூலத்தில் மாட்டப் பட்டனர்.  

அகாரணமாக சிறையில் இருந்த பல சேவகர்களை விடுவித்தான். அவர்கள் கூட்டமாக வெளியேறியதைக் காண  மரப் பொந்துகளில் இருந்து திடுமென குளவிகள் மண்ணிலிருந்து கூட்டமாக வெளியில் வந்தது போல இருந்தனவாம். அவர்களுக்கு நிறைய பணமும் பொருளும் கொடுத்து அனுப்பினான். 893

ரக்கா வின் வம்சத்தில் வந்த க்ஷேமா வின் மகன் வஜ்ரனின் மகன், சுன்னா என்பவனை பதவி உயர்வு கொடுத்து முக்ய மந்திரிகளில் ஒருவனாக ஆக்கினான்.  அவன் சகோதர்களும் பதவிகள் பெற்றனர்.  ஜயராஜா என்பவனின் இளையவன், யாயராஜன் அரண்மனை நிர்வாகத்தில் தலைவனாக ஆனான்.  அரசனுக்கும் அந்தரங்க ஆலோசகனாக ஆனான்.   யாத்திரைகள் போகும் பொழுது அரசனுடன் செல்வதும், அந்த சமயம் ஏற்பாடுகள் செய்வதில் இருந்து, வழியில் ஆங்காங்கு காண வரும் பிரமுகர்களையும், பொது மக்களையும் சமாளிப்பது போன்ற செயல்களைச் செய்யும் மந்திரியாக, அரசனின் சுற்றுலாவில் உடன் வரும் அதிகாரிகள், பணியாளர்கள் அனைவரையும் நியமிக்கும் பொறுப்பும் அவனை சார்ந்தது.   

கங்கை யாத்திரை சென்ற சமயம் தம்மடன் தன்வங்க குடும்பத்தினர், தன் புதல்வர்கள், சகோதரர்களுடன் வந்து கலந்து கொண்டான்.   உறவினர்களான அவர்களை நல்ல முறையில் உபசரித்தான்.

இதற்கிடையில் சில விஷமிகள் விஜயமல்லனின் மனதை கலைத்தனர்.  கைக்கு கிடைத்த ராஜ்யம், யாருக்கோ கொடுத்து விட்டாய் என்பது போன்ற சொற்கள் விஜயமல்லனின் மனதிலும் சபலத்தை உண்டாக்கியது.  நீ தானே உத்கர்ஷனை ஜயித்தாய் என்றனர்.   கரைப்பார் கரைத்தால் என்பது போல அவன் மனமும் மாறியது. ஒருவரும் இல்லாத சமயம்  மூத்தவனை கொன்று விடுவதாக அவர்களுக்கு வாக்களித்தான். யாகம் என்ற காரணம் சொல்லி அரசனை அழைத்தான்.  இந்த ரகசிய ஆலோசனைகள் அரசன் ஹர்ஷனுக்கு தெரிய வந்தது.  அதனால் தன் அணுக்க சேவகர்கள், மெய்க் காப்பாளர்களிடம் கவனமாக இருக்கச் சொல்லி தேவையான ஏற்பாடுகளுடன் வரும் படியும் ஆணையிட்டான் 902

அரசனின் அணுக்க சேவகர்கள் படைகளை தயார் செய்து கொண்டிருந்த விவரம் விஜய மல்லனுக்கு தெரிய வந்தது. உடனே  குதிரைகளை லாயத்திலிருந்து ஓட்டிக் கொண்டு செல்ல தன் ஆட்களுக்கு உத்தரவிட்டான்.  குதிரைகள் காணாமல் போனதைக் கண்டு அரச சேவகர்கள் திகைத்தனர்.  விஜயமல்லனும் யாகத்தை அவசரமாக முடித்து தன் மனைவியுடன் ஊரை விட்டே வெளியேற கிளம்பினான். அதற்குள் அரச சேவகர்கள் அருகில் வந்து விட்டனர்.   குதிரையில் அமர்ந்தபடி  அரச சைன்யத்துடன் அமானுஷ்யமான பலத்துடன், வீரத்துடன் போரிட்டான்.   எதிர்பாராமல்,  மழை பொழியலாயிற்று. மழைக் காலமோ அல்ல, அப்படி யிருக்கையில், தாரையாக பொழிந்த  மழை.  பூமி அதனால் வெகுவாக பாதிக்கப் பட்டது.  பெரும் ஓசையுடன் காற்று வீசி அடித்து, அதுவே பேரி மிருதங்கம் வாசித்து மழைக்கு ஆதரவு அளிப்பது போல ஆயிற்று.  அம்புகள் ஒரு பக்கம், மழையின் தாரை ஒரு பக்கம் என்று அலைக்கழிக்கப் பட்ட விஜயமல்லன் போர்க் களத்தை விட்டு விலகவே நினைத்தான்.  முன் இவனுக்கு ஆதரவாக இருந்த சண்டகனுடைய புதல்வர்கள் அவனை கொல்லவே முயன்றனர் போல ஆக்ரோஷமாக போரிட்டனர்.

விதஸ்தா- சிந்து என்ற நதிகளின் சங்கமத்தில் அணையின் மேல்  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  மனைவியை தோளில் போட்டுக் கொண்டு விஜயமல்லன் நீந்தலானான். அதைக் கண்டு துரத்தி வந்த சைன்யத்து வீரர்கள் தங்கள் குதிரையுடன் நீரில் இறங்கி முன்னேறினர்.  அவர்கள் கண்ணில் படாமல் விஜய மல்லன் தரதர்கள் வசித்த  லாஹரா தேசம் நோக்கி வேகமாக நீந்தலானான். ஓரிடத்தில் கரையேறியவனை பழகிய அவனுடைய குதிரை வரவேற்பது போல அருகில் வந்து நின்றது. அதில் ஏறிக் கொண்டு வேகமாக செலுத்திக் கொண்டு கண்ணுக்குத் தெரியாமல் மறைந்தான்.   கந்தர்பன் எல்லைக் காவலன். கோட்டையின் வாசல்கள் பலமான பாதுக்காப்புடன் மூடப் பட்டிருந்தன.   தரதர்கள் வசித்த மலைப் பாங்கான இடம்.  அதன் மேல் சிரமப்பட்டு ஏறிக் கடந்தனர்.   தரத அரசன் வித்யாதர சாஹி அவனை வரவேற்றான்.  ஒரு சில அவனுக்கு ஆதரவான சிப்பாய்கள்  பின் தொடர்ந்து வந்து சேர்ந்து கொண்டனர்.  

இந்த நிகழ்ச்சிகள் ஹர்ஷ தேவனுக்கு கவலையை அளித்தது.  நம்பிக்கைக்கு பாத்திரமான விஜய மல்லனே எதிரியாவானா?  தாமர அரசில் அடைக்கலம் புகுந்து விட்ட விஜய மல்லன் அடுத்து என்ன செய்வான் என்று எப்படி ஊகிக்க முடியும். அதனால் ஹர்ஷனின் சிந்தனை வேறு விதமாக செயல் பட்டது.  போரை தவிர்த்து அந்த நாட்டுடன் நட்புடன் இருப்பதை விரும்பினான்.   பனிக்காலம் முடியும் வரை காத்திருக்கத் தான் வேண்டும். விஜய் மல்லனுக்கும் அதே பிரச்னை. உடனடியாக எதுவும் செய்ய முடியாமல் இயற்கையின்  மாற்றம்,  பனிப் பொழிவு கட்டிப் போட்டது.

ஆனால், பரிதாபமாக உயிரை விட்டான்.  தாமரர்களிடம் இருந்து ஆதரவுடன் படை பலமும் வருவதையறிந்து உத்சாகமாக  புறப்பட்டான்.  பனிப் பொழிவு நின்று, கோடை காலம் இன்னமும் வரவில்லை என்றாலும் சித்திரை மாதம் நல்ல பருவம் தான். காற்று வீசிக் கொண்டிருந்தாலும் பயப்படும்படியாக இல்லை.  வழியில் தங்கிய கூடாரத்தின் தண்டுகள் முறிந்து  அவன் மேல் விழுந்து  தூங்குபவனை மீளா உறக்கத்தில் ஆழ்த்தி விட்டன

தாமரைக் குளத்தில் மொட்டுகளாக நிரம்பியிருக்கும். ஸூரியனின் ஆயிரம் கிணங்களும் போட்டி போட்டுக் கொண்டு அவைகளை மலரச் செய்யும்.  அந்தோ பரிதாபம் ஒரு யானை வந்து குளத்தில் இறங்கி ஒற்றைத் துதிக்கையால் அனைத்தையும் அழித்து விடுகிறது.  அது போல ஆபத்து எங்கிருந்து வரும் என்பது முன் கூட்டியா தெரியும்.

 உடனடியாக அபாயம் இல்லை என்று நிம்மதி  அடைய விடாமல்  ஏதோ ஒரு உள் நாட்டுக் கலகம் ஆங்காங்கு தோன்றிக் கொண்டே இருந்தன.  இதற்குள் ஹர்ஷனும் ராஜ்ய நிர்வாகத்தில் தேர்ச்சி பெற்றவனாக ஆனான்.  அனுபவங்களே பாடமாயின.  அரசன், அருகில் உள்ளவர்களிடம் கூட ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதை அவர்கள் அறிய விடக் கூடாது என்பது முதல் பாடம்.  சிறிய உத்யோகஸ்தர்கள் என்று எவரையும் கண் காணிக்காமல் விடக் கூடாது. இரண்டாவது பாடம்.   அரசனாக அதிகாரம் செய்தாலும், தெரியும் படியாக அந்த அதிகாரம் அளவு மீற விடக் கூடாது.   இயல்பாக எளிமையானவன். ஆபரணங்களோ, பகட்டான ஆடைகளோ கூட இல்லை.  கண்டவுடன் பொறாமை கொள்ளும் படியான எந்த பேச்சோ, தோரணையோ இல்லை. இருந்தாலும்  நாட்டு மக்களிடம் கவனமாகவே இருந்தான்.  காடுகளில் வசந்தம் மலர்களை மலரச் செய்வது போல்  பின்னின்று செய்தே தன் ஆட்சியை நிலையாக வைத்துக் கொள்ளத் தெரிந்து கொண்டான்.

அரசனைத் தவிர நாட்டு மக்கள் கேசத்தை விரித்தபடி சுற்றுவர்.  தலைப்பாகையும் கட்டாயம் இல்லை. ஆனால் பதவியில் இருப்பவர்கள் அலங்காரமாக உடை அணிவது வழக்கம்.  பள பளப்பான  இடைக் கச்சுகள், வண்ண மயமான தலைப் பாகைகள்,   அலங்காரமான உடைகள், காலணிகள் இவைகளால் மதிப்பு என்று இருந்த  நிலை மாறியது. அரசனே எளிய உடையில் விரித்த கேசமும், பொன் ஆபரணமோ இன்றி இருந்தால், அவர்களும் மாற வேண்டிவந்தது.  அரசனே அரச அதிகாரி என்பதற்கான உடைகளையும் பரிந்துரைத்து விட்டான்.  மனித மனம் அலங்காரத்தை விரும்புவது. சில மந்திரிகளுக்கு ஏமாற்றமாக கூட இருந்தது.   சேனைத் தலைவன் மதனன், முக்ய மந்திரி ஜயானந்தா பிரகாசமான உடை அதற்கு இணையான மேலாடை என்று கவனமாக விரும்பி அணிபவர்கள்.  ஆடை அதிகாரத்தின் அடையாளம் என நினைப்பவர்கள் உலகில் நிறைய உண்டு.  அனைவருக்கும் பொதுவான ஆடை என்பது ஏற்கத் தக்கதாக இல்லை.

தங்கள் தோற்றத்தில் கர்வம் கொண்ட சிலர் உயர்தரமான ஆடைகளால் மேலும் கவர்ச்சிகரமாக இருப்பதாக நம்பியவர்கள்  அரசனுக்கு பொறாமை என்று கூட நினைத்தனர்.   அரசனோ, பொறாமை ஏன் கொள்கிறான்.  பாராட்டினான்.  பெண் பணியாளர்களைக் கொண்டு ஆரத்தி எடுக்கச் செய்தான்.  (ஆரத்தி என்று சிறு விளக்கை ஏற்றி நிரில் வைத்து திருமணங்களில், உத்சவங்களில்  சம்பந்தப்பட்டவர்  மேல்  கண் த்ருஷ்டி -கண்ணேறு என்பர் – பட்டு விடாமல் தடுக்கும் என்பது ஒரு கருத்து.)  தென்னாட்டில்  கர்ணாடக தேசத்தைச் சுற்றி உள்ள இடங்களில்  பரவலாக உள்ள வழக்கம் என்று கவி சொல்கிறார் –   926

(நாட்டின் தென் பகுதி விந்திய மலைக்கு அப்பால் கர்ணாட என்று குறிப்பிடப் படுகிறது – ஆந்திர, கர்ணாட கேரளா லாட என்ற கோவா வரை உள்ள தேசங்கள் என்று சிலருடைய யாத்திரைகளை  சொல்லும் பொழுது ஓரிரு முறை குறிப்பிட்டிருப்பதைத் தவிர அதிக செய்திகள் இல்லை)

கர்ணாட அரசின் நாணயங்களைப் போல நாணயங்கள் செய்து புழக்கத்தில் விட்டான்.   அரச சபையினரின் உடைகள் கர்ணாடக அரச சபையினரைப் போல அமைத்தானாம்.  தாள மரத்தின் இலைகள் வடிவத்தில் இடை கச்சுகளில் அலங்கரிக்கப் பட்டு, அவைகளில் வாளை உறையுடன் செருகிக் கொண்டு, அடர்ந்த சந்தன பூச்சுகளுடன் வலிமையான தேகத்தினராக, அடர்ந்தகேசத்தைச் சுற்றி தலைப்பாகை அதன் மேல், பொன்னாலான தாழம்பு பத்ரங்கள்- மடல்கள்,  காதின் பின்னும், கழுத்தின் மேலும் இருந்த கேசத்தின் சுருள்கள் அல்லது பின்னலிட்ட கேச நுனிகளில்  மிகச் சிறிய குஞ்சலங்களால் அலங்கரித்திருந்தனர். மணம் நிறைந்த மலர்கள் தொடுத்த நீண்ட மாலைகளுடன், நெற்றியில் திலகங்கள்,  அஞ்சனம் பூசிய கண்கள், மெல்லிய பொன்னால் நெய்யப்பட்ட நூலால் உபவீதம்  எனும் பூணூல்,     இடையிலிருந்து பாதங்கள் வரை நீண்ட   ஆடைகள் தரையைத் தொட்டன.  மேலாடையாக  தோள். புஜங்கள் வழியாக கைகளின் மேல்  மார்புகளின் வளைவுகள் வழி இடை வரை  வேலைப்பாடுகளுடன் கூடிய  கஞ்சுகம் என்ற ஆடை  – அதிகாரிகளும் மற்றவர்களும்  விரும்பி அணிந்து மகிழ்ச்சியாக இருந்ததை அவர்களின் மலர்ந்த முகமே சொல்லியது.  கர்ப்பூரம் போன்ற வெண்மையான மென் சிரிப்பு.   ஆடவர்களின் ஆடை மோகம் ஒரு பக்கம் இதனால் நிறைவேறியது என்றால், பெண்களின் பார்வைகளை – அவர்கள் தங்கள் புருவ அசைப்பால் அதை ரசித்து பாராட்டியது போல  விரும்பி கவனிக்கச் செய்தது அவர்களுக்கு மேலும் மன நிறைவை அளித்தது.

அரச சபையில் பணி செய்ய விண்ணப்பம் அளித்த அனைவருமே தகுதிக்கு ஏற்ப பதவிகளைப் பெற்றனர்.  கடலும் மேகமும்  ஒருவருக்கொருவர் உறு துணையாக ஆவது போல. கடல் நீரால் மேகம் உண்டாவதும், பின் மேகம் மழையாக பொழிந்து உலகை வாழ வைப்பதும் போல என்று உவமை. இருவருக்கும் இடையில் உள்ள பிணைப்பு அரசனுக்கும், மக்களுக்கும் இடையில் இருப்பது சொல்லப் படுகிறது.  பாடகர்கள், இசை கலைஞர்களுக்கு வாரி வழங்கினான். அவர்களே எதிர் பாராத அளவு  பொற்காசுகள் பெற்றனர்.  அதனால் அவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து அரசவையில் பாடியும், வாத்யங்கள் வாசித்தும் மகிழ்ச்சியாக இருந்தனர்.

அரசனே மெத்த கற்றவன். கவி பாடும் இயல்புடையவன். ஆதலால் கவி பாடுபவரும் கல்வி கற்றவர்களும் மதிக்கப் பட்டனர்.  நல்ல வெகுமதிகள், கவிகளுள் ரத்தினம் போன்றவன், அவர்களுக்கும் உயர் மணிகளே பரிசளித்தான். அவர்களும் குதிரைகள் பூட்டிய வாகனங்கள், பல்லக்குகளில் பிரயாணம் செய்வது, குடைகள் என அரசனுக்கு இணையான செல்வாக்கோடு வாழ வகை செய்தான்

கலசனின் காலத்தில் காஸ்மீர தேசத்தை விட்டு வெளியேறிய பில்ஹனா -Bilhaana-  என்ற கவி கர்ணாடக அரசனிடம் தஞ்சம் அடைந்திருந்தார்.  பர்மாடி என்ற கர்ணாடக அரசன், அவருக்கு வித்யாபதி என்ற பட்டம் கொடுத்து கௌரவித்து இருந்தான். அவர் மட்டுமே அரசனுடைய நகர் வலத்தில் யானை மீது தன் குடையுடன் அமர்ந்து உடன்  செல்ல அனுமதிக்கப் பட்டிருந்தார்.   அவர்களும் ஹர்ஷ தேவனின் அறிவையும், உயர் கல்வி கற்ற அறிஞர்களுக்கு அளித்த கௌரவத்தையும் அறிந்த பொழுது வியந்து பாராட்டினர்.  சுகவி பாந்தவான்- நல்ல கவிகளுக்கு பந்து வானவன் என்று புகழ்ந்தனர்.  அரசனே கல்பதரு போல கொடுப்பவனாக இருக்கையில், உபவனங்களில் தனியாக கல்ப தரு எதற்கு?  பொன்னாலான்  நெல்லிக் கனிகள் நிரம்பி இருந்த ( திருமகளின் அருள் பார்வையை கனக தாரா என்று சொல்வது வழக்கம்)  ராஜதானியில், அந்த அரசனின் மாளிகைகள் வானளாவி நின்றனவாம். உலகத்திலேயே அதிசயமான காட்சியாக அந்த ராஜதானி- தலை நகரம் பெயர் பெற்று இருந்தது.  பலவிதமான குறையாத நீர் வளம், என்றும் நிரம்பியிருக்கும் குளங்களும் ஏரிகளும், பறவைகளும், மிருக ஜாதிகளும் பயன் பெறும் படி, நீர் நிறைந்த பம்பா என்ற சரோவரம்- பெயர் பெற்ற பரந்த நீர் நிலையை தோற்றுவித்த அரசன்.  வாசஸ்பதி என்றே பெயர் பெற்றிருந்த அரசன். கல்வி, கேள்விகளும், எந்த அளவு வித்யா – கல்வியின் பல பிரிவுகளில் உண்டோ, அணைத்தும் அந்த ராஜ்யத்தில் ஆதரவு பெற்றன.  சிறிய விவரமானாலும் அதை தானே தெரிந்து கொண்டு விடும் திறமையுடைய அரசன் என்றும்,  அதை விவரித்து சொல்ல சொற்களே இல்லை எனும் அளவு பரந்த அறிவுடையவன். அவனே வாசஸ்பதி – என்ற கல்விக்கு அதிகாரியான தேவன்.  (சொல்லின் செல்வன் என்று அனுமனுக்கு பெயர் தேவி சீதையினால் கொடுக்கப் பட்டது ஸ்ரீமத் ராமாயணத்தில் சொல்லப் படுகிறது. வாசா தர்மம் அவாப்னுஹி वाचा धर्मं अवाप्नुहि– உன் சொல்லால் தர்மம் தழைக்கட்டும், உன் சொல்லால் புகழ் பெறுவாய் என்று பல பொருள்கள் சொல்வதுண்டு)

தானே இயற்றிய பாடல்களை அரசன் பாடுவதைக் கேட்டு கவிதைகளை இயற்றும் வல்லமை பெற்ற பலரும் வியந்து பாராட்டினர். எதிரிகளே ஆனாலும் அந்த கீதத்தைக் கேட்டு கண்களில் நீர் துளிர்க்க ரசிப்பர்.  தூங்கும் நேரம் மிக குறைவு. இரவில் ஒரு யாமங்களே உறக்கம்.  பின் இரவு வரை விவாதங்களும், கலை என்பதன் அனைத்து பிரிவுகளிலும் தேர்ந்த கலைஞர்களுடன் கலந்துரையாடலும், அவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளும், ஆடலும் பாடலுமாக  அரசனுடைய அரண்மனை கோலாகலமாக இருக்கும். ஆயிரக்கணக்கான விளக்குகளால் சபை ஜோதி மயமாக இருக்கும்.

அதன் முடிவில், தாம்பூலங்கள் மெல்வதால் வரும் ஓசையும், பெண்கள் தலையில் மலர்களுடன்   பாரிஜாதம் மலர்களின் மணமும் அந்த சபையை நிறைக்கும். (शेफाली- பவழ மல்லி – பின் இரவில், இதோ விடியப் போகிறது என்ற சமயத்தில் மலர்ந்து மணம் பரப்பும். இந்த மலரைக் குறித்துச் சொன்னதால் நேரம் சொல்லப் படுகிறது)

மேகம் திரண்டு வருவது போன்ற அரசனின் பரிவாரங்கள்,  ஜுவாலையாக தெரியும் வரிசையாக வைக்கப் பட்ட கை விளக்குகள், பொன்னாலான செங்கோல்கள் மின்னல் போல பளபளக்கும், அவற்றை வீரர்கள் சுழற்றிக் கொண்டு முன் செல்வர். தீயின் ஜுவாலையும், புகையுமாக தெரியும்.   அந்த:புர பெண்கள் அப்சரச -தேவர்களுக்கும் மனிதர்களுக்கும் இடைப்பட்ட ஒரு படைப்பு என்பர். தேவலோகத்தில் உலவும் பெண்கள்.  போல இருப்பர். மந்திரிகள் ஒளிம் வீசும் தாரகைகள் போல,  ரிஷிகள் கூட்டமே இணைந்தது போல கல்வி கற்ற அனுபவம் மிக்க பெரியவர்கள், கந்தவர்கள் போல அரச பாடகர்கள், தனதன்- யமன் இருவரும் நிரந்தரமாக அந்த நாட்டில் குடியிருந்தனர் போலும்.  செல்வத்தை அளிப்பதில் தனதன்,  தன்னைப் போன்றே  செல்வ செழிப்புடன் வாழ்க்கைத் தரம்,  தானம் அளிப்பதில், அதே சமயம் பயம் – தவறு செய்வதில் பயம், கட்டுபாடுகள், தவிர  நீதி  நியமங்களை காப்பதில் யமன் போன்று உறுதியான நிலைப்பாடு  என்று இருந்தனவாம்.

அரச சபை இரவு நேரங்களில் இந்திரனின் சபையை தோற்கடிக்கும். முழுமையாக வர்ணிக்க ப்ரும்ம தேவனே வர வேண்டும் என்று கவி கல்ஹணன் சொல்கிறார்.  

வெள்ளி, தங்கம் இவைகளால் ஆன நாணயங்கள் வியாபாரங்களில் செலாவணியாக பயன்பட்டன.  சற்று மதிப்பு குறைந்த பொருட்கள் தாமிர நாணயங்கள் கொண்டு பரிமாறிக் கொள்ளப் பட்டன.  சுன்ன என்ற அரச உறவினன் தண்டிக்கும் அதிகாரம் பெற்றவனாக மந்திரி மண்டலத்தில் இருந்தான். குற்றங்களை தவிர்க்கவும், குற்றவாளியகளைத் தண்டிக்கவும் அவன் பொறுப்பாக நல் மதிப்பைப் பெற்றான்.  அந்த நாட்டில் பெருமளவில் பேராசை உள்ளவனே எவருமில்லை.  பற்றாக்குறை இருந்தால் தானே மற்றவன் பொருளையும் அபகரிக்கத் தோன்றும்.

தன் ஊரான ஜய வனத்தில், ஸூர்யாமூலகம் என்ற இடத்திலும், விஜயேஸ்வர என்ற இடத்திலும்  இருந்த மடங்களின் நிர்வாகம் நாளடவில் ஒழுங்கு குறைந்து ஒரு சிலரால், தங்கள் அறியாமை அல்லது சுயதேவைகளுக்காக செலவழித்து விட்டு. பொது மக்களுக்கு, ஏழைகளிடம் கஞ்சத்தனம் – குறைவாக கொடுப்பது, அல்லது எதுவுமே தராமல் விரட்டுவது என்பது நடை முறையாகி விட்டிருந்தது..

பசி, வியாதி, அனாதைகள் இவர்களுக்கு நிவாரணமாக தாராளமான பொருள் வசதிகளுடன் நிரந்தர காணிக்கைகளுடன்  நிறுவப்பட்டவையே  செயல் திறன் இல்லாத, தன்னலமே பெரிதாக நினத்த லோபிகள் கையில் அகப்பட்டு இந்த நிலைக்கு வந்து விட்டன என அறிந்த சுன்னன்,  அங்கு உதவி பெற வேண்டுவோர் தாங்களே நேரடியாக பெற அதிகார பத்திரங்கள் வழங்கி, மேலும் தேவையானவற்றை முறைபடுத்தினான். அதனால் உள் இருந்து சுரண்டுவது முடியாமல் போயிற்று. 953 நந்திகேஸ்வரா என்ற இடத்தில், சம்பகா என்பவனும் ஆண்டில் ஏழு நாட்களே அந்த க்ஷேத்திரத்தில் இருப்பான்.  வந்த சமயம்,ஆண்டு முழுவதுக்குமான தன் ஊதியத்துடன்,  முடிந்தவரை தனக்கு லாபமான  விதத்தில் ஏதோ செய்து தன் செல்வத்தை பெருக்கிக் கொள்வதே கவனமாக இருந்து வந்திருக்கிறான்.

ஹர்ஷ தேவன், அந்தணர்களுக்கு கன்றுடன் பசுக்களையும், கரு நிற மான் தோல் போன்ற அவர்களுக்கு தேவையானதையும் மற்ற தன தானியங்களோடு கொடுத்து, அவர்கள் வசதியாக இருக்கச் செய்தான். அந்தணர்களில் வறுமையால் வாடுபவர் இல்லாமல் செய்து விட்டான்.

வசந்தலேகா என்ற ராணி சாஹி வம்சத்தில் வந்தவள், பல மடாலயங்களையும், அக்ரஹாரங்களையும் ஸ்ரீ நகரத்தில் நிறுவினாள்.  பவித்திரமன த்ரிலோகேஸ்வர சன்னிதியிலும் அதே போல பல வசதிகளை செய்து கொடுத்தாள்.  மஹேஸ்வர பக்தி தான் பிரதானமாக அந்த அரசன் இருந்தான் என்று  சொல்ல முடியாத படி சமூக நலங்களுக்காக அதற்கு மேலும் பல காரியங்கள், பலவகையில் முன்னேற்றம் ஏற்படும் படி அரசனாக ஹர்ஷ தேவன் செய்திருக்கிறான்.  

பழைய மந்திரிகள் அரசனுக்கு ஆதரவாக, அவனைப் போலவே தன்னலமின்றி நாட்டு நலனையே பெரிதாக எண்ணியிருந்தவர்கள் ஒவ்வொருவராக கால கதி அடையவும் புதிதாக வந்தவர்கள் அந்த அளவுக்கு அரசனுடன் ஒத்துப் போகவில்லை.  மயிலின் கால்கள் வளைந்து குஷ்ட ரோகத்தால் பாதிக்கப் பட்டது போல இருந்தாலும், பறந்து சென்று ஓடும் பாம்பை, அதன் எண்னற்ற கால்களைக் கொண்டு வேகமாக சென்றாலும் பிடித்து விடும். விழுங்கும் என்பர்.  சஹஸ்ர கிரணன் என்று ஸூரியனின் பெயர். அவனுடைய அருணன் என்ற சாரதிக்கு இடுப்பு வரை தான் சரீரமே.  அவன் தான் முன்  இருந்து ஸுரியனின் கதியை நிர்ணயிக்கிறான்.  (அருணனுக்கு அனூறு अनूरु – ऊरु – தொடை- அதுவே இல்லாதவன் என ஒரு பெயர்.  அமர்ந்த  நிலையில் ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்தை  ஓட்டுபவன்.  வஞ்சகமாக அதிக உடல் பலம் இல்லாதவன், பலசாலிகளை கூட சிலசமயம் ஜயித்து விடுகிறான்.  திறமை இல்லாதவன் முழு பலனையும் அடைந்து வளைய வருகிறான்.  இவை அணைத்தும் எந்த அடிப்படையில் நடை பெறுகிறது, எப்படி என்று யார் சொல்ல முடியும்? தெய்வ செயல் என்று சொல்வோம். 959

இந்த அளவு அறிவும், ஆற்றலும் உடையவன் இப்படி செய்வான் என்று யார் தான் எதிர்பார்த்திருப்பர். தந்தையிடம் இருந்த கோபம் அடங்கவே இல்லை. இடையில் துர் மந்திரிகள் ஒரு சிறிய பிளவை பெரிதாக்கி இருவருக்கிடையில் பூசலை கிளப்பினர் என்பதை ஊகிக்க முடியாதவனா?  பாபசேனன் என்று லோபியான தந்தையை அழைத்தான். செலவழிக்காமல் சேமித்து வைத்திருந்த பொக்கிஷங்களை தன் விருப்பம் போல செலவழித்தான்.  ராஜதானி என்று பெயரிட்டு அவன் நிர்மாணித்திருந்த மடாலயங்களை கூட அழித்தான்.  அந்த:புரத்தில் இருந்த முன்னூற்று அறுபதுக்கும் மேற்பட்ட பெண்களை சந்தேகித்தான்.  இவர்கள் அனைவருமே நல்ல நடத்தையுள்ளவர்களே.  அவர்களுக்கு விருப்பமில்லாத  டோம்ப, சண்டாள பெண்களை கொண்டு வந்து சேர்த்தான், குலஸ்த்ரீகள் அந்த கீழ் மட்ட பெண்களை தங்களுடன் இருப்பதை விரும்பவில்லை என்பதை அறிந்தும் பழி வாங்குவது போல செய்தானாம்.

புவனராஜா லோஹரா தேசத்தை தான்  திரும்பப் பெறுவது பற்றி யோசிக்கலானான்.  தர்பித புரம் என்ற இடத்தில் எல்லை காவலில் இருந்த கந்தர்ப்பனை சந்தித்து  தனக்கு ஆதரவு தேடச் சென்றான்.  கந்தர்பன் தனக்கு எதிராக படை திரட்டுகிறான் என்பது தெரிந்தவுடன் தலை மறைவாகி விட்டான்.  காரணமின்றி அந்த ராஜபுரியை பாலித்த சங்க்ராம்பாலன் இவர்களின் திட்டத்தை அறிந்தவன் போல எதிர்த்தான்.  கந்தர்பன் சமாதானமாக போக விரும்பி படை வீரர்களுக்குள் இருந்த இரு விதமான மன நிலையை ஊகித்து அவர்களிடம் பேசி சமரசம் செய்து கொண்டிருந்தான்.  அதற்குள் அரசன் ராஜபுரி அரசனிடம் இருந்த  மன வேற்றுமை காரணமாக பெரும் படையுடன் சேனைத் தலைவனை அனுப்பி விட்டான்.  968

பெரும் படையுடன் லோஹார எல்லை வரை வந்தவன் ஏதோ யோசித்தபடி ஒன்றரை மாதம் முற்றுகையைத் தவிர்த்தான்.  விரோதிகளின் பலம் அறிந்து  பயந்தானா, இந்த படையெடுப்பே தேவையற்றது தேவையற்றது என நினத்தானா, இதற்குள் ஆஷாட மாதம் வந்து விட்டது.  எந்த நேரமும் மழை வரலாம்.  அரசன் உத்தரவு என்று கிளம்பி வந்தவன் அதற்கு மேல் எதுவும்  முன்னேறாமல் இருந்ததை அறிந்த ஹர்ஷதேவன் கந்தர்பனிடம் வெகுண்டான்.  அவன் தான் தடுத்து நிறுத்தி இருப்பான் என்ற சந்தேகம்.

சம்பந்தமில்லாமல் தன்னை இந்த பிரச்னையில் ஈடுபடுத்தி, குற்றம் சொன்னதை கந்தர்பன் அறிந்தான்.  இந்த பழியை பொறுக்க மாட்டாமல்,   ராஜபுரியை வெற்றி கொள்ளும் வரை உண்ணா விரதம் என்று அறிவித்து விட்டு தன் படையுடன் ராஜபுரியை முற்றுகையிட்டான்.  போர் புரிய சாதனங்களும் இல்லை, சரியான பயிற்சியும் இல்லாத வீரர்கள், மலைப் பாங்கான ராஜபுரி, அதன் அடியில் ஆறாவது நாள் தங்கினர். இன்னம் ஒரு யோஜனை தூரமே ராஜபுரி என்ற நிலையில்,  அவன்  படை வீரர்கள் தயங்கினர். தானே கிளம்பினான்.  வாழை மரக் காட்டை துவம்சம் செய்த படி செல்லும் சிங்கம் போல என்று உவமை. (யானை போல என்று சொல்வது வழக்கம். சிங்கத்துக்கு வாழை மரம் எம்மாத்திரம்- எதிரி பலம் அவ்வளவே என எடுத்துக் கொள்ளலாம்)  காவல் தலைவனாக இருந்த புத்தராஜா  வம்சத்தில் வந்த குலராஜா என்பவன்  மட்டுமே உடன் வந்தான்.   ஆகாரம் இன்றி இருந்த கந்தர்பன்  வெளிக் காவலில் இருந்தவர்களை அடித்து நொறுக்கி விட்டு   இருபது முப்பது வீரர்கள் மட்டுமே தொடர  ராஜபுரியின் அரண்மனைக்குள் சென்று விட்டான். வெண் கொற்றக் கொடியால் மட்டுமே அவனை அடையாளம் தெரிந்து கொண்டனர்.   ஹர்ஷனின்  சேனாபதியுடன் வந்திருந்த  முப்பதாயிரம் ஆயுதம் தாங்கிய வீரர்களை ராஜ புரியின் முன்னூறு காலாட்படையினரே தடுத்து நிறுத்தி விட்டனர்.

அந்த போரில் இறந்த காஸ்மீர வாசிகள் இருனூறு பேர். காசா खशा- என்ற பிரிவினர் நானூறு பேர்.  எதிரி பலம் தோற்றதாக அறிவித்து விட்டு அனைவருக்கும் ஒரே இடத்தில் தகனம் – அந்திம சமஸ்காரம்  மறைந்தவர்களுக்கான நீர் கடன்கள் –   ம்ருத்யு- மரணமே தண்டவமாடுவது போல இருந்ததாம். எந்த காரணமும் இன்றி, நேர்மையாக உழைத்த தன்னை தவறாக குற்றம் சொன்ன அரசனின் அலட்சியம் என்ற வேதாளம் ஆட்கொள்ள,  மனம் நொந்து எண்ணற்ற உயிர்கள் வீணானதாக கந்தர்பன்  பெரும் வேதனைக்கு உள்ளானான். சுத்த வீரன். 

ஒரு யாமம் தான் சென்றிருக்கும்.  ராஜபுரி சேனை கந்தர்பனை தாக்க வந்து விட்டனர்.  தோல்வியை ஏற்க மாட்டாத ராஜபுதன வீரர்கள்.  கந்தர்பனின் எண்ணெயில் தோய்த்து எடுத்த அம்புகள் விழுந்த இடத்தில் பற்றிக் கொண்டன. ஆக்னேய அஸ்திரம் என்று பயந்த அந்த வீரர்கள் திரும்ப போருக்கு அழைத்த தங்களையே நொந்து கொண்டு திரும்பி பாராமல் ஓடினர்.

‘தைரியம், உறுதியான கொள்கை, சமயோசிதமான அறிவு, வேகம், திறமை , தான் செய்யும் செயலை முற்றிலும் அறிந்து செய்தல், பலா பலன்களை முன் கூட்டியே தெரிந்து கொள்ளல், சந்தேகமே இல்லாத திட்டமிடுதல், இவைகள் அனுபவம் மிக்க அறிவும், தூய்மையான உள்ளமும் கொண்ட வீரர்களை  கை விடுவதில்லை.’

மாலை ஆதவன் அஸ்தமிக்கும் நேரம், ராஜதானிக்குள் நுழைந்தவன் மேலும் பல நூறு போர் வீரர்கள் தயாராக நிற்பதைக் கண்டான். எதிர் கொள்ள தானும் தன் ஆயுதங்களை எடுத்த சமயம் ஹர்ஷனின் தண்ட நாயகன்- சேனைத் தலைவன் தன் வீரர்களை உசுப்பி எழுப்பி அழைத்துக் கொண்டு வந்திருப்பதைக் கண்டான்.  கோரமான அந்த யுத்த களத்தைக் கண்ட வீரர்கள் ஸ்தம்பித்து நின்றிருந்தனர்.  போர் – இரு பக்கமும் நாசம் விளைவிப்பது. தன்னைச் சார்ந்தவர்கள் விழுந்ததைக் காணும் மக்கள், இரு விதமாகவும் பாதிக்கப் படுவர். சிலர் வீராவேசம் கொண்டு பதிலடி கொடுக்க முனைவர். மேலும் சிலர் பயம் அல்லது வெறுப்பு அல்லது விரக்தி அடைவர்.  மனிதனின் மனதில் எது எந்த நேரம் எப்படி வெளிப்படும் என்பதை யாரே அறிவார்?

குல ராஜா உள் நாட்டு காவல் தலைவன், போரை அறியாதவன், அவனும் நீரில் முழுகிய காகம் போல நடுங்கிக் கொண்டிருந்தான்.  அவனுக்கு குலராஜாவுடன் வந்த சிப்பாய்களின் மனப் பூர்வமான ஆதரவு மட்டுமே துணை. கண்ணுக்கு எட்டியவரை உதிரம் ஆறாக பெருக இருந்த போர்க் களம்.  வேற்று நாட்டில், சைன்யமும் உதவ இன்றி, தன்னாற்றல் மட்டுமே துணையாக, தொடர்ந்து போரிட்டான்.  தோற்றாலும் ராஜ புரி அரசன் கந்தர்பனின் ஆற்றலை சிலாகித்தான். அவனிடம் கப்பம் பெற்றுக் கொண்டு ஒரு மாதத்தில் தன் நாடு  திரும்பினான்.

ஹர்ஷன், வெற்றியுடன் வந்தவனை எதிர் கொண்டழைத்து, மரியாதைகள் செய்தான்.   

அடுத்து பரிகாசபுரத்தில் ஆனந்தன் என்பவன், முன் ஒரு சமயம் அதிகாரியாக இருந்தவன்.  வாமனன் என்பவன் பாதாக்ர என்ற இடத்தில் பொறுப்பாக இருந்தவனை நீக்கி விட்டு பதவிக்கு வந்தவன்.  . கந்தர்பனின் பதவிக்கு ஆசைப் பட்டான். கந்தர்பனின் விரோதிகளான சில மந்திரிகள், அரசு அதிகாரிகளின் உதவி அவனுக்கு இருந்தது. அவர்களுடைய தலையீட்டால் அரசனும் கந்தர்பனை லோஹாரா Lohara பிரதேசத்துக்கு மண்டலேஸ்வரன் என்ற பதவி கொடுத்து மாற்றி விட்டான். 996

நியாயமாக தன் பொறுப்பை நிர்வகித்தவன், அவனை யோசியாமல், இந்த வஞ்சகர்களின் சொல்லைக் கேட்டு அரசன் இந்த செயலை செய்து விட்டான்.  ஆனந்தன் முதலானோர் தங்களுடைய சுய நலம்  காரணமாக அரசனின் அருகில் இருந்து கந்தர்பனை விலக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் செய்ததை, அரசன் அறியாமல் போனான்.

‘சரியான சமயத்தில் சரியான வழி காட்டக்கூடிய வாக் வண்மை மிக்க ஒருவனை அந்த சுயனலமிகள் சொல்வார்கள், ‘இவன் பேசியே மற்ற அரசர்களை வளைத்து விடுவான்’ என்றோ,  இவன் கூர்மையான அறிவுடையவன் உங்களையே கவிழ்த்து விடுவான்’ என்றோ பல முறை சொன்னால்,  சுய அறிவில்லாத அரசர்கள் ஏனோ நம்புகிறார்கள்.  ஒரு நிலையில் அரச பதவி தரும் மமதை அவர்கள் தலைக்கு ஏறி விடுகிறது. தங்கள் அழிவுக்கு தாங்களே வழி வகுத்து விடுகிறார்கள்.’  ந்ருப பசு, ஆறாவது அறிவில்லாத அல்லது ஆறாவது அறிவை இழந்த அரசன் – என்று கவி சொல்கிறார்.

பல நாட்களாக கந்தர்பனுடன் பழகியவன், நலம் விரும்பியாக நெருங்கி இருந்தவன் என்பது கூட காலப் போக்கில் கை முஷ்டியில் மணலை அள்ளியது போல மறைந்து விட்டது.

அத்துடன் விடாமல், அந்த வஞ்சகர்கள், அங்கு போன பின் உத்கர்ஷனின் இரு புதல்வர்கள் அவனுக்கு நெருக்கமாகி விட்டனர். அவர்களுடன் லோஹாரா வின் ஏக போக உரிமையை பெற கந்தர்பன் திட்டமிடுகிறான் என்று மூட்டி விட்டனர்.  அரசனும், உடனே பட்டா என்பவனை படையுடன் அசிதரன் என்பவனையும் பெயர் பெற்ற டக்கா என்பவனையும் உத்கர்ஷனின் புதல்வர்களை சிறை பிடிக்கவோ, முடியவில்லை என்றால் கொன்று விடும்படி உத்தரவிட்டான்.

இந்த விவரம் கந்தர்பனுக்கு தெரிய வந்தது. எழுத்தர் திறமையாக அந்த செய்தியிலேயே மறை முகமாக தெரியப்படுத்தி இருந்தார். எழுத்துக்களை  மாற்றிப் போட்டு படித்தவுடன் உண்மை விவரம் தெரிந்து விட்டது.  மிகவும் வேதனையாக இருந்தது.  எதிரில் வந்து நின்றவனை விளையாட்டாக கையைப் பிடிப்பவன் போல் விரல்களை மடக்கிப் பிடித்து விடாமல் உண்மையைச் சொல் என வினவியவனிடம் வலி தாங்காமல் கிளி போல தான் கேட்டதை ஒப்பித்து விட்டான்.  அரசனாக செய்யவில்லை, அனந்தனின் அருகில் உள்ளவர்கள் போதனை, அரசன் என்னை அனுப்பி உள்ளான் என்று அனைத்தையும் உளறி விட்டான்.

கந்தர்பன் தன் வேதனையை மறைத்துக் கொண்டு’ நான் ராஜ்யத்து ஆசைப் படவில்லை. போய் சொல். என் குடும்பத்தை என்னிடம் கொண்டு வந்து ஒப்படை. நான் கோட்டையை  விட்டு காசிக்கு போகிறேன்’  என்றான். அதே போல அவனுடைய குடும்பத்தினரை அழைத்து வந்து ஒப்படைத்த பின் கந்த்ர்பன்  தன் அதிகாரங்களைத் துறந்து காசிக்கு பயணமானான். 1007   

காஸ்மீர மக்களுக்கு காசி வந்து மறைந்த குல மூத்தோர்களுக்கு ஸ்ரார்தம் என்ற நீர்க் கடன்களைச் செய்ய வரி வசூலிப்பது வழக்கமாகி விட்டிருந்து. முன்னால் இருந்த அரசர்கள் அதை நீக்கச் செய்திருந்தாலும், காலம் செல்லச் செல்ல அது இன்னமும் நடை முறையில் இருந்தது. கந்தர்பன்  முதல் வேலையாக அந்த திருட்டுக் கும்பலை கடினமான ஒரு பாதையில் கூட்டத்துடன் போரிட்டு அழித்தான். அந்த கும்பல் பொது வழியான அந்த பாதையை பொது மக்கள் பயன் படுத்த விடாமல் ஆக்ரமித்துக் கொண்டிருந்தனர்.  அந்த கூட்டத்தை அழித்ததால் ஊர் மக்கள் நிம்மதியாக பயன் படுத்தலாயினர்.  தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த உக்ரமான காட்டுப் புலியை அழித்து நிம்மதியைக் கொடுத்தவன் என்று மதிக்கலாயினர். அந்த இடங்களில் மடாலயங்கள் கட்டி மேலும் வசதிகள் செய்து கொடுத்தான். இந்த செயல்களால் வாரணாசியின் கிழக்கு பகுதியே பிரகாசம் அடைந்து விட்டது.

காஸ்மீரத்தில், கந்தர்ப்பனை பதவி நீக்கம் செய்யும் வரை இணைந்து இருந்த மந்திரிகள், அதன் பின் தங்களுக்குள் போட்டி போட்டுக் கொண்டு அரசாட்சியை சீரழித்தனர்.

செம்மறியாடுகள், தலையை சொரிந்து கொள்ள பாறைகளில் தலையை உரசிக் கொள்ளுமாம். அதுவே பின்னால் ரோகமாகி வருந்துமாம். அரசனின் கதி அது போல ஆகி விட்டது.  ஒரு சிலரின் சுய நலமான ஆலோசனைகள் என்பதை உணராமல் இந்த மந்திரிகளுக்கு இடம் கொடுத்ததே அரசனுக்கு தலைவலியாகி விட்டது. எண்ணி சில நாட்களில்,  அரச போகம், ஏராளமான உணவு, உடை என்று ஆடம்பரங்களில் திளைத்தவர்கள், மதம் தலைக்கேற தங்களுக்குள் அடித்துக் கொள்ளவும், எதிர்த்தவர்களை கொலை செய்யவும்  ஆரம்பித்தனர். அரசனின் கதி  நடுவில் அகப்பட்டுக் கொண்ட ஆடு கதையாகியது. ஒரு நிலையில் அரசனையே தீர்த்து கட்ட முயற்சித்தனர்.  ஒவ்வொருவரும் தாங்களே அரசனாக நினைத்து இப்படி போராடியதை அறிந்த தன்வங்கனின் மகன் தம்மடன்  அங்கு வந்தான்.

ஜயராஜனை தூண்டி விட்டான்.  என்னை பட்டத்து ராணியின் மகன் அல்ல, ஆசை நயகியின் மகன்  என்று விலக்கினார்கள். தற்சமயம் நல்ல வாய்ப்பு. அவனை கொன்று விட்டு நான் பட்டத்துக்கு வருவேன் என்று கிளம்பினான். ஏற்கனவே சபல சித்தம் உள்ளவன். எடுப்பார் கைப் பிள்ளையாக வளர்ந்தவன். ஆசை மட்டுமே – இந்த தூண்டுதல் கிடைக்கவும் தான் செய்வதே சரி என்று எண்ணத் தலைப் பட்டான்.  குறுக்கு வழி தான் அவன் அறிந்தது. அந்த:புரத்து பெண்களில் ஓரிருவரை சந்தித்து தன் பக்கம் உதவச் செய்தான்.  பில்வா என்ற கிராமத்தில் இருந்து ஒரு கொலைகாரனை அழைத்து வந்தான்.  இந்த ஏற்பாடுகளை செய்து விட்டு இதோ தான் அரசனாகி விடுவோம் என்று கனவு கண்டு மனக் கோட்டையில் மகிழ்ந்து இருந்தவனை உசுப்பி எழச் செய்தது, ஒரு பணியாள் கொண்டு வந்த செய்தி. தம்மடனுக்கு இந்த செய்திகளை தெரிவிக்க ஒரு தூதனை ராஜபுரிக்கு அனுப்பி இருந்தான்.  சஹஸ்ரமங்களா என்ற ராணியின் வீட்டில் நல்ல நாள் வரை தங்கியிருந்த ஜயராஜன், திடுமென தங்கள் திட்டம் தோல்வியடைந்ததை கேட்டு திகைத்தான்.  ஒரு உளவாளி இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்த விவரங்களை  மறைந்திருந்து கேட்டவன் பிரயாக ராஜனுக்கு தெரிவித்து விட்டான்.  உடனே செயலில் இறங்கி தம்மடனை எச்சரித்தவன்,  அரசனிடமும் தெரிவித்தான்.   தம்மடன் இனி தலையிட்டால், குடும்பத்தோடு அழிவோம் என்ற பயத்தால்  அடங்கி விட்டான். ஜயராஜன் மேலும் சில முயற்சிகள் செய்தான். அரசனின் காவலாளிகளுக்கு கண்டிப்பான உத்தரவு இடப் பட்டிருந்தது.  ஜயராஜன் ஊரை விட்டு வெளியேறவே முடியவில்லை.

பிரயாக ராஜா, தம்மடனை வரவழைத்து அரசனின் தனியறைக்கு அழைத்துச் சென்றான்.  அங்கிருந்து ஜயராஜனை அழைத்து வரச் சொல்லி உத்தரவு இட்டான். காவலாளிகள் ஜயராஜனை அழைத்து வந்து அறையில் நுழைந்த பொழுது தம்மடன் மட்டுமே இருந்தான். அவனுக்கு ரகசியமாக உத்தரவு வந்தது. ‘ஜயரானை சிறைப் படுத்து’  அரசனிடம் பிரயாக ராஜா ‘ இவர்களை பிரித்து விட்டு அல்லது ஒருவனை அழித்து விட்டால், அவர்களின் எதிகால நடவடிக்கைகளையும் தெரிந்து கொள்ளலாம் ‘என்று சொல்லி சம்மதம் வாங்கி இருந்தான். அரசன் உள் அறையில் இருந்தது தெரியாமல் இருவரும் உரையாடினர்.

அரசன்  தன்னை சந்தேகிக்கவில்லை, என்ற நம்பிக்கையுடன் தம்மடன் ஜயராஜனிடம் ‘அரசனுக்கு உன் மேல் சந்தேகம். அதனால் உன் வாளை என்னிடம் கொடு. ‘ என்றான். ஜயராஜன் வாள் வீச்சில் தேர்ந்தவன். தம்மடாவிடம் இருந்த நம்பிக்கையா, அவனுடைய முன் வினைப் பயனா, நம்பி வாளைத் துறந்தான். தம்மடனுடன் வந்த துல்லா என்ற மகன் திட்டலானான். ‘ கோழை நீ. கய்யா என்ற உன் தாய், அரசன் கலசனிடம் பெற்ற மகன் அல்ல நீ. ஏதோ ஒரு நாடோடி உன் தந்தை’  தூங்கிக் கொண்டிருந்தவன் மேல் பனிக் கட்டிகள் விழுந்தது போல ஜயராஜன் விழித்துக் கொண்டான்.   விசாரனையின் பொழுது என்ன தோன்றியதோ தம்மடனை காட்டிக் கொடுக்கவில்லை.

சிறைப்பட்டவனை சில நாட்கள் சென்ற பின் தூக்கில் இட்டனர். அவன் உடலை துண்டுகளாக ஒரு பட்டாரதவலா என்ற ஓடையில் வீசினர்.  1095 AC

எழுபத்து ஓராம் ஆண்டு, பாத்ர பத- புரட்டாசி  மாதத்தில்,   தம்மடனை மட்டும் விட்டு வைப்பானேன் என்று அரசன் நினைத்தான்.  லோஹாரா வாசியான, கலச ராஜா என்றே பெயர் கொண்ட தாக்குரன், என்பவனை தொடர்பு கொண்டான்.  பிரயாக ராஜா  தன்னுடைய அந்தரங்க பணியாளனையே அனுப்பச் சொன்னான். இடையில் தடங்கல் வரலாம் என்று சந்ததேகப்பட்டான். அரசன் தயங்கியதையும், கோபம் கொண்தையும் அறிந்து சமாதானமாக  அரசனிடமே சொன்னான்.’ இந்த செயலால் பலவித தவறான விளைவுகள் ஏற்படலாம். மந்திரி சபையின் ஒப்புதலோடு செய்வோம்’ என்றான். மந்திர ஆலோசனை முடிந்து, மற்றவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே, வாமனன்  எழுந்து மூடியிருந்த கதவில் சாய்ந்து  நின்றபடி, ‘இந்த திட்டம் இந்த அறையை விட்டு வெளியே விடக் கூடாது. எந்த அளவு ரகஸ்யமாக துரிதமாக செய்கிறோமோ அதில் தான்  நமக்கு நன்மை ‘ என்றான்.

அரசனின் ஆணைப்படி பிரயாக ராஜா கலச ராஜனை இரு புதல்வர்களுடன் வரவழைத்தான். 1045

தூதுவர்கள் வேகமாக சென்றனர். கலசராஜனின் ஒரு மகன் கழுகுகளை (falcon) வளர்ப்பதை தன்  பொழுது போக்காக கொண்டவன் உள் அறையில் தன் நண்பர்களுடன் இருந்தான்.  தூதுவர்கள்  முதலில் கலச ராஜனுடன் பேசிவிட்டு பின், புதல்வர்களை சந்தித்தனர்.  அவர்கள் அவனம்பிக்கையுடன் சில விவரங்களைக் கேட்டனர்.  தூதுவர்கள்  பதில் சொன்னார்கள்:  ‘தம்மடன் நலமாக இருந்தால்  வாள் ஏந்தவும்  அவரால்  முடியுமே என்றனர்.  அதை சொல்லி முடிக்கும் முன் அவனுடன் இருந்த நண்பர்கள்  விலகி சென்று விட்டிருந்தனர்.    ஓ தம்மடா, உன் வாள் பயனில்லாமல் போவதா’ என்றான் கலச ராஜா.  கண் மூடி திறக்கும் முன் மூவரும் அடிபட்டு விழுந்தனர். கலச ராஜனின் மூத்த மகன் அடிபட்டாலும் உயிருடன் இருந்தான்.  அவன் தன் வாளை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.  தரம் இல்லாத ஆயுதம் அது பயனளிக்கவில்லை. அவனை மேல் மாடியிலிருந்து தள்ளி விட்டனர்.  தன்வங்கனின் மற்ற பேரன்கள், ரல்ஹன, சல்ஹன என்பவர்கள் தாங்களாக வந்து வாளையும் மற்ற ஆயுதங்களையும் அரசவையில்  கீழே வைத்து சரணடைந்தனர்.  அரசன் அவர்களை அடைக்கலமாக ஏற்றுக் கொண்டான்.

 Tullaa- துல்லா என்பவனும் அவன் உடன் வந்தவர்களையும் விஜய சிம்ஹன் ஏதோ பொய் காரணம் சொல்லி அழைத்து வந்திருந்தான்.  நீங்கள் என் மகன் கள் போலவே என்று அன்பொழுக பேசியவன்,  உண்மை காரணத்தை மறைத்து விட்டான்.  அவனை நம்புவதற்கில்லை என்று தெரிந்ததும் அவர்கள் அரசனிடமே வந்தனர்.  அரச சபையில் ஒருவர் உங்கள் ஆயுதங்களை அரசரின் முன்னால் வைத்து விட்டு அருகில் செல்லுங்கள் என்றனர்.   அது கையில் இருந்தால்  காவலர்களால் தாக்கப் படுவீர்கள் என்று எச்சரித்தார்.  அதனால் அரசன் முன் வந்ததும் தங்கள் ஆயுதங்களை கீழே வைத்து விட்டு வணங்கினர்.  அங்கு இருந்த டுல்லன் என்பவன் குடை பிடிப்பவன், குழந்தை பருவத்திலிருந்தே அரண்மனையில் தம்மடனின் கீழ் ஏதோ ஒரு பணியை செய்து கொண்டு வாழ்ந்தவன், அவர்களைப் பார்த்து சிரித்தான்.

நீங்கள் அன்று ஜயராஜனை பார்த்து என்ன சொன்னீர்கள்? நீ கய்யாவின் புதல்வன், கலசராஜவின் மகன் அல்ல என்று சொன்னீர்களே.  உங்களுக்கும் அதே நிலை தான் வந்திருக்கிறது.  உடல் வலிமை இருக்கும் பொழுது, கையில் ஆயுதமும் இருக்கையில் வீரத்தை காட்ட வேண்டியது தானே என சீண்டினான்.  துல்லா அவனை பதிலுக்கு கடுமையாக திட்டி விட்டு, என்ன நினைத்தாய், உன் வேலையைப் பார். நாங்கள் திறமையான தந்தைக்கு பிறந்தவர்கள் தான், எங்களுக்குத் தெரியும் என்று சொல்லி நகர்ந்தனர். புத்தி சொல்ல வந்து விட்டான். அறிவிலி என்று சொல்லி விட்டு  தங்கள் ஆயுதங்களை நீரால் சுத்தம் செய்வது போல போல வாளின் நுனியால் நீரைத் தொட்டு அவைகளின் மேல் தெளித்து விட்டு அவைகளை சுழற்றிக் கொண்டு நடந்தனர்.  ஆனால் விஜய சிம்ஹனின் சூழ்ச்சியால் அரச சேவகர்கள் அவர்களை பிடித்து சிறையில் அடைத்தனர்.  1062

துல்லன் முதலானோர் ராஜ குமாரர்கள். வாசந்திகா மரம் காட்டில் நெடிது உயர்ந்து வளர்ந்து இருப்பது போல உடல் வாகு உடையவர்கள்.  உயர் பதவிகளை ஏற்று திறம்பட செய்யவே எண்ணியிருந்தனர்.   தாங்களே மற்றவர்களை காப்பாற்ற வேண்டியவர்கள் என்ற எண்ணமே அவர்கள் மனதில் மேலோங்கி இருந்து வந்திருக்கிறது.  பாபி பிம்பன் என்பவன், தாக்குரன்,  அவன் யாருக்கோ அடிமை வேலை செய்து இவர்களை சிறையில் இட்டிருக்கிறான் என்பது வரை புரிந்தது.  மேற்கொண்டு யோசிக்கும் முன், அந்த நால்வரும், டுல்லா, விஜயராஜா, வல்லன் மற்றும் குல்லா என்ற ராஜ குமாரர்கள் -தன்வங்கனின் பேரன்கள், இரவில் , யாருமறியாமல், எந்த விசாரணையும் இன்றி தூக்கிலிடப்பட்டனர்.  அவர்கள் ஊரில் அழகன் என்ற பெயருடன் வளைய வந்தவர்கள். நால்வருமே மக்கள் மத்தியில் செல்வாக்கோடு இருந்தனர். அவர்களின் சௌந்தர்யம்- உடல் வனப்பு பல காலம் வரை கதைகளாக பேசப் பட்டன.  முதியவர்கள் கண்களில் நீர் தளும்ப பேரக் குழந்தைகளுக்கு இவர்களைப் பற்றி சொல்வர்.   வரிசையாக மல்லி மொட்டு போன்ற பல்லின் அழகைச் சொல்வோமா,  குழல் கற்றைகளாக  அசைவதைச் சொல்வோமா, பவள மாலைகளால் அலங்கரித்துக் கொள்வதை பார்க்க கோடிக் கண்கள் வேண்டும் என்பது போல பாடல்கள் பாடுவர்.  அந்தோ, சிறையில் அடைத்தவன் கொடூரன், அந்த கொலையைச் செய்தவன் பாதகன் என்று மனம் உருகி பாடுவர். 

உத்கர்ஷனின் மற்றொரு மகன் டோம்பா Dombaa – என்பவனும்  மர்மமான முறையில்  கொல்லப் பட்டான். விஜயமல்லனின் மகன் ஜய மல்லன் கூர்மையான புத்தியுடன், சாதிக்கும் ஆவலுடன் மகிழ்ச்சியாக இருந்தவன், தீப் பொறி போல காண்பவரை கவரும் குணம் உடையவன் அவனுக்கும் அதே கதி தான்.  தன்னைச் சுற்றி உள்ளவர்களையே சந்தேகித்து முனைந்து அழித்து யாருக்காக அந்த பெரிய ராஜ்யத்தை கட்டிக் காத்தான் –

‘ அரச மரம், தன் உச்சாணி கிளைகளில் தேனீக்களை கூடு கட்ட அனுமதிக்கிறது. பசுமையான  இலைகளும் கிளைகளுமாக பசுமையாக அழகாக  காட்டில் ராஜாவாக இருந்த மரம். சம்பந்தமில்லாத வெளி மனிதன் அந்த தேன் கூடுகளைக் கலைத்து தனக்கு வேண்டிய தேனை எடுக்க மரத்தின் கிளைகளை உடைத்தும், பசுமையான இலைகளை அலட்சியமாக வெட்டியும் அழித்து விடுகிறான். அந்த மரத்தின் அறிவு தான் அரசனுக்கும் இருந்தது போலும்.   தராதரம் அறியாமல் அருகில் வைத்துக் கொண்ட சில கயவர்கள் மூலம் குலமே அழிந்தது. முன் பின் அறியாத ஒருவன் அரியணையை அலங்கரிக்கவா இந்த கொடுமைகள்?

தாயாதிகள், உறவினர்கள் இவர்களை அழித்த புத்தியை இழந்த அரசன், டிம்பன் முதலியவர்களையும், விஷம் கலந்த உணவைக் கொடுத்து மரணமடையச் செய்தான்.  வாமன மகன் க்ஷேமன் இதை அறிந்து கொண்டு விட்டான்.  தன் தந்தையின் விரோதி என்பதால் கவனமாக இருந்தான். பேச்சு வாகில் கலசேஸ்வர கோவிலின் பொன்னாலான கும்பங்கள் பற்றி வர்ணித்தான். அவைகளை கவர்ந்து வர தூண்டினான்.  அரச சபையில் அரசனின் அந்தரங்க மெய்க் காப்பாளன் , ஆலோசகன் என்று இருந்த  பிரயாக ராஜா கர்ம யோகி என்பது போல கடமையே கண்ணாக இருப்பவன். மதம் பிடித்து தாறுமாறாக ஓடும் யானையை வெறுக்காமல் அதை குணப் படுத்தவே முயலும் மாவுத்தன் போல அரசனை காப்பதிலேயே கவனமாக இருந்தான்.  இந்த செயலின் விளைவு மக்கள் மத்தியில் தவறாக பரவும் என்பதால் முளையிலேயே கிள்ளுவது என்பது போல  தடுத்து விட்டான். 

வரலாற்றில் இது போல மனிதர்கள் நிறைய உண்டு.  புல்லுறுவிகள் என்பர்.  ஒழுங்காக சென்று கொண்டிருந்த அரசாட்சியைக் கெடுக்கவே அருகில் வந்து சேருவார்கள்.  வானத்தை வில்லாக வளைப்போம், தாமரை மலரின் இதழ்களை வைத்து ஆடை நெய்வோம்,  கனவில் கண்ட பொற்குவியலை வைத்து கோட்டைக் கட்டுவோம் என பேசுவர்.  அரசன் இவர்களை அருகில் சேர்க்கவே கூடாது.  திரும்பத் திரும்பச் சொல்லி நம்ப வைத்து விடுவார்கள்.  களிமண் போன்ற அறிவு உடையவனாக அரசன் இருந்து விட்டால் தங்கள் இஷ்டத்துக்கு வளைத்து விடுவார்கள்.  இதை ஆரம்பத்திலேயே வெட்டி விடா விட்டால் இந்த விஷ விருக்ஷம் வளர்ந்து அரசனின் பெயரையே கெடுக்கும். ‘1078

உயிர் இல்லாத உடலில் நுழைந்து கொள்ளும் வேதாளம் போல என்று உவமை.  அறிவு இல்லாதவன் உயிரற்ற உடலுக்கு சமமாக சொல்லப் படுகிறது.

க்ஷேமன் போன்றவர்களின் பேச்சு எடுபடாமல் போனது பிரயாக ராஜாவின் கவனமான கண்காணிப்பினால் என்று சொல்லலாம்.  நோயுற்ற குழந்தையை பாதுக்காக்கும் தாய் போல கண்ணும் கருத்துமாக அவர் அரசனை கவனித்துக் கொண்டு இருந்ததால் அரசன் அவர்கள் வலையில் விழாமல் இருந்தான்.

ஒரு சமயம்  ஹலதரனுடைய பெண் வயிற்று பேரன், லோஷ்டதரன்  அரசனிடம் விதஸ்தாவின் மேல் அணை கட்ட வேண்டும். கலசேஸ்வர கோவிலில் பொன்னும் மணியும் வீணாக கிடக்கிறதே.  அவைகளைக் கொண்டு நான் இந்த அணை கட்டும் வேலையை செய்கிறேன் என்றான். பகவானுக்கு என்று கொடுத்த தனம் தானே, அரசன் நினைத்தால் பயன் படுத்திக் கொள்ளலாமே. ஏதோ ஹாஸ்யமாக சொல்வது போல பாவம் கலசேஸ்வரர், இந்த செல்வத்தை கட்டிக் காக்க தானே கட்டுபட்டிருக்கிறார்.  அவரை விடுவிப்போமே.  அரசன் சிரித்துக் கொண்டே, இது என்ன அசட்டுத்தனம் என்றான்.  முன் கலச ராஜா செய்தது தானே. உதபந்தா என்ற இடத்தில் பீம சாஹி என்பவன் ஆட்சி செய்து வந்தான்.  பீம கேசவ கோவிலில் பூசாரிகளுக்குள் தகராறு வந்து பூசை தடைப் பட்டது. கலச ராஜா கோவிலை மூடச் செய்து விட்டார். பல நாட்களாக கோவில் பூட்டியே இருந்தது. பல நாட்களுக்குப் பின் சமாதானம் ஆகி கோவிலைத் திறந்தால் வெள்ளி ஆபரங்கள், உபகரணங்கள் திருடப் பட்டிருந்தன.  அதனால் அந்த கோவிலில் இன்றளவும் விலையுயர்ந்த  பொருட்கள் உள்ள அறைகள் பூட்டியே வைக்கப் பட்டுள்ளன.  அதனால் பகவானை விடுவிப்போம். அவன் மலர்களின் மணத்தையும் வாசனைப் பொடிகளிலும் மயங்கியபடி இருக்கிறார். அந்த கதவுகளைத் திறந்து திருடர்கள் விட்டு வைத்த பொன் வெள்ளி இருந்தால் நாம் பயன் படுத்திக் கொள்ளலாமே. அவனுடைய சொல்லை நம்பி அரசன் அந்த கோவில் கதவுகளைத் திறக்கச் செய்தான்.  விலையுயர்ந்த மாணிக்கம் போன்ற மணிகள்,  பொன், மற்றும் அரிய பொருட்கள் இந்த மனித நடமாட்டமே இல்லாத கோவிலில் இருக்குமானால், பிரபலமான கோவில்களில் எவ்வளவு இருக்கும் என்று மனதில் கணக்கிட்டான்.  ஆனால், கோவிலைச் சேர்ந்த அதிகாரிகளும், பூசாரிகளும் உண்ணாவிரதம் இருந்து கோவில் சொத்தில் கை வைக்க விட வில்லை.

அந்த சமயம் அரசன் அந்த செயலை கை விட்டான். ஆனால் உள் மனதில் இந்த சொத்துக்கள் பற்றிய எண்ணம் இருந்து கொண்டே இருந்தது. படைகளின் பாதுகாப்புக்கு,  ஆயுதங்கள் செய்ய என்று உபரியான செலவுகள் வரும் பொழுது கோவில் சொத்தான பொற்காசுகளை தயக்கமின்றி எடுத்து செலவழித்தான்.  அதன் பின் உலகில் அரிதான பொருட்கள் பகவானுக்கே உரியது  என்பது போல  முந்தைய அரசர்கள் கொண்டு வந்து சேர்த்த அரிய பொன்னும் மணியும் அரசனின் ஆடம்பரத்திற்கு செலவாகியது.  உடன் இருந்த பேராசைக் காரர்கள் எதோ காரணம் காட்டி திருடிக் கொள்ள வழி

வகுத்தது. 1090

ஹர்ஷ துருக்கன் என்றே அழைக்கிறார் கவி. பாடு பட்டு சேர்த்து கட்டிய கோவில்களின் சொத்துக்கள் மட்டுமல்ல கடவுள் உருவங்களும் சிதைக்கப் பட்டன. யானை கையில் பூவைக் கொடுத்து திருமகளை ஆராதிக்கச் செய்கிறோம். அதே யானை தன்னிச்சையாக குளத்து தாமரை மலர்களை துவம்சம் செய்வதையும் காண்கிறோம்.  எந்த அளவு உயர்ந்தானோ, அந்த அளவு அரசன் ஹர்ஷன் படு குழியில் வீழ்ந்தான். உதய ராஜா போன்றவர்கள் இந்த சிலை உடைப்பு செயலில் முக்கிய பாகம் வகித்தனர்.  ஸ்ரீ நகரத்தின் ரணஸ்வாமின் மற்றும் மார்த்தாண்ட கோவில்களை தொடவில்லை.  புத்தருடைய பெரிய சிலைகள் தப்பித்தன. பரிஹாச புரத்தில் பாடகர்களான  கனக என்பவருக்கும், சமணரான குசலஸ்ரீ என்பவருக்கும்   அவை அன்பளிப்பாக அளிக்கப் பட்டிருந்தன.

இந்த செயலுக்கு அவசியமே இல்லை. பாட்டனாரிடம் இருந்தும், உத்கர்ஷ அரசனிடமிருந்தும், தந்தை விட்டுச் சென்ற செல்வமும் ஏராளமாக இருந்தன.  அப்படி இருந்தும் அளவுக்கு அதிகமான செல்வமும் போதைபொருள் போல புத்தியைக் கெடுக்கிறது.  கடவுள் சிலைகளில் கை வைப்பானேன்.  அரசனின் கட்டுபாடு இல்லாமல் கீழ் நிலை அதிகாரிகள் எந்த தகுதியும் இன்றி நியமிக்கப் பட்டனர். சுற்றி உள்ளவர்களால் அரசன் எந்த அளவு கீழ் தரமாக ஆவான் என்பதற்கு ஹர்ஷ தேவனே உதாரணம் ஆனான்.  அறிவின்மையின் எல்லையில்  இருந்தான் ,

தாள வாத்தியம் இசைக்கும் பீமனாயகனுக்கு ஆணும் பெண்ணுமாக இரு யானைகள் கொடுத்தான். சம்பகனின் சகோதரன் கனகன் – பாடுபவன், அவனுக்கு லக்ஷம் டினார்கள்  கொடுத்தான். அவன் மேலும் தீவிரமாக  பயிற்சிகள் செய்து அரசன் முன் பாடினான்.

அரசனின் குணம் கெட்டதால் பல தீமைகள் வந்தன என்பதுடன் நிறுத்திக் கொள்வோம். இதை விவரித்து என்ன பயன்?  அடியாட்கள் கையில் அரசாட்சி சென்றது. சுரண்டல் காரர்கள் தங்கள் மாளிகைகளைக் கட்டிக் கொண்டனர். அந்த;புரத்து பெண்களின் கூட்டம் அதிகரித்து இடைத் தரகர்கள் கை ஓங்கியது. கலசனைப் போலவே மக்களின் வெறுப்பை சம்பாதித்தான்.

திடுமென, பெரும் படையுடன் ராஜபுரியை முற்றுகையிட்டான். வழியில் இருந்த அரசர்கள் திகைத்தனர்.  உலகையே வெற்றி கொள்ள புறப்பட்டு விட்டான் போலும் என நினைத்தனர்.  ராஜபுரியை அடையும் முன் ப்ருதுவி கிரி என்ற இடத்தை முற்றுகையிட்டான்.  மாதக் கணக்கில் முற்றுகை நீடிக்கவும் கோட்டையின் உள்ளே உணவு தட்டுப்பாடு வந்தது. வேறு வழியின்றி  அதன் காவலன் சங்க்ராமபாலன் கப்பம் கட்ட சம்மதித்தான். அது போதாது என்று முற்றுகையை தளர்த்தாமல் நீட்டித்தான்.  அந்த நாட்டு காவல் தலைவனை பரிசுகள் கொடுத்து தனக்கு சாதகமாக ஆக்கிக் கொள்ள முயன்றான். அவனோ சிப்பாய்களை தூண்டி விட்டு அதிக ஊதியம், அதிக வசதிகள் கேட்டு போராடச் செய்தான். அரசனின் பொக்கிஷம் எங்கோ தள்ளி இருந்தது. என்ன செய்யலாம் என்று யோசித்த சமயம் அந்த காவல் தலைவன் மற்றொரு பெரிய பிரச்னையை பற்றிச் சொன்னான். துருக்கர்கள் போரிட வந்து கொண்டிருந்தனர்.  இது அரசனை பின் வாங்கச் செய்தது.   படை வீரர்கள் பல சாதனங்களை ஆங்காங்கே போட்டு விட்டு ஊர் திரும்பவே அவசரப் பட்டனர்.  தோல்வி நிச்சயம் என்றவுடன் அதிக வீரமில்லாத வீரர்கள், நுனி மழுங்கிய வாளை தியாகம் செய்வது போல தங்கள் தலைவனையும், அரசனே ஆனாலும் தியாகம் செய்து விட்டு தங்களை காத்துக் கொள்ளவே முனைவர் என்பது இயல்பு.  சமீப காலமாக தன்னுடைய தவறான நடவடிக்கைகளால் தானே தன் ஆற்றலை இழந்தவன், அவர்களை உண்மையாக விசுவாசியாக  இருப்பார்கள் என்று எதிர்பார்த்தால்  நடக்கக் கூடியதா?  சரியான பராமரிப்பு இல்லாவிட்டால் குதிரைகள் கூட லாயத்தை விட்டு வெளி வராது.  நரேந்திரன்- மனிதர்களுள் இந்திரன் போன்றவன் என்ற பெயர் பெற்றவன் தன் பெயரை களங்கப்படுத்திக் கொண்டவன், தானே அவர்கள் மதிப்பில் விழுந்து விட்டவன் சொல் எடுபடவில்லை.  எந்த வீரனும் திரும்பவில்லை. போர் சாதனங்களைக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. இப்படி புற முதுகிட்டு ஓடினான் என்ற அவப் பெயர், தகுதியில்லாத படைத் தலைவர்களால் அடைய நேரிட்டது.  ராஜாதி ராஜனாவான் என்பதும் கனவாகியது. 1162

இந்த நிலையில் கந்தர்பனின் நினைவு வந்தது.  அவனுடைய விசுவாசமும், கடமை உணர்ச்சியும் செயல் திறனும் மனதில்  அவனிடத்தில் மரியாதையும், தான் அவனிடத்தில் தவறு செய்து விட்டோம் என்ற உறுத்தலும் தோன்றியது.

கந்தர்பனை அழைத்து வரச் சொல்லி உத்தரவிட்டான். புதிய காவல் தலைவன் அந்த உத்தரவை புறக்கணித்தான். அரசன் சொல்லுக்கு அவ்வளவு தான் மதிப்பு.  இதற்குள் தன் தவறுகளை உணர்ந்து சற்று மனம் தெளிந்து விட்டிருந்த  அரசன், விதி நியமங்களின் படி அரசன் ஆணையை மதிக்காத அரச அலுவலக சேவகனுக்கு கொடுக்கும் தண்டனையைக் கொடுத்து சிறையில் தள்ளினான்.  கோபத்தால் அல்ல.

தந்திரமான அந்த காவல் தலைவன் தன் உறவினர்களைக் கொண்டு  ஊருக்குள் நுழைந்த அரசனுக்கு தாம்பூலங்களோடு வரவேற்பு அளிக்கச் செய்தான். மரண தண்டனை கொடுக்க வேண்டிய இடத்தில் அரசன் அவனை மன்னித்தான்.  பதவியை திருப்பிக் கொடுத்தது அடுத்த தவறு.  துதி பாடுபவர்களின் கூட்டம் உள் நோக்கத்தோடு அருகிலேயே இருந்தனர். விலக்கினாலும் விலகவில்லை.  GHoSA- என்ற घोष- யாத்திரைக்கு பின் கர்ணன் முதலானோர் கௌரவ அரசனை புகழ்ந்தனராம் –  அது போல என்று உவமை.  

‘பட்டி மன்றத்தில்  தோற்றவன் பிரதி வாதியாக தன்னுடன் வாதம் செய்து வென்றவனை மட்டமான சொற்களால் திட்டுவான்.   தான் செய்த தவற்றை மறைக்க மனைவி, கணவனை குறை கூறுவாள்.   வீண் கலகங்கள் செய்வாள்.  அரச சபையில் நிதி மந்திரி திடுமென நிதி நிலைமை தடுமாறினால், அரசனையே காரணமாக சொல்லி தான் தப்பிக்கவே முயலுவான்.  அதே தான் நடந்தது. மஹத்தமா – தலைமை நிதி மந்திரியாக இருந்த சஹேலா  என்பவன், தனக்கு வேண்டிய மட்டும் அரச செல்வத்தை, பதவியின்  செல்வாக்கை பயன் படுத்திக் கொண்ட பின், தற் சமயம் நிதி குறைந்ததும்  அரசனின் ஆடம்பர செலவுகளே காரணம் என்று அரசனைக் காட்டிக் கொடுத்து விட்டான்.

போதாக் குறைக்கு, அரசனை தரத நாட்டை லாவண்ய என்ற பிரதேச லோஹர வீரர்கள்  உதவியுடன் தாக்கி தனதாக்கிக் கொள்ள அறிவுரை கொடுத்தான்.  அந்த பிரதேசம் கலசன் காலத்திலேயே லக்கணசந்திரன் பொறுப்பில் இருந்தது. அவன் தாமர வீரன். கோட்டைக் காவலன் ஜனகன் என்பவனை அனந்த தேவனின் ஆணையால் அரசனுக்கு தெரிவிக்காமலேயே கொன்று விட்டனர்.  அரசன் அறை வாசலில் அவன் மனைவி ப்ராயோபவேசம் – உண்ணா விரதம் இருந்தாள்.  கலசன் அவளை சமாதானப் படுத்தி அந்த பிரதேசத்தை தரதர்களுக்கு திரும்பக் கொடுத்திருந்தான்.  அதன் பின் தரத என்ற அந்த குழுவினர் பலம் பெற்றனர். பல கிராமங்களில் அவர்கள் செல்வாக்கு உயர்ந்து விட்டிருந்தது. தவறான போதனை – அந்த இடத்தில் எதிர்ப்பு பலமாக இருக்கும். மேலும் முந்தைய அரசனே அவர்களுக்கு திருப்பிக் கொடுத்த பிரதேசம்.  கொடுத்ததை பிடுங்குவது நியாயமும் அல்ல. 1174

அந்த இடத்தில் நீர் வசதி இல்லை என்பதால் பனிக்காலத்தில் விழும் பனிக்கட்டிகளை சேமித்து  வைப்பர். வேணிற் காலத்தில் பனி உருகி நீராகும். நாளடைவில் அங்கு காலாட்படை தங்கும் இடமாக ஆகி விட்டது.  தந்திரமாக அந்த மஹத்தமன் என்ற பதவியில் இருந்தவன் திரும்பத் திரும்ப அந்த இடத்திற்கு படையெடுத்துச் செல்ல தூண்டினான். அவன் உள் நோக்கம் வேறு, திருடன் தனக்கு ஆதாயம் என்ன என்பதைத் தானே பார்ப்பான்.  அரசனும் படையெடுத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யச் சொன்னான்.  

சம்பகன் என்ற சேனாபதியின் தலைமையில் படை கிளம்ப இருந்த சமயம் வாதகண்டன் என்பவன் அங்கு வந்தான். அவன் கோட்டை காவலாக இருந்தவனை மண்டலேசன் என்ற பதவி கொடுத்து மாற்றி விட்ட அரசனிடம் அவனுக்கு மனத் தாங்கல் இருந்த து.  காவல் தலைவன் என்ற அதிகாரம் மிகுந்த பதவி, அதனால், தன் எதிர்ப்பைக் காட்டினான். அதற்குள் படை மதுமதி நதிக்கரையை அடைந்து விட்டது.  அரசன் சற்று பின் தள்ளியே வந்து கொண்டிருந்தான். 1178

சாமந்தர்கள் என்ற உயர் அதிகாரிகள், படைத் தலைவர்கள்  உடன் வர, அரசன் தானே தலைமை தாங்கியும், நடு நடுவில் படை வீரர்களுக்கு இடையிலுமாக இருந்தான்.  மலைப் பாங்கான இடம். தரதர்கள் பெரும் பாறைகளை தள்ளி விட்டனர்.  காஸ்மீர வீரர்களால் இந்த தாக்குதலை சமாளிக்க முடியவில்லை.  இருந்தும் போர் தொடர்ந்தது.

மல்லா குங்காவின் மகன்,  அவனுடைய இரு புதல்வர்களும்  பிரதானமான இடத்தில் நின்றனர்.  அவனுடைய புதல்வர்களுக்கு ராஜ்ய பதவி வசிக்கும் யோகம் உண்டு என்று ஜோதிடர்கள் சொல்லி இருந்தனர்.  உச்சல, சுஸ்சல என்ற அந்த இருவரும் அதற்கான தகுதிகளையே வளர்த்துக் கொண்டவர்களாக எதிர்பார்ப்புடன் இருந்தனர்.  இளையவன் சுஸ்சலன், அரச பதவியில் அதிக நாட்டமில்லாமல் இருந்தாலும்  எதிரிகளின் படை கோட்டை வாயிலை அடைந்த சமயம் தவிர்க்காமல் வந்து கலந்து கொண்டான்.   அரசனின் படை பெரியது.  ஊரின் நிலைமையும் வளமாக இருக்கவில்லை. முற்றுகையை வெகு நாள் தாக்கு பிடிக்க முடியாது என்ற நிலை.  அந்த நிலையில் இறைவனே அனுப்பியது போல கடும் மழை பெய்தது.

இதுவும் இறைவன் செயலே.  ஒருவனை தூக்கிவிட பயன் படுவது போலவே, ஒருவனை இறக்கவும் இயற்கையே எதோ செய்து விடுகிறது.

கோட்டையை காக்க முனைந்திருந்த தரத வீரர்கள்,  விதியின் கட்டளை என்பது போல ஆனார்கள். பனிக் கட்டிகள் கோட்டையை சுற்றிலும் நிறைந்தன.  ஹர்ஷனின் படை  விழுந்தும் எழுந்தும்  பாறையில் முட்டி திரும்பும் மீன் திரும்புவது  போல் திரும்பினார்கள். அல்லது பந்து விளையாடுவது போல தோற்றம் அளித்தனர்.  துஷ்ட மந்திரிகள், தங்கள் வீடு வாசல் இந்த மழையில் என்ன ஆயிற்றோ என்ற கவலை தலை தூக்க  பின் வாங்கவே விரும்பினர்.   தங்கள் ஆயுதங்கள், சீருடைகள், வாள் உறைகள் என்ற எதையுமே எடுத்துக் கொள்ளாமல் வேகமாக திரும்பி ஓடலாயினர்.  அரசனும், இனி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இழந்தவனாக, பின் வாங்கி போரை நிறுத்தி விட்டான்.

ஓடியவர்களை துரத்திச் சென்ற தரத வீரர்களிடம் தப்ப பலர் வெள்ளத்தில் மூழ்கினர். அவர்களின் வெண் நிறமான ஆடைகளும் குடைகளும் ஹம்சமாக தெரிந்தன. மின்னும் கவசங்களும் உடை வாள் போன்றவை நீரில் விளையும் செடிகளோ, குதிரைகள் மிதந்தது பாறைகளோ, அவர்கள் பாத்திரங்கள் தங்கம் வெள்ளி  போல மின்ன மதுமதி நதி அத்புதமாக இருந்ததாம். 1193-94

எவர் நதியில் விழுந்தனர், எவர் தரத அரசர்களின் வசம் ஆனார்கள் என்ற எண்ணிக்கை தெரியவில்லை.  நதியில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டவர்களின் உடல் கிடைத்தாலும் யார் என்ன என்பதை அறிய முடியவில்லை.  சேனையே அனாதையாக ஆகிவிட்டது போல ஆயிற்று. மல்லாவின் மகன்  உச்சலன் தன் தகுதியால் தனித்து தெரிந்தான்.  அவனும் அவன் சகோதரன் சுஸ்சலனும், உச்சலன் ஆணைப்படி காவல் வீரர்கள் வெள்ளத்தில் அகப்பட்டுக் கொண்டவர்களை மீட்க சென்றனர்.  அந்த சமயம் மனிதாபிமானத்தோடு யாராக இருந்தாலும் மீட்டது  அவர்களுக்கு பெருமை சேர்த்தது.    அவர்களை காப்பாற்றியதால், ராஜ்ய லக்ஷ்மியே, மகிழ்ந்து அவர்களை வாழ்த்தி விட்டாள் போலும்.   மாலையில் கையில் ஏந்திக் கொண்டு வரும் ராஜகுமாரி தன் பதியைக் கண்டு கொண்டது போல என்று கவி வர்ணிக்கிறார்.  மக்களும் வாழ்த்தினர். இந்த இருவரும் தான் உண்மையான தன் மானம் உள்ள வீரர்கள்.  ராஜாவாக ஆளும் தகுதி உடையவர்கள். மற்ற அரசர்கள் வெறும் பெயரளவில் அரசர்கள்.  தங்கள் கடமையை செய்த நிறைவோடு நிறுத்திக் கொண்டு விட்ட அரச குமாரர்கள்  அரசன் ஹர்ஷன் நன்றியுடன் பாராட்டியதை பெரிதாக ஏற்கவும் இல்லை.  அவன் தந்த பரிசுப் பொருள்களை ஏற்கவும் இல்லை.  இனி பயம் இல்லை, எதிரிகள் எவரும் இல்லை என்ற மன நிம்மதியோடு அரசன் தன் நகரம் வந்தான்.  மல்லாவின் புதல்வர்களின் புகழ் பரவியது.  ராம லக்ஷ்மணர்கள் போல் என்று பாராட்டு பெற்றனர்.  ஹர்ஷ ராஜன் ராவணன் போல சித்தரிக்கப் பட்டான்.  உண்மையில் அவர்கள் வாயால் சொல்லவில்லை- அரசனே நினைத்தான், அவர்களை எதிர்த்தவன் ராவணன் தானே. சுய பச்சாதாபம், ஏதோ ஒன்று தன்னிடம் இருந்து பறிக்கப் பட்டது போன்ற உணர்வு.  சிறுவர்கள் முன்   தான் தோற்றது வெட்கமாகவும் தன்னையே நிந்தித்து கொள்பவனாக ஆனான். அதுவே கோபமாக வெளிப்பட்டது.  அனாவசியமாக எதற்கு முற்றுகை இட்டோம், நடந்ததை எண்ணி மறுகினான்.  ஆயினும் தன் வீரத்தை நிலை நாட்டவே முயன்றது அடுத்து சில ராஜ்யங்களுடன் படை எடுத்து செல்வதில் தெரிந்தது.   அருகில் வந்து விழுந்த கல்லை நாய் விரோதியாக நினைக்குமாம். அதைக் கடித்து குதறுமாம். அதை தன் மேல் எறிந்தவர் யார் என்பதையா நினைக்கும் என்கிறார் கவி.

மதனன் என்பவன் சேனைத் தலைவன் பதவி கொடுக்கப் பட்டிருந்தான்.  அவனும் அதில் திருப்தியாக விசுவாசமாக இருந்தான். அவன் இந்த தோல்வியை விமரிசித்தான் என்று கோபம். அவன் வந்த சமயம் காண மறுத்து விட்டான். தேவையில்லாத ஒரு புகாரை அவன் மேல் சுமத்தினான்.   ராணியின் ஆணையை ஏற்று சரியாக செய்யவில்லை என்று அல்ப காரணம் சொன்னான்.  மதனன் பயந்து விட்டான்.  Takka – டக்கா என்ற குலத்தினன் லக்ஷ்மீதரன் என்பவனிடம் சென்று தன் ஆற்றாமையைச் சொன்னான்.   மற்றொரு மந்திரியும் மதனனுக்கு ஆதரவாகவே அரசனிடம் பேசினான்.  பொறாமை, அவமானம் போன்றவைகள் மனதில் நிறைந்தால் அறிவு சரியாக வேலை செய்யாது.  ‘ எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்று தமிழில்  ஒரு பழமொழி, வேண்டாத செயல்களில் ஈடுபடுவர் என்பது இதன் பொருள்.  சம்பந்தமில்லாத ஒரு முடிவு. மதனனை  அவன் மகனுடன் சேர்த்து கொல்லச் செய்தான். சிரித்துக் கொண்டே பார்த்துக் கொண்டிருந்தானாம்.

அரசனுடைய நமுட்டு சிரிப்பு, அகாலத்தில் மலரும் மரம், வேதாளம் போல – நன்மைக்கல்ல என்பது பொதுவான நீதி. அரசனிடமோ, செல்வந்தனிடமோ, எனக்கு நெருங்கிய நட்பு என்று பெருமை படும்  பலர் இதை உணருவதில்லை. அந்த நட்பு கால நாகத்திற்கு நான் நெருங்கிய நண்பன் என்று சொல்வது போல எந்த நிமிடமும் மாறலாம், தன்னையே அழிக்கும் என்பதை மறந்து விடுகிறார்கள்.

இதைச் செய்தபின் அரசனுக்கு பயம்- லக்ஷ்மீதரனின் தரப்பிலிருந்து எதிர்ப்பு வரலாம். ஏதோ விசாரணை என்ற பெயரில் உதயா என்பவனை லக்ஷ்மீதரனிடம் அனுப்பினான். வசதியாக இருந்த அரண்மனை. வளமான செல்வ நிலை,  இவைகளைக் கண்டு பொருமியவனை மெய்க் காப்பாளர்கள் சந்தேகத்துடனேயே கண் காணித்தனர்.   தன் வாளில் கை வைத்த உடனேயே,  லக்ஷ்மீதரனின்  அருகில் இருந்த மெய்க்காப்பாளர்களே வதைத்து விட்டனர்.  உதயனுடன் சென்றவர்கள் லக்ஷ்மீதரனை வதைத்தனர்.  அரசனின் மன நிலை, எரிகாரம்- அமிலம் போல அழிக்கவே வந்தது போல அடுத்தடுத்து பல துயரங்கள் தொடர்ந்து வந்தன. 1216

திறமையான திருடன் அரச மாளிகையிலிருந்து தங்கத் தட்டை  யாருமறியாமல் களவாடிக் கொண்டு கூட போகலாம்.  அதுவே ஊருக்குள் பகலில் ஏதோ ஒரு சிறிய குற்றத்திற்காக தண்டிக்கப் படுவதும் நடப்பதே.  

பயங்கரமான தொற்று நோயான பிளேக்  என்பது பரவி மக்கள் கூட்டம் கூட்டமாக மடிந்தனர்.  எங்கும் மரண ஓலம்.  அது நிற்கவும், எழுபத்து ஐந்தாவது ஆண்டு பெரும் வெள்ளம் வந்து கிராமங்களே மூழ்கின, பயிர்கள் நாசமாகி, உணவுப் பொருள் பற்றாக்குறை கடுமையாக வந்தது. அந்த சமயம் ஒரு காரி खारि – ஒரு மூட்டை அரிசி ஐனூறு டினார்கள் என்று விற்கப்பட்டன, இரண்டு பலம் திராக்ஷை ரஸம், ஒரு டினார் என்று ஆகியது.    கம்பளி நூல் -wool-  ஒரு பலம் ஆறு டினார்கள்,   உப்பு, பெருங்காயம், மிளகு என்பவைகளின்  பெயரே கூட  காதில்  விழுவது அரிதாகியது.

இறந்தவர்களுக்கு சரியான அடக்கம் செய்யாமல் விட்டதில் நீரில் உப்பியது போன்ற உடல்கள் நதிகளிலும் அருவிகளிலும் மிதந்தன. காட்டு மரங்களை வெட்டி வீசியது போல அவை இருந்தன.  இதற்கிடையில் எதையும் கவனிக்காத அரசன் அரண்மனையைச் சுற்றி மரங்கள் உயரமாக வளர்ந்து விட்டன. தள்ளியிருந்து பார்த்தால் அரண்மனை கண்ணுக்குத் தெரியவில்லை என்று மரங்களை வெட்ட ச் செய்தான்.  பூவும் பழமுமாக இருந்த மரங்கள், குழந்தைகளுடன் உள்ள குடும்பஸ்தர்கள் போல இருந்தவை வெட்டப் பட்டன.  அறிவை இழந்தவன் போல, ஏற்கனவே பல துன்பங்களில் இருந்த மக்களிடம் ஏராளமாக வரி விதித்து மேலும் சிரமப் படச் செய்தான்.  அவனுடைய அதிகாரிகள், அதற்கும் மேல் சென்று வரி வஸூல் என்று கசக்கி பிழிந்தனர்.

பொறுக்க மாட்டாமல் தாமரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.  அந்த ராஜ்யபாலனாக இருந்தவனிடம் அதை அடக்கு முறைகளால், தேவையானால் கொல்லவும் ஆணையிட்டான்.  அவனோ, ஹோலாடா என்ற இடத்தில் இருந்த தாமரர்களை விரட்டினான். மாதவ ராஜ்யத்தில்  இருந்தவர்களை பறவைகளைச் சுடுவது போல அழித்தான்.  மாதவ ராஜ்யத்தில் இருந்த அந்தணர்களைக்கூட விடவில்லை.  நீண்ட சிகையும், காணவே பயங்கரமான தோற்றம் உடையவர்கள் என்றான்.  லாவண்யா என்ற யாத்ரீகர்கள் அந்த பக்கமே வருவதை தவிர்த்து விட்டனர்.  பைரவனின் பயங்கர ஆட்டமாடும் இடமாக  தேசம் ஆகிவிட்டது என்று பொது மக்கள் புலம்பினர்.  (பைரவன்- ஊழிக் காலத்தில் அழிக்கும் தெய்வம்)   அந்த ராஜ்யபாலனே, தான் கொன்று குவித்த லாவண்ய யாத்ரீகர்களின் தலையை அரசனுக்கு அனுப்பினானாம். (அரசன்  இப்பொழுது அழிக்கும் தெய்வமான பைரவன் ஆகி விட்டான் என்பதைக் குறிக்க)   அரண்மனையின் பெரிய வாயிற் கதவுகள் முன்னால் இவை மண் பாண்டங்கள் போல அடுக்கி  வைக்கப் பட்டன. அதைக் கண்ட கழுகுகளும், கங்க எனும் அதைப் போன்ற பறவைகளும் வட்டமிட்டன.  வாயில் தோரணம் போல அவை வரிசையாக அமர்ந்திருந்தன.  அந்த மண்டலமே, மயானம் போன்ற துர் நாற்றம் மிகுந்ததாக ஆகி விட்டதாம்.

பலேரகா என்ற நீர் வீழ்ச்சி இருந்த இடத்தில் இருந்து, லோகபுண்யா என்ற ஊர் வரை அந்த ராஜ்யபாலன், தாரமர்களைக் கொன்று குவித்தான்.   அதையே தொடர்ந்து செய்ய க்ரமராஜ்யத்தில் நுழைந்தான். அங்கு இருந்த பலரும் ஒன்று சேர்ந்து அந்த ராஜ்ய பாலனை எதிர்த்து நின்றதோடு அவன் தலையெடுக்க விடாமல் அடித்து நொறுக்கி விட்டனர்.    அதன் பின் அரசன் பெயரே ஹர்ஷ ராக்ஷஸன் என்றாகியது.  எங்கள் தீர்த்தங்களையும், புண்ய பூமிகளையும் அழிக்க வந்து விட்டான் என்றனர்.

ஓரளவுக்கு மேல் அவர்களை தங்கள் ஊருக்குள் வரவே விடவில்லை.   யமனே தான் என்றனர்.  பகலில் தூங்குகிறான். க்ரூரன். செய்ய வேண்டியதில் கவனமும் இல்லை.  என்று பலவாறாக தூற்றினர். அரசர்கள் மத்தியில் இதுவே பேச்சு பொருளாயிற்று.  இரவில் சஞ்சரிக்கும்  நிசாசரன்- அரக்கன் என பெயர் பெற்றான்.

இதனிடையில் மல்லா புதல்வர்களில் இளையவனான உச்சலன், வாலிபனாக, அந்த வயதுக்குரிய வளர்ச்சியும், வீரமும், சாதிக்க விரும்பும் குணமும் நிரம்பியவனாக மக்களின் அபிமானத்தையும் பெற்றவனாக இருந்தான்.  ராஜ்யத்தை ஆள தகுதியுடையவர்களே  என  இருவரையும்  வாழ்த்தினர்.   பக்கத்து  நாடு லக்ஷ்மீதரனுடையது.  அவன் மனைவி தூண்டினாள்.  இந்த சிறுவர்களை வளர விட்டால் உனக்கு உன் ராஜ்யத்தில் தங்க கூட முடியாது என்று ஓதினாள். கொன்று விடு என்றாள். அவள் விடாமல் நச்சரித்தாலும், மற்ற மந்திரிகளைக் கொண்டு சொல்ல வைத்தாலும், அவன் இந்த வாலிபர்களின் திறமையை அறிந்தவன். செவி சாய்க்கவே இல்லை.

ஆனால் அவன் நண்பன் தர்சனபாலன் இந்த சதிக்கு உடன் பட்டான். மார்கழி மாத இரவில் அவனும் தன் அடியாட்களூமாக காஸ்மீரத்தில் இருந்து புறப்பட்டு, தாமரர்கள் வசித்த உற்றச எனும் இடம் வந்தனர்.

 லாவண்யர்கள்  அரசனிடம் மிகுந்த கோபத்தில் இருந்தனர். அவர்கள் தலைவனும் தன் இளைய சகோதரனை அனுப்பி  உச்சல, சுச்சல சகோதர்களை  அந்த நாட்டில் இருந்து வெளீயேறி பத்திரமாக வேற்று நாட்டில் அடைக்கலம் புகச் செய்தான்.  ராஜ புரிக்கு பெரியவனும், காலிஞ்சர் என்ற இடத்தில் இளையவனுமாக தங்கினர்.  யாருமறியாமல் அவர்கள் சென்று விட்டாலும் அரசனுக்கு சந்தேகம் வந்தது.  சங்க்ராம பாலனை  பணம் கொடுத்து லக்ஷ்மீதரன் மூலமாக அந்த சிறுவர்களை கொலை செய்ய  ஆணையிட்டான்.  சங்க்ராமபாலன் மல்லாவின் ஆதரவாளன். அவன் புதல்வர்களின் வீரத்தை மதித்தவன்.

ராஜபுரி மக்கள் காஸ்மீர அரசனை வெறுத்தனர்.   உச்சலனும் கவனமாகவே இருந்தான். அரசனின் ஆட்கள் அரசனிடம் உண்மையாக இல்லை, ஆனாலும் ஏதோ கெடுதல் செய்ய தாமர தேசத்தின் உள்ளும் புறமுமாக நடமாடிக் கொண்டிருப்பதை அறிந்தான்.   சங்க்ராம பாலனுக்கு இது அரச கட்டளையை மீற தைரியம் கொடுத்தது.   வெளிப்படையாக உச்சலனுக்கு தன் ஆதரவை தெரிவித்து விட்டான்.  தாக்குர தலைவன், கலச ராஜன் என்பவன் அரசனின் தூதுவனாக சங்க்ராம பாலனை சந்திக்க வந்தான்.  இந்த செயலை மட்டும் செய்து இந்த இருவரையும் ராஜபுரி கொலை களத்திற்கே அனுப்பி விட்டால் அரசன் உன்னை பொன்னால் வர்ஷிப்பான். பல நன்மைகளை பெறுவாய் என்றான்.  காச- Khasas- என்ற  இனத்தினரின்  அரசன் சங்க்ராம பாலன்.   அதிக புத்தியுடையவனும் இல்லை. வலிமையும் இல்லாதவன் நடுங்கி விட்டான்.  வந்தவனிடம் ஒத்துக் கொண்டான். எனக்கு அந்த வலிமையோ, உதவியோ இல்லை. நீயே செய் என்று நகர்ந்து விட்டான்.

மறு நாள், உச்சலன் திரும்பி வருவதாக செய்தி கிடைத்து இந்த சதிகாரர்கள் காத்து இருந்ததை சந்தேகப்பட்டு உச்சலனின்  நண்பர்கள் அவனை எச்சரித்து விட்டனர்.  காச ராஜாவான கலசராஜன் தங்கள் திட்டம் தோல்வி அடைந்த விவரத்தைக் கேட்டு ஆத்திரத்துடன், படை திரட்டிக் கொண்டு வந்தான்.

உச்சலன் தன் படையுடன் ஆக்ரோஷமாக வந்தவனைக் கண்டதும் சதிகாரர்களே  வாயடைத்து நின்றனர்.   அவனுடைய கோபம் வெளிப்பட பேசிய  பேச்சில் இருந்த உண்மை சுட்டது.

 வேகமாக உரத்தி குரலில் தான் யார் என்பதைச் சொன்னான். ‘இது என்ன கேள்வி? பாரத்வாஜ குலத்தில் பிறந்த தர்வாபிசார அரசனாக இருந்தான். அவன் மகன் நரவாஹன். அவன் மகன்  புல்லா என்பவன். அவன் மகன் சார்த்தவாகனன்.  அதன் பின் சண்ட,   அவனுடைய இரு புதல்வர்கள், கோபாலன் மற்றும் சிம்ஹ ராஜா.  சிம்ஹ ராஜனுக்கு நிறைய புதல்வர்கள். அவன் மகள் தித்தா க்ஷேமகுப்தன் மனைவியானாள்.  ராணிக்கு தன் மகன் இல்லாததால்,  சகோதரன் உதய ராஜன் மகன்  சங்க்ராம ராஜாவை அரசனாக்கினாள்.  மற்றொரு சகோதரன் காந்திராஜாவின் மகன் ஜஸ்ஸ  ராஜா. சங்க்ராம மகன் அனந்தன், ஜஸ்ஸாவின் மகன் தன்வங்கன்.  அனந்தனின் வாரிசுகளில் கலசன் பட்டத்துக்கு வந்தான்.  மல்லா மற்றொருவனான குங்காவின் மகன்.  கலசனுக்கு ஹர்ஷன் போல, மல்லாவுக்கு நாங்கள் வாரிசுகள்.  அறிவில்லாதவர்களா நீங்கள்? இவன் யார் என்று என்னைக் கேட்கும் முன் நீங்கள் யார் என்று யோசியுங்கள். பூமி தன் நாயகனாக வீரனைத் தான் விரும்புவாள். பரம்பரை என்ன செய்யும்? ஆற்றல் உடையவனுக்கு அவனுடைய இரு கைகள் தவிர வேறு எவன் நண்பனாவான். இறைவன் அருள் தான்,   காஸ்மீர  சிற்றரசர்களின் உள் பூசல்களுக்கு ஆளாகாமல் தப்பினேன். குல துரோகிகள் நீங்கள்.  பார்த்துக் கொண்டே இருங்கள் என் சக்தி என்ன என்பதைக் காட்டுவேன். முடிந்தால் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். சொல்லிக் கொண்டே வெளியேறினான்.நூறு காலாட்படை வீரர்களுடன் வெற்றி முழக்கம் செய்த படி சென்றான். எதிரில் வந்த வேடன் கையில் வேட்டையாடிய முயலைப் பார்த்து, இது நல்ல சகுனம்.  சுயனலமிகளான இந்த துரோகிகள், இவர்களை அழிப்பேன் என்று ஸுளுரைத்தான்.   இந்த முயலைப் போலவே உயிர் இழப்பர்.  வழியில் பல இயந்திரங்களுடன் தொழிற்சாலைகள் இருந்தன, மரம் அறுப்பதும், கற்களை உடைத்து ஏதோ வேலைகள் நடந்து கொண்டிருந்தன. அவைகளைக் கடந்து ராஜபுரியை அடைந்தான்.  அசதியாக இருந்தாலும் தன் இருப்பிடம் வந்ததே மகிழ்ச்சியாக இருந்தது.  ராணிகளும் மந்திரிகளூம் வந்து வாழ்த்தினர்.   இருட்டும் நேரம் கலசராஜனின் படைகள் முற்றுகையிட்டதாக செய்தி வரவும் கிளம்பினான். ராணிகளும் மந்திரிகளும் வாசல் காவலர் கவனித்துக் கொள்வர், நீ ஓய்வு எடு என்று நிறுத்தி விட்டனர்.

விடிந்ததும் போருக்கான உடைகள், கவசங்கள் ஆயுதங்களுடன் தயாராக சென்றான். லோஷ்ட, வட்ட என்ற இருவர் போரில் மரணமடைந்திருந்தனர்.  எதிரிகளின் படை நடுவில் நுழைந்து  உக்ரமாக போரிட்டான். அவர்கள் தோற்று ஓடும்வரை விரட்டினான்.

 குறைந்த சேனையுடன் சித்திரை மாத பௌர்ணமியில் இருந்து வைசாக வளர் பிறை பஞ்சமி வரை தனக்கு ஆதரவாளர்களை ஒன்று கூட்டி, ஏற்பாடுகளைச் செய்தான்.  தாங்களே பொறுப்பு ஏற்றுக் கொள்ளச் சொல்லி வாதவன் முதலானவர்களை அனுப்பி வைத்தான். தான் க்ரம ராஜ்யம் வழியாக காஸ்மீரம் நோக்கிச் சென்றான். வழியில் க்ஷேமனின் மகன் கபிலன்  ஆதரவும் கிடைத்தது. 

படையின் தலைவனாக வாளும், தோல் ஆடையும், கவசங்களும் ஆயுதங்களுமாக நடத்திச் சென்றான்.  கபிலனின் மாணவர்களே முன் வரிசையில் இருந்து பர்ணோட்சா என்ற இடத்தில் போர் துவங்கியது.  வழியில் சுஜ்ஜகா என்பவனை வீழ்த்தி நேராக காஸ்மீரம் அடைந்தான்.  கழுகு தன் உணவைக் கண்டால் விரைவாக பறந்து வருவது போல என்று உவமை. 1301

திடுமென தாமரர்களும், பல காசிகா -खाशिका: மலையில் ஒளிந்து இருந்தவர்கள் அவனை சூழ்ந்து  கொண்டனர். ஆகாயத்திலிருந்து குதித்தவனோ,  பூமியில் கர்பத்தில் தோன்றியவனோ  எனும்படி எதிர்பாராமல் வந்து நின்ற உச்சலனைப் பார்த்து ஹர்ஷ தேவன் நடுங்கினான். என்ன செய்வான்?  க்ரமராஜ தேசத்தின்  ராஜ்யபாலனை அழித்து விடுவானோ?  மண்டலேசனை தாக்கினால் என்ன செய்வோம்?  காஸ்மீர தேசத்தில் காலூன்றி விடுவானோ, அதன் பின் யார் அவனை என்ன செய்ய முடியும்.  – இப்படி சிந்தித்து குழம்பினான்.

உடனடியாக செயல் படாமல் உள்ளுர் காவல் சிப்பாய்கள், அவசர கால போர் வீரர்கள் எதுவும் செய்யவில்லையே என கவலைப் பட்டவனாக பட்டா வை பெரும் படையுடன் அனுப்பினான். எதனாலோ அவன் பரபரப்புடன் செயல் படவில்லை. இயற்கையாக அவனுடைய முதுமை காரணமாக வீர்யம் குறைந்து விட்டதா ? முன் போல சதி வேலைகள், சூழ்ச்சிகள் செய்வதில் நாட்டம் குறைந்து விட்டதா,  அவன் மனப் பூர்வமாக இந்த வேலையில் ஈடுபட்டதாகத் தெரியவில்லை.  ஹர்ஷன் மேலும் பலரை அனுப்பினான்.  அவர்களும் பட்டாவை தாண்டிக்  கொண்டு செல்லவில்லை.  இவ்வாறாக, அரசனின் காவல் வீரர்கள் எவருமே உத்சாகமாக எதிர்க்காததால் உச்சலனின் வேலை சுலபமாயிற்று.  வராகமூலம் என்ற இடம் நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தவனை ஒரு வராகம்- பெண் பன்றி எதிர் கொண்டது. அரசனுடைய சொத்து அது.  அதன் உடலில் நன்மைக்கான சின்னங்கள் இருந்தன. தானே வந்து சேர்ந்த வெற்றிச் சின்னம் என்று உச்சலன் மகிழ்ந்தான்.  சுப லக்ஷணங்கள் கொண்ட ஒரு குதிரை எதிர் கொண்டழைப்பது போல அருகில் வந்தது.    மகாவராகம் என்ற கோவிலில் வணங்கிக் கோண்டிருந்த சமயம் அவன் கழுத்தில் விழுந்த மலர் மாலையால் மெய் சிலிர்த்தான்.     வழியில் தடைகள் போடப் பட்டிருந்தன.  காகா என்ற இடம் வைத்ய குலத்தவரும், உயர் அதிகாரிகளூம் வசிக்கும் இடம்.  ஹஸ்கபுரம் – என்ற தலை நகரைத் தாண்டி அதைச் சுற்றிக் கொண்டு க்ரமராஜ்யம் வந்து சேர்ந்தான். (காகா என்ற சொல் இன்றளவும் காஸ்மீரத்தில் மரியாதைக்குரியவர்களை குறிப்பிடுகிறது) 

தாமரர்கள் வெற்றி நிச்சயம் என்று இந்த நல்ல நிமித்தங்களால் ஊக்கம் அடைந்தனர்.   ஏற்கனவே அந்த பிரதேசத்து யசோராஜா என்ற முக்கியமான போர் வீரனை சுற்றி வளைத்தனர்.  அவன் உடன் வந்த படையை சின்னா பின்னமாக்கி விட்டிருந்தனர். அதனால் அவன் பின் வாங்கி தாரமூலகா என்ற இடத்தை அடைந்தான். அங்கும் உச்சலனின் ஆட்களே நிரம்பி இருந்தனர்.  இருந்தாலும் தைரியமாக எதிர்த்தான். உச்சலனுக்கும் இந்த யசோ ராஜனுக்கும்  இடையே மல்யுத்தம் , இரு யானைகள் முட்டிக் கொள்வது போல  நடந்ததாம்.   உச்சலனின் தாய் மாமனான அனந்தன் தன் தாமர படையுடன் மத்வ ராஜ்யம் என்பதை கைப்பற்றி விட்டான்.    வெற்றி முழக்கத்துடனும்  வாத்ய இசைகளுடனும் எண்ணற்ற தாமர வீரர்கள்  வந்து இணைந்து கொண்டனர்.  பனி உருகினால் பெருகி வரும் குளவிகள் கூட்டம் திடுமென வெளிப்படுவது போல இருந்த தாம்.  

அந்த பிரதேச தண்ட  நாயகனும்,  மஹத்தமாவும்  ( பிரதேச ராஜ்யபாலகன் ) ஆக பதவி வகித்தவன் போர் வீரனல்ல.  அதனால் அவனால் எதிர்த்து போரிட  முடியவில்லை.  ஆயுதங்களுடன் எதிர்த்த அவன் அணுக்க வீரர்கள் வரை தோற்கடிக்கப் பட்டனர். ஆயினும் தான் மட்டும் உயிர் தப்ப நினைக்காமல்   மாதவராஜ பிரதேசத்திலேயே இருந்தவன்,  உச்சலனிடம் சரணடைந்தான். ராஜதானிக்குள் அவர்கள் செல்லவும் அனுமதித்தான். இப்படி ஒருவனை நான் கண்டதேயில்லை என்று மனப் பூர்வமாக பாராட்டினான்.  கிராமங்களையும், சிறிய பெரிய நகரங்களையும் படை வீரர்கள்  சுற்றி வந்தனர். அனந்தன் கடுமையாக எச்சரித்திருந்தான். எந்த பொருளையும் தொடக் கூடாது,  அநாகரீகமான செயல்கள் எதுவும் செய்யக் கூடாது என்றும்   நல் குடியில் பிறந்தவர்கள் என்று  மதிக்கும் படியாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரைகள்.

அதன் பின் பரிகாச புரத்தில் நுழைந்தனர்.  மலைப் பாங்கான பிரதேசம்.  வெண்ணிற நுரையுடன் நதிகள் பிரவகித்துக் கொண்டிருந்தன. செங்குத்தான சிகரங்கள்.  எங்கிருந்தோ பெருகி வரும் வெள்ளம்.  பாதையே கடுமையானது. மனத்  துணிவும், உடல் பலமும் சேர்ந்தால் எதைத் தான் சாதிக்க முடியாது.  கோழையான ஆமைக்கு தடிமனான மேல் தோல் அதன் உடலை பாதுகாக்க தேவைப் படுகிறது.  சிங்கம் இயல்பாகவே போர் குணம் கொண்டது. அதற்கு பாதுகாப்பு கவசம் போல எதுவும் இல்லை. இறைவனின் லீலை. எளியவனுக்கு உதவும் போதே, வலிமையுடன் சில      பிறவிகளை படைத்து, தன்னைக் காத்துக் கொள்ள அறிவும், பலமும் அளித்து அனுப்பி விடுகிறான், 1329

ஹர்ஷ தேவனுக்கு செய்தி சென்றது. பரிகாசபுர ராஜ்ய பாலன் ‘நான் அவனை ஏமாற்றி, குள்ள நரியை பிடிப்பது போல பிடித்து வைத்திருக்கிறேன். வந்து அவனை வதைக்கவும்’ ஹர்ஷனும்  தன் சிறந்த வீரர்களும், மந்திரிகள், சேனைத் தலைவர்களுடன் மிகப் பெரும் படையுடன் வந்தான்.  வெற்றி அல்லது வீர மரணம் என்ற நிச்சயத்துடன் வந்தான். உயிருக்கே ஆபத்து என்பதால் படஹம் என்ற வாத்தியத்தை இசைத்து நகர மக்களையும் ஒன்று சேர ஆணையிட்டான்.

பயிற்சி அளிக்கப் பட்ட உயர்தர குதிரைகள், மற்ற வாகனங்களில் அவர்களின் படை கடல் அலை போல வந்து கொண்டே இருந்தன.  பாரத பாலம் என்ற இடத்தை அடைந்து விட்டிருந்த உச்சலன் படைகள், தங்கி இருந்த இடம் வந்தனர்.  மண்டலேஸ்வரன் இந்த படை பலைத்தைக் கண்டவுடன் தானும் அதன் மத்தியில் நின்றான்.  உச்சலனின் படை சிதறியது. சில தாமரர்கள் ராஜ விஹாரம் என்ற பவனத்தில் நுழைந்தனர். அவர்களில் ஒருவனான த்ரில்லசேனா  என்பவனை தவறுதலாக உச்சலன் என நினைத்து அந்த ராஜ பவனத்துக்கே தீ வைத்தனர்.

அந்த பெரும்  படை உச்சலனையே சூழ்ந்து நின்றது.  அவனும் தானே  தனியாக எதிர்த்தான். அதில் தர்சனபாலனின் மாமன் சோம பாலனும் இருந்தான். உடன் இருந்து போரிட்டான்.   ஜனக சந்திரன் முதலானோர் உச்சலனைத தள்ளிக் கொண்டே போய் போர் முனையை விட்டு வெளியேற்றி விட்டனர்.   பரிகாச புர போரே யமனுடைய வாய் போலவும் அதிலிருந்து தப்பித்து விட்டது  போலவும் உச்சலன் பிழைத்தான் – விதஸ்தா நதியை நீந்திக் கடந்து, உயர் ஜாதி குதிரை ஒன்றில் ஏறிக் கொண்டு கௌரிகாபால என்ற கிராமத்திலிருந்து வெகு தூரம் சென்று விட்டான். மீதமிருந்த தாமர வீரர்கள் வந்து சேர்ந்து கொண்டனர்.  தார மூலகம் என்ற இடம் வந்தடைந்தனர்.  ஹர்ஷ தேவன், சாதாரண  ஸூதாட்டத்தில்  அறிவில்லாத ஸூதாடி யதேச்சையாக ஆட்டத்தில் வென்றவன்,  வெற்றி வெற்றி என்று கூச்சலிடுவது போல ராஜ்யபாலனை பாராட்டி விட்டு,   இறுமாப்புடன் படையுடன் தலை நகரம் திரும்பினான். எதிரி உயிருடன் தப்பி விட்டான் என்று அறிந்தும் பின் தொடரவில்லை. 

உச்சலனின் பட்சத்தைச் சேர்ந்த தாமரர்கள் திரும்பவும் கூட்டு சேர்ந்தனர்.  உச்சலனும் தன் நம்பிக்கையை இழக்காமல் அடுத்து வந்த ஜேஷ்ட – ஆனி மாதத்துக்குள் சிதறிய படை வீரர்களை ஒன்று கூட்டி பெரும் முயற்சியுடன் படை பலத்தை கூட்டிக் கொண்டான்.  சுத்த வீரன், தன் புஜ பலத்தை  மட்டுமே நம்பியவன்.  இப்படி தனக்கு ஆதரவாளர்களை திரட்டிக் கொள்வது கூட அவன் இயல்புக்கு ஒவ்வாததே. இயற்கை பொய்த்து பஞ்சம் வந்தால் என்ன செய்வோம்.  தனி மனிதனின் திறமை மட்டும் எடுபடுமா? அது போல என்று கவி வர்ணிக்கிறார்.  கடினமான சூழ் நிலையிலும் பரிகாச கேசவனின் உருவத்தை தன் மனதில் நினைத்து வணங்கி வழி பட்டு வந்தான். அந்த மூடன், ஹர்ஷனின் ஆட்கள் அதை உடைத்து விட்டனர்.  அந்த சமயம் ஹர்ஷணின் தலையை துண்டித்து தான் பரிகாரம் செய்வேன் என்று சபதம் செய்தான்.  அவனால் தாங்கவே முடியாத அக்கிரம செயல்.   வானமும் பூமியும் நடுங்கியது போலவும் புகை போல தூசி எழுந்தது போலவும், புறாக் கூட்டம் வானத்தில் நிறைந்து ஆதவனின் ஒளியை மறைத்தது போலவும் இருந்தது.  அவன் மனம் துடித்தது. 1345 ஹர்ஷ தேவனின் தலையை, அவன் அரச பதவியையும் அது மறைக்கும் நாள் அதிக தூரத்தில் இல்லை என உணர்ந்தான்.  

முன் ஒரு சமயம் பனி மூடி இருள் ஸூழ்ந்த ஒரு  பகல் பொழுதில் இந்த புறாக்களின் வெள்ளி  நிற சிறகின் ஒளி பகலவனுக்கு மாற்றாக ஒளி கூட்டியது என்று அந்த மக்களின் நெடுங்கால நம்பிக்கையாக உள்ளது.

பரிகாச புர கேசவன் கோவிலை ஸ்தாபித்த பின் தான் அந்த கடும் பனியால் அவதியுறுவதும் குறைந்தது. அதையா உடைத்தாய், என்று சொல்வது போல , அடுத்த நாற்பத்தைந்து  நாட்கள்  அது போலவே பனி சூழ்ந்து .பகலை இரவாக்கியது.

இதனால் மக்களின் நடமாட்டம் குறையவும், எதிரிகளும் அடங்கி விட்டனர் என ஹர்ஷன் மகிழ்ந்தான்.  அதே சமயம் ஸூரபுரத்தில் சுச்சலன் தீவிரமாக ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தான்.  பகலவனின் திசை மாறி  அந்த திசையில் தோன்றியது போல – கவியின் சொல்.

அவனாக अवनाह – ஊர் பெயர்.  என்ற இடத்தில் இருந்தவனுக்கு தந்தையிடமிருந்து வருத்தத்துடன் எழுதிய செய்தி கிடைத்து விட்டது.  தன் மூத்த சகோதரனை ஆபத்து சூழ்ந்திருப்பதை எண்ணி தான் மேற்கொண்டு செய்ய வேண்டியதை யோசித்தான்.  கல்ஹ என்ற அரசனின் சபையில் இருந்தவன், அரசனின் உதவியுடன், சில குதிரை வீரர்களுடன்,  கிளம்பினான்.   அரசன் கல்ஹன் அவனது சமாதான பேச்சு வார்த்தைகளில் மிக்க மதிப்பு வைத்திருந்தான்.  விடிந்ததில் இருந்து மாலை வரை  வாய் வார்த்தையாக பேசியே,  எதிர்த்து நின்ற மாணிக்கன் என்ற சேனாபதியை சமாதானம் செய்து விட்டிருந்தான்.    அதனால் ஸூர புரத்தில் அவனுடைய மதிப்பும், செல்வமும் நிறைந்தது.  அரசன் தான் ராஜ்யத்தை திரும்பப் பெற்றதும், நாட்டில் அமைதியும் வளமும் கூடியதும் அவனுடைய  அரியதான சொல் திறமையாலே என்று நம்பினான்.  மண்டலேஸ்வரனாக ஆக்கினான்.  தற்சமயம் சகோதரன் உச்சலன் ஆபத்தில் இருக்கிறான் என்பதால் கிளம்புகிறான் என்பதை நினைத்து அனுமதி அளித்தான். சுச்சலன் இயல்பாகவே எடுத்த காரியம், எதைச் செய்தாலும் விரைவாக செய்து விடுவான்.

இதையறிந்த ஹர்ஷன் பட்டா முதலிய மண்டல் அதிகாரிகளை களம் இறக்கினான்.  எதிர்த்த அனைவருமே சுச்சலனின் போர் திறமை, திட்டமிடுதல் இவைகளால் தோற்று விழுந்தனர்.  தர்சனபாலன், தன் தலைவனுக்கே துரோகம் செய்தவன் என பெயர் பெற்றிருந்தவனும் வீழ்ந்தான்.அவனுடன் வந்திருந்த போர் வீரர்கள் பயந்து ஓடி விட்டனர்.  அதன் பின் சஹேலா  என்ற அரசன் லோக புண்யம் என்ற இடத்தில் இருந்தவன், கல்பமே முடிவதாக பயந்த சஹேலாவை எளிதில் வென்று,  வழியில் எதிர்த்தவர்களையும் அதே போல ஓடச் செய்து விட்டு தாரமூலம் என்ற இடத்தில் இருந்த உச்சலனிடம் வந்தான்.

காலாட்படையே பிரதானமாக கொண்டிருந்த தாமரர்கள்,  குதிரை படையைக் கண்டு அஞ்சினர்.  அவர்கள் பயத்தைப் போக்கி, கடினமான லாஹர வழியில் மலைத் தொடர்களைக் கடந்த்து அழைத்து வந்தான்.  உதய ராஜா என்ற ஒரு சிற்றரசனும் உச்சலனை எதிர்த்து தன் மண்டலேஸ்வரனை லாஹர – பிரதேசத்துக்கு அனுப்பி இருந்தான்.

பத்மபுரம் என்ற இடத்தில், மல்ல புதல்வர்களின் தாய் மாமன் தன் படையுடன் அவர்களுக்கு உதவியாக வந்த பின், ஹர்ஷராஜனின் படை வீரர்களே அரச ஆணையை மதிக்க தயாராக இல்லை.   

எனக்கு ஆதரவாக எவருமே இல்லையா என்று ஹர்ஷ தேவன் புலம்பினானாம்.   முன் பிரபலமாக இருந்த ஜிந்துராஜாவின் வழித் தோன்றலான  சந்திர ராஜாவை அனுப்பினான்.  துரோணாச்சரியாரின் மகனை, வேறு வழியின்றி அனுப்பியது போல இவனை  பத்மபுரத்துக்கு  அனுப்பியதாக கவி சொல்கிறார்.  படுக்கையில் படுத்து உயிரை விடுவதை விட போர்க் களத்தில் மரிப்பது மேல் என்ற எண்ணத்துடனேயே சந்திர ராஜா கிளம்பினானாம்.  வெல்வோம் என்ற நம்பிக்கையே இல்லாமல். அதே போல அவந்தி புர எல்லையிலேயே வளர் பிறை நவமியில் எதிரிகளின் பலத்தின் முன் எதுவும் செய்யத் திறனின்றி மடிந்தான். கோவர்தனதர என்ற இடத்தில் உடன் வந்த சைன்யமும் விலகி ஓடி விட்ட நிலையில் குதிரை வீரர்களை முதன் முதல் கண்டவன் விதஸ்தா வரை கூட முன்னேறவில்லை.  அவன் தலையை மட்டும் ஹர்ஷ ராஜாவுக்கு அனுப்பி விட்டனர்.  அதன் பின்னும் மற்றொரு படையை அனுப்பினான். போர் வீரர்கள் தாங்க முடியாத பனி மழையில் நடுங்கிக் கொண்டு முன்னேறவே விருப்பம் இன்றி தயங்கினர்.  லாஹராவின் ராஜ்ய பாலனின் உத்தரவை தட்டவும் முடியாமல் மெள்ள நகர்ந்த படை திடுமென பெய்த மழையால் மேலும் பாதிக்கப் பட்டது.  வரிசை கலைந்து ஓடலாயினர்.  ஜனகசந்திரனின் தலைமையில் உச்சலனின் வீரர்கள் லாஹர ராஜ்ய பாலனை வதைத்து விட்டனர்.

ஹர்ஷராஜனோ தன் படை வீரர்களையே சந்தேகித்தான்.  சிங்கம் வன ராஜா தான். எதிர்க்க முடியாத சக்தி வாய்ந்தது.  அதுவும் தன் பின்னால் திரும்பித் திரும்பி பார்த்துக் கொண்டே போகுமாம். யானையிடம் பயம். முன்னால் வந்தால் அடிக்கலாம், பின்னாலேயே வந்து தாக்கினால், அது போல எங்கிறார் கவி.  விதியின் ஒரு கை – விதியின் ஒரு பங்கு அதன் முன்னால் வெற்றியையும்,  பின்னால்  யானை ரூபத்தில் தோல்வியையும் கொண்டுள்ளது. 

தராசின் இரு தட்டுகள் போல ஏறியும் இறங்கியும்  பொருளின் எடையைக் காட்டுவது போலவே சம மான வீரர்கள் இரு பக்கமும் இருந்தாலும் வெற்றி தோல்வி நிச்சயமில்லாமல் போவது கண்கூடு.  மூன்றாவது நாள் போர். கொட்டும் பனி  மழை தாங்க முடியாமல் படை வீரர்கள் ஓடி ஒளிந்தனர் அல்லது மடிந்து விழுந்தனர்.  வெற்றியோ தோல்வியோ நம் கையில் இல்லை என பேசுபவர்கள் கூட செயலின் பலனை விமரிசிக்க முடியாது.  வெற்றியில் விதி நினைவில் வராது. தோற்றால் மட்டுமே விதி என்பர்.   கஜ்ஜா என்ற அவன் தாயார் அரசனை வேண்டினாள். என் ஒரே மகன், இவனை அனுப்பாதே என்றாள். அரசன் சொன்னான், எனக்கும் ஒரே ஒரு சாகசம் உடைய வீரன் அவன் தான். என்று பதில் சொன்னான். தாயே,  நீ மற்றொரு மகன் இல்லை என்பது போலவே எனக்கும் மற்றொரு வீர சேனைத் தலைவன் இல்லையே. இவன் ஒருவன் தான் எனக்கு ஒரே ஒருவன் நம்பிக்கைக்கு உகந்த வீரன்.  அந்த தாயார், மகனின் எஜமான விஸ்வாசமே  அவனுக்கு பரலோகத்திலும் நன்மையைத்  தரட்டும் என்று வேண்டிக் கொண்டாள். மகனின் இறுதிச் சடங்கில் பங்கு கொண்டாள்.

உச்சலன் ஹிரண்ய புரம் வரை வந்து விட்டான். அங்கிருந்த பெரியவர்களும், ஊர் மக்களும் அந்தணர்களைக் கொண்டு அவனுக்கு அரசனாக முடி ஸூட்டி, நீராட்டினர்.  

அரசன்  ஹர்ஷனுக்கு மந்திரிகள் ஆலோசனை சொன்னார்கள். சிறிது காலம் லோஹராவில் போய்  வசித்து விட்டு வாருங்கள். அங்குள்ளோர் உங்கள் ஆதரவாளர்களே. பின் காலம் நமக்கு சாதகமாக ஆன பின் திரும்பி வரலாம். அரசன் சம்மதிக்கவில்லை. இந்த அரண்மனையை விட்டு,  பொக்கிஷத்தை விட்டு, அந்த:புர பெண்களை விட்டு, அரியணை, அரச போகங்கள் இவைகளையும் துறந்து அங்கு போய் என்ன செய்வேன்.   மந்திரிகள் விடாமல் தொடர்ந்தனர். அந்த:புர ராணிகளை, செல்வங்களை நாங்கள் கொண்டுவந்து  சேர்க்கிறோம்.  அரசன் அதற்கும் சம்மதிக்கவில்லை. அதற்குள் அந்த நாடோடி மகன் – உச்சலன்- (அவன் தாய் அரச குலத்தவள் இல்லை என்பதால்) அரியணையில் அமர்ந்து விடுவான். அரியணையின் மதிப்பே அவ்வளவு தான் என்றாகும். வேறு ஏதாவது உபாயம் சொல்லுங்கள் என்றான்.  மந்திரிகள் சொன்னார்கள், ‘அரசே! இது அரச தர்மம். தன் அரசை உயிருள்ளவரை காப்பதே அவன் கடமை. தன்னையே நொந்து கொள்வதை விட போர் களத்தில் மடிவதே மேல். ‘

அனுசரித்து நடந்து கொள்வதும், தயக்கமும், பயமோ,இரு விதமான யோசனைகளோ,  மந்திரிகளுக்கும், அரசனுக்கும் சுகமோ, துக்கமோ இவைகளுக்கு காரணமாகும். தன் உடன் பிறந்தாரோ, உறவினரோ அல்ல.  அரசன் அனைத்தையும் மந்திரிகளிடம் விட்டு விட்டு தான் செயல் திறன் இன்றி இருந்தால் கண் தெரியாதவன் தன் கைத்தடியை நம்புவது போல ஒவ்வொரு காலடியும்  அவனுடையது அல்ல என்றாகும்.

தன் கை வசம் ஆயுதம் இன்றி  இருப்பவன் அல்பனான எதிரியிடம் கூட தோற்பான். கூர்மையான அறிவு இல்லாதவன், தயங்குபவன், அறிவில்லாதவன்  ஆவான்.  மகேந்திரனாக இருப்பவன் நாளடைவில் அல்பனாக ஆவதும்,  அல்பனாக இருப்பவன் மகேந்திரனாகவும் ஆவது உண்டு.  இவைனை நம்பலாம், இவன் யோக்யனல்ல என்ற தன் உணர்வு

அரசனுக்கு அவசியம். ஒருவனே அனைத்தையும் செய்யவும் முடியாது.  உடன் உள்ள மந்திரிகளை சார்ந்து இருப்பது தவிர்க்க முடியாது என்பதால் கூர்மையான புத்தியும், என்னேரமும்  கண்காணிப்புடன் இருப்பதும் அவசியமாகிறது.  சாதிக்க விரும்புபவனுக்கு பயம் எதிரி. அதுவும் உடல் ஊனமும் ஒன்றே.  ஊனமான அங்கங்கள் தனதே ஆனாலும் பயன் படாமல் போவது போல. சர்வ சம்பத்தும் நிறைந்து உள்ளவன் தான் என்றாலும் உடல் ஊனம் அனுபவிக்க விடாது என்பது போல. அது தவிர  அரசன் செல்வாக்குடையவனாக, தானும் சக்தியுடையவனே  என்றாலும்  தான் நம்பும் ஒருவனே  தன் அனைத்து செயல்களையும் செய்ய அனுமதிக்க கூடாது.  

உயர் பதவி, அதிகாரங்கள், ஏராளமான செல்வம், இவை எல்லாம் சுதந்திரம் இல்லாமல் மற்றவனுக்கு அடிமையாக இருப்பவன் எப்படி முழுமையாக அனுபவிப்பான்.   உள்ளூற பயம் இருக்கும்.  எந்த நிமிடமும்  தன் உயர் அதிகாரியோ, அரசனோ, அவமதிக்கலாம்.  தன் செயலில் குற்றமோ, குறையோ சொல்லலாம்.  சிறு விஷயத்தில் கூட மந்திரியிடம் மன வேறு பாடு வரக் கூடும். அல்லது உடன் பாடும் வரலாம்.  தயிரை கடையும் மத்தை இருவர் இரு பக்கமும் இழுத்தால் என்னாகும்.  1400 . 

அரசன்  தன் அரசாட்சிக்கு  எதிராக செயல் படுபவர்களை  நாட்டில் வளர விடக் கூடாது.  உடல் ஊனத்தை ஒருவன் காரணமாக காட்டி அரசனிடம் ஆதரவு கேட்கும் உளவாளிகளும் உண்டு. எதிரிகள் யாருமறியாமல் ஊடுருவி நாட்டுக்குள் வரக் கூடும். போர் என்று வந்தால் அரசனும் பங்கு ஏற்க வேண்டும். படையை அனுப்பி விட்டு தள்ளி நிற்பது வெற்றியைத் தந்தாலும் அரசனுக்கு பெருமை சேர்க்காது. வெற்றி தோல்வியை எதிர்பார்த்தே களத்தில் தன் வீர்களுடன் இறங்கும் தகுதியுடைய வீரனான அரசன். அவனே என்றும் புகழ் பெறுவான்.  யுத்த களத்தில் வீழ்வது வீர சயணம் என்ற பெருமையை பெறும்.   அதை அடைந்தவர்கள் தன்யா: பேறு பெற்றவர்கள் என் புகழப் படுவர்.  அதுவே,  சேனைத் தலைவர்களையே முழுவதுமாக நம்பி வந்தது வரட்டும் என்று இருப்பவன் நல்ல அரசன் அல்ல.  உத்கர்ஷன் போல தன்னை மாய்த்துக் கொள்வது கூட அனுமதிக்கப் பட்டதே.

இதைக் கேட்ட அரசன், ‘நானாக என் உயிரை மாய்த்துக் கொள்ள எனக்கு மன வலிமை இல்லை. உங்களில் ஒருவரே அதை செய்து விடுங்கள்’ என்றான்.  அறிவில்லாத சோம்பேறி போல இப்படி பேசும் அரசனைப் பார்த்து மந்திரிகள் வருந்தினர்.  இவ்வளவு காலம்  அரசனை காக்கவே போரில் உயிரை விட்டவர்களை ஏளனம் செய்வது போல அருகில் இருந்து நாங்களே இந்த செயலை செய்வோமா,  உடல் நிரந்தரமல்ல. ஒரு நாள் மடியத்தான் போகிறது என்று அறியாதவர்களா நாங்கள்.  ஆயினும்  அதை தானே தியாகம் செய்வது  வேறு.   அருகில் இருந்தவர்களே கொன்று விட்டனர் என்றால், எங்கள் உண்மையான சேவகத்துக்கு என்ன மதிப்பு.   நாங்கள் தூற்றப் படுவோம். யார் அறிவர், அரசனின் வேண்டுகோள்  அது என்றால் யார் நம்புவர்.    அரசனை எந்த நிலையிலும் காப்போம் என்று உறுதி எடுத்துக் கொண்டு காவல் காக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டவர்கள் உயர் அதிகாரிகளும் மெய்க் காப்பாளர்களும். எங்கள் கை அதற்கு எதிராக உயராது.  மனித உருவில் வந்த மிருகங்கள் அரசன் அறியாமல் அவர்களை வளர்த்து விட்டிருக்கிறான் என்பர்.   அந்த இகழ்ச்சி எங்கள் உழைப்புக்கு, எங்கள் தன் மானத்துக்கு இழுக்கு.  எங்கள் பிறவியே வீண் என்றாகும். அதை செய்ய மாட்டோம். வீரனை மணந்த பெண்டிர் உடன் கட்டை ஏறத் தயங்குவதில்லை.  இப்படி கூத்தாடி போல தீனனாக பயந்து நடுங்கும் கோழையாக தங்கள் கணவன் புலம்புவதை அவர்கள் கண்டிருந்தால் இந்த தியாகத்தால் என்ன பயன்.

தங்கள் புதல்வர்கள் பசியால் வாடுவதை காண நேர்ந்த பெற்றொருடைய துக்கமோ,  தன் மனைவியை பிறர் வீட்டில் பணி செய்வதை அனுமதிக்கும் கணவனின் துக்கமோ,  நண்பன் துன்பத்தில் வாடுவதை கண்டும் செயலின்றி இருக்க நேர்ந்தாலோ,  வீட்டுப் பசு உணவின்றி அதற்கான தீவனம் அளிக்க இயலாமல்  ஹூங்காரம் செய்வதை ஒருவன் பார்த்துக் கொண்டிருந்தாலோ, பதியை இழந்த  பெண் போலவோ, பெற்றோர் அருகில் இல்லாமல் அவர்களை வெகு தூரத்தில் முதுமையில் தவிக்க விடுவதோ,  தன் தலைவன் போரில் தோற்றாலோ,  .இவைகளை அனுபவிப்பவர்கள் வருந்துவதை விடவா, நரகத்தில் உழலுவதால் ஒருவன் அனுபவிக்கப் போகிறான். 

அரசன் தானே  அறிவில்லாத மிருகம் மனித உருவில் வந்தவன் போல,   வீர செயல்கள் சாகசங்கள் செய்தவனா என வியக்கும் படி ஏதோ துர் தேவதை ஆட்கொண்டு விட்டவன் போல பதில் சொன்னான்.  இந்த விசாலமான ராஜ்யத்தை நான் முழுவதுமாக அனுபவித்து களைத்து விட்டேன். என்னைப் போல ராஜ போகத்தை அனுபவித்தவன் எவருமில்லை.   யமனும், குபேரனும் அரசனின் நாக்கில்- சொல்லில் இருக்கிறான் என்பர். (தண்டனையும், செல்வமும்)  கலி யுகத்தில் இவர்கள் இருவரும் நம் அரசனிடம் அடிமைகளாக இருக்கிறார்கள் என்று பாடப் பெற்றேன்.  ருத்ர, உபேந்திரன், மகேந்திரன்  இவர்களுக்கும் இதே வழி தான்.  நீண்டு நெடுக இருந்தாலும் ஓரிடத்தில் வழி முடியத் தான் போகிறது எனும் பொழுது மனிதனாக பிறந்தவன் மரணத்திற்கு ஏன் பயப்பட வேண்டும். 1418

குல வது, கணவனுடன் மகிழ்ச்சியாக இருக்கும் இல்லற பெண்ணைப் போல என் நாடு தூய்மையாக மகிழ்ச்சியாக இருக்கும் படி ஆண்டு வந்தேன்.   என் தவறால், அல்லது என் இயலாமையால் அவளை வேறு அரசனுக்கு  பணி செய்பவளாக  காண்பேனா?  இந்த ராஜ்யத்தை தகுதி இல்லாதவன் அடைந்தால்,    குலமோ, குணமோ, ஆற்றலோ இல்லாத  சாதாரண பிரஜை கூட ராஜ பதவிக்கு வர ஆசைப்படுவான். என்னுடைய வெற்றி தானாக வந்தது இல்லை.. மனித முயற்சியால் முடியாது என்ற செயல்களை  கூட முயற்சியால் வென்று முடித்தவன் நான்.  என் அரசு விசாலமாக ஆக பாடுபட்டவன்.  உடலாலும், அறிவினாலும் உழைத்து வெற்றிக் கனி என்ற ருசியை அனுபவித்தவன். ஏதோ ஒரு அல்பன் இதை அடைந்தால்,  கர்வத்தால் நிச்சயம் சிரிப்பான்.  இந்த பாடு பட்டாயே, என்னைப் பார் என்பான்.  செயலை ஆரம்பித்த சமயம் அதன் பலாபலன்களை  அறிவோமா.   எப்படி முடியும் என்பதை உறுதியாகவோ சொல்ல முடியும்.  பொதுவாக மக்கள்,  வெற்றியில் முடிந்தால்  போற்றுவதும், தோற்றால் இகழ்வதும் தான் இயல்பு.   அதை செயல் வீரன் பொருட்படுத்துவதில்லை.

பாற்கடலை கடைவது என்ற செயல் – அதை ஆரம்பித்த சமயம் இரு பக்கத்தினரும் என்ன எதிர் பார்த்தனர்.   இணைந்து செய்யும் செயல்.  கடையும் சமயம் எவனுடைய மரணம் எப்படி வரும் என்று எண்ணவில்லையே.  மரணத்தை வெல்வோம் என்று ஆரம்பித்தனர்.  கடையும் செயல் முடிந்தவுடன் மந்தர மலையை எவரும் லட்சியமே செய்யவில்லை.  அதுவே,  கடையும்  பொழுது மூழ்கிய போது ஒருவரையொருவர் குற்றம் சொன்னார்கள்.

சாஸ்த்ர சம்ப்ரதாயங்களை அறிந்து அனுஷ்டித்தேன்.  ராஜ குலத்தில் பிறந்தவன் அரச குலத்தினன் என்ற தகுதியும் இருந்தது.  என் நாட்டு மக்கள் நலனுக்காக செல்வத்தை செலவழிக்க தயங்கவே இல்லை.  அது கூட என் அறியாமையோ எனத் தோன்றுகிறது.  உச்சலன் அரசனானால் என் செயல்களின் பலனை அனுபவிப்பான். மடையன் அவன். என் விரல் நுனி அளவே அறிவுடையவன். அவன் பல்லும், அவனும்.  அதுவே எனக்கு அவமானம். பயம் அல்ல. என் கை வலிமை குன்றியதால் இந்த மனக் குமுறல் தோன்றியுள்ளது.    என்னைப் பற்றிய பிம்பம்,  திடமான மனதும் , உடல் வலிமையும் கொண்ட அரசன்  என்று மக்கள் மனதில் உள்ளதை தக்கவைத்துக் கொள்ளவே மரணத்தை வரவேற்கிறேன்.  விரைவில் என் மரணம் நிகழுமானால், என் ராஜ்யம் தகுதியில்லாதவன் கையில் சின்னா பின்னமாவதை கண்டு வருந்தாமல் இருப்பேன்.  என் புகழுடம்பு நிலைத்து நிற்கையிலேயே, என் முடிவும் வர வேண்டும்.  அது தான் என் விருப்பம். 

முன் காலத்தில் முக்தாபீடன் அரசனாக இருந்த வரை தலையில் வைத்து கொண்டாடினார்கள். விரோதிகள் கிடைத்த இடைவெளியை பயன்படுத்தி அவனை ஒடுக்கி விட்டனர். பரிதாபமாக  கெஞ்சும் நிலைக்கு ஆளானான். வட திசை நோக்கி சென்றான். வழியில் சைன்யம் மேற்கொண்டு செல்ல முடியாமல் திகைத்து நின்று விட்டது. உடன் வந்தவர்களின் துரோகம் வழி தெரியாமல்  பாதி பிரயாணத்தில் செய்வதறியாமல் திகைத்து நின்று விட்டான். சல்யன் என்ற ஒரு அரசன் தனது ஏராளமான படை வீரர்களுடன் அவனை சிறை பிடிக்காமல் திரும்ப மாட்டேன் என்று  சபதம் இட்டு அந்த இடத்திற்கு வர கிளம்பினான்.    பதினாறு லக்ஷம் குதிரை வீரர்கள் அவனுடன் வந்தனர்.   சாம தானம் என்ற நால் விதமான உபாயங்களையும் எண்ணி யோசித்து  பார்த்தும் சரியான வழி புலப்படவில்லை.  களைத்து போய், முக்யமந்திரியான பவஸ்வாமி என்பவனை ஆலோசனை கேட்டான்.   கடுமையான மலைப் பிரதேசம்.  சரியான வழித் தடமும் இல்லை.  பழக்கமில்லாத சீதோஷ்ணமும், குளிரும்.  எந்த உபாயம் சரியாக வரும் என்பதை ஆலோசித்து பதில் சொன்னான்.  யோசியாமல் ஆரம்பித்து விட்ட பிரயாணம். நடுக் காட்டில் திக்கு தெரியாமல் திகைத்து நிற்கும் இந்த  நிலையில் உடல் பலமோ, படை பலமோ உதவாது. உங்களுடைய மனோ பலம் தான்  உடனடி தேவை. பரபரக்காமல் நிதானமாக யோசியுங்கள். மனம் தளராமல் என்ன செய்யலாம் என்று யோசிப்போம். தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றியே ஆக வேண்டும். இது வரை சேமித்த ராஜ பதவியினால் பெற்ற நற் பெயர், மக்களின் நம்பிக்கை இவற்றை தக்க வைத்துக் கொள்ளவே முயற்சி செய்வோம்.  சாம் ராஜ்ய ஆசை ஒரு பக்கம் இருக்கட்டும்.  தற்சமயம் செய்ய வேண்டியதையே சிந்திப்போம்.    படை வீரர்களை பத்திரமாக நாடு கொண்டு சேர்ப்பது முதல் கடமை.  மரணம் அடைந்தபின் உடலை தகனம் செய்தாலும் சாம்பல் மிஞ்சும்.  ஜீவித்த காலத்தில் செய்த நன்மைகள் வாசனைப் பொடி போல மணம் வீசும்.  அனங்கன்-  உடலைத் தான் இழந்தான். பெண்களின் கடைக் கண் பார்வையில் இன்னமும் ஜீவித்து இருக்கிறான்.  மனிதர்களின் மனமும் வாக்கும்  அரியன செய்தவர்களை மறப்பதில்லை.  எந்த நிலையிலும் தன் இயல்பை விடக் கூடாது. அரசனாக ஆட்சி செய்தவனுடைய பெருந்தன்மை இடுக்கண் வரும் காலத்திலும் அவர்களை காப்பதே.  அப்படி  பிரஜைகளைக் காத்தவன்  இறந்தாலும்  அவன் புகழ் உலகில் பரமாணுக்களாக  நிலைத்து இருக்குமாம்.  பிறவியிலேயே நமக்கு  விதிக்கப் பட்டது தான் நமக்கு கிடைக்கும் என்பதும் ஒரு வாதம்.  விரோதிகளிடம்  அந்த வாதம் பயனற்றது.   அந்த இடத்தில் இயன்றவரை முயற்சியைத் தான் பெரியவர்கள் அறிஞர்கள் அறிவுறுத்துவார்கள்.  அவர்கள் உங்கள் வளர்ச்சியை தடுக்கவே போர் முனைக்கு வந்தவர்கள். 1437

விதாதா- படைப்புக் கடவுள், தன் படைப்பில் முன்னுக்கு வந்தவர்களை தானே கீழே இறக்குவதில் திருப்தி அடைகிறானோ என்று தோன்றுகிறது. . ஏனெனில், தான் பிறந்ததே பத்மத்தில்.- தாமரை மலரில்.  அந்த மலர்கள்  மலர்ந்து நிறைந்துள்ள குளத்தைக் கண்டு நிலவே வெட்குமாம். அந்த அழகுக்கு முன் தான் எம்மாத்திரம் என்று  நினைக்குமாம். ஒரு யானையைப் படைத்து  குளத்தில் அது இறங்கி மலர்களை சிதைப்பதை எப்படி அனுமதிக்கிறான். அது அந்த மலர்களுக்கு  செய்யும் அவமானம் இல்லையா.  அது போலவே சிலரை படைத்து விட்டிருக்கிறான். யானை போலவே புகழ் பெற்று முன்னிலையில் உள்ளவர்களை கீழே இறக்கும் படி பிடிவாதக் காரர்களை பிறப்பித்ததும்   அதே  போலத் தானே. 

இளம் மூங்கில் குச்சிகள் நினைத்து கூட இருக்குமா?  ஒரே பெயரைக் கொண்ட நாம் இருவரும் ஒன்று எனவா பெருமை கொள்ளும்.  வம்சம்- பரம்பரை, மற்றொரு பொருள்- மூங்கில்.  பரம்பரை அரசனைப் போலவா இந்த வம்சத்தின் -மூங்கில் குறுத்தின்-  வாழ்வு அமையும்.  அரச குலத்தினர் கோபித்தால், இதைக் கொண்டு வாசல் காவல் காரர்கள் அனுமதியின்றி வருபவர்களை அடிக்க பயன்படுத்துகிறார்கள்.

அதனால் தேவ! உன் பெருந்தன்மையை, புகழை நிலை நிறுத்திக் கொள்வது தான் தற்சமயம் செய்ய வேண்டியது. எல்லையற்ற ராஜ போகங்கள், விரும்பியவற்றை விரும்பியவாறு பெற்று மகிழ்ந்த அரச வாழ்வு, இதில் மகிழ்ந்து இருப்பாயாக. தண்டிக்க வந்தவன் – அந்த எண்ணமே  ஒரு ரோகம் (தண்டகாலகன் என்பது ஒரு நோய். அது தாக்கினால் மரணம் தான் முடிவு)   தாக்கியது போல என்று நினைத்துக் கொள்.   அரசனாக உன்னை உணர்ந்து கொள்.   அகஸ்மாத்தாக தோன்றிய ஒரு எண்ணம் அதை கைவிட்டு உன் இயல்பான நிலையை அடைவதே சிறந்தது. நாளை சொல்கிறேன், என்ன செய்தால் நலம் என்பதை, என்று சொல்லி விட்டு அந்த மதி மந்திரி விலகி சென்று விட்டார்.  1444

யோசித்தவாறே இரவு முழுவதும் இமை கொட்டாமல் விழித்திருந்த அரசன். களைத்து விட்டிருந்தான். எண்ணெய் ஸ்னானம், சில மருந்துகள் எதுவும் அந்த களைப்பை நீக்கவில்லை. குளிருக்கு அடக்கமாக வைத்யர்கள் தேவையானதைச் செய்தனர்.  அவர்கள் முகக் குறிப்பிலிருந்து தனது முடிவு நெருங்கி விட்டதோ என்ற ஐயம் அரசனுக்கு எழுந்தது.   அந்த சமயம் மதி மந்திரி வந்தார். அரசனின் நிலையை அவருக்குத் தெரிவித்தனர்.  இன்னும் சிறிது நேரம் தான் உயிருடன் இருப்பான் என அறிந்த மந்திரி தானே குளிர் காய மூட்டியிருந்த நெருப்பில் குதித்து விட்டார்.  அரசன் திடுக்கிட்டான்.  தனக்கு செய்ய வேண்டியதை அறிவுறுத்துவதாக சொன்னாரே, சொல்ல விரும்பாமலோ,  அல்லது   எனக்கு சாதகமாக இருக்காது என்று அதைச் சொல்வதை தவிர்த்து விட்டாரோ, விரும்பத் தகாதாக முடிவு என்னவாக  இருக்கும் என்று குழம்பினான்.  எதைச் செய்தால் நன்மை என்று செய்து காட்டி விட்டார் என்று அவரை மனதினுள் பாராட்டினான். தானும் அதே போல தீ குளித்தான்.  இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை,   தண்டகாலக நோய் தாக்கி விட்டது -மரண வாயிலை எட்டி விட்டாய் என்று வெளிப்படையாக சொல்லத் தயங்கி,   அரசனுக்கு  வழி காட்டி விட்டதாக மக்கள் புகழ்ந்தனர்.  

ஹர்ஷ தேவனின் மந்திரி சொன்னார்..    உன் மகன் போஜனை அனுப்பு.  வருங்காலம் அவனுடையது. இளம் வயதினன்.   வெற்றியோ தோல்வியோ  அவனுக்கு அனுபவமே ஆகும்.   அரசனும், தன் மகன் போஜனை மங்கள ஆசிகளுடன் வழியனுப்பினான்.  ஆயினும் காவல் தலைவன் சொல்லைக் கேட்டு திரும்பி வரச் செய்து விட்டான். காவல் தலைவன் சொன்னதை ஆராயாமல் ஒத்துக் கொண்டது ஒரு தவறு. ஒரு காலத்தில் கூர்மையாக இருந்த புத்தி, சாகசம் நிறைந்த செயல்களை விரும்பியவன்,  ஆபத்து என்றாலும் தைரியமாக இறங்கி வென்றவன்,  காலத்தின் மாறுதல்,  நாசகாலம் நெருங்கி விட்டதானால், புத்தி விபரீதமாக நினைக்கும் என்பார்களே, அது தான் போலும்.

திருமகளின் அருள், இடி மின்னல் போல. கீர்த்தி என்ற மேகத்தின் போக்கை அனுசரிக்கும் – இடி ஓசை  போல வீர கர்ஜனைகள், தன் ஆற்றலை காட்டும் சக்கிரங்களும், வில்லும் என ஆயுதங்கள், இவை அனைத்துமே ஒருவனுடைய பாக்கியம் என்பது முன் சென்றால் தான் பின்னால்  அனுசரித்து வரும்.   தான் ஒருவனாக, தன்  ஆற்றலால், புத்தியால், இந்திரனையே எதிர்த்து நிற்பான் என புகழப் பட்டவன்,    தற்சமயம் ஏன் தானே முடிவு எடுக்க முடியாமல் பிறர் சொல்லைக் கேட்கிறான்.  இந்த மூடத்தனம், சேற்றில் மாட்டிக் கொண்ட குருடன் போல.    பாக்யம் கை விட்டதோ, தவறான முடிவை, சேற்றில் காலடி வைத்தது போல, இப்படியும் நடக்குமா என முன் அவனை அறிந்தவர்கள் திடுக்கிட்டனர்.  அதை விட தவறான அடுத்த செயல்- தந்திரம் அறிந்தவர்களின்  கூட்டத்தை  விரோதிகளை கலைத்து விரட்ட ஏற்பாடு செய்தான்.  நாட்டில் சுகமாக இருந்து கொண்டே அவர்கள் சைன்யத்திற்கு அளிக்கப் படும் ஊதியமும் பெற்றனர்.  அரண்மனை ஊழியர்களே, அரசனின் மனப் போக்கை அறிந்தவர்களாக, தங்கள் வேலைகளை உண்மையாக செய்யவில்லை. நாளை அரசனாக வரப் போகும் எதிரிக்கு ஆதரவாக செயல் பட்டனர்.   சிலர் வெளியேறினர். மற்றவர் அரண்மனைக்குள் பெயரளவில் இருந்தனர்.  மேலும் சிலர் செய்வதறியாமல் காற்றோடு அலையும் உலர்ந்த இலை போல வருவதை எதிர் நோக்கி இருந்தனர்.   அரண்மனை நர்த்தகி  அவள்  யார் என்று அறியாமலே  ஜயமதி என்பவளை தன் மகளாக தத்து எடுத்துக் கொண்டாள்.  இளம் வயதினள், உல்லாசமான குணமும் கவர்ச்சியான உடலமைப்பும் கொண்டவள். உச்சலனை விரும்பியவள், செல்வமே குறியாக, செல்வந்தனான ஒரு  மண்டல தலைவனை அடைந்தவள்.   அந்த மண்டல தலைவன் போரில் மடிந்தான்.  திரும்பவும் உச்சலனையே வரித்தாள்.  இதுவும் காலத்தின் கோளாறே எனலாம். உச்சலன் அவளை ஏற்று தன் ராணியாக்கி கௌரவித்தான்.

அரண்மனைக்குள்ளேயே, ஊழியர்கள் உச்சலனை விமரிசிப்பதும் எதிர் காலத்தில் அவன் அரசன் ஆகும் போது என்ன வசதிகளைப் பெறலாம் எனவும் விவாதங்கள்,  செய்தி பரிமாற்றங்கள் செய்து கொண்டனர். அரசனிடம் மதிப்போ பயமோ அறவே அற்றது.  ஊதியம் பெற்று மேற்பார்வை செய்ய வேண்டியவர்கள், தங்கள் தன்னலத்தையே முன் வைத்து அதிகாரம் செய்தனர்.   போர் வீரர்களுக்கு அனுப்ப வேண்டிய உடைகள், உணவில் கூட பெரும் பங்கை தாங்களே எடுத்துக் கொண்டனர்.  கலி காலம் – நேர்மை என்பது அவர்களைப் பொறுத்தவரையில் தன் சுகம் என்றே ஆயிற்று. அரசனின் சொல்லோ, அதிகாரமோ எடுபடாமல் போனதில் ஆச்சர்யம் இல்லை.  தொற்று நோய் போல இந்த அடாவடி குணம் ஒருவரிடமிருந்து மற்றவனுக்கு என்று பரவியது.

ஸ்ரீலேகாவின் சகோதரனின் மகன் வியத்தமங்களன் என்பவன் மல்லனின் குடும்பத்தினருடன் உறவு உடையவன் என்பதால் அவனை கொல்ல அரசன் ஆணையிட்டான்.  அவன் மனைவி உச்சலனுடைய மாமன் மகள், தானும் தன் மாமியாருமாக இருந்த வீட்டையே கொளுத்திக் கொண்டு  இருவரும் மடிந்தனர்.   மல்லா மனதில் இருப்பதை வெளிக் காட்டிக் கொள்ள மாட்டான். என்ன திட்டம் வகுத்திருக்கிறான் என்பது செய்த பின் தான் தெரியும். அவன் சம்பந்தப் பட்ட யாரையுமே அருகில் நெருங்க விடாதே என்று அரசன் மனைவிகளான  சாஹி வம்சத்து  ராணிகள்  போதித்தனர்.  ஆனால், மல்லா  உண்மையான யோகி போன்றவன்.  கபடமாக  அரசனுக்கு எதிராக எதுவும் செய்பவனும் அல்ல.  அவனுடைய புதல்வர்கள் அரசனுடன் மோதியதை அவன் ஆதரிக்கவும் இல்லை, எதிர்க்கவும் இல்லை.  ஆசையைத் துறந்த முனிவனாகவே இருந்தான்.  அரசன் படையுடன் அவனை கொல்ல முனைந்த பொழுது. வாசல் கதவை திறந்து வெளி வந்தவன் திடமாக நின்றான்.  அவனுடன் சால்ஹனா மற்றும் சில உச்சலனின்  தாய் வழி சகோதரர்கள், அந்த வீட்டில் இருந்தனர்.  அக்னியை வழிபட்டு துறவியாக வாழ்ந்து கொண்டிருந்தவன், அவனும் தன் தந்தையின் மகனே, தனக்கு சகோதர உறவே என்பதை மறந்து,  ஹர்ஷதேவன், அவனிடம் விரோதம் பாராட்டினான்.  பாதி பூஜையில், அரசனே வந்திருக்கிறான் என்ற செய்தியை கேட்டவன், அதே உடையில் எதிரில் வந்திருக்கிறான்.  உபவீதமும், ஒரு கையின் விரல்களில் ருத்ராக்ஷமாலையும், காவி உடையுமாக  மற்ற கையில் தர்ப்பையை (தர்பை என்ற புல் – பூஜைகளில் பயன்படுவது)  கையில் வைத்து கொண்டிருந்தவன், நெற்றியில் விபூதியுமாக ஜாமதக்னியான பரசு ராமன் போல இருந்தானாம்.  நரைத்த கேசம்,  நீராடி ஈரம் காயாமல் படியாமல் பறந்து  கொண்டிருந்தது.  தேகதியாகம் செய்யத் துணிந்தவர்கள் பிரயாக கங்கையின் நீரை தலையில் வைத்துக் கொள்வது போல இருந்ததாம்.  இடுப்பில் துண்டு போர் வீரனின் இடைக் கச்சாகவும்,  மேலாடையாக அணிந்திருந்த வெண்மையான நூலாடை, விரித்த  குடை போலவும்,  கையில்  தண்டமே உடை வாள் போலவும் இருந்தாலும்  தாரா தீர்த்தம் என்ற இடத்திற்கு செல்லும்  பாத யாத்ரீகனாகவும் காட்சி அளித்தான்.  உடன் இருந்த சில அடியார்கள் பாது காப்பாக அவனை சூழ்ந்து  நின்றனர்.  அரசனுடன் பூஜைகள், அடுத்து போகம் எனும் நிவேதனங்கள் – இறைவனுக்கு படைக்கப்படும் உணவு வகைகள்- இவைகளை உடன் இருந்து அனுபவித்தவர்கள், இப்பொழுது மரணத்திலும் உடன் நின்றனர்.  தேவ மங்கைகளை அனுபவிக்க இருப்பவர்கள் என்கிறார் கவி. நற் செயல்களை செய்து நேர்மையாக உயிரை விடுபவர்களை தேவ லோக மங்கையர் வரவேற்பர் என்று ஒரு செய்தி பொதுவாக நம்பப் படுகிறது. இரு அந்தணர்கள், ரய்யவட்டா, விஜயா என்பவர்கள், சமையல் செய்யும் கோஷ்டகா என்பவன் மற்றும் ஒரு வாசல் காவல் வேலையில் இருந்தவன் இவர்களும் வந்து கூடினர்.  உதயராஜன், அஜ்ஜகன் என்பவர்கள் ஏற்கனவே காயம் பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்கள், அவர்களும் நின்றனர்.

திடுமென மல்லா அந்த படையின் நடுவில் குதித்தான்.  விளைந்த பயிர்களின் மேல்  வாட்களை வீசி அறுவடை செய்வது போலவும், குளத்தில் மலர் தண்டுகளை துண்டிப்பது போலவும், இடை விடாமல் அவர்கள் தலை மேலேயே இடி விழுந்தது போல தாக்கினானாம். . முதுமையால் வெளுத்த உடலும், நரைத்த தலையும்  ராஜ ஹம்ஸம் எனும் அன்னப் பறவை மிதந்து செல்வது போல இருந்ததாம்.  மகா பாரத பீஷ்மர் போலவே தோற்றமும் வீரமும்,  அவரைப் போலவே வீர சயனம் என்பதை அடைந்தான். (போரில் மடிவதை வீர சயனம் என்பர்)   வீரனுக்குரிய மரியாதையுடன் அவனை போற்ற வேண்டியவன்,  தன் படையை சின்னா பின்னமாக்கிய வீரத்துக்குரிய  மரியாதையைத் தராமல், அசட்டு அரசன் ஹர்ஷன் உயிரற்ற அந்த உடலில், தன் வாளால்  தலையை வெட்டி, உடல் மேல் குதிரையை செலுத்தி அட்டூழியம் செய்தான். 

குமுதலேகா என்ற ராணியும், வல்லபா என்ற மல்லாவின் மனைவியின் சகோதரியும், தங்கள் வீட்டிலேயே உடலை தீக்கிரையாக்கி மரியாதை செய்தனர்.  ஆசாமதி, சஹஜா எனற மல்லாவின் மருமக்கள்,  சல்ஹன, ரால்ஹா என்ற அரகுமார்களின் மனைவிகள்,  ராஜா,  அவகால்யா என்ற அரசர்களின் புதல்விகள்  இவர்களும் அந்த தியாகத் தீயில் தங்களை சமர்ப்பித்துக் கொண்டு விட்டனர். அந்த:புரத்து  பணிப் பெண்கள் ஆறு பேர், அவர்களும்  அரசியுடன், அரச குமாரிகளுடன் இருந்தவர்கள்,  பொறுக்கமாட்டாமல் அந்த தீயில் விழுந்து தங்களை மாய்த்துக் கொண்டனர்.  விதஸ்தாவின் கரையில் இருந்த மாளிகை எரிந்த பொழுது, விதஸ்தாவின் நீரே சுட்டதாம். தீயின் ஜுவாலை மட்டுமா, அந்த நிகழ்ச்சியால் வருந்திய மக்களின் கண்ணீரும்  ஜுவாலையாக நீரை கொதிக்க   வைத்ததாம்.  

உயர் குலத்தில், நேர்மையான குலத்தில் பிறந்த நந்தா – உச்சலன்,- வரும் கால அரசனின் தாய், தன் அரண்மனையில் இருந்து தூரத்தில் தெரிந்த புகை மூட்டத்தைக்  கண்டு  திகைத்தாள். தன் மக்களின் வீடுகள் இருந்த திசையை நோக்கினாள். விதஸ்தாவின் வடக்கில் இருந்த மாளிகைகள்.  அதில் அரண்மனை சமையல் அறை புகை மட்டுமே தெரிந்தது.  ஆனால் மருமக்கள், மற்ற இளய வயதினர்  தீக்கு இரையாகவோ, ஹர்ஷனின் வாளுக்கு இரையாகவோ ஆகி விட்ட செய்தியை தாங்க முடியாமல், தானும் தன் வீட்டில் தீ மூட்டிக்  கொண்டாள். உடன் இருந்த தாத்ரி சந்திரிகா என்பவன், தான் வளர்த்த குழந்தைகளின் நிலையால் வருத்தம் தாங்காமல் உடன் இருந்தாள்.  மேல் மாடியில் நின்ற இருவரையும் ஸூழ்ந்து சென்ற தீயின் நாக்குகள் பணிப்பெண்கள் போல உடன் இருந்தன.  பளபளக்கும் இறக்கைகளுடன் வண்டுகள் பறந்தனவோ எனும் படி தீப்பொறிகள் வானத்தில் நிறைந்தன. அவள் மனதார அரசன் ஹர்ஷனை சபித்தாள். ‘என் வயிற்றில் பிறந்த மகன் களே,  வரும் சில நாட்களில், ஜமதக்னியின் மகன் போலவே உங்கள் தந்தையை காரணமின்றி கொன்றவனை பழி வாங்குங்கள்.  உங்கள் தந்தைக்கு மட்டுமல்ல அந்த வம்சத்துக்கே ஒரு களங்கம் அவன்”

தர்சனபாலனையும் கொல்ல முயன்றவனை எது தடுத்தது?  எப்படியோ பிழைத்தான். உசலாடிக் கொண்டிருந்த அவனது உயிருக்கு இன்னும் சில நாட்கள் மீதி இருந்தது போலும்.  மேலும் ஒரு ஆண்டு வியாதிகளோடு போராடிக் கொண்டு இருந்தான். விதி,  இந்த வலியே போதும் அவனுக்கு என்று விட்டு விட்டதோ என்னவோ.

பாத்ரபத மாதம் தேய் பிறை நவமியன்று இந்த செய்திகளை அறிந்த மல்லனின் குமாரர்கள், உணர்ச்சி வசப் பட்டனர். வருத்தமும் கோபமும் ஒன்றையொன்று தூக்கி அடித்தன. படையுடன் வந்த சுஸ்சலன், வழி நெடுக இருந்த கிராமங்களை துவம்சம் செய்து  வஹ்னிபுரகம் என்ற கிராமம் வரை தீக்கிரையாக்கி விஜய க்ஷேத்ரம் நோக்கி முன்னேறினான்.  அரசனின் படையை தலைமை தாங்கிய சந்திர ராஜனுக்கு உதவ யாரும் இல்லை. பட்டா, தர்சனபாலன் இருவருமே விலகி விட்டனர்.  அவர்கள் படைகளும் பின் தங்கி விட்டன.  தன் அதிக திறமையில்லாத வீரர்களுடன் முடிந்த வரை போரிட்டான்.   1500

அக்ஷோட மல்லன், மற்றொருவன் – இருவரும் அரச சபையில்  பணி செய்தவர்கள்.  போதும் அரச சேவகம் என்பது போல அவசரமாக வானுலகம் சென்றனர்.  புழுதி படலம் இருள் போல பரவி நின்றது. வெண் குடையால் மட்டுமே அடையாளம் காண முடிந்த சந்திர ராஜன், அவன் உடன் வந்த இந்து ராஜன் இருவரும் அவர்களைத் தொடர்ந்தனர்.  வீரன், அவனும் மடிந்தானா என்ற ஹர்ஷ ராஜன் பெருமூச்சு விட்டான்.  பட்டா முதலானோர் சுச்சலனும் களம் இறங்கியவுடன், விஜயேச ஆசிரமத்தில் தஞ்சம் புகுந்தனர்.   லக்ஷ்மிதரன் என்பவனை தாமரர்கள் சிறை பிடித்தனர், பத்மா என்ற மற்றொரு படை வீரன் யுத்தகளத்தில் மடிந்தான்.  சுஸ்சலா விஜயேச கோவிலுக்கு வந்து அதன் மேல் மாடியில் நின்று உள்ளே உள்ளவர்களை ஆராய்ந்தான்.  பயந்து நடுங்கிய சிறு விலங்குகள் போல அங்கிருந்தவர்களைக் கண்டான்.  தன் மெய்க் காப்பாளனை அனுப்பி, பட்டா, தர்சனபாலன் இருவரையும் அழைத்து வரச் செய்தான். படிகள் இல்லாமல் ஏறத் தயங்கியவர்களை கயிறு கட்டி கிணற்று நீரை இழுப்பது போல மேலிருந்து இழுத்து அழைத்து  வந்தான் அந்த காவலன்.  வெளி நாடு சென்று விடுகிறோம் என்று கெஞ்சியவர்களைப் பார்த்து சுச்சலன்  அடுத்து செய்ததை அறிந்தால் உலகை படைத்தவனே வியந்திருப்பான்.  அசைவ உணவும், அனுசரனையான உபசரிப்பையும் என்னவென்று  புரிந்து கொள்வது  என்பது புரியாமலே இருவரும் உண்டனர். எதிரில் ஒரு ஆசனத்தில் அமர்ந்த சுஸ்சலன், ஜாசடன் என்பவன் ஹர்ஷ ராஜாவுடைய மாமன் மகன்.  உமாதரன், சில ராஜ புத்திர வீரர்கள், மேலும் சில மாவீர்கள் என்று அழைக்கப் பட்டவர்கள்,  தந்திரிகள், சிறந்த அரண்மனை அதிகாரிகளின் புதல்வர்களும், அவர்களைச் சார்ந்தவர்களும், -இவர்களின் எண்ணிக்கை அறிய முடியவில்லை-  இவர்களைப் பார்த்து, மேல் மாடியில் நின்றவாறு, கையில் வாளும், கடுமையான சொற்களுமாக அவர்கள் குலை நடுங்க நின்றவர்கள்  அவனிடம்  உயிர் பிச்சை வேண்டினர்.  விஜயேஸ்வரன் ஆணையாக கொல்ல மாட்டேன் என்று உத்திரவாதம் அளித்தான்.  அவர்கள் தங்கள் ஆயுதங்களை அர்ப்பணித்த பின் அபயம் அளிக்கப் பட்டனர்.

மறுமுறை கோவில் உச்சியில் நின்றவன் தன் ஆட்களிடம் ஏதோ சொல்லி அனுப்பினான். அவர்களின் கைகளை மட்டும் வெட்டி மூட்டையாக மேலே கொண்டுவந்தனர்.  கைகளில் அணிந்திருந்த ஆபரணங்கள் பளபளத்தன.  அவைகளை தாமரத் தலைவனிடம் பத்திரமாக வைக்கச் சொல்லி விட்டு சுச்சலன் அந்த இடத்தில் மூன்று நாட்கள் தங்கி இருந்தான்.  சுவர்ணசாணூர கிராமத்தின் அருகில் அழைத்துச் சென்ற பின் பாட்ட, தர்சன பாலன் இருவரையும் வெளி நாடு செல்ல  அனுமதிக்க ஆணையிட்டான்.  பட்டன் மனைவி ஸூரபுரம் என்ற இடம் வந்து அவனுடன் சேர்ந்து கொண்டாள்.  வெளி நாடு செல்லும் எண்ணத்தை கை விட்டு  அந்த  கிராமத்திலேயே வசிக்கலானான்.  இருவருமாக வெளி நாடு செல்ல திட்டமிட்டிருந்த நிலையில் பட்டனின் செயலால் தர்சனபாலன் தனித்து விடப் பட்டான்.  அத்துடன்  நூலிழையில் தொங்கிக் கொண்டிருந்த அவர்கள் நட்பும் முறிந்தது. சம வயதினர்.  சம மான ஆற்றலும் பதவிகளும் உடையவர்கள் என்பதால் தோன்றிய நட்பு.

சுச்சலன் தளராமல் பல பிரதேசங்களை வென்று அரசனின் அரண்மனைக்கே வந்தான்.  அரண்மனையை தாக்கும் முன்,  அரசகுமாரன், பப்பா – என அழைக்கப் பட்ட போஜ தேவன் எதிர்த்து போரிட வந்தான்.  அந்த;புரத்தில் வளர்ந்தவன் போர் முறைகளை அறியாதவன், தந்தையில் காலடியிலேயே பாதுகாப்பாக வளர்ந்தவன்,  வேறு வழியின்றி வந்து நிற்கிறான். எந்தெந்த யுத்தங்களில் தந்தை, பாட்டனார் முதலாக அரசுக்கு ஆதரவாக போரிட்டனர் என்பதை அறிந்தவனாக இருந்திருந்தால், வீரமோ, உத்சாகமோ இருந்திருக்கும்.   நெருங்கிய உறவனர்களும் அருகில் இல்லை.

அரசியல் என்பதும் ஒரு கலையே. அதை படித்து அறிந்து கொள்வது ஒரு புறம், களம் இறங்கி தானே போர் முறைகளை உணர்ந்து கொள்ள வேண்டும், மற்ற கலைகள் போலவே அனுபவம்  தான் அதிகமாக கற்றுக் கொடுக்கும்.  அரசியல் கற்றவர்கள் விதி முறைகளை அறிந்திருக்கலாம். ஆனால் ஆயுதங்களைத் தூக்கியே அறியாதவன்,  பலர் ஆயுதங்களுடன் எதிரில் நிற்பதைக் கண்டால் எந்த எதிர் வினையை எப்படி மேற்கொள்வான்?  அதனால் பெரும்பாலான அரசர்கள் தங்கள் சந்ததியினரை இளம் வயதிலேயே போர்  களத்துக்கு துணையுடன் அனுப்பி அநுபவம் பெற செய்வர்.   திமிங்கிலம் கடலில் உடல் வாழும் திமி என்ற சிறு மீன்களை விழுங்கி விடும் அது போல  இந்த அரச  குமாரனும் எதிரிகளுக்கு குட்டி மீன் போல எளிதில் வசப்பட்டான்.

தந்தையின் செய் நன்றி மறந்த தவறு,  அதற்கு தண்டனையை அவன் மகன் பெறுவது நியாயமல்ல. எள்ளை செக்கிலிட்டு ஆட்டினால் பிண்ணாக்கு தனியாக, எண்ணெய் தனியாக வரும்.  எண்ணெயின் மணம் தனி.  உலர்ந்த எள்ளின் சக்கை தனியாக  பிண்ணாக்கு எனப்படும்.  இரண்டும் பிரிக்கப் பட்டபின்   எண்ணெய் வந்தது அந்த உலர்ந்த பிண்ணாக்கில் தானே  என்று எண்ணெய்யை வெறுப்போமா. 

தேவேஸ்வரன் என்பவனின் மகன் பித்தன். पित्थ:- என்பது அவன் பெயர்.  அரசன் கொண்டாடி வளர்த்தான். இருந்தும் அவன் எதிரிகள் பக்கம் சேர்ந்து கொண்டான்.  சுச்சலன் படையெடுத்து வந்த சமயம் அரசனிடம்   ஒரு குதிரையை யாசித்தான்.. இன்று என் திறமையை காட்டுகிறேன் பாருங்கள் என்று சொல்லி விட்டுச் சென்றான். அரசன் மனம் நொந்தான். அறிவிலி, இவனை நம்பும்படி ஆயிற்றே என்றோ, முன் வளர்த்த பாசமோ, அவன் எதிரிகளின் வாள் வீச்சில் விழுந்தான் என்ற செய்தி கேட்டு சர்வ நாசம் அடைந்ததை விட அதிகமாக வருந்தினான்.  பித்தனின்  நன்றி மறவாமை மனதை தொட்டது போலும்.   செல்வ செழிப்பில் தன்னை மறந்த அரசர்களோ, செல்வந்தர்களோ, பின்னால் தான் உணருகிறார்கள். 

போஜனின் படைகள் சுஸ்சலனை போர் களத்தில் சந்தித்தது.  வெகு நேரம் நடந்த போர்.  திடுமென சுஸ்சலன்  படையுடன்  விலகி லவணோத்சவ என்ற இடம் சென்று விட்டான்.   கடுமையான வேணிற் காலம்,. வியர்வை பெருக களைத்தவனாக, தோட்டத்து வீட்டில் படுக்கையில் விழுந்தான்.  தந்தையிடம் முழு விவரங்களைச் சொல்லி முடிக்கும் முன், தூரத்தில் ஒரு அறிவிப்பு : ‘உச்சலன் வந்து கொண்டிருக்கிறான், கோட்டை கதவுகளை மூடுங்கள். ‘  இதன் பின்னால் நடந்ததை அவர்கள் அறியவில்லை.   சுஸ்சலனுடைய படையில் , ஒரு பிரிவின் தலைவனாக இருந்த ஒரு  துஷ்டன், உச்சலனுக்கு செய்தி அனுப்பி இருந்தான். ‘நீ உடனே வராவிட்டால்  சுச்சலன் அரசை கைப்பற்றி அரசனாக அரியணையில் அமர்ந்து விடுவான் – என்ற செய்தி.  சுச்சலன் இதை அறிந்தான்.  அது தான் அவனை பாதி போரில் விலகச் செய்தது.  

உச்சலனுக்கு தெரிய வந்த து. அவன் படையுடன் வந்து முதல் காரியமாக அந்த தண்ட நாயகன்- சேனைத் தலைவனை தன் வாளுக்கு இரையாக்கினான்.  அதன் பின் நாகா- ஸ்ரீ நகரத்து ஆணையாளராக இருந்தவன் பெரும் படையுடன் வந்து சேர்ந்து கொண்டான்.  ஹர்ஷ ராஜா அவனிடம் மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தான்.  பொறுக்கி எடுத்த வீரர்கள் கொண்ட படை அவனிடம்  இருந்தது.   சகோதர்கள் இருவரையும் அறிந்தவன். உச்சலன் அவனிடம் பயந்து கொண்டிருந்தான்.   ஆனால் அருகில் வந்து தன் தலை கவசத்தை கையில் வைத்துக் கொண்டு வணக்கம் செலுத்தியவனைக் கண்டு ஆறுதல் அடைந்தான்.   சமீபத்தில் தண்ட நாயகனின் செயல் தந்த எச்சரிக்கை.  விசாரிக்காமல் உடனே எவரையும் நம்ப விடாமல் தடுத்தது.  தற்சமயம் உங்கள் ஊரிலேயே இருங்கள். தேவையானல் அழைக்கிறேன் என்று மரியாதையாக சொல்லி அனுப்பி விட்டான். 1545

அரசன்  நதியின் கரைக்கு வந்தான்.  தாமரர்கள் பாலத்தில் நிறைந்திருந்தனர்.  இயல்பான கருத்த நிறத்தினர்.  தாவாக்னியில் – காட்டுத் தீயில் எரிந்த மரம் போல.  ஜனக சந்திரனுடைய வெண் கொற்றக் குடையால்  இருளில் தெரியும் வெள்ளி- கிரகம் போல தனித்து தெரிந்தான்.  அந்த பெரிய பாலம் தன் வசதிக்காக அரசன் ஹர்ஷன் கட்டியது. அதில் எதிரிகளும் வசதியாக நுழைந்து  விட்டனர். 

சாஹி வம்சத்து அரசகுமாரிகள் தீக்குளிக்க தயாராக மாளிகையின் மேல் மாடியில் கூடி விட்டனர். தோல்வி நிச்சயம் என்று நினைத்தனரா. ஊர் மக்கள் அலுத்து விட்டனர் போலும். சகோதர்களூக்குள் இந்த கோரமான யுத்தம். அஸ்வயுஜி- ஐப்பசி மாத விழாவை வேடிக்கை காண்பது போல (ஐப்பசி மாதம் சுகமான சீஷோஷ்ணம் கொண்ட பருவம். இந்த தேசத்தில் இந்த மாதம் கோலாகலமான பூஜைகளும், விழாக்களுமாக மகிழ்ச்சியாக கொண்டாடப் படும்.  மக்கள் கூடி இருந்து மகிழ்வர்.)  எந்த கட்சியிலும் சேராமல் தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்தனர்.  வெற்றி எந்த பக்கம் என்பது தெரியாமல்  நீட்டித்தது. அரசன் தன் மனைவிகளை பொறுத்திருக்கச் சொன்னான். அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே அரசனுடைய பட்டத்து யானை அடிபட்டு விழுந்தது.  ஜனக சந்திரனின் சரமாரியான அம்புகள் துளைக்கவும் அந்த பெரிய  யானை அலறிக் கொண்டு தாறு மாறாக  ஓடி தன் பக்கத்து வீரர்களையே துவம்சம் செய்தது.  விதியால் தூண்டப்பட்டது போல  படை  கலைந்து நாலா பக்கமும்  ஓடியும், விழுந்தும் கலைந்தது.  கடல் கொந்தளித்து கலங்கியது போல ஆயிற்று.  குதிரையில் இருந்தவர்கள் செய்வதறியாது திகைத்தனர்.  இந்த எதிர்பாராத திருப்பம், தன் பக்கத்து வீரர்களாலேயே  ஓடும் வேகத்தில் தள்ளி விடப் பட்டு   சேனைத் தலைவர்களே விழுந்தனர்.  எதிரிகள் பாலத்தைக் கடந்து அருகில் வந்து விட்டனர்.  தானும் குதிரையை விட்டிறங்கி ஆயிரம் கதவுகளுடன் தான் கட்டிய அரண்மனை வசலிலேயே வந்து நின்றான் அரசன்.  இரவிலும் தன் ஆடம்பரமான வேஷ பூஷணங்களுடன் இருக்கும் அரசன், உண்ணும் சமயம் கூட விரல் மோதிரங்கள் பளபளக்கத் தான் இருப்பான்.  இதுவரை அவனை அண்டாத பயம், வேணிற்காலத்து வெய்யில் போல சுட்டது. கையிருந்து உறையுடன் வாள் நழுவியது. குதிரையின் கடிவாளத்தை முடிந்தவரை விடாமல் பிடித்திருந்த கைகள் சோர்ந்தன.  நரைத்தாலும் அடர்ந்து இருந்த சிகை காதுகளை உரசின. கரும் நாகம் ஊர்வது போல  வியர்வை பெருகி கழுத்தை நனைத்தன.   உதடுகளை நாக்கினால் ஈரமாக்கிக் கொண்டால்,  முகத்தில் படிந்திருந்த புழுதி நாக்கில் பட்டது.  பிரிய மனைவிகள ஏறெடுத்தும் பார்க்க இயலாமல்  பெண் போல தன் பிரஜைகள் முன் பெண் போல நிற்பதாக நினைத்து மறுகினான்.  மல்ல ராஜனுடைய மாளிகை, மற்றும் அடுத்து இருந்த மற்ற மாளிகைகள் ஜனக சந்திரனின் படை வீரர்களால் எரியூட்டப் பெற்றன.   ராஜதானி தீக்கிரையவதைக் கண்டு போஜ ராஜன் தோல்வி நிச்சயம் என்று உணர்ந்தான்.   எதிரிகளின் ஸூலங்கள் கோட்டை வாசலை துளைத்தன. தானும் குதிரையில்  ஏறி முன் பக்கத்து முற்றத்தில் இருந்து ஐந்து உடன் வந்த மெய்க் காப்பாளர்களுடன் வெளியேறினான்.  லோஹரா நோக்கி அந்த கூட்டம் சென்றது.  அவன் பாலத்தைக் கடந்து செல்லும் வரை கண்ணீர் மறைக்கப் பார்த்துக் கொண்டிருந்த அரசன், சில குதிரை வீர்களூடன் மாளிகை வாசலிலேயே சுற்றிக் கொண்டிருந்தான்.  எரிந்த வீட்டில் கிடைத்தது ஆதாயம். அரசன் கண் எதிரிலேயே   தாமர போர் வீரர்கள்  மாளிகையில்  நுழைந்தனர்.  உள்ளே புகுந்து முடிந்தவரை அபகரித்தனர்.  முன் கண்டறியாத விலையுயர்ந்த  பொருட்கள், ஆசனங்கள், அரச உடைகள்  என்று அதிசயமாக பார்த்தனர்.    தேவதைகள் போல அலங்கரித்துக் கொண்டு உலவிய பணிப்பெண்கள்  வெற்றி பெற்ற படையினரின் வசம் ஆயினர்.   மாளிகையில் தூண்கள் சட சடவென முரியும் சத்தம், தீ பரவி வெப்பம் மிகுந்த தால், மேல் விதானங்கள்  வெண்மையாக இருந்தவை கருகின.  தன் ராஜ்ய ஸ்ரீ – தான் கவனமாக சேமித்த உயர் தர பொருட்களுடன் திருமகளே தன்னை விட்டு விலகிப் போவதை கண் கூடாக கண்டவன் போல அலறினான்.  ஒரு பழைய கவிதை நினைவுக்கு வர அதையே சொல்லி புலம்பினான். யாரும் அறிய மாட்டார்கள் என நினைத்து தன் அதிகாரம் தந்த மமதையால் தன் பிரஜைகளை அரசன் துன்புறுத்தினால், உயிரினங்கள் அறியாமல் போனாலும்   தீ என்ற தத்வம்  அறியும்.  அரசனின் உயிரை மட்டும் விட்டு அவன் குலம், செல்வம், இவைகளை அழித்து விடும்.

உச்சலன் தாமரர்கள் தொடர ராஜதானி தீக்கிரையாவதை பார்த்துக் கொண்டே வந்தான்.  அவனுடைய படை சேதமாகாமல் அப்படியே இருந்தது. 

தப்பிச் சென்று லோஹாரா வில் தஞ்சம் அடையலாம், அதுவும் நல்லதல்ல  கங்கை கரைக்கு போகலாம்,  அல்லது இருக்கும் சில வீர்களுடன் போரைத் தொடர்ந்து வீர மரணம் அடையலாம் என்று ஆளுக்கு ஒரு உபாயம் சொன்னார்கள். அரசனுக்கு தன் மகன் போஜனைக் காணாமல் உயிர் விடக் கூட மனமில்லை.  ராணிகளில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் தீக்குளித்து விட்டனர். பிரயாக ராஜா உண்மயான ராஜ விசுவாசி.  அரசனே நான் ஒருவன் இருக்கும் பொழுதே தப்பித்துச் செல்லுங்கள். என் காலமும் இதோ முடியப் போகிறது என்றான்.  ‘ கோபிக்காதே பிரயாகா, என் மகன் இல்லாமல் எனக்கு திசையே கண்ணுக்குத் தெரியவில்லையே, என்றான்.

சகோதரர்களான சில உறவினர்கள், அணுக்கமாக இருந்த நண்பர்களுடன்  ஐம்பது அரண்மனை காவலர்களுடன்  தப்பிச் செல்ல பாலத்தைக்  கடந்தவன் முடிவில் தாங்கள் ஐந்து பேர் மட்டுமே மிச்சம் என்பதைக் கண்டான்.  ஒரு சிலரை மகனைத் தேட அனுப்பி இருந்தான்.  கிடைத்த வாய்பை பயன்படுத்திக் கொண்டு அவர்கள் மறைந்து விட்டனர்.

அரசனின் முந்தைய நடவடிக்கைகளை அறிந்தவர்கள், ஆங்காங்கு அறிந்த விவரங்களைச் சொல்லி செல்வம் பெற்றவர்கள் என்று உள் கட்ட அதிகாரிகளே எதிரிகளாக ஆயினர்.   போஜனுக்கு சரியான வழியைக் காட்டவில்லை. நம்பிக்கை துரோகம் வெட்ட வெளிச்சமாக தெரிந்த து.   பலர் ஒன்று சேர்ந்து குழலை ஊதினால் ஒரு ஓசையும் வராது என்று ஒரு பழமொழி.  அரசனின் ஆலோசகர்கள் ஆளுக்கு ஒரு விதமாக உபாயங்கள் சொன்னார்கள். 

எதிர்பாராமல் சில நன்மைகள் நினைத்தே பார்த்திராத இடங்களில் இருந்து வருவதை என்னவென்று அழைப்போம். அவனது பாக்யம் என்றா, முன் வினை பயன் என்றா,  விதி என்றா – அது தான் நடந்தது. .  கெடுதல் வந்தால் அவனது போதாத வேளை என்போம். நன்மை வந்தால் அதுவும் அவனது நல்ல காலம் என்றே ஏற்றுக் கொள்ள வேண்டும்.  நல்லதோ கெடுதலோ ஒருவனது வாழ்வில் திருப்பு முனையாக அமைவது.

குதிரை லாயத்தில் குதிரைகளை பேணும் சாதாரண ஊழியன், அரசன் மனதை படித்தவன் போல ஒரு உபாயத்தைச் சொல்ல ஓடி வந்தான். ‘உங்கள் பாட்டனார் செய்தது போல ஏகாங்க – என்று அழைக்கப் படும் மெய்க் காப்பாளர்கள் உங்களுடன் போர் முனைக்கு வருவார்கள். அவர்களுடன் முனைந்து போரிட்டு எதிரிகளை முறியடிக்கலாம். தற்சமயம் அவர்களிடம் இருப்பதும் மிகச் சிறிய படையே’  என்று சேனைத் தலைவர் சொல்லச் சொன்னார்.

அரசன் புத்துயிர் பெற்றவன் போல் ஆனான். விரைவில் தயாரானான்.  குதிரைகளில் எகாங்க வீரர்களும் வந்தனர். அக்ஷ படலம் என்ற இடம் -அவர்கள் தங்கியிருக்கும் பாசறை-  செல்வோம்..  அனேகமாக காலாட்படையே கொண்டுள்ள எதிரிகள், அவர்களை வெல்வோம்.  சிறு பறவைகளை கழுகு துரத்துவது போல துரத்துவோம் என்று முழக்கம் இட்டபடி அந்த படை புறப்பட்டது. நாடகம் பார்த்துக் கொண்டிருந்த பொது மக்கள், திடுமென மழை வந்தால் சிதறுவது போல இருந்ததாம்.  விதஸ்தா வை கைப்பற்றிவிட்ட எதிரிகள். 

சேயராஜா என்பவனின் புதல்வர்களும் வந்து சேர்ந்து கொண்டனர். தோட்ட வேலை செய்பவர்களோ, எளிய கிராம மக்களோ யாரானாலும் வாருங்கள் என்று கூவி அழைத்துக் கொண்டு, மகனுடைய விலையுயர்ந்த நகைகளை செலவுக்கு பயன் படுத்திக் கொள்ள அரசன் கொடுத்தான்.  உத்சாகமாக புறப்பட்டனர்.  அரசன் தன் பொலிவை திரும்ப அடைந்து விட்டவன் போல இருந்தான்.

அரசன் இதற்கு முன் செய்வதறியாது சுற்றிக் கொண்டிருந்த போது விலகிச் சென்ற போர் வீரர்கள்.  கண்டும் காணாதது போல சென்ற முந்தைய மந்திரிகள்.  வாசலோடு சென்றவனை விசாரிக்க கூட முன் வராத ஊர் பிரமுகர்கள். தங்கள் பிரச்னை என்றால் உண்ணாவிரதம் இருக்கும் பொது மக்கள், எவருமே அரசன் அருகில் வரக் கூட விரும்பவில்லை என்ற உண்மை அரசன் மனதை சுட்டது.

கபில என்ற மந்திரியை சிறிதளவு எதிர் பார்த்தான். அவன் உதவக் கூடும் என்று.  லோஹாரா  கோட்டையில் இருந்தவர்கள். அவன் மனைவி வந்து ஒரு நாள் தங்கி விட்டு மறுநாள் படகில் செல்லுங்கள் என்றாள்.  அவன் மறுத்து விட்டான். அந்த மந்திரியின் புதல்வர்கள் எங்கிருந்தோ எட்டி பார்த்துக் கொண்டிருந்தனர்.  வட்டிக்கு கடன் கொடுத்தவன் வாசல் கதவை தட்டினால் வீட்டார் எதிரிலேயே வர மாட்டார்கள், கதவை பாதி திறந்து வீட்டு பெண்மணி பதில் சொல்லி அனுப்புவாள் என்று கேட்டிருந்தான்,. தான் அந்த நிலைக்கு வந்து விட்டோமா என்று வருந்தியது நினைவுக்கு     வந்தது.   என் தவறு என்று இப்பொழுது  உணர்ந்தான்.  இந்த மந்திரிகளின் சுய நலம் – நிலைமை இந்த அளவு விபரீதமாக போகும் வரை அவனிடம் உண்மையை மறைத்து விட்டது. அடி மட்ட நிலைக்கு வந்த பின் தான் மனிதர்களின் தரா தரம் புரிகிறது.  உலகில் மற்றவர்களும் சுக துக்கங்கள் அனுபவிப்பவர்களே, புத்தியும், திறமையும் உடையவர்களே, உடல் உழைப்பும், வருத்தமும் அனைவருக்கும் பொதுவே, இறைவன் அனைவரையும் கை கால்களோடு, அறிவுடன் தான் படைத்திருக்கிறான் என்று பல விதமான சிந்தனைகள் ஆட்கொண்டன.  முப்பத்தாறு உயர் குலத்தவர்  என்று சொல்லிக் கொள்பவர் எந்த விதத்தில் உயர்வு.  மற்றவர் வசதியாக வாழ்ந்தால் பொறுக்க மாட்டார்கள். பேராசையும், பொறாமையும் அவர்களை கீழே தள்ளி வேடிக்கை பார்க்கவே விழைந்தனர்.  அனந்தபாலன் முதலான ராஜ குமாரர்கள் என்னை தவிர்த்தனர்.   ஒன்றாக கிளம்பிய பின்,ஒவ்வொரு குதிரையாக விலகி, அதன் மேல் இருந்தவனை தள்ளி அழைத்துச் சென்ற காட்சி மனதில் வரை படமாக ஓடியது. உடன் பிறந்தவன், சேனைத் தலைவன், என்று அருகாமையில் வந்து கொண்டிருந்தவர்களே மெள்ள மெள்ள சொல்லாமல் விலகி விட்டனர்.  குதிரை லாயத்தில் குதிரைகளை பராமரித்த  ஸூதன் எனப்படும் பணியாள் மட்டுமே உடன் வந்தான்.  அவனே கடைசி வரை உண்மையாக நண்பனாக இருந்தான். ஜேலகன் என்ற சமையல்காரன், முக்தன் என்ற அவனுடைய உதவியாளன் இருவரும் பின்னால் வந்து இணைந்து கொண்டனர். 

ஜோஹிலா மடாலயம் அருகில் வந்தவன், குதிரையிலிருந்து இறங்கினான்.  இங்கு என் மாமனார் வசிக்கிறார். அவரை பார்த்து  விட்டு வருகிறேன், நீங்களும் இரவு தங்க ஏற்பாடுகள் செய்து கொள்ளுங்கள்   என்று சொல்லி உடன் வந்தவர்களை அனுப்பி விட்டு உள்ளே நுழைந்தான். 

சில நாட்களுக்குப் பின் சில படகு ஓட்டுபவர்களை அழைத்து விதஸ்தாவை தாண்டி ஜய புரம் என்ற இடத்தில் கொண்டு விடச் சொன்னான்.  முன் ஒரு சமயம் பீம தேவ ஆலயத்தில் நுழையும் முன் தன்னை அரச மரியாதையுடன் பீம தேவனின்  சன்னிதிக்கு அழைத்துச் செல்வர் என்று காத்திருந்தான்.  அந்த உச்சல பீமதேவ ஆலய தலைவர், அரசன் வந்தால் அழைத்துச் செல்கிறேன், நான் அரசு பணியாளன் அல்ல, பீமதேவரின் ஆலய சிப்பந்தி என்று முன்னால் வந்து வரவேற்க மறுத்து விட்டான்.  இந்த நினைவு வந்ததும்,  படகைக் கொண்டுவந்த படகோட்டியிடம்  தேவையில்லை என்று சொல்லி அனுப்பி விட்டான்.  பாம்பைக் கண்டாலே போதும், அதன் அருகில் செல்ல தானே உள்ளுணர்வு தடுத்து விடுவது போல உயிருக்கு ஆபத்து  என்றாலும் உள்ளுணர்வு தானே அவனை காத்து விடுகிறது. 1629

முன் ஒரு சமயம் தன்னிடம் அடைக்கலம் கேட்ட தாமரன், நீலாஸ்வ என்ற தேசத்து பிம்பா என்பவன்  அவன் நினைவு வந்தது. மற்றவர்களைப் போல நய வஞ்சகன்  அல்ல. தன் மானம் உள்ளவன்.  உண்மையான மனைவி போல் என்று அரசனுக்கு தோன்றியது. ஏனோ அவனை கண்டு கொள்ளவில்லை.

கண்ணெதிரில் விதஸ்தா நதியில் நீர் மட்டம் உயர்ந்தது.  கரு மேகம் சூழ்ந்து  வரப் போகும் பெரு மழையை எச்சரிப்பது போல.  இதற்கு மேல் தாங்காது இந்த துரோகிகளின் அட்டூழியம் என்று இயற்கையே நினத்ததோ,  பூமியை நீரால் கழுவி சுத்தம் செய்ய  தீர்மானித்து விட்டதோ, எனும் படி இருந்தது.  எவ்வளவு தான் தாங்குவான். கொட்டும் மழை, வெள்ளம், மனித நடமாட்டமே இல்லாத இடம், மழையினால் இருள் பரவியது போன்ற நிலை, உதவவும் எவருமில்லை, எதிரிகள் கண்டால் அதை விட வேறு விணையே வேண்டாம், யாரை நோவது. தேவையில்லாத நினைவுகள் – முன் அறியாத பெயர்கள் மனதில் வந்து மறைந்தன.   

முன் ஒரு சமயம் சோமானந்தா என்பவன் அவனே ஒரு நய வஞ்சகனாக இருந்தவன் தான், விதி வசத்தால் தனியாக காட்டில் சுற்றிக் கோண்டிருந்தான். மயான பூமி என்பதையறியாமல்  அருகில் மரங்கள் அடர்ந்து இருந்த இடத்தில் நுழைந்தான். என்ன ஆனான், நினைவு இல்லை.

சற்று தூரத்தில் ஒரு குடிசை ஒரு துறவி குணா என்பவன் அங்கு இருந்தான். விரகபுஜங்கீ என்று தன் பெயரைச் சொன்னாள்.  இயற்பெயர் பிச்சா -भिश्चा- என்றாள்.  தான் ஏதோ சிறு வியாபாரி என்றாள்.  அதன் அருகில் தான் ப்ரதாப கௌரீச கோவில் இருக்கிறது என்று சொன்னாள்.   அங்கு செல்ல கிளம்பினர்.  கொட்டும் மழையில் மழை தாரைகளுக்கு இடையில் வழி கண்டு கொண்டு முக்தாவை தோளைப் பற்றிக் கொண்டு,  அரசன்,   அவன் தோளை பற்றிக் கொண்டபடி ப்ரயாககா,  என்று  வழியை கண்டு கொண்டு மூவரும் சென்றனர்.   வழக்கமான தலைப்பாகையும் இல்லாமல், எப்படியோ தத்தளித்து அந்த குடிசை வரை வந்து விட்டனர். 

அந்த சமயம் அரசன் கந்தர்பனை நினைத்தான்.  வஞ்சகம் செய்த மந்திரிகள் சொல்லை க் கேட்டு கந்தர்பனை துரத்தியது நினைவு வந்தது.  உத்பலன் ருத்ர தேவனை நினைத்தது போல. முக்தா வாசலில் இருந்த கதவு மேல் ஏறி உட்பக்கம் இறங்கி தாழ்பாளைத் திறந்தான்.  உள்ளே யாரும் இருந்த தாகத் தெரியவில்லை.  இருட்டில் எதிலோ இடித்து காலில் உதிரம் கசிந்தது.  இனி என்ன கெடுதல் வர இருக்கிறது என்று நினைத்தபடி மேலும் நடந்தான். இடுப்பில் தொப்பலாக நனைந்த ஆடையும் நடக்கத் தடையாக இருக்கவும் மெள்ள நின்று நின்றுதான் நடக்க முடிந்தது.  ஒரு பள்ளத்தில்  கால் வைத்து விட்டது போல இருக்கவும் தயங்கி நின்றான். குடிசையின் கதவும் தாழ்பாள் போட்டு மூடியிருந்தது.  இரவு, இருளில் நிற்க மனம் நடுங்கியது. வானம் இடிந்து விழுந்து விடும் போல இடியும் மின்னலும். தரை சேறாகி வழுக்குகிறது. வட திசையை நோக்கினான். ஏன் எனக்கு தூக்கம் வரவில்லை என்று யோசித்தான்.

யார் நான்? எது என்னை மூழ்கடித்து தன் வசம் வைத்துக் கொண்டுள்ளது? எங்கு நிற்கிறேன்? யார் என்னை வழி நடத்துகிறான்? என்ன செய்யப் போகிறேன்?  பிச்சை எடுத்து உண்ணும் ஒரு துறவியின் வாயிலில் எதற்கு வந்திருக்கிறேன்? இப்படி அலையலையாக எண்ணங்கள் தாக்க உடல் நடுங்கியது.  என்றோ ஒரு சமயம்  அரசனாக இருந்தேன். என் ராஜ்யம் கை விட்டுப் போயிற்று. மனைவிகள் கண் எதிரில் தீக்குளித்தனர்.  மகன் இருக்கும் இடமே தெரியவில்லை. என்னிடம் எந்த பொருளும் இல்லை. நண்பன் என்று இருந்தவர்களும் உடன் இல்லை.   தன்னைப் போல  அரசனாக இருந்து ஆண்டியான சிலரை அறிவான். 1648

இங்கு, போஜன் தன்னுடன் வந்த இரண்டு மூன்று நபர்களுடன், போய் கொண்டே இருந்தான். ஹஸ்திகர்ணம் என்ற இடம் வந்ததும் நின்றனர்.  நகரத்தை விட்டு வெகு தூரம் வந்து விட்டிருந்தனர். நம்பிக்கையை இழக்கவில்லை.  ஒரு வாரத்துக்குள் பழகி விட்டது. இந்திரனே எதிர்த்தாலும் நான் எனக்குரிய  ராஜ்யத்தைத் திரும்பப் பெறுவேன் என்று உள் மனதின் குரல் சொல்லியது.  

பிறவியிலேயே அரசனுக்குரிய குணங்கள் வந்து விட்டன. வளர்க்கப்பட்தும் நாளை அரசனாக ஆட்சி கட்டிலில் அமர வேண்டியவன் என்று சொல்லியே வளர்த்தனர். நடுவில் கர்ம- வினைப்பயன் காற்றாக வந்து ஏதோ ஒரு இடர் துரத்தி அடித்தாலும் அதை மூடன் தான் விதி என்பான். முயன்று பயின்றவை, அதனால் பெற்ற உடல் பலமும், மனதின்  ஆற்றலும்   என்னவாயிற்று? கற்ற கல்வியினால்  என்ன பயன்? .

தாய்மார்கள் அவனுக்காக ஒரு பணியாளனிடம் உணவுப் பொருள்களை கொடுத்தனுப்பி இருந்தனர்.  அவன் ரங்கவாடம் என்ற மடத்தின் உள்ளே உங்களுக்காக காத்திருக்கிறான் என்று செய்தியும் கிடைத்தது. அந்த இடத்தை தேடிக் கண்டு கொண்டனர்.   மனித நடமாட்டமே இல்லாமல் அந்த மடம்  ஊருக்கு வெளீயே ஒதுங்கி இருக்கவும் தயங்கினர்.  அதற்குள் அவனே எதிர் கொண்டு வந்து அழைத்துச் சென்றான்.  உள்ளே நுழைந்ததும் சில துரோகிகள் ஒளிந்திருந்து தாக்கினர். அதன் பின் அரச குமாரன் செய்தது அத்புதமாக இருந்தது.   சற்று முன் மனதில் தோன்றிய வைராக்யம், அரச குல ரத்தம், சிங்கம் போல அவர்கள் மேல் பாய்ந்தான். அதே போல சம்ஹாரம் – ஒரே அடியில் வீழ்த்தினான்.  நம்பியவனை ஏமாற்றவா செய்கிறாய்?   நம்பிக்கைத் துரோகம் என்பதையே வீழ்த்துவது போன்ற வெறியுடன்  அங்கிருந்தவர்களை உயிர் இழந்த பின் தான் விட்டான்.  அதில் ஒருவன் மாமன் மகன் பத்மகன், மற்றவன்  கேலா  இதற்கு முன் போரில் பல வீரச் செயல்களைச் செய்தவன்.  போஜனின் காலில் ஆயுத காயங்களுக்கு மருந்தாக தடவும் ஒரு குழம்பு அப்பியது. அதனால் பாதிக்கப் பட்டவனாக அதே இடத்தில் வீர சயணத்தை அடைந்தான்.

அதே இரவு, உஸ்சலன் ஸுர்யமதியை (ஹர்ஷனின் தாய்)  அடக்கம் செய்திருந்த மயானத்தின் பகுதிக்குச் சென்றான்.   லவனோத்சவ என்ற இடத்தில் கடுமையான போர் – அதில் முழுமையாக போரிட்டு களைத்தவனாக அவனும் அவன் சகோதரனுமாக மிகவும் களைத்திருந்தனர்.  போஜனும் இல்லை, ஹர்ஷன் மட்டுமே உயிருடன் இருக்கிறான் என்ற செய்தி அவர்களை எட்டியிருந்தது.   மனதில் குத்தியிருந்த முள்ளை எடுத்துவிட்ட நிம்மதி, ராஜ்யம் கைக்கெட்டும் தூரம் தான் என்ற     மகிழ்ச்சி வந்தது.

விடிந்தது.  முக்தா வெளியில் சென்று ஒரு மருத்துவனை அழைத்து வந்தான்.  அவன் மருந்திட்டு அரசனின் கால் காயத்துக்கு கட்டுப் போட்டு விட்டான். குடிசையின்  வாசலை திறந்தான்.  உள்ளே குப்பைகளை அகற்றி சுத்தம் செய்து விட்டு அரசனை அங்கிருந்த புல் முதலியவைகளைக் கொண்டு படுக்கை தயாரித்து அமரச் செய்தான்.  வந்த மருத்துவன், அவன் தான் அந்த குடிசையின் உரிமையாளனான துறவி- . நோயாளிக்கு மன ஆறுதல் தருவதாக பேசும் பேச்சுக்களை பேசினான்.  பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தான்.  ப்ரயாகன் தன் ஆடைகளில் ஒன்றை கொடுத்து அதை விற்று முடிந்தவரை உணவு வாங்கி வா என்று சொல்லி அனுப்பினான்.  அவர்கள் மூவரும் முழுமையாக நம்பவும் இல்லை. உணவு தான் வாங்கி வருவானோ, வேறு ஏதாவது உபத்ரவம் தான் கொண்டு வருவானோ என்றே நம்பிக்கையில்லாமலே வேறு வழியின்றி காத்திருந்தனர்.  பேச்சும், செயலும் பழக்கமில்லாத இடமும் பயத்தையே அளித்தது. துறவி தான், ஆனால் காரணத் துறவி. தவம் செய்பவன் இல்லை. யாருடைய உளவாளியோ.நெடு நேரம் சென்ற பின், பிற்பகல் ஒரு பெண் துறவியின் தலையில் வைத்து உணவு பொருட்களுடன் அந்த துறவி-மருத்துவன்  தன் தோளிலும் ஒரு மூட்டையுடன் வந்தான். 

அரசனாக இருந்த ஹர்ஷனுக்கு வெறுப்பாக இருந்தது. முன் கண்டறியாதவள் தான் என்றாலும் பெண்ணின் முன் தலை கவிழ்ந்து நிற்க வெட்கம் பிடுங்கித் தின்றது.  வந்த உணவை பிரயாக இலையில் வைத்து கையில் கொடுத்தான். அவன் திருப்திக்காக  கையால் தொட்டான்.  வாயில் போடத் தோன்றவில்லை.  வெளியில் பிரயாகனும் முக்தனுமாக அந்த பெண்ணிடம் பேச்சு கொடுத்தனர். அவளோ உரக்க நாடக பாணியில் போஜ ராஜன் கொல்லப் பட்டான்  என்ற செய்தியைச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

கிராமத்து பெண் ஏதோ கேட்டதைச் சொல்கிறாள் ,நம்ப வேண்டாம் என்று மற்ற இருவரும் சமாதானம் செய்தாலும் அரசனுக்கு தன் மனது அது உண்மையாகவே இருக்கும் என்று உணர்வதாக  சொல்லி அழுதான்.  எதிரிகள் பலவிதமாக ஏசிய பொழுது கூட கலங்காதவன், எந்த சொல்லையும் ஆராயாமல் ஏற்காதவன்,  பலவிதமான விமரிசனங்களைக் கேட்டும் மனம் மாறாதவன், இந்த கிராமத்து பெண் துறவி சொல்வதை ஏன் கேட்டான்.

தந்தையால் இளம் வயதில் அலட்சியமாக  நடத்தப்பட்டதை நினைத்தான். அதே தானும் தன் மகனையும் அரச குமாரனுக்கான மன உறுதி வேண்டும் என்று சுதந்திரமாக இருக்க விடாமல் வளர்த்தோமோ என்று வருந்தினான். அவன் போரிட்டு தான் வீரனாக எதிரியை அழித்து விட்டுத் தான் மடிந்திருக்கிறான்.  தன் கைக்குழந்தையை யாரோ துன்புறுத்தியது போல வருந்தி அழுதான்.

முத்து மாலைகளும் கங்கணங்களும் அலங்கரிக்க இருந்த சிறுவனாக மகனை நினைத்தான். இளம் வயதினன், அவன் போக,நான் முதியவன் ஏன் இருக்க வேண்டும் என்ற பச்சாதாபம் எழுந்தது.  கோபமும், தாபமும் வாட்ட அன்று இரவு தூங்காமல் தவித்தான்.   விடிந்த பின், காலையிலேயே கிளம்பலாம் அருகில் பகவான் ஆசிரம் உள்ளது அங்கு போகலாம் என்று  பிரயாகா சொன்னான். இரவு முழுவதும் சக்ரவாக பறவைகளுடன் தானும் பிரிவுத் துயரை அனுபவித்தவன் போல இருந்தான்.  பசியினாலும் தாகத்தாலும் தவிக்கிறான் என்று அந்த துறவி, உனவு வகைகளை வாங்கி வரச் சொல்லி உடன் வந்த பெண்னை அனுப்பினான். அவளும் இரு பாத்திரங்களில்  அன்னமும், அதனுடன் சில காய்கறிகளால் செய்த கூட்டு  என்றும் வாங்கி வந்தாள்.  அவளே தயங்கியபடி, ‘ஐயா  யாரோ ஒருவர், பூஜைகள் செய்து விட்டு எளியவர்களுக்கு அன்னதானம் செய்து கொண்டிருந்தார். அங்கிருந்து வாங்கி வந்தேன். நீங்கள் உண்பீர்களா’ என்றாள்.  பிரயாகன் பெருமூச்சு விட்டான். அரச குமாரன் இறந்து கிடக்கிறான்.  மக்கள் யாகம், பூஜை என்று தங்கள் வேலையே கவனமாக இருக்கிறார்கள். அவளைப் பார்த்து’ பெண்ணே ஏன் இப்படி கேட்கிறாய். அறியாதவள் போல பேசுகிறாய்.   ஒருவன் உயிரை விட்டால் அவன் காலம் ஆயிற்று போனான்.  மற்றவன்  என்னதான் வருந்தினாலும்   உடன் போக முடியுமா என்ன?  மனிதனுக்கு தன் சுகம் தான் பெரிது. யாரும் எவருக்காகவும் தன் சுகத்தை கை விடத் தயாராக இல்லை’ 1684

உலகின் கண்ணின் ஒளியாக நாள் முழுவதும் பிரயாணம் செய்து விட்டு ஸூரியன் மறைந்தால் இருள் ஸூழ்கிறதே என்று வருத்தமா வருகிறது.  இரவு தூங்கவும், சுகமாக இருக்கவும் தானே.  உலகம் தன் போக்கில் சுற்றிக் கொண்டிருக்கிறது. எனக்கு துக்கம் என்று ஒருவன் அமர்ந்து  இருந்தால் உலகமே ஸ்தம்பித்து நிற்பது இல்லை அல்லவா, அதனால் வருந்தாதே. இது தான் உலகம்’ என்று சமாதானமாகச் சொன்னான். அரசனும் ‘நானே உயிருடன் இருக்கிறேனே, என் மகன் வாழ வேண்டிய வயதில் கொல்லப் பட்டான் என்று கேட்டும், திடமாக நிற்கிறேன் பார்.  மற்றவர்களை ஏன் நிந்திக்கப் போகிறேன். இருந்தாலும் பிரயகன், துறவியிடம் உன்னால் முடியுமானால் புதிதாக சமைத்த உணவையே அரசனுக்கு கொடு என்று வேண்டிக் கொண்டான்.  மனோரதன் என்ற ஒரு சகா- இந்த விவரங்களைக் கேட்டவன் வேறு விதமாக சிந்தித்தான். அரசன், என்னதான் தற்சமயம் இப்படி துக்கத்தில் இருக்கிறான் என்றாலும் இவனை அண்டினால் நன்மை பெறுவோம் என்று எண்ணினான் போலும்.  இவனை இவன் உறவினர்களுக்கு காட்டிக் கொடுத்தாலும் ஏதோ சிறிதளவாவது பரிசாக பெறுவோம் என எண்ணினான்.  அவனுடைய பேராசை, ஒருவனிடம் சொல்ல, அவன் மற்றவனிடம் என்று செய்தி இல்லாராஜன் என்பவன் காதுக்கு எட்டியது. சிலர் ஒரு செல்வந்தனான வியாபாரி தான் இல்லாராஜனை சந்தித்து சொன்னான் என்பர்.  துறவியோ அவன் நண்பனோ, அரச சபை வரைக்கும் செல்வது முடியாது என்பதும் ஒரு காரணம். இல்லாராஜன் உச்சலனுக்கு தெரிவித்தவுடன், நீயே பொறுப்பு ஏற்று அரசனை சிறை பிடி என்று உத்தரவு பெற்றான்.   குடிசையின் சிறு கதவு உடைக்கப் படும் சத்தம் கேட்டு யதேச்சையாக வெளியே பார்த்த அரசன் புரிந்து கொண்டான்.  முக்தா, கதவைத் திற என்று சொல்லி விட்டு, கையில் ஒரு குறுவாளை எடுத்துக் கொண்டு கதவின் பின் மறைந்து           நின் றான்.   மாமிசம் தின்னும் வேடனுடன் இருந்தால் அவனுடன் வேட்டைக்கும் போகத்தான் வேண்டும்  என்றான்.  ப்ரயாகன் வற்புறுத்தி ஏதோ சிறிதளவு சாப்பிட வைத்தான். அதுவே போதுமாக இருந்தது. அரசன் தன் உறுதியான மனதையும், உடல் பலத்தையும் பெற.  உதயமாகி விட்டதை, கூட்டிலிருந்து எட்டிப் பார்க்கும் பறவை போல பார்த்தான்.  அந்த சிறிய குடிசையை ஸூழ்ந்து  ஆயுதம் தாங்கிய வீரர்கள் தென்பட்டனர்.  துறவி வேடத்தில் இருந்தவனும் அயோக்யன், தானே கதவை திறந்து விடுகிறான் என்பது புரிந்தது.  ஏஹி, வா என்ற வாசலில் ஆயுதம் தாங்கிய வீரர்களை அழைப்பதும் புரிந்தது.   மெள்ள வாளும்,வில்லும் கவசமும் கொண்ட வீரன் எட்டிப் பார்த்தான்.  சிறிய வாயில், அதில்  தலை குனிந்து உள்ளே வந்தவன்  எதிலோ இடறி தானே விழுந்தான். அரசன் அவனை அடிக்கவில்லை. மல்லன் போல இருந்தவன்,  விழுந்தவனை அடிப்பது சரியல்ல,  முக்தா, நீ தப்பித்துச் செல் என்ற அவனையும் அனுப்பி விட்டு, விழுந்தவன் அருகில் நின்றான். மேற் கூரையை  விலக்கிக் கொண்டு உள்ளே வந்தவன் அசந்து நின்று விட்டான். அரசன் கையில் வாள் இருப்பதே அவனை அச்சுறுத்தியது போலும். ரூரு என்ற சிறு விலங்கு அதைக் கொல்ல பலசாலியாக ஒருவன் வேண்டுமா என்ன?  போர்க் களம் தான் – சிம்ஹ நாதம் இல்லை, பேரி வாத்யம் முழங்கவில்லை,  ஆவேசமான பேச்சுகள் இல்லை,  ஆயுதங்கள் உரசும் ஓசையும் இல்லை,  அரசனின் கடைசி போர் முனை.   பாத்திரத்தில் அகப்பட்டுக் கொண்ட எலியை எட்டிப் பார்க்கும் பூணை போல தாமர வீரர்கள் எட்டிப் பார்த்தனர்.   ஆயுதங்களுடன் ஓசையின்றி குடிசைக்குள் நுழைந்தவர்கள், கூரையை பிரித்துக் கொண்டு உள்ளே நுழைந்தவன் பிரயாகனை  கொல்வதைப் பார்த்தனர்.  அடுத்து வந்தவன் அரசனின் குறு வாளால் தாக்கப்பட்டான். மேலும் உள்ளே வந்த  ஒருவன்,   அரசன் கை  வாளையே பிடுங்கி எடுத்துக் கொண்டு அவன் மார்பில் பாய்ச்சினான். மரம் வெட்டப்பட்டு விழுவது போல விழுந்த ஹர்ஷ  ராஜன்  மஹேஸ்வரா என்று அலறியபடி உயிரிழந்தான். ஆயினும் அந்த சிறிய குடிலில்,  வாழ் நாளில் சக்கிரவர்த்தியாக ஆண்ட அரசனின் உடல் போரில் அடிபட்டு விழுந்த வீரனின்  மரணமாகவே முடிந்தது.  தகுதி இருந்தும் ஓடி ஒளிய நேரிட்ட போதிலும் தன் இயல்பான வீரமும்,  மன உறுதியுமாக அரசனாகவே மடிந்தான்.   அவனைப் போல வெற்றி வீரனாக வாழ்ந்தவனும் இல்லை,  அவனைப் போல உடன் இருந்து குழி பறித்த  மந்திரிகளால், மற்ற அதிகாரிகளால் வீழ்ந்தவனும்  இல்லை. ஒருவனாக போரிட்டு, தலை வணங்காமலே கடைசி மூச்சு வரை எதிரியை எதிர்த்து  போரிட்டவனாக உயிர் துறந்தான்.  அவனை குற்றம் சொல்ல முடியாது.  தவறான வழி காட்டிய மந்திரிகள், சந்தர்பங்களை  தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அரசனிடம் சொல்லாமல் மறைத்த உண்மை விவரங்கள், உதவ வேண்டிய சமயத்தில் நழுவிய சேனை வீரர்கள்  இவர்களே தண்டனைக் குரியவர்கள். நிந்திக்கப் பட வேண்டியவர்கள்.

எழுபத்து ஏழாவது ஆண்டு, பாத்ர பத மாதம், வளர் பிறை பஞ்சமி திதியில், தன் வயது  நாற்பத்து இரண்டாவது எட்டு மாதம் ஆன நிலையில் உயிரை விட்டான். 

துரியோதன ராஜா போலவே தன் வம்சத்தினரால் எதிர்க்கப் பட்டவன்.  அவன் பிறந்த குலமே அழியக் காரணமாக ஆகி விட்டான்.  அவன் பிறந்த வேளை என்பர் சிலர்.    கர்கடக ராசியில், அங்காரகனும்,    சனியும் ஐந்தாவது இடத்திலும்,  புதனும்   குருவும், ஆறாம் இடத்திலும், சுக்ரனும், ஸூரியனும் ஏழாம் இடத்திலும்,  சந்திரன் பத்தாவது  இடத்திலும்  இருந்ததாக   அவனது பிறந்த சமயம் கணித்த ஜாதகம் தெரிவிக்கிறது.  

तस्यास्ताम् क्ष्मार्कजौ  जीवबुधौ शुक्रोष्णगू शशी – तनयाजामित्रखेषु कर्कटक जन्मन: || चन्द्र  धैध्येज्यपापेषु स्वमाधामजगेषु यत-  आहु: सुसंहिताकारा: कौरवादीन् कुलान्तकान् ||  – கௌரவ குலத்தை அழித்தவனின் – துரியோதனின் ஜாதகம் போலவே அமைந்த ஜாதகம்.

பிரஜைகள் கூடவா நன்றி மறப்பார்கள் என்பது போல மழை திடுமென கொட்டலாயிற்று.  தங்கள் அரசன் என்ற மரியாதையோ, அவன் மூலம் பல நன்மைகளைப் பெற்ற நாட்டு மக்களுக்கு அவனுடைய அந்திம கிரியைகளைச் செய்யக் கூடவா தெரியவில்லை.  கடல் பொங்குவது போல மழை நீர் பெருகி பூமியே நடுங்கியது.  சற்று முன் மேகமே இல்லாமல் இருந்த வானம், எப்படி இந்த அளவு பெருமழை எங்கிருந்து வந்தது.   வரப்போகும் பெரும் அழிவைக் குறிப்பதாக அறிஞர்கள் நம்பினர்.  அரசனை தலையை மரியாதையுடன் பிரஜைகள் அதற்கான இறுதி மரியாதைகளுடன் நீர்க் கடங்களை செய்யாவிட்டால், இயற்கையின் விபரீதங்கள் தொடரும் என்பது அனுபவம் தந்த பாடம் என்றனர்.  (யுதிஷ்டிரன் காலத்திலும் இந்த நம்பிக்கை இருந்து துரியோதனன் அவன் தம்பிகள் அனைவருக்கும் நீர் கடங்களை செய்தனராம்)  காஸ்மீரத்தில் இயற்கையின் சீற்றம் அடிக்கடி நிகழ்வது தான் என்றாலும்,  அதன் தாக்கம் அரசர்களுடன் அவர்கள் வாழ்வு தாழ்வுகளை நிச்சயிப்பதாகவும்  நம்பினர்.  இது ஒரு அபி சாபம் என்றும் இதன் தாக்கம் பல காலம் நீடிக்கும் என்றும் நம்பினர்.  அந்த தேசத்தில் சுலபமாக தெய்வ சிலைகளை உடைத்து பங்கப் படுத்தினர். அரசனையும் அதே போல தலை தனியாக உடல் வேறாக ஆக்கியதை பொறுக்க மாட்டாமல் இந்த பெரு மழையும் வெள்ளமும் நாட்டை சேதப் படுத்தி விட்டது.

உச்சலனே அதை விரும்பவில்லை. உடல் வேறாக தலை வேறாக தன்னிடம் கொண்டுவந்த பொழுது கண்ணீரால் மரியாதை செலுத்தினான்.    திக்- இது ஒரு உணர்ச்சியை வெளிப்படுத்தும் சொல். திக் கஷ்டம்,  திருடனைப் போல தண்டிக்கப் பட்டான் என்பது அவனுக்கே அவமானமாக இருந்தது.  அவன் ஆணை கிடைக்காமல் அபர காரியங்கள் செய்ய தயங்கினர்.  வம்சத்தினர் எவருமில்லாமல், உடன் இருந்த அரசு அதிகாரிகளோ, வேலையாட்களோ கூட இல்லாமல்,  கௌரகன் என்பவன் சமையறையில் வேலை செய்தவன், கண்ணீர் மலக அரச மரியாதைகள் எதுவும் இன்றி அபர காரியங்களைச் செய்தான். ஹர்ஷனுடைய ஆட்சியும், செயல்களும் பல காலம் மக்களிடையே பேசப்பட்டு வந்தன.  வீரன், பல நல்ல செயல்களைச் செய்தவன்.   ராமாயண, மகா பாரத நாயகர்களுக்கு இணையாக ஹர்ஷனின் சரித்திரமும் பிரசித்தி அடைந்தது.   செல்வம் மின்னல் போல. விதி என்ற மேகத்தில் உதிக்கும் – அதே போல வேகமாக மறையும். அது இருக்கும் வரை மனிதன் கர்வமும், போகத்தில் அளவுக்கு மீறிய ஈடுபாடும் கொள்வதும்  இயல்பே. புத்தியினால் தன்னை நடு நிலைமையில் வைத்துக் கொள்ளாதவரை வீழ்ச்சியும் அதே வேகத்தில் நிகழ்வதை எப்படி தடுக்க முடியும்.

ஏராளமான மனைவிகள், ஒருவள் கூட கண்ணீர் விடவில்லை.  அரண்மனை முழுவதும் பணியில்  இருந்து அரசனிடம் பல வசதிகளையும் நன்மைகளையும் பெற்றவர்கள், யாரும் பணியிலிருந்து விலகவும் இல்லை, விரக்தி அடைந்து யாத்திரை செல்லவும் இல்லை.  தன் சுகமே பெரிது என்று இருந்த மந்திரி வர்கங்கள், என்ன நினைத்தனரோ. தங்களுக்கான வீடுகள், வாகனங்கள் என்று குவித்துக் கொண்டவர்கள்  சில நிமிடங்களாவது நினைத்தார்களோ இல்லையோ.   கடைசியில் தங்கள் சுகம் தான், யாருக்கும் எவரிடமும் பரிவோ, அன்போ இருப்பதில்லை போலும். தனக்கு ஆதாயம் என்றால் ஒட்டுதலும், அது கிடைத்தபின் கண் காணாமல் போவதோடு  மனதிலிருந்து கூட விலக்கி விடுவர் போலும். 

ஆதியில் அறியாத வயதிலும் எதுவும் நினைவில்லை. முதுமையிலும் மற்றவர்கள் நினைவில் நிற்பதில்லை.  நடுவில் வாழ்ந்த காலத்தில் அவனுடைய செயல்களே சுகமோ, துக்கமோ, வருத்தமோ, மகிழ்ச்சியோ, உடன் இருப்பவர்களூம் பகிர்ந்து கொள்வர்.  நாடகத்தில் நடிப்பவனும் அதே தானே செய்கிறான்.  மேடையில் இருக்கும் வரை அவன் மகிழ்ந்தால் மகிழும், அவன் அழிந்தால் உடன் வருந்தும் பார்வையாளர்கள் போலத் தான் உறவினரும் நட்புடன் அருகில் இருப்பவர்களும். நாடம் முடிந்தவுடன் திரைக்குப் பின் அந்த நடிகனை  யார் அறிவர்.  அவன் தொழிலோ, குடும்பமோ பொருட்டல்ல.

சாதவாகன குலத்தை வாழ்வித்த திருமகள், உதயராஜ குலத்தை விட்டு விலகி  காந்தி ராஜனிடம் வந்தாள்.  மேரு மலையில் உற்பத்தியாகி இமய மலையின் சரிவுகளில் பிரவகித்து, ஓடி வந்த கங்கையைப் போல தெய்வ சங்கல்பம்  அதிலேயே சங்கமம்  ஆகி விட்டாள்.   

ஒரு சகாப்தம் முடிந்தது.  

(இது வரை ஸ்ரீ காஸ்மீர தேசத்து மகா மந்திரியான சம்பக  ப்ரபுவின் மகன் கல்ஹணன் எழுதிய ராஜ தரங்கினீ என்ற நூலின் ஏழாம்   பாகம்- ஏழாவது  அலை நிறைவுறுகிறது

உதய ராஜனின் துவங்கிய  அரச  வம்சத்தில், ஏழு, எட்டு,ஒன்பது வரையிலான தலைமுறைகளில் வந்த அரசர்கள் பற்றிய வரலாறு சொல்லப் பட்டுள்ளது.

Rajatharangini-6

ராஜதரங்கினி – 6 வது அலை

அபர்ணா என்று தேவி பார்வதியின் பெயர்.  தவம் செய்பவர்கள்,  உணவை தவிர்த்தும், மூச்சை அடக்கி யோக முறையில் பயிற்சிகள் செய்தும் சுய கட்டுப்பாட்டை வளர்த்துக் கொள்கிறார்கள் என்பது ஒரு செய்தி.  கவி – அதில் என்ன அதிசயம் என்கிறார்.  அனைத்து உயிரினங்களும் பல் வகை உணவு  உண்ணும் வழக்கம் உள்ளவை. இலை தழை மட்டுமே உண்ணும் பசுக்கள் உள்ளன. காற்றை உண்டு உயிர் வாழும் பாம்புகள்  உள்ளன.  அன்பு என்ற ஒன்றே ஆண்டவனிடம் சேர்க்கும்.  இதை சொல்ல வந்தது  போலவே தேவ வதூ- மகா தேவன் எனும் பரமேஸ்வரனின் மனைவியாக வந்த அபர்ணா – இலை இல்லாமல் என்று சொல்லின் பொருள்.   ஒவ்வொன்றாக விலக்கி, இலைகளை கூட இல்லாமல் தவம் செய்தாள்.   அபர்ணா என்ற பெயருடன் விளங்கும் தேவி தானே வாழ்ந்து காட்டினாள் போலும்.  சராசரத்திற்கும் குருவான தக்ஷிணாமூர்த்தி, பரமேஸ்வரன்.  அவரை அடைய அவதாரம் எடுத்த அபர்ணாவான தேவி எங்களை காக்கட்டும். (கல்லால மரமாக  சிவ பெருமான் தவம் செய்தபொழுது, தேவி அந்த மரத்தைச் சுற்றிய இலை இல்லாத கொடியாக  உடன்  இருந்தாள்  – அதனால் அபர்ணா. தமிழ் நாட்டில் சில கோவில்களில் இப்படி சிற்பங்கள் உள்ளன.)

யசஸ்கரன்    முதல் வேலையாக அனாவசியமாக தன்னைச் சுற்றி கூட்டம் போடுவதை நிறுத்த ஆணையிட்டான். யாரானாலும், தேவையின்றி அரண்மனை வளாகத்திற்குள் வர வேண்டாம்.  இதில் யாரும் விதி விலக்கல்ல. ஆலோசனைகள் சொல்ல வரும் அந்தணர்கள் அறிஞர்கள் முதல் ஆயுதம் ஏந்திய காவலாளிகள், அனைவருக்கும் இதே கட்டளை தான்.  காவலாளிகளே, எவரையும் தடுக்க வேண்டாம். பல ராஜ்ய காரியங்கள்,  பல விதமான அரச செயல்கள் அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டிய உதவிகளை செய்பவர்கள் இவர்கள் அனைவரும்அரசுக்கு வணக்கத்துக்கு உரியவர்களே.  அதற்கு மேலும் உரிமைகள் என்று கோருவதோ, தானாக முடிவெடுப்பதோ அனுமதிக்கப் பட மாட்டாது. இந்த அரியணையை எனக்கு தானமாக கொடுத்ததாக நினைக்க வேண்டாம்.   மற்றபடி அலுவலக வேலையாக தாராளமாக என்னிடம் வரலாம்.

இதைக் கேட்ட அரண்மனை ஊழியர்கள் அருகில் இருப்பதால் தங்களுக்கு இலவசமாக கிடைத்த சலுகைகள் இனி கிடைக்காது என புரிந்து கொண்டனர்.

புதிதாக ஒருவர் எழுதிய கவிதையின் தவறுகளை திருத்தும் தேர்ந்த கவி போல, ராஜ்யத்தில் இது வரை இருந்த நடை முறைகள், அதிகாரங்கள்,  அனைத்தையும் முறைப் படுத்தி தன் அறிவின் திறத்தால் மேம்படுத்தினான். தேவையற்ற மரபுகள், பேச்சுக்கள் குறைந்தன.

அது வரை இருந்த திருடர்கள் காணாமல் போயினர்.  இரவிலும் வாணிபம் பயமின்றி நடைபெற்றது. பாதைகள் சீராக அமைக்கப் பட்டன.  வழி நடைகளும்  சீராயின.  நடந்து செல்வோர், வாகனங்களில் செல்வோர் என்று பலவிதமான  போக்கு வரத்தும் மேம்படுத்தப் பட்டது. அபகரிப்போர் இல்லாத நிலையில் கண் காணிப்பவர்களும் அதிகமாக இல்லை.   விவசாயிகள் தங்கள் விவசாயத்தை மட்டுமே கவனமாக செய்தால் போதுமானதாக இருந்தது.  அவர்கள் தேவைகளை அரசனே முன்னின்றி செய்து கொடுத்து விடுவான்.  தங்கள் விண்ணப்பங்களை  தூக்கிக் கொண்டு அரண்மனைக்கு வருவது அவசியம் இல்லாமல் போனது. அரண்மனையை அவர்கள் கண்ணால் கூட காணவில்லை என்று வர்ணிக்கிறார்.  அதே போல சாஸ்திரங்கள் அறிந்த வித்வான்கள்,  ஸ்வாத்யாயம் என்ற தங்கள் வேத சாஸ்திர கல்விகளைக் கற்பதிலேயே முனைந்து இருந்தனர்.  அவர்கள் எந்த நிலையிலும் தாங்களும் பாதுக்கப்புக்காக ஆயுதம் தரிக்கும் அவசியம் இருக்கவில்லை.  (ஸாஸ்திரம் -கல்வி, சஸ்திரம்- ஆயுதம்) சாம கானம் செய்பவர், அதன் நியமங்களை அனுசரித்தும், தவம் செய்வோர் அதற்கான கட்டுப் பாடுகளுடனும், யாக நியமங்களை செய்பவர்கள் அதன் கட்டுபாடுகளை விடாமலும் இருந்தனர்.   தர்க்கம் செய்ய வருபவர் தங்கள் நூல்களில்  அதை எழுதி வெளியிட்டனர். (பொது இடங்களில் கார சாரமாக விவாதம் செய்வது நின்றது)  இல்லத்தரசிகள் வீடுகளில் கணவனின் சீலம், செல்வம் இவைகளுக்கு எதிரான எந்த செயலையும் செய்யாமல் இருந்தனர். அதனால் இல்லறம் அமைதியாக இருந்தது.   பிக்ஷுக்கள் நாகரீகம் அறிந்தவர்களாக, மந்திரியாக புரோஹிதராக, குரு இருந்தார்.  தூதனாக வருபவன் , எழுத்தர்களோ, தங்கள் துறையில் பாண்டித்த்யம் உள்ளவர்களே அமர்த்தப் பட்டனர்.  ப்ராயோபவேசம் என்ற வழக்கம் – செய்வதாக வாக்களித்து விட்டு செய்யா விட்டால தாங்களாக உண்ணாவிரதம் இருந்தோ வேறு வழியில் உயிர் தியாகம் செய்யும் முறை- இவற்றை கவனிக்க ஒரு தனி நிர்வாகத் துறையே ஏற்படுத்தி விட்டான்.  அது தற்கொலைக்கு ஒப்பானது என்பதால். 

வழக்குகளும் நீதி வழங்குதலும் பற்றி விவரமாக சொல்லப் படுகிறது.  முதலில்  கிராமத்து அல்லது அருகில் இருக்கும் சிறு நியாயாதிபதிகள் விசாரிப்பர்.  பின் அரசனிடம் வரும். அரசனின் தீர்ப்பே முடிவானது. அரசன் தானே விசாரித்து நீதி வழங்குவான். அதற்கு ஒரு சில ஆலோசகர்கள் இருப்பர்.  இதே முறை தான் சாணக்யாவின் அர்த்த சாஸ்திரத்திலும் சொல்லப் படுவது.  அரசியல் நிர்வாகமும், நிதி நிர்வாகமும் அவ்வாறே அரசன் தலைமையில் ஒரு சில ஆலோசகர்களின் உதவியோடு நடை பெறும் என்பது இந்த தேசத்தின் தொன்று தொட்டு வந்த நியமம். அதே போல கணக்கு வழக்குகளும் முறையாக எழுதியும் சரி பார்க்கவும் ஒரு துறையும் அதற்கான அறிவுடையவர்களின் குழு இருந்த தும் அந்த முறை இன்னமும் பின் பற்றப் படுவதாகவும்  கவியின் கருத்து.

ஒரு வழக்கு அரசன் யசஸ்கரன் முன் வந்தது. ‘ மஹீபதே!  நான்  சொல்வது உண்மையே. செல்வந்தனான வணிகனாக  இருந்தேன். என் செலவினம் அதிகமாக ஆக ஆக, முன் பணம் கொடுத்தவர்களின் பணத்தை காலத்தில் திருப்பி கொடுக்க இயலவில்லை.  தற்சமயம் அனைத்தும் இழந்தவன்.  யாரை நோவேன். தெய்வ சங்கல்பம் தான். என் வீட்டை விற்று கடன்களை அடைத்தேன். அதன் பின் ஊரை விட்டு வெளியேறி தேசாந்திரம் போவதாக எண்ணியிருந்தேன். என் மனைவிக்காக ஒரு கிணறு அதை மட்டும் விட்டு வைத்தேன்.  வாங்கியவரும் என்னைப் போலவே செல்வந்தனான வணிகன்.  படிகளுடன் அமைந்த அழகிய கிணறு.  அவளுக்கும் என் கடமை ஒன்று உள்ளதே.  வேணிற் காலத்தில் தோட்டம் போடுபவர் மலர் செடிகளுக்கு நீர் விட,  நீர் எடுத்துச் செல்வர்.  வெற்றிலை விற்கும் சிறு வியாபாரிகள் கிணற்றைச் சுற்றி நிழலில் காற்றாட அமர்ந்து வியாபாரம் செய்வர்.  அதற்கான கிரயம் என்ற முறையில் கொடுக்கும் தனம், அதைக் கொண்டு என் மனைவி தன் வாழ்வை சிரமம் இன்றி வாழ்வாள் என்பது தான் என் எண்ணம்.

இருபது ஆண்டுகள் பல இடங்களுக்கும் சென்று பொருள் சேர்த்துக் கொண்டு சொந்த ஊர் திரும்பியவன் என் மனைவியைத் தேடினேன். உடல் வாடி, முகம் கறுத்து அவள் வேற்று மனிதர் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணாக இருப்பதை அறிந்து திகைத்தேன்.  ஏன் இந்த வேலை செய்கிறாய். நான் தான் உனக்கு சுயமாக வாழ வகை செய்து கொடுத்தேனே.  அவள் சொல்கிறாள்.  நீங்கள் அகன்றதும் அந்த வீட்டை வாங்கியவன் கிணற்றின் அருகில் நான் போக விடாமல் தடுத்தான். மீறி சென்றால் அடித்தான். வேறு என்ன செய்வேன் என்றாள்.  உள்ளூர் நியாய ஆலயங்களில் வழக்கு தொடுத்தேன். அந்த வணிகனோ செல்வந்தன். தீர்ப்பு அவன் பக்கமே சென்றது. நான் வணிகன், வழக்கும், எது நியாயம்? அரசாங்க சட்டங்கள் என்ன எதுவும் தெரியாது. நான் கிணற்றை என் மனைவிக்காக, அவள் தன் வரையில் சிரமப்படாமல்  வாழ வகை செய்து கொடுத்திருந்தேன்.  என்னைப் பொறுத்தவரையில் படிகளுடன் அமைந்த கிணறு தான் எனக்கு வாழ்வாதாரம்.  நீங்களும் என்னை குற்றவாளியாக கருதினால்  ப்ராயோபவேசம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை.  அரசர் தீர்ப்பு எதுவானாலும் ஏற்கிறேன்.

அரசனுடைய ஆலோசகர்கள் சொன்னார்கள். வீட்டை விற்கும் பொழுது கிணற்றைப் பற்றி பேசவில்லை. அதனால் வீட்டோடு கிணறும் வாங்கியவனுக்கே என்று ஆகும். எழுத்தில் இல்லாமல் இவன் வாய்ச் சொல்லே பிரமாணமாக கீழ் நிலை நியாயாதிபர்கள் இவன் சொல்வது தவறு என்று தீர்மானித்து விட்டனர்.  இவன் தான் குற்றவாளி, தண்டனைக்குரியவன் என்றனர். 

ஆலோசகர்கள் விளக்கியதை கேட்பது போல இருந்தாலும் அரசன் தனக்குள் யோசித்தான். உள் மனதில் இவன் பொய் சொல்லவில்லை என்று தோன்றியதால் உடனே எதுவும் சொல்லவில்லை.

தர்மாசனம் என்ற நீதி வழங்கும் ஆசனத்தில் சென்று அமர்ந்தான்.  ஏதோ நினைத்தவன் போல்  ஒரு பணியாளிடம் சபையில் இருந்தவர்களிடம் அவர்கள் அணிந்திருந்த ஆபரணங்களை சேகரிக்கச் சொல்லி விட்டு உள் அறைக்கு சென்று விட்டான்.

வாதியின் மோதிரத்தை மட்டும் அந்த பணியாள் அரசன் சொன்னபடியே அவரிடம் கொண்டு வந்து கொடுத்தான்.   அந்த பணியாளிடமே அதைக் கொடுத்து அந்த வணிகனின் வீட்டுக்குச் சென்று  அந்த மோதிரம் பற்றிய விவரங்களைக் கேட்டுக் கொண்டு வாய் மொழியாக சில உத்தரவுகளும் இட்டான்.

அதன் படியே அவன் வீட்டை வாங்கிய வணிகனின் அலுவலகம் சென்று, அங்கு இருந்த முக்கிய கணக்கரிடம்  அந்த மோதிரத்தை அடையாளம் காட்டி,  அந்த வீடு கை மாறிய சமயம் எழுதிய பத்திரங்களை அரசன் கேட்பதாகச் சொன்னான்.  அவர் உடனே பத்திரத்தை தேடி எடுத்து தர, அதை  வாங்கி வந்தான்.  அந்த பத்திரத்தில் அரசன், ஆயிரம் டினார்கள் அந்த எழுத்தருக்கு அளித்ததாக படித்தான்.  அரசன் புரிந்து கொண்டான். அந்த எழுத்தருக்கு தேவைக்கு மேல் பணம் கொடுத்த காரணம் –  ர என்ற இடத்தில் ச என்ற எழுத்தை மாற்றவே.   வணிகன் எழுத்தருக்கு அதிக பணம் ஊதியமாக கொடுத்து பத்திரத்தை மாற்றியிருக்கிறான்.  (ஸ- உடன், ர -அது தவிர என்று பொருள் படும். ர என்ற எழுத்தை ஸ என்று ஆக்கினால் கிணறு தவிர என்ற இடம் கிணற்றுடன் என்று பொருள் தரும். கூப சஹிதம்- கிணற்றுடன், கூப ரஹிதம் கிணறு தவிர )

அரசன் சபைக்கு வந்தான்.   வழக்கை விசாரித்து தீர்ப்பு சொல்வதாக வாதியான வணிகனிடம் சமாதானமாக சொல்லி விட்டு, சபையினரிடம் இந்த பத்திரத்தில் செய்வித்த மாறுதலை சுட்டிக் காட்டினான். அதன் படி வீடு அதன் சொந்தக் காரனுக்கே என்றும், பத்திரத்தில் மாறுதல் செய்த குற்றத்திற்காக மற்றவனுக்கு தண்டனையும் அளித்தான். 41

ஒரு நாள், அரச சபையிலிருந்து வேலைகளை முடித்த பின் உணவருந்த கிளம்பியவனை, மெய்க்காப்பாளன் வந்து விண்ணப்பித்தான். ‘அரசே! வாசலில் ஒருவன் உங்களைக் காண விரும்பி காத்திருக்கிறான். சொல்லிப் பார்த்தேன். அரசன் உணவருந்தும் நேரம். நாளை வா’  என்றால் அவன் அழுது விடுவான் போல இருந்தது. ஏதோ துக்கம். ப்ராயோபவேசம் தான் வழி, அதற்கும் இந்த அரசனின் காவலர்கள் விடவில்லை என்றான். ‘

 அரசன் அவனை அழைத்து வா என்று சொல்லி விட்டு அமர்ந்தவன், ஒரு அந்தணன் பரிதாபமாக தோற்றத்துடன் நுழைந்தான். ‘அரசே! வெளி தேசங்கள் சென்று உழைத்து நூறு பொற்காசுகள் சேர்த்தேன்.  அதை ஒரு முடிப்பாக கட்டி பத்திரமாக இந்த தேசம் அரசனின் ஆட்சியில் நலமாக இருப்பதைக் கேள்விப் பட்டு என் சொந்த தேசம் இது என்பதால் திரும்பி வந்தேன்.  அரசனே! உங்கள் ராஜ்யத்தில் திருடர்கள் அறவே ஒழிக்கப் பட்டு விட்டார்கள் என்றனர்.  வழியில் எந்த அசம்பாவிதமும் நடக்காமல் ஊர் வந்து சேர்ந்தேன்.  லவனோத்சம் என்ற இடத்தில் அந்தி வேலையில் சற்று ஓய்வெடுக்க நினத்து இங்கு தான் பயம் இல்லையே என்ற தைரியத்துடன்  ஒரு பெரிய மரத்தின் அடியில் தூங்கி விட்டேன்.  மூன்றாவது யாமம், விடியும் முன் எழுந்தேன்.  என் பண முட்டையை எடுத்தவன் கை தவறி கீழே விழுந்தது.  சுற்று முற்றும் தரையில் தேடி கிடைக்கவில்லை.  என் போதாத வேளை தொலைத்து விட்டேன் என்பதால் ஊர் வந்து என்ன செய்வது என்று உயிரை விட துணிந்தேன்.  அரசு காவலர்கள் வந்து தடுத்தனர். இந்த நாட்டில் தற் கொலை செய்து கொள்ள கூடாது என்று அரசரது ஆணை என்றனர்.   கூட்டம் வேடிக்கை பார்க்க வந்தது. அதில் ஒருவன் நான் எடுத்து தருகிறேன். இந்த பள்ளத்து நீரில் விழுந்திருந்தால், இலைகள் மண்டி கிடப்பதால் அடியில் நீர் தெரியவில்லை, எனக்கு என்ன தருவாய் ? என்றான். விரக்தியின் எல்லையில் இருந்தவன் நான் சொன்னேன், என் கையை விட்டு போன தனம் உன் கையில் அகப்பட்டால் கொடுப்பதைக் கொடு என்றேன். அவன் தைரியமாக அந்த பள்ளத்தில் குதித்து என் பண மூட்டையை எடுத்து வந்தான்.  என் கையில் இரண்டு நாணயங்களை வைத்து விட்டு மீதியை அவன் எடுத்துக் கொண்டான். நீ சொன்னபடியே நான் எனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டேன்.  அரசனே! வார்த்தை மீறக் கூடாது என்பதை அறிவேன். ஆனால் அதைச் சொன்ன சமயம் மிகுந்த வேதனையோடு இருந்தேன்.  கூடியிருந்தவர்களும் அவன் பக்கமே நியாயம் என்றனர்.  எனக்கு வேறு வழியில்லை.  அதனால் தானே உயிரை விட முயற்சித்தேன். அதற்கும் உங்கள் அரச சேவகர்கள் விடவில்லை.  இந்த அரண்மனை வாசலில் கிடக்கிறேன். உயிர் போகும் பொழுது போகட்டும்.  இங்குள்ளோர் முழு விவரங்களையும் கேட்டு விட்டு, நீ கொடுத்த வாக்கு நீயே தான் அனுபவிக்க வேண்டும் என்றனர்.

நாளை கண்டிப்பாக விசாரிக்கிறேன். இப்பொழுது வா, என்னுடன் சாப்பிட்டு விட்டு தூங்கு என்ற அரசன் தன்னுடனேயே வலுக் கட்டாயமாக அமர்த்தி உணவருந்தச்  செய்தான்.   அவன் பெயர் என்ன? என் ஆட்கள் அழைத்து வருவார்கள்.  முகம் தான் அறிவேன். பெயர் மற்ற விவரங்களை  நான் எதுவும் விசாரிக்க வில்லையே என்றான்.  மறு நாள் லவனோத்சௌகம் என்ற இடத்துக்கு சேவகர்களை அனுப்பி அந்த மனிதனை அழைத்து வரச் செய்தான்.  அரசன் முன்  அவனை கொண்டு வந்து  நிறுத்தினர்.   அவனும் அந்தணன் சொன்னதையே சொன்னான். இதில் என் தவறு எதுவும் இல்லை. இவர் கொடுத்த வாக்கு,  அதன் படி நான் பாகம் பிரித்தேன்.  அரசவையில் முதலில் விசாரித்தவர்களும் அதையே ஏற்றனர். வாதியும் நான் சொல்லவில்லை என்று மறுக்கவில்லை. அதனால் இந்த வழக்கு இப்படித்தான் முடியும்.

அரசன், தன் ஆசனத்தில் வந்து அமர்ந்த உடன், நீ சொல்வது சரியே. ஆனால் யோசித்துப் பார். வாக்கு சத்யமாவதும், கால தேசங்களை அனுசரித்து நிலைமையை வைத்து நியாயம் எது என்பதிலும் ஒரு இடைவெளி உள்ளது.  ஒரு சத்யத்தை காப்பாற்ற சொல்லும் நியாயம், விபரீதமான விளைவைத் தரும் என்றால், அரசன் தன் மனச் சாட்சிபடி தீர்ப்பு அளிக்கலாம்.  ஒரு விதத்தில் இந்த வழக்கில் ஒருவனது அழிவின் மேல் மற்றவனின் பேராசை அனுமதிக்கப் படுகிறது. பொதுவாக சரி என்று தோன்றினாலும் பின் விளைவை நினைத்தும், இந்த மனிதனின் நிதி நிலைமையை யோசித்தும் இந்த தீர்ப்பை அளிக்கிறேன். நீ நீரில் இறங்கி எடுத்துக் கொடுத்த செயல் அதற்கான பலன் உனக்கு கிடைக்கத்தான் வேண்டும். இங்கு அந்த பேராசை என்ற குணம் உன்னை சமமாக பிரித்துக் கொள்ள விடவில்லை. அதற்கான தண்டனையை அடைவாய். இவரிடம் தொன்னூற்று எட்டு நாணயங்களை கொடு. மீதி உனக்கு.

சபையினரின் சந்தேகம் தோய்ந்த முகங்களைப் பார்த்து அரசன் சொன்னான். எது சரி? ஒருவனின் வாக்கு காப்பற்றப் படும். அதோடு அவனிடம் தன் பணத்தை இழந்தவன், வெறுத்து போய் தானே தன்னை மாய்த்துக் கொள்ள அது வழி வகுக்கிறது. இந்த தீர்ப்பு அதற்கு சம்மதிப்பது போல ஆகும்.  இதில் பலன் அடைபவன் தன் தகுதிக்கு மேல் ஆசைப் பட்டதால் ஒரு மனிதனின் வாழ்க்கை பாழாவது அவனுடைய பேராசையால் மட்டுமே. இருவருக்கும் இடையில் பூசல் இல்லை, கொடுக்கல் வாங்கல் இல்லை. சொல்லப் போனால் இந்த பிரதி வாதியும் தன் மனசாட்சிபடி நடந்து கொண்டிருந்தால் இந்த நிலை வந்திருக்காது. இருவரும் நட்பாக பிரிந்திருப்பார்கள். எது சரி? இப்பொழுது சொல்லுங்கள். ஒரு தீமையை விலக்க மற்றொரு பெரிய தீமைக்கு இடம் கொடுப்பது சரியல்ல- இது நியாய சாஸ்திரத்தின் நுட்பமான ஒரு விதி.

தினமும் மாலை நேரத்தில் அஸ்தமித்த பின்னும் உலகில் ஒளியை அக்னியிடமும் நிலவின் பொறுப்பிலும்  நிலை நிறுத்தி விட்டு பகலவன் மறைகிறான்.  விளக்குகளும், நிலவும் இருளை விலக்க உதவும்.  இது ஒரு நீதி. இதை ஏற்றுக் கொள்ள கடினமாக இருந்தாலும் நியாயம்- அநியாயம்  இவைகளுக்கு இடையில் மிக சிறிய இடைவெளியே உள்ளது.  அதுவே பின்னால் வேகமாக தாக்கும். மரத்தின் உள்ளேயே உறையும் நெருப்பு மரத்தையே எரிப்பது போல.

கொடுப்பதை கொடுங்கள், உங்கள் விருப்பம் எனும் பொழுது,  அவனது விருப்பம் – பேராசையால்  அந்த மனிதனை தொன்னூற்று எட்டு நாணயங்களை எடுத்துக் கொள்வதை தவறாக நினைக்கவில்லை. தன் கையில் இருந்து கொடுப்பது போல  போல இரண்டு நாணயங்கள் கொடுத்தான். அவன் உழைத்து வருடக் கணக்காக சேமித்த காசானால் வலித்திருக்கும்.  நுணுக்கமாக இந்த வழக்கை எண்ணிப் பார்த்தால், நீங்களே உணர்வீர்கள். க்ருத யுகத்து நீதி என்றாலும் இது தான் நீதி.  யசஸ்கரனின் நீதி. மனித நேயம் என்ற உயர்ந்த நீதி.

ஆனால் யசஸ்கரனின்  இத்தகைய கொள்கைகள் சபை அங்கத்தினர்களுக்கு ரசிக்கவில்லை.  வைத்யர் நோயாளிக்கு பத்திய உணவு சொல்லி விட்டு,  தான் விருந்து உண்பது போல – அவனுக்கு வியாதி இல்லை, விருந்து சாப்பிட முடிகிறது என்ற உண்மை கூட மறந்து விடுகிறது போல.

அரசனிடம் மதிப்பு குறைந்த காரணம் அரண்மனை வேலையாட்களை தேர்வு செய்வதிலும் கவனமாக இல்லை.  குலம் இல்லாத சேவகர்கள் சமையல் வேலை செய்வதை அனுமதிக்கிறான்.  வேதம் படித்தவன் மண்ணாலும் நீராலும் தன்னை சுத்தி செய்து கொள்வதில்லை.  இப்படி பல குறைகள் கண்டனர்.

அரசனின் மூத்த சகோதரன், ரணேஸ்வர சன்னிதியில் வாளை வைத்து சத்ய பிரமாணம் செய்தவன், போரில் மரனம் அடைந்த பொழுது அரசன் வருந்தவில்லை.  சபையில் இருந்த மற்றவர்கள் இதை பலவிதமாக தங்கள் அனுமானங்களால் எப்படி வருந்தாமல் இருக்கிறான். இவனே ஏற்பாடு செய்து போரில் மரணமடைய செய்து விட்டானோ என்று வதந்தியை பரப்பினர்.

மண்டலேசன் என்ற பதவிக்கு வேலாவித்தன் என்பவன் நியமிக்கப் பட்டான்.  அவனோ அந்த:புரத்தில் தன் விளையாடல்களை ஆரம்பித்து விட்டான். ராணிகளை அவன் தன் வசம் ஆக்கிக் கொண்ட பொழுது கூட யானை கண் மூடிக் கொள்வது போல கண்டும் காணாமல் இருந்து விட்டான். இது என்ன குணம்?  இந்த வேலாவித்தன் கொடுத்த தைரியம் லல்லா என்ற விலை மாது அந்த:புரத்துக்கே வந்தாள்.  அவளை அந்த:புரத்துக்கு அதிகாரியாக இந்த வேலாவித்தன் நியமித்தான்.  அரசனே அவளிடம் பிரியமாக இருந்தான்.  ஆயினும் அவள் வெளியில் தனக்கு பிரியமான ஒரு சண்டாளனோடு சுற்றினாள்.  எதற்குத் தான் படைப்பவன் வெளியில் பரிசுத்தம் போலவும் , உள்ளுக்குள் பல கெட்ட எண்ணங்களுடனும் ஒரு பிறவியை படைத்து அதற்கு பெண் என்று பெயர் கொடுத்தானோ என்று பாதிக்கப் பட்டவர் அங்கலாய்த்தனர்.  இந்த லல்லா வே சண்டாள குலத்தில் பிறந்தவளோ என்ற சந்தேகம் அனைவருக்கும் வந்தது.  ரகசியமாக அவளை உளவு பார்த்தனர்.  அவள் மாற்றானுடன் இருப்பதை கண்ட ஒரு அரச சேவகன் வந்து சொன்னான்.  அவளை தண்டிக்கவோ , சாதரணமாக எவரும் செய்வதை எதையும் செய்யாமல் அரசன் தான் க்ருஷ்ணாஜினம் தரித்து பிராயச் சித்தம் செய்தான்.  அவளை தண்டிப்பான் என்று எதிர் பார்த்த அரண்மனை வாசிகள் இந்த செயலால் பெரிதும் கோபம் அடைந்தனர். தவிர அரண்மனையின் சுத்தம் பற்றி சொல்லியும் கேட்காமல் சமையல் செய்வோர் சுத்தமாக பொருட்களை வைத்துக் கொள்வதும் இல்லை, தாங்களும் சுத்தமாக இல்லை என்ற குற்றச்சாட்டையும்  அலட்சியம் செய்தான். அதன் பலன் அவனே ரோகியானான்.  தாங்க முடியாத வயிற்று வலி. குஷ்ட ரோகியை தொடுவதால் அந்த வியாதி பரவுவது போல.

கொடைகள் நிறைய அளித்தான். ஆர்யதேச என்ற இடத்தில் தன் முன்னோர்கள் மூலம் வந்த பரம்பரைச் சொத்தில் இருந்து  மாணவர்கள் படிக்கவும் தங்கவும் விடுதியைக்  கட்டினான். மடாதிபதிக்கு அரசனுக்குரிய சத்ர சாமரங்கள் அளித்தான்.  அந்த: புரம் என்பதைத் தவிர ராஜ மரியாதைகள் அனைத்தும் அவருக்கும் கிடைக்கச் செய்தான்.  விதஸ்தாவின் மணல் வெளியில் அந்தணர்களுக்கான பலவித வசதிகளுடன் அக்ரஹாரம் என்ற குடியிருப்புகளை கட்டுவித்தான்.  அதை ஐம்பத்தைந்து அந்தணர்களுக்கு அளித்தான்.

இதற்குள் வியாதி முற்றி விட்டது.  அவனுடைய மகன் சங்க்ராம தேவன்,  தனக்கு பிறந்தவன் இல்லை என்ற உண்மை தெரிந்ததால், ராம தேவன் என்ற தன் மாமன் மகனை அரசனாக்கி விட்டான்.   மெய்க்காப்பாளர்களையும், வர்னாடா என்ற பொறுப்பையும், மந்திரிகளின் பொறுப்பில் விட்டான்.

அரண்மனை பெண்டிர் மத்தியில் ஏமாற்றம் கோபமாக வெடித்தது.    பர்வகுப்தா  என்பவன் பின்னாளில் செய்த சீர் திருத்தம் அன்று அந்த அரசாட்சியில் தான் உதித்தது என்பர்.

பதவிகளை பெற்றுக் கொண்ட மந்திரிகள் அரசனின் நலனையும் கவனிக்கவில்லை. உடல் நலம் இன்றி இருந்த பொழுது விசாரிக்க கூட வரவில்லை.  அவர்களின் இடை விடாத நச்சரிப்பால், சங்க்ராம தேவன் பட்டத்துக்கு வர அரசன் சம்மதித்தான். வர்னாடா வை கைது செய்து ஒரு நாள் சிறையில் வைத்திருந்து வெளி வரச் செய்தனர்.  அரண்மனை வளாகம் குப்பை கூளம், தவிர  பணியாளர்களின் அலட்சியம், அரசனிடம் பயம் இன்மை என்பதால், பிராகாரங்கள் அசுத்தமாக தாங்க முடியாத துர் நாற்றம் உடையதாக மாறியது. உண்மையான ராஜ சேவகன் தேவப்ரசாத  என்பவன் தன் வாளை விஜயேஸ்வர சன்னிதியில் வைத்து விட்டு பதவி விலகி விட்டான்.

யசஸ்கரனும் வியாதியின் வலி தாங்காமல், கவனிப்பாரும் இன்றி அரண்மனையை விட்டு வெளியே தான் கட்டிய மடத்தில் தங்கலானான்.   அரசன் ஆன சமயம் உண்மையாக உழைப்பதாக சத்ய பிரமாணம் செய்த ஊழியர்கள்,  தங்கள்  தலையை கொடுப்போம் என்று சொன்னவர்கள், அவருக்கு ஏதாவது துன்பம் என்றால், தலையை மழித்துக் கொண்டு விரதம் இருப்போம்,  தலைப்பாகை அணிய மாட்டோம் என்று வாக்கு கொடுத்தவர்கள், எவரும் நெருங்கவே இல்லை. தனி ஆளாக அரசன் தன் வழி சென்றான்.

இரண்டாயிரத்து ஐநூறு தங்க நாணயங்களை  மடியில் கட்டிக் கொண்டு சென்ற அரசனிடம் இருந்து பர்வ குப்தா மற்றும் ஐவருமாக மந்திரிகளே  திருடிக்  கொண்டனர்.  அது அரசுடமை அல்ல. யசஸ்கரனின் சொந்த பணம். இது தெரிந்தும் அதை திருடி தங்களுக்குள் பங்கிட்டுக் கொண்டனர்.  தனியாக ஒரு மடத்து அறையில் இருந்தவனை வேலாவித்தா போன்றவர்கள் என்ன அவசரமோ, விஷம் கொடுத்து கொன்று விட்டனர்.  அந்த:புரத்து பெண்களில் த்ரைலோக்ய தேவி என்பவள் மட்டுமே அரசனை தொடர்ந்து சென்றவள்.

பலர் எதிரியாக ஆக அரசனின் சீர்திருத்தங்களே காரணமாயின.  ஜாதிகளை ஒழிக்க வேண்டும் என்று பாடு பட்டான்.  சக்ரபானு என்ற ஒரு அந்தணன்  வழிபாடுகளிலும் சில சட்டங்களிலும் தன்னை எல்லாம் அறிந்தவனாக காட்டிக் கொண்டு சக்ரமேலக  என்ற இடத்தில் சாஸன விதிகளை மாற்றியதை கண்டித்தான்.  அதற்கு தண்டனையாக நாயின் காலை அவன் முன் நெற்றியில் அடையாளமிட்டு விட்டான்.  உறவின் பெயரால் இந்த உரிமை எடுத்துக் கொண்டவன். மாமன் முறையில் இருந்த வீரநாதன் என்பவன் யோக முறைகளில் விற்பன்னன், இதனால் ஆத்திரமடைந்தார்.   யசஸ்கரனை  பழி வாங்கப் போவதாக  சபதம் செய்தான்.   சபையில் முன்னால் குருவாக அரசனுக்கு உதவ இருந்த பழம் புள்ளிகள், தங்களுடைய தேவையும் மதிப்பும் குறைவதைக் கண்டு ரகசியமாக திட்டம் தீட்டினர். அவன் இறந்து ஏழு நாட்களுக்குப் பின் தான் செய்தியை வெளியிட்டனர்.  இப்படி நாலா புறமும் சதிகாரர்கள் சதிகளே செய்து கொண்டிருந்தால், சீர் திருத்தம் எப்படி முடியும்.

ஆனால் பொது மக்களிடையே நன் மதிப்பு பெற்றிருந்தவன் ஆனதால் அவர்கள் நம்பவில்லை. வர்நாட முதலானோர் வியாதியினால் தவித்த அரசனை கொன்று  விட்டதாகவே நம்பினர்.   அப்படித்தான் சரித்திர நூல்களிலும் காணப்படுகிறது.

ஒன்பது ஆண்டுகளே ஆண்டான். இருபத்து நாலாம் ஆண்டு பாத்ர பத மாதம் – புரட்டாசி- தேய் பிறை மூன்றாம் நாள் பரம பதம் அடைந்தான். 948 A.C.

யசஸ்கரன் பொறுக்கி எடுத்து இவர்கள் நேர்மையாக இருப்பார்கள் என்று நியமித்த மந்திரிகளும் அதிகாரிகளுமே அவனுக்கு எதிராக சூழ்ச்சி செய்தனர்.  தற்சமயம் அரச வம்சம் என்ற ஒரே தகுதியுடைய அந்த சிறுவன் அரசனாக விடுவார்களா ? சரியான சந்தர்பத்தை எதிர் நோக்கி இருந்தனர்.120

சங்க்ராம தேவன் என்று பெயரிடப்பட்ட பிறந்த குழந்தையை பாதுகாத்து வளர்த்த பாட்டியையே அரசு கட்டிலில் அமர்த்தி விட்டு, போபடன், பர்வகுப்தன் முதலான ஐவரும் அரசாட்சியை செய்தனர்.  நாளடைவில் அந்த பாட்டியுடன் அரச குடும்பத்தினரை ஒழித்துக் கட்டி விட்டு பர்வகுப்தன் அரசாட்சி செய்பவனாகவும், மந்திரியாகவும், உரிமையுள்ள அரசனின்  சிறுவனுக்கு தானே உணவு கொடுப்பதில் இருந்து அனைத்து தேவைகளை பூர்த்தி செய்பவனாகவும் அரண்மனையின் ஏக போக நாயகன் ஆனான்.

தன்னை நேர்மையாக காட்டிக் கொண்டு சுய ரூபத்தை மறைத்தே வாழ்ந்தான்.  நீண்ட தாடியும், திலகமும் முன் இருந்த அரசன் போலவே வெளி வேடமும் தரித்தான்.

உடனடியாக குழந்தையை கொன்றால் போராட்டம் வெடிக்கும். அரசனின் மெய்க்காப்பாளர்கள் இன்னமும் அரசனிடம் விஸ்வாசம் உடையவர்களே.  அவர்களுக்கு அரச வம்சத்தை  பாதுகாப்பதே கடமை என்று இருப்பவர்கள்.  எனவே அபிசாரம் என்ற மறைமுகமான  சூழ்ச்சியை செய்யலானான்.

சித்திரை மாதம் முதல் தேதி வரை உனக்கு அனுகூலமான காலம். அதற்குப் பின் ஏதாவது செய்தால் அகப்பட்டுக் கொள்வாய், குடும்பத்தோடு அழிவாய் என்று அந்த ஏவல் என்ற சூழ்ச்சியை செய்பவன் அறிவுறுத்தினான்.

உள்ளுணர்வால் உந்தப் பட்டவர்களாக மெய்க் காப்பாளர்கள் அவனிடம் கவனமாக இருந்தனர். சிறுவனிடம் அவன் இருக்கும் பொழுதும் உடன் இருந்தனர்.  இதுவே கவலையாக பர்வகுப்தன் உடல் நிலை பாதிக்கப் பட்டது.   பொறுக்க மாட்டாமல் பனி மழை பெய்த ஒரு இரவில் திடுமென தன் படையினருடன் அரண்மனையை முற்றுகையிட்டான்.  உண்மையான மந்திரி ராமவர்தனையும் அவன் மகன் புத்தா என்பவனையும்  சிறை பிடித்த பின் இது வேலாவிட்டன் அளித்தது என்று சொல்லி அரச குமாரனின் கழுத்தில் ஒரு மாலையை    போட்டு சங்க்ராம தேவன் என்ற சிறுவனை இழுத்துச் சென்றான். மற்றொரு இடத்தில் அவனைக் கொன்று  கல்லுடன் கட்டி விதஸ்தாவில்  வீசி விட்டான்.  இது நடந்தது, 24ம் ஆண்டு, தேய் பிறை பத்தாம் நாள், பால்குண மாதம்.  அதன் பின் அந்த பாவி, தானே வாளும் கையுமாக அரியாசனத்தில் அமர்ந்தான். சங்க்ராம குப்தனின் வம்சத்தில் வந்தவன், அரண்மனை ஊழியனின் மகனாக பிறந்தவன்,  அரசனாக அமர்ந்தான்.

அதுவரை எதிர்த்தவர்கள், அரச கட்டிலில் அமர்ந்த பின் பயத்தால் அடங்கியிருந்தனர் மறுநாள் காலையிலேயே வந்து வணங்கினர்.    முந்தைய அரசில் ஆளுமையில் பங்கு கொண்ட முக்யஸ்தர்கள், மெய்க் காப்பாளர்கள், அரச ஊழியர்கள், தந்திரிகள் இவர்களில் சிலரும் இந்த துரோகத்தில் ஒத்துழைத்தனர்.  காரணம் பர்வகுப்தன் எந்த அளவுக்கு தண்டிப்பான் என்று அறிந்ததால் வந்த பயம்.

ஒரு மெய்க்காப்பாளன், மதனாதித்யா என்ற சுய்யாவின் வழி வந்தவன், அரச சபையில் அடக்க மாட்டாமல் குத வாயுவை வெளி விட்டான். அரசனுக்கு அது அவமானமாக பட்டது.  மதனாதித்யனை ஆடையின்றி  நிற்க வைத்தான்.  அரச சபையை விட்டு வெளியேறியவன்,   

 த்ரிபுரேஸ்வரா என்ற இடத்தில் துறவியாக ஆனான்.  மனைவி மக்களும் உடன் சென்றனர்.   அந்த குடும்பத்தினர் அதன் பின் திரும்பி வரவேயில்லை.

பர்வகுப்தன் நிதி வசூலித்து பொக்கிஷத்தை நிரப்புவதே குறியாக இருந்தான்.  மக்களின் பொதுவான ஆதரவும், அவர்களின்  செய் நன்றியை  மறக்கும் தன்மையை காட்டியது.  பழையபடி வாழ்க்கை முறைகள் திரும்பின.  ஸ்கந்த பவன விஹாரத்தின்  அருகிலேயே, பர்வகுப்தேஸ்வர் என்ற கோவிலை தான் கொள்ளையடித்த பணத்தைக் கொண்டே கட்டினான்.  துரோகமே உருவானவன் அந்த:புரத்து யசஸ்கரனின் மனைவியை நாடினான். தேவி பார்வதியே , தன் நிறத்தை மாற்றிக் கொண்டு வெண்ணிறமாக வந்து விட்டாளோ என்ற அளவு கணவனான யசஸ்கரனிடம் அன்புடையவள்.  முதலில் இந்த கோவில் யசஸ்கரஸ்வாமின் என்று ஆரம்பித்த கோவிலை முடி, அது பாதியில் நிற்கிறது என்றாள்.  அவள் புருவமே அழகு என்று வியந்தபடியே பர்வகுப்தன் ஒத்துக் கொண்டான். அதே எண்ணமாக வெகு சீக்கிரத்தில் அந்த கோவில் நிர்மாணம் நிறைவுற்றது. அதன் நிறைவை ஒட்டி

 யாகங்கள் நடந்து கொண்டிருந்த பொழுது, அவள் விஷத்தை குடித்து விட்டு அந்த யாகத் தீயில் பூர்ணாஹுதியாக விழுந்து விட்டாள். தேவர்கள் பூமாரி பொழிந்தனர். 

அதற்கு காரணமான பர்வகுப்தன் அனைவரின் நிந்தைக்கும் ஆளானான்.  மனம் வெறுத்து, உன்மத்தனாக வீதிகளில் திரிந்தான்.  கடைசியில் சுரேஸ்வரி என்ற தேவஸ்தானத்தில் உயிர் விட்டான்.

மூடன், செல்வத்தை அபகரிப்பதே குறியாக செய்த அக்கிரமங்கள், தீய செயல்கள் அதன் பலன் விபரீதமாக அனுபவிக்க நேரிடும் என்பதை அறியாமல் போனான்.

இருபத்தாறாம் ஆண்டு, ஆஷாட மாதம், வளர் பிறை த்ரயோதசி திதியில் துரோகத்தால் பெற்ற ராஜ்யமும் இன்றி நோயாளியாக உறவினரோ, மற்றவரோ எவரும் அருகில் இல்லாத பிறவியாக மடிந்தான்.

‘பரலோகம் எப்படி இருக்குமோ, தீய செயல்களையே செய்பவன் உலகில் அதன் பலனை அனுபவிப்பதை கண் கூடாக பார்த்த பின்னும் தன்னை திருத்திக் கொள்ளாதவர்கள் இன்னமும் அறிவில்லாமல் அதே போல தீய செயல்கள், துரோகம் முதலியவைகளை செய்து கொண்டு தானே இருக்கிறார்கள்.’

அவன் மகன் க்ஷேமகுப்தன் அரசன் ஆனான்.  இளம் வயது, சக நண்பர்களுடன் மதுவை குடித்தே பொழுதை கழித்தான்.     சுற்றியிருந்த நண்பர்களால் கெட்ட நடவடிக்கைகள்  என்னவெல்லாம் உண்டோ, அனைத்தும் இயல்பாகவே  வந்து சேர்ந்தன.  தேய் பிறை மேகம் முடிய இரவு அதில் குருடன் எதைக் காண்பான்.  பயங்கரமானவன் ஆனான்.  பால்குணன் என்ற முகஸ்துதி செய்பவன் , அவனையொத்த பல துஷ்டர்கள் அவனுக்கு அருகில் வளைய வந்தனர்.  செல்வம் முழுவதும் கரையும் வரை இவர்கள் ஸூதாட்டம் முதல், மது மங்கை என்ற சகவாசங்களுடன்  உடன் இருந்தனர்.

  • க்ஷேமகுப்தா துர்குணங்களுக்கு இருப்பிடமாக இருந்தான். உடன் இருந்தவர்கள் அவனை மேலும் மேலும் தூண்டினர். வெட்கமில்லாமல் தங்கள் மனைவிகளையே அவனிடம் விட்டனர். சாது ஜனங்களை பரிகசித்து சிரிப்பதிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு அடி கீழேயே போய் கொண்டிருந்தான்.  தாமர சங்க்ராமா என்பவன் ஓடி ஒளிந்து கொண்டிருந்த ஜயேந்திர விஹார என்பதை அவனை கொல்லவே கொளுத்தி விட்டான்.  பித்தளையால் ஆன புத்தர் சிலை உருகி விட்டது.  அதை திருப்பி கட்டுவதாக நினைத்து அங்கிருந்த கற்கள், உடைந்த விக்ரஹங்களைக் கொண்டு ஸ்ரீநகரத்தில் க்ஷேம கௌரீஸ்வர என்ற கோவிலை கட்டினான். செல்வந்தனான ஒருவன்  இறந்தால் அவன் சேமித்து வைத்தது யார் கைக்கோ போகிறது.  இதை அறியாதவர்  யார்?   இருந்தாலும் இருந்தாலும் தானும் அனுபவிக்காமல் சேர்த்து வைப்பது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அதுவும் அறிவில்லாத ஒருவன் கையில் கிடைத்தால் பயனில்லை  என்பது மட்டுமல்ல அந்த செல்வத்தால் வரும் திமிரும், கர்வமும் அரக்கத்தனமன விளைவுகள் வரவும் காரணமாகின்றன.   உதாரணம் சொல்வர்.  இயல்பான சபல புத்தியுள்ள  குரங்கு, அதன் கையில் ஒரு பூமாலை  அதுவும் மதுவைக் குடித்து மயங்கி கிடக்கிறது, ஒரு கொசு வேறு கடித்து விட்டது  (स्वयमेव मर्कढक: मदेन मत्त: मशकेन च दष्ठ्: -இது ஒரு பிரபலமான  சொற்றொடர்)  செலவாளியான க்ஷேம குப்தன் Khasas  என்ற தேசத்து அரசனுக்கு விஹாரத்துக்கு சொந்தமான கிராமங்களை விற்று விட்டான். 

லோஹார என்ற இடத்தில் கோட்டை கொத்தளங்களுடன் இந்திரனுக்கு சமமாக எண்ணப்பட்டசிம்ஹராஜா என்பவன் தன் மகளை அரசகுமாரன் என்ற ஒரே காரணத்தால் மணமுடித்துக் கொடுத்தார்.  அவனோ  சாஹி என்ற அவள் மாமா, அவருடைய மகளின் மகள், diddaa-தித்தா என்பவளை விரும்பினான். அது முறையல்ல என்பதால் சல சலப்பு கிளம்பியது. இருந்தும் அசட்டு ராஜ குமாரன் என் பெயர் தித்தா க்ஷேமன் என்று சொல்லி சிரித்துக் கொண்டான்.  (பொதுவாக தீதி என்று சகோதரிக்கு சொல்வதை காஸ்மீரத்தில் தித்தா என்பராம்)  

இது போன்ற பல மட்டமான நடவடிக்கைகள். பணமும், பதவியும்  தூண்டி விடும் சகவாசமும் இருந்தால் ஓருவன் எந்த அளவு  இறங்குவான் என்பதற்கு உதாரணம்.

(கவி விவரமாக எழுதியிருக்கிறார். இருந்தாலும் அறிவிலியான அரசகுமாரனின் அளவுக்கு மேல் சுதந்திரமும் செல்வமும் உடன் இருந்து கெடுத்த கயவர்களும் பற்றிய சரித்திரம் அதனால் விட்டு விட்டு மேலே போகலாம். )   

ஒரு தேய்பிறை சதுர்தசி திதியில்  தாமோதராரண்யம் என்ற காட்டில் ஓனாய் வேட்டையாடப் போனவன்  ஒரு பெண் ஓனாயின் முகத்தில் தீ ஜுவாலையாக இருந்ததைக் கண்டு பயந்தவன் கடும் ஜுரமும்  உடல் முழுவதும்  முழு பருப்பு அளவு கொப்புளங்களும் வந்து மடிந்தான்.

முப்பத்து நாலாம் ஆண்டு புஷ்ய- தை மாதம் நவமி திதி யில் இறந்தான்.   958 AC.

 ஹுஸ்க புரம் அருகில் ஸ்ரீகண்ட, க்ஷேம மடம் என்பவை அவன் நினைவாக உள்ளன.

க்ஷேமகுப்தனின் மகன் அபிமன்யு என்பவன் அரசனானான்.  இரக்கம் என்பதே இல்லாதவள் என்று அறியப் படும் தித்தா தேவி அவனை வளர்த்தாள். சந்தி விக்ரஹ – போரும் அமைதியும் என்ற நிர்வாகத் துறையையும், அந்த:புர தேவைகளையும் கவனித்துக் கொண்டிருந்த மந்திரிகள் அரசன் இல்லாத குறையை நிரப்பினர்.  காரணமின்றி துங்கேஸ்வரா கோவிலில்  பிடித்த தீ, அருகில் இருந்த கடை வீதியை அழித்தது.  வர்தமான ஸ்வாமி கோவில் வளாகம், வரை அது பரவியது.  அங்கு இருந்த பலர் டொம்பா, சண்டாள என்ற குலத்தினர் அதில் அகப்பட்டுக் கொண்டனர்.  நிலத்தையே சுத்தமாக்கி விட்டு விட்டு தீ அணைந்தது.  அங்கு இருந்த பல அழகிய கட்டிடங்கள் தரை மட்டமாகின.  பிக்ஷுகா என்ற மடத்தின் பிராகாரங்கள் வரை  முன்பு வேதாளம் போட்டுக்  கொடுத்த வரை படங்கள் முதல் பெரும் பான்மையான பெரிய வீடுகள் அனைத்தும் பஸ்மமாகின  

அதிக அறிவில்லாத பெண்.  சரியா தவறா என்று யோசிக்கும் திறன் இல்லாதவள்.   தன் மகளையும், அதிலும் அவள் கணவன் உயிருடன் இருக்கையில்  ஏற்கவனே மணமான க்ஷேம குப்தனுக்கு கொடுத்த பால்குணனை வெறுத்தாள். முக்ய மந்திரியாக இருந்த பால்குணன் அரசனின் பல தீய செயல்களுக்கு உடந்தையாக இருந்தவன். அரசனின் பத்னிகள் உடன் மரிக்க தன் தம்பத்தால் தடுக்காமல் இருந்தான்.  நரவாஹன் என்ற மந்திரி சிதையின் அருகில் நெருப்பில் விழத் தயாராக இருந்த பெண்களை தடுத்தான்.  ரக்கா என்பவன்  இயல்பாகவே துஷ்டன், பால்குணனுக்கு எதிராக அவள் மனதில் வெறுப்பை தூண்டி விட்டான்.  அதற்கு கரணம், பால்குணன் செயல் திறன் உடையவனாக இருந்ததே.  அரச நிர்வாகம், அவன் பொறுப்பில் சீராக  இருந்ததோடு, வீரன், போர் கலையும் அறிந்தவன் என்பதால் மற்ற மந்திரிகள் அனைவருமே பொறாமை கொண்டிருந்தனர். தித்தா, உள்பட அனைவரையும் பால்குணனும் சந்தேக கண்களுடனேயே பார்த்தான்.

அரச அதிகாரிகளால் தனக்கு தீங்கு நேரலாம் என்று நினைத்தவன் போல பால்குணன், அவன் மகன் கர்தமன் என்பவன் , க்ஷேம குப்தனின் அஸ்தியை கங்கையில் கரைக்க எடுத்துச் சென்ற சமயம்,  பொறுக்கி எடுத்த தனது ஆதரவாளர்களுடன், பர்னோத்சா என்ற இடத்தில்  அவன் திரும்பும் வரை வசிக்கச் சென்றான்.  

அவன் தன் படை வீரர்கள் பொக்கிஷங்களுடன் புறப்பட்டு ஊர் எல்லையில்  காட்டுப் பிரதேசம் அடையும் முன்  ரக்கா  முதலானோர் தித்தாவை தூண்டி விட்டு சில ஆயுதம் தாங்கிய வீர்களை அனுப்பினாள்.  இது சரியல்ல என்று மற்றவர்கள் தடுத்தும் கேளாமல் பின் தொடர்ந்து சென்று பால்குண  பரிவாரங்களை அழிக்கும்படி ஆணையிட்டு அனுப்பினாள்.

பால்குணன் உள்ளுணர்வால் இதை அறிந்து திரும்பி வராஹ க்ஷேத்ரம் வந்து அங்குள்ள வீரர்களுடன்,  அரண்மனை திரும்பி வர விருப்பம் இன்றி.   வராஹ க்ஷேத்திரத்தில் தங்கி விட்டான்.  வெகு காலமாக  அரச நிர்வாகத்திலேயே தன் கவனம் முழுவதும் செலுத்தி வந்தவன் , அனைத்தும் பயனற்றவையே என உணர்ந்தவன் போல தன் வாளை வராஹ தேவனின் பாதத்தில் வைத்து ஓய்வு பெற்றான்.

துரோகம் செய்பவர்கள் மத்தியில் தன் ஆயுதத்தை தியாகம் செய்த முக்யமந்திரி தன்னளவில் நிம்மதியடைந்தார்.  ராஜ மாதாவின் அனாவசிய சந்தேகமும் தீர்ந்தது.

மனத்தளவில் மாசிலான் என்று தமிழில் சொல்வது போல தன் வரை தன் செயலில் உண்மையாக அரச சேவகமே செய்து வந்தவர், நல்லது தீயது என்று பாகு படுத்த தெரிந்தவர் ஒரு நிலையில் விரக்தி அடைவது நடப்பது தான்.   அவர் மட்டும் எதிர்த்து இருந்தால் , உண்மையில் நடந்த அனைத்து உட் பூசல்களும், சூழ்ச்சிகளும் வெளி வந்திருக்கும். அறிவும், கையிள் வாள் (திறமையும்) கூர்மையானவை.  இரண்டுமே சரியான சமயத்தில் சரியான முறையில் பயன் படாவிட்டால், அதற்குரிய மதிப்பையும், மரியாதையும் பெறாவிட்டால் நல்ல மனிதன் வருந்துவானே தவிர  அதை தவறாக பயன்படுத்த மாட்டான்.  தியாகம் தான் சிறந்த வழி. அதைத்தான் அந்த முக்ய மந்திரி செய்தார். (शास्त्राय शस्त्राय वा)

அறிவில்லாத அரண்மனை வாசிகள் மகிழ்ந்தனர். மாணவர்கள் வகுப்பு ஆசிரியர் வராவிட்டால் மகிழ்வது போல என்று உவமானம்.

க்ஷேமகுப்தனின் மனைவியும் நிலைமையை உணர்ந்தாள்.  தானே அரசு நிர்வாகத்தை ஏற்றுக் கோண்டு முட்களாக இருந்த தடைகளை நீக்க முயன்றாள்.

பர்வகுப்தன் ராஜ்யத்தை அபகரிக்க திட்டமிட்ட பொழுதே தன் இரு புதல்விகளை சோஜ, பூபடா என்ற இரு மந்திரிகளுக்கும் மணம் செய்து விட்டிருந்தார். அவர்கள் புதல்வர்கள், மஹிமான், பாடல என்ற இருவரும் அரண்மனையில் ராஜ குமாரர்கள் போலவே வளர்ந்தனர். அவர்களும் அரியணையில் அமரவே ஆசைப் பட்டனர். ஹிம்மகா என்ற ஒருவனும் மற்றும் சிலரும் அதற்கு தூபம் போட்டனர்.   ராணி, இந்த இருவரையும் முதலில் அரண்மனை வளாகத்தை விட்டு வெளியேற்றினாள். இதனால் வெகுண்டாலும் இருவரும் அரண்மனைக்கு வருவதை வழக்கமாக்கிக் கொண்டனர். மஹிமான் பேரில் சந்தேகம் கொண்ட ராணி அவனைத் தொடர்ந்து கண்காணிக்க  ஒற்றர்களை நியமித்தாள்.  அதையறித்த இருவரும் மஹிமானின் மாமனார் சக்தி சேனா என்பவரை அடைக்கலம் புகுந்தனர்.  சக்தி சேனா இந்த ஒற்றர்களை  சமாதானப் படுத்தி  இருவரையும் தொடர்ந்து கண்காணிப்பதை நிறுத்தச் சொன்னார்.  பிடிவாதமாக அவர்கள் பின் தொடருவதை நிறுத்தாவிட்டால், தானே தன் மருமகனை காக்க செய்ய செய்ய வேண்டியதைச் செய்வேன் என்று மிரட்டி அனுப்பினார்.

மஹிமானுக்கு அவன் மாமனார் ஆதரவு கிடைத்தவுடன், ஹிம்மகனும், முகுளனும் அங்கு வந்து சேர்ந்தனர்.  மற்றொருவன் ஏரமத்தகன் என்பவனும் பரிகாச புரத்தில் இருந்து வந்து சேர்ந்து கொண்டான்.  மேலும் சில அனுதாபிகள் கூட்டாக சேர்ந்தனர். உதய குப்தன், அம்ருதகரன் என்பவனின் மகன்,  மற்றவன்,  யசோதர என்பவன் லலிதாதிய புரவாசிகளையும் அழைத்துக் கோண்டு வந்தான்.  சிறியதே ஆனாலும் ஒவ்வொருவரும் தங்கள் படைகளை கொண்டு வரவும் கணிசமான அளவு படையெடுக்கத் தேவையான பெரும் படை தயாரானது. உள் நாட்டு கலஹம் செய்ய மஹிமான் தலைமையில் கிளம்பினர்.  

ஒரே ஒரு நியாயமான மந்திரி நரவாஹனன்  இந்த கூட்டத்தில் சேரவில்லை.  தித்தாவின் பக்கமே இருந்தார்.  ஆரவாரமாக இந்த படை பத்மஸ்வாமின் என்ற இடத்தை அடைந்தது.

தித்தா முதலில் அரச குமாரனை ஸூர மடம் என்ற இடத்தில் பாதுகாப்பாக இருக்கச் செய்து விட்டு, இந்த ஆபத்தை சமாளிக்க ஆலோசனைகள் நடத்தினாள்.   லலிதாதிய மக்கள் பிரதிநிதிகளை நிறைய பொற்காசுகள் கொடுத்து, எதிரிகள் படையில் பிளவு ஏற்படச் செய்தாள்.   என்ன ஆனாலும் ஒற்றுமையாக போராடுவோம் என்று வந்தவர்களில் ஒரு பகுதி விலகியது.  யாருமே எதிர் பார்க்கவில்லை, தித்தா இந்த அளவு போர்த் திறமை உடையவள் என்பதை.  லங்கையைத் தாண்டிய வாயு புத்திரன்  போல அவள் இந்த படையை பசுவின் குளம்புகளுக்கு இடையில் உள்ள தூரம் போல – (இது ஒரு அளவு – ஒரு பசு மாடு நிற்கும் தூரம், பத்து பசுமாட்டுத் தூரம், நூறு பசுக்கள் நிற்கும் தூரம் என்று ஒரு நீட்டல் அளவை) கடந்து விடுவாள் என்று.   

விலையுயர்ந்த்த ஆபரணங்கள், உயர் மணிகள், மற்றும் விலையுயர்ந்த்த பொருட்களை சேமித்து வைப்பது, அதை தியாகம் செய்தாலும்  இது போன்ற இடுக்கண்களை களைய உதவக் கூடும் என்பதை யார் தான் எதிர் பார்த்தனர். செல்வத்துக்கான அமோக வலிமை இது.  அதற்கு ஒரு வணக்கம் தெரிவிப்போம்.

அதைவிட பதவிகளைக் கொடுத்தால் எதிரிகளை சுலபமாக வளைக்கலாம் என்று எண்ணியவள் போல, யசோதரா போன்றவர்களுக்கு தன்  சேனையில் உயர் பதவிகளைக் கொடுத்தாள்.  மஹிமானும் சில நாட்களில் ஏதோ ஒரு வகையில் கொல்லப் பட்டான்.  தித்தா தன் அரச நிர்வாகத்தை எந்த தடையும் இன்றி செய்ய முடிந்தது.

ஒரு சமயம், தக்கன் என்ற  சாஹி தலைவனை எதிர்த்து,  ஒரு சேனைப் பிரிவின் தலைவனாக இருந்தவன்,   கோபத்துடன் தன் வம்சத்தினரை கூட்டு சேர்த்துக் கோண்டு போர்க் கொடியை தூக்கினான். அந்த தேசமோ மலைகள் அடர்ந்தது.  பாறைகளும் குகைகளுமாக கடந்து செல்லவே பெரும் கடினமான செயலாக ஆயிற்று.  சிரமப்பட்டாலும்  தக்கன அரசை கைப் பற்றி வெற்றி முழக்கம் செய்தான்.

ரக்காவும் ஒரு சிலரும் இந்த அசட்டு ராணிக்கு வந்த யோகத்தைப் பார் என்று மனத் தாங்கல் கொண்டனர்.   அவர்கள் கூட்டாக அவளுக்கு துர் போதனை செய்தனர்.  முக்ய சேனாபதியாக இருந்தவரைப் பற்றி தவறாக எண்ணும்படி செய்து விட்டனர்.

‘ அரசனோ, ஸ்படிக மணியோ, சாதாரண குணவதியான பெண்ணோ, தங்கள் நிலையான தன்மையை, மனக் கட்டுப்பாட்டை  இழந்தால்,  சுற்றுபுறத்தின் – ஸ்படிக மணி போல, உடன் இருப்பவர்களின் உபதேசம் அரசனானால், வேற்று மனித சகவாசம் பெண்ணுக்கு என்று   ஏதோ ஒன்று திசை மாற்றி அழிவுப் பாதையில் இட்டுச் செல்லும்.‘

தன்னலமே குறியாக எதிராளியின் சபலம் அல்லது அறியாமையை தனக்கு சாதகமாக பயன் படுத்திக் கொள்ளத் தெரிந்தவர்கள், இனிமையாக பேசி, நெருங்கிய நண்பர்களாக, அவர்களின் நலம் விரும்பிகளாகவே   காட்டிக் கொண்டு தீய எண்ணங்களை அவர்கள் மனதில் புகுத்த வல்லவர்கள்.  இவர்களை அடையாளம் கண்டு கொண்டு நெருங்க விடாமல் செய்து கொள்ள திடமான மனதும், கொள்கையும்,  அரசனுக்கும், பெண்களுக்கும் மிக மிக அவசியம்.  குடிப் பிறப்பும், சுய அறிவும்  ஓரளவு இந்த தற்காப்பு உணர்வை அளித்து விடும்.  எளிதில் மயங்கும் குணமுடையவர்களைப் பற்ரி என்ன சொல்ல?

தக்கனத்தை வென்றவனையே இவ்வாறு இழித்து பேசி, அவளிடம் தவறான எண்ணத்தை தோற்றுவித்து விட்டனர்.  வெற்றி களிப்புடன் ஊர் வந்து சேர்ந்தவருக்கு அதிர்ச்சி தரும் விதமாக பணி நீக்கம் செய்த செய்தியே முக்ய சேனாபதியை வரவேற்றது.

நரவாஹனன்  மட்டுமே அரசியின் மன மாற்றத்துக்கு காரணம் சிலரின் துர் போதனையே என்று உணர்ந்தார். மற்றவர்கள், ஹிம்மக், எர மண்டகா முதலானோர், முக்ய சேனாபதிக்கு செய்த அவமானம் என்று கருதினர்.  அதனால் சேனையில் பிளவுகள் தோன்றின.

அடுத்து சுபதரா என்ற அரசன் முற்றுகையிட்ட பொழுத்து, தித்தா,  மகனை பட்டாரக மடம் என்ற இடத்திற்கு  பாதுகாப்புக்காக அனுப்பி விட்டாள்.  அவளை பதவி இறக்குவது என்று புறப்பட்டவர்களும் சந்தர்பத்தை சரியாக பயன் படுத்திக் கொள்ளவில்லை. அதனால் ராணி தப்பினாள்.  ஒரு சில நம்பகமான காவலர்களும், அரச ஊழியர்களும் பக்க பலமாக இருந்ததால், ராணி தித்தா மறு நாளே தன் பலத்தை நிரூபித்தாள்.

அவளுக்கு சாதகமாக, ஒரு எதிரிகளின் படை  ஜய பட்டாரிகா என்ற இடத்தில் இருந்து ஸுர பாடசாலை வரையில் முகாம் இட்டது.  வெளி எதிரியை முறியடிக்க அனைவரும் ஒன்று சேர்ந்தனர்.  ஒரு  நிலையில் அவர்கள் புற முதுகிட்டு வந்த பொழுதும் மெய்க் காப்பாளர்கள்  திடமாக எதிர்த்து நின்று எதிரி படையை தடுத்து விட்டனர்.  வந்த வழியே அந்த படை திரும்பியது.  ராஜகுல பட்டா என்பவரும் தன் சேனையுடன் வந்தார். அவருடைய துரீய கோஷம், போர் முரசம் கேட்டே அனைவரும்  உத்சாகம் பெற்றனர்.  தங்கள் இடையே முளைத்த வேற்றுமை, துவேஷம் இவைகளை மறந்து ஒரு முகமாக எதிரிகளை விரட்டினர்.  வெற்றி தேவதை என்றுமே துவேஷம் , உட் பூசல்களை அனுமதித்ததில்லை.  ராஜ குல வீரர்களூக்கு முன் ஹிம்மகா வின் வீரமோ, அவன் வாள் வீச்சோ எடுபடாது என்று அறிந்தவர்கள், மற்றவர்கள் ஏன் தலை தூக்குகிறார்கள். அந்த உட் பூசல் தானே அடங்கியது. போரில் ஹிம்மகா மடிந்தான். யசோதரா சிறைப்பட்டான். எரமன்டகன் வீரத்துடன் போர்க் களத்தில் இருந்த பொழுது, அவன் வாள் முறிந்தது.  கீழே விழுந்தான். அதோடு அவனும் சிறைப் பிடிக்கப் பட்டான்.  உதய குப்த முதலியவர், அரசனின் அந்தரங்க படை வீர்கள் உயிர் தப்பிக்கவே விரும்பினர்.  யாருமறியாமல்  வெகு தூரம் சென்று விட்டனர். 

ஏரமன்டக வெகு தூரத்தில் காசி, கயாவில்  இருந்த காஸ்மீரிகளுக்கு வரி விதிப்பதை நிறுத்தி இருந்தான். பரிகாச புரத்தில் வசித்த அவனையும் விதஸ்தா ஏரியில் மிதக்கச் செய்தாள். யசோதர, முகுல, சுபதரா என்ற மூவரும் குடும்பத்தோடு அழிக்கப் பட்டனர்.

எழுபத்து ஏழு ஆண்டுகளாக கோபால வர்மா முதல் அபிமன்யு வரையிலான  பதினாறு அரசர்களுக்கு அரசர்களுக்கு உண்மையாக உழைத்தவர்களும், அரச அபிமானிகளுமாக இருந்தவர்களும், இந்த சமயம் தங்கள் துரோக புத்தியால், அல்ப ஆசைகளால் அரண்மனைக்குள்ளேயே பூசலை கிளப்பி எதிர்த்து நின்றதால் ஒட்டு மொத்தமாக அழிந்தனர்.  தித்தாவின் கோபத்துக்கு ஆளானார்கள்.

 901-2    AC           

அதன் பின் ராக்கா தலைமையில் புது அதிகாரிகள், மந்திரிகள் வந்தனர்.

நரவாஹனா பொறுப்புள்ள மந்திரியாக, ஆலோசகனாக இருந்து, விவரம் அறியாத  பெண்ணான தித்தாவை கணவனை இழந்த பின் மகனுக்காக  அரச பொறுப்பை ஏற்ற பின் சரியானபடி வழி நடத்தி   அரசாட்சி தடங்கலின்றி நடக்க வழி செய்தார். அதனால் ராஜ்யமும் சிதறுண்டு போகாமல் காக்கப் பட்டது. அவளும் அவரிடம் மரியாதையாக இருந்து ராஜானக என்ற பட்டம் அளித்து கௌரவித்தாள். அவருடைய அனுமதியின்றி எதையும் செய்வதில்லை.

குய்யா என்ற அரண்மனை ஊழியருக்கு இரு புதல்வர்கள் சிந்து என்றும் புய்யா என்றும்.  மூத்தவனான சிந்து, பர்வகுப்தனுடைய  வீட்டில் இருந்தான்.  அவருடன் இருந்து பல விஷயங்களை அறிந்து கொண்டவன் ஆனதால் பொக்கிஷ அதிகாரியாக நியமிக்கப் பட்டான். நாளடைவில் உயரதிகாரியாக   பதவி உயர்வு பெற்றான்.  வரி விதிக்கவும், பொக்கிஷத்தை நிர்வகிக்கவும் உரிமை பெற்றான். சிந்துகஞ்சா sindhuganjaa- என அவனுடைய அலுவலகம் பெயர் பெற்றது.

நரவாஹணன் அதிக உரிமை எடுத்துக் கொண்டு அவரே திட்டங்களும் தீர்மானங்களும் செய்கிறார். அதனால் நீங்கள் சுயமாக முடிவு எடுக்க இயலாமல்  அவரை சார்ந்தே இருக்கிறீர்கள் என்று சொல்லி சொல்லி, அவளை நரவாகனாவிடமிருந்து தள்ளி இருக்கச் செய்தான்.  அவனுடைய துர் போதனை, தன்னலமான உள் நோக்கு புரியாமல் அவளும்  தலையாட்டினாள்.

அந்த சமயம் அவரும் எதேச்சையாக தன் வீட்டில் உணவருந்த அழைத்தார்.  சிந்து கிண்டலாக அங்கு வரவழைத்து உங்களை சிறைபிடிக்கப் போகிறார் என்றான். அதை நம்பாவிட்டாலும், அவனிடமிருந்து விலகி அரண்மனைக்குள் போய் விட்டாள்.  ஏதோ காரணம் சொல்லி அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவும் இல்லை.  அதன் பின் பழைய ஒட்டுணர்வும் மரியாதையும், அவர் சொன்னால் தட்டாமல் ஏற்றுக் கொள்வதும் குறையலாயிற்று.  எண்ணெய் எடுத்தபின் பிண்ணாக்கும் அந்த எண்ணெயும் பழையபடி எள்ளாகுமா என்ன?   அனைத்து ஆயுதங்களும் கனிமங்களால் செய்யப் படுகின்றன. வஜ்ரத்தால் ஆன  குலிசமாகுமா?  உடைக்க முடியாது. அது போல ஓடும் நதிக்கு மேல் கட்டிய கல் அணை. நீரை தடுத்து நிறுத்தும்.  கல்லணை நீரால் மென்மைஉயாகுமா? அது போல சுய அறிவற்ற அறிவிலிகளின்  அறியாமையை அகற்ற முடியாது.  சிறு பாலகன் அளவே அறிவுள்ளவர்கள் உண்டு. அதே போல நிறைந்த அறிவு உடைய ஞானிகளும் உண்டு. கடவுளுக்கு சமானமாக மதிக்கப் படும் ஞானிகள்.  அனைவருமே பரமாணுக்களால் ஆனவர்களே.  எந்த பரமாணு யாரிடம் அதிகம் அல்லது குறைவு என்பதை யார் அறிவார்.   

காகம்  மற்ற பறவையையும் தன் கூட்டில் வைத்து போஷிக்கிறது.  அன்னம் பாலையும் நீரையும் பிரிக்கத் தெரிந்த பறவை சிறு இடிக்கு அஞ்சுகிறது.  சரளமாக பேசத் தெரிந்த அரசனும், கூர்மையான அறிவுடையவன், கண்ணால் பார்த்தே ஒருவன் திறமையை அளந்து விடுவான்  என புகழ் பெற்றவன், ஏதோ ஒரு விடலையின் சொல்லில் ஏமாறுகிறான்.  படைப்பவன் படைத்த பொழுதே அறிவையும், அறியாமையையும் கலந்து படைத்து விட்டான் போலும். எந்த சமயம் எது அதிகமாக இருக்கிறதோ அது வெளிப்படுகிறது.

எந்த விதமான ஒழுக்கமான நடவடிக்கைகளும் இல்லாதவள், காதில் விழுந்ததை ஆலோசியாமல் நம்புபவள், நாளடைவில் மக்கள் மத்தியில் மதிப்பை இழந்தாள்.  தூற்றப் பட்டாள்.

நரவாகனா இந்த அலட்சியத்தை உணர்ந்தார். அதிக நாள் உயிருடனும் இல்லை.  செய் நன்றி மறந்தவர்களை பெருந்தன்மையுடையவர்கள் மறப்பதோ மன்னிப்பதோ இல்லை.  இயற்கையான மரணம் அவர்களுக்கு விடுதலை போலத்தான்.  அடக்கிய கோபம் செய் நன்றி மறந்தவனுக்கு புரியுமா?  நிலவு இல்லாத வானம், உண்மையில்லாத சொல், நர வாகனன் இன்றி வெறுமையாக ஆயிற்று.

அனாவசியமாக சந்தேகம் -யாரை பார்த்தாலும் தன் பொருளை அபகரிக்கவே வந்தவனோ என்ற பயம்.  தாமர, சங்க்ராம என்ற நெடு நாளைய அதிகாரிகள் அவர்கள் புதல்வர்களை கொல்ல திட்டம் வகுத்தாள்.  அவர்கள் அரண்மனை வளாகத்துள் இருந்தனர்.  இதை எப்படியோ அறிந்து  உத்தர கோச என்ற தங்கள் ஊர் வந்து சேர்ந்தனர்.  இந்த வேலையை முடிக்க நியமிக்கப் பட்டிருந்த கய்யகா என்ற படைத் தலைவனையும் கொன்று விட்டனர் ராணியை சிலர்  முன் எச்சரிக்கை செய்தனர். இதன் காரணமாக போராட்டம் வெடிக்கலாம் என்ற பயம்.  அவர்களை சமாதானப் படுத்தி திரும்பி வரவழைக்க ஆள் அனுப்பினாள். ஆனால் அவள் உள் நோக்கம் வேறாக இருக்கும் என்பதால் அவர்கள் ஸ்தானேஸ்வரா என்ற Damara- தாமர தலைவனுடன் தங்கள் நாட்டிற்கே சென்று விட்டனர்.  இதற்குள் ரக்காவின் காலமும் முடிந்து விட்டது. யாருமே தனக்கு உதவியாக இல்லை என்று பால்குண என்ற பழைய சேனாபதியை வரவழைத்தார்.   இனி அரச சேவகம் வேண்டாம் என்று இருந்தவர் பழைய விஸ்வாசம்  காரணமாக திரும்பி வந்தார்.  ராஜபுரியை வென்றவர் என்பதால் புகழ் பெற்ற சேனாபதி, அவரை அனைவரும் மதித்தனர்.  அரச நிர்வாகம் சீர் குலைந்து இருந்ததை சரி செய்தார். இரண்டு உதவியாளர்கள் ஆகாசபாடலா என்ற அவரது அலுவலகத்தில் இருந்தனர். ஒருவன் உதயராஜா, ராணியின் சகோதரன், மற்றவன் ஜய குப்தன் என்ற துஷ்டன். அவனுடைய அடியாட்களே சுற்றிலும் இருந்தனர். காஸ்மீரத்தை சின்னா பின்னமாக்கி விட்டுத் தான் ஓய்வோம் என்பது போல அவர்களின் நடவடிக்கைகள் இருந்தன.

இதற்குள்   அழகான  வாலிபனாக வளர்ந்து விட்ட அபிமன்யு, தாயின் நியாயமோ, மனதில் ஈரமோ இல்லாத கொடும்  குணத்தை வெறுத்தான். வேத சாஸ்திரங்களைக் கற்று தேர்ந்தவன்,  அந்த வயதிற்கான துடிப்பும்  அறிவு தாகமும் உடையவனாக இருந்தான்.  ராணியின் அருகில் இருந்த வெற்று வேடமிட்ட சுயனலமிகளை அடையாளம் கண்டு கொண்டவன், சீர்ஷ புஷ்பம் வெய்யிலில் வாடுவது போல வாடினான். ஏனோ க்ஷய ரோகத்தால் பாதிக்கப் பட்டான்.   நாற்பத்து எட்டாவது ஆண்டு  கார்த்திகை மாதம், வளர் பிறை மூன்றாம் நாள்,  இயற்கை எய்தினான்.  972 AC

 அவன் மகன் நந்தி குப்தன்,  சிசுவாக இருந்த நிலையில் அரியணையில் அமர்த்தப் பட்டான்.  தித்தா தன் இழப்பை தாங்க மாட்டாமல் வருந்தினாள். சற்றே அவள் கோடூர குணம் குறைந்தது.   

தர்ம வழியில் அவள் நாட்டம் சென்றது. எதிலும் தீவிரமாக முனைபவள், இது வரை சேமித்த செல்வம் இவைகளையும் நல் வழியில் செலவழிக்கலானாள்.   சிந்துவின் சகோதரன் புய்யா என்பவன் நகர தலைவன் ஆனான். இயல்பான நற்குணவான் –  தன் பொறுப்பை உணர்ந்தவனாக நாட்டின் நலனுக்கான செயல்களைச் செய்தான்.   ராணியின் மன மாற்றத்திற்கு அவனுடைய நல் உபதேசங்களும் காரணமாயின.  தன் பிரஜைகளை அன்புடன் பரிபாலிக்கவும்,  தன் குணக் கேடுகளையும், செய்த  குற்றங்களையும்  களைய அந்த உபதேசங்கள் உதவின.   எளிய மக்கள், இந்த மாற்றத்தினால் கவரப் பட்டனர். தேவி என அழைக்கலாயினர்.  அனைவருக்கும் சம்மதமான தலைவியாக உருவானாள்.

இது போன்ற தலைவர்கள் ஹேமந்த ருது – முன் பனிக்காலம் போன்றவர்கள்.  சுகமான பருவம். மனிதர்கள் விரும்பும் பருவம். நல்ல அதிகாரிகள் இதைப் போல சுற்றி உள்ளவர்களுக்கு நன்மையே செய்பவர்களாக அமைவது கடினம். அவள் கவனத்தை திருப்பி தித்தபுரம், தித்தஸ்வாமின் என்ற இடங்களையும்,  Lata, sauraashtra  என்ற மத்ய தேசங்களின் வளர்ச்சிக்கும் மாணவர்களுக்கான பாடசாலைகளும் உயர் கல்வி கற்க வசதிகளையும் செய்வித்தார்.  தன்னிடம் இருந்த பொற்காசுகளை தாராளமாக செலவழித்து கனக புரா என்ற நகரைத்தை நிர்மாணித்தாள்.  வெண் கற்களால் அன மற்றொரு கோவிலும்  கங்கை கரையில்  கட்டினாள்.  அந்த கட்டிடமே கங்கையின் நீர் ஸூழ இருப்பதை ரசித்ததாம்.

(லாட – நர்மதா-தபதிக்கு இடைப்பட்ட இடம். சௌராஷ்ட்ரா- கத்தியவாட் என்ற ப்ரதேசம் ப்ரவரசேனா என்ற அரசனால் பிரசித்தி பெற்றது. இந்த மத்ய தேசங்களில் இருந்து பல அறிஞர்கள், கவிகள் காஸ்மீரம் வந்து புகழ் பெற்றனர் என்பது வரலாறு)

காஸ்மீர தேச வாசிகள் யாத்திரை சென்றால் தங்க சத்திரங்கள், உயரமான விஹாரங்கள் அவளது சேமிப்பில் எழுந்தன. தந்தையின் பெயரில் ஸ்ரீ சிம்ஹ ஸ்வாமி என்ற ஆலயமும், வேத விற்பன்னர்கள் தங்கள் மாணவர்களுடன் வசிக்கவும், சாஸ்திரங்களை கற்பிக்கவும்  விசாலமான பாடசாலைகள் அமைந்தன. வைகுண்ட மடம் விதஸ்தா சிந்து சமாகமம் ஆகும் இடத்தில் அழகாக அமைந்தது.  இப்படி மடங்கள் பொது ஜன பயன் பாட்டிற்காக ஏற்படுத்தியது  அவளிடம் மதிப்பை உயர்த்தியது. அறுபத்து நாலு புண்ய ஸ்தலங்களில் இப்படி மடங்கள் அவள் காலத்தில் கட்டப் பட்டன  என்று கேள்வி. (தேசிக  என்ற உள் நாட்டு சமவெளியில் வசித்தவர்களைக் குறிப்பிடுவது.  குமாவூன் என்ற மலைப் பிரதேச வாசிகள் பஹாடி என்றும் வழக்கில் இருந்த பொதுப் பெயர்கள்)

எந்த இடத்தில் எந்த கோவிலோ மடமோ, காலத்தினால் இடிந்தோ, இயற்கை சீற்றத்தால் அழிந்தோ கிடந்ததாக தெரிய வந்தால், அதன் பராமரிப்பை ஏற்று சுற்றுச் சுவர்களுடன் சீர் செய்து கொடுத்தாள்.

ராணியின் அருகில் விசிறியால் விசிறும் ஒரு சேவகி, வல்கா என்பவளும் தன் வருமானத்தில் வல்கா மடம் என்பதை கட்டினாளாம்.

சுத்தமான நீரில் வசிக்கும் திமிங்கிலம் மௌனமாக  இருக்குமாம்.  அருகில் வரும்  தன் ஜாதி மீன்களையே உண்ணும்.  அது அதன் அடக்கமாட்டாத ஆசை.    மயில்கள் நேரடியாக மழை நீரை  அதன் சுத்தமான தன்மைக்காக குடிக்கும், பின்னால் பாம்பையே விழுங்கும்.  எதிரெதிரான குணங்கள், ஒரு பக்கம் மிகவும் அடக்கமும் பண்பும் உள்ளதாக தோன்றுவதே மறுபக்கம் கொடூரமான கொலை குணம்.  அது இயற்கையின் வினோதம்.  இந்த ராணியும் அதே போல தன் சோகத்தால் குணவதியாக மாறியவள், மீண்டும் பழைய கொடிய செயல்களுக்கு இடம் கொடுத்து விட்டாள். அரியணையில் அமர்த்திய சிசுவை சூனியம் வைத்தல் என்ற தவறான செயலால் கெடுத்தாள்.   என்ன குணமோ, அந்த குழந்தையை வாழவே விடவில்லை. 973AC

நாற்பத்து ஒன்பதாவது ஆண்டு,மார்கழி மாதம் வளர் பிறை பன்னிரண்டாம் நாள் அது உயிரிழந்தது.  

அடுத்து ஐம்பத்து ஒன்றாம் ஆண்டு மற்றொரு பேரன் திரிபுவனா என்பவன் பட்டத்துக்கு வந்தான்.

மார்கழி மாத வளர் பிறை ஐந்தாம் நாள்  அவனையும் இதே போல மடியச் செய்து விட்டாள். 973-975

அவள் மதித்து மரியாதையாக இருந்த  ஒரே நபர் -, பால்குண என்பவரும் காலகதியடையவும்,  பழைய கொடூர குணங்கள் தலை விரித்தாடின.   பீம குப்தன் என்ற பேரன் பட்டத்துக்கு வந்தான்.

நீரின் குணம் பள்ளத்தை நோக்கி ஓடுவது.  புண்ய நதிகளின் சங்கமத்தில் தான் தேவி திருமகள் பிறந்தாள். தேங்கி நிற்கும் குள ஜலத்தில் தாமரைகள் பூக்கின்றன.  சில நற்குடியில் பிறந்தவர்கள்  மட்டமான குணமுடையவர்களாக ஆவதை என்னவென்று சொல்வது?

பத்தவாசம் என்ற சாக்ய பர்ணோத்ஸ என்ற கிராமத்து, பாணன் என்பவனுடைய துங்கன் என்ற பெயருடைய இடையர்  குலத்தவன், ஐந்து சகோதர்களுடன் காஸ்மீர தேசம் வந்தவன், அரச அலுவலகர்களாக ஆனார்கள். துங்கன் எழுத்தராக ஆனான்.  மற்றவர்கள் சுகந்திஸ்தன், ப்ரகடன்,நாகன், அட்டயிகா, ஷண்முகன் என்ற ஐவர்.  சேனைத் தலைவருடன் வேலையாக இருந்தவனை  ராணி கண்டாள்.  அவளுடைய அந்தரங்க பணிப் பெண்ணை அனுப்பி அவனை  கவர்ச்சிகரமாக இருந்த வாலிபனை தன் அறைக்கு வரவழைத்து விட்டாள்.  பலரை அனுபவித்த்வள். ஆனாலும் இந்த இளைஞன் அவன் மனதை கவர்ந்து விட்டான்.  மனசாட்சியே இல்லாத பாதகி,  அது வரை அந்தரங்க உதவியாளனாக இருந்த புய்யா என்பவன், அதை விரும்பாமல் விலகவும், ரகசியமாக அவனை  விஷம் கொடுத்து கொல்ல ஏற்பாடு செய்து விட்டாள்.  

வேளாவித்தன் ரக்கனின் மகன் தேவகலசன் அந்த இடத்தில் பதவிக்கு அமர்த்தப் பட்டான்.  அவனும் அவள் வலையில் வீழ்ந்தான். கர்தம ராஜன் போன்ற வீரர்களே, அவளுக்கு அடி பணிந்த பொழுது இவன் எம்மாத்திரம்.

பீமகுப்தன் என்ற அபிமன்யு மகன் வளர்ந்து விட்டான்.  ராஜ்ய நிர்வாகமோ, அடுத்த பொறுப்பு ஏற்கும் ஒருவரோ இல்லாமல் தித்தா மனம் போனபடி தன் வாழ்க்கையையும், அரசையும் அழிப்பதில் முனைந்திருக்கிறாள் என்பதை புரிந்து கொண்டான்.  அவன் ஏதோ தன் வரையில் சீர் திருத்த நினைக்கிறான் என்பதை அறிந்து கொண்ட தித்தா அவனையும் பலவகையிலும் துன்புறுத்தி மடியச் செய்து விட்டாள்.
துங்கா தன் சகோதர்களுடன் அரண்மனைக்குள் செல்வாக்கு மிக்கவனாக ஆனான்.  முன் இருந்த மந்திரிகள் சேர்ந்து ஆலோசித்து, விக்ரஹராஜா என்ற தித்தாவின் சகோதரன மகனை காஸ்மீரத்துக்கு வரவழைத்தனர்.  நிலைமையை கூர்ந்து பார்த்து விட்டு அவன் ஒரு திட்டத்தோடு அந்தணர்களை கிளர்ச்சி செய்ய தூண்டி விட்டான். அவர்கள் உண்ணா விரதம் மேற்கொள்ளச் செய்தான். அவர்களும் கூட்டாக சேர்ந்து உண்ணா விரதம் இருந்தனர்.   துங்காவில் இருந்து ஆரம்பிக்க நினைத்து அவனைத் தேடினர். அவனை பாதுகாப்பாக ஒரு அறைக்குள் வைத்து பூட்டி விட்டு அந்தணர்களில் சிலரை நிறைய பொற்காசுகள் கொடுத்து தன் பக்கம் ஆக்கிக் கொண்டாள். உண்ணாவிரதம் கைவிடப் பட்டது.

 துங்கன் முதலானோர் கை ஓங்கவும் முக்கிய ராணுவ வீரர்கள் ரகசியமாக கொல்லப் பட்டனர். ரக்காவின் மகன் சுலக்கணன் மற்றும் பலர் நாட்டை விட்டு துரத்தப் பட்டனர்.  மறுமுறை அந்தணர்கள் உண்ணாவிரதம் என்று ஆரம்பித்தனர். இந்த முறை துங்கன் அவர்களை தாக்கி ஓட ஓட விரட்டி விட்டான்.  அவர்களுடன் விக்ரஹராஜாவின் உடன் வந்த ஆதித்ய ராஜாவும் தாக்கப் பட்டு மடிந்தான். முன் பொற்காசு கொடுத்த அனதணர்களையும் தேடிக் கொண்டு வந்து சிறையில் அடைத்தான் துங்கன்.

அந்த சமயம் ராஜகிரியில் பால்குணன் கால கதி அடையவும், அந்த ராஜய்த்தில் படையெடுத்துச் செல்ல மந்திரிகள் தீர்மானித்தனர். ராஜபுரி அரசனாக பதவி ஏற்ற ப்ருதுவிபாலன்  காஸ்மீர படையை எதிர்த்து ஒடுக்கி விட்டான்.   சிபாடகன் ஹம்ச ராஜன் என்ற இரு மந்திரிகள் மடிந்தனர்.  தன் சகோதர்களுடன் துங்கா யாருமறியாமல் நகருக்குள் பிரவேசித்து ராஜ புரியை தீக்கு இரையாக்கி விட்டான்.  இதற்குள் அதிக தைரியம் பெற்று விட்ட துங்கன்  சேனாபதியை பதவி இறக்கி,  டாமர்களை அவமானப் படுத்தினான்.  தித்தா தன் சகோதரன் மகன் உதய ராஜாவின் மகனை அரசனாக அறிவித்தாள்.

மரம் ஒன்றே போதும் வானரங்களுக்கு. வெளிக் காற்றோ, பனியோ தங்களை காத்துக் கொள்ள போதும். கொம்புடைய  மான்  ஜாதி விலங்குகள்  தங்களை காத்துக் கொள்ள நீரும், காற்றுமே   போதும் என்று உள்ளன.  பிறவிகள் தாங்களே தங்களுக்கு தேவையானதை இயற்கையிலேயே பெற்றுக் கொள்கின்றன.  அது போலத் தான் உதயராஜாவின் மகன், உடன் இருந்த மற்ற ராஜ குமாரர்கள் தங்களுக்குள் போட்டி இட்டபொழுது தன் காரியமே கவனமாக இருந்து அரச பதவியைப் பெற்று விட்டான்.  வீரமோ, அறிவோ அளிக்காத நன்மையை சில சமயம் உள்ளூணர்வால் உணர்ந்து அறியவும் முடியும் என்பதற்கு இந்த விலங்குகள் தங்களை காத்துக் கொள்வதை வைத்து  விளக்குகிறார் கவி.

எழுபத்து ஒன்பதாம் ஆண்டு, பாத்ரபத மாதம், வளர்பிறை எட்டாம் நாள் அந்த ராணி இயற்கை எய்தவும், உதயராஜாவின் மகன் சங்க்ரஹ ராஜா  அரச பதவியில் திடமாக ஊன்றிக் கொண்டான். 1003AC

இது அரச பரம்பரையில் வந்த மூன்றாவது மாறுதல்.  நில வளமும், நீர் வளமும் நிறைந்த அழகிய பூமி, பொன் விளையும் எனும் படியான செல்வ செழிப்பு கொண்ட பகுதி, சதவாகனன் குலம் இந்த பூமியை அடைந்து வளர்த்தது.   காட்டுதீ பொசுக்கிய இடத்தில், மழையின் துளி  விழவும் எப்பொழுதோ விழுந்த மாமர விதை துளிர்த்து வருவது போல காஸ்மீர ராஜ்யம் பல ஆண்டுகளாக பட்ட துன்பம் விலகியது.

சங்க்ரஹ ராஜா  வின் காலத்தில் காஸ்மீர ராஜ்யம் புத்துயிர் பெற்றது.  இந்த அரசன் தன் தீர்மானமான கொள்கைகளும் செயல்களுமாக அரச பொறுப்பை தன் தோள்களில் தாங்கினான்.  எங்கும் தாமரைக் குளங்களும் மற்ற மலர்களும் நிறைந்த பிரதேசம் தன் பொலிவை திரும்பப் பெற்றது.  தங்கள் சக்தியை மறைத்துக் கொண்டு பூமிக்கு அடியில் மறைந்து இருக்கும் நாகங்கள் போல, தன் ஆற்றலை முழுவதும் வெளிக் காட்டமல் அமைதியாக மென்மையாக பேசியே ராஜ்யத்தில் மாற்றத்தைக் கொண்டு வந்து விட்டான். 

(இது வரை ஸ்ரீ காஸ்மீர தேசத்து மகா மந்திரியான சம்பக  ப்ரபுவின் மகன் கல்ஹணன் எழுதிய ராஜ தரங்கினீ என்ற நூலின் ஆறாம்  பாகம்- ஆறாம் அலை நிறைவுறுகிறது

அறுபத்து நான்கு ஆண்டுகள்,  எட்டு மாதங்கள், ஒருநாள் மட்டுமே நீடித்த  காலத்தில் பத்து அரசர்கள், பூமியை ஆண்டனர்.

 .

Rajatharangini-5

ராஜ தரங்கினி -5

ராஜ தரங்கினி -5

கடவுள் வாழ்த்துடன் ஆரம்பிக்கிறார். இதில் என்ன அழகு என்று உன் சடைகளில் நாகங்களை வைத்திருக்கிறாய்?  அவைகளோ கண்களால் கேட்பவை.  உன் கண்டத்தில் எதைக் கண்டு அவை மகிழ்கின்றன? குயிலின் குரலைக் கேட்பது போல கண் மலர இருக்கின்றன.  நாகங்களுக்கு இரட்டை நாக்கு என்பர். எங்கள் பிரார்த்தனையை அது இரண்டு விதமாக புரிந்து கொள்ளுமா?  பகவான் தங்களும் தேவியும் இணைந்து இருக்கையில் என் வேண்டு கோளுக்கு செவி சாய்த்து சொல்லும்   சொல்லே எங்களை காக்கட்டும்.

அவந்தி வர்மா சாம்ராஜ்யத்தை அடைந்தான்.  முதல் காரியமாக ராஜ்யத்தில்  இடையூறு செய்தவைகளைக் களைந்தான்.  உடன் இருப்பவர்களிலும் தேவையானவர்களைத் தவிர மற்றவர்களை விலக்கி விட்டான். இரு அமாத்யர்கள் போதும். அவர்கள் பரஸ்பரம் கலந்து பேசி, அடுத்த நிலை அலுவலர்களையும், பணியாளர்களையும் நியமித்துக் கொள்ளட்டும்.  அரச ஆணைகளை மதிக்கும்  பொறுப்புடைய பிரஜைகளாக இருக்கட்டும். செய்  நன்றி மறவாத பொறுமையும், நிதானமாக யோசித்தும் செயல்படும், தேசப்ப்ற்று உள்ளவர்களாக, தன் உணர்ச்சிகளை வெளீக் காட்டாது மென் முறுவலோடு எதிர்ப்பவர்களையும் கடந்து செல்பவர்களாக, மந்திரிகள் அமைவது மிக கஷ்டம்.  இவர்கள் நிலைத்து நிற்கக் கூடியவர்கள்.  அரசனின் நல்வினைப் பயனே இது போன்ற மந்திரி அமைவார்.

அவர்ந்தி வர்மா விவேகியாக இருந்தான்,  ராஜ்யம் கைக்கு வந்த தும் அதன் நிதி நிலையை கவனித்தான்.  இயல்பாக நல்ல நினைவு சக்தியும், புத்தியும், நேர்மையான  எண்ணமும் இருந்ததால்  தானே சிந்தித்து ஒரு திட்டமிட்டுக் கொண்டான்.

ராஜ்யலக்ஷ்மி புஜ பலம் உடையவர்களிடம் பிரியமாக இருப்பவள்.  யானை மேல் பவனி வருபவள். யானையின் மேல் பவனி செல்வ செழிப்பைக் குறிக்கும்.   அரசு கட்டிலில் அமருபவர்களை சில நாட்கள் கவனமாக ஆராய்வாள் போலும்.  நற்குணமோ, அரசாளும் திறமையோ இல்லாதவனிடம் பதவி வந்து சேர்ந்தால் கூட, இந்த ஆய்வில் தேறாதவர்கள் நீடிப்பது இல்லை.  பொதுவாக  எடுத்த எடுப்பில் அவள் அவர்களை பாதிப்பதும் இல்லை.  ஆரம்பத்தில் அனுகூலமாக இருந்து விட்டு பின்னால் வறுத்தெடுப்பது சில அல்ப ஜீவன்களாக இருக்கலாம். தேவி ராஜ்ய லக்ஷ்மியை அப்படி நினைக்க வேண்டாம்.  பாற்கடலில் அவளுடன்  பிறந்த அப்சரஸ்கள், சபல சித்தம் உடையவர்கள். அதே பாற்கடலில் வந்தவள் தான்,  பூ தேவியாக ஒரே அரசனுடன் இருப்பது அவள் எப்படி அறிவாள். எவரிடமும் அதிக பற்றுதல் வைத்து அவர்கள் காலம் முடிந்தவுடன் உடன் செல்வதில்லை.  அரசர்கள் வீணாக பொற் கலயங்கள், உயர்ந்த மதிப்பு மிகுந்த நவமணிகள் இவைகளில் ஆசை வைத்து  தங்கள் நிலவறையில் சேர்த்து வைக்கிறார்கள்.  பரலோகம் செல்லும் பொழுது அவர்களுடன் பந்துக்களோ இந்த செல்வமோ செல்வதில்லை. அடுத்த அரசன் அதே பொற் கலயங்களில் உண்ணும் பொழுது, இது எனக்கு முந்திய அரசன் உண்ட கலயம் என்றா  நினைப்பான்.    அதே அரியணை, அதே அரண்மனை பரிவாரங்கள் அவன் அதற்காக வெட்கமோ தயக்கமோ கொள்வதில்லை.  ஆங்காங்கு முந்தைய அரசன் பெயர் பொறித்த தூண்களோ, மண்டபங்களோ இருந்தாலும் அவை ஏதோ மைல் கல் போல தான் நினைவில் நிற்கும்.  கணக்கில்லாத ஹாரங்கள், ஆபரணங்கள் அனைத்தும் வீணே. இவ்வாறு பலவாறு  எண்ணி தன் வரையில்  பொன்னோ, மணியோ பயன்படுத்துவதை நிறுத்தினான்.  அரண்மனையில் இருந்தவற்றையும் தானமாக கொடுத்து விட்டான்.  நன்று செய்தாய், அவந்தி வர்மா என்ற அறிவுடைய அவைப்  பெரியவர்களின் ஆசிகளை மனமுவந்து தலை வணங்கி ஏற்றுக் கொண்டான்.  தேவை என்று வந்தவர்களுக்கு கொடுக்க மட்டுமே நிதியை கைவசம்  வைத்துக் கொண்டான்.  சாமர சத்ரங்களே அரச அடையாளம்.   இந்த அரியணை என் முன்னோர்களின் வழியில் என் உரிமையாக வந்தது அதை நிர்வகிப்பது என் கடமை என்றான்.

நாட்டில் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்தான்.  எந்த வேற்று நாட்டு அரசனும் படையெடுத்து வந்தால் முறியடிக்க மட்டுமே அவை பயன்படும். ஊருக்குள்ளும் அமைதியை நிலை நாட்ட காவல் வீரர்கள் பலர் நியமுஇக்கப் பட்டனர். .  பந்துக்களான அரச குலத்தினர்களுக்கு  தனக்கு வேண்டியதை மட்டும் வைத்துக் கொண்டு மீதியை பிரித்து கொடுத்து விட்டான். 

தந்தையின் மற்றொரு மனைவி மூலம் பிறந்தவன் ஸூர வர்மன்.  அவன்  புத்திசாலியாக இருந்தான்.  அவனுக்கு யுவராஜ பதவியைக் கொடுத்தான். காதூய, ஹஸ்தி கர்ண என்ற இடங்களை அவனுக்கு அளித்தான்.  அந்த இடத்தில் ஸூரவர்ம ஸ்வாமி, கோகுலம் என்ற வழிபாட்டுஸ்தலங்களை அவன் ஏற்படுத்திக் கொண்டான்.  பஞ்சாக்ஷரி – நம:ஸிவாய என்ற மந்திரம்.  அதை குரு உபதேசமாக பெற்றவன். அதனால் பக்தனாகவும், நேர்மையானவனாகவும், செயல் நேர்த்தியும் உடையவனாக  இருந்தான். சிறந்த முறையில் பாடசாலையை கட்டுவித்தான். பல மாணாக்கர்கள் படிக்க வழி செய்தான்.

மற்றொரு சகோதரன், சமரா என்பவன், அவனும் ஆட்சியில் சில பொறுப்புகளை ஏற்றான்.  சமரஸ்வாமின் என்ற பெயரில் பகவான் கேசவனின் நான்கு விதமான உருவங்களை பிரதிஷ்டை செய்தான். ஸுரவர்மனின் உடன் பிறந்த இருவர், தீரன் என்றும் விண்ணப்ப என்றும் பெயர் உடையவர்கள்,  இவர்களும் தங்கள் பெயரில் வழி பாட்டு ஸ்தலங்களை நிறுவினர்.  இவ்விருவரும்  நிதி நிர்வாகத்தை கவனித்துக் கொண்டனர்.  அதிக நேரம் பரம சிவன் கோவில்களிலும், ஆன்மீக விஷயங்களிலும் பங்கு எடுத்துக் கொண்டனர். 

ஸூரவர்மனின் மெய்க் காப்பாளன் மஹோதயா என்பவன்,  இந்த பதவிக்கு வரும் முன்பே, மக்களிடையே செல்வாக்கு உடையவனாக இருந்தவன்.  மஹோதய ஸ்வாமின் என்ற பெயரில் கோவில் கட்டி கும்பாபிஷேகமும் செய்வித்தான்.  ராமஜா என்பவன் ஆசிரியர்  மற்றும் அரச புரோஹிதர்.  இலக்கண சாஸ்திரத்தில் புலமை பெற்றவர்.  அந்த சிவன் கோவிலில் இருந்து கொண்டு   மூல நூலான பாணினியின் இலக்கண நூலுக்கு பத உரை எழுதினார்.  முக்ய மந்திரியாக இருந்த ஸ்ரீ ப்ரபாகர வர்மன் என்பவர், மகா விஷ்ணு கோவிலை நிர்மாணித்து, ப்ரதான மூர்த்தியை ப்ரபாகர ஸ்வாமின் என்று பெயரிட்டார். அந்த கோவிலுக்கு கிளிகள் வருவது பிரசித்தமாக ஆயிற்று.  அப்படி வந்தவைகளில் ஒன்று முத்துக்களை கொண்டு வந்து கொடுத்ததாம்.  சுக- கிளி, சுகாவளீ – கிளிகளின் வரிசை -என்றே அந்த இடம் பெயர் பெற்றது.  கல்வி மந்திரியாக ஸூரன் இருந்தான். பலவிதமான கலைகளையும் கல்வி கூடங்களையும் அமைத்து, அறிஞர்களான வித்வான்களுக்கு நல்ல சன்மானம் கொடுத்து, அந்த தேசத்தை கற்றோர் நிறைந்ததாகச் செய்தான்.  அரச சபையில் அறிஞர்களே  இருந்தனர்.  மற்ற பிரதேசங்களில் இருந்தும் பல்லக்குகளில் கற்றவரும், கலைஞர்களும் அந்தந்த பிரதேசத்து கலைகளையும், காவியங்களையும் இந்த சபையில் வெளியிடுவதை தங்கள் படைப்பின் அங்கீகாரமாக நினைத்தனராம்.   அதற்கு தகுந்த மரியாதையும், சன்மானங்களும்  பெற்று அரச சபையை அலங்கரித்தனர். 

ஆனந்த வர்மன் என்ற கவி முக்தாகணம் என்ற பட்டத்தையும், சிவஸ்வாமி என்ற பட்டத்தை ரத்னாகரன் என்ற கவியும் பெற்றனர்.   நடுவில்  கற்றோரை ஆதரிப்பது என்ற முறைமைகளை  மறந்திருந்த அரசகுலம் ஸுரன் என்ற மந்திரியின் தலைமையில் அவந்தி வர்மன் சபையில் புத்துயிர் பெற்றன.  இதை அறிவிப்பது போல தினமும் ஸுரனின் ஆஸ்தான வித்வானாக இருந்தவர்,  வந்தி எனும் அரசவை பாடகராகவும் இருந்தவர். அவர் தினமும் பாடுவார்:-

 ‘இது ஒரு நல்ல வாய்ப்பு. கவிகளும், இலக்கியவாதிகளும் கேளுங்கள்.  உங்களை மதிக்கவும், உங்கள் சாதனைகளை பாராட்டவும் எங்கள் அரசன் முனைந்துள்ளான். இதை பயன் படுத்திக் கொள்ளுங்கள்.  மறக்கப் பட்ட உங்கள் திறமைகளை, புலமைகளை இந்த சபையில் வெளியிட்டு புகழ் பெறுவீர்கள்.  மனிதர்கள் விபத்துகளில் இருந்து தப்பி வந்து பல காலம் வாழ்வது போல மறக்கப் பட்ட உங்கள் படைப்புக்கள் நீண்ட காலம் நிலைத்திருக்கச் செய்ய இது தான் வழி. ‘

சுரேஸ்வரி க்ஷேத்ரம் (Dal lake -அதன் கிழக்கு பகுதியில் உள்ள மலை இன்றளவும் தேவி பார்வதியின்  இருப்பிடம் என்று வணங்கப்படுகிறது.) என்ற இடத்தில் பலருக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தான்.  உமையொரு பாகனாக சிவ பெருமானை பிரதிஷ்டை செய்து  அந்த ஆலயத்துக்கு நிரந்தர வருமானத்துக்கான ஏற்பாடுகளையும் செய்து வைத்தான்.  சிவபெருமான் சிவா என்ற பார்வதியுடன்  இருப்பதால்,  விசாலமான பிராகாரங்களும், நந்தவனங்களுமாக  உயர் தரமாக இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தான்.    அங்கு வரும் தபஸ்விகள் தங்க மடங்கள், உணவு சாலைகள், என்பவைகள் ஸூரமடம் என்ற பெயரில் அமைத்தனர்.  அறிவு கூர்மை உடைய ஸூரவர்மன்,  ஸுரபுரம் என்ற நகரத்தை நிர்மாணம் செய்து, கிரமவர்த்த பிரதேசம் என்பதில்  டமரு ढ्क्का – என்ற தாள வாத்யம் பிரதானமாக விளங்கும்படி செய்தான்.  சுரேஸ்வர ஆலயத்தின் முன் பிராகாரத்தில், பூதேஸ்வரன் என்ற சிவ பெருமானை ஸ்தாபித்தான்.

(இந்த இடத்தில் 1912 ல் அகழ்வாராய்ச்சி செய்யப் பட்டதாக வரலாறு.  அவந்தி புரம் ஸ்ரீ நகருக்கு 18 மைல் தூரத்தில் இருந்த இடம். அவந்தீஸ்வரா என்ற சிவன் கோவிலும்,  அதற்கு அரை மைல் தூரத்தில் அவந்தி ஸ்வாமின் என்ற அழகிய அலங்காரங்களுடன் விஷ்ணு ஆலயமும்  சிறப்பாக பாதுகாக்கப் பட்டு இருந்ததாக தெரிகிறது. இரண்டுமே சிகந்தரின் படையெடுப்பில் நாசமாக்கப் பட்டன )

ஸூர வர்மனின் மனைவி காவ்ய தேவி நற்குலத்தில் பிறந்தவள். அவளும் கல்வியறிவு உடையவள்.  அவளிடம்  பிறந்த மகன் ரத்ன வர்தனன்  தந்தைக்கு பெருமை சேர்க்கும் மகன் என்று புகழ் பெற்றான்.  சுரேஸ்வரீ என்ற அந்த நகரில் காவ்யதேவீஸ்வரா என்ற பெயரில் சதாசிவ ஆலயம் எழுந்தது.

அவந்தி வர்மன் தந்தை வழியில் மாற்றுத் தாயிடம் பிறந்தவர்கள் என்றாலும் அவர்களுக்கு மதிப்பு மிக்க பதவிகளையும் அளித்து அவர்களை சுதந்திரமாக செயல் படவும் அனுமதித்த பெருந்தன்மையை நாட்டு மக்கள் போற்றினர்.  பொறாமை இல்லாதவன், ஸூரனுடைய மகனுக்கும் அரகுமாரன் என்ற பதவியை கொடுத்துள்ளான்.  தர்ம சாஸ்திரங்களை அனுசரித்து நடக்கிறான், அதனால் தெய்வமே  அனுப்பியது போல சிறந்த  மந்திரிகள் வாய்த்துள்ளனர்.   சிறு வயது முதலே வைஷ்ணவமும் சைவமும் அறிந்தவனாக, விஸ்வத்தின் -உலகின் சாரமாக இந்த பூமியை ஆக்கி விட்டான்.  இங்கு பிறந்தாலும், மடிந்தாலும் முக்தி உறுதி என்ற அளவு புண்ணிய பூமி இது.  அரசன் ஆட்சியில் இந்த அவந்தி புரம் எண்ணற்ற போகங்கள் நிறைந்த தாகவும் ஆகி விட்டது.

ஆட்சிக்கு வந்தவுடன் அவந்தி ஸ்வாமின் என்ற விஷ்ணு ஆலயத்தையும், சாம்ராஜ்யம் என்று விஸ்தரித்தவுடன் அவந்தீஸ்வரம் என்ற ஆலயத்தையும் கட்டுவித்தான்.  திரிபுரேஸ்வர, பூதேச, விஜயேச என்ற சன்னிதிகளும், அவைகளில் அபிஷேகம் என்ற வழிபாட்டு முறையையும் வெள்ளியால் ஆன தண்ணீர் குடம் (சிவாலயங்களில் லிங்கத்துக்கு மேல் சதா அபிஷேகம் நடைபெற  ஒரு கலசம் தொங்க விடப் பட்டிருக்கும். இடை விடாமல் நீர் பொழியும்படி சிறு துவாரத்துடன்  அமைக்கப் பட்டிருக்கும்.( स्नान  द्रोणि – என்பர்) ஸூர வர்மனும் தானும் சிவ பக்தனே ஆனதால்,  இந்த ஏற்பாடுகளில் மனமுவந்து ஈடு பட்டான்.  அவந்தி வர்மனின் பிரியமான  திட்டம்,  அந்த பணியே முதன்மை செயல், அதுவே எல்லாம் என்று முனைந்து ஏற்பாடுகளை கவனித்தான்.  தர்மமா, பிராணனா, மகனா எதுவுமே அதற்கு பின் தான். 47

அவந்தி வர்மன் ஒரு நாள் அவந்தீஸ்வர் கோவிலில் பூதேச சன்னத்திக்கு சென்றான்.  பெருமானுக்கு படைத்த பழங்கள் வழக்கம் போல இல்லாமல் காட்டு பழம் உத்பலம் என்ற நாவல் பழம் பூஜைக்கான பொருட்களுடன் காணப்பட்டது.  பொதுவாக நாவல் பழங்கள் வினாயக பூஜையைத் தவிர மற்ற இடங்களில் பயன் படுத்துவது இல்லை. அரசன் விசாரிக்கவும் அந்த பூசாரிகள், மண்டியிட்டு அமர்ந்து தலை வணங்கி தங்கள் கஷ்டத்தை சொன்னார்கள்.  ஒரு தானவன், டாமரன் என்ற பெயராம் லஹரா என்ற ஊரைச் சேர்ந்தவன். அவன் கபடமாக ஸூரனுடைய சேவகனாக வந்து நுழைந்து விட்டான். . அவன் பலசாலி. கிராமத்தை ஸூறையாடி விட்டான்.  இந்த பழம் ஒன்று தான் எங்கள் கைக்கு கிடைத்தது. என்றனர். இதைக் கேட்டு பெரிய ஸூலத்தால் தாக்கப் பட்டவன் போல அரசன் துடித்தான்.  பூசாரிகளின் சொல்லை கேட்டும் எந்த எதிர்வினையும் செய்யாமல் பாதி பூஜையில் கிளம்பி விட்டான்.  

வழக்கமாக செய்யும் வழிபாடுகளைச் செய்யாமல் கிளம்பி விட்டான் என்பதே ஸுரனுக்கு திகைப்பை அளித்தது.  காரணம் தெரிந்தவுடன், தானே பூதேசனின் கையில் இருந்த மாத்ரு சக்ரம் – தேவியின் ஆயுதம்-  எடுத்துக் கொண்டு பைரவர் சன்னிதிக்கு சென்றான்.  ஊர்  மக்களை கூட்டம் போட வேண்டாம் என்று அனுப்பி விட்டான்.    அவனுடன் வந்த சில வீரர்கள் மட்டுமே இருந்தனர்.  அவர்களை தானவனை கொண்டு வர பணித்தான்.  ஒவ்வொருவரையும் ஒவ்வொரு திக்குக்கு அனுப்பினான்.

தானவன் பூமி அதிர நடந்து வந்து பூதேசனின் எதிரில் நின்றான்.  உள்ளே நுழைந்ததுமே,  ஸூரன் ஆணையின் படி பூதேசனுக்கு காணிக்கையாக அளிப்பது போல கண்ட துண்டமாக வெட்டி விட்டனர்.  அந்த தலை அசப்பில் ஸூரனுடைய மகன் போலவே இருக்கவும்,  அனைவரும் திகைத்தனர். அருகில் இருந்த குளத்தில் ரத்தம் பெருக இருந்த உடலை முக்கி எடுத்து, அரசன் அவந்தி வர்மாவிடம் சொல்லச் சொன்னான்.  மந்திரியை ஏமாற்ற அவனாக செய்துகொண்டதோ,  இயல்பாகவோ, அவன் முகம் மந்திரியின் முகமாக இருக்கவே மற்ற சேனைத் தலைவர்களும் மற்றவர்களும் அவனை தடுக்காமல் இருந்திருக்கின்றனர்.  அரசனும் இந்த காரணத்தால் தான் தன் மன சங்கடத்தை வெளிக்காட்டாமல், எதுவும் மறுமொழி சொல்லாமல் வெளியேறி இருக்கிறான்.

தானவனின் வதம் ஸூரனே முன்னின்று செய்த பின், அரசனிடம் தானே போய் தெரிவித்தான்.   அரசன் ஸுரனை நலம் விசாரித்தான். நலமாகவே இருக்கிறேன் என்று பதிலுரைத்த ஸூரனை அனைத்து ஆறுதல் சொல்லி விட்டு, முடிக்காமல் விட்ட தன் வழிபாட்டை  முடித்தான். 61

இவ்வாறு சிறிய விஷயங்களில் கூட தன் கட்டுப்பாட்டை இழக்காமல் திடமாக இருந்தான்.  சொல்லாமலே அல்லது வேண்டாமலே எது தேவை என்பதையறிந்து அந்தந்த  பிரஜைகளுக்கு தானே செய்து விடுவான்.  ஒன்றோடொன்று விரோதிகளான குணங்கள்,  அரசனைப் போலவே அவன் மந்திரிகளிடமும், அனாவசியமான கோபமோ. கள்ளத்தனமோ, ஒருவருக்கொருவர் விரோதமோ கேட்டதும் இல்லை, கண்டதும் இல்லை,  என்று மக்களிடம் நம்பிக்கை வந்தது.  முன்பு மேக வாஹனன் இருந்தது போலவே அவந்தி வர்மனின் சாம்ராஜ்யமும் விரிவடைந்து விட்டது.  பத்து ஆண்டுகள் பிராணி வதமே இல்லாமல் சென்றது. மீன்கள் கூட  குளிர் காலத்தில் கரையில் ஒதுங்கி சற்று நேரம் வெய்யிலின் சுகத்தை அனுபவிக்குமாம்.

அவந்தி வர்மன் அரசாண்ட காலத்தில் பட்ட,Batta,  ஸ்ரீ கல்லட Srikallata – போன்ற சிறந்த கவிகள் மற்றும் சித்தர்கள்  பூமியில் தோன்றினார்கள்.  கல்ஹணர் சொல்கிறார்,  இந்த அரசனின் சரித்திரம் ஒன்றை விட ஒன்று சிறப்பானது. அதில் இந்த சந்தர்பத்துக்கு ஏற்ற ஒரு ஒரு விவரம் இங்கு வர்ணிக்கிறேன். 

மஹாபத்ம என்ற குளத்தின் நீர், சில சமயம் பெருகி வெள்ளமாக பாய்ந்து இந்த பிரதேசத்தை மூழ்கடிக்கும்.  தடுப்பனைகள் இருந்த போதிலும் இந்த பகுதியில் விளைச்சல் குறைவாகவே    இருந்தது.  லலிதாதித்ய மகாராஜா காலத்தில் மிகவும் சிரமப்பட்டு தடுப்புகள் கட்டியும், நதி நீரை திசை மாற்றியும் செய்ய ஏற்பாடுகள் ஓரளவு பலனளித்தன.  விளைச்சல் சற்று உயர்ந்தது.    அதன் பின் ஜயாபீடன் காலத்திற்கு பிறகு வந்த அரசர்கள் அதிக பலமோ, முன் யோசனையோ இல்லாமல் கவனக் குறைவால் அதை செப்பனிடாமல் விட்டதால்,  பூமி பழையபடி எதிர்பாராத வெள்ளங்களால் பாதிக்கப் படலாயிற்று.  நூற்று ஐம்பது டினார்கள், dhinnar அந்த கால நாணயம் – மூட்டை அரிசி என்று விற்க காரணமே  தேசத்தில் தானிய விளைச்சல்  குறைந்தது தான்..  இந்த பற்றாக்குறையை தீர்க்க  என்ன செய்யலாம் ?  

அந்த சமயம் அவந்தி வர்மனின் தூய்மையான பிரார்தனைக்கு இரங்கியோ சுய்யா என்ற பிரசித்தி பெற்ற விவசாய விக்ஞானி காஸ்மீர தேசத்தில் பிறந்தார்.  உயிரினங்களின் உணவுக்கு அதிபதியான தேவனே அவதரித்து விட்டான் என்றனர்.  யார், எங்கிருந்து வந்தார் என்பது தெரியாததால்,  அமானுஷ்யமான சக்தி பெற்றவர்,  மனித பிறவி அல்ல என்ற பொதுவான கருத்து அது.  ஒரு சமயம் வீதி பெருக்கும் ஒரு தொழிலாளியான   பூயா என்ற ஒரு மாது , புது மண் பாண்டம் தரையில் கிடப்பதைக் கண்டாள். மூடியை திறந்தவள் அதனுள் ஒரு சிசு, கமல பத்ரம் போன்ற கண்களுடன், கை கட்டை விரலை வாயில் வைத்து சுவைத்தபடி  இருப்பதைக் கண்டாள். 75, 173/398 எந்த தாயாரோ,  பிறந்த குழந்தையை தியாகம் செய்து விட்டு போய் இருக்கிறாள்.  இந்த அழகான குழந்தையை எப்படி துறக்க மனம் வந்தது?   மந்த பாக்யா – அனுபவிக்க கொடுத்து வைக்கதவள்.

அவள் ஏழ்மையோ,  மற்றவர்களின் எதிர்ப்பையோ பொருட்படுத்தாமல் அந்த சிசுவை வளர்த்தாள்.      சுய்யா என்ற பெயரிட்டு, தன் தொழிலையும் செய்து கொண்டு அந்த சிசுவை கல்வி கற்கவும் ஏற்பாடு செய்தாள்.  சிறுவனாக இருந்த பொழுதே சுய்யா, புத்திமானாக இருந்து.  கல்வியை ஈடுபாட்டுடன் கற்று வளர்ந்தான்.  அந்த குடும்பத்தில் முன் பிறந்தவர்களுக்கும் தான் கற்றதை சொல்லிக் கொடுத்தான்.  தானாக விரதங்கள், நீராடுதல், போன்ற நியமங்களைச்  செய்தான். அந்த குழந்தைகள் அவை பற்றி கேட்டதே இல்லை.  அறிவு பிரகாசம்  அறிவாளிகளையும் அவன் பால் இழுத்தது.  அதனால்  அவனைச் சுற்றி சில பெரியவர்கள், சிறியவர்கள் அறிஞர்கள் சதா ஸூழ்ந்து இருந்து பல விஷயங்களைப் பேசுவர். ஒரு சமயம் அவர்கள் பேச்சில் இந்த வெள்ள பாதிப்பும். அதை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்ற விவாதமும் நடந்தது.  சிறுவன் சுய்யா சொன்னான்: என்னிடம் உபாயம் இருக்கிறது. ஆனல் பொருள் வேண்டுமே.  நிதி உதவி கிடைத்தால் நான் இதை சரி செய்வேன் என்றான்.  உடனே அவர்கள் நம்பவில்லை. உன்மத்தன் போல பேசுகிறான் என்றனர்.  ஆனால் உளவாளிகள் மூலம் இந்த செய்தி அரசன் அவந்தி வர்மன் காதுகளை எட்டியது.   அரசன் ஆச்சர்யப் பட்டான்.  அந்த சிறுவனை அழைத்து வாருங்கள் என்று கட்டளையிட்டான். வந்தவனிடம் நீ எதை வைத்து சொன்னாய்?  இந்த வெள்ளத்தைக் கட்டுப்படுத்த முடியுமா? என்று வினவினான்.  என் மனதில் ஒரு உபாயம் இருக்கிறது. அதை செயல் வடிவம் ஆக்கவும் யோசித்து ஒரு திட்டம் வைத்திருக்கிறேன்.  பொருள் உதவி இல்லாமல் என்ன செய்வேன்?  அரசனைத் தவிர மற்றவர்கள் நம்பாமல் சிரித்தார்கள். உன்மத்தன் போலும் என்றனர்.

அவந்தி வர்மா சிறுவனிடம் “ என் சொந்த பணத்தை தருகிறேன். உன் திட்டம் என்ன ? எப்படிச் சொல்கிறாய்? யாரிடம் கற்றாய்?  அவன் பதில் சொல்லும் வரை காத்திருக்கவில்லை. பானைகளில் டினார என்ற நாணயங்களை நிரப்பிக் கொடுக்கவும் அவனும் உடனே மதவ ராஜ்யம் நோக்கி படகில் புறப்பட்டான். நந்தக என்ற ஒரு கிராமம் வெள்ளத்தில் மூழ்கி கிடந்தது.   அந்த பானைகளில் ஒன்றை  அந்த நீரில் போட்டு விட்டு திரும்பி வந்தான்.   சபையினர்  ‘நாங்கள் நினைத்தது சரியாகி விட்டது. சரியான உன்மத்தன் இவன்’ என்றனர்.   ஆனால் அரசன் அவன் மேற்கொண்டு என்ன செய்யப் போகிறான் என்பதிலேயே கவனமாக இருந்தான்.  சுய்யா அடுத்து கிரமராஜ்யத்தில் யக்ஷடரா என்ற பிரதேசத்தில் கை நிறைய டினார்களைக் கொண்டு சென்று நீரில் வீசினான். 

இரண்டு பாறைகள் விதஸ்தாவின் வழியை அடைத்துக் கொண்டிருந்தன.  பஞ்சத்தில் உணவின்றி வாடிய கிராமத்து ஜனங்கள்,  நாணயங்களைத் தேடிக் கொண்டே வந்தனர்.  பாறைகளுக்கடியிலும்   தேட முயன்றவர்கள் அனைவரும் சேர்ந்து பாறைகளை புரட்டிப் போட்டனர். விதஸ்தாவின் நீர் தங்கு தடையின்றி அதன் வழியில் பிரவகித்துச் சென்றது. மூன்று நாட்கள் நீர் வடியும் வரை காத்திருந்து பின், வீடு கட்டும் கொத்தனார்கள் உதவியுடன். விதஸ்தா  வின் ஒரு இடத்தை குறிப்பிட்டு அதன் மேல்  வடிகால்களுடன் ஒரு அணை கட்டச் செய்தான்.  கல்லால் ஆன அந்த தடுப்பணையால்  நீலா நதியின் கிளை நதிகள் அனைத்தும் நீர் வடிந்து உலர்ந்தன.  நீலா நதியின் போக்கையும் அடி மட்டத்தையும் அதன் அடியில் இறங்கிச் சென்று சோதித்த பின்,  ஒரு வாரம் பொறுத்து, இருபக்கமும் கற்களால்  விதஸ்தாவின் இரு கரைகளிலும்  திடமான கரை கட்டச் செய்தான்.  அதனால் பாறைகள் உருண்டு  நீரில் விழாமல் தடுக்கப் பட்டது.  அதன் பின் தானே அணையின் வடிகால்களை திறந்தான்.

வெகு காலமாக  சமுத்திரத்தை அடைய துடித்துக் கொண்டிருந்தவள் போல, நீலா நதி பெரும் ஆரவாரத்துடன் தன் வழி சென்றது. 93

நீர் வற்றியதால் மீன்களும் கடல் வாழ் ஜீவன்களும் இரவில் வானத்தில் தெரியும் தாரகைகள் போல மணலில் கிடந்தனவாம்.  மேகங்கள் இல்லாத வானம் போல என்று வர்ணிக்கிறார்.  நிதானமாக ஒவ்வொரு இடத்தையும் ஆராய்ந்து எங்கெல்லாம் உடைப்பு ஏற்பட்டதோ, வெள்ளம் பெருகியதோ, அந்த இடங்களில் செயற்கையாக ஓடைகள், கால்வாய்கள் ஏற்படுத்தினான்.    மூல நதியின் இருபக்கமும் இந்த கால்வாய்கள்,  பெண் கரு நாகம் படுத்து கிடப்பது போலவும் அதன் உடலில் பல இடங்களில் படம் இருந்தது போலவும்  தோற்றம் அளித்தது. .    

திரிகாமி – மூன்று கிளையாகச் செல்லும்- சிந்து நதி இடது பாகத்திலும்  வலது பாகம் விதஸ்தா  இரண்டுமாக ஓரிடத்தில் சேரும் இடம் வைன்யஸ்வாமின்.  இன்றளவும் ஸ்ரீ நகரத்தில் சேருவதும் கல்பங்கள் தாண்டியும் நிலைத்து இருக்கின்றன.  பரிகாசபுர, பல फ्लपुर புர நகரங்களில்  கரைகளில் ஒரு பக்கம் விஷ்ணுஸ்வாமி என்றும்  வைன்யஸ்வாமி என்றும் , இரண்டும் கூடும் சங்கம ஸ்தானத்தில்,  சுந்தரீ பவனம் என்ற இடத்தை அடையும் இடத்தில் ஹ்ருஷீகேச யோகசாயி – யோக நித்ரையில் இருக்கும்  பள்ளி கொண்ட பகவான்  ஹ்ருஷீகேசன் – என்றும் அமைந்துள்ளன.  கரையில் பழைய மரங்களில் சுய்யா வுக்கு உதவிய வேடுவர்கள்  தங்கள் படகுகளை  கட்டிய அடையாளம் தெரிகிறது.   (கல்ஹணர் காலம் பதினொன்றாம் நூற்றாண்டின் மத்தியில்.  அவந்தி வர்மன் காலம் ஒன்பதாவது நூற்றாண்டு)   

சுய்யா பல இடங்களில் நீர் வீழ்ச்சிகள், அருவிகளாக நதி நீர் வெளியேற வழி செய்தான். முதலில் சொன்ன பெண் நாகத்துக்கு பல நாக்குகள் நீண்டு விட்டது போல தோற்றம் அளித்ததாம்.  ஏழு யோஜனை தூரம் விதஸ்தாவின் இரு கரைகளிலும் கல்லால் ஆன கரைகளை கட்டுவித்த பின் மஹாபத்மா ஏரியிலிருந்து வெள்ளமாக வந்த அபாயம் அறவே நின்றது.   நீருக்கு போக்கு காட்டி அதற்கான வெளியேறும் வழிகளை புனரமைத்து கொடுத்து விட்டபின் விதஸ்தா நிம்மதியாக தன் போக்கில் வேகமாக கோதண்டத்தில் – வில்லில் இருந்து புறப்படும் அம்பு போல சீராக பாயலானாள்.

(நிஷாதர்கள் என்ற  வேடுவர்கள்  தற்கால காஸ்மீரத்தில் ஹன்சி என்றும் மன்சி என்று அழைக்கப்படுகின்றனர்.  அலாஹாபாத் வாடகை படகு ஓட்டுபவர்கள் தங்கள் குலத்தினர்களின் குழுவை  நிஷாத சங்கம் என அழைக்கின்றனர்.     சங்கம் என்ற சொல் புத்தர் காலத்திலேயே இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது – ஆங்கில உரையாசிரியர்)  104  233/398

வராக அவதாரத்தில் பகவான்  பிரளய ஜலத்திலிருந்து பூமியை தூக்கி நிறுத்தியது போலவே,   பல விதமான கிராமங்களை அதன் கரையில் அவந்தி வர்மன் கட்டுவித்தான்.  நாட்டு மக்கள்  பெருமளவு அங்கு குடியேறி கல கல வென்று என்று பேசியபடி உத்ஸாகமாக  நடமாடும் இடங்களாக அவை ஆயின.  தினசரி வாழ்க்கைக்கு தேவையான கடை வீதிகள், நீர் வசதிகள் நிறைந்த இடங்கள். நீர் தேக்கி வைக்கும் தொட்டிகள் வட்ட வடிவமாக அமைந்ததால், அவைகளை குண்டலீ என்ற அழைத்தனர்.  அன்னம் குறைவின்றி கிடைக்க வழி செய்தான்.  அதிலும் பல வகைகள்.  நிறைவு என்பது ஒவ்வொரு விஷயத்திலும் இருக்க மக்களே சர்வான்ன ஸம்ருத்தான் – அனைத்து உணவு வகைகளும் நிறைவாக உள்ளன என்று சொல்வர். 

நீர் குறைந்த நாட்களில்,  பழைய உத்யான வனங்கள் . இருந்த இடம், இது யானைகளை கட்டி வைத்த இடம் என்று உல்லாச பயணிகளுக்கு பல ஆண்டுகள் வரை காணக் கிடைத்தன.  டினார்கள் நிறைந்த பானைகளை நந்தக எனும் இடத்தில்  பெருகிக் கொண்டிருந்த வெள்ள நீரில் சுய்யா போட்டது,  நீர் வடிந்தவுடன் மற்றொரு இடத்தில் கிடைத்து விட்டன.    கிராமங்களை, தானிய வயல்கள் இருந்த  இடங்கள் இவைகளை சோதித்து, விவசாயிகள் மழை நீரை மட்டுமே நம்பி பயிர் செய்வதை தவிர்க்க, தேவையான இடங்களில் நதி நீரை மடை திருப்பி விளை நிலங்களுக்கு பாயும் படி செய்தனர்.

விவசாய விக்ஞானிகள் இருந்தனர். அறுவடை முடிந்த பின் மண்ணை பரிசோதிக்கவும், எந்த வித நிலத்தில் எதை பயிரிடுவது போன்ற விவரங்களையும் அவர்கள் விவசாயிகளுக்கு அறிவுறுத்தினர்.  நீர் அளவு, பாசன வசதிகள் அந்த பயிருக்கு தேவையான அளவு கிடைக்கச் செய்ய வாய்க்கால்கள், அமைத்தனர்.  நீண்ட காலம் இவை பயன் பாட்டில் இருக்கும் படி திடமாக இருந்தன.  பல கிளை நதிகள், ஓடைகள்  என்றும் அவைகளில் பெருகி  ஓடும் நீர்  வயல்களுக்கு பாயும்படியும் பல திசைகளிலும் ஏற்படுத்தினர்.  அதன் பலனாக பசுமை நிறைந்த செழிப்பான வளர்த்தியுடன் பாத்திகள் நிறைந்து காணப்பட்டன.  ‘வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும்., நெல் உயர குடி உயரும், குடி உயர கோல் உயரும், கோல் உயர் கோன் உயர்வான் ‘ ஔவையார்.

கஸ்யபர் அருளியது,  சங்கர்ஷணன்- பலராமன் செய்தது இவைகளை  விட அதிகமாக  இந்த சுய்யா விவசாய வளர்ச்சிக்கு  செய்து விட்டான். அதுவும் தானே திட்டமிட்டு, உடன் இருந்து மற்றவர்களையும் செய்வித்து நிரந்தரமான தீர்வாக செய்து விட்டான் என்று அனைவரும் போற்றினர்.

பூமியை பிரளய ஜலத்தில் இருந்து தூக்கி நிறுத்தியது,  அறிஞர்களான மக்களுக்கு அவைகளை கொடுத்த செயல், கற்களைக் கொண்டு சேது கட்டியது, யமுனையில் காளியனை அடக்கியது என்ற  நற்செயல்கள் செய்ய  பகவான் மகா விஷ்ணு பல பிறவிகள் எடுத்து செய்தார்.  எங்கள் சுய்யா இந்த    நான்கு  செயல்களையும் ஒரே பிறவியில் செய்து விட்டான் என்றனர்.

ஆயுர்வேத அளவுகளின் படி 196,608 கிலோ ஒரு காரி खारि –  இது ஒரு மூட்டை தானியம். இது இருனூறு டினார்கள் என்பதாக  காஸ்மீர தேசத்தில் பல காலமாக இருந்த விலை. தற்சமயம் அவந்தி வர்மன் காலத்தில் முப்பத்தாறு டினார்களுக்கு கிடைக்கலாயிற்று.  மஹா பத்ம நீர் சீரமைக்கப் பட்ட பின், அந்த இடமே சுவர்கம் போல ஆயிற்றாம். விதஸ்தாவின் கரையில் தன் பெயரில் ஒரு பெரிய பட்டினத்தைக் கட்டினான்   அந்த இடத்தில்  மீன் முதலிய நீர் வாழ் உயிரினங்களையும் பிடிப்பதோ, பறவைகளைக் கொல்வதோ உலகம் உள்ளவரை கூடாது என்று சட்டம் இயற்றினான்.  சுய்யாவின் பெயரில் குண்டலா என்று அழைக்கப்பட்ட நீர் தொட்டிகளை அந்தணர்களுக்கு அளித்தான்.  தான் நிர்மாணித்த ஒரு பாலத்துக்கு சுய்யாவின் பெயரை வைத்து கௌரவித்தான். 

வெள்ளம் வராமல் தடுக்க வழிகள் செய்த பின் சம நிலத்தில் ஜயஸ்தலா போன்ற பல கிராமங்கள் வந்தன.  ஆயிரக் கணக்கான கிராமங்கள் அவந்தி வர்மன் மற்றும் அடுத்து வந்த அரசர்கள் கட்டினர். இது போன்ற பொதுவான தர்மங்களை நிலை நாட்டியவனாக. அவந்தி தேவன் முதல் மனுவின் மகன் மாந்தாதா (முதல் அரசன்) என்பவன் போலவே பூமியை பாலித்தான்    என்று கொண்டாடினர்.

தான் தன் முடிவை நெருங்கி விட்டோம் என்று உள்ளுணர்வால் அறிந்தவன், உண்மையான  வைஷ்ணவன் ஆக  பகவத் கீதையை பாராயணம் செய்தும், தியாங்கள் செய்தும் நல்ல கதியை அடைந்தான்.  59ம் ஆண்டு, ஆஷாட மாதம், மூன்றாவது சுக்ல பக்ஷம், பூலோக இந்திரனாக மதிக்கப் பட்டு வாழ்ந்தவன் வாழ் நாளும்  முடிந்தது.  

 உட்பலனுடைய பல சந்ததியினர் பட்த்துக்கு வர ஆசைப்பட்டனர்.   செல்வ செழிப்பிலேயே வளர்ந்தவர்கள்.  ரத்னவர்தனா என்ற முதன் மந்திரி அவர்களுக்குள் சங்கரவர்மன் என்ற அவந்தி வர்மனின் மகனை தேர்ந்தெடுத்தான்.  விண்ணப்பன் என்ற ஆலோசகரும்  வெறும் போட்டிக்காக ஸூரவர்மனின் மகன் சுகவர்மன் என்பவனை யுவ ராஜாவாக ஆக்கினான்.  அதனால் அரசனுக்கும் யுவராஜாவுக்கும் இடையில் எப்பொழுதும் போட்டி.  அரசாட்சி ஊஞ்சல் ஆடுவது போல ஆயிற்றாம்.   சிவசக்தி போன்ற சில தைரியசாலிகள் தங்கள் பங்கு வீரத்தை காட்டத் துணிந்தனர். அந்த நாட்களில் சேனைத் தலைவர்கள் போன்ற பதவிகளில் இருந்தவர்களுக்கு அரச விஸ்வாசம் அதிகமாக இருந்தது. அரசன் போனாலும் அரசு நீடிக்க வேண்டும் என்பது தான் அவர்கள் கொள்கை. சில்லறை லாபங்களுக்காக தங்கள் கடமையில் இருந்து தவற மாட்டார்கள்.  அதனால் ஆசை காட்டி தன் பக்கம் இழுக்க அரசு போட்டியில் இருந்த இருவராலும் முடியவில்லை.   மிகுந்த பிரயாசையுடன் சங்கர வர்மன், யுவராஜாவின்  அனாவசிய தலையீடுகளை தவிர்த்து தானே திடமாக ஆட்சியை பரிபாலிக்கத் துவங்கினான்.
சமரவர்மா என்ற சேனாபதியின் உதவியுடன் அடிக்கடி போர் செய்து,  ஆட்சியை விஸ்தரித்தும், தன் புகழையும் நிலை நாட்டிக் கொண்டான். 236,  178/398

பங்காளிகளை தன் வசப் படுத்திக் கொண்டு ஆட்சியைப் பெற்ற அந்த அரசன் சங்கர வர்மா மிக பெரிய திக்விஜயம் செய்ய விரிவான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தான்.  அதற்குள், தேசத்தில் ஜனத் தொகையும் குறைந்து விட்டது, செல்வ செழிப்பும் முன் போல இல்லை. அதனால் அவன் கிளம்பும் சமயம் உடன் வந்த படை வீரர்களின் எண்ணிக்கை ஒன்பது லக்ஷமாக இருந்தது.  ராஜ்யத்துக்குளேயே அவன் செல்வாக்கு குறைந்து விட்டிருந்தது.  அப்படி இருக்க வெளி தேசங்களுக்கு சென்று அரச மகுடங்களை வெல்ல நினத்ததே அறிவின்மை தான்.  138   178/398  

இருந்தும் தார்வாபிசார  என்ற நாட்டின் அரசன் பயந்து மலை காடுகளில் ஒளிந்து கொண்டு விட்டான். அட்டகாசமாக போர் வாத்யங்கள் மட்டுமே பலமாக ஒலிக்க  அவர்கள் படை முன்னேறியது. குர்ஜரா என்ற இடத்தை நோக்கி அந்த படை நகர்ந்தது.  த்ரிகர்தா என்ற ராஜ்யத்தில் ப்ருதிவீ சந்திரன் என்ற அரசன்  எதனாலோ தோல்வி நிச்சயம் என்று நினைத்தவன் தன் மகன் புவனசந்திரன் என்பவனை சமாதானம் செய்ய அனுப்பினான்.  பெரும் படை என்பதே அவனை போரை தவிர்க்கச் செய்ய போதுமாக இருந்தது. அவனால் ஆனது கண் காணாமல் மறைவதே.  சங்கரவர்மன் அந்த மகனை தான் வெற்றி பெற்றதன் அடையாளமாக உடன் அழைத்துச் சென்றான்.

குர்ஜரர்கள் தேசம் சென்றடைந்தனர்.  த்ரிகர்த அரசன் ஓடியதை அறிந்த குர்ஜர அரசனும் தானாகவே சரணடைந்தான். டக்கா என்ற தேசத்தை பரிசாக அளித்து விட்டு விலகினான்.  பேராபத்து, உயிர் தப்பினால் போதும் என்ற நிலையில் சுண்டு விரலை இழந்து தப்பியவன் என்ன நினைப்பான். அது போல என்று வர்ணிக்கிறார்.   

அந்த சமயம் ஆர்யாவர்த்தம் – ஹிமாலயத்துக்கும் விந்த்ய மலைக்கும் இடைப்பட்ட பிரதேசம் -ஒரு முனையில் Darads மறுமுனையில்   Turka  என்ற அன்னிய நாட்டு படையெடுப்பாளர்கள், இரண்டு சேனைத் தலைவர்களுக்கிடையில்   ஒரு புறம் சிங்கம், மறு முனையில் கரடி என்று சொல்வது போல மாட்டிக் கொண்டு பரிதவித்தது. .உதபாண்ட புரம்  என்ற இடத்தில், இந்திரன் தங்கள் சிறகுகளை வெட்டியவுடன் பயந்து சமுத்திரத்தில் அடைக்கலம் புகுந்த மலைகள் போல (மலைகள் இறக்கைகளுடன் இருந்தனவாம்.  அதனால் பறந்து கண்ட இடத்தில் இறங்கி நாசம் செய்த மலைகளின் இறக்கைகளை இந்திரன் வ்ஜ்ராயுதத்தால் வெட்டி விட்டான்.  அவை கடலில் தஞ்சம் அடைந்ததாக புராணம்)  அந்த இடம் சென்று பல சிற்றரசர்கள் பயமின்றி வாழ்ந்தனர்.  ஸூரியோதயம் ஆனவுடன் இரவில் வானத்தில் பிரகாசித்த தாரகைகள் மறைவது போல, அது வரை பெயரும் புகழும் பெற்ற அரசர்களே தங்கள் செல்வாக்கை இழந்தவர்கள் போல ஆனார்கள்.  ஆலக்கானா -Alakhana அலகானா என்ற இடத்தில் இருந்த  லல்லியாசாஹி தனக்கு எதிர் நின்று போர் புரிவதை தவிர்த்த காரணத்தலேயே அந்த ராஜ்யத்தை தன் வசம் ஆக்கிக் கொண்டான் சங்கரவர்மன்.

(ஹுன என்ற வெளி தேச படையெடுப்பு பற்றியும் ராஜபுதம் – ராஜஸ்தானம்- என்ற  இந்தியாவின் வட மேற்கு பிரதேசத்தை ஆக்ரமித்து இருந்தனர். ஆபூ மலைக்கு ஐம்பது மைல் தூரத்தில் இவர்கள் குர்ஜரர்கள் என்று அழைக்கப்பட்டனர்.   பில்மால், ஸ்ரீமால் என்ற இடங்களில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தி வந்தனர். நாளடைவில் குர்ஜரப்ரதிஹாரா – குர்ஜர படைத்தலைவர்கள்- கன்னோஜ் – என்ற புகழ்  வாய்த்த ராஜ்யத்தை கைப்பற்றி பலமான சக்ரவர்த்திகளாக அறிவித்துக் கொண்டனர். வட இந்தியாவில் அவர்கள் அதிக பலம் பெற்றவர்களாக எதிர்க்க முடியாதவர்களாக ஆனார்கள். –Early history of India-V.A.Smith )  

அத்துடன் தன் திக்விஜயத்தை முடித்துக் கொண்டு காஸ்மீரம் திரும்பினான் சங்கர வர்மன்.  பஞ்ச சத்ரம் என்ற இடத்தில் தன் பெயரில் ஒரு நகரை நிர்மாணித்துக் கொண்டான்.   ஸ்ரீஸ்வாமி என்பவருடைய மகள், பூரண நிலவு போல அழகான சுகந்தா என்ற பெண்ணை மணந்து கொண்டான். அவளுடன்   தேவலோக ராஜா போல வாழ்ந்தான். சங்கர கௌரீசம் என்ற பெயரில் கோவிலைக் கட்டினான்.

வாக்தேவி – கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவிக்கு சிறப்பாக  ஆலயம்  கட்டினான்.  நாயக என்ற நான்கு வேதங்களையும் கற்ற பண்டிதர் ஒருவர்  இந்த இரண்டு ஆலயங்களுக்கும் பொறுப்பாக நியமிக்கப் பட்டார். மற்றவர்கள் படைத்த காவியங்களால் கவியானவர்கள் உண்டு.  பிறர் செல்வத்தால் தான் தலைவனாக அரசனாக ஆனவர்களும் உண்டு.  திறமை என்று  சொல்லும்படியாக எதுவுமே இல்லாமலே வெற்றி வாகை ஸூடி வந்த சங்கரவர்மாவை இப்படி வர்ணிக்கிறார். ,

பரிகாச புரத்தில் நுழைந்தவன், அல்பம் போல கண்ணில் பட்ட விலை உயர்ந்த பொருட்களை  அள்ளிக் கொண்டு சென்றான்.  வளமாக ஆக்கப் பட்ட பிரதேசம்.  அங்கு  நூல் வியாபாரிகள், துணி நெய்தல், பசுக்களின் சந்தை, அதன் வியாபாரம், கொடுக்கல் வாங்கல்,  என்று என்னென்ன தொழில்கள் மக்களின் வாழ்வாதாரமாக முந்தைய அரசன் ஏற்பத்தி இருந்தானோ, அதன் பலனை வினாடி நேரத்தில் கவர்ந்து சென்றான்.

அவனை அரசனாக தேர்ந்தெடுத்த மந்திரி ரத்னவர்மா  ஸ்ரீ ரத்னவர்தனேசன் என்ற பெயரில் சதா சிவன் கோவிலை நிறுவி, நிரந்த வர்மானமும், வழி பாடுகளும் நடக்க ஏற்பாடுகள் செய்து வைத்தான்.

விந்தையான மனிதர்கள். ஆரம்பத்தில் பெயரும் புகழும், பதவியும் வேண்டி நற்காரியங்களை செய்தவர்களே பின்னால் யானை குளித்து விட்டு வந்து தானே மண்ணை அள்ளி தலையில் போட்டுக் கொள்வது போல சில பொருந்தாத விஷயங்களை செய்கிறார்கள். இந்த அரசனும் விதி விலக்கல்ல.  அதீதமான போகங்கள், சிற்றின்பங்கள் என்று நேரத்தை செலவழித்தான்.  விளைவு அரண்மனை பொக்கிஷம்  குறைந்தது.  பற்றாக் குறையை ஈடு செய்ய அரச செல்வத்தை கொள்ளையடித்தான்.     கோவில்களின் சொத்தை ஸூறையாடினான்.  தன்னை வெளிக் காட்டிக் கொள்ளாமல் சிலரை அடியாட்களாக நியமித்துக் கொண்டான்.  அட்டபடிபாகம், க்ருஹக்ரித்ய (( கஞ்சாதிபன்- பொக்கிஷ அதிகாரி, க்ருஹ க்ருத்யா- வரி விதிப்பவன், வசூலிப்பவன் ) என்ற துறைகள் புதிதாக ஏற்படுத்தினான்.  இவைகள் மூலம் ஊருக்குள், வீடுகளில், கிராமங்களில் என்று இதன் அதிகாரிகள் கெடுபிடி செய்து நிதியை வசூலித்தனர்.   கோவில்களில்  தினசரி உபயோகத்துக்கான தூப தீபங்களுகளுக்கு எண்ணெய், மற்றும் எந்த பொருட்கள் விலை போகுமோ அவைகளை கோவில் கணக்கில் எழுதி எடுத்துச் சென்று வெளியில் விற்றனர்.  

சோதனை என்ற பெயரில் அதிகாரிகள் உள்ளே வந்து பார்த்துக் கொண்டு எது எதைத் திருடலாம் என்பதே குறியாக கவனித்துக் கொண்டு செல்வர்.  பின்னால் திருட்டுப் போகும் அல்லது அவர்களே ஏதோ காரணம் சொல்லி பலவந்தமாக எடுத்துச் செல்வர்.  இது போல அறுபத்து நாலு தேவ க்ருஹங்கள்- ஆலயங்கள், தெரிந்து,  மேலும் எத்தனையோ,  கோவில் சொத்து அவர்கள் கைக்குச் சென்றது.  முன்னோர்கள் கோவிலுக்கு என்று எழுதி வைத்த விளை நிலங்கள்,  கிராமங்கள் இவைகளின் நிர்வாகமும், சீரமைப்பும், விளையும் பொருட்களுக்கும் தானே பொறுப்பு என்று  அறிவித்தான்.  ( இது மத்திய கால வரலாறுகளில், மேற்கத்திய நாடுகளிலும் இருந்த தீய பழக்கமே. தேவ க்ருஹம் என்ற மரியாதை மறைய, அதன் செல்வத்தை   சுரண்டலும்,  அதன் அசையா சொத்துக்களை தனதாக ஆக்கிக் கொள்வதும் மேலைய நாட்டு வரலாறுகளிலும் காணலாம் என்று  அறிகிறோம். ஆதாரம் ரஞ்சித் சீதாராம பண்டிட்டின் ஆங்கில மொழிபெயர்ப்பு )

பலவிதமான ஏமாற்று வேலைகள்.  தராசின் கற்களை எடையை குறைத்தோ, அதிகமாகவோ ஆக்கி நுகர்பவர்களிடம் பொய்யாக பரிமாற்றம் செய்வது.  எடையைக் குறைத்து தன் அதிகாரிகளுக்கு அளவுக்கு அதிகமாக grant – உதவித் தொகை தருவது,  அவர்கள் பராமரிப்பு வேலைகளைச் செய்ய என்ற போர்வையில்.   கம்பள ஆடைகளுக்கு ஆடம்பரமாக பொருளுதவி செய்தல். கிராமங்களுக்கு சுற்றுலா செல்லும் சமயம் இவன் பொருட்களை ஊதியமின்றி தூக்கிச் செல்ல வராதவர்களுக்கு அந்த பொருளின் எடையளவு வரி விதித்தல், அந்த பகுதியில் அதன் விலை என்னவோ அதை ஒரு ஆண்டு தர வேண்டும் என்ற தண்டனை விதித்தான்.  இப்படி ஒவ்வொரு கிராமத்தையும் ஏழ்மையின் பிடியில் தள்ளினான்.  பதின் மூன்று விதமான தரித்திரங்கள் கிராமங்களை அழித்தன என்று சொல்கிறார்.

க்ருஹ க்ருத்ய என்ற துறையில் இப்படி கிராம அதிகாரிகளையும் மக்களையும் வருத்தி எடுத்து அந்த நிதியை நிரப்பினான்.  ஐந்து கீழ் நிலை அதிகாரிகள், ஒரு மேலாளர் என்று ஏற்பாடு.  லாவடன் Lavata  என்பவன் மேலாளராக ஆனான்.  மூடன், இந்த தொழிலே அவனுக்கு நரகத்தை அளிக்கும் என்று தெரிந்தும் ஏற்றுக் கொண்டது பின்னால் வந்த அரசர்களுக்கு ஒரு பாடமாக அமைந்தது.  அந்த மண்டலத்திலிருந்து கற்றவர்களூம், கலைஞர்களும், திறமையான கை வேலை மற்றும்  சிறு தொழில்கள் செய்வோரும் அரச உதவி இல்லாததால், தேசத்தை விட்டு வேறு இடங்களுக்குச் சென்று விட்டனர்.  இப்படி,  குணம் நிறைந்த பெரியவர்களும், வெளியேறியதோடு அரசனின் பிரதாபம்- நற்பெயரும் அழிந்தது.   அப்படி இருக்க சென்று கொண்டே இருக்கும் இயல்புடையளான செல்வம் ஏன் தங்கும்?  அரசும் கணக்கர்களும், குலமிலிகளுமாக  நிறைந்து பூதேவி கண் முன் அழிவைக் கண்டாள்.  தன் பிரஜைகளை வாட்டி எடுத்து அழிவை நோக்கி வேகமாக சென்று கொண்டிருந்த  சமயம். அவன் மகன் கோபாலவர்மா தந்தையிடம் சொன்னான்’ . தந்தையே! நமது முன்னோர்கள் இதை பதுகாப்பாக- அடைக்கல பொருளாக  உங்களிடம் ஒப்படைத்தார்கள்.  சத்ய சந்தர்களாக இருந்தவர்களின் உழைப்பின் பலன். உங்களை வேண்டிக் கொள்கிறேன். ( Ganjaadhipan கஞ்சாதிபன்- பொக்கிஷ அதிகாரி, க்ருஹ க்ருத்யா- வரி விதிப்பவன், வசூலிப்பவன் ) என்ற இந்த அதிகாரிகள் நாட்டு மக்களின் உயிர் மட்டுமே மீதமாக, அவன் உடமைகள் அனைத்தையும் எடுத்துச் செல்கிறார்கள். இதனால் உங்களுக்கும் எந்த நன்மையும் இல்லை. உங்கள் பெயரையே மறக்கச் செய்து விட்டார்கள்.  இப்படி பிரஜைகளை வருத்திய அரசனுக்கு பரலோகம் எப்படி வாய்க்கும்.  உங்களுடைய இந்த நடவடிக்கையால் கண் எதிரே துக்கமும், அழிவுமே எனும் பொழுது கண்ணுக்குத் தெரியாத பரலோகம் உங்களுக்கு நன்மையா செய்யும்.  ஒரு பக்கம் ஏழ்மையும், பட்டினியால் வருத்தமும், வியாதியும் என்று பெரும்பாலோரை இருக்கச் செய்து உங்கள் அதிகாரிகள் அனைத்தையும் தாங்கள் அனுபவிக்கிறார்கள்.   பேராசை கொண்ட அரசனை எந்த நாளிலும் மக்கள் ஏற்றுக் கொண்டதில்லை. அகாலத்தில் பூத்த பூ வாடி விழுவது போல விழுவர். 188  242/398

தந்தையே!  நீங்கள் அறியாததா?   மென்மையாக பொறுப்பாக பேசி, தேவையானவர்களுக்கு வேண்டியதை கொடுத்தும்,  என்றும் நினைவில் இருக்கச் சொல்லும் சொல்லே அரச சபையில் மதிப்பைக் கொடுக்கும்.  லோபம் – தன்னுடையது என்று தானே அனுபவிப்பது -என்ற குணம் அனைத்தையும் அழிக்கும்.  கொடுக்கும் எண்ணமே வர விடாமல் தடுக்கும்.  ஆற்றல், வருமானம்,  உடல் நலம், இவையனைத்தும் பனிக் காலத்து மேகம் போல  பயனின்றி போகும்.   இன்று உள்ள மதிப்பும், மரியாதையும் விலகி, என்றோ ஒரு அரசன் இன்ன பெயரில் இருந்தான்  என்ற அளவே வருங்காலத்தில் நினைவில் கொள்ளப் படுவான்.  லோபம்  தேவைக்கு கூட செலவழிக்க விடாது.

 பங்காளிகள் துணிச்சல் பெறுவார்கள். பணியாளர்கள் அது வரை பெற்ற நன்மைகளை மறந்தவர்களாக அலட்சியம் செய்வர்.  யாருமே பிரியமாக பேசவோ, நடந்து கொள்ளவோ பயப்படுவர்.  சேமித்து வைத்த செல்வம் – அரசனுக்கு அதுவே, எதிரியாகும்.  சேமித்து வைத்திருக்கிறான் என்பதை அறிந்த வெளி ஆட்கள், அந்த  செல்வத்தை அபகரிக்கவே திட்டம் தீட்டுவார்கள்.  கொல்லவும் தயங்க மாட்டார்கள்.  இந்த லோபம் என்ற குணம் எந்த விதத்திலும், எவருக்கும் உதவாது.

 வரி  வசூலிக்கும் சமயம் உங்கள் பெயரை பயன்படுத்திக் கொள்ளும் இந்த அதிகாரிகள், அளவு கடந்த வரி வசூலிப்பதால்  மக்கள் துன்புறுகிறார்கள் என்பதை உங்களிடம் மறைக்கிறார்கள்.  இதை உடனே நிறுத்துங்கள்.

தன் மகனே ஆசிரியன் போல விவரமாக சொல்லியதைக் கேட்ட அரசன் சங்கர வர்மா ஸ்தம்பித்தான். வியப்பால் விரிந்த உதடுகளை துடைத்துக் கோண்டு மெள்ள பேசினான். ‘மகனே! நன்று சொன்னாய். நானும் உன் வயதில் இப்படித்தான் இருந்தேன்.  மனதில் ஈரமும், துடிப்பும், பிரஜைகளிடம் அன்பும், சாதிக்கும் வேகமும் உள்ளவனாக – என் தந்தை  கோடையில் அதிக தாபம். பனிக்காலத்தில் ஒற்றை ஆடையும், காலில் கானணியும் அணியாமல் நடக்கச் செய்வார். அது ஒரு பயிற்சி.  காடுகளில் வேட்டையாடும் சாக்கில் முள் நிறைந்த காடுகளில் அலைந்திருக்கிறேன்.  உடல் தகித்தாலும், வியர்வையில் நனைந்தாலும், சண்டி செய்யும் குதிரைகளை சமாதானப் படுத்தி நடத்திக் கொண்டு  நான் பரிதவிப்பதை என் உடன் வந்தவர்கள் என் தந்தையிடம் சொன்னார்கள்.  அவர் என்ன சொன்னார் தெரியுமா?

அவர்களிடம் என்ன சொன்னார் தெரியுமா?  ‘சாமான்யனாக இருந்து நான் ராஜ பதவியை அடைந்தவன். ஒவ்வொரு நிலையிலும் சேவகர்கள் படும் பாட்டை நான் அறிவேன்.  தானே அனுபவித்தால் தான் உடல் வலி என்றால் என்ன என்று தெரியும்.   பிறவியிலேயே ராஜ பதவியை அடைபவர்கள் இதை எப்படி அறிவார்கள்.  இதுவும் ஒரு பாடம். ‘ என்றார். 

அதனால் உன்னை திருத்திக் கொள்ள உதவும் என்பதால் இந்த உபாயம் செய்தேன்.  அது போலத் தான் பிரஜைகளும். நானும் கர்ப வாசம்- தாயின் கருவில் இருந்தேன் என்று எந்த மனிதனாவது நினைப்பானா? . திடுமென எனக்கு அந்த நாட்கள் நினைவு வந்தது. எனக்கு ஒரு வரம் கொடு, அரச பதவியை அடைந்த பின் ஒரு போதும் பிரஜைகள் வருந்தும்படி செய்யாதே’  என்றார்.

ஆனால்  அரச குமாரன் முகம் சிவந்தது. அரசனின் மெய்க் காப்பாளர்கள் தங்களுக்குள் சிரித்துக் கொண்டதாக நினைத்தான்.  ராஜ குலத்தில் பிறந்தது என் தவறா?   பலவிதமான உணர்வுகள் அவனை அலைக் கழித்தன.  தானே தன்னை  புடம் போடுவது போல  சோதித்துக்  கொண்டான்.  இது வரை நாட்டு மக்களுக்காக என்ன  செய்திருக்கிறேன்.  நினைவறிந்த நாளில் இருந்து அரச குமாரனாக வாழ்ந்து வந்திருக்கிறேன்.  அவன் முகம் வெட்கத்தால் தாழ்ந்தது. அறிஞர்கள், கவிகள் எப்படி வாழ்கிறார்கள்? Bhallata – பல்லாடா என்ற கவி அந்த நாளில் இருந்தவர்.  அவர் எப்படி வாழ்கிறார் என்று கூட நான் தெரிந்து கொள்ள முற்படவில்லை.  அதே போல சிறந்த கவிகள். பாரிகோ, லவடன் என்பவர்கள்.  அவர்களுக்கு அரசு என்ன ஊதியமா கொடுத்தது?  அவர்களுக்கு இரண்டாயிரம் டினார்கள் கொடுத்ததை பெரிதாக நினைத்தேனே.  என் பிறவி ஒரு  மது வியாபரியின் மகள் மூலம் என்பதை மறந்தேன்.  அதனால்  அவர்களைப் போல பொருள் பொதிந்த சொல் எனக்கு வரவில்லை.  என் பேச்சும் அது போல பெருந்தன்மையாக அமையவில்லை போலும்.

 மந்திரி சுகராஜர் எப்படி இருந்தார் ? தியானத்தில் அமர்ந்து இருந்தவரை நினைத்தான்.  முக்கின் நுனியில் கண் பார்வை இருக்க, மூச்சை அடக்கி சாதனைகள் செய்வார்.  அது தான் அறிவுள்ளவர்களின் வழி. அவரை இந்த அரசனின் வினயமில்லாத  ஆட்கள்  வேஷதாரி, நடிக்கிறார் என்று அவதூறாக பேசினர்.

குற்றமற்ற தார்வாபிசாரன் என்ற அரசனை சந்தேகித்தனர்.  ஏதோ மறை முகமாக ஸூழ்ச்சி செய்கிறான் என்று சொல்லி கொன்றனர்.  அவன் உடன் இருந்தவர்களையும், பல்லக்கில் சென்று கொண்டிருக்கும் சமயம் இரவோடு இரவாக அழித்தனர்.

பிரஜைகளின் சாபம் தவறான வழியில் கர்வத்துடன் செல்லும் அரசனை கண்டிப்பாக பாதிக்கும். அவன் வம்சமே அழிந்தது.  மகன் கள் (முன்னூற்று இருபது) அனைவரும் அழிந்தனர்.  ராஜ்யஸ்ரீ அவனை விட்டகன்றாள்.  அவன் முடிவும் தனியனாக, மனைவி மக்கள் யாரும் இன்றி முடிந்தது.   தன் பிரஜைகளை சரியாக பரிபாலிக்காமல் விட்டால்  காரணமின்றியே க்ஷண நேரத்தில் அந்த அரசு  விழும். இது உண்மையே. யோசியுங்கள்.  இத்தகைய கொடூரமான செயல்களால் அவன் பெயரும்   தன் பெயரில் பட்டனம் என்று ஆங்காங்கு கட்டிய நகரங்களும்  மறைந்தன.. சங்கர வர்மனுக்கு நேர்ந்த து போல எந்த அரசனுக்கும் நேர்ந்ததில்லை என்பர்.

சுகராஜனுக்கு தன் சகோதரியிடம் பிறந்த மகன்,   அவனை  எல்லை ராஜ்ய பொறுப்பில் அமர்த்தியிருந்தான்.    வீரானகா என்ற இடத்தில் தவறுதலாக அவன் வதைக்கப்பட்டான்.  யாரால், என்ன காரணம் என்றும் தெரியவில்லை. அந்த கோபத்தில் வீரானகா தேசத்தையே தரை மட்டமாக்கினான். அதை முடித்துக் கொண்டு வட தேசம் சென்றான்.  சிந்து நதியின் தீரத்தில் இருந்த தேசங்களின் சிற்றரசர்கள் இதைக் கேள்விப் பட்டு அவன் வந்த பொழுது எதிர்த்து நிற்கவே பயந்தவர்களாக கப்பம் கட்டி அடி பணிந்தனர்.  வெற்றி கொண்டதாக பெருமையுடன் திரும்பி வௌம் வழியில்,   Urasa- என்ற இடத்தில் அவனது படை வீரர்களுக்கும் ஊர் மக்களுக்கும் இடையே தகராறு எழுந்தது.   அதை விசாரித்துக் கொண்டிருந்தவன் கழுத்தில் எங்கிருந்தோ வந்த ஒரு அம்பு தைத்தது.  மலை மேலிருந்து அங்கு பதவியில் இருந்த ஸ்தாபகா- பாதுகாப்பு அதிகாரி யின் அம்பு அது.  உடனே தன் சேனைத் தலைவனிடம் அனைவரையும் நலமாக தங்கள் ஊரில் கோண்டு சேர்க்கச் சொல்லி விட்டு தான் பல்லக்கில் கிளம்பினான். கண் பார்வை மங்கிய நிலையில் உடன் வந்திருந்த ஸுகந்தியை குரலால் அடையாளம் கண்டு கொண்டவனாக கோபால வர்மனை காப்பாற்று.   அரசனாக்கு. அவனுக்கு நண்பர்களும் இல்லை.  சுகராஜன் முதலானோர்  அம்பை விடுவிக்க  முயன்றது பலனளிக்கவில்லை. அதே காரணமாக  77 வது ஆண்டு பால்குண- பங்குனி மாதம், க்ருஷ்ண பட்சத்து சப்தமி அன்று  உயிர் துறந்தான். 902 A.C

சுகராஜன் தலைமையில் அரசன் உயிர் பிரிந்ததைச் சொல்லாமல் வழியில் பலத்த பாதுகாப்புடன் சென்றனர். ஆங்காங்கு உபசரிக்க வந்த ஊர் தலைவர்கள் வணங்கிய பொழுது, பதில் வணக்கம் செய்வது போல  கயிறுகளால் கட்டிய யந்திரம் மூலம் தலை அசைத்தும், கை தூக்கி ஆசி அளிப்பது போலவும் செய்து சமாளித்தனர்.  ஆறு நாட்கள் பிரயாணம் செய்து தங்கள் நாட்டின் எல்லையை அடைந்தவுடன் அந்திம கிரியைகளைச் செய்தனர்.  சுரேந்திரவதி என்ற ஒரு ராணி, இன்னும் சிலர் அரசனுடன் வந்தவர்களான ஜயசிம்ஹா என்ற மெய்க் காப்பாளன், சேவகர்கள் என்று மொத்தம் ஆறு நபர்களுக்கும்  அதே போல அந்திம சடங்குகளைச் செய்தனர்.  பணியாளர்களீல் இருவர் லாடா வஜ்ரசாரா  என்பவனும் .அரசன் அடி பட்ட  இடத்தில் இருந்தவர்களும்  காயம் அடைந்து இருந்தனர். வழி நடையில் அவர்களும் உயிரை விட்டனர்.  எனவே அவர்களுக்கும் நல்கதியடைய அந்திம         சடங்குகளைச் செய்தனர்.    

அதன் பின் கோபால வர்மா பதவி ஏற்றான். தாயார் சுகந்தாவின் பராமரிப்பில் நற்குணங்களுடன் வளர்ந்தவன், துடிப்பன இளஞன்,  நல்லாட்சியை அளித்தான்.  அவன் அரண்மனையில் நல்ல சகவாசம் அமையவில்லை. இருந்தாலும் சுயமாகவே சிந்தித்து தன் வரை ஒழுக்கமாகவே வளர்ந்து விட்டான்.

சங்கர வர்மாவின் தாயார், உறவு முறையில் இவனுடைய பாட்டி,   இள வயதினள். அவள் மந்திரியான ப்ரபாகரனை விரும்பினாள்.  அவள் தலையீட்டால் ப்ரபாகரன் நல்ல பதவிகளை அடைந்தான். செல்வாக்கோடு அரண்மனையில் வளைய வந்தான். அவளுடன் இருந்த தொடர்பை பயன்படுத்திக் கொண்டு பொக்கிஷ அதிகாரியாக ஆனவன்  பொக்கிஷத்திலிருந்து வேண்டிய மட்டும் அபகரித்துக் கொண்டான்.  அதைக் கொண்டு தனக்கு உதபாண்ட புரம் என்ற இடத்தை ஆக்ரமித்து தன் வசப் படுத்திக் கொண்டான். ஸாஹீ என்ற அரச குடும்பம் அதை தன் அதிகாரத்தால் லால்லியா Lalliya – மகன் டோமாரன் என்பனுக்கு, அவன் பெயரை காமலுகா என மாற்றி அரசு பதவியில் அமர்த்தி விட்டான். 

அதன் பின் ஸ்ரீ நகரம் வந்தான்.  தன் உடல் வலிமையில் கர்வம் கொண்டவனாக, தனக்கு நிகர் யாரும் இல்லை என்ற எண்ணத்துடன் ஊருக்குள் அதிகாரம் செலுத்தியபடி சுற்றினான்.  அரண்மனையில் நுழையக் கூட அனுமதி இல்லாது இருந்த தாழ்ந்த மக்கள், குணமோ, ஒழுக்கமோ  இல்லாதவர்கள் தயக்கமின்றி உள்ளே வந்தனர்.  இதற்குள் சற்று  வயதும், அறிவும் முதிர்ந்த  வாலிபனான கோபாலவர்மனுக்கு காண பொறுக்கவில்லை.  அவனிடம் வந்து  சாஹியுடன் செய்த போரில் பொக்கிஷம் தீர்ந்து விட்டது என்று வந்து சொன்ன பிரபாகரனை, கணக்கு வழக்குகளை   காட்டச் சொன்னான். இதை எதிர் பார்க்காத பிரபாகரன் தன்னை காத்துக் கொள்ள ராம தேவா என்ற  மந்திர வாதியை விட்டு கோபால வர்மாவை  தீயில் விழச் செய்து தீர்த்து  கட்டி விட்டான். இந்த சூழ்ச்சி வெளீயானதும் ராம தேவன் தண்டிக்கப் பட்டான்.  அதே போல தான் வைத்த  தீக்கு இரையானான்.   

மிகுந்த நம்பிக்கையுடன் நல்லாட்சி அளிக்க வந்த  கோபால வர்மன் இரண்டு ஆண்டுகளே நீடித்தான்.  சம்கடா என்ற அவன் இளையவன் பட்டத்துக்கு வந்தான். அவனையும் பத்தே நாட்களில் ஒழித்து விட்டனர்.  இந்த நிலையில் சுகந்தா என்ற பட்டத்து ராணி தானே அரசு பொறுப்பை ஏற்றாள்.

கோபால புரா என்ற நகரத்தை, கோபால பல்கலைக் கழகம், கோபல கேசவ  என்ற இடம், தவிர தன் பெயரில் ஒரு ஊர் – அங்கு தன் இயல்பான மதம், அதன்  தர்மத்தை பரவச் செய்ய பல செயல்களைச் செய்தாள். கோபால வர்மாவின்  ராணி, நந்தா என்ற பிரசித்தமான ராஜ குடும்பத்தைச் சேர்ந்தவள்.  அதனால் நந்தா என்ற பெயரில் பாடசாலைகளும்,  நந்த கேசவா என்ற கோவிலையும் ஏற்படுத்தினாள். 245

கோபால வர்மனின் மற்றொரு மனைவி ஜயலக்ஷ்மி என்பவள், கருவுற்ரிருந்தாள். அவளுக்கு பிறக்கப் போகும் குழந்தையை ஆவலுடன் அனைவரும் எதிர்பார்த்திருந்தனர்.  அதுவும் குறைப் பிரசவமாகவும், மிகவும் வருந்தினர்.   தாந்த்ரீகர்கள்  – தந்திர வித்தைகளை அறிந்தவர்கள். (பெரும்பாலும் தவறான செயல்களையே செய்பவராக இருந்தனர்)  எனவே சுகந்தா அடுட்த இரண்டு ஆண்டுகளும் பொறுப்பை ஏற்று ராணியாக இருந்தாள்.   ஒரு சமயம் மந்திரிகள், ஆலோசகர்கள் அனைவரும் ஒன்று கூடி ஒரு வரும் காலத்தச் சொல்லும் தாந்த்ரீகனையே விசாரித்தனர்.   அதன் படி அவந்தி வர்மாவின் வம்சத்தில் பெண் வயிற்று மகன், அவன் மகன் என்ற வரிசையில் ஸூர வர்மன் என்பவனை கண்டு கொண்டார்கள்.  Gaggaa – கக்கா தங்கள் குடும்பத்து சுக வர்மனின்  பெண் வழி வந்தவன்  என்பதால் அவள் மகன் நிர்ஜித வர்மா என்ற பெயருடையவன் தகுதியானவனாக தேர்ந்தெடுக்கப் பட்டான்.  குடும்பத்தினன்   என்பதால் அரசையிடம் பரிவோடு இருப்பான் என்று நம்பினர்..  தாந்த்ரீகர்கள் அவன் பிறந்த வேளையை வைத்து அவனுடைய மகன் பார்த்தா என்பவன் அதிக பொருத்தமானவன் எங்கூறினர்.  அதனால்  பத்து வயதே ஆன அவள் மகன் பார்த்தா  அரசனானான்.

பொக்கிஷ அதிகாரியின் நண்பர்கள்  கூட்டாக சேர்ந்த்து  சுகந்தாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்  து தான் பிரயச்சித்தம் ஆகும் என்று சொல்லி அரண்மனைவியை  விட்டு வெளியேற்றினர். கண்ணீர் பெருகி வழிய அவள் வெளியேறிய சமயம், அவளிடம் நன்மைகள் பெற்றவர்களே, எதிரிகள் பக்கம் இருப்பதை அறிந்து வருந்தினாள்.  சில நாட்களில் அவளுடைய மெய்க் காப்பாளர்கள் ஏகாங்கி என்ற அரண்மனை சேவகர்கள் தலையிட்டு அவளை திரும்ப அழைத்து வந்தனர். ஹஸ்கபுரா என்ற இடத்தில் அவள் இருந்தாள்.  மெய்க் காப்பாளர்களிடம் தோற்று ஒளிந்து கொண்டிருந்த தாந்த்ரீகன் வெளி வந்து அவர்களை தோற்கடித்து சுகந்தாவை சிறை பிடித்தனர்.  நிஷ்பலக விஹாரா என்ற இடத்தில் சிறையில் இருந்தபடியே உயிர் நீத்தாள். 914 ஏஸி.   

உடன் இருந்து கலஹம் செய்தவர்கள் கையில் இந்த பிரதேசம் வெகுவாக சிரமங்களை அனுபவித்து விட்டது.  இந்த வம்சத்தினரின் ஏற்றமும் வீழ்ச்சியும் நம்பவே முடியாத திருப்பங்களோடு அமைந்து விட்டது. யாரை நோவது?

கலங்கிய குட்டையை குழப்புவது என்று ஒரு வசனம்.  கிடைத்ததை ஸூறையாடிக்  கொண்டு சென்ற தீய சக்திகள், நிலையில்லாத அரசுகள்  இவை  அந்த நாட்டின் செல்வத்தையும், நிதி நிலைமையும் அடியோடு பாழாக்கிய பல துக்க கரமான  சம்பவங்கள் நடந்தேறின.

பாலகன் என்பதால் அவன் தந்தை  ‘the Lame’ – முடவன் என்று அழைக்கப்பட்ட  பார்த்தவின் தந்தை முடிந்த வரை மற்ற மந்திரிகளுடன் சேர்ந்து கொண்டு  மக்களிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டான்.  அதனால் அரசர்களீல் இருந்து, கிராமத் தலைவர்கள்,  அலுவலக பணியாளர்கள் வரை லஞ்சம் வாங்கிக் கொண்டு பதவியில் உள்ளவனை  நீக்குவதும்,  தனக்கு சாதகமானவனை  பதவியில் அமர்த்துவதுமாக அரச நிர்வாகம் சீர் குலைந்தது. .  கன்னோஜ் ராஜ்யம் வரை இந்த தாந்த்ரீகர்களின் கை ஓங்கி இருந்தது.   அவர்களுக்கு ஹுண்டிகா தானம் – என்ற பெயரில் கையூட்டு கொடுப்பது கட்டாயமாகி விட்டது.   266  189/398

மேருவர்தனா என்ற பெயரில் ஒரு மந்திரி இருந்தார்.  , பழைய காஸ்மீர தலை நகரில் ஸ்ரீ மேருவர்தனஸ்வாமின் என்ற விஷ்ணு கோவிலைக் கட்டியிருந்தார்.  அவருடைய புதல்வர்கள் தாங்களே அரசராகும் கனவு கண்டு கொண்டிருந்தனர்.   அதன் பொருட்டு நிதி திரட்டும் வேலையில் இருந்தனர்.  நிதி அளிக்காத பிரஜைகளை பயமுறுத்தியும், வீடுகளை விட்டு விரட்டியும் தங்கள் அதிகாரத்தைக் காட்டி நிதியை சேர்த்தனர்.

சம்கரவர்தன என்ற மூத்த மகன், ரகசியமாக சுகந்தாதித்யா என்ற அரச குலத்தவனிடம் நட்பு கொண்டு அரண்மனைக்குள் நுழைய வசதி செய்து கொண்டான்.   அந்த சமயம், ஏற்கனவே இருந்த காயத்தில் உப்பை தடவியது போல (தாங்க முடியாத எரிச்சல் கொடுக்கும்) போல,  இயற்கையின் சீற்றம், காலமில்லாத காலத்தில் வெள்ளம் வந்து  பயிர்கள் நாசமாகவும் பொது மக்களிடம் பணப் புழக்கம் குறைந்தது.  ஒரு பருவம்- கோடையில் விதைத்து  இலையுதிர் காலத்தில் அறுவடைக்கு தயாரான தானியங்கள் முழுவதும் ஒட்டு மொத்தமாக அழிந்தால் விவசாயத்தை நம்பி இருக்கும் மக்கள் என்ன செய்வார்கள்?  காரி Khari –  என்று அழைக்கப்படும் ஒரு கொள்ளலவு- 196.3 கிலோ மூட்டை ஆயிரம்  டினார்களுக்கு விற்றது.  ஏழை எளிய மக்கள் என்ன செய்வார்கள்/ 93ம் ஆண்டு இப்படி ஒரு பஞ்சம்  வந்து கணக்கில்லாமல் மடிய, ஜனத்தொகை பெரிதும் குறைந்தது.

விதஸ்தா ஏரியைச் சுற்றி சடலங்கள், உள்ளும் வெளியும் அவையே நீரே தெரியாமல் உப்பி போன உடல்கள், பயங்கரமான உடலை உலுக்கும் காட்சிகள். . பூமி எங்கும் எலும்புகளே.  எது யாருடையது என்பதே தெரியாமல் மயானமாக ஆயிற்று.  அந்த காலத்திலும் பதுக்கி வைத்திருந்த அரிசியை விற்று தாந்த்ரீகன் செல்வந்தன் ஆனான். அரசன் அவனுக்குரிய கையூட்டைக் கொடுத்து அரசவையில் அங்கத்தினராக ஏற்றுக் கொண்டான்.

குளிரும் மழையும் வாட்ட, சுழன்று அடிக்கும் காற்றும் துரத்த  நடுக் காட்டில் அனைவரும் தவிக்கும் பொழுது தான் மட்டும் வசதியாக வயல் வீடு அல்லது குடிசைக்குள் சுகமாக ஒருவன் இருப்பது போல முடவன் என்று பெயர் பெற்ற அரசகுமாரன் அரண்மனைக்குள் தன் வசதிகள் எதுவும் குறையாமல் வாழ்ந்து வந்தான்.  இவனை ராஜ ராக்ஷஸன் எங்கிறார் கவி.

நாட்டு மக்களின் நலனைக் காத்த  துஞ்சினா, சந்திரபீடா என்ற முந்தைய அரசர்களின்  வளர்ப்பின் வந்தவன்,  அவர்களுக்கும்  இந்த கோரமான முடிவையே அளித்தான்.  மழை நீரில் வரும் நீர்க் கொப்புளங்கள் போல அரசர்கள் தோன்றி மறைந்தனர்.  பார்த்தா அரசனானல் தந்திரி வந்து மாற்ரி விடுவான்.  சுகந்தாதித்யா முடவனுக்கு சேவை செய்து அவன் மனைவிகளுக்குத் தேவைஉயானதை கொண்டு வந்து கொடுக்கும் பணியில் ஈடு படுத்தப் பட்டான்.  .  அரண்மனைப் பெண்களின் தீராத வேட்கைகள், உடல் உறவு வரை  அவனை பயன் படுத்திக் கொண்டனர்.  முடவனின் மனைவியே இளைஞனான சுகந்தாதித்யாவை விரும்பினாள். எதற்கும், நியாயமோ, தர்மமோ, ஒழுக்கமோ என்ற கட்டுப்பாடுகளே இன்றி  மிருக வாழ்க்கையாகிப் போனது. 

எதிர் பாராத திருப்பமாக தந்திரி பார்த்தாவை ஆதரித்து அவனுக்கு ராஜ்யாபிஷேகம் செய்து வைத்தான்.  சொல்ப காலம் அரசனாகும் வாய்ப்பு. அதன்பின் அந்த ஆண்டு முடிவிலேயே, சக்ரவர்மன் முடி ஸூட்டப் பட்டான்.   திரும்பி வர துடித்த பார்த்தா தன் மெய்க் காப்பாளர்களுடன் போராடி தோற்றான்.  அடுத்த பத்து ஆண்டுகள் இப்படி தந்திரியின் கையில் விளையாட்டு பொம்மைகளாக அரசர்களும் நாடும் இருந்தன.   சக்ரவர்மன் இன்னமும் சிறுவனாக இருந்ததால்  பெயருக்கு தந்தையின்  பாதுகாப்பில் இருந்தான்.   தந்திரிக்கு வேறு உள் நோக்கம். பின்னால் பயன்படும் என்று  பாம்பின் முட்டையை வளர்ப்பது போல என்று கவி வர்ணிக்கிறார்.   ஒரு பக்கம் தந்திரி, அரசகுடும்பத்தினரின் பேராசை ஒரு பக்கம், அதிக நாள் தாக்கு பிடிக்க முடியவில்லை, பார்த்தா தந்திரிக்கு ஏராளமான கையூட்டு கொடுத்து திரும்பவும் அரசனானான்.   பார்த்தாவின் மனைவி சாம்பவதி தந்திரியை அடக்கும் வேலையை ஏற்றாள்.  சம்பேஸ்வரா என்று சிவ பெருமானை வழி படுபவள் அவள். அதனால் தந்திரியை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தாள்.   அதுவும் சில காலமே.

ஆனால் அவனோ சக்ரவர்மனை அரசு கட்டிலில் அமர்த்தி விட்டான். அவனுக்கும் பல நிர்பந்தங்கள். கை நீட்டி வாங்கிய தனம், அந்த அலுவலக அதிகாரிகளின் கெடுபிடி.  மேருவர்தனனின்  பெண்களை வலுக் கட்டாயமாக அவனுக்கு  மணம் செய்து கொடுத்தனர். இயல்பாக நல்ல குணம் உடையவனை தந்திரி விரும்பவும் இல்லை.  கடைசியில் அறிவிலிகள் என்று தெரிந்தும் மேரு வர்மனின் புதல்வர்களுக்கு அரச பதவியை கட்டாயமாக கொடுக்க நேர்ந்தது.  

சம்பு வர்தன என்ற மகன் தம்பன் – தற்குறி – என்று தெரிந்தும்  க்ருஹ க்ருத்யா என்ற வரி வசூலிக்கும் நிர்வாக துறைக்கு தலைவனாகவும்,  சம்கரவர்தனுக்கு அக்ஷபடல  –   மூன்று துறைகளுக்கு தலைவனாகவும்  நியமித்து அவனுக்கு பல முனைகளில் இருந்தும் கட்டுப்பாட்டை செய்து விட்டான்.   அடிக்க கை யில் வைத்திருந்த கம்பிலேயே சுற்றிக் கோண்டிருந்த பாம்பு போல என்று உவமானம்.  சமாளிக்க முடியாமல் அடுத்த ஆண்டில் தானே விலகி விட்டான்.

மடவராஜ்யம் என்ற பகுதியில் வசித்துக் கொண்டு, தந்திரிக்கு எதிராக ஆட்களைச் சேர்த்துக் கொண்டிருந்தான்.  சங்கர வர்தனன் தன் பங்குக்கு முயற்சி செய்து கொண்டிருந்தவன் தந்திரியின் கை ஆள் சம்பு வர்தனனுடன் இணைந்தான்.  நீரில் இருக்கும் திமிங்கிலம் தன் குலத்தைச் சேர்ந்த  மீன் முதலியவைகளை தின்று ஜீவிக்கும். ஸ்டார்க் எனப்படும்  நாரை மௌனமாக இருந்து அந்த திமிங்கிலத்தையும் விழுங்கும்.   அதை காட்டில் இருந்து அம்பால் அடித்து வேடன் எடுத்துச் செல்வான். இது ஒரு சுழற்சி. வலியவன் மெலிந்தவனை அடிப்பது மனிதர்களுக்கும் உண்டு.

ராஜ்யத்தை இழந்த சக்ர வர்மன் ஒரு நிசியில் ஸ்ரீ டக்க என்ற இடத்தில் வசித்த ஒரு சமயம் டாமர தலைவனாக இருந்த சங்கிராமன் என்பவனின் வீட்டு வாசல் கதவை தட்டினான்.  அவனைக் கண்டதும் ஏதோ அரச குலத்தவன் என்பதை தோற்றத்தால் அறிந்து கொண்ட டாமர தலைவன் சங்கிராமன் வணங்கி வீட்டினுள்ளே அழைத்துச் சென்றான்.  ராஜ்யம் கை விட்டு போனதும் அதன் தொடர்பாக நடந்தவைகளையும் விவரமாக சொன்ன பின் தனக்கு உதவ முடியுமா என்று கேட்டான்.

சற்று யோசித்த பின் சங்கிராமன் பதில் சொன்னான். ‘ போர் என்று வந்தால் எதிர் அணியில் இருப்பவன் யாரானால் என்ன? தந்திரியோ, மந்திரியோ, ஆயுதம் எடுத்தவனுக்கு  என்ன வித்தியாசம்? ஆனால் என்னிடம் அந்த அளவு சக்தி இல்லை. தவிர, நீயும் அரச குலத்தவன். என் தேவை முடிந்தவுடன் என்னை விலக்கவே முயலுவாய்.  அரசுஅதிகாரத்தை சுவைத்தவர்களின் குணமே அது தான். உதவி செய்தவனையே,  தீர்த்து காட்டுவது சர்வ சாதாரணம்.  தான் ஏறி வந்த படிகளையே தள்ளி விடுவது போல.  தன் முன்னேற்றத்துக்கு பயன் படுத்திக் கொண்ட பின் உதவி செய்தவன் இவனுடைய ரகசியங்களை அறிந்தவனாவான். அதுவே அவனுக்கு சந்தேகம்.  எந்த நிமிடமும் தன்னை வீழ்த்த அவனால் முடியும் என்பதே பயம்.  அறிவும் திறமையும் உள்ளவனை அருகில் வைத்துக் கொண்டால் பல நன்மைகள். இதை தன்னலமே குறியான  அறிவிலிகள் உணருவதில்லை. செல்வாக்கோடு இருக்கும் பொழுது தன்னுடைய பலம் என்பது தன்னுடன் இருப்பவர்களின் உதவியால் என்பதை மறக்கும் அரசர்கள் எதிரிகள் வந்தால் மட்டுமே அவர்களை திரும்ப நினைப்பார்கள்.  அவர்கள் நினைத்தாலும், மந்திரிகள் காதில் வந்து ஓதுவார்கள். ‘கூர்மையான  இரு முனை கத்தி போன்றவர்கள் அறிவும் திறமையும் உடையவர்கள், கவனமாக இரு. ‘ யானையில் காது அருகில் வந்து ரீங்காரமிடும் வண்டுகள் போல.  நல்ல உபதேசங்களை   பகலில் செவி மடுத்த அரசன் இரவில் மறந்து விடுவான்.  ஆனால் இந்த எண்ணம் விளைத்த சந்தேகம் நீங்காது.  அருகில் இருப்பவன் அவன் கண்களுக்கு  எதிரியாக தெரிவான். தள்ளி இருக்கும் உண்மையான எதிரியை தெரிந்து கொள்ள நேரமாகும்.  அரசு கட்டில் முள் நிறைந்த து என்பார்கள். பூனை போல உடலை சுருக்கிகொண்டு அமர்ந்தால் தான் முள் தைக்காமல் எழுந்திருக்க முடியும். அரசனும் தன் மனதில் இருப்பதை மற்றவர்கள் அறியாமல் வைத்துக் கொள்ள பழக வேண்டும்.  இனிப்பு ருசியைக் காட்டி அருகில் இருக்கும் எறும்பை பிடிக்கலாம்.  அதுவே தள்ளி இருக்கும் எதிரியை கண்காணீக்காமல் பிடிக்க முடியாது, அதற்கு நாரையைப் போல மௌனமாக இருக்க வேண்டும். 321  194/398

பதுங்கி தலி குனிந்து வரும் சிங்கல் தன் இரையை அடிக்காமல் விடாது. பாம்பு அணைப்பது போல உடலைச் சுற்றினாலும் அதன் பல்லின் விஷம் தாக்காமல் விடாது, வேதாளம்  சிரித்துக் கொண்டே கெடுதலைச் செய்யும் அது போல அரசன் புகழ்வது போல பேசினாலும் அதன் பொருள் வேறாகும்.

அதனால் அரசனே! எங்களை இப்பொழுது போலவே என்றும்  மதிப்பாயானால், நம்பகமாக நட்பாக   நன்றி மறக்காமல் இருப்பாயானால், இதோ என் படைகள் தயார்.  

இதைக் கேட்ட அரசன் வெட்கி தலை குனிந்தவனாக, ‘என் ஆத்மாவைப் போல உங்களை  ரக்ஷிக்கிறேன் என்று உறுதி அளிக்கிறேன்.  எனக்கு அபயம் கொடுத்தவர்கள் நீங்கள். அதை என்றும் மறக்காமல் இருப்பேன். ’ என்றான். 

அதன் பின் இருவரும் ஆட்டின் ரத்தம் தோந்த தோல் மேல் நின்று தங்கள் வாட்களை உருவி வைத்துக் கொண்டு அதன் பேரில் சத்யம் செய்தனர். ஒருவருக்கொருவர் உதவியாக இருப்பதாக – அரசனும் டாமர  தலைவனும்.

மறு நாள் விடியலிலேயே பயங்கரமான டாமர சைன்யத்துடன் சக்ரவர்மா தன் யாத்திரையை துவங்கினான். ஸ்ரீ நகரை நோக்கி படை புறப்பட்டது.   தந்திரியும்,  சங்கர வர்தனுடன்  சித்திரை மாதம் வளர் பிறை அஷ்டமியன்று, தன் படையுடன் எதிர் கொண்டான்.

பத்மபுரத்துக்கு வெளியே பயங்கரமான யுத்தம்.  சக்ரவர்மன் தன் முழு ஆற்றலையும் கூட்டி இது வரை அடக்கி வைத்திருந்த கோபம் வெளிப்பட  குதிரையின் மேல் இருந்தபடி முதல் அடியிலேயேயே சம்கரவர்தனனை வீழ்த்தினான்.  தங்கள் தலைவனே விழுந்தபின் போர் செய்ய உத்சாகம் இன்றி தந்திரியின் காலாட்படை நால் திசைகளிலும் ஓடி மறைந்தனர்.  திடுமென புயல் காற்றில் சிக்கிய படகு போல இருந்ததாம்.

விடாமல் துரத்தி அடித்த சக்ரவர்மன்,  தந்திரியால் தான் ஏமாற்றப் பட்ட மனத் தாங்கல் அனைத்தையும்  குதிரையை மேல் வேகம் வேகமாகச் சென்று ஒவ்வொருவரையும்  பார்த்து பார்த்து தன் வாளால் தலையை சீவி  தீர்த்துக் கொண்டான்.  சக்ரவர்மன் மிருகேந்திரனான சிங்கம்  பிடரி யைச்  சிலிர்ப்பது போல  போர்க் களத்தில் அனைத்து இடங்களிலும் தென்பட்டவாக இருந்தானாம். தந்திரியின் ஐந்து ஆறு ஆயிரம் அனுதாபிகள் போர்க் களத்தில் வீழ்ந்த பின் வேறு என்ன வேண்டும்? ஆட்டு மந்த போல விழுந்த தந்திரியின் ஆட்கள், சக்ரவர்மன் என்ற கழுகின் நீண்ட இறக்கைகளின் நிழலில் தூங்கவது போல கிடந்தன.  தந்திரிகளின் எழுச்சியும், வீழ்ச்சியும் இணைந்தே இருந்து முடிந்தது.  அவர்களால் பாதிக்கப்படவர்கள் யாவரும் நிம்மதி அடைந்தனர்.

பரம்பரையாக வந்த அரச குலங்கள், பிரஜைகளே உயிராக இருந்த நல்ல அரசர்கள், யாரும் கெட்ட எண்ணத்தோடு நெருங்க முடியாத பெருந்தன்மையுடன் இருந்தவர்கள், அவர்களை அவமானபடுத்தி, உள்ளுக்குள்ளே ஊடுருவி கொட்டும் குளவி போல கொட்டி, அழித்து, இரவலர்களாக அலைய விட்ட பாவி அந்த தந்திரி தன் வாழ்வை அவர்களின் வீழ்ச்சியில் அமைத்துக் கொண்டவன்.  அவன் யாரோ, எந்த குடியில் எங்கு பிறந்தானோ, சூழ்ச்சியே ஆயுதமாக தலை நிமிர்ந்து திரிந்தான்.  சீறிப் பாய்ந்த நல்ல  பாம்பு போல ஓங்கி அடித்த அடித்த அடியில் சுருண்டு வீழ்ந்தான்.  அவனால் பாதிக்கப் பட்டவர்களின் மனக் குமுறலே பெரும் தீயாக அவனை அழித்து விட்டது. 

மறு நாள் வெற்றி வீரனாக, பேரி வாத்யங்கள் முழங்க, ஊர் மக்கள் வாழ்த்துக்களுடன் உடன் வர, ஜய கோஷங்களும், சோபா யாத்திரையாக சக்ரவர்மன் தன் ராஜ்யத்துக்குள் நுழைந்தான்.

 தந்திரியின் போதனையால்  முறையாக சென்று கொண்டிருந்த அரச குடும்பத்திரை  அழிக்கவும், அரச சாஸனத்தையே சின்னா பின்னமாக்கிய பலர், சம்பு வர்தனனில் ஆரம்பித்து , ஒவ்வொருவராக தேடிக் கண்டு பிடித்து வதைக்கப் பட்டானர்,  அவர்களுக்கு உதவியவர்கள்  தகுந்த தண்டனைகள் கொடுத்து சிறைப் படுத்த பட்டனர்.  தன் ராஜ்யத்தின் இனி இது போன்ற கயவர்கள் இருக்கவே கூடாது என்ற அறிவிப்புடன்  தன் ஆற்றலால்  அமைதியைக்  கொண்டு வந்தான்.  இனி எந்த வித  தொல்லையும் இன்றி  முன் போல அரசாட்சி நடக்கும்  என்று மக்களும் மகிழ்ந்தனர்.

ஆனால் அந்த தேசத்தின் மேல் விழுந்த சாபம் போலும், மிகுந்த எதிர் பார்ப்புகளுடன் ஆரம்பித்த சக்ரவர்மனின் ஆட்சியும் முன்னவர்களைப் போலவே வழி தடுமாறியது.  விரைவிலேயே அவன் குணமும் மாறியது.

தன் முன்னோர்களைப் போலவே அரக்கன் போன்ற கொடூரனாகவும், கர்வம் மிகுந்தவனாகவும் ஆனான். தந்திரியினால்  அமர்த்தப் பட்ட திறமையற்ற அரச ஊழியர்கள், அதிகாரிகளாலும் அவன்  ஆட்சி, நன்மை பயப்பதாக இல்லை. டாமர தலைவனுக்கு கொடுத்த வாக்கையும் மீறினான்.  அரச போகத்தில் மதி இழந்தான். பாடுகிறவனாக  வந்த ஒருவன் தன் உடன் வந்த பெண்களைக் கொண்டு அவனை மயக்கி அவர்களை மணந்து கொள்ளச் செய்தான். தந்திரியின் இடத்தை தான் எடுத்துக் கொண்டவன் போல அரச அதிகாரிகளாக தன் ஆட்களை நியமித்து பிரஜா பாலனம் என்பதை அறவே மறந்தவனாக, சக்ரவர்மணை அந்த:புரத்தில் சிறை வைத்தான்.  வரலாறு திரும்பியது.  டாமர்கள் கூட்டமாக வந்து அரண்மனையில் குளியல் அறையிலேயே அவனைக் கண்ட துண்டமாக வெட்டினர்.  சக்ரவர்மனின் முதல் மனைவிகள் தங்கள் பங்கு கோபத்தை அவன் கால்களில் கல்லால் அடித்து தீர்த்துக் கொண்டனர்.  புதிதாக வந்த பெண்களையும் வதைத்து விட்டனர்.  துதி பாடகர்களின் பாட்டை கேட்டு தன்னை தெய்வமாக நினைத்துக் கொண்டவன் வெளி நாட்டிலிருந்து வந்த பாடகன்  வசம் ஆனவனாக தன்னையே இழந்தான். (வீதியில் ஆடிப் பாடும் கூத்தாடிகள் போன்றவர்கள்.)   வாயிகாப்பவன் முதல் மந்திரிகள் வரை அவர்கள் ஆதிக்கம் நிறைந்தது.  ஆமை  நுழைந்த வீடு போல அரசு விழுந்தது.  ஸ்வபாக – நாய்களை தின்னும் – இது ஒரு வசைச் சொல். மிகவும் மட்டமான ஒழுக்கம் இல்லாத பெண்களும், மற்றவர்களுமாக அரசனை அடியோடு அழித்தனர்.  இந்த கொடியவனும் சக்ர மடம் என்ற பெயரில் பாசுபத ஆலயம் கட்டினான். கொடைகளை அந்தணர்களுக்குக் கொடுத்தான். வறுமையில் வாடிய அவர்களும் பெற்றுக் கொண்டனர்.  நன்றி மறந்த செயல் மன்னிக்க முடியாதது.  அதனால் டாமரர்கள் அதே வஞ்சனையால் கொன்றனர்.  பனிக்கட்டியை பனிக்கட்டியால் தான் உடைக்க முடியும் என்று ஒரு நியாயம்.   வைரத்தை வெட்ட வைரம் தான் வேண்டும்  என்பது போல.

பலவிதமான சூழ்ச்சிகள், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டும்,  அழித்துக் கொண்டும்  உத்பல குடும்பத்தினரின் ஆட்சி நீடிக்கவும் வரை  நாட்டில் அமைதியும் இல்லை.

468

தெய்வ சங்கல்பமோ, விதியின் விளையாட்டோ தேசத்தின் நல்ல காலமோ ஒரு பெரும் மாற்றம் தானாக வந்து சேர்ந்தது.  பிசகபுரம் पिशाचकपुर- என்ற கிராமத்தில்,  வீர தேவன் என்பவர்  பஹு குடும்பி என்பர்- நிறைய குழந்தைகள் பெற்றவர் என்று பொருள்.  அவர் மகன் காமதேவன் என பெயரிட்டார். அவன் மேருவர்மனின் வீட்டில் கல்வி கற்பிக்கும் ஆசானாக சேர்ந்தான். மேருவர்மனின் ஆதரவால், சங்கர வர்மனின் ஆஸ்தான அதிகாரியாக பொக்கிஷத்தை பாதுகாக்கும் வேலையில் அமர்ந்தான்.    அவன் மகன் நாளடைவில்  பிரபாகர தேவன் என்பவன் காலக் கிரமத்தில் அதே வேலையில் அமர்த்தப் பட்டான்.  அவன் மகன் அறிவு தாகம் உடையவனாக பால்குணகன் என்பவனும் மேலும் கல்வி கற்கவும், ஆராய்ச்சிகள் செய்யவும் விரும்பியவனாக தனி வழி சென்று விட்டான்.   அவனுக்கு ரம்யமான கனவுகள் வந்தன. ஒரு சமயம் पीठ् देवि – பீட தேவி  என்ற ரூபத்தில் தேவியின் தரிசனம் கிடைக்கப் பெற்றான்.  நாடு திரும்பும் வழியில் ஒரு கொலைகாரனின் மனைவி தன் ஆட்களை விட்டு அவனை பிடித்துச் சென்றாள். பலி கொடுக்க.  அங்கு இருந்த அந்தணர்கள் முன் போய் நின்றவனைக் கண்ட அவர்கள் ஒருமித்த குரலில் இவன் தான் நாட்டை ஆளத் தகுந்த ஒரே நபர் என்றனர்.  அவன் பெயர் யசஸ்கரா என்பதை அங்குள்ளோர் மகிழ்ச்சி ஆரவாரத்துடன் உச்சரித்தனர்.  அந்த இடத்திலேயே  அரசனாக அறிவித்து  ராஜ்ய அபிஷேகம் என்பதையும் செய்து விட்டனர். பொறுமை, த்ருதி என்ற நேர்மை, தன் கொள்கையில்  திடமான நம்பிக்கை,  பெருந்தன்மை, தவிர நிறைந்த ஆற்றலுடையவன் என்ற குணங்களை இயல்பாக பெற்றவன்.  மேகங்கள் ஸூரிய தேவனை அபிஷேகம் செய்தது போல இருந்ததாம்.   

 மூங்கில் காட்டை தங்களுக்குள் சண்டையிட்டு கிளப்பிய அக்னியில் யாதவர்கள் அழிந்தனர்.    வேறூன்றி பலகாலமாக நின்ற மரம், பெரு மழையும் இடியும் தாக்கி அழிகிறது.  அதே காற்று மற்றொரு மரத்தை தள்ளிச் சென்று நிலைத்து நிற்க வழி செய்கிறது. தெய்வம் நினைத்தால் ஏதோ ஒரு வழி தானே திறக்கிறது. பார்தா யாரோ ஒரு வேற்று மனிதன் சொல்லைக் கேட்டு தன் மகனையே விரட்டியதும், அதே  மகன் தந்தையுடன்  குடும்பத்தையே அழித்ததும், அடுத்தடுத்து வந்த பிரச்னைகள், அனைத்துமே ஏதோ ஒரு திட்டத்துடன்  நடந்து முடிந்தது.     இப்படி யசஸ்கரன், சாதாரண குடும்பத்தில் பிறந்தவன், கல்வியே கவனமாக  வாழ்ந்தவன் ராஜ பதவியை அடையவே என்பது போல ராஜ குலம் சிதறியதும் அந்த தெய்வம் தான் தானே நினைத்து நடத்தியது போலும்.  சற்று முன் தன்னந்தனியாக நடந்து வந்தவன்,  கண் முன்னே உலக நாயகனாக பட்டம் சூட்டப்பட்ட அதிசயம் நம்பவும் முடியாமல் மக்கள் கூடவே நடந்தனர். பெண்களும் கண்கள் விரிய பார்த்து மகிழ்ந்தனர், அரண்மனை வந்து சேர்ந்த து அந்த ஊர்வலம்.  யசஸ்கர பூபதி  வாழ்க என்ற கோஷத்துடன்.   ஸூரியனின் ஒளி போன்ற வெண்மையான கொற்றக் கொடி, வெள்ளி தட்டில் ஆரத்திகளுடன் வரவேற்ற ராஜ்யலக்ஷ்மி ராஜ தானியே மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்ட அரசனாக ஆனான்.

(இது வரை ஸ்ரீ காஸ்மீரம்தேசத்து மகா மந்திரியான சம்பக  ப்ரபுவின் மகன் கல்ஹணன் எழுதிய ராஜ தரங்கினீ என்ற நூலின் ஐந்தாம்  பாகம்- ஐந்தாவது அலை நிறைவுற்றது)

.

ராஜ தரங்கிணி -4

கார்கோடக வம்சம்

ராஜ தரங்கிணி – நாலாவது தரங்கம் – அலை   

யாரும் எதிர்பாராத வகையில் அரச பதவியை அடைந்த அரசனின் மருமகன்,     தன் தலையில் முடி ஸூட்டுவிழாவில் விழுந்த புனிதமான நீரை விதியின் செயல் என்று ஏற்றுக் கொண்டான். தனக்கு அளிக்கப் பட்ட கடமை என்றாலும்  நன்றி மறவாதவனாகவும் இருந்தான்.   கார்கோடக குலத்தில் பிறந்தவன்.  அபிஷேகத்தின் பொழுது தன் மேல் நீருடன் கலந்து விழுந்த  முத்துக்கள் குல மூத்தோர்களின்  முக படத்தில் இருக்கும் ரத்தினங்களாக அவன் கண்களுக்கு புலப்பட்டன.  ஒரு பக்கம் தன் குல மூத்தோர்களின் லட்சியம் நிறைவேறியது என்ற நிம்மதி. மாபெரும் ராஜ்யம் அதை நிர்வகிக்க தன் நீண்ட கைகளால் உறுதி எடுத்துக் கொண்டான். பொற் தாமரைகளால் ஆன மாலை அணிந்தவனை  சேஷ நாகம் முதல் அந்த குலத்தினர் அனைவரும் கண் மலர கண்டது போல இருந்தது.

கோநந்தன் வம்சம் அது வரை அனுபவித்த பூமி.  அவர்கள் நலமாகவே ஆண்டார்கள். அதை விட நலமாக கார்கோடக குலத்தில் உதித்த நீயும் செய்ய வேண்டும் என்று அவர்கள் ஆசீர்வதித்தனர்.  பல காலமாக  சுவர்கத்தில் இருந்தவள்,  அங்கிருந்து மூவுலக குருவான சிவ பெருமானின் தலையில் அடைக்கலம் ஆன கங்கையைப் போன்றே நாகர் குலமும் மேன்மை அடைந்தது.  

மலை மகளுடன் இணைந்து ஸ்தாணு என்று புகழப் படும் ஈசன், எங்களுக்கு எந்த விதத்திலும் இடர்கள் வராமல் காக்கட்டும்.  ஈசனின் தலை சடையே போகி- நாகர் குல பெண்கள் போல சுருண்டு அதே ஸ்யாம, அடர் நீல -கருப்பு  நிறத்தில் பள பளக்க,  நாக மணியும் அணிந்து தயையே உருவான மூர்த்தி, எங்களை காக்க வேண்டுகிறோம்.

பூமியுடன் அவன்  மனைவியும் அதே குலத்தில் வந்தவள் என்பதால், ரத்தினம் போன்ற பல தனயர்கள் காலப் போக்கில் பிறந்தனர். அரச வம்சம் அந்த திசையில் வளர்ந்தது.   அங்கலேகா என்ற அந்த ராஜ குமாரி தன் தவற்றை உணர்ந்து பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்ட கணவனான துர்லபவர்தனுடன்  முந்தைய அரசனின் மகள் என்ற பெருமையும் மதிப்புடனும் இருந்தாள். அரசனின் அன்பையும் பெற்றவளாக வாழ்ந்தாள். அங்கபவனம் என்ற விஹாரத்தை நிர்மாணித்தாள்.

பிறந்த உடனேயே, ஆரூடம் சொல்பவர்கள் இவன் அல்ப காலமே ஜீவித்திருப்பான் என்றனர். மல்ஹன் என்ற பெயருடைய அந்த மகன் மல்ஹணஸ்வாமின் என்ற பெயரில் ஒரு கோவிலை நிறுவினான்.  பாரேவிசோக  என்ற மலைத்தொடரில் கோடாத்ரி என்ற இடத்தில் சந்திரகிராமம் என்ற இடம் தகுதியுள்ள அந்தணர்களுக்கு தானமாக வழங்கினான். ஸ்ரீநகரில் துர்லபஸ்வாமி என்ற ஸ்ரீ ஹரியின் மந்திரத்தை கட்டி முடித்தவன், இருபத்தேழு வயதில் மறைந்தான்.

அனங்கதேவியின் அடுத்த மகன்  துர்லபகன் என்பவன் ஆட்சிக்கு வந்தான். இந்திரனுக்கு சமமாக அரசாட்சி செய்தான் எனப் புகழப் பட்டான்.  தாய் வழி  பாட்டனார்  நினைவில், அவன் தாய் அவனை   ப்ரதாபாதித்யா என அழைத்தாள்.  அவளைப் பொறுத்தவரை  அந்த வம்சத்தினள்.  எனவே மகள் வழியில் அந்த வம்சம் தொடர்ந்தது.     உடா என்பவன் ஒரு மந்திரி ஹனுமத் என்பவரின் மகன். குபேரன் என்ற தனாதிகாரியை உபாசித்து பெரும் செல்வம் பெற்றான். அதைக் கொண்டு பல வாழ்விடங்கள் அமைத்தான்.

ப்ரதாபபுர என்ற  நகரத்தை இந்திர புரிக்கு சமமாக ப்ரதாபாதித்யா நிர்மாணித்தான். அந்த சமயம் பல்வேறு திசைகளில் இருந்தும் வியாபாரிகள்  வந்தனர்.  வணிக குலத்தைச் சேர்ந்த நோணா என்பவன் ரௌஹீதி (தற்கால ரோதக்-Rohtak))  என்ற பிரதேசத்திலிருந்து வந்து அங்கு வசிக்கலானான்.  நேர்மையானவன், நற்குணவான் என புகழ் பெற்றான்.  ரௌஹீதி தேசத்திற்கு சென்ற அந்தணர்கள் வசிக்க இருப்பிடங்கள் கட்டிக் கொடுத்தான். நோண மடம் என்ற பாடசாலைகள் கட்டிக் கொடுத்தான்.

ஒரு சமயம் அரசனுடைய விருந்தாளியாக அழைக்கப் பட்டு அரண்மனைக்குச் சென்றான். அரசர்களுக்கு செய்வது போல விருந்தோம்பலும் உபசாரங்களும் இருந்தன.  ஒரு நாள் அங்கு வசித்தான்,  விடிந்து கிளம்பும் முன் அரசன் அனைத்தும் வசதியாக இருந்ததா? என அன்புடன் விசாரித்தான். அனைத்தும் நலமே. ஏராளமான தீபங்கள், அது தான் எனக்கு தலைவலியை உண்டாக்கி விட்டன  என்று பதில் சொன்னான். பதிலுக்கு வணிகன்  தானும் அரசனை தன் இருப்பிடத்துக்கு அழைத்தான். அரசன் அங்கு சென்ற பொழுது தான் முதன் முறையாக சுயமாக ஒளிரும் மணிகளே இரவில் விளக்காக பயன் பாட்டில் இருப்பதைக் கண்டான்.  அதை தவிர லக்ஷ்மீ கடாக்ஷம் செல்வத்துக்கு அதிபதியான திருமகளின் அருள் பல விதத்திலும் அந்த இருப்பிடம் முழுவதும் கண் கூடாக தெரியக் கண்டான். அதைக் கண்ட அரசன் பெரும் வியப்புக்குள்ளானான். ஸ்ரீ நரேந்திர ப்ரபா என்ற ஒரு பெண் அந்த மாளிகையில் மற்றொரு நிலவு உதித்தது போல இருந்தாள்.  அழகிய அங்கங்களுடன் செதுக்கி வைத்த சில்பம் போல கண் கவர் வனப்புடன் இருந்தவளைக் கண்டு அரசன் தடுமாறினான். மங்களமே மூர்த்தியாக- உருவெடுத்து வந்து விட்டதோ?  அல்லது இதுவே மன்மதனின் வீடோ? பெரிய மாளிகை – தன் வீடு என்ற மன நிம்மதியாலும் தன் விருப்பம் போல உலவிக்  கொண்டிருந்தாள்.  

அவளைக் கண்டதுமே தன் மனம் அவள் பால் சென்று விட்டதை அறிந்த அரசன், ஒவ்வொரு அங்கமாக கண்களால் ரசித்து அனுபவித்தான்.  ஒரு வினாடியில் இன்னமும் தனக்கு கிடைக்கப் பெறாத அன்னியனின் பெண், சௌபாக்யம் என்ற அமுதமே அவள் என மனதினுள் வர்ணித்து மகிழ்ந்தான். தன் மனம் நிறைய அவளே இருக்கக் கண்டு, தன்னை அவள் ஏற்றுக் கொண்டு விட்டதாகவே மன மயக்கம் அடைந்தான்.  யதேச்சையாக அவள் திரும்பியதெல்லாம் தன்னை காணவே என தவறாக எண்ணி மகிழ்ந்தான்.  அதே நினைவாக அரண்மனை திரும்பினான்.

கண்களில் அவள் உருவமே நிலைத்து இருந்தது. உடல் இளைத்தது. முன் பிறவியில் நாங்கள் இணைந்திருந்தோமோ, இந்த பிறவியில் யாரோ, நினைப்பது கூட தவறு என்று தன்னை அடக்கவே முயன்றான். ராகம்- பெண் மோகம் என்ற விஷம் நிறைந்த மரம்.  அஹோ!  தன்னை அடக்கிக் கொண்டு மோக வலையில் விழாதவர்கள் புண்ணியம் செய்தவர்கள்.  நட்பு கூட பின் வாங்கியது போல நினைவில் நிற்கவில்லை.  நல்ல குடிப் பிறப்பு என்று நம்மை சொல்வார்கள். இது போன்ற நியாயம் அல்லாத விருப்பமே எனக்கு வந்திருக்கலாகாது என பூமியை ஆளும் அரசன் நான் இந்த அல்ப ஆசைகளுக்கு மேல் இருப்பவன் என்று சொல்லிக் கொண்டான்.

இது வரை கடை பிடித்த சதாசாரங்கள், நலம் தரும் நடவடிக்கைகள் இவைகளால் மக்கள் மனதில் ஒரு பிம்பம் உண்டாகியிருக்கும். இந்த நிலையில் பார்த்தால், யாரிவன், அல்பன் என்று தூற்றுவார்கள்.  அரசனே மாற்றான் மனைவியை அபகரிப்பானா? என்பர்.

மற்ற பிரஜைகளுக்கு முன்னோடியாக இருப்பவன் நான்.  நீதி தவறலாமா? இவ்வாறு தன்னையே சமாளித்துக் கொண்டாலும் மனதில் படிந்த அந்த பெண்ணுருவம் அலைக்கழித்தது. எதை விடுவான், நன் மக்கள் கொண்டாடும் நல் வழி, இது வரை  பாலித்து வந்தது  அதையா?  அவளுடைய நீண்ட அழகிய கண்களையா? எந்த முடிவுக்கும் வர இயலாமல் தவித்தவன் உடல் நலம் கெட்டது. மிக மோசமாக மரணத் தறுவாய் வரை வந்து விட்டான்.

வணிகன் இதை அறிந்தான்.  அந்த நல்ல மனிதன் யாரும் அருகில் இல்லாத சமயம் அரசனிடம் பேசினான்.  இந்த நிலை வர விடலாமா? தர்மம் – நீதி இல்லை என்று பயப்படுகிறாயா? உயிருக்கு ஆபத்து என்ற சமயம் தர்மத்தை மீறலாம் என்பதும் ஒரு வழக்கு.  ஜந்துக்கள் தன் உயிரைக் காத்துக் கொள்ள என்ன வழி அதைத் தான் செய்யும். தர்ம சங்கடம் என்பது இது தான், பல மதங்களும் இதைப் பற்றி பேசி அலசி விளக்கவே முயன்றுள்ளார்கள்.  இது போன்ற நிலையில் என்ன ஆறுதல் சொல்வார்கள்? மனச்சாட்சி சொல்வது போல செய் என்பார்கள்.  உடல் நலத்தை கவனியாமல் மரணம் அடைந்தால் அது புகழையும் தராது, அது உசிதமும் அல்ல எந்த பலனும் எவருக்கும் இல்லை.  இறந்தவன் காதில் உன் நற் பெயரை நிலை நிறுத்திக் கொண்டு விட்டாய் என்று சொன்னால் என்ன பயன்?

அரசனே! நான் சொல்வதைக் கேள். இந்த ஆபத்தான நிலையில் நண்பனாக மட்டுமே சொல்கிறேன் என்பதை புரிந்து கொள்.  உனக்காக நான் உயிரையே கொடுப்பேன். மற்றவை என்ன உயர்வு?  இன்னமும் உன் மனதில் தெளிவு வர வில்லையெனில்,  நானே அவளை நர்த்தகியாக உனக்குத் தருகி
றேன்.   அவள் நாட்டியம் அறிந்தவளே.  நான் அனுமதித்து உனக்கு அளித்தால் அதில் நீயே பலவந்தமாக ஆக்ரமித்த தவறும் இராது.  உடனே அரசன் அதற்கும் சம்மதிக்கவில்லை, லஜ்ஜையே அதிகமாகியது. பின் ஆசையே வென்றது. அவளை முறைப்படி மணந்தான்.  

இயல்பான திறமையாலும் ஆற்றலாலும் ஆண்டான். சிவபெருமானுக்கான ஒரு கோவிலை  ஸ்ரீ  நரேந்திரேஸ்வரா என்ற பெயரில் கட்டுவித்தான். 

அவனுடைய பட்டமகிஷி மூலம் பிறந்த மகன் சந்திரபீடன் என்ற பெயருடன் பட்டத்துக்கு வந்தான்.   அவன் விரும்பி மணந்தவள் மூலம்  தாராபீடன் என்ற மகன் பிறந்தான்.  அரச குலத்தவர் அவளை ஏற்றுக்  கொண்டது போலவே  அவளும் தனக்கு கிடைத்த அரச குல மரியாதையை காப்பவளாக இருந்தாள்.

கரடு முறடான பாறையாக மலையிலிருந்து வெட்டி எடுக்கப் படும் உயர் மணி,  சாணையில் அடிபட்டு, வளைக்கப் பட்ட பின் உயர் மணியாக உருவாகி ஒளி விடுவது போல வாழ்க்கையில் அனுபவங்கள்  மனிதர்களை பண்படுத்துகின்றன.  அக்னியிலிருந்து புகையாக மலினமாக வானம் வரை சென்று மேகமாகும் – அவையே பின்னால் பரிசுத்தமான நீராக மாறி விடுகிறது.  இரும்பு முதலான தாதுக்களால் நிரம்பிய மலை,  கடினமான பாறைகளைக் கடந்து வந்த சமயம் வெறும் ஜடமாக இருந்த மேகங்கள், அதனிடையில் ஒளி மயமான த்வஜம் போல மின்னல் தோன்றுகிறது.  பிறப்பு ஒரு வகையில் ஜீவன்களின் குண தோஷங்களை நிர்ணயிக்கிறது என்றாலும், தான் அண்டியிருக்கும் சமூகத்தில் இருந்தும் அவை நன்மையோ, தீமையோ பெறுகின்றன என்பது உண்மை.  இயல்பான சுபாவம் எது என்பதும் அனுபவத்தால் பெறப்படுவதே.  

தாராபீடனுக்கு பிறகு அவிமுக்தபீடன், முக்தாபீடன் என்ற தனயர்களும் பிறந்தனர். வஜ்ராதித்யன் வம்சம் உதயாதித்யன், லலிதாதித்யன் என வளர்ந்தது.  துர்லப பூபதி,  பல காலம் (500 ஆண்டுகள்) ஆண்டதாக வரலாறு. புண்யாத்மா என புகழப் பட்டு, அவர்கள் அடையும் நல்லுலகை அடைந்தான் என பாடல் பெற்றான்.

சந்திராபீடனும் ராஜ சூடாமணி என பிரசித்தமான அரசனாக மதிக்கப் பட்டான்.  பெயருக்கு ஏற்ப மக்களின் அன்புக்கு மாத்திரமானான்.  க்ஷமா- பொறுமை, விக்ரம-ஆற்றல், சுகம் மூன்று ஓரிடத்தில் எப்படி சேர்ந்து இருக்க இயலும்.  தர்மத்தை ஒரு பாதம் என்பர். மற்ற மூன்று பாதங்களும் இவை. இவைகளை  தெளிவான அறிவால் பகுத்து செயல்களைச் செய்யத் தெரிந்தவனே வெற்றி  பெறுவான்.   108/398

செல்வத்தை அளிக்கும் திருமகளும்  தேவையறிந்து கொடுப்பவள் போல எந்த இடத்தில் எது தேவையோ அதை அபரிமிதமாக அளித்தாள்.  வயலில் விடப் படும் நீர் ஆங்காங்கு பாய்ந்து வயலில் எல்லா பகுதிகளும் அடைவது போலவும், பயிர் மட்டுமல்ல  இடையில் உள்ள, மரங்களும் சிறு செடி கொடிகளும் கூட அதன் பயனைப் பெறுவது போலவும் லக்ஷ்மி தேவியின் அருள் அனைவருக்கும்

வேண்டிய அளவுக்கும் மேல் கிடைத்ததாம்.

மலைகளில் இருந்து கீழ் நோக்கி பாய்ந்து நதிகள் வழியில் வண்டல் மண்ணையும்,  தாதுப் பொருட்களையும் நிலத்தில் கொண்டு வந்து சேர்த்து விட்டு கடலை நோக்கிய தன் பிரயாணத்தை தொடருவது போலவும், நாட்டில் செல்வம் கொழித்தது.

தானே செயல் திறன் உடையவன். முன் யோசனையுடன் எதைச் செய்தால் நல்லது, எது முடிவில் நல்ல பயனைத் தராது என்பதை யோசித்து செயலில் இறங்குவான். அதனால்  முடிவில் தவறுகள் வருவதும் அதனால் ஏற்படும் மன வாட்டமும் தவிர்க்கப் பட்டன.  நல்லன செய்து அதற்காக மக்கள் பாராட்டினால் லஜ்ஜையே அடைவான்.  அமாத்யர்களுக்கு தானே செய்முறைகளைச் சொல்லி செய்யச் செய்வான். வஜ்ரம்- வைரம் தான் மற்ற பொருட்களை உடைக்கும் அல்லது சிதைக்கும். வஜ்ரத்தை சிதைக்க மற்றொரு வைரமே தான் பயன்படுத்தப் படுகிறது.

நியாயம் அல்ல என்று தயங்கினால், அல்லது தர்ம சங்கடமான விஷயங்களில் முடிவு எடுக்க தன் அறிவையே, அல்லது உள்ளுணர்வையே மதிப்பான். அதனால் தனக்கு நஷ்டமானாலும் கவலைப் பட மாட்டான். எப்படி கருடன் இந்திரனின் வஜ்ரத்தின் அடியிலிருந்து தப்ப தன் இறகை உதறி விட்டதோ,  அது போல ஏதோ தனக்கு சிறிய இழப்பு ஆனாலும் அதனால் பாதிக்கப் படாமல் தர்மத்தின் பக்கமே நிற்பான். (கருடன் ஓரு சமயம் ஸூரியனை மறைத்தான் என்று இந்திரன் தன் வஜ்ராயுத த்தால் அடித்தான் என்று புராணம் )

நியமங்களை அனுசரிப்பதில் ஸுரிய தேவனே முன்னோடி. நாளின் பல செயல்களையும் வினாடி பிசகாமல் ஸூரியன் அனுசரிப்பது போல.  மேலும் வர்ணிக்கவே நினைத்தாலும்   அரசனின் குணக் குறைவு காரணமல்ல அதிக பிரசங்கம் என்ற குற்றம் – ஒரே விஷயத்தை மிகையாக சொல்வது கூட     ரஸக் குறைவு என்ற காவிய நியமங்களின் படி குற்றமே.

திரிபுவனேஸ்வர் மந்திரம் என்ற பெயரில் கோவிலை கட்ட  நிலத்தை ஆர்ஜிதம் செய்த பொழுது, ஒரு தோல் வியாபாரி அல்லது தோலை வைத்து பொருட்கள் தயாரிக்கும் தொழிலாளி தன் சிறிய நிலத்தின் நடுப் பகுதியில் இருந்த குடிசையைத் தர மறுத்தான்.  உயர் அதிகாரிகள் அந்த நிலத்திற்கு ஈடாக பெருமளவு பொருள் தருவதாக சொன்ன போதிலும் அது தனது முன்னோர்கள் வசித்த வீடு என்று சொல்லி பிடிவாதமாக இருந்தான். அரசனிடம் சொன்னால், அவன் இடம் அவன் விருப்பம், நீங்கள் அதிகமாக வற்புறுத்த வேண்டாம் என்றும் ஆரம்பத்திலேயே அந்த இடம் நடுவில் இருக்கையில் எப்படி கட்டிட வரை படம் தயாரித்தீர்கள் என்றும் கேட்டான்.  இதை நிறுத்தி விட்டு வேறு இடம் பாருங்கள்.  மிகச் சிறிய நிலம் என்றாலும்  ஒரு பிரஜையின் நிலத்தை பலவந்தமாக பெறுவது தகாது.  நீங்கள் அறிவாளிகள். முன் யோசனை உடையவர்கள். எங்கு எந்தவிதமான இடர் வரும் என்பதை முன் கூட்டியே எதிர்பார்த்து இருக்கலாம்.  எது நியாயம்? நம் மனதுக்கு சரி என்று தோன்றுவதை நியாயம் என்று நம்பி விடுகிறோம்.  அல்ப நிலம், நிறைய தனம் கொடுத்தால் போதும் என்று நினைக்க தூண்டியது எது? இவ்வாறு பேசிக் கொண்டு இருக்கையிலேயே காலணி செய்யும் தொழிலாளியின்  செய்தியோடு வந்த ஒரு தூதுவன் அரசரைக் காண வந்தான்.  

அரசனை நேரில் காண விரும்புகிறேன்.  அரச சபைக்குள் நான் வருவது உசிதமல்ல என்றால் வேறு ஏதாவது ஒரு இடம், எது சௌகரியமோ, அந்த இடத்தில் சந்திக்கிறேன்.  மறு நாள்  அரச சபை அல்லாத ஒரு இடத்தில் சந்தித்த பொழுது அரசன் கேட்டான் – ஏன் மறுக்கிறாய் ? இதை ஒரு தெய்வீகமான செயலுக்காக கேட்கிறோம்.  உன் இருப்பிடம் அதைவிட உயர்ந்தது, அழகியது என்று எண்ணினால் வேண்டுமளவு தனமோ, நிலமோ பெற்றுக் கொண்டு புதிதாக கட்டிக் கொள்ளலாமே, என்றான்.

காலணி தயாரிப்பவன் யோசிப்பது போல இருந்தது. அரசன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.  வெண்மையான பற்கள் பளிச்சிட அவன் வணக்கம் சொன்னான். அதன் பின், அரசே நான் சொல்லப் போவது முற்றிலும் உண்மை. இதை மனப் பூர்வமாக நம்பி மேற் கொண்டு உங்கள் தீர்ப்பைச் சொல்லுங்கள். இந்த இடத்தில் நான் வாதி, நீங்கள் தான் நியாயதிபதி. தீர்ப்பு உங்கள் கையில்.

நான் நாயிலும் கேடு கெட்டவனும் இல்லை, ஸ்ரீ ராமசந்திரனோ, அல்லது ப்ருதுவோ  போன்ற புகழ் பெற்ற நபரும் அல்ல. நாம் இருவரும் தனியாக பேசுவதையே கூட இந்த மந்திரிகள், உங்களுடைய ஆலோசகர்கள்  பொறுக்க மாட்டாமல்  செய்வதறியாது தவிக்கிறார்கள்.  நான் நேரடியாக உங்களைச் சந்திப்பதும் பேசுவதும்  அவர்களுக்கு  ஏன் இந்த அளவு பாதிப்பை உண்டாக்குகிறது.  

பிறக்கும் சமயம் மனித பிறவிகள் கொண்டு வருவது என்ன?  தன்னியல்பு என்ற நான் எனும் தன்மை, எனது  என்ற எண்னம் இந்த இரண்டு நினைவுகளே. உங்கள் உடலில் விலை உயர்ந்த  கங்கணங்கள், தோலில் அணியும் அங்கதங்கள், கழுத்தில் மாலைகள்,  இவை உங்களுக்கு பெருமை சேர்ப்பது போலவே எங்களுக்கு எங்கள் சரீரமே- உடலே அனைத்தும், வெளி ஆபரணம் இன்றியும் நாங்களும் இதை எண்ணி பெருமையே கொள்கிறோம்.

உங்களுடைய இந்த அழகிய  மாளிகை, விசாலமான கூடங்கள் கோபுரங்களுடன், ஜன்னல்களுடன் உள்ளது போலவே என் குடிசையும், ஜன்னல் வைக்க வேண்டிய இடத்தில் ஒரு உடைந்த பானையின் மேல் பாகத்து வளையத்தை வைத்திருக்கிறோம்.  அது வழியே வரும் காற்றும் வெளிச்சமும் இருவருக்கும் பொதுவே. பிறந்த நாளில் இருந்து இதில் தான் எங்களுடைய நல்லதோ, மற்றதோ, அனுபவித்து வளர்ந்திருக்கிறோம்.  என் தாய் போல மதிக்கும் இந்த குடிசை மண்ணோடு மண்ணாக எனக்கு பொறுக்கவில்லை.  இதை யார் அறிவார்கள்?  எதிர் பாராத இயற்கையின் தாக்கம், வெள்ளமோ, பூ கம்பமோ, இருப்பிடத்தை இழந்த மனிதர்கள் அறிவார்கள்.  அல்லது எதிரி வசம் ஆன அரசன் தானே விலகி அதை இழந்தவன் அறிவான்.

ஆனாலும், பொறுப்புள்ள பெருந்தன்மையுடைய அரசன் வந்து கேட்கும் பொழுது சாதாரண பிரஜை, உங்கள் நாட்டில் வசிப்பவன் மறுப்பதும் நியாயமல்ல.   உங்கள் தீர்ப்பை ஏற்கிறேன்.

 அரசன் அந்த குடிசைக்கு சென்றான்.   தன் தேவையும் பிரஜையான அவனுடைய மறுப்பையும் எடை போட்டவன் போல பதில் சொன்னான்.  பொதுவான நீதி,  மிகப் பெரிய லாபத்தை, நன்மைதரும் செயலை தடுக்குமானால்,  அந்த சிறிய இடரை தாண்டிச் செல்வது தான்  நியாயம்.  உனக்குத் தேவையான தனமோ, இடமோ வாங்கிக்கொள். பலருக்கு பயன் படும் என்றால் ஒரு சிலரின் உரிமை பறிக்கப் படுவது அதர்மம் அல்ல. 

காலணி செய்யும் தொழிலாளி மகிழ்ச்சியுன் கை கூப்பி வணங்கியபடி ஏற்றுக் கொண்டான்.  நீங்கள் செய்வது சரியே. மற்றவர் இடையில் வந்து தங்கள் எண்ணத்தை மாற்று

 கருத்தைச் சொன்னாலும், அதை சீர் தூக்கி பார்த்து விட்டு தனது தீர்மானத்தையே நிறைவேற்றுபவன் தான் உயர்ந்த அரசன்.   முன்னொரு காலத்தில் நாய் ரூபத்தில் தர்மம் பாண்டு புத்திரன் யுதிஷ்டிரனை தொடர்ந்து சென்றது.  அது போல நீயும் தர்மத்தை நிலை நாட்டி விட்டாய். பாண்டு புத்திரனைத் தொடர்ந்து சென்ற நாய் போல என்னால் நீயும் சோதிக்கப் பட்டாய்.  நானும் சமூக அளவில் தாழ்ந்தவனே, விலங்குகளில் நாய் போலவே.  நீடூழி வாழ்க. இதே போல நீதியும், சட்டமும் சம அளவில் மதிக்கத் தெரிந்த அரசன் நீ. உன் முடிவுகள் உனதாகவே இருக்கட்டும்.  உடன் உள்ள ஆலோசகர்கள் சொல்வதை வைத்து தீர்ப்பு சொல்லாமல் உன் மனசாட்சிக்கு மதிப்பு கொடுத்து ஆள்வாய், வாழ்க உன் புகழ்.  வளர்க உன் சாம்ராஜ்யம். 77

 அதன் பின் அரசன் தான் விரும்பியபடி  ஸ்ரீ கேசவனுக்கான ஆலயம் த்ரிபுவன ஸ்வாமின் என்ற பெயரில் கட்டுவித்தான்.  பிரகாச தேவி என்ற அவன் மனைவி மிகவும் பிரபலமான பிரகாசிகா விஹாரம் என்பதை நிர்மாணித்தாள். குருவான மிஹிர தத்தர் என்பவர்,  சிறந்த அறிஞர்.   பல துறைகளிலும் தெளிவான  அறிவும் செயல்  திறமையும்  உடையவர்.  விஸ்வம்பரர் எனப்படும் உலகை தாங்குபவர் அல்லது காப்பவர் என்ற கம்பீர ஸ்வாமின் என்ற பெயரில் ஒரு கோவிலில் பிரதிஷ்டை செய்தார்.  ஸ்ரீ நகரில் இருந்த சலிதகா என்ற நகர உயர் அதிகாரியான ஒருவர்  சலித ஸ்வாமின் என்ற கோவிலை கட்டினார்.

ஒரு சமயம் சபை முக்கியமான விஷயங்களை கவனித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு பெண் வந்து தன் குறையைச் சொன்னாள். அவள் கணவனை யாரோ கொன்று விட்டார்கள். அவரோ எளிய அந்தணன். யாரிடமும் பகையும் கிடையாது.  அரசே! நீங்கள் அரசராக இருந்து நாட்டை பாலிக்கும் சமயம் இப்படி நடக்க விடலாமா? என் கணவர் நிம்மதியாக தூங்கிக் கொண்டிருந்தார்,  யார் எப்படி என்றே தெரியவில்லை அவரை கொன்று விட்டனர். சதாசாரம்- நன் நடத்தை உடையவரான உங்கள் ஆட்சியில் இப்படி நடக்கலாமா?  அகால ம்ருத்யு வர காரணமே  அரசனின் குற்றமாக சொல்லப் படும். கலி காலத்தின் செயல் என்றாலும் நல்ல மனிதர் என் கணவன், அவருக்கு ஏன் இந்த கொடுமை ? நானும் யோசித்து பார்க்கிறேன் எவருமே அவருக்கு விரோதி இல்லை. எந்த கெட்ட வழக்கமும் அவருக்கு கிடையாது.  நால் திசையும் இருண்டு விட்டது போல உணருகிறேன்.  தன் கணவனை புகழ்ந்தாள். அஸூயை இல்லாதவன், பிரியமாக பேசுவான், யாரையும் அதட்டி பேசி கூட கேட்டதில்லை, குணவான், மற்ற நண்பர்களும் அவ்வாறே நற்குணம் உடையவர்களே.    அவர் கூடவே இளம் வயது முதல் அத்யயனம்- வேத பாடங்களை படித்தவர் மாக்ஷிக ஸ்வாமின் என்பவரை நான் சந்தேகிக்கிறேன். அவருக்கு அபிசார வித்தை தெரியும்.  என் கணவருடன் கல்வியிலோ, மற்ற பெருமைகளை அவர் அடைந்த பொழுது தனக்கு அந்த பெருமைகள் கிடைக்கவில்லை என்று பொருமிக் கொண்டிருந்த அந்த அந்தண துரோகி தான் என்று எனக்கு சந்தேகம். மேலும் பலவாறாக திட்டினாள்.

அரசன் அவனை அழைத்து வர ஆணையிட்டான். அந்த பெண்ணோ அவன்  ஏவல் முதலிய மாய மந்திரங்களை அறிந்தவன். தான் பிழைக்க என்ன வேண்டுமானாலும் செய்வான். நேரடியாக அவனை பகைத்துக் கொள்ள வேண்டாம் என்றாள். வேறு என்ன செய்ய? அவன் தான் குற்றவாளியா என்று அறிந்தால் தானே தண்டனை கொடுக்க? எப்படி அறிவேன் என்று யோசித்தான்.  நிரபராதியாக இருந்து விட்டால் தவறு அரசனை பாதிக்குமே. 112/398

அந்த பெண்ணை பார்த்தாலும் வருத்தமாக இருந்தது. அவள் உயிருடன் இருப்பதே தன் கணவனுக்கு இழைத்த கொடுமைக்கு அந்த சக மாணவனை தண்டிக்கச் செய்வது தான் என்றாள். ஏதோ தோன்ற த்ரிபுவனேஸ்வர் ஆலயம் சென்றான். கலி காலம்  குற்றங்கள் மலிந்து விட்டன என்று யாரோ இருவர் பேசிக் கொண்டிருந்தனர். மனமுருகி பிரார்த்தனை செய்தான். கனவில் ஒரு குரல் கேட்டது. கோவிலின் வெளி ப்ராகாரத்தில் அரிசி மாவை பரப்பி வை. அதன் மேல் யார் மேல் சந்தேகமோ இரவில் அவர்களை நடக்கச் சொல். தவறு இழைத்தவன் காலடியில் நிழல் தெரியும்.  என்ன இருந்தாலும் மன உளைச்சல் இருக்கும் அல்லவா? அதுவே காட்டிக் கொடுத்து விடும். அரசனும் அவ்வாறே செய்ய குற்றவாளி பிடிபட்டான்.  அந்தணன் என்பதால் தண்டனை அளிக்க தயங்கி தண்டிக்கப்பட  வேண்டியவன்   (அது ஒரு வித தண்டனையாம் ) என்று அறிவித்து விட்டு தன் மந்திரிகளிடம் எப்படி தண்டிப்பது என்பது பற்றி ஆலோசித்துக் கொண்டு இருக்கையிலேயே  (அது ஒரு வித தண்டனையாம் ) ஆனால் அந்த பொல்லாத மனிதன் தாராபீடன் என்ற அரசனின் சகோதரனை தன் தந்திர முறையால்  தன் வசமாக்கிக் கொண்டான்.   இளம் ஒட்டகங்கள்  தாழம்பூவின்  தண்டை முள் இருந்தாலும் உண்ண விரும்பி தாழைச் செடியை சிதைக்குமாம். அதற்கு தாழம்பூவின் பெருமை தெரியாதது போல இந்த மாயமந்திரம் அல்லது சூன்யம் வைப்பது போன்ற -witchcraft என்று சொல்லப் படும் முறைகளை பயன் படுத்தும் அறிவிலிகள் ஒட்டகம் தாழம்பூவின் அருமை தெரியாமல் அதை சிதைப்பதை போல என்று கவி சொல்கிறார்.  இந்த நிகழ்சிக்குப் பிறகு அரசர்கள் தங்கள் படையில் இது போன்ற தந்திரம் அறிந்தவர்களையும் ஒரு பிரிவாக சேர்த்துக் கொள்ள ஆரம்பித்தனராம். அதனால்  மற்றொரு மந்திர வாதியைக் கொண்டு அவனுக்கு மரண தண்டனை அளித்து விட்டான். நேரடியாக அரசனாக தான் ஒரு அந்தணனை கொல்ல முடியாது என்பதால்.

நேர்மையாக ஆண்ட இந்த அரசனும் எட்டு ஆண்டுகள், எட்டு நாட்களே அரசனாக இருந்தான். தன்னடக்கம் மிக்கவனாக தன் பொறுப்பை நல்லபடியாக நிறைவேற்றிய  திருப்தியுடன் பர லோகம் சென்றான்.  தாரா பீடன் பட்டத்துக்கு வந்தான்.   இவன் தான் ஸுனியம், மாயமந்திரம் செய்பவர்களை ஆதரித்தான்.  சகோதர துரோகி.  இயல்பாக பயங்கரமானவன். சண்டன் என் அறியப் பட்டவன்.  அந்த பூமண்டலத்துக்கு நாயகனாக வந்தான்.  விதி என்று தான் அவனை ஏற்றுக் கொண்டனர்.  துர் குணமே உருவானவன். அறிவிலி. இவ்வளவு இருந்தும் அரச பதவியை அடைந்தான்.  மயானத் தீ போல என்று வர்ணிக்கிறார் கவி.  அந்தண துவேஷம் உடையவன் அவர்களை கடுமையாக தண்டித்தான்.  மாய மந்திரம் சூன்யம் செய்யும் மனிதர்களை ஒழித்தான்.  தெய்வ நம்பிக்கையும் இல்லாமல் நம்பிக்கை உள்ளவர்களை தண்டித்தான்.   மற்றவர்களை அழிக்க தான் பயன்படித்திய முறைகளே அவனுக்கு எதிராக திரும்பின.  நெருப்பு புகையை கிளப்பும்.  கண்களை மறைக்கும்.  அதுவே மேகமாகி மழையாக பொழியும் பொழுது அந்த நெருப்பையே அழிக்கும். அதனால் நாட்டில் சில காலம் நிம்மதியின்றி  இருந்தனர். ஆனாலும் அவன் நல்ல கதி அடையும் படி நன்மையும் செய்யவில்லை. நான்கு ஆண்டுகளும் ஆறு நாட்களுமே அவன் ஆட்சி நீடித்தது.

அதன் பின் லலிதாதித்யா பட்டத்துக்கு வந்தான். நல்ல  அரசன் என்று புகழ்ந்தனர். தன் படை வீரர்களுக்கு நல்ல பயிற்சி அளித்தான். ஜம்பு த்வீபம் என்பதே கஜ ராஜன் போல என்பர். அது  அவன் ஆட்சியில் நலமாக செழித்து வளரச் செய்தான். பெரும் படையுடன் சென்ற இடமெல்லாம் சிற்றரசர்கள் தாங்களே வந்து அடி பணிந்தனர்.  படையின் வீரர்கள் ஆரவாரமாக தங்கள் முரசங்களை அடித்துக் கொண்டு வருவதைக் கேட்டதுமே நடுங்கி விடுவராம். சிவந்த கொடூரமான கண்களும் அவர்கள் எதிர்ப் பட்டாலே பெண்கள் தங்கள் கணவன் மார்கள், குழந்தைகளை எண்ணி கண் கலங்குவராம்.  ஸூரியன் தவறாமல் உதிப்பதும் உலகை சுற்றி வருவதும் போலவே அரசனும் பல நாடுகளை நோக்கி படையெடுத்துச் செல்வதும், எதிர்த்தவர்களை வெற்றி கொள்வதுமாக நாட்டில் இருப்பதை விட அதிகமாக இந்த வீரச் செயல்களுக்காக சுற்றிக் கொண்டிருந்தானாம்.

யமுனை – கங்கை யின் இடைப்பட்ட இடங்களுக்கும் படையெடுத்துச் சென்றான். சென்ற இடமெல்லாம், மகா ராஜா என்றழைத்தனர்.  யாத்திரையாக தேசத்தின் பல பாகங்களையும் சுற்றி வந்தான்.  ஆங்காங்கு இருந்த அரசர்கள், பெரும் செல்வந்தர்கள்  வரவேற்று உபசரித்து, பரிசுகள் கொடுத்து அனுப்பினர். 

ஏன்? எதற்காக அவனிடம் பயம்? ( கல்ஹணர் முதலிய கவிகள், பாரத, பாகவத கதைகளை அனைவரும் அறிவர் என்பது போல சொல்லிக்கொண்டே செல்கிறார்கள்.  இது ஒரு விஸ்வாமித்திரின் முன்னோர்களில் ஒருவரான குசனாபன் என்ற அரசன் பற்றிய வரலாறு. ஒரு  முறை ராஜகுமாரிகள் உபவனத்தில் இருந்த சமயம் வாயுதேவன்  அவர்களை விரும்பினான்.  இளம் பெண்கள், நாங்கள் எங்கள் தந்தையின் பாதுகாப்பில் உள்ளவர்கள். அவரைக் கேள் என்று மறுத்து விட்டனர்.  வாயு தேவன் கோபத்துடன் அவர்கள் உடலை கோணலாக்கி விட்டு மறைந்து விட்டான்.  அவர்கள் அழுது  கொண்டே தந்தையிடம் சொன்னார்கள்.  செய்வதறியாமல் திகைத்த அரசனிடம் ப்ரும்மதத்தர்  என்ற முனிவர் வந்தார்.  அவர் தாயார்  சோமதத்தா. ஸூலி என்ற முனிவரிடம் பிறந்தவர்.  அவர்  தான் மணந்து கொள்வதாக வாக்களித்து அதே போல, மண மேடையிலேயே ஒவ்வொருவரையும் கை பற்றிய உடன் அவர்கள் உடல் நேராகி விட்டதாகவும் ஒரு புராண கதை. இதை ஏன் இங்கு சொல்ல வேண்டும் என்றால், அது போல தங்கள் குடும்பத்து பெண்களை பாழாக்கி விடுவானோ என்று பொது மக்கள் பயந்தனராம். அதற்கு ஏற்றாற் போல்  போல கண்ட இடத்தில் அடித்து ஊனமாக்கி மகிழ்ந்தானாம். )

கன்யா குப்ஜம் (கூனல் விழுந்த பெண்கள் என்று பதப் பொருள் – தற்கால  கன்னோஜ்)  என்ற இடத்து அரசன் யசோவர்மன் என்பவன் அவனை எதிர்த்து போராடினான். அத்துடன் லலிதாதித்யாவின் அட்டூழியமும் முடிவுக்கு வந்து விடும் என எதிர்பார்த்தனர்..  பதிலடி கொடுத்து எழ முடியாமல் தோற்றவன் லலிதாதித்யன் பிரளயாதித்யனாக மறையச் செய்து விட்டானாம்.  பெயரில் மட்டும் ஆதித்யனை வைத்திருக்கிறாய், நிஜ ஆதித்யன் எப்படி சுடுவான் தெரிந்து கொள் என்று எங்கள் அரசன் காட்டி  விட்டான்  என்று பாடல்களால் மக்கள் யசோ வர்மனை புகழ்ந்தனர்.

 யசோ வர்மனுடைய அரச சபையில் இருந்தவர்களும் கண்ணியமும் நற் பண்புகளும் நிறைந்தவர்களாக இருந்தனர்.  சந்தன மரக் காட்டில் அருவியில் சந்தண மணம் வருவது போல.அவர்கள் நீதி முறை தவறாமல் போரிட்டனர். லலிதாதித்யன்  எதையும் மதிப்பவன் அல்லவே. தோற்றதை காட்டிக் கொள்ளாமல் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டானாம்.

லலிதாதித்யன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டான் என்றவரை பதிவு செய்த அரச அலுவலர்கள் விவரங்களை முழுவதும் செய்யவில்லை என்று கவி சொல்கிறார்.  அந்த நாட்களில் விவரமாக எழுதி வைப்பதும் ஒரு அவசியமான செயலாக இல்லாத காரணத்தாலேயே பல சரித்திர சம்பவங்கள் உலகுக்கு தெரியாமல் போய் விட்டன. பொது மக்களின் வாய் மொழியும், நாட்டுப் பாடல்களும் தான் சான்றாக கிடைத்துள்ளன.

யசோ வர்மனின் சபையில் பவபூதி என்ற பிரசித்தமான வாக்பதி என்றே போற்றப் படுபவர் இருந்தார்.  அவனுடைய ஆட்சியும் மிகவும் நேர்மையாகவும் மக்கள் நலனைக் காப்பதாகவும்    இருந்தது. லலிதாதித்யன் என்ற கொடுங்கோலன் வந்து அவனை ஏமாற்றி தரை மட்டமாக ஆக்கி விட்டான் என்று சரித்திரம்.  அதோடு நிற்காமல் நாட்டின் செல்வத்தை சுரண்டி எடுத்துக் கொண்டான். தன்னுடைய வீட்டின் முற்றம் போல உபயோகித்தான் என்பர். அழிவின் எல்லைக்கே கொண்டு சென்ற பின் தான் நகர்ந்தான்.

இதற்குள் லலிதாதித்யனின் சேனைத் தலைவர்களும், போர் வீரர்களும் சலிப்பு அடைந்து விட்டனர்.    அதையும் பொருட் படுத்தாமல், கிழக்கு கடல் வரை சென்றான்.  கலிங்கத்தின் யானைகள் பிரசித்தமானவை.  ஒவ்வொன்றும் திருமகளின் அருகில் உள்ளவை போன்ற உடல் அமைப்பும் மங்களகரமானவை என்றும் மதிக்கப் பட்டவை.  கலிங்க தேசம் கௌட மண்டலம் எனப்படும். அந்த தேசத்து யானைகள் அனைத்தையும் கைப்பற்றிக் கொண்டவனாக தென்திசை நோக்கிச் சென்றான்.  

கடலோரமாகவே அவன் படை சென்றது.  வழியெல்லம் அடர்ந்த காடுகள். அங்கிருந்த மலை வாசிகள், பழங்குடிகள். தலையில் தாழை மடலை அலங்காரமாக அணிந்திருந்தனராம்.  கர்ணாட என்ற மக்கள்.  படையைக் கண்டவுடன் சரணடைந்து விட்டனராம். அவர்கள் அணிந்திருந்த தாழை மடல் தான் அவர்கள் கௌரவமாக எண்ணியிருந்தனர். பதவிக்கு அடையாளம் போல. அவை  நழுவி விழவோ, மற்றவர்களால் விழச் செய்வதையோ  பொதுவாக அனுமதிக்க மாட்டார்கள்.    

விந்த்ய மலையிலிருந்து தென் திசையில் காவேரி நதிக்கரை வரை ஒரு பெண் ரட்டா என்பவள் துர்கையைப் போலவே மதிக்கப் பட்டாள். அவள் அந்த பிரதேசத்தின்   அரசி.   அளப்பரிய சக்தி வாய்ந்தவள் என்றனர். (   ராஷ்ட்டிர கூடர்கள் வம்சம்)அவளுடன் மோதாமல் கடந்து சென்றான்.

காவேரி தீரம் வந்தான். தென்னை, பனை மரங்களும் வளமான பூமியும் கண்களை கவர்ந்தன.  இளனீர் பதனீர் என்று அனுபவித்தான்.  அவன் வீரர்கள் அந்த இடத்தில் தங்கி சிரமபரிகாரம் செய்து கொண்டனராம்.  பின் சந்தனக் காடுகளில் நுழைந்தால் மரத்தைச் சுற்றி பாம்புகள். அதையும் கடந்து வில்வமரங்கள் வனமாக  நிறைந்திருந்த  பகுதியில் சுற்றினர்.  வடக்கில் பெரும் பாறைகளே கண்டவன் சமுத்திரக் கரையில் சமுத்திரத்தையும் அதன் நடுவில் இருந்த தீவுகளையும் பார்த்து வியந்தபடி மேற்கு கரை சென்றான். கொங்கண தேசம் வழியாக சென்றவனை வழி நெடுக அரபிக் கடலின் குளிர்ந்த காற்று உத்சாகம் அளித்ததாம்.  மேற்கு திசை பச்சிம – பசுமையானது எனப்படும். கொங்கண தேசத்தில் ஏழு பிரதேசங்களையும் (கேரள, துலுங்க, கோவராஷ்டிர (கோவா) மத்ய கொங்கண, கேரடஹ, வரலட்டா, பெர்பெரா)  பசுமை நீங்கும்படி தபிக்கச் செய்தவனாக தன் யாத்திரையை தொடர்ந்தான்.  களைப்போ தயக்கமோ இன்றி ஸூரியனின் குதிரைகள் போல இடை விடாமல் சென்றான் என்று வர்ணிக்கிறார்.

தாது நிறைந்த விந்த்யமலையின் நிறமே சிவந்து, கோபக்கனல் தெறிப்பது போல இருந்ததாம். அதை நெருங்காமலேயே அவன் படைகள் நகர்ந்தன. 

மேற்கு கரையோரமாகவே வந்து துவாரகா வந்து சேர்ந்தான்.  படை வீரர்கள் துவாரகையை கண்டதும் பரவசமானார்கள்.  அவந்தி வந்து சேர்ந்தனர். மகா காலேஸ்வரர்  உறையும் இடம். அங்கு யானைகள் பிளிறின.

தேசத்தின் பெரும்பாலான  இடங்களை சுற்றி வந்து  பலரை போரிட்டும், சிலரிடம் கப்பம் வசூலித்தும்  தன் ஆளுமையை காட்டி வந்தவன், வடக்கு நோக்கி வந்தான். ராஜஸ்தான் என்ற இடம்.  இயல்பிலேயே வீரர்களான மக்கள்.  ஒவ்வொருவரும் பயிற்சி பெற்ற போர் வீரர்களே.  பல இடங்களிலும் மலைக் குன்றுகள் – இந்திரன் பறக்கும் மலைகளின் இறக்கைகளை வெட்டிய பொழுது விழுந்தனவாம்.  காம்போஜ தேசத்து குதிரைகள் பிரசித்தம். அவைகளின் இடத்தை எருமைகள் எடுத்துக் கொண்டு விட்டன போல கறுத்த பெரும் எருமைகள் நிறைந்து இருந்தன.    பிரதேச பழங்குடியினர், அந்த இடத்தை விட்டே வெளியேறி மலைகளீல் வசிக்கலானார்கள்.  குதிரை முகம் கொண்டவர்களை தவிர்க்க? –

(புத்த மதம் காந்தாரம் முதலிய தேசங்களில் பரவிய சமயம் தேசத்தின் எல்லை கடந்த இடங்களில் இருந்தும் மக்கள் அந்த பகுதிகளுக்கு வந்தனராம். அவர்களில்  துக்காரா: – துருக்கியர்களை குதிரை முகத்தினர் என்று குறிப்பிடுவது  வழக்குச் சொல்லாக இருந்ததாம்.  – ஆங்கில உடையாசிரியர்) .

மும்முனி என்ற அரசனை தோற்கடிக்க மூன்று முறை போர் புரிந்தான்.  தானே வென்றவனாக அறிவித்து விட்டான். பௌத்தர்களை எதிர் கொண்டான். அவர்களை முகத்தின் உணர்வுகளை அறிந்து கொள்ளவே முடியவில்லை. அந்த அளவு கட்டுப் பாட்டுடன் இருந்தனராம்.  லலிதாதித்யனோ அவர்களை காணவே விரும்பாமல்  காட்டு ஜனங்கள், வெளுத்த நிறமும் வானரம் போன்ற முகமும் என்று தூற்றி விட்டு  திரும்பி விட்டான்.

Darada தரதா என்ற பழங்குடியினர் சதா மதுவை குடித்துக் கொண்டிருந்ததை அவனால் பொறுக்க முடியவில்லை. அதை விட அதிகமாக மலைக் குகைகளின் அருகில் ஸூரியோதயம் ஆனதும் வானவில் போல பளிச்சிட்ட மூலிகைகளை வெறுத்தான். கஸ்தூரி மிருகத்தின் அருகாமையால், வெளுத்த கேஸர குங்கும வாசனைகளை சேனை வீரர்கள் ரசித்தனர்.

அடுத்து ப்ராக்யோதிஷபுரம்,  ஒரு காலத்தில் பிரபலமாக வளமாக இருந்த தேசம் ஸூன்யமாகி விட்டிருந்தது.  இன்னமும் வனங்கள் தீயில் கருகிக் கொண்டிருந்தன. பாலைவனம் விசாலமாக இருந்தது.  மணலே சமுத்திரம் போல பரவி இருந்த து.  யானைகள் அதில் நடக்கத் திணறின.  முதலை வாயில் அகப்பட்டவை போல தடுமாறின.  அவைகள் தங்கள் மனைவிகளின் மார்பகங்களை நினைவூட்டின போலும்.   போர் வீரர்களின் மன நிலை முற்றிலும் மாறி விட்டது.  வீடும், மனைவி மக்களுமே அவர்களை மனதை ஆக்ரமித்தனர்.

குருக்ஷேத்ரம் வந்து சேர்ந்தனர்.  பாரத போரில்  பூமி அதிர, ஒடுங்கி இருந்த நாகங்கள் கருடனின் பயத்தால் இன்னமும் வெளி வராமல் பதுங்கி இருந்தனவாம். தன் விஜயப் யாத்திரையில் சேமித்த பெரும் செல்வத்தோடு தன் நாடு வந்து சேர்ந்தான்.  யானையை அதன் மஸ்தகத்தில் அடித்து விட்டு வரும் சிங்கம் போல இருந்தானாம்.

ஜாலந்தரம் என்ற இடம் இரும்புக் கோட்டையுடன் தென் பட்டது. மிக நீளமான அந்த கோட்டையில் தோற்ற அரசர்களை கொடுமையாக வதைத்தான். சிறை பிடித்து கொண்டு வந்தவர்களுக்கு தோள்களில் தன் அடியாட்களைக் கொண்டு அடையாளமிட்டானாம்..  துருக்கர்கள் தலையை பாதி மழித்து, விலங்குகளைப் போல நடத்தினான்.  அவனால் பாதிக்கப் படாத ஒரு நகரமோ, கிராமமோ, கடலின் தீவுகளோ, தன் கொடுமையை காட்டாத இடமே இல்லை எனும்படி கொடுங்கோலன்.

ஏராளமான செல்வம் இருந்ததால் பல நகரங்களை நிர்மாணித்தான்.  सुनिश्चित – சுனிச்சித புரம், தர்பித புரம், फलपुरम् -பலபுரம், பர்ணோட்சம் க்ரீடாராம விஹாரம் நரசிங்கபுரம் என்று ஒவ்வொன்றையும்  அவன் அனுபவித்த தோல்விகளோ, அவமானங்களுக்கோ பிரதியாக அமைத்ததாக கவி சொல்கிறார்.  லலிதா என்ற புரத்தில் ஆதித்யனுக்கு ஒரு பெரிய கோவிலை கட்டினான். கிராமங்களுடன் கன்யகுப்ஜ பூமியை தன் அபிமானத்தை நினைவூட்டுவதைப் போல அந்த கோவிலுக்கு கொடுத்தான்.

ஹுஷ்க புரம் என்ற இடத்தில் முக்தஸ்வாமி என்ற பெயரில் பிரதிஷ்டை செய்தான். 

பெரிய விஹாரம் ஸ்தூபங்களோடு   கட்டிக் கொடுத்தான்.  ஜ்யேஷ்ட ருத்ரன் என்ற இடத்தில் பிராகாரங்களுடன் கட்டி, அதை பராமரிக்க பூமி, நகைகள் என்று எழுதி வைத்தான்.  விதஸ்தா என்ற இடத்தில் சக்ரதரன் என்ற விஷ்ணு கோவிலும் அதற்கான கிராமங்களும் நிலங்களும் எழுதி வைத்தான்.

மார்த்தாண்ட – ஸூரியனுக்கான கோவிலை அத்புதமாக கட்டி  அதன் அருகில் பெரிய அழகிய நகரையும் நிர்மாணித்தான்.  பல விதமான வசதிகளுடன் பல கிராமங்களை ஏற்படுத்தினான்.

பரிகாசமாக நான் பூலோக வாஸவன் – இந்திரன்  என அறிவித்து,  வாஸவாவாஸம் என பரிகாசபுரம் என பெயரிட்டு, அங்கு பகவான் கேசவனை- ஸ்ரீ பரிகாச கேசவன் என பெயரில் பிரதிஷ்டை செய்தான்.  முத்துக்களாலும்,  மணிகளாலும் அலங்கரித்து ஸ்ரீ முக்தா கேசவன் என ஒரு இடத்திலும், மகா வராஹம் என்ற உருவில் பொன்னாலான கவசத்துடன் ஒரு இடத்திலும், வாரகமாக பாதாளம் சென்றவருக்கு இருளில்  ரவி கிரணம் போல ஒளி விச செய்தானாம், கோவர்தன தரன் என்ற தேவனுக்கு வெள்ளியால் ஆலயம்- கோகுலத்து பால் நிறத்தில் வெண்மையாக ஒளி விச  விளங்கியதாம்.

இருபதாயிரம் கைகளுடன் பரம சிவனின் உருவம் செய்து த்வஜத்தின் மேல் தைத்யர்களின் எதிரியான கருடனை அதில் ஸ்தாபித்தான்.

பெரிய அளவில் நாற் கால் மண்டபங்கள்,  பெரிய பெரிய சைத்ய க்ருஹங்கள் -ஓய்வெடுக்கும் இடங்கள், இவற்றுடன் அரண்மனையை  அலங்காரமாக கட்டிக் கொண்டான்.

பெரிய அளவில் ஸ்ரீமான் ப்ருஹத் புத்தர் என்ற விக்ரஹமும், பொன்னும் வெள்ளியும் ஏராளமாக செலவிட்டு கட்டினான். அமாத்யர்களும், சேவகர்களும், பல தேசத்து அரசர்களையும் வேலை வாங்கி உலகிலேயே இல்லாத அத்புதமான இடமாக ஆக்கினான்.

அவன் மனவி கமலவதி, வெள்ளியாலான கமலாகேசவன் என்ற கோவிலை கட்டினாள். அமாத்யன் மித்ர சர்மா மித்ரேஸ்வரம் என்ற சிவன் கோவிலையும்

லாட என்ற இடத்தில்  ஸ்ரீகய்யாஸ்வாமி என்பதை   கய்யா என்ற பெயருடைய அரசனும் கட்டினான். அத்துடன்  அத்புதமான ஸ்ரீமான் கய்யவிஹாரம் என்பதையும் கட்டினான்.  பிக்ஷுவான சர்வக்ஞ மிஸ்ரன் மகான் ஜைனரைப் போன்றே இருந்தவர், சங்குண விஹாரங்கள் என்பதை பல இடங்களில் அரசனின் சின்னத்துடன்  உயரமான ஸ்தூபத்துடன் நிர்மாணித்தார்.  அங்கு ஜைனருடைய பொற் சிலை அமைக்கப் பட்டது.   ஈசான தேவி என்ற மற்றோரு மனைவி சுதா ரஸம் போன்ற தெளிவான நீருடன் குளம் வெட்டினாள். மற்றொருவள்,  சக்ரமர்திகா என்பவள், அரசனின் பிரிய மனைவி, ஆரோக்ய சாலைகளை  ஏழு சக்ர புரங்களில் நிறுவினாள்.  பபடன் -भपट-   ஆசாரியர், தன் பெயரில் படேஸ்வரன் என்ற பெயரில் ஒரு ஊரும்,  மேலும் பலரும் பலவிதமாக தங்கள் பெயர் பொறித்த இடங்களை ஸ்தாபித்தனர்.

சங்குண என்ற மந்திரியால் ( சிலர் சீன தேசத்து யாத்திரிகர் என்பர்)  சைத்யங்கள் என்ற ஓய்வெடுக்கும் மண்டபங்களோடு விஹாரங்கள் கட்டப் பட்டன. சங்குண மந்திரியின் மனைவியின் சகோதரன் பிக்ஷுகீசான சந்திரன் என்பவன், தக்ஷகன் அனுக்ரஹத்தால் செல்வம் – தனம் பெற்று ஒரு விஹாரம் அமைத்தான்.  இவ்வாறு தன் நாட்டை பொன் மயமாக செய்த அரசன்  அதன் பின் நற்குணவானாகவும் உதாரமான கொடையாளியாகவும் மகவான் என்ற இந்திரனையும் புறந்தள்ளி முன் உதாரணமாக சொல்லும் அளவு பிரசித்தி அடைந்தான்.

யதேச்சையாக சொன்ன சொற்கள் கூட ஆணையாக ஏற்றுக் கொள்ளப் பட்டனவாம்.  அவர் முகத்திலிருந்து வெளி வந்தாலே அந்த சொல்லுக்கு மதிப்பு தானே வந்து விடும், தேவர்களே கூட   மறு சொல் சொல்ல முடியாது என்பதாக மக்களிடையே பேச்சு உலவியது. நாவல் பழங்கள் அதன் பருவ காலத்தில் மட்டுமே கிடைக்கக் கூடியது.  திடுமென நினைத்துக் கொண்டு னாவல் பழங்கள் கொண்டு வா என்று ஆணையிட்டானாம்.  உடன் இருந்த மந்திரிகள், மற்றாவர்கள் திகைத்து என்ன செய்வது என்று யோசித்தனராம்.  எங்கிருந்தோ ஒருவன்  அரசனை பார்க்க வந்தவன்  வணங்கி தான் யார் என்பதைச் சொல்லி அந்த  பழங்களை  உபாயனமாக – பரிசு பொருளாக ( நாட்டின் அரசனயோ, குருவையோ, கடவுளர் சன்னிதிகளுக்கோ ஏதாவது கொண்டு செல்வது உபாயனம் எனப்படும்).

விட்டானாம்.   அரசனுக்கே வியப்பு. அவன் புருவ அசைப்பில் அதை புரிந்து கொண்ட சிறப்பு பாதுகாப்பு அதிகாரி, மரியாதையுடன் வந்தவனிடம் யார், எங்கிருந்து வருகிறீர்கள் என்று கேட்டானாம். ‘அரசன் விரும்பி ஒரு பொருள் கிடைக்காமல் போவதாவது என்று தேவலோக இந்திரன் தன் நந்தன வனத்திலிருந்து இந்த பழங்களையும் ஒரு செய்தியையும் என்னிடம் கொடுத்து அனுப்பினார்.’ 

சுற்றியுள்ளவர்களை அனுப்பிவிட்டு அரசன் தானே செய்தியை கேட்க தயாரானான்.  இந்திரனின் தூது இது’ ஓ அரசனே! நண்பனாக நான் அனுப்பிய செய்தி இது. வேறு உட்பொருள் எதுவும் இல்லை. கேளுங்கள்.  முன் பிறவியில் ஒரு ஏழை குடியானவனாக இருந்தீர்கள். அந்த கிராமத்து பணக்கார நிலத்தின் சொந்தக்காரர்  தன் நிலத்தில் வேலை செய்பவரை மிக் கடுமையாக வேலை வாங்குவார்.  வேணிற்காலத்தில் ஒருநாள், தாங்க முடியாத தாகம் வரட்ட, வெய்யிலின் கடுமையாலும் நீர் இருக்கும் இடத்தைத் தேடிச் சென்றீர்களாம்.  எங்குமே  தென்படாமல் போகவும் மயங்கி விழும் நிலையில் அந்த வீட்டின் உள்ளே இருந்து ஒருவர் வந்து குடிநீரும் உண்ண உணவும் கொடுத்தனராம். கை கால்களை கழுவிக் கொண்டு சாப்பிட ஆரம்பித்த சமயம் உங்களைப் போலவே வெய்யிலில் வாடி, களைத்த மற்றொருவர் அங்கு வந்தாராம்.   அவரும் அதே போல பசியும் தகமும் வாட்ட இருந்ததைக் கண்டு பாதி உணவையும் நீரையும் கொடுத்து உதவினீர்களாம்.  அந்த செய்கை தான் உங்களுக்கு தேவலோகத்தில் பல புண்யங்கள் செய்த பலனை கொடுத்து அரசனாக அடுத்த பிறவி அடைந்தீர்கள்.

காலத்தில் செய்யும் உதவி மிக சிறந்தது.  பல அறிவில்லாத செயல்களை செய்தவர்கள் உலகில் இருப்பார்கள். மனப் பூர்வமாக அந்த ஏழைக்கு உயிர் கொடுத்த அந்த தண்ணீர்  சகல பாபங்களையும் போக்கி விட்டது.  விளை நிலத்தில் விதை விழுந்து சாதகமாக மழையும் பெய்து விட்டால் அந்த பயிர் வேகமாக வளரும்.  பல விதமான நற்செயல்கள் சொல்லலாம்.  தவித்த வாய்க்கு தண்ணீர்  கொடுப்பது மிக சிறந்தது என்பர்.  பாலைவனமானாலும் கூட ருசியான நீர் ஊறும்.  அதிலிருந்து  நதியாக பிரவகிக்கும்.  பிரியமான சொல் பாத்தியாக பயிரை வளர்க்கும்.  அதிலும் இரப்பவனும் சத்பாத்ரம்- தகுதியான யாசகனாக இருந்து விட்டால், அவன் மனம் குளிர்ந்து செய்யும் ஆசிகள் கண்டிப்பாக நன்மைகளைத் தரும்.   கொடை- தானம் என்பதும் மரம் போல வளரும். கல்பதரு- கேட்டதைக் கொடுக்கும் தேவலோக மரம் போன்றது.

 காஸ்மீர தேசத்தில்  ஒவ்வொரு ஆண்டும் ஆரம்பத்தில் சில நாட்களே மேகம் கறுத்து மழை பெய்யும். பொழியும்.  அதன் பலன்  மரங்கள் வளர்ந்துஆண்டின் முடிவில் பலன் தரும்.   திரும்பவும் பழங்கள்  அடுத்த ஆண்டு மழை வர வேண்டும்.  இது ஒரு தொடர் நிகழ்ச்சி.   அது போல இது வரை செய்த நல்வினைகளின் பலன் இந்த அரச போகமும், பதவியும்.  ஒரு நாள் முடிவுறும். வரும் காலத்துக்காக இன்னமும் செய்ய வேண்டியவை உள்ளன.   இந்திரனுக்கு பருவ காலங்களை சரிவர அளித்து பூமியின் வளத்தை காக்கும் பொறுப்பு இறைவன் கொடுத்தது.  காலம் விரைவாக சென்றுவிடும். மீதி வாழ் நாட்களையும் வீணாக்காமல் கவனமாக இரு.  ஆயுளின் பிற்பகுதியில் இருக்கிறாய்.  அதை நினைவு படுத்த தேவேந்திரன் அனுப்பி வந்தவன் நான் ’ சொல்லி முடித்த விநாடியே தூதுவன் மறைந்து விட்டான்.

 முற்பிறவியின் தான் பலன் அதுவரை அனுபவித்தாய். அது  தீரும் சமயம் வந்து விட்டது.  அடுத்த பிறவிக்கான நற்செயல்களைச் செய் என்று அறிவுறுத்தியதாக புரிந்து கொண்டான்.

பரிகாச புரத்தில் வழக்கமாக பருவ காலங்களில் செய்யும்  சஹஸ்ர பக்த என்ற பெயரில் நடைபெறும் உத்சவங்களை விமரிசையாக செய்வித்தான்.  அந்த சமயம் லக்ஷத்துக்கும் மேல்  ஓராயிரம் யாத்திரிகர்கள் வருவார்களாம்.  தூதுவன் சொன்னது போல தன் தகுதியை திரும்பப் பெறுவது பொது நலன்களுக்கான செயல்களில் தான் உள்ளது, ஆயிரக் கணக்கான பக்தர்கள் வரவும், அவர்கள் தேவைகளை கவனித்து உணவும் உடையும், மற்றும் வசதிகளையும் செய்து கொடுத்தான்.  சம்பாவனைகள் – அவர்களின் கல்வியையும், கலையையும் ஆதரித்து தகுந்த படி செல்வமும் கொடுத்தான்.   லக்ஷ கணக்கான பக்தர்கள் வந்தும் கோலாகலமாக உத்சவங்களில் பங்கு கொண்டும்  மகிழ்ந்தனர்.  தனது நாட்டில் எந்த பிரஜையும், பசி என்றோ, இல்லாமை என்றோ வருந்தக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான். அந்தந்த பிரதேசத்து அதிகாரிகளுக்கு அதை விளக்கி  உத்தரவுகள் சென்றன. 

உடன் பிறந்த சகோதரன்  சங்குணன் என்பவன், கங்கண வர்ஷம் என்ற ரஸவாதம் –  ரசாயண சாஸ்திரம்-  கற்றவன்.  இரும்பையும் பொன்னாக்கும் வித்தை அறிந்தவன். அவன் ஏராளமான தங்கம் கொண்டு வந்து சேர்த்தான்.  பொற்றாமரை குளம் போல அவனது பொக்கிஷம் நிரம்பியதாம்.

ஒரு சமயம் பஞ்ச நதம்- என்ற இடம்- ஐந்து நதிகள் சங்கமம் ஆகும் இடம்- அரசன் பரிவாரங்களோடு செல்லும் பொழுது வழியில் கண்டனர்.  பிரவாகமாக இருந்த நதியை கடக்க செய்வதறியாது அனைவரும் திகைத்தனர்.  சங்குணன் ஒரு ஸ்படிக கல்லை அதில் வீசியதும், நதி வழி விட்டதாம்.  கரையேறியதும் அதே போல மற்றொரு ஸ்படிக கல்லை வைத்து நதியின் பழைய நீர் பிரவாகத்தை வரச் செய்து விட்டானாம்.   அந்த அளவு தந்திரங்கள் அறிந்தவன்.  அந்த செயலால் பிரமித்த அரசன் சங்குணனிடம் அந்த மணிகளை யாசித்தான்.

அவனோ சிரித்தபடி. என் கையில் தான் அந்த சக்தி உள்ளது. வெறும் மணியால் என்ன செய்வாய் என்றான். உன் கையில் அவை வெறும் கற்களாகவே இருக்கும் என்றான்.

சாதாரண மக்கள், தங்கள் கல்வியாலும், பயிற்சியாலும் சில அதிசயமான திறமைகளை அடைகிறார்கள்.  நீ அரசன், இதை விட பெரிய உயர்ந்த பொருட்களை எளிதாக அடைந்தவன்.  அதனிடையில் இதற்கு என்ன மதிப்பு என்றான்.

இதை உயர்வாக எண்ணினால், சமுத்திரத்தின் மணல் வெளியில் காத்திருக்க வேண்டும். அலைகளுடன் சமுத்திர ராஜன் தன் அலைகளுடன் உயர் மணிகளையும் கரைக்கு கொண்டு வந்து சேர்ப்பான்.  பெருகி வரும் அலையில் கண்ணுக்கு தென்படவே புண்யம் செய்திருக்க வேண்டும். அப்படி பிரித்து அறியும் திறன் பெற்றவர்கள் கண்டு கொள்வார்கள். அதற்கான சாதனைகளும் உண்டு.

என்றான்.  

அரசனோ,  இதற்கு சமமாக என்னிடம் உள்ள நல்ல நகைகளை, உயர் மணிகளில் எதுவேண்டுமோ தருகிறேன் என்றான். 

மகத தேசத்தில் உள்ள சுகத பிம்பம்- அதை யானையின் மேல் வைத்து கொண்டு வந்து கொடு – அது தான் இதற்கு ஈடானது.  சமுத்திரத்தில்  இறங்க என்ன உபாயம் செய்வாயோ, அதன் பின் உயர் மணிகள் உனக்கு, சம்சார சாகரத்தை தாண்ட எனக்கு சுகத விக்ரஹம் என பேரம் பேசினான்.

(சுகத Sugatha statue of Magadha –  போத் கயா என்ற இடத்தில் உள்ள பௌத்தர்களின் புண்ய க்ஷேத்ரம். திர்த்த யாத்திரையாக அவர்கள் செல்லும் இடம்.  இந்த சிலை மகத தேசத்தின் சிறப்பாக சொல்லப் படுவது. இதிலிருந்து ஒளி பரவும் என்பார்கள்.  80 அடிக்கு மேல் உயரமான  புத்த பகவானின் சிலை. தாமரை மலரில் தியானம் செய்யும் கோலத்தில் அருள் பாலிக்கும் உருவம். மஹா போதி mahabodhi temple- kOvil –  புகழ் பெற்ற சுற்றுலா மற்றும் புத்த மதத்தை அனுசரிப்பவர்களின் புண்ய யாத்திரை ஸ்தலம்.  ஒளியை உமிழும் Tang Buddhist Art –  (ARS Orientalis -Dorothy C Wong)

ஒரு புத்த விக்ரஹம் கொடுத்து மணிகளை பெற்றுக் கோண்டான் என்று கவி முடிக்கிறார். எந்த விக்ரஹம் என்பது தெளிவாக இல்லை.  வாக்கு சதுர்யம் உடையவனுக்கு எது தான் முடியாது? என்று கவியில் சொல்.

 அதை எடுத்துக் கொண்டு அரசன் தன் அரண்மனைக்கு வந்தான்.  அதன் பள பளப்பும் காந்தியும் இன்றளவும் காணலாம். கயிற்றினால் யானை மேல் கொண்டு வந்த சமயம் கட்டிய அடையாளமும் உள்ளது என்று கவி சொல்கிறார்.  127/398

பூமியும் தன்னை ஆள்பவனுடைய தகுதியை வைத்து நில வளத்தை அளிக்கிறாள். போலும்.  பலசாலியான நியாயமான அரசர்கள் தங்கள் ராஜ்யத்தில் பூமி நில வளம், நீர் வளம் குறையாமல் பார்த்துக் கொள்வதும் ஒரு சான்று.

ஒரு நாள் அரசன் வனங்களைத் தாண்டி இருந்த  பொட்டல் காட்டை நோக்கி தன் குதிரையில் சென்றிருந்தான். அந்த குதிரையும் புதிது பழக்கப்படுத்த படாத இளம் குதிரை,  இடமும் புதிது. பலர் வந்து கூடினர். அரசன் அவர்களுடன் வந்த ஒரு பெண் தள்ளி நின்று பாடுவதும் மற்றொருவள் ஆடுவதுமாக இருந்ததைப் பார்த்தான்.  இளம் குதிரையை பயிற்சி கொடுத்து பழக்கப் படுத்திக் கொண்டிருந்த அரசன் அவர்கள் இருவரும் அருகில் வந்து வணங்கி விட்டு செல்வதைக் கண்டான்.

அடுத்து வந்த சில நாட்களும் குதிரையை பழக்கும் சாக்கில் அந்த இடம் வந்தான். அதே பெண்கள் அதே போல பாட்டும் ஆட்டமுமாக அவன் கவனத்தைக் கவர்ந்தனர்.  வியப்புடன் அவர்களை வினவினான். யார் நீங்கள்? அந்த பெண்கள் சொன்னார்கள்.’இந்த கிராமத்து கோவிலில் நாங்கள் இருவரும் ஆடலும் பாடலுமாக சேவை செய்கிறோம். இதே ஊர்க் கார்கள் தான். எங்கள் தாய்  சொல்லி இந்த இடத்தில் தினசரி எங்கள் நடன பயிற்சிகளைச் செய்கிறோம் என்றனர். அந்த இடம் சுரவர்தமான என்ற ஸ்வாமியுடன் கூடிய கோவில் இருந்த இடம்.  என்ன நடந்தது ஏன் இப்படி மனித நடமாட்ட்மே இன்றி ஸூன்யமாக ஆனது என்பது எங்களுக்குத்  தெரியாது.    பரம்பரையாக இந்த கோவிலில் எங்கள் முன்னோர்கள் ஆடியும் பாடியும் சேவை செய்து வந்தனர் என்பதால் எங்களையும் எங்கள் பெற்றோரும் மற்றவர்களும் அதை விடக்கூடாது என்று கருதுகின்றனர்.

இதுவரை அரசன் அறியாத புது செய்தி. மறு நாள் தன் ஆட்களுடன் வந்து பரந்து விரிந்திருந்த நிலத்தை தோண்டச் செய்தான்.  அவர்கள் சொன்னபடியே இரு இடிந்த கோவில்கள் இருந்தன. அதன் வாயிற் கதவுகள் பூட்டப் பட்டிருந்தன. 127/398

அரசன் முன்னிலயில் கதவுகள் திறக்கப் பட்டன. உள்ளே, கேசவன் விக்ரஹம் ராம லக்ஷ்மணர்களால் நிறுவப்பட்டது என்ற வாசகங்கள் பீடத்தில் எழுதியிருந்தது.  அரசன் அதன் அருகிலேயே ஒரு கற்கோவிலைக் கட்டி கேசவ ஸ்வாமியையும்,  அருகிலேயே ராமஸ்வாமி என்ற பெயரில் ஒரு சன்னிதியையும் கட்டுவித்தான்.   லக்ஷ்மண ஸ்வாமின் என்ற சன்னிதியும் அவன் மனைவி சக்ரமர்திகா என்பவள், தனி கோவிலாக சக்ரேஸ்வர என்ற சிவன் கோவில் அருகில் நிறுவினாள்.

அந்த சமயம்,  ஒரு மனிதன் வந்து அரசன் காலில் விழுந்தான். அவன் தன் விருப்பம் போல  உலகை சுற்றி வருவதாக கிளம்பியவன்.  யாராலோ தண்டிக்கப் பட்டவன் போல இருந்தான்.  உடல் முழுவதும் காயம், ரத்தம் வடிய நின்றான்.   சிகதா சிந்து என்ற கடலோர பிரதேசத்து அரச சபையில் மந்திரியாக இருந்தவன்.  மணல் வெளியே கடலாக இருந்த இடத்தின் அரச சபையில் உண்மையாக உழைத்தவன். அரசனுக்கு ஆதரவாக இருந்தவன். ஒரு சமயம் லலிதாதித்யா என்ற அரசனுக்கு ஒரு சரியான வழி காட்டி உபகாரம் செய்தது  பிடிக்காமல் தண்டித்தானாம். என் வணக்கத்தை அரசனிடம் தெரிவித்து அவரை சந்திக்க வழி செய்யுங்கள் என்று வேண்டினான்.

இதைக் கேட்ட அரசன் தன் சேவகர்களிடம் அவனுடைய காயங்களுக்கு சிகித்சை செய்யும் படி உத்தரவிட்டதுடன் தான் அந்த சிகத சிந்து (ஸிகத -மணல் சிந்து சமுத்திரம்) அரசனை தண்டிப்பதாகவும் வாக்களித்தான்.

அந்த மனிதனோ தனிமையில் கடவுளை துதித்தான். இந்த உடலை நான் தரித்திருப்பதே பழி வாங்கத்தான்.  எனக்கு தீங்கிழைத்தவனுக்கு பதில் கொடுத்த பின் நானே உடலை தியாகம் செய்து விடுவேன்.  என் கண்ணீரை பகவானுக்கு நிவேதனமாக சமர்ப்பிக்கிறேன்.  சுகமோ துக்கமோ அவன் அறியாமல் நடக்காது என்று அறிவேன்.  எதிரி செய்த தீங்கு ஒன்றானால் அதை பத்து மடங்காக திருப்பித் தர வேண்டும்.  மலையடிவாரத்தின் கூக்குரல்  இடும் மனிதனுக்கு மலை எதிரொலியாக – பல மடங்காக திருப்பித் தருவது போல.  எப்படி அந்த இடம் செல்வேன். மூன்று மாதங்களாவது ஆகும் போய் சேர.  நான் போகும்வரை அவன் இருப்பானா?  அதனால் அரசே, அங்கு செல்லத் தேவையான தண்ணீரை கொண்டு செல்லச் செய்யுங்கள். பொட்டல் காடு, தண்ணீரே இருக்காது.அந்த தேசத்தில் என்னுடன் பிறந்தவர்கள் எனக்கு ஆதரவான  மற்றவர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் உதவுவார்கள். அதனால் அரசன் யாரும் அறியாமல் அரண்மனைக்குள் செல்ல உதவுவர். 

அரசன் லலிதாதித்யன் தன் படையுடன் புறப்பட்டான்.  பதினைந்து நாட்கள் அந்த மணல் வெளியில் நடக்கும் முன் வீரர்கள் சோர்ந்து போனார்கள்.  மேலும் இரண்டு மூன்று நாட்கள் கடந்த பின் தாகத்தால் தவித்த தன் வீரர்களை காப்பாற்ற என்ன செய்வது என்று மந்திரிகளுடன் ஆலோசனை செய்தான்.   மந்திரியாக இருந்தேன் என்று சொல்லி சந்திக்க வந்தவனையே வினவினான். என்ன செய்யலாம், அந்த மனிதனோ பலமாக சிரித்தான். என்ன நினைத்தாய்? எவ்வளவு நாள் தாங்கும் என்றா?  எந்த இலக்கை நினைத்து கேட்கிறாய் ? எதிரியின் நாட்டுக்கா? அல்லது யமனுடைய இடத்திற்கா?  நான் என் அரசனுக்குத் தான் உண்மையான ஊழியன். அவன் நன்மைக்காக உங்களை இந்த கடுமையான மணல் வெளி வழியே அழைத்து வந்தேன். என் உயிர் பெரிதல்ல. என் கடமையைச் செய்கிறேன்.  இது பாலைவனம். தண்ணீர் எங்குமே கிடைகாது. அரசனே  லலிதாதித்யா!  உன்னை எப்படி காத்துக் கொள்வாய்? யார் உன்னை மீட்க வரப் போகிறார்கள், பார்க்கலாம்.

இதைக் கேட்டு அறுவடைக்குப் பின் வைக்கோல் மட்டுமே மிஞ்சிய வயலில் பெரும் காற்றும் வீசினால்  அவை அலை பாய்வதைப் போல அந்த வீரரர்கள் உடலும் உள்ளமும் வலுவின்றி போக திகைத்தனர்.  அரசன் தன் கைகளை உயரத் தூக்கி அந்த மந்திரியிடம் சொன்னான். ‘அமாத்ய! உன் எஜமான விஸ்வாசத்தை பாராட்டுகிறேன்.  இந்த பாலை வனத்திலும் குளிர்ந்த நீரால் நீராட்டியது போல எங்கள்  உடலில் மயிர் கூச்சல் உண்டாகிறது.  இரும்பு கூட வஜ்ரத்தின் முன் செயலிழந்து போகும். ஏதோ ஒளி வீசும் மணி என நினைத்து அக்னியை விரலால் தொட்டவன்  போல நீதான் தவிக்கப் போகிறாய்.  நீயாக உன் கால்களை சிதைத்துக் கொண்டதும் வீணாகும்.  உன் அவயவங்களை இழந்து தண்டனை பெறுவாய்.  நீதான் இந்த உன் ஏமாற்று செயலின் விளைவை அனுபவித்து வருந்துவாய், இது நிச்சயம்.

 உன் கண் எதிரில் என் ஆணையை ஏற்று நீரை வரவழைக்கிறேன். உலகில் நீரை பாதுகாக்கும் தேவதையே எனக்கு உதவுவாள்.  நீ அறிவாயா? வைரம் நிறைந்த சுரங்கங்கள். இடி இடித்தால்  பூமி நடுங்க தன் ரத்தினங்களை பூமிக்கு மேல் பகுதிக்கு கொண்டு வந்து விடும்.  இவ்வாறு சொல்லிக் கொண்டே, தன் ஸூலத்தால், பூமியை பிளந்த பகவான் ருத்ரனை நினைத்தபடி தோண்ட ஆரம்பித்தான். விதஸ்தாவின் பரந்த நீர் நிலையை வேண்டினான். சைன்யத்தின் வீரர்களும் அதே போல ஈடுபாட்டுடன் தோண்டினர். உயிர் மீதுள்ள பற்றுதல் எந்த கடினமான செயலையும் எளிதாக்கும்.  பூதேவியே மென் முறுவலுடன்  வந்து அளித்தது போல நீரூற்று பெருகி வந்தது.

வீணாக தன் காலை தானே உடைத்துக் கொண்ட அந்த மந்திரி மட்டுமே தனிவழியில் சென்றான். அவன் ஸூளுரைத்தது உண்மையாகி  மரணம் அவனைத் தொடர்ந்தது சென்றது.

அந்த நீர் ஊற்று அதன் பின் குல நிம்னகா என் அழைக்கப் படுகிறது  கடுமையான பாலைவனத்திலும் அதன்  வடக்கில் இந்த நீர் பெருகி அந்த பிரதேசத்துக்கு தவறி வந்தவர்களுக்கு வாழ்வளிக்கிறது.   இந்த அரசன் செய்த பல நன்மைகள், அதிசயமான செயல்களை மக்கள் பாடலாக பாடுகின்றனர்.

பொதுவாக நதிகள் சம நிலத்தில் அமைதியாகச் செல்லும். அதுவே இடையில் பாறைகள் அகப்பட்டால் தடுக்கப் பட்டு இரைச்சலாக கடக்கும்.  இதேதான் பொதுவாக அமைதியாக உள்ள மனிதர்களைச் சீண்டினாலும் அவர்கள் கோபம் தாங்க முடியாமல் வெடிக்கும். இது கலி யுகத்தின் பிரபாவமா, அல்லது அந்த அரசனின் பதவி தரும் பொறுப்பா ? அமைதியான காலத்தில் நல்லாட்சி தரும் அரசன் இடர்கள் வந்தால் எவ்வாறு நடந்து கொள்வான் என்ற பாடமா?  அல்லது ஒரு சமயம் பயங்கரமாக நடந்து கொண்ட அரசனின் நடத்தைகளுக்கு இயற்கை செய்த எதிர் வினையா?

ஒரு சமயம் பரிஹாச புரத்தில் தன் அந்த:புர பெண்களுடன் மதுவை குடித்து மதி மயங்கி இருந்த சமயம் ப்ரவர சேனன் கட்டிய ப்ரவரபுரத்தை அழியுங்கள் என்று தன் ஆட்களுக்கு கட்டளையிட்டான். அது என் நகரத்தை விட அழகாக இருப்பதாகச் சொல்கிறார்கள் என்றான். மந்திரிகள் திகைத்தனர். சற்று தூரம் சென்று  குதிரைகளுக்காக சேமித்து வைத்திருந்த  வைக்கோல் போராக இருந்த இடத்தில் தீ வைத்து அது எரிவதைக் காட்டி செய்து விட்டோம் என்று அரசனிடம் காட்டினர்.    அவன் முகமே அந்த நெருப்பின் ஜுவாலையில் ஆந்தை முகமாக மாறி, அரக்கன் போல அட்டகாசமாக சிரிப்பதைப் பார்த்து மந்திரிகளும் பொது மக்களும் நடுங்கினர். இது தான் இவனுடைய உண்மையான முகமோ.

இந்த என்ன மன நிலை?  பொறாமை இந்த அளவு ஒரு மனிதனை நிலை இழக்கச் செய்யுமா? தானே பல நகரங்களைக் கட்டியவன், அழகாக பல காலமாக இருக்கும் ஒரு நகரத்தை எரிக்கச் சொல்ல வேண்டுமானால் அவன் மனதில் அடியில் இந்த அளவு க்ரூரமா இருந்தது.  கண்ணின் கோளாறு நிலவை இரண்டாக காட்டுவது போல மனதின் மறுபக்கம் பயங்கரமாக அவன்  தன் நிலையை இழக்கும் அளவு குடித்த மது வெளிக் கொணர்ந்து விட்டது போலும்.  314 ஸ்லோகம்

மறு நாள், மதுவின் தாக்கம் குறைந்து சுய உணர்வு வந்தவுடன்  தன் செயலுக்காக வருந்தினான். மனம் தன் புத்தியை இழந்து விட்டதா?  பச்சாதாபம் என்ற தீ அவன் மனதில் நிறைந்து சுட்டது. அழகிய நகரை எரித்த தீ என் மனதை வாட்டுகிறது போலும் என வருந்தினான்.  மரத்தின் உள்ளேயே இருந்து வாய்ப்பு கிடைத்த உடன் மரத்தையே அக்னி எரிக்குமாம். அது போல என் மனதின் உள்ளேயே இருந்த களங்கம்- பொறாமை என்ற தீ என்னை அழிக்கவே வந்துள்ளது.  தாங்க முடியாத வேதனையால் துடித்தான்.  சற்று பொறுத்து அரசன் செவி மடுக்கும் தெளிவைப் பெற்றபின் நகரை அழிக்கவில்லை என்பதைச் சொன்னார்கள்.  கனவில் இழந்த மகனை திரும்பப் பெற்றது போல அரசன் மகிழ்ந்தான்.  அமாத்யர்களைப் பாராட்டினான். நன்று செய்தீர்கள்.  அரசன் சுய நினைவின்றி பிதற்றலாக சொன்னாலும் அதை உடனே மறுக்காமலும், எது நன்மை என்று  அறிந்து செய்து விட்டீர்கள் என்றான். உசிதமான செயல்களை செய்வது போலவே தலைவனாக இருப்பவன் தவறாக சொல்வதையும் அதன் விளைவுகளை தவிர்க்க முன் யோசனையுடன் உடன் இருப்பவர்கள் செய்வதும், பின்னால் ஒருவேள தலைவனின் கோபத்துக்கு ஆளாவோம் எனத் தெரிந்தாலும் பொது நன்மையை நினைத்து மாற்றியது  மிக உயர்வு.   நல்ல மந்திரிகள் அதைத் தான் செய்வார்கள்.  தன் சுகமே பெரிது என நினைப்பவர்களை என்ன சொல்ல. (திக் – வேதனை, தவறு, வருத்தம் என்ற பல உணர்வுகளை அந்தந்த சமயத்திற்கு ஏற்ப பொருள் கொள்ள வேண்டும்)

மகாத்மாக்கள் நீங்கள். உங்களால் இந்த பூமியே சிறப்பு பெறுகிறது.  புலங்களை அடக்கத் தேரியாத என்னையும் மீட்டு அறிவு பெற செய்து விட்டீர்கள்.

தான் செய்த மற்றொரு தவற்றையும் நினைத்தான். கௌட தேசத்து அரசன்,  அவனை கொலையாளிகளை வைத்து கொன்றதை நினைத்தான்.  பரகாச புரம் என்றும் கேசவன் என்றும் தானே வழிபட்டு பல நற்காரியங்களைச் செய்தவனா என நினைக்கும் படியான சில துரோகங்கள். அந்த கௌட தேசத்து  (த்ரிக்ராம என்ற சிறிய ராஜ்யம்- விதஸ்தாவும் சிந்து நதியும் சேரும் இடம்)  அரசனின் பிரஜைகள், அரச சேவகர்கள் நலமாக இருந்தனர். அமைதியாக வாழ்ந்தனர். தேவி சாரதாவை தரிசிக்க காஸ்மீர தேசம் வந்தவர்கள் என்ற காரணத்துடன் பரிகாச புரம் வந்தனர்.  லலிதாதித்யன் ஊரில் இல்லாத சமயம்.  கோவிலுக்குள் நிழைய விடாமல்  அரச சேவகர்கள் தடுத்தனர்.  ராமஸ்வாமி என்ற விக்ரகத்தை பரிகாச புர கேசவன் என தவறாக நினைத்து வெள்ளியால் ஆன அந்த சிலையை துண்டு துண்டாக உடைத்து வீசினர்.  வெளியேறும் சமயம் அரசனின் சைன்யத்தினரால் வழியெங்கும் தடுத்து நிறுத்தி கொல்லப் பட்டனர். அவர்கள் அதற்குத் தயாராகவே வந்திருந்தனர். தங்கள் அரசன் லலிதாதித்யனின் ஆணைப்படி மர்ம நபர்களால் கொலை செய்த செயலுக்கு பழி வாங்கிய திருப்தியுடன் மடிந்தனர்.

கறுத்த நிறத்தினர், ரத்த வெள்லத்தில் மிதந்தனர். பூமியில் அஞ்சனாத்ரி, மை போல கறுத்த மலை விழுந்த்து கிடப்பதைப் போல இருந்ததாம்.  மலையின் தாதுக்கள் பள பளக்க இருப்பது போல ரத்தம் தெரிந்ததாம்.  ஆகா, இந்த பூமி புண்யம் செய்த து. தங்கள் தலைவனுக்காக அரசனுக்காக, உயிரையும் தியாகம் செய்த பிரஜைகளை உடைய அரசன் பெயர் வாழ்க.   அந்த அரசன் ஆண்ட இந்த நாடும் தன்யா-  பெருமைகள் பல பேற்றவள், வாழ்க.

பயங்கரமான இடி )வஜ்ரம் )க்கு வஜ்ரம் என்ற வைரத்தை வெளிக் கொணர்வதால் வரவேற்கப் படுகிறது.  நாகத்தின்   தலையில் இருந்தாலும்  மாணிக்கம் மதிப்பு உடையது. அரிதாக கிடைத்தாலும் மரகதன் அதன் பச்சை நிறத்தின் அழகுக்காக பாடு பட்டுத் தேடச் செய்கிறது.  ஒவ்வொன்றுன் அதன் பெருமையை அடைவது அதன் இயல்பான குணமாகிறது. அதன் பின்புலம் ஆராயப் படுவதில்லை. அது போல மனிதர்களில் சிலர் ரத்திங்களாக மனிதருள் மாணிக்கம் என்பது போன்ற வசங்களால் வர்ணிக்கப் படுகின்றனர்.  அவர்களின் சாதனைகளும், செயற்கரியன செய்த செயல்களுமே   சரித்திரமாக நிலைத்து நினைக்கப் படுகிறது.  அவர்கள் நிஜ வாழ்வின் தவறுகள் மறைந்த்து விடுகின்றன.  மாணிக்கம் நாகத்தின் விஷத்தை மறக்கச் செய்வது போல.  அதைபோல இந்த கௌட தேசத்து பிரஜைகள் தங்கள் மன்னனுக்காக தங்களையே தியாகம் செய்ததும் வரலாறு ஆகிறது. அவர்களின் தியாகம் உலகிலேயே அரிதான எஜமான விஸ்வாசம்.  அது போல எங்குமே கண்டதில்லை.  ப்ருத்ய ரத்னங்கள் – ரத்தினம் போன்ற உயர்ந்த மதிப்பை பெற்ற அரச ஊழியர்கள் எனப் புகழப் படுகின் றனர். 333 ஸ்லோகம்- 133/398

லலிதாதித்யன் புகழ் உள் நாட்டை விட அதிகமாக வெளி நாடுகளில் பரவியது.  அதோடு நிற்காமல் மற்றவர்கள் நினைத்து கூட பார்க்காத செயல்களை தான் சாதிக்க நினைத்து இது வரை யாரும் செல்ல முடியாத  வட பகுதியில் நுழைந்தான்.  தனதன் இருப்பிடம் எனும் யக்ஷ சாம்ராஜ்யம் எப்படி இருக்கிறது என்று பார்க்க விழைந்தான்.  நைருத என்ற இரவில் சஞ்சரிக்கும் இனத்தாரைக் கண்டான்.

அந்த இடங்களில் ஆதவனின் கிரணம் கூட நுழையாது என்பர்.  அந்த இடங்களில் அரசன் தன் இஷ்டப்படி சஞ்சரித்தான்.  மந்திரிகள் முன் சென்று இது வரை கேட்டறியாத இடங்களுக்கு தூதுவர்களை அனுப்பினார்கள். அவர்கள் வந்து சொன்னார்கள்:   ‘எங்கள் தலைவன் தங்களுக்கு தெரிவிக்கச் சொன்னார்.  இது என்ன மோகம்? உங்களைப் போன்ற அரசர்கள், எதை எதிர் பார்த்து இங்கு வந்துள்ளீர்கள்.  தினம் ஒரு புது தேசம், புது வெற்றி பெறுவதால் என்ன லாபம். தங்கள் பிரதேசத்தில் நுழைந்தால் என்ன பலன் தெரியுமா? காரணமின்றி வெறும் ஆசையால் மட்டும் நதிகள் சமுத்திரத்தை நாடி ஓடி வருகின்றன. அதில் கலந்தவுடன் தனது என்ற தன்மையை இழப்பது தான் கண்ட பலன்.  அதனால் குற்றமற்ற தூய்மையான எண்ணத்துடன் உங்கள் தேசத்தை பாது காத்து ஆளுங்கள்.  அது தன் சாரமான நியதி.  உங்கள் நாட்டில் குறைகள் எதுவும் இன்றி நிம்மதியாக மக்களை வாழ விடுங்கள்.  இங்குள்ளவர்கள் சதா காப்பாற்றப் பட வேண்டியவர்கள். இவர்களுக்கு சார்வாகர்கள் சொல்வது போல  பர லோக பயம் இல்லை. 

மலை வாசிகளின் வாழ்க்கையே கடினமானது. இதில் வசிப்பவர்கள் எந்த குற்றமும் செய்ய வேண்டாம். அவர்கள் வாழ்க்கையே இடர்கள் நிறைந்தது. மலையின் இயல்பினால் பல இன்னல்களை சந்தித்து சமாளித்து தான் வருகிறார்கள். செல்வத்தை சேர்த்து கோட்டைக்குள் அமைதியாக வாழ்வது போல இல்லை இங்குள்ளோரின் குகைகளில் வாழும்  வாழ்க்கை.  அவர்களை பகைத்துக் கொண்டு என்ன குற்றம் என்று தண்டிக்கப் போகிறீர்கள்? இவர்களிடம் சேமித்து வத்திருக்கும் செல்வம் இருந்தால், ஏன் இங்கு இருக்கப் போகிறார்கள், அவர்களும் உங்களைப் போல நாட்டில் கோட்டை கொத்தளங்களோடு வாழ மாட்டார்களா?  இவர்களிடம் மிஞ்சி போனால் ஒரு ஆண்டுக்கான தானியங்கள் இருக்கும், பசு, காளைகளுக்கான உணவு இருக்கும். கிராம வாசிகள் அதிகமாக சேமித்து வைத்துக் கொள்வதும் இல்லை. டாமரா: -Damara:- என்பவர்கள் பலசாலிகள். அடிக்கத் தயங்க மாட்டார்கள். இவர்கள் உங்கள் நகரத்துக்குள் வந்தால், அரசன் ஆணையை மதிக்கவும் மாட்டார்கள்.’

‘இவர்களை உங்கள் நகரத்துக்கு கொண்டு சென்று ஆடைகள், பெண்கள், ஆயுதங்கள், போஜனம் , அலங்கார வஸ்துக்கள், குதிரைகள், வீடுகள் என்று நகரவாசிகளுக்கு இணையாக உங்களால் தர முடியுமா? அப்படிக் கொடுத்தாலும் அவர்கள் பிறவி குணத்தை மாற்றி அறிவுடையவர்களாக ஆக்க முடியுமா?  அதன் பின்னும் உங்கள் ஊழியர்களிடம் உள்ள பொது அறிவு வரும்படி செய்ய வேண்டும். ஓரிடத்தில் நிலையாக வாழ்ந்தவர்கள், புலம் பெயற்வது  கடினம். அவர்கள் பழகிய வாழ்க்கை, ஆயுதங்கள் இவைகளை விட வேண்டி இருக்கும்.  ஒருவருக்கொருவர் திருமண சம்பந்தங்கள் எப்படி இருக்கும்? இவர்களை தற்சமயம் உங்களிடம் உள்ள அலுவலர்கள் போலவே நடத்தினால் ஒரு வேளை இவர்களும் விரும்பி வாழ்வார்களாக இருக்கும்.  இருந்தாலும் பிறவிக் குணம், அரசு கட்டமைப்பையே கலைத்து கிராமமாக ஆக்கவும் செய்யலாம். ‘

இது எங்கள் தலைவனின் அறிவுரை. இங்குள்ள மக்களை அறிந்தவர், இந்த நிலத்தை பயன் படுத்த தெரிந்தவர் சொன்ன செய்தி.  இதை மனதில் வைத்துக் கொண்டு மகா ராஜா செயல் படட்டும்.

யானை மதம் கொண்டுள்ளது என்பதை அதன் மத நீரின் மணத்தை வாயு கொண்டு வந்து சொல்லும்.  மழை மேகங்கள் கறுத்து அலைந்தால், இதோ மழை வரும், மின்னலும், இடியும் வரும் என்று ஊகிக்கலாம். மனிதனின் குணங்கள் அந்தந்த இனத்தினரின் இயல்பாக அமையும்.   அறிவுள்ளவர்கள் தங்கள் அறிவினாலும் அனுபவத்தாலும் ஜன்மாந்திர வாசனையாலும் கலங்காத மன திடம் உள்ளவர்களாக ஆவார்கள்.

அதன் பின் அரசனின் நிலை என்ன ஆயிற்று என்பது தெளிவாக சொல்லப் படவில்லை.

அவன் தனயர்கள் குவலயாதித்யனும், வஜ்ராதித்யனும் சம மாக அரசனின் அன்புக்கு ஆளானவர்கள்.  ஆனால் தாய்மார்கள் வேறானதால் அவர்களின் குணத்தில், செயல் திறமைகள் வேறு பட்டன.   மூத்தவன் பலவானாக இருந்தால் தான் அரசனாக பட்டம் கட்ட வேண்டும். அதனால் நீங்கள் அவர்கள் இருவரையும் கவனமாக கண் காணித்துச் சொல்லுங்கள்.  ஒரு வேளை  அரசன் தானே ராஜ்யத்தை துறக்கலாம் அல்லது அவன் வாழ்வே முடியலாம்.  இது இயற்கை யாராலும் மீற முடியாது.   அரசனே  இளையவனை ஏதோ காரணத்தால் அரசனாக்கினால், அவன் கட்டளையை மீற முடியாது. அடுத்த தலைமுறை பேரன் ஜயாபீடன் இன்னமும் சிறுவன். அவன் பாட்டனார் போல வருவான் என்பது பெரியவர்கள் கணிப்பு.   சங்குணன் பிரஜைகளைக் கூட்டி  இப்படி சில செய்தியை முன் அறிவிப்பாக அறிவித்த பின் அவர்களிடம் சொன்னான்.

முப்பத்தாறு ஆண்டுகள்,ஏழு மாதங்கள், பதினோரு நாட்கள் நமக்கு இதமான நிலவொளி போல இருந்து ஆண்ட அரசன் காலம் முடிந்து சுவர்கம் சென்று விட்டான்.   என்றென்றும்  அவன் புகழ் நிலைத்திருக்கும்.  எனவே, குவலயாதித்யா பட்டத்துக்கு வருகிறான்.  முடி ஸுட்டும் வைபவங்கள் தொடங்கட்டும்.  அரசனுடனேயே எனக்கு இருந்த அதிசய சக்திகளும் மறைந்து விட்டன. இனி பழையபடி பொற்காசுகளால் பொக்கிஷத்தை நிரப்ப முடியாது.

அரசன் இப்பவும் இந்த நாட்டுக்கு நன்மையே செய்வான்.  கரு மேகம் தன்னை முழுவதுமாக  மறைத்தபடி இருந்தாலும், இடையிடையே ஆதவன் தன் கிரணங்களால் குளத்து தாமரையை மலரச் செய்து விடுவான்.  இப்படி ஒரு சக்தி மகாத்மாக்களாக வாழ்ந்த ஜீவன்களுக்கும் உண்டு. அவர்கள் அருளால் கடினமான செயல்களைக் கூட அவனைச் சார்ந்தவர்கள் செய்ய முடிவது அதனால் தான்.

 ஆனால் அரசன் முடிவு எப்படி வந்தது ?  ஒருவருக்கும் தெரியவில்லை.

ஒரு சிலர் அரசன் பனி பொழிந்து இருண்ட ஆர்யாணகா என்ற தேசத்தில் விபத்தில் மறைந்தான் என்று சொல்வர்.  அரசு கை விட்டு போனதால், வெகு காலம் பாடு பட்டு வளர்த்த சாம்ராஜ்யம் காப்பாற்ற முடியாமல் தீயில் விழுந்தான் என்று சிலர்.

மற்றும் சிலர் உத்தராபதம்- வடக்கு நோக்கி சென்றவன், பொதுவாக மனிதர்கள் நடமாடாத இடம், என்ன நடந்ததோ, பூமிக்குள் பிரவேசித்து விட்டான் என்றனர்.  அல்லது வானத்தில் பவனி வரும் ஸூரிய தேவனே சமுத்திரத்தில் இறங்கியது போல தானே நேராக பரலோகம் செய்று விட்டான் போலும்.  அங்கும் இப்படி ஒரு பேச்சு உள்ளது என்றனர்.  அஹோ, பெருமை வாய்ந்தவர்கள், சிறந்த மனிதர்களின் செயல்களை நம்மால் ஊகிக்க முடியுமா?  தனக்கு உவமை இல்லாதவன், ப்ரஸ்தானம் என்ற முறையில் இருந்த இருப்பில் மறைவார்கள் என்று கேட்டிருக்கிறோம். விபத்து என்றால்,   அதிசயமான குணாதிசயங்கள் உள்ளவர்  எதை எப்படி செய்வார் என்று சாமான்ய மனிதர்கள் எப்படி அறிவர்.  பல அதிசய செயல்களைச் செய்தவன் என்பதால் மக்களிடையே பல விதமான வதந்திகள் பரவின.

கமல தேவியின் மகன் குவலயாதித்யன்  அதிதியின் மகன் இந்திரன் போல  ராஜ்யத்தை அடைந்தான். அவனும் நியாயமாக ஆண்டான்.  பாம்பு சட்டை உரிப்பது போல தேவையற்ற அரச போகங்களை தவிர்த்தான்.  தன்னளவில் தன்னடக்கம் உடையவனாக விளங்கினான்.  சகோதரனும் அவனைப் போலவே திறமையுடன் உதவினான். ஆனாலும் தீயின் ஜுவாலைக்கு அருகில் விளக்கின் சிறு ஒளி எடுபடாதது  போல அவன் திறமையும் குணமும் வெளியில் தெரியவில்லை. இதை உடன் இருந்த மந்திரிகள், அலுவலர்கள் பயன்படுத்திக் கொண்டனர்.  இருவரிடமும் உண்மையாக இருப்பது போல காட்டி கொண்டே தங்கள் தேவைகளை  மாற்றி மாற்றி இருவரிடமும் பெற்றனர்.  குவலயாதித்யன்  பொக்கிஷம் குறைவதைக் கண்டு இளையவனை சந்தேகித்து அவனை அரச காரியங்களில் தவிர்த்து விட்டான்.  தன் கைக்கு முழுமையாக கொண்டுவந்த பின் தந்தையைப் போலவே படை வீரர்கள்,  ஆயுதங்கள் என்று சேமித்து படையெடுத்துச் செல்லவும், மற்ற ராஜ்யங்களைக் கைப்பற்றவும் தயாரானான்.  தந்தையிடம் பணி புரிந்த ஒரு ஆலோசகர் தானாக ஏதோ தீர்மானித்து செய்ததை அவனால் ஏற்க முடியவில்லை.  திறமையான அதிகாரி தான், அதிகமான தன்னம்பிக்கையோ, அல்லது தந்தையிடம் அருகில் இருந்ததால் எடுத்துக் கொண்ட உரிமையோ,  தன் கட்டளையை அவர் மீறிவிட்டதாக பொருமினான்.  கொன்று விட நினைத்தான், ஆனால் அரசவையில் செல்வாக்கு உள்ளவர், அவரைச் சார்ந்து பலர் இருந்தனர். அனைவரையுமா? என்ன செய்தால் இதற்கு தீர்வு என்று தூக்கமில்லாமல் அதே சிந்தனையாக  இருந்தான். இந்த சந்தேகம் காலகூட விஷம் போல அவன் உள்ளத்தை தகித்தது என்று கவி சொல்கிறார்.  வெளியில் சொல்லாமல் தானாக யோசித்து யோசித்து அந்த எண்ணம் மேலெழாமல் தடுத்துக் கொண்டான்.  இதுவும் தெய்வச் செயலே. அதன் பின் என்ன லாபம் என்று இவ்வளவு பெரிய தவற்றை செய்ய இருந்தேன் என்று தன்னையே கடிந்து கொண்டான். 382  ஸ்லோகம்

 தன் உடலை பாதுகாக்கவே உலகில் உயிரினங்கள் பாடு படுகின்றன.  சமயங்களில் செய்யக் கூடாத செயல்களை செய்தாவது உடலை வளர்ப்பவர்களும் உண்டு. அவர்களைப் பார்த்து நாம் திகைக்கிறோம்.   இந்த உடல் நிரந்தரமல்ல என்று அவர்களுக்குத் தெரியாதா?  அப்படி வளர்த்த உடல் பதிலுக்கு திடமாக இருந்து உதுவுகிறதா என்றால் , அதுவும் இல்லை.  மறந்து விடுகிறது. (நமக்காக பாடு பட்டான் என்பதை நினைத்து வியாதி மூப்புக்கு இடம் கொடுக்காமல் இருக்கிறதா?)  பசு வதை செய்தாவது உடலை வளர்க்க  வேண்டுமா? அந்த ஜீவன்கள்  யாருக்காகவோ உடம்பை வளர்த்தனவா?  நாளையை நினைத்து  நடக்கிறோம்.  காலடிகள் ஒவ்வொன்றாக பின்னோக்கிச் செல்கின்றன.  வழியில் தேவைப்படும் என்று உணவையும் கையில் கொண்டு செல்லும் வழிப் போக்கர்கள் மனிதர்கள்.  கலத்தில் இட்ட உணவு தான் கண்ணுக்கும் மனதுக்கும்  தெரிகிறது.  அதன்   ஆரம்ப  நிலையை,  பின்னால் அந்த பண்டங்கள் அடைந்த  மாறுதல்களை சமைப்பவர் அறிவார்.  இளம் வயதில் அலங்காரமாக இருந்த உதட்டு வர்ணமும், அடர்ந்த கேசமும் கண் முன்னாலேயே மாறிய பின் தானே உணருகிறோம்.  நரைத்த கேசம், ஆடு போல தொங்கும்  முகம், இவைகளே பரிகசிப்பது போல –  இதைத்தான் ஞானிகள் அறிந்துள்ளனர்.  இந்த சிந்தனைகளால் அவன் மனம் மாறி ராஜ்யத்தைத் துறந்து வனம் ஏகினான்.  ப்லக்ஷ ப்ரஸ்ரவனம் என்ற இடம் சென்றான். யாரோ மெள்ள உபதேசிப்பது போல இருந்தது. ‘நல்லது மகனே! செல்வம் நிரந்தரமல்ல.” தன் ஆசனத்தில் ஒரு ஸ்லோகமாக எழுதி வைத்தான்.  ‘நராதிபனாக இருந்தவன் அடக்க முடியாத உணர்ச்சி வேகத்தில் தன்னை உணர்ந்து கொண்டான்.  ஸ்ரீ பர்வதம் சென்று அமைதியாக தவம் செய்து வாழும் மக்களுடன் வாழவே செல்கிறான்’  ஸ்ரீ பர்வதம் என்ற இடத்தில் Srisailam – ஸ்ரீ சைலம் என்று ஆந்திர பிரதேசத்தில் உள்ள  சிவ ஸ்தலம்.  அங்கு இன்றளவும் இவ்வாறு உலக வாழ்க்கையைத் துறந்து தவம் செய்பவர் உள்ளனர் என்கிறார் கவி.

மித்ர சர்மா என்ற அந்த ஆலோசகர், பரம்பரையாக அரச சபையில்  உண்மையாக பணி செய்தவர்,  மிக வருந்தினார்.  அவரும் பதவியை விட்டு விலகி தன் மனைவியுடன் விதஸ்தா-சிந்து நதிக்கரைக்கு சென்று தங்கி விட்டார்.   நல்லறிவையும், தூய்மையான உள்ளமும் கொண்டிருந்த அரசனும் தான் தேர்ந்தெடுத்துக் கொண்ட துறவையே தொடர்ந்து சாதனைகள் செய்து சித்தி அடைந்தான்.

‘சக்ரமர்திகா’ என்ற ராணியின் மகன் வஜ்ராதித்யா லலிதாபீடன் என்ற பெயருடன் பட்டத்துக்கு வந்தான்.  அவனை பப்பியகன் என்றும் அழைப்பராம். (बप्पियको – )

இவன் தன் சகோதரனுக்கு நேர் எதிராக இருந்தான். க்ரூரன் என்பர்.  மக்களின் நன்மையே கவனமாக இருந்த குவலயாதித்யன்  செய்த நற்செயல்களை அழிக்கவே வந்தவன் போல.  புராண காலத்து துர்வாசரும் சந்திரனும் போல ( இருவரும் அத்ரி அனசூயாவின் புதல்வர்கள்.  சந்திரனின் அமைதியும், துர்வாசரின் பொறுமையற்ற கோபமும் உதாரணமாக சொல்லப் படுகிறது).

முதல் காரியமாக, பரிஹாச புர கோவிலுக்கும், இறைவனுக்கும் தந்தை லலிதாதித்யன் அளித்திருந்த கொடைகளை, சொத்து சுதந்திரங்களை பிடுங்கிக் கொண்டான்.  சிற்றின்பமே பெரிதாக அந்த:புர பெண்களை  குதிரை மேய்வது போல மேய்ந்தான் என்கிறார்.   கூட்டம் கூட்டமாக  அந்த  நாட்டு மக்களை மிலேச்சர்கள் என்ற எல்லை கடந்த நாட்டினருக்கு அடிமைகளாக விற்றான்.   அது அந்த மிலேச்சர்கள் சுதந்திரமாக நாட்டிற்குள் வர வழி வகுத்தது.  அளவுக்கதிகமாக போகங்களில் ஈடுபட்டதன் விளைவு.    ஏழு வருஷங்களே வாழ்ந்தான்.  அவனுடன் அவன் செய்த பயங்கர ஆட்சியும் முடிவடைந்தது.

அதன் பின் மஞ்சரிகா தேவி என்ற அரசனின் மனவியின் மகன் ப்ரஜாந்தகன் என்பவன் பட்டத்துக்கு வந்தான்.  398 ஸ்லொகம் 138/398

இவனும் தன் முன்னோடியாக வஜ்ராதித்யனையெ கொண்டவன் போல நாட்டு மக்களை துன்புறுத்தியபடி  நான்கு ஆண்டுகள் ஆண்டான்.  அவனை இறக்கி விட்டு  மற்றொரு வஜ்ராதித்யனின் (பப்பியா) வின் ஒரு மனவி  மம்மா  என்பவனின் மகன் சங்க்ராமபீடா என்பவன் ஏழு நாட்களே அரசு கட்டிலில் அமர்ந்திருந்தான். இந்த வம்சத்தினரின் ஆட்சி மக்களுக்கு பனிக்காலத்தின் குளுமைக்குப் பின் வரும் கடோரமான வேணிற்காலம் போல இருந்ததாம்.

பப்பியாவின் கடைசி மகன் ஜயாபீடன் அரசன் என்ற பதவிக்கு ஏற்றவனாக, பட்டத்துக்கு வந்து பொறுப்பை ஏற்றுக் கொண்டான்.  அவனை அரச அமாத்யர்கள்,  பாட்டனாரைப் போல இரு, அவரைப் போல  நல்லாட்சியை அளித்து பெயரும் புகழும் பெறுவாய் என்று வாழ்த்தினர்.  அதை ஏற்றுக் கொண்டவன் போல ராஜ்ய பரிபாலனம் செய்தான். படை பலங்களை சேர்த்த பின் திக்விஜயம் என்று புறப்பட்டான்.  தன் ராஜ்யத்தில்  வித்வான்களாக இருந்தவர்களை மதித்து மரியாதையாக நடத்தினான். அவர்களின் நல்ல அறிவுரைகளையும் கேட்டு , அதன்படி நடந்தான். முதிய அரசர்கள் பலரையும் இணைத்துக் கொண்டு காஸ்மீர நாட்டின் எல்லைகளுக்குள் சுற்றி ஆங்காங்கு இருந்தவர்களை தனக்கு நண்பர்களாக ஆக்கிக் கொண்டான்.  பெரும் படை,  ஆனால் போரிட வரவில்லை என்பதே பெரிய ஆறுதல்.  அதை என் பாட்டனாரின் நினைவாக கொண்டு செல்கிறேன் என்று சொன்னான்.   சேனை வீரர்களே அவனிடம்  சிரித்துக் கொண்டே,’ப்ரபோ!  என்ன காரணம்.  எங்கள் வீரத்தில் குறைவா? எங்களை உடன் வைத்துக் கொண்டு வெற்றி வீரனாக திரும்பலாமே. ‘  வழியில் தென் பட்ட ஒரு முதியவரிடம் விசாரித்தான். நீங்கள் இப்படி ஒரு பெரிய சைன்யத்தை கண்டதுண்டா? பல காலம் ஆயிற்று.  யார் என்பது  நினைவில் இல்லை. அவருடைய சைன்யத்தில் குதிரைகள் பூட்டிய ரதங்கள் இருந்தன.  பாத சாரிகளான லக்ஷக் கணக்கான வீரர்கள்.  இங்கு இருப்பது எண்பதாயிரம் வீரர்களே.  அந்த தலைவர்கள் வெற்றியே இலக்காக இருந்தனர்.  அதைக் கேட்டு ஜயாபீடன் அதிசயப் பட்டாலும், காலம் வலிது.  என்னதான் பூமியை விஸ்தரித்தாலும் புதிதாக எதுவும் இல்லை. அந்த முதியவர், லலிதாதியனை  நன்றாக அறிந்தவராக இருந்தார்.  அந்த அளவு சைன்யங்களுடன் சென்று முற்றுகையிட்டு கைப்பற்றி  ராஜ்யத்தை விஸ்தரித்தான். கடைசி காலத்தில் வெகு தூரம் சென்றவன்  திரும்பவேயில்லை. அவன் துரோகியான மைத்துனன்  ஜஜ்ஜா என்பவன்  பட்டத்துக்கு வந்தான்.  ராஜ சைன்யம்  நாளாக நாளாக போரும் முற்றுகையும் அலுத்து போக ஊர் திரும்பவே விரும்பினர்.  திரும்பி விட்டனர். ஸ்வாமி- தலைவனிடம் பக்தியா ஒன்றாவது?  எதுவும் இல்லை.

 ஜயாபீடன் யோசித்தான். அதன் பின் அந்தந்த சிற்றரசர்களின்  தேசத்தை திருப்பிக் கொடுத்தான். படை வீரர்களில் விருப்பமில்லாதவர்களை திருப்பி அனுப்பினான்.  நெருக்கமான சில வீரர்களுடன் பிரயாகை சென்றான்.

அங்கிருந்த அறிஞர்கள், கலைஞர்களுக்கு வேண்டியதை வேண்டியபடி தானமாக கொடுத்தான். குதிரைகள்,  தராளமாக தக்ஷிணைகள், (ஓன்று குறைய லக்ஷம்)  முத்ரைகள் என நாணயங்களை தன் பெயர் பொறித்து வெளியிட்டான்.  முழுவதுமாக லக்ஷம் கொடுப்பவர்கள் தான் இந்த முத்திரையை மாற்ற இயலும் என்ற வாசகத்துடன் அவை நாடெங்கும் பரவின. ஸ்ரீ ஜயாபீட தேவனுடையது – என்ற வாசகம் உள்ள இந்த முத்திரைகளை கங்கா ஜலத்துடன்  கலந்து விட்டான்.  கங்கையின் பிரவாகத்துடன் அவை திசையெங்கும் சென்றன.  பல தேசங்களிலும் இவைகளைக் கண்டு அபிமானிகளான அரசர்கள் பொருமினார்கள். சைன்ய வீரர்களையும் பொருளும் கொடுத்து மகிழ்ச்சியுடன் வழியனுப்பி வைத்தான். அவர்கள் தன்னிடங்களுக்குச் சென்றனர்.  ஸூரியனின் தாபம் ஏற ஏற நீருண்ட மேகங்கள் மறைவது போல போர் வீரர்கள்  ஒவ்வொருவராக விலகிச் சென்றார்கள்.

சில நாட்களுக்குப் பின்  கௌட வம்சத்து ஜயந்தன் என்ற அரசனின் வசத்தில் இருந்த

பௌண்டிர வர்தனம் என்ற நகரத்துக்குச்  சென்றான்.   அழகான ஊர்.  பலவிதமான அலங்காரமான  இடங்கள் செல்வ செழிப்பைக் காட்டின.  ரம்யமான உத்யான வனங்கள்.  அந்த இடத்தில்  கார்த்திகேயன் கோவில் இருந்த இடத்தில் நடன நிகழ்ச்சியான ‘லாஸ்யம்’ என்பதைக் காணச் சென்றான்.  அங்கு மேடையில் ஆடியவரும் பரதர் என்ற முனிவரின் நாட்டிய  சாஸ்திரங்களை அறிந்து ஆடினார்.  கீதமும் லயமும் இணைந்து ஒலிக்க நியமம் தவறாமல் சுஸ்வரமான அனுபவமாக இருந்தது.  தேவக்ருஹத்தின் வாயிலில் இருந்த சிலைகள் கண்களைக் கவர்ந்தன.  ஒரு வினாடி கண்டதுமே, அதன் விசேஷமான தேஜஸ்- சிறப்பான அம்சம் வெளிப்பட- பார்த்து பரவசமானான்.  அங்கு வந்திருந்த அனைவருமே அந்த சிலைகளைக் காண்பதும், களிப்புடன் செல்வதையும் கண்டான்.   நடனம் ஆடிய கமலா என்பவள், அவனைக் கண்டதும்  பொது ஜனக் கூட்டத்தில்  ஒருவன் அல்ல.  யாரும் சொல்லாமலே, தனித்து தெரிந்த இயல்பான பெருந்தன்மை உடைய  குமாரன் என்று புரிந்து கொண்டாள்.  கவர்ச்சிகரமான அவன் உருவத்தை, நீண்ட கரங்களை, நிமிர்ந்த தோள்களை கண்டு வியந்தாள்.  ஏதோ அரச குமாரன் அல்லது நல்ல நிலைமையில் இருப்பவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் உள் நோக்கத்துடன் உலவுகிறான் என்ற தீர்மானத்திர்கு வந்தாள்.  ஏன் அடிக்கடி கைகளை தூக்கி தோள்களில் வைக்கிறான் என்பது புதிராக இருந்தது. பின்னால் இருந்த அடியாள், இடைவெளி விட்டு தாம்பூலம் அளிக்கிறானோ என்று தோழி சொன்னாள்.  அதைக் கேட்டு சிரித்தாலும் மன  நிம்மதி அடைந்தாள்.  யானைகள் காதுகளை ஆட்டுவது வண்டுகளோ, பூச்சிகளை விரட்டுவதற்காக என்று அறிவோம்.  அப்படி எதுவும் இல்லாத இடத்திலும் அவை தன்னிச்சையாக காதுகளை ஆட்டும்.  சிங்கங்கள், அருகில் யானைக் கூட்டம் இல்லாவிடினும் அடிக்கடி திரும்பி பார்த்துக் கொள்ளும்.  மேகத்தின் இடி முழக்கம் இல்லாத சமயமும், தாள வாத்யங்களைக் கேட்டு மயில்கள் நடனமாடும்.   அது போல பழக்கத்துக்கு அடிமையானவன் போலும். பின்னால் சேவகன் ஒருவன் இருக்கிறானோ, இல்லையோ, சங்கீதமும்,  நாட்டியமும் அவனை தன் வயப் படுத்தி விட்ட நிலையிலும் தாம்பூலத்துக்காக கையை நீட்டுகிறான்.

இவ்வாறு ஊகித்துக் கொண்டவள் தன் அருகிலிருந்த சகியை அவனிடம் தூது அனுப்பினாள்.  அவன் அருகில் சென்றவள், வழக்கம் போல அவனுடைய நீட்டிய கையில்  தாம்பூலத்தை வைத்தாள்.  திடுக்கிட்டு ஜயாபீடன் திரும்பி அவளைப் பார்த்தான்.  யார் நீ? புருவ அசைவில் கட்டளையை அறிந்து கொள்ளும் நீ, யாருடையவள் ?”  மேலும் தாம்பூல கட்டுகளை கொடுத்து தான் யார் என்பதைச் சொன்னாள்.  அது வரை நடந்த விவரங்களை அவள் விவரித்துச் சொன்னது ரசிக்கும் படியாக இருக்கவும், மதுரமாக அவள் பேசியதிலும் மகிழ்ந்த ஜயாபீடன்  மெதுவாக கேட்ட பின்,  அவளுடன் சென்றான்.  அந்த பெண்ணும் அனாவசியமாக பேசவில்லை.  தன் சகி சொன்னவைகளைத் தவிர கூட்டி குறைத்தும் சொல்லவில்லை என்பதை குறித்துக் கொண்டான்.

அவர்கள் இருவருமாக நாட்டிய கலை அறிந்த அவள் தலைவியும் அதற்கு சற்றும் குறையாத  மரியாதையுடன் அவனை வரவேற்றாள்.  ஜயாபீடனுக்கு இந்த சந்திப்பும்  இப்படி ஒரு விதமான கலையும் அதில் ஈடுபாடும் கொண்டவர்களைக் கண்டதும் புது அனுபவமாக இருந்தது.  இது வேறு உலகம்.  அழகான பெருந்தன்மையான உரையாடல். சுருக்கமாக பேசியே  விவரங்களை சொன்ன விதம். புது மனிதனிடம் விருந்தோம்பலைச் செய்வதிலும் ஒரு நளினம்.  அவன் பிரமித்தான்.  அன்று நிலவு உதிக்கும் நேரத்திற்குள், அவளுடன் சகஜமாக உரையாடும் துணிவை பெற்று விட்டான்.  தன் போர் கவசங்கங்கள், அரச உடையுடனேயே அவளுடைய இருப்பிடம் சென்றான்.

அவளும் பொறுத்து இருந்து தானே முன் வந்து படுக்கையறைக்கு அழைத்தாள்.  அவளுடைய அழகிய அறையை நோட்டம் விட்டபடி இருந்தவனை தானே அணைத்தாள். தன் நீண்ட கைகளால் அவளை அணைத்தவன், மெதுவாகச் சொன்னான்.  ‘பத்ம பலாசாக்ஷி!  தாமரை இதழ்களைப் போன்ற அழகிய கண்களையுடையவளே, நீ அழகி தான். அனால் என் மனம் உன்னிடம் ஈடுபட வில்லை. என் அனுபவங்கள், எனக்கு அளித்த பாடம் இது. உன் குணங்களால் என்னை வசிகரித்துள்ளாய். உன் நடவடிக்கைகளில் போலித் தன்மை இல்லை.  முழு விவரங்களும் அறியாமல் கண்டவுடன் என்னிடம் உன் அன்பைக் காட்டி விட்டாய்.  தயை மிகுந்தவள் –  தன்னம்பிக்கை உள்ளவள் யோசியாமல் கண்டவுடன் எப்படி நம்புகிறாய்.   எனக்கு ஒரு கடமை இருக்கிறது. சில செயல்களைச் செய்து முடித்த பின் தான் தாம்பத்யமோ, போகமோ என்ற விரதம் ஏற்றவன்.  சொல்லியபடியே, அந்த ஆசனத்திலிருந்து எழுந்தவன், ‘தானாக எதையோ விரும்பி சாதனைகளை செய்பவன், பெண்களை மனதால் கூட நினைக்கூடாது என்பது முதல் பாடம்.  ஸுரியனைப் போல- பூ மண்டலம் முழுவதும் சஞ்சரித்து ஒளியும் உயிரும் அளிக்காமல் அஸ்தமனம் ஆவதில்லை அல்லவா.  நாடாளும் அரசன் இந்த விதமாக சமாதானமாகச் சொல்லியதைக் கேட்ட பின் அந்த கலையரசி மிகுந்த வெகுமானத்தோடு அவனை நோக்கினாள்.  அவனும் கலைஞனே என் நினைத்தவள், அரசனா என்று வியந்தாள். அவனிடம் மதிப்பும் மரியாதையும் நிறைந்தது.

சில காலம் தங்கி விட்டு போ என்று அன்புடன் யாசித்தாள்.  அவளுடன் மாலை வேளைகளில் நதிக் கரையில் உலவினான். விசாலமான அவள் வீடு.  சுற்றிலும் வேலி. எதற்கு என்றவனிடம் அவள் சொன்னாள், தினமும் ஒரு சிங்கம் வந்து விடுகிறது.  மனிதனோ, யானையோ,குதிரையோ அதன் கண்ணில் பட்டால் அவ்வளவு தான்.   அதன் அடியில் சுருண்டு விழுந்து விடுகின்றன. அதனால் தான் அரசனே, நீ வர தாமதம் ஆனால் நான் கவலைப் படுகிறேன் என்றாள். சிலர் அதனிடம் அகப்பட்டு உயிரிழந்தனர். அதனால் இங்குள்ளோர் பயப்படுகின்றனர் என்றாள்.   ஸ்லோகம் 445 142/398

 இந்த பிரதேச அரசனோ, அரச குமாரனோ பொறுப்பு ஏற்று அதை தடுக்க முயலவில்லை. அதனால் இருட்டும் முன் அனைவரும் கதவை சாத்தி விடுகிறோம்.  உலகம் அறியாத சிறு பெண், அவள் இதை ஒரு பெரிய விஷயமாக நாட்டியமாடுவது போலவே கை அசைப்பும், முகத்தில் பாவங்களுடனும் , சொல்வதைப் பார்த்து ஜயாபீடன் சிரித்தான்.   

மறு நாளே கிளம்பி அந்த நகரத்தின் எல்லை வரை சென்றான். பெரிய வட விருக்ஷத்தின் அடியில் சிங்கத்தின் வரவை எதிர் நோக்கி காத்திருந்தான். வெகு தூரத்தில் வரும் பொழுதே, அட்டகாசமான கர்ஜனை கேட்டது. மிருக ராஜா தானே யமராஜா போல அத்வானமான அந்த இடத்தில் நடந்து குகைக்குள் நுழைவதை பார்த்தான்.  ராஜ சிங்கமான ஜயாபீடன், நிஜ சிங்கத்தை அழைப்பது போல ஓசையிட்டான். காதுகள் உயர்ந்து நிலைத்து நிற்க, வாயை பிளந்தபடி, அதன் பிடரிகள் சிலிர்க்க, கண்கள் நெருப்பை உமிழ்வது போல பிரகாசிக்க, முன் தள்ளியது போன்ற உடல் வேகமாக கர்ஜித்தபடி அருகில் வந்தது. தன் எதிரில் வந்தவுடன்  கூர்மையான ஆயுதத்தால் அதன் மார்பில் குத்தினான்.  விழுந்த விலங்கின்  திறந்த  வாய் பள்ளம் போல இருக்க அதில்  கையை விட்டு  முகத்தை பிளந்து  மிருக ராஜனை  உயிரிழக்கச் செய்தான்.  ரத்தம் பெருக, தான் அடித்து பிளக்கும் யானையின் மஸ்தகத்திலிருந்து வெளி வரும் சிவந்த ரத்தம் போலவே இருந்ததை அறிந்ததோ, இல்லையோ, அந்த ஒரு அடியிலேயே உயிரை இழந்து விழுந்தது.  அந்த போராட்டத்தில் தன் தோளில் பட்ட காயத்திற்கு ஒரு துணியால் கட்டு போட்டுக் கொண்டு தூங்கி விட்டான்.

மறுநாள் ஜயந்தன் என்ற அந்த நாட்டு அரசன் இதைக் கேள்விப் பட்டு மிகுந்த வியப்புடன் அதைக் காண வந்தான்.  பயங்கரமான வன விலங்கு, அதை ஒரே அடியில் வீழ்த்தியவன் சாதாரண மனிதன் அல்ல அதிசய பிறவி என்று நினைத்தான். விழுந்த விலங்கின் வாயில் பற்களுக்கிடையில் கேயூரம் என்ற ஆபரணம் இருந்தது. அதில் ஸ்ரீ ஜயாபீடன் என்ற பெயரை படித்து மேலும் வியந்தான்.  உடன் வந்தவர்களுடன் ஆலோசித்தான். யார் இந்த அரசன்? எங்கிருந்து வந்தான் என்பது போன்ற  கேள்விகள் அனைவருக்கும் வந்தது. எதற்கோ அனைவரும் பயந்தனர்.  ஜயந்தன் அவர்களை அதட்டி, இது என்ன நம் பெரிய இடர் தீர்த்தவன், மகிழ வேண்டிய சமயத்தில் இது என்ன அறிவின்மை என்றான். ஜயாபீடன் என்ற அரசன் நல்ல வீரன். புஜ பலம் உடையவன் என கேட்டிருக்கிறேன்.  ஏதோ காரணமாக தனிமையில் சுற்றுபவனாக இங்கு வந்திருக்க வேண்டும். 144/398

அரசகுமாரன், கல்லடன் – (ஏதோ ஒரு பெயர்) – அவனை மகன் இல்லாத நான் என் மகள் கல்யாண தேவியை மணமுடித்துக் கொடுத்து என் வம்சம் விளங்கச் செய்வேன்.  என் மருமகனாக என் வம்சம் விளங்கச் செய்வேன் என்ற அறிவித்தான்.  அதனால் தேடுங்கள்.  நானே தேடிச் சென்ற ரத்னங்களின் புதையல் என் வீட்டு வாசலிலேயே கிடைத்து விட்டது போல மகிழ்கிறேன்.   புது மக்கள் அவன் சொல்லில் இருந்த பரிதவிப்பையும், நம் பொறுப்பு  அந்த வன விலங்கை அடக்குவது, அதைச் செய்யாமல் விட்ட தவறு.  எங்கிருந்தோ வந்தவன் தனியாக எதிர்த்து நின்றிருக்கிறான், நலமாக இருக்க வேண்டுமே என்ற கவலை என்ற அனைத்தும் இந்த அறிவிப்பில் இருந்ததை உணர்ந்தார்கள்.

கமலாவின் வீட்டில் இருக்கிறான் என்ற செய்தியை சில பெண்கள் சொன்னவுடன் அரசன் மந்திரிகளையும், அந்த:புரத்து பெண்களையும் அழைத்துக் கொண்டு அங்கு சென்றான்.  தன் வரையில் நிச்சயித்து விட்ட மகளின் திருமணம், அதற்கு இணையான கோலாகலத்துடன் அந்த கூட்டம் புறப்பட்டது.  தானே அரச வாழ்வை துறந்து உலகியலை அறிய யாத்திரை வந்தவன், அரசனின் விருப்பமும், மக்களின் ஆதரவுடன் அவர் அளித்த மகள் கல்யாண தேவியை ஏற்றுக் கொண்டான்.  தன் ஆயுதங்களோ, படை வீரர்களோ அருகில் இல்லாத போதும் ஐந்து கௌட ராஜகுமாரர்களை வென்று மாமனாரின் மதிப்பில் உயர்ந்தான்.

 காஸ்மீர ராஜ்யத்தின் முக்ய மந்திரியான மித்ர சர்மா,  தன் மகன் தேவ சர்மா என்பவனை பொறுக்கி எடுத்த வீரர்களுடன் ஜயாபீடனை ராஜ மரியாதைகளுடன் தன் ராஜ்யத்திற்கு அழைத்துவர யசோ வர்மன் பாலித்த கன்யாகுப்ஜத்தை வென்ற சமயம்  அவனுடைய பாட்டனார்  லலிதாதித்யா  கைப்பற்றிய  அரியாசனம் –  தற்சமயம் அது  காஸ்மீர அரச அடையாளமாக வெற்றிச் சின்னமாக அறியப்பட்டது.  அதை அனுப்பி இருந்தார். அதில் அமர்ந்து தன் தேசத்தை பரி பாலிக்க கிளம்பினான்.     ஜய ஸ்ரீ – வெற்றி என்ற செல்வத்தை அடைந்தான், பின்னால் அரச குமாரியை, நாட்டிய கலையரசி என்ற இரு பெண்களுடன் ஜயா பீடனை கன்யாகுப்ஜ அரசன் ஜயந்தன் வழியனுப்பினான்.  வெற்றி வீரனாக திரும்பி வந்து தன் ராஜ்ய பாரத்தை ஏற்றுக் கொண்டான்.

ஜஜ்ஜன் -சுஷ்கலத்ரா என்ற ஒரு தேசத்து அரசன் ஜஜ்ஜா என்பவன் முற்றுகையிட்டு போருக்கு அழைத்தான்.  பல நாட்கள் தொடர்ந்து அந்த முற்றுகை  நீடித்தது.   ஜயாபீடன் தன்  பிரஜைகளின் அன்புக்கு பாத்திரமானவன் ஆனதால் அவர்கள் ஜஜ்ஜாவை தோற்கடிக்க தாங்களும் உதவினர்.  கிராமத்து  பலவானான ஒருவனை அழைத்து தந்திரமாக ஜஜ்ஜாவை விரட்ட ஒரு யோசனை செய்தனர்.  அட்டகாசமாக சப்தமிட்டபடி ஸ்ரீ தேவன் என்ற அந்த பயில்வான்,  யாரிங்கே ஜஜ்ஜன் என அழைத்தபடி முற்றுகையிட்டிருந்த  சைன்யத்தின் நடுவில் வந்தான். பல நாட்களாக நடந்த முற்றுகை, களைத்து போய் இருந்த வீரர்கள் நடுவில் குதிரையில் அமர்ந்த்திருந்தவனை சுட்டிக் காட்டினர்.  அவனோ தாகம் தாங்காமல் தன் பொன் கலயத்தில் இருந்து நீரை குடித்துக்  கொண்டிருந்தான். இவனா என்று கேட்டபடி பயில்வான் ஸ்ரீ தேவன் தான் இருந்த இடத்தில் இருந்தே ஒரு கல்லை குறி பார்த்து ஜஜ்ஜாவின் மேல் அடித்தான்.  அந்த அளவு தூரத்திலிருந்து வேகமாக வந்து மேலே விழுந்த சிறு கல்லே அவன் மடிந்து விழப் போதுமாக இருந்தது.  ‘என் தாய் ஆசீர்வதித்து அனுப்பினாள்.  நான் நமது அரசனுக்காக போரில் பங்கு கொள்ளப் போகிறேன் – சீக்கிரம் உணவைக் கொடு என்று யாசித்தேன்.  அவள்  சிரித்தாள்.  என்னால் முடியாது என்றா நினைக்கிறாய். இதோ பார், நான் எதிரி அரசனை அழித்து விட்டு வருகிறேன் என்று ஸுளுரைத்து விட்டு வந்தேன்.’ என்றான். .478

அடி பட்டு குதிரையில் இருந்து தரையில் கிடந்த ஜ ஜ்ஜனைப்  பார்த்து பயந்த மற்ற போர் வீர்கள் அவனை அப்படியே விட்டு விட்டு ஓடி விட்டனர்.  ஜி ஜ்ஜா தான் கடந்த மூன்று ஆண்டுகளாக பலரை ஏமாற்றி ஜயித்த ராஜ்யம், அதனால் எப்பொழுதும் எந்த எதிரி தாக்குவானோ என்று கவலையுடனேயே இருந்தவன் அதன் பின் தலை எடுக்கவேயில்லை.  ஜயாபீடன் தன் தேசத்தை திரும்பப் பெற்றவனாக, தன் வழியில் நேற்மையாகவும், தன் நாட்டு மக்கள் நன்மையே கருதி  செயல் படுபவனாகவும் ராஜ்யத்தை நிர்வகித்தான்.  வியாபாரிகள் முன் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றினாலும், கணவன் மனைவி ஒருவருக்கொருவர் அனுசரனையாக  இல்லாவிட்டாலும்,  தன் பிரஜைகளை வருத்தி எடுத்து தனக்கு செல்வம் சேர்க்கும் அரசனும் இப்படித்தான் விழுவார்கள்.

கல்யாண தேவி என்ற மனைவியும் அனுசரனையாக இருந்தாள். அவள் வந்தபின் எங்கும் கல்யாணம் – நன்மையே என்று நினைத்தான். அவள் பெயரில் கல்யாணபுரம் என்ற நகரத்தை உருவாக்கினான். மல்ஹணபுரம் என்ற இடத்தில் விபுல கேசவன் என்ற பெயரில் என்ற பிரதிஷ்டை செய்து ஒரு கோவிலையும் கட்டினான்.  மற்றொரு மனைவி கமலா என்ற பெயரில் கமலபுரம் என்பதை உருவாக்கி அதன் பிரதான தேவியாக – கல்யாண தேவி என்று அழைத்தான்.  .

காஸ்யபர் காலத்தில் விதஸ்தா  இருந்த து போலவே,  காஸ்மீர தேசம் கல்விக்கு முக்யத்வம் பெற்றது. முந்தைய அரசர்கள் நாட்டை விஸ்தரிப்பதிலேயே இருந்ததால் இந்த கல்வித் துறை  பெரிதும்  மந்தமாகி இருந்தது.  எவரும் கல்வியறிவு பெறாமல்  இருக்கக்  கூடாது என்ற எண்ணத்துடன் பல வசதிகள் மாணவர்களூக்கு செய்து கொடுத்தான்.  அந்த தேசத்தில் தான்  மகரிஷி பதஞ்சலி மஹா பாஷ்யம் எழுதினார். அது மற்ற ராஜ்யங்களில் பிரபலமாகி பலர் பண்டிதர்களாக இருந்தனர். அதனால் தகுதியான வித்வான்களை  எங்கிருந்தாலும் வரவழைத்து, மஹா பாஷ்யம் படிக்க வழி செய்து கொடுத்தான்.  தானும் இலக்கண நூல்களை கற்றான்.  தானும் க்ஷீர என்ற பெயருடைய சிறந்த வித்வானிடம் இலக்கணம் படித்தான்.  (க்ஷீரஸ்வாமின் என்று அழைப்பர்.  இலக்கணத்தில் புலமை  இவருடைய தனிப்பட்ட சிறப்பு   பாண்ணியின் இலக்கண சூத்திரங்களை தெளிவாக விளக்கி  விவரித்து பல நூல்கள் எழுதியிருக்கிறார். அமரகோச என்ற நூல் சம்ஸ்க்ருத  பதங்கள்-வார்த்தைகள் -அதன் பொருள் பற்றிய நூல்.- அதற்கு உரை எழுதியவர்.  அபிமன்யு என்ற காஸ்மீர அரசனிடம் இருந்து பள்ளி மாணவர்களுக்கான இலக்கண நூலை எளிமையாக்கி எழுதிய முதல் அறிஞர்.  அவர் எழுதியதில் ஒரு பகுதி மட்டுமே கிடைத்து அனந்த தத்தா என்பவர்  உரையுடன்  வெளியிட்டது மட்டுமே கிடைத்துள்ளது என்பர்) எந்த அரசனும் தன்னை விட அதிகமாக அறிவாளியாகவோ திறமைசாலியாகவோ இருக்க விடவில்லை.  தெளிவான கொள்கையும், தூய்மையான எண்ணமும் அவனை சிறந்த அரசனாக, அறிவாளியாக, வீரனாக ஆக்கியது.  ராஜா என்பதை விட பண்டிதன் என்பதற்கு அதிக மதிப்பு இருந்த காலம்.  அதனால் பண்டிதர்களுடன் அதிக நேறம், கற்பதிலும் அவர்களுடன் உரையாடுவதிலும் செலவழித்தான்.  அதனால் மற்ற எல்லா சிறப்புகளை விட சிறந்த கல்வி கற்ற பண்டிதன் என்பதாக பிற்காலத்தில் புகழப் பட்டான்.

அந்த அரண்மனையில் அரசு அதிகாரிகளும், மதி மந்திரிகளையும் விட அதிகமாக கற்றவர்கள், ஆசாரியர்கள், பல துறையிலும் முன் நின்ற பெரியவர்களே நிறைந்து இருந்தனர்.  அதனால் ஜயாபீடனைக் காண வந்த சிற்றரசர்கள், இவர்களால் கவரப் பட்டவர்களாக  தாங்களும் அவர்களிடம் மாணவர்களாக சேர்ந்தனர்.   எந்த ஊரிலும் அறிவுடைய ஒருவர் இருப்பதாக தெரிய வந்தால் அவரை தேடிச் சென்று அழைத்து வந்தான்.   சுக்ர தந்தா என்பவர் நாட்டில் செல்வத்தையும், கொடை, போன்ற விஷயங்களையும் கவனித்து வந்தார்.  அந்த அமைப்புகளுக்கு பக்தசாலா என்ற பெயர்.   அந்த வித்வான் சபா பதியாக லக்ஷக்கணக்கில் ஊதியம் பெற்றார். அவர் பெயருடன்,  தகுதியை குறிக்கும் ‘தக்கியா ‘ என்ற பட்டத்தை அளித்து கௌரவித்தான். . உத்படா என்ற மற்றொருவர். அவரையும் கௌரவித்து, சபையின் தலைவனாக ஆக்கினான்.  இவரும் ஏராளமான தின்னர – அந்த அரசின் நாணயம்-  ஊதியமாக பெற்றார்.

 தாமோதர குப்தர் என்பவர் குட்டனி மதம் என்ற நூலை எழுதியவர்.  பலி மகா ராஜாவுக்கு கவி-சுக்ரன் ஆசிரியராக இருந்தது போல என்கிறார் கவி கல்ஹணன்.  (குட்டனி மதம்- the thoughts of procuress-  கொள் முதல், வழக்குகளும் தீர்வுகளும் – இவை சம்பந்தமான விரிவான விளக்கங்கள்)

மனோரதன், சுக்லதத்தன், சடகன், சந்திமான்,  வாமன என்பவரும் மற்றும் பல கவிகள் மந்திரிகளாக இருந்தனர்.   (வாமன என்பவர் காவ்யாலங்கார விருத்தி என்பதை எழுதியவர். காவ்யங்களின் அமைப்பு பற்றிய நூல். மனோரதனின் சுபாஷிதாவலி என்பதை வல்லபதேவர் என்பவர்  தன் நூலில் மேற்கோள் காட்டி  குறிப்பிட்டிருக்கிறார்.  மற்ற  மூவரையும் பற்றி தெரியவில்லை)

 இவர்கள் அனைவரும் கவிகளே.    அரச சபையில் இவ்வாறு பல அறிஞர்கள் இருந்தவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் சாதனைகளால் புகழ் பெற்றவர்களே,  அவர்கள் மூலம் அரசன் பல கலைகளை, பல வேத சாஸ்திரங்களை, நீதிகளை அறிந்து கொண்டான்.  இதில் அவன் மனமுவந்து ஈடுபட்டு ரசித்து மகிழ்ந்தான்.  வெறும் உணவும் ஆடம்பரம் மட்டுமா அரச வாழ்வு.  காளை மாடு கண்ணும் தெரியாமல் கிடைத்ததை மேய்வது போல கணக்கில்லாத அரசர்கள் வாழ்கிறார்களே அவர்கள் அறிவார்களா இந்த அனுபவத்தின் உயர்வை.  மயங்கி கிடப்பவனுக்கு கரும்பு ரஸத்தை ஊட்டினால் என்ன உணருவான்?  இறந்த உடலில் வாசனை மிக்க மலர் மாலைகளால் அலங்கரித்து என்ன பயன்? 

மேற்கு திசையில் ஸூரியோதயம் போல கனவு கண்டால், அந்த திசையில் யாரோ தர்மம் அறிந்த உயர்ந்த  ஆசாரியர் இருக்கிறார் என்று நினைப்பானாம்.

 கலா ரசனையும், கல்வி அறிவும் தரும்  சுகானுபவம் கற்றவனுக்கே தெரியும்.  (கற்றோரை கற்றோரே காமுறுவர்) சபையில் எந்த வித்வான் வந்தாலும் மனமார வரவேற்று பாராட்டுவான். 

அரசனே மந்த்ராலோசனையிலும், விக்ரமத்திலும் சிறந்தவனாக இருந்ததால் இரண்டு முகம் பார்க்கும் கண்ணாடிகளுக்கு இடையில் நின்றால் அவை பலவாக காட்டுவது போல இருந்தானாம்.

(கோவில்களில் இப்படி கண்ணாடி அறை இருக்கும். அதில் நடுவில் உள்ள மூர்த்தி பலவாகத் தெரியும்.)

ஒரு சமயம் தன் சேவகர்களுக்கு ஆணையிட்டான். லங்கேஸ்வரனின் நாட்டில் இருந்து ஐந்து ராக்ஷஸர்களை அழைத்து வா என்றானாம்.  சம்பந்தப் பட்ட அதிகாரி நாட்டின் அமைதியையும், போர் முறைகளையும் கவனித்து வந்தவர்.  இது என்ன விபரீதம் என்று நினைத்தாலும் அரச ஆணை எனவே, கிளம்பினார்.  சமுத்திரத்தை கடக்க படகில் சென்ற பொழுது தவறி விழுந்து, ஒரு திமிங்கிலத்தின் வாயில் விழுந்தாராம்.  செய்வதறியாமல் உள்ளேயே இருந்தவர் யோசித்து அதன் வாய் வழியாகவே வெளி வந்து விட்டாராம்.  அவரும் ஸ்ரீ ராம பக்தர்.  யதேச்சையாக கரையேறிய இடம்  இலங்கையாகவே இருக்க, விபீஷண ராஜாவின் சேவகர்கள் அவரை  விசாரித்த பின், அரசனிடம் அழைத்துச் சென்றனர்.  மிக்க மகிழ்ச்சியுடன் காஸ்மீர அரசனின் தூதுவாக்கியம் இருந்த  கடிதத்தை விபீஷண ராஜாவிடம் கொடுத்தார்.   விபீஷணனும்  வழக்கமாக தூதுவர்களுக்கு செய்யும் உபசாரங்கள், தனம் இவைகளைக் கொடுத்து, அவர்கள் வேண்டிய ஐந்து  ராக்ஷஸர்களையும் தூதுவனுடன் அனுப்பி வைத்தான். 

ஜயாபீடன் அவர்களுக்காக, கோட்டையுடன் கூடிய ஒரு ஜயபுர என்ற இடத்தில் தங்க வைத்து, அவர்கள் உதவியுடனேயே,  நீர் வசதிக்காக ஏரிகள், மற்றும் தேவலோகத்துக்கு சமமான  வசதிகளுடன்  தனி நகரமாக ஆக்கி கொடுத்தான்.

மூன்று பெரிய புத்தர் சிலைகளுடன் விஹாரம் என்பதைக் கட்டிக் கொடுத்தான்.  ஸ்ரீ நகரத்தின் நடுவில் ஜயாதேவி என்ற தேவி ஆலயமும் நிர்மாணித்தான். புண்ணிய கர்மா – நற்காரியங்களைச் செய்பவன் என்ற பெயர் பெற்றான்.   அதே இடத்தில் சேஷ சாயி யாக – பாம்பணையில் துயிலும் மகா விஷ்ணுவாக கேசவ ஆலயமும் நிர்மாணித்தான்.   அந்த சன்னிதியைக் கண்ட பகவான் விஷ்ணு நிச்சயம் தன் இருப்பிடமான வைகுண்டத்தை விட்டு வந்து விடுவாரோ எனும்படி சிறப்பாக கட்டி முடித்தான்.  அந்த ராக்ஷஸர்களின் சக்தியை பயன் படுத்திக் கொண்டு மேலும் சில காரியங்களை செய்து கொண்டான் என்று  சொல்வர்.

ஒரு நாள் கனவில், நீர் (சாம்பல் ஏரி)  நிலையின் முடிவில் துவாரகா த்வாரவதீ – என்ற இடத்தை அதே போல கட்டு என்று கம்சாரியான பகவானே கட்டனையிட்டது போல் இருக்கவும், அதே போல அழகிய துவாரவதீ என்ற நகரத்தை கட்டினான்.

 கோட்டையும் வெளி பிராகாரங்களும் துவாரவதியாகவும் உள் கட்டுமானகள் தேவி ஜாயா தேவியின் ஆலயமாகவும் இன்றளவும் மக்கள் வழிபட்டு வருகிறார்கள்.

ஜய தத்தா என்ற மந்திரி ஐந்து விதமான பாட்டங்கள் பெற்று வித்வானாக இருந்தவர். அங்கு ஒரு பாடசாலையை நிறுவினார். அது ஜய த த்தா மடம் எனப்படுகிறது.   அரண்மனையின் நிர்வாக அதிகாரியாக இருந்த ப்ரமோத என்பவர் மதுரா நகர அரசனாக இருந்தவர்.  அவர் மருமகன்.  அசன். அந்த மருமகன் சிவபெருமானுக்காக அசேஸ்வரன் என்ற பெயரில்  ஒரு சிவன் கோவிலை கட்டினான்.

மறுமுறை, தகுந்த ஏற்பாடுகளைச் செய்து கொண்டு திக் விஜயம் என்று புறப்பட்டான்.  அலை வீசும் சமுத்திரம் போல படை வீரர்கள் தொடர்ந்தனர்.  யானைப் படை நீண்ட வரிசையாக உடன் சென்றது. கிழக்கு சமுத்திரக் கரையை அடைந்த பின்னும் இந்த வரிசை கிளம்பிய இடத்தில் ஒரு முனை    இருந்ததாம். பகீரதனின் கங்கையை கொண்டு வந்த செயலுக்கு இணையாக ஹிமாசலத்திலிருந்து கங்கை பிரவாகமாக வெளி வந்து நிலத்தில் நதியாக ஓடி சமுத்திரத்தை அடைவது போலவே  அந்த படை இருந்ததாம்.

தன் பெயரை மாற்றி விநயாதித்யா என்று சொல்லிக் கொண்டான். சிறப்பு பாதுகாவலர்கள், ஏவலர்கள், மற்றும் இரவு காவல் புரியும் வீரர்கள் ஸூழ, மும்முனியும் உடன் வர தங்குவதற்காக ஏற்படுத்திய தாற்காலிக  கூடாரத்திலிருந்து வெளியில் வந்து சுற்றிப் பார்க்கலானான்.  அந்த கிழக்கு பிரதேசத்தை வினயாதித்ய புரம் என்றும் அறிவித்தான்.

சில சமயம்,  சக்தி வாய்ந்த பேரரசன்,  அனுபவம் மிக்க ஆளுமை உள்லவன், கற்றறிந்தும்  கேட்டும் அறிவை வளர்த்துக் கொண்டவன்,  சாதாரண மக்களின் துணிச்சலான சாகசம் போல ஏதோ செய்யப் போய், அனாவசியமாக துன்பத்தில் மாட்டிக் கொள்வதும் உண்டு. அது தான் நடந்தது.    அளவுக்கு அதிகமாக தன்னம்பிக்கையுடன், பீம சேனன் என்ற அந்த நாட்டு அரசனின் கோட்டைக்குள்,  முன்  அறிவிப்பு இன்றி  சில துறவிகளுடன், தானும் துறவியாக வேடமிட்டுக் கொண்டு நுழைந்து  விட்டான்.  தேசத்தின்  கிழக்கு பிரதேசத்தின் பிரசித்தமான மகா ராஜா பீமசேமனின் அரசு.

  ஸ்ரீ- செல்வத்தின் அதிபதி என்பதில் தனம், ராஜ்யம் அல்லது பெரும் பதவி, நல்வாழ்வு, அமைதியான இல்லறம், மக்கட்  பேறு இவையனைத்தும் அவள் அருளே. அவளுக்கு சந்தேகம் வந்து விட்டதாம் –தான் தேர்ந்தெடுத்து  வாரி வழங்கியதால்  உயர் நிலைக்கு வந்தவன் – அவனை சோதித்து பார்க்கலாம் என்று நினைத்தாளோ –  அதனால் தான் நேர் வழியிலேயே செல்பவன் இப்படி தவறான தேவையில்லாத செயலை செய்வானேன் என்று கவி அங்கலாய்க்கிறார்.

ஓசையின்றி கோட்டையின் உள் பகுதியில் சென்று கொண்டிருந்தவர்களை ஜஜ்ஜன் என்ற கோட்டை காவலனின் சகோதரன், சித்தன் என்பவன் கண்டு கொண்டு அரசனிடம் தெரிவித்தான்.  பீம சேனன் தானே யதேச்சையாக வந்தது போல வந்து கைகளாலேயே அவர்களை சிறை பிடித்து விட்டான்.   பழமையான புராண காலத்து நாகராஜன் நகுஷன்  மகா பாரத பீமனை பற்றியது போல  எனும்படி பயங்கர பராக்கிரமம் உடையவன் அந்த அரசன் பீம சேனன்.    ஆற்றல் வாய்ந்த அரசர்களுக்கும் முன்னோடியாக இருந்த ஜயாபீடன்  அந்த பிடியின் வலுவை உணர்ந்து கொண்டான்.  தெய்வச் செயல் தான் என் தலை தாழச் செய்து விட்டது என்றும் உணர்ந்தான்.  இயல்பான விவேகம் – எந்த சிக்கலிலும் தீர்வு காண அறிந்த ஜயாபீடன், அடுத்து என்ன செய்வது என்பதை தீர்மானித்துக் கொண்டு தலை நிமிர்ந்து நின்றான்.

அதேசமயம் அந்த நகரில் சிலந்தி ஊர்வதால் வரும் ஒரு தோல் வியாதியால் திடுமென மக்கள் பாதிக்கப் பட்டனர். அரசவையில் அந்த விஷயம் மிக முக்கியமான அறிவிப்பாக வெளி வந்தது.  ( சில வகை சிலந்திகள் மனித உடலில் பட்டால் தோல் தடிக்கும், அரிப்பு உண்டாகும்.)  அது தொற்று நோயாக பரவும் என்பதால் பேராபத்து என்று அனைவரும் திகைத்தார்கள்.  பீம சேன ராஜாவிடம் சொல்ல அரசு ஊழியர்கள் கூட்டமாக வந்து விட்டனர்.  அந்த தேசத்தின் இயற்கை சூழ்நிலையும் இப்படி காட்டுப் பூச்சிகளான சிலந்திகள் நிரம்பி இருக்க காரணம்.

ஜயா பீடன் யோசித்தான்.  தன்னுடன் வந்த ஒரு சிப்பந்தியிடம், சில பொருட்களையும், அது சம்பந்தமான விவரங்கள் உள்ள நூல்களையும் வாங்கி வர பணித்தான்.  பித்தம் அதிகரிக்கும் பொருட்களை உண்பதால் பித்தம் அதிகரித்து வரும் ஜுரம்- காய்ச்சல் வரும்.  பின் தோலில் கொப்புளங்கள் வரும். அதற்கான மருந்தையும் அறிந்து கொண்டான்.   வஜ்ர வ்ருக்ஷம் என்பதன் பால் உடலில் பட்டால் இந்த சிலந்தி கடி போலவே மேல் தோலில் தடிப்பு வரும்.  தானே அந்த பாலை உடலில் தடவிக் கோண்டு தடிப்புகளோடு காட்சி அளித்தான். அதைக் கண்ட அரச சிப்பந்திகள் அவனையும்  அவன்  உடன் வந்தவர்களையும்  கோட்டையை விட்டு வெளியேறச் செய்து விட்டனர்.   தப்பித்தோம் என்று வெளியில் வந்த பின் அதற்கான முறிவு மருந்துகளால் தன்னை குணப்படுத்திக் கொண்டு விட்டான்.

‘வஜ்ர வ்ருக்ஷம் என்ற தாவரம் (மூன்று பட்டைகளும் முட்களும் நிறைந்த தண்டு மட்டுமே, அதன் அழகுக்காக வீடுகளில் அலங்காரமாக வைப்பர்.)  வேரோ, துளிர்களோ மற்ற தாவரங்களைப் போல பூவோ இல்லாதது  என்று மட்டும் அறிந்தவர்கள், அது திடுமென பழங்களைத் தருவதையும் அதன் குணங்களையும் அறிய மாட்டார்கள்.   அது போல , வெளீப் பார்வைக்கு அறிவிலி போலத் தோன்றும் ஒரு சிலர் மிகப் பெரிய செயல்களை அனாயாசமாக செய்து வெற்றி பெறுவதும் உண்டு. ‘

நேபாள தேசத்து அரசன் ஆராமுடி என்பவன், மந்திர தந்திரங்கள் அறிந்தவன், மாயா ஜாலம் எனும் வித்தையும் அறிந்தவன்.  ஜயாபீடன் அவனுடைய அரசவைக்குள் நுழைந்த பொழுத்து வணக்கம் கூட சொல்லாமல்  அரசவையை விட்டு தன் பரிவாரங்கள் படையுடன் வெளியேறி விட்டான்.   போரிட்டு வெற்றி பெறுவதே நோக்கமாக வந்த ஜயா பீடனும் அதற்கு மேல் அங்கு தங்கவும் இல்லை. அடுத்த தேசம் சென்றான்.   150/398

தனக்கு நேருக்கு நேர் எதிர்த்து நின்று போரிடும் வீரனைத் தேடிக் கொண்டே படையுடன் அருகில் இருந்த இடங்களில் சுற்றி அலைந்தான்.  விதி, கழுகு புறாவை வேட்டையாடுவது போன்ற மன நிலை வாய்த்து விட்டது போலும்.  ஓரிடத்தில் படஹ வாத்யங்களுடன் ஆராமுடி நின்றிருப்பதைக் கண்டான்.  உடனே சினத்துடன்  இருவருக்கும் இடையில் இருந்த நதியில் இறங்கி நடந்து கடக்க முயன்றான்.  நதியின் முழங்கால் அளவு நீரில் நின்றவன் திடுமென நதியில் வெள்ளம் பெருகி வருவதை உணர்ந்தான். கழுத்தளவு நீர், அதன் பின் அடித்துச் செல்லப் பட்டான்.  போர் வீர்களும் யானைகளும் குதிரைகளுமாக இருந்த சைன்யத்தினர் செய்வதறியாது திகைத்தனர்.  கண் முன்னால் நீரில் நின்றவன் அடித்துச் செல்லப் படுவதைக் கண்டு அலறினர்.  ஒரு சிலர் நீரில் குதித்து துளாவி தேடினர். த்ருதி என்ற குலத்தினர் தோல் பதனிடும் தொழில்கள் செய்பவர்கள். அவர்களை அழைத்து வந்து தேடச் செய்தனர்.  அந்த பகுதிகளில் எருமைத் தோலுக்காக அவ்விதமாக நீரில் போட்டு ஊறவைத்து எடுப்பது வழக்கமாம்.

அவர்களின் கூக்குரலைக் அப்பொழுதுதான் கேட்டவன் போல அந்த எதிரி அரசன் அவசரமாக வந்தான்.  அவனுடைய ஆட்கள் மிருகங்களின் தோலால் ஆன உடையை அணிந்து கொண்டு  வெள்ளத்தில் இறங்கி தேடி ஜயாபீடனின் உடலை எடுத்துக் கொண்டு வந்தனர்.   ஆராமுடி  அந்த உடலை கயிறால் கட்டி எடுத்துக் கொண்டு வெற்றி ,முழக்கத்துடன் உத்சவமாக கொண்டு சென்றான். அந்த கூட்டம் ஆடிப் பாடி விருந்துகளுடன் வெற்றியைக் கொண்டாடினர்.

தெய்வத்திற்கும், நீர் நிறைந்த நதி, கடல் முதலியவைகளும் ஒன்றே. இவைகளுக்கு எந்த நியமமும் இருப்பதில்லை.  எந்த சமயம்  எப்படி செயல் படும், எது நடக்கும் என்பதை யாரால் சொல்ல முடியும்?  க்ஷண நேரத்தில் விரும்பத் தகாத ஒரு விஷயம், கண் முன்னாலேயே நடந்து முடிந்து விட்டதே.  தகிக்கும் வெய்யிலில் அலைந்து களைத்து  மர நிழலில் ஒதுங்கியவன், திடுமென மரத்தின் மேல் விழுந்த இடியால் மரணமடைவதும் உண்டு.    கல்லால் ஆன திடமான மாளிகையில் வாழ்ந்தவன்,  சுற்றிலும் அவனை பாதுகாக்கவே ஏராளமான நபர்கள் ஸூழ வாழ்ந்தவன், காஸ்மீர தேசத்தின் புகழ் பெற்ற ராஜா, இப்படி மூழ்கி இறப்பானா?  உடன் வந்த பரிவாரங்கள் நம்ப முடியாமல் தவித்தனர்.

ஆராமுடி,  காளகண்டிகா என்ற இடத்தில் அந்த உடலை வைத்து காவல் வீரர்களை நிறுத்தி வைத்திருந்தான்.

வாழ் நாளில், எண்ணற்ற கலைஞர்கள் அவனை வானத்து நிலவை விட சிறந்தவன் என்றனர். ஆற்றல் மிக்கவர்கள் ஆதவனை விட மேலான பராக்ரமம் உள்ளவன் இந்த அரசன் என்றனர்.  அவனுக்கு இப்படி ஒரு முடிவா? ஏற்க முடியாமல்  தங்களுக்குள் யோசித்தனர்.  நதியைக் கண்டவுடனே ஜயாபீடன் மகிழ்ச்சியுடன் சில பாடல்களை பாடியதை நினவு படுத்திக் கொண்டனர்.  இதே இடத்தில் அரசன் ஜயாபீடன் இருந்தால் எப்படி யோசிப்பான், என்ன உபாயம் செய்வான் என நினைத்தபடி அந்த உடலையே பார்த்தபடி நின்றிருந்தனர்.   மந்திரிகளின் மத்தியில் இருந்து தேவசர்மா எழுந்தான்.  அவன் அரசனிடம் மிகுந்த  விஸ்வாசம் வைத்திருந்தவன், அதனால் பொறுக்க மாட்டாமல் வருந்தினாலும்  தன்னை சமாளித்துக் கொண்டு சமயோசிதமாக ஒரு திட்டம் வகுத்தான். 

அரமுடனுக்கு சில தூதுவர்களை அனுப்பினான். பிரியமாக பேசுங்கள், நம்பும்படி சொல்லுங்கள் என்றவன் விவரித்துச் சொன்னான்.   ஜயாபீடனின் செல்வம் காஸ்மீரத்தில் ஏராளமாக உள்ளது. அதிலிருந்து உனக்கு வேண்டியதைத் தருகிறேன் என்று ஆசைக் காட்டுங்கள்.   அராமுடனின்  அந்தரங்க அதிகாரிகள் சிலரை இங்கு அழைத்து வாருங்கள் என்றான்.  நம்பகமான  காவல் வீரர்கள் கால கண்டிகா வில் அரசனை பாதுகாக்க வைத்து விட்டு சிறு படையுடன்      நேபாள தேசத்தை நோக்கி சென்ற  தேவ சர்மாவை  அராமுடியின் அந்தரங்க அதிகாரிகள் சிலர் அராமுடியின் சபைக்கு அழைத்துச் சென்றனர்.  தூதுவனின் ஆசை வார்த்தைகளில் மயங்கிய அராமுடியும் மரியாதையாக வரவேற்று, ஆசனம் அளித்தான்.  விருந்தோம்பலுக்குப் பின்,   மறு நாள் அவர்கள் இருவர் மட்டுமாக பேசி மேற்கொண்டு செய்ய வேண்டியதை திட்டமிடுவதாக முடிவு எடுத்தனர்.  அதன் பின் அரசன் தேவ சர்மாவுக்கு  விடை கொடுத்து அனுப்பி விட்டு தன்னறைக்குச் சென்று விட்டான்.

அறைக்குள் சென்ற அரசனை பின் தொடர்ந்த தேவ சர்மா ஜாயாபீடன் ஏராளமான செல்வத்தை தன் நம்பகமான அதிகாரிகளிடம் பாதுகாப்பாக வைத்திருக்கிறான்.  அவர்களை நான் அறிவேன்.   மகாராஜா சம்மதித்தால்,  நான் அவனிடம் ‘ உன்னை விடுவிக்க என்னால் முடியும்,  அந்த செல்வத்தில் ஒரு பகுதியை எனக்கு கொடு’  என்று சொல்லி பொக்கிஷம் எங்கு உள்ளது என்பதை தெரிந்து கொண்டு வருகிறேன் என்றான்.   அதனால் தான் சிலரை மட்டுமே என்னுடன் அழைத்து வந்தேன்.  ஜயாபீட அரசனை சிறை வைத்துள்ள இடத்தில் தான் அவர்களும் இருக்கிறார்கள் என்றான்.  

இப்படி அரசன் அருகில் செல்ல ஒரு ஏற்பாட்டைச் செய்து கொண்டு காலகண்டிகா வை நோக்கி வேகமாக வந்தான்.   மற்றவர்களை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு தான் மட்டுமாக  அருகில் சென்றான். 

அரசனை பார்த்து. ‘மகாராஜா! நீங்கள் தான் சமயோசிதமாக தப்ப வழி அறிவீர்கள். சீக்கிரம். ஒரு வழி சொல்லுங்கள், என்றான். அரசனோ’மகா மந்திரி! என்ன இது? உங்கள் உயிரை பணயம் வைத்து இங்கு வந்துள்ளீர்கள். ஆயுதமும் இல்லாமல் திடுமென என்ன செய்வேன்?  தேவசர்மா ‘உங்களால் தான் முடியும். இந்த ஜன்னலில் இருந்து குதித்து தப்பலாம், எது வானாலும் யோசியுங்கள்’

நீரில் ஊறி உப்பிப் போன உடல் ஜன்னல் வழியாக நதியில் குதிப்பதா? முடியுமா? இந்த உயரத்திலிருந்து விழுந்தால் பிழைக்க முடியுமா?  என்ற வகையில் யோசித்தான்.  கோழையாக தப்புவதா? அராமுடிக்கு சரியான பதிலடி கொடுத்து விட்டு தான் மறு காரியம் என்று யோசித்தான்.   தேவ சர்மாவிடம் ஒரு நாழிகை வெளியில் இரு.  திரும்பி வரும் முன் நதியை, அதன் ஆழத்தை, சுற்றுப் புறத்தை ஆராய்ந்து வைத்துக் கொள்.   எனவே தேவ சர்மாவும் வெளியில் நின்று பதட்டத்தை வெளிக் காட்டாமல் நின்றான்.  திரும்ப உள்ளே வந்தவன் திகைத்தான். ஒரு துணியால் ஜயாபீடனின் கழுத்தை சுற்றி இறுக்கி இருக்க, ஜயா பீடன்  தன் உதிரத்தால் அந்த துணியில் எழுதியிருந்த வழிகாட்டி – எதை எப்படி செய்ய வேண்டும் என்பதை எழுதியிருப்பதைப் பார்த்தான்.    ‘மகா மந்திரி வெளியில் சென்று இறந்து விட்டான் என்று சொல்லி என்னை உன் முதுகில் வைத்துக் கொண்டு வெளியேறு.  என் உடலை மிதக்கும் கட்டையாக உன் உடலுடன் சேர்த்து கட்டிக் கொள்.  வேகமாக சென்று நதியில் குதித்து விடு.’   புரிந்தும் புரியாமலும்  தேவ சர்மா அதன்படியே நதியில் குதித்து  நீரினுள் மூழ்கி  நீந்தி அக்கரையை அடைந்தனர்.  

அரசன் தேவ சர்மாவின் விஸ்வாசம் என்ற கடலில் மூழ்கி அதிசயித்தான். பின் நிஜமான நதியில் மூழ்கி நீந்தி அக்கரை அடைந்தான்.

படை வீரர்களும் அக்கரை வந்து சேர்ந்தனர்.  முற்றுகையிட்டு நேபாள அரசனையும், அவன் ராஜ குமாரனையும் சேர்த்து வெற்றி கொண்டு ஊரை விட்டு வெகு தூரம் சென்று விட்டிருந்தான்.  விடிந்த பின் தான் கைதி தப்பி விட்டதை காவல் வீர்கள் அறிந்தனர் . 580

அரசனுடன் வந்திருந்த படை வீரர்களும் வந்து மரண வாயிலிருந்து உயிருடன் மீண்டு வந்த  தங்கள் அரசனை வாழ்த்தியும், வெற்றி கோஷமிட்டும் கொண்டாடினர்.  பன் முகமான இயற்கையின் வினோதங்கள் போலவே, கோடைக் காலம்  வெய்யில் கொளுத்த தவிக்கும் சம நிலத்து மக்கள் ஒரு புறம், கடும் பனியால் முடங்கி கிடந்த இயல் வாழ்க்கை கோடை வெய்யிலில் பனி கரைந்து நீராக பெருகி வர இளம் காற்றும் வீச மலைப் பிரதேசங்களில் வாழ்வது சுகமான அனுபவமாக இருப்பது மறு புறம் என்பது நாம் அறிந்ததே.   அதே போல ஜ ஜ்ஜா போன்ற அரச குலத்தினர்  செய்த துரோகத்துக்கு முன்  முக்ய மந்திரியின் மகன் தேவ சர்வாவின் தியாகம் மிகச் சிறந்தது  என புகழ்ந்தனர்.  தன் உயிரையும் பணயம் வைத்து எதிரியின் கோட்டையிலிருந்து தங்கள் அரசனை சிறை மீட்டான் என்ற வரலாறு புகழ் பெற்றது. அவன் தந்தை மித்ர சர்மா பாக்யம் செய்தவர். அவரும் நாட்டின் நலனையே எண்ணினார், மகன் அதே கோட்டில் வந்து விட்டான் என்றனர்.  பானு என்ற ஸூரியனின் இருண்ட பக்கம் தான் சனைச்சரனுடையது.  ரக்ஷா ரத்னம் என்று தேவ சர்மாவை கொண்டாடினர்.  அந்த மந்திரியின் பிரபலத்துக்கு முன் தான் அடைந்த செல்வமும் வெற்றியும் அதற்கான பெருமையை பெறவில்லை என்று அரசன் ஜயா பீடன் நினைத்தான்.  தோற்றோமோ என்ற ஐயமே மேலோங்கி நின்றது.  புலன்களை வென்றவனாக  தன்னை சொல்லிக் கொண்டான். நல்லாட்சியை அளித்தவன், வெற்றி வீரனாக வந்துள்ளான்  என்பது இரண்டாம் பக்ஷமாயிறு. ( shrI -ஸ்த்ரீ ராஜ்யம் –  27 நக்ஷத்திரங்களும் மூன்று மூன்றாக பூமியுடன் சுற்றி வரும். ஆதவனின் பார்வைக்கு கீழ் வரும் பிரதேசங்களை ஆட்சி செய்யும் என ஜோதிட சாஸ்திரமாம். கிழக்கு இந்திய பகுதிகள், பூடான் முதலிய தேசங்கள், ஜோதிட சாஸ்திரத்தின் படி மூன்று, திருவோணம், அவிட்டம், சதயம், என்ற நக்ஷத்திரங்களின் ஆளுமையில் வருவதாகவும், அந்த நக்ஷத்திரங்களை பெண் பாலாக சொல்லப் படுவதால்  அதன் அடிப்படையில்,  அந்த பிரதேசம் மக்கள் மத்தியில் ஸ்த்ரீ ராஜ்யமாக அழைக்கப் படலாயிற்று.  மகா பாரத விராட் பர்வம்.)  அந்த ராஜ்யத்தை வெற்றி கொண்டதால் தான் புலன்களை வென்று சாதனைகள் செய்யும் தபஸ்விகள் போல ஆனதாக அரசன் நினைத்து மகிழ்ந்தானாம்.  அந்த தேசத்தின் கொடி- கர்ணன்  என்ற பாரத வீரன், அவன் உருவை பொறித்த கொடிகளுடன் அவன் ஸ்த்ரீ ராஜய்த்திலிருந்து வெளி வந்தான்.  வெற்றியடைந்தவன், தோற்ற நாட்டின் கொடியை கைப்பற்றி கொண்டு வருவது ஒரு வழக்கம்.  அதை தான் நிறுவிய கர்மஸ்தானம் – நியாயாலயம் என்ற கட்டிடத்தின் மேல் பறக்க விட்டான்.

தன்னுடைய திக்விஜயங்களின் செலவுக்காக கொண்டு சென்ற நிதியை,  தனி பிரிவாக தனது பொக்கிஷ அறையில் வைத்தான். அது பிற்காலத்திலும் பிரயாணங்கள் , யாத்திரைகளுக்காகவே செலவழிக்கப் படும் என்று அறிவித்தான்.  நால் திசைகளிலும் கடல் சூழ்ந்த  நாட்டையே தன் ஆளுமைக்குள் கொண்டு வந்தவனுக்கு தனியாக  வேறு புகழ் மாலைகள் வேண்டுமா என்ன?  (சமுத்திரங்களே அவன் நாட்டிற்கு  முகம் பார்க்கும் அழகிய கண்ணாடிகளாக இருந்தனவாம்)  

திரும்பவும் காஸ்மீர தேசத்திற்குள் நுழைந்தவன், முன் இருந்த சிற்றரசர்கள் வந்து வாழ்த்த வெகு காலம் சிறப்பாக தன் ராஜ்யத்தில் மன நிறைவோடு இருந்தான்.  தோற்ற நாடுகளில் இருந்து ஏராளமாக சேகரித்து கொண்டு வந்திருந்த நிதிகளை அனுபவித்தபடி வாழ்ந்தான்.  

 ஒரு நாள், கனவில் தன்னை சிறப்பாக அலங்கரித்துக்  தேவன் போல காட்சியளித்த ஒரு உருவைக் கண்டான்.  நான் மஹா பத்மன் என்ற நாகேந்திரன். உங்கள் ராஜ்யத்தில் நானும் என் பரிவாரங்களும் சுகமாக வாழ்ந்து  வருகிறோம்.  தென் தேசத்திலிருந்து வந்துள்ள  ஒரு மந்திரவாதி, என்னை கொண்டு செல்ல விரும்புகிறான். அவன் தேசம் நீரின்றி வறண்டு விட்டதாம். என்னை அவனிடம் இருந்து காப்பாற்றுங்கள்.  பதிலுக்கு நான் இந்த உங்கள் ராஜ்யத்தில் சுவர்ண தாது நிறைந்த மலையை காட்டுகிறேன் என்றான்.  

மறுநாள் வெளியில் புதிதாக ஒரு மனிதனைக் கண்ட அரச தூதர்கள் அந்த புது  மனிதனை சந்தேகப்பட்டு அரசன் முன் கொண்டு வந்து நிறுத்தினர். அரசன் ஜயாபீடன்  அவனை விசாரித்தான். ‘யார் நீ?  எதற்கு இங்கு சுற்றுகிறாய்? என்ன தேவை?  யாருடைய தூதன்? பயப்படாமல் சொல், உண்மையைச் சொன்னால் தப்புவாய், ‘

அவன் கனவில் நாகேந்திரன் மகா பத்மன் சொன்னதையே சொன்னான்.  வியந்த அரசன் மேலும் விவரமாக சொல்லச் சொன்னான்.  பல மைல்கள் தொலைவிலிருந்து வந்தவன், இங்குள்ள ஏரியில் வாழும் நாக ராஜனை எவ்வாறு கொண்டு போவாய்?  அதுவும் சாதாரண நாகம் அல்ல.  பல சிறப்பான சக்திகளைக் கொண்டது?  தவிர நாகராஜன் எந்த விதத்தில் உங்கள் பிரதேசத்தை வளம் பெற செய்வான் என்று எதிர் பார்க்கிறாய்? 

ராஜன்! என்னுடைய மந்திர சக்திகள் அமோகமானவை. ஆச்சர்யமாக இருக்கும். உங்கள் கண் முன்னால் செய்து காட்டுகிறேன் என்றவன்,  விதஸ்தா ஏரியை நோக்கி அரசன் முன் செல்ல பின் தொடர்ந்து சென்றான்.   சில மந்திரங்களை உச்சரித்தான். ஏரியின் நீர் வற்றி சேறாக தெரிந்தது. அதில்    மனித முகம் கொண்ட சிறு நாகங்கள் நெளிந்து கொண்டிருக்கக் கண்டான்.   விதஸ்தா ஏரியில் நாங்கள் வசிப்பது தெரிந்த விஷயமே. அதில் ஏராளமான நாக குஞ்சுகள் இருப்பது புதிதல்ல.  ராஜன்! இவைகளை நான் எடுத்துச் செல்லவா என்ற புதிய மனிதனின் குரல் கேட்டு தன் உணர்வு பெற்ற ஜயா பீடன், கூடாது என்று மறுத்து விட்டான்.  முன் போலவே விதஸ்தா நீர் நிரம்பி இருக்கும் படி செய் என்று ஆணையிட்டான்.  அவனை சமாதானமாக பேசி,  நிறைய தனம் கொடுத்து அனுப்பி விட்டு யோசித்தான்.   மகா பத்ம நாகம் சொன்னபடி ஏன் இன்னும் சுவர்ண கிரி இருக்கும் இடம் காட்டவில்லை?  அதே நினைவுடன் தூங்கியவனின் கனவில் அந்த நாக ராஜன் வந்தான்.  கோபத்துடன்’ என்ன உதவி செய்தாய் என்று சுவர்ண கிரியை காட்டுவேன்.   என் தேசம் இது பரதேசம் என்ற எண்ணமெல்லாம் உன் போன்ற மனிதர்களுக்குத் தான்.  அதே நினைவு அதே கொள்கை. காப்பாற்று என்று உன்னை சரணடைந்தேன்.  சமுத்திரம் எங்களுக்கு அடைக்கலம் கொடுக்கும்,  வெளியில் தெரியாமல் நாங்கள் வாழ்வோம். சமுத்திரத்தின் பெருந்தன்மை எங்கே, நீ எங்கே. . என்னைக் காட்டிக் கொடுத்து விட்டாய். எங்கள் பெண்களையும், சிறு குழந்தைகளையும் வெளிப்பட செய்து அவமானம் செய்து விட்டாய். எந்த முகத்தோடு என் மனைவியைப் பார்ப்பேன்?  எங்களுக்கும் சுய கௌரவம் உண்டு.  உன் விளையாட்டுப் பொருளாக எண்ணி விட்டாய்.  என்னைத் தான் சொல்ல வேண்டும்.  மகாராஜா, சாம்ராஜ்யதிபதி என்ற கர்வத்தில் திளைக்கும் அரசர்களும் மனிதர்களே.   உயிர் உள்ள வரை  தானே, மரணம் கூடவே வருவதை மறந்து தன் மனம் போன போக்கில் செல்லும் உன்னைப் போன்றவர்கள்  சுய நலமிகள்,  தனக்கு செல்வம் வரும் என்றால் எதையும் செய்யத் துணிவார்கள்.

உன் போன்றவர்கள் செல்வ மதம் மித மிஞ்சி போன நிலையில் நியாயம், வாக்கு கொடுத்தால் அதை மீறக் கூடாது என்ற நற்குணங்களை கை விட்டவர்கள்.  உலகில் மற்ற உயிரினங்களை ஒரு பொருட்டாக நினைப்பதில்லை.  புது அனுபவம், இது வரை காணாத அதிசயம் என்று அதன்பின் போவதில் அதிக ஆவல் உடையவர்கள்.  நானும் அதே போல வாக்கு தவற மாட்டேன். ஆனால் சுவர்ணம் அல்ல, உன் தகுதிக்கு தாமிரம் போதும். அதன் பின் அந்த சுவர்ண கிரி இருந்த இடத்தை காட்டி விட்டு மறைந்தது. அரசன் விடிந்த பின் அந்த இடம் சென்று பார்த்தால் அது தாமிர மலை.  கிரமார்ஜய என்ற இடத்தில் இருந்த தாமிர சுரங்கம்.இருந்த மலை. 

ஜயாபீடன் அதிலிருந்து தாமிர நாணயங்களை பல கோடிக் கணக்காக தயாரித்தான்.  தன் உருவமும் பதவியும் அதில் முத்திரையாக பதித்தான்.  சவால் விடுத்தான். இதை விட அதிகமாக தன் ராஜ்ய நாணயங்கள் செய்தவர்கள் உண்டானால் வாருங்கள் என்றான்.  பாட்டானாரின் நல்லாட்சியை நினைவுறுத்தும் விதமாக ஆண்டவன் தந்தை வழி செல்ல நினைத்து விட்டவன் போல ஆனான். அதை பிரஜைகளின் போதாத  காலம் என்று தான்  பேசிக் கோண்டனர். அரசனின் குணமே மாறி விட்டது.620

அருகில் இருந்த ஒரு சிலர் போதனை செய்தனர். எதற்கு திக்விஜயம் செய்து படாத பாடு பட்டு செல்வத்தைக் கவர்ந்து வந்து நாட்டில் சேர்க்க வேண்டும்.   இங்குள்ளோரிடமே வரி வசூலிக்கலாம் என்று ஆலோசனை கூறினர்.  சிவதாசன் என்ற ஒரு லோபி  மற்றும் சில பொக்கிஷ காவலில் இருந்த அதிகாரிகள் சேர்ந்து கொண்டு காயஸ்தர்கள்  என்ற கணக்கர்கள்  சொல்வதைக் கேட்டு  மக்களை  தண்டிப்பது போல வரி விதிக்கச் செய்தான். 

காஸ்மீரத்தில் அது வரை அரசன் பிரஜைகளுக்காகவே, அவர்கள் நன்மையை மட்டுமே செய்வான், அவன் கடமை அது என்பது போல இருந்த ராஜ்ய பரிபாலனம் அதன் பின் திசை மாறியது.  அரசன் தன் செல்வாக்கை இழந்தான். அரசு அதிகாரிகளும், மந்திரிகளுமே நிதி நிர்வாகத்தை கவனிப்பதாக ஆயிற்று.

அவனுடைய பாண்டித்யம், முயன்று கற்ற கலைகளும், அறிந்த நல் நெறிகளும் என்ன ஆயின? மற்றவர்களுக்கு இந்த சிறப்புகள் மன அமைதியைக் கொடுக்கும். தெளிவான சிந்தனையைக் கொடுக்கும். ஜயா பீடனை பொறுத்த வரை பிரஜைகளை  கசக்கி பிழிந்து தன் பொக்கிஷத்தை  நிரப்புவதற்கு மட்டுமே பயன்பட்டதோ எனும் படி அவன் அறிவு செயல்பட்டது.

சௌதாசன் போல (பாரத கதை.  சௌதாசன் வேட்டையாடும் சமயம் தவறுதலாக ஒருவனைக் கொன்றான். மன்னிப்பு கேட்டாலும், அவன் தம்பி மனதில் குரோதத்துடன் பழி வாங்க நினைத்தான்  சௌதாசனிடமே சமையல் வேலைக்கு சேர்ந்தான். குரு வசிஷ்டரை விருந்துண்ண அழைத்த சமயம், இந்த சமையல் காரன் நர மாமிசத்தை கலந்து விட்டான். உண்ணும் முன் இலையை பார்த்தவர் புரிந்து கொண்டு அவனை  ராக்ஷஸனாக சபித்தார். என் தவறு இல்லையே என்று அவனும் பதிலுக்கு சாபம் கொடுக்கத் துணிந்தான். மனைவி மதயந்தி குரு வசிஷ்டர், அவரை கொல்வதாவது என்று தடுத்தாள்.  அந்த நீர் காலில் விழுந்து  கால் கருகியது. அதனால் கல்மாஷ பாதன் -கருகிய கால் உடையவன் எனப்பட்டான்.  இக்ஷ்வாகு வம்ச அரசன் . அதன் பின் பிராணிகளை கொல்வது அவனுக்கு இயல்பாக ஆகி விட்டது) இதைச் சொல்வானேன் என்றால், தவறு செய்யவே தயங்கியவன் இப்பொழுது ஒன்றின் மேல் ஒன்றாக கொடூரமான செயல்களையே செய்யலானான்.

தெரிந்து செய்யும் முதல் தவறு அது வரை செய்யாதவனுக்கு கடினமானதாக இருக்கும்.  பின் அதுவே பழக்கமாகி விடும்.  வெட்கம் விலகி தான் செய்வதை நியாயமாகவே எண்ணியும் அதை சரி என்று சாதிப்பர்.  தவறான வழியில் செல்லும் பெண்களும், கொடுங்கோலனான அரசனும் தன் பெற்றோரையே கொல்லத் துணிந்து விடுவர்.

லோபமும், குரோதமும் எல்லை கடந்தது. மூன்று ஆண்டுகள் இவ்வாறு சென்றது.  விளைச்சலில் அரசனின் பங்கு என்று விவசாயிகள் வரியாக தருவதை முழுவதுமே அபகரிக்கும் படி அந்த கணக்கர்கள் போதித்தனர். அந்தணர்களுக்கான சலுகைகளை நிறுத்தினான்.  பெயருக்கு சிறிதளவு தனம் கொடுத்து அவர்களுக்கு அளித்திருந்த வீடுகளை  அந்த அதிகாரிகள் விரட்டினர்.  அரசன் தானமாக கொடுத்தது தானே. இதுவே அதிகம்.

பாணினி என்ற இலக்கண நிபுணர் போல தானும் செய்ய வேண்டிய (க்ருத்ய என்ற வினைச் சொல்) அதன் குணம், விருத்தி என்ற  பல பொருள் கொண்ட பதங்கள் என்று கவனமாக கற்றவன், ஏன் இப்படி செய்தான்?  அரை மாத்திரை (அல்பமான) மாறுதல் கூட பதத்தின் பொருளை மாற்றி விடும் என்பதை  பாணினி  விவரிக்கும் பகுதி.  )  தன் செயலின் விபரீதத்தை அறிய முடியாமல் போனது ஏன்?  பின்னால் ஜயா பீடனின் மன மாறுதலும் அதனால் ஏற்பட்ட இழப்புகளும் பற்றி பலர்  விமரிசித்துள்ளனர்.  இறந்த காலத்திற்கான விகுதிகளை பாணினி சொன்னதை  விவரிக்க  வந்த ஆசிரியர்கள், ஜயாபீடனின் அரசியல் வாழ்வு நிகழ் காலத்தில் இருந்ததற்கும் பின் இறந்த காலத்தை சேர்ந்ததாக ஆனதையும்  சுட்டிக் காட்டி  விளக்குவார்களாம்.  

சௌதாசனை சொல்லக் காரணம் ஜயாபீடனும்  பல அந்தணர்களை தேவையின்றி கொன்றான்.  அவனது உடன் இருந்து கெடுக்கும் சில நண்பர்களும், எதிர்த்து நின்று தோற்ற அரசர்களும் இது தான் சமயம் என்று தங்கள் போலியான நட்பு என்ற போர்வையில் அவனை பல தீய செயல்களில் ஈடுபடுத்தினர்.   

கடலில் இருக்கும் திமிங்கிலங்களும் அரசர்களும் ஒன்றே.  திமிங்கிலம்  தான் வசிக்கும் சமுத்திர நீர்  தானே மேகமாகி வர்ஷிக்கிறது.  அதில் ஒரு சிறிதளவை மேகம் மழையாக வர்ஷிப்பதை, தன் உரிமையாக நினைக்குமாம். அது போல இந்த துர் புத்திகளான அரசு அதிகாரிகள் பேசினர்.

இதுவரை பயமின்றி வாழ்ந்த பிரஜைகள் திகைத்தனர்.  இந்த கூட்டம் சற்று விலகி வேறு தேசம் சென்று விட்ட இடைவெளியிலும் அரசனுக்கு  தகுந்த அறிவுரை சொல்ல யாரும் அருகில் வரக் கூட முடியவில்லை. அந்த அளவு அரசன் மாறிப் போய் இருந்தான். மறுக்காமல் ஏன் செய்தான்? தங்கள் அளவில் தானம் என்பதையே செய்யாத மூடர்கள் அரசனுக்கு போதித்திருந்தனர்.  அவர்கள் உபதேசம் தான் காதில் விழுந்தது போலும்.  நாளொன்றுக்கு நூறு அந்தணர்களை கொல்லுங்கள்  என்று ஆணை இட்டான்.  ஒன்று குறைந்தால் கூட என்னிடம் வந்து சொல்லுங்கள் என்றான்.  அந்த உண்மையான சேவகர்கள் பரிதாபப் பட்டார்கள்.

அந்த அந்தணர்கள்  ஒரு செய்தியை ரகசியமாக பொது மக்களிடையே சிக்கலான  பதங்களைக் கொண்டு பரப்பினர்.  இவனுக்கு போதித்தவர்களையே எதிர்க்க துணிந்தவன் என்ன வித்வான்.  பாணிணியும் அதைப் போலவே வி, ப்ர என்று விகுதிகளைச் சொல்லி இறந்த காலத்தை மாற்றி விட்டார்- என்று புரியாத விவரங்களாக சொன்னார்கள்.

துலமூல்ய என்ற இடத்தில் சந்திரபாகா நதிக்கரையில் அரசன் முகாம் இட்டிருந்த சமயம், அந்த நீரில் ஒன்று குறைய நூறு அந்தணர்கள் மூழ்கி இறந்து விட்டதாக அறிந்தான்.  அந்த துமூல்ய தேசத்து வாசிகள் அரசனிடம் குறை தீர்க்கும் கூட்டம் நடக்கும்பொழுது வந்து இதை எதிர்த்து போராடினார்கள்.   மனு, மாந்தாதா ஸ்ரீ ராமன் போன்ற அரசர்கள் சக்தியில்லாதவர்களா.  அவர்களைக் கூட அந்தணர்கள் சுலபமாக தரிசிக்க முடிந்தது.  அந்தணர்கள் தங்கள் தவ பலத்தினால்  இந்திரனை தன் பதவியிலிருந்து விலக செய்ய முடிந்தது. அவன் பதவியிழந்து நாக லோகம் செல்லும் படி சபித்தனர்.  இதைக் கேட்டு ஜயாபீடன் கோபத்தால் கொதித்தான். நீங்கள் என்ன ரிஷிகளா, சாபமா கொடுக்கப் போகிறீர்கள்?  பயப்படாமல் அந்த கோபக் கனல் அவன் புருவங்களை நெரிப்பதையும் உடலே ஆடுவதையும் பார்த்தபடி இருந்த அந்தணர்களில் ஒருவரான இட்டிலா என்பவன் சொன்னான். ‘ ஓ ராஜா!  இது தான் யுக தர்மம்.  நீ அரசனாக அரசனுக்குரிய குணங்களுடன் இல்லாமல் உள்ள நிலையில் நாங்கள் எப்படி ரிஷிகளாக இருக்க முடியும்?’  அரசன் ‘ நீங்கள் என்ன வசிஷ்டரா, விஸ்வாமித்திரா? அல்லது தவமே உருவான அகஸ்தியரா” என்ரு ஏளனமாக கேட்டான்.  அதைக் கேட்டபின் அந்த முனிவர் தன் நிஜ உருவை எடுத்துக் கொண்டார்.  பயங்கரமான நாக ராஜன்,  படம் விரித்து ஆடும் நிலையில், சிவந்த கண்களும், சீற்றம் தெரிய பெருமூச்சும், காணவே பயங்கரமாக இருந்தது.   நீ யார்? ஹரிச்சந்திரனா?  திரிசங்குவா? நஹுஷனா இவர்களில் ஒருவனாக நீ இருந்தால் நான் விஸ்வாமித்திரனாக இருக்கிறேன்.  அரசன் அதிரவில்லை சிரித்துக் கொண்டே சொன்னான். விஸ்வாமித்திர் என்ன செய்தார்? இந்த மூவரும் அழிந்தனர்  – உங்களால் என்ன செய்ய முடியும்?

என்ன செய்ய முடியுமா?   நான் சபித்து நீ விழ மாட்டாயா என்ன? அரசன் ‘அப்படியானால் இந்த தண்டம் விழட்டும்’   முனிவரோ,

இந்த தபஸ்வியின் சாபம் பலிக்கட்டும். ஏன் தாமதமாகிறது. இந்த வினாடியே இந்த அரசனின் உடல் விழட்டும்.   துஷ்ட அரசனே வீழ்வாய், நிச்சயம்.

அவர் சொல்லி முடிக்கவில்லை அரசன் தன் பொற்கொடி கட்டியிருந்த பொன்னாலான தண்டம் அதன் மேலேயே விழுந்தான்.  அதுவே குத்தி அவன் கால்களை கிழித்தது. திடுமென கடும் காய்ச்சல் வந்தவன் போல் உடல் சுட்டது. உடலில் இருந்து புழுக்கள் நெளிந்து விழுந்தன.  தாங்க முடியாத சித்திரவதை.  எதிரில் நின்றவர் யமனாகவே தெரிந்தார். முப்பத்தோரு ஆண்டுகள் ஆண்ட அரசன் தன் கால கதியை அடைந்தான்.

அரசர்களும், மீன்களும் ஒன்றே. மீன்கள் தாகத்தினால் தவித்து நீரின் மேல் பரப்பில் வருகின்றன,  ஆபத்து என்பது தெரியாமல் உயிரிழக்கின்றன.  அரசர்கள் செல்வம், அதிகார மமதை இவைகளால் தன் அதிகார போக்கால் தானே முடிவை தேடிக் கொள்கின்றனர்.

அவன் தாய் அம்ருத ப்ரபா வருந்தினாள். அம்ருத கேசவா என்ற வழிபாட்டு ஸ்தலத்தை உருவாக்கி தன் மகன் நற்கதியடைய பிரார்த்தித்தாள்.  

அதன் பின் லலிதாபீடன் என்பவன் பட்டத்துக்கு வந்தான். துர்கா என்ற மனைவியிடம் ஜயாபீடனுக்கு பிறந்தவன்.  அவன் பெண்களுடனேயே காலம் கழித்தான்.  ராஜ்யத்தில் சட்ட்ம் ஒழுங்கு சீர் குலைந்தது.  தந்தையின் ஆட்சியின்  பிற்பகுதியில் குணம் கெட்டு சகவாச தோஷமும் சேர நாட்டில் அவனிடம் நல்லெண்ணமும் இருக்கவில்லை.  இடைத் தரகர்கள் புகுந்து அரண்மனையை மட்டமான தொழில் முறை வேசியர்கள் இருப்பிடமாக ஆக்கி விட்டனர்.   வீரமோ. சாமர்த்தியமோ, அறிவோ அடியோடு ,மறைந்த இடமாக அரண்மனை மாறியது.  இந்த தரகர்கள் பழைய அலுவலர்கள் மந்திரிகள் அனைவரையும் விரட்டி விட்டனர்.  கேலி கூத்தாக மாறி விட்ட நிர்வாகம்.  மந்திரி மனோரதா என்பவர் சற்று பொறுத்துப் பார்த்தார்.  பின் அவரும் விலகி விட்டார்.  பன்னிரண்டு ஆண்டு வாழ்ந்த்து மடிந்தான். ஜயாபீடன் ஸ்த்ரீ ராஜ்யம் ஜயித்தான் என்பதை ஜடன்  அதனால் அங்கு இருந்து விரட்டப் பட்டவன் என்று சொல்லி பரிகசித்தனர்.  ஒரே ஒரு நல்ல காரியம் சுவர்ணபார்ஸ்வம், பலபுரம், லோசனோத்ஸம் என்ற இடங்களை அறிஞர்களுக்கு கொடுத்தான்,

அடுத்து கல்யாணி தேவியின் மகன் சங்க்ராமபீடா என்பவன் வந்தான்.  ப்ருதுவிபீடா என அழைக்கப் பட்டான். அவனும் ஏழு ஆண்டுகளே அரசனாக இருந்தான்.

அதன்பின் சிப்பட-ஜயபீடா ப்ருஹஸ்பதி என்ற மற்றொரு பெயர் – லலிதபீடாவின் மகன் – சிறு குழந்தையாக இருந்த பொழுதே அரசனாக அறிவிக்கப் பட்டான்.  அவன் தந்தையின் ஆசை நாயகியாக இருந்த ஜயதேவி என்ற பெண்ணிடம் பிறந்தவன்.  அவள் தந்தை உப்பா  என்ற பெயருடைய ஆகூரா என்ற கிராமத்தைச் சேர்ந்த வியாபாரி. அவளைக் கண்டதும் அவள் அழகில் மயங்கி கவர்ந்து கொண்டு வந்திருந்தான்.  அந்த பெண்ணின் ஐந்து சகோதர்களில் மூத்தவரான ஊட்பலகா அரண்மணை நிர்வாகத்தை கவனித்துக் கொண்டான். ஜய தேவி நிர்வாகத் திறமை உடையவளாக இருந்தாள். அவள் சொல் எடுபட்டது.  தன் சகோதர்களுடன் சீர் திருத்தங்களைச் செய்தாள். ஜயேஸ்வர என்ற இடத்தை நிர்மாணித்தாள்.

அரசர்கள் பொறுப்பின்றி நிதி நிர்வாகத்தை சீர் குலைத்திருந்தாலும்,  எதிர்பாராமல் வேறு ஒரு இடத்தில் இருந்து திறமையான நிர்வாகிகள் வந்து அதை சமன் செய்வது ஒரு கடினமான செயல்  .ஜயாபீடன் சேமித்து வைத்த பொக்கிஷத்தையும், மற்ற உயர்ந்த பொருட்களையும் அவன் மகன் களே அழித்தனர்.  அந்த மூடனான மகனுக்கு வாய்த்த மனவியின் சகோதரன், அவன்  மைத்துனன் – அனைத்தையும் இரும்பு கரம் கொண்டு முழு அழிவில் இருந்து மீட்டு விட்டான்.  

ஆனால் அது சில நாட்களே நீடித்தது. அவர்களுக்குள்  சண்டை மூண்டது.  அனுபவிக்க தயாராக   இருந்தவர்கள் பொறுப்பு ஏற்க தயங்கினர்.    குழந்தை பருவத்திலிருந்து எந்த வித கட்டுப் பாடும் இன்றி வளர்ந்தவர்கள்.  பேராசை, தாங்களே அரசனாக ஒவ்வொருவரும் ஆசை பட்டதன் விளைவு, சகோதரியின் மகன், என்று கூட நினைவு இன்றி, பன்னிரண்டு ஆண்டுகளாக அறிவிலியான அரசன் அருகில் இருந்து எந்த வித பொறுப்பும் இன்றி  போகங்களை அனுபவித்தவர்களுடன் சேர்ந்து கொண்டு  அந்த குடும்பத்தையே கொன்று விட்டனர்.  அதன் பின்னும் தங்களுக்குள் சண்டையிட்டு தங்களுக்குள் ஒருவனை பட்டத்துக்கு வர அனுமதிக்கும் அளவு கூட அறிவு இல்லாதவர்களாக இருந்தனர்.  

பாப்பியா என்ற அரசனுக்கு மேகவல்லியிடம் பிறந்த திரிபுவனபீடா என்பவன் பட்டத்துக்கு வந்தான். மூத்தவனாக இருந்தும் திறமை இல்லாதவன் என்று ஒதுக்கி இருந்தனர். அவன் தான் ஜயாதேவியின் மகன் அஜிதபீடா என்பவனை  அவள் சகோதரன் உத்பலகன் அரசனாக்குவதற்கு  அனுகூலமாக இருந்தவன்.  அரசின் நிதி நிலைமை அதள பாதாளத்தில் இருந்தது. பெயருக்கு அரசனாக இருந்தவன், தினசரி உணவு முதலிய தேவைகளுக்கு  நிதி அதிகாரிகளிடம் இருந்து  வேண்டிய பொருளை பெற வேண்டியதாயிற்று.    அந்த அளவு அரண்மனை செல்வம் சூறையாடப் பட்டிருந்தது.

தினமும் சண்டை. வாக்கு வாதம். அவனுக்கு மனம் கசந்தது. கோவில்களுக்கும், ஊர் பொது காரியங்களுக்கும் என்று வைத்திருந்த பொது நிதியில் கை வைத்தனர். இனியும் இந்த ஐவரும் தங்கள் குடும்பங்களோடு அரண்மனை செல்வத்தை  அனுபவித்தனர்.  ஓனாய்கள் இறந்த எருமையை மொய்ப்பது போல தங்களுக்குள் கிடைத்தவரை பிடுங்கி கொண்டனர். சரியான தலைமை சரியாக இல்லாத அரசு.

உட்பலன் தன் பெயரில் உட்பல புரம் என்பதையும், உட்பல ஸ்வாமின் என்ற கோவிலையும் கட்டினான்.  பத்மா என்பவனின்  மனைவி  குணதேவி என்பவள் நற்குணங்கள் உடையவளாக இருந்தாள்.  இரண்டு மடங்களை கட்டுவித்தாள். தலை நகரில் ஒன்று, மற்றொன்று விஜயேஸ்வர என்ற இடத்தில். தர்மா என்பவன் நியாய சாஸ்திரம் அறிந்தவன். அவன் தர்மஸ்வாமின் என்ற கட்டித்தையும், கல்யான வர்மன் என்பவன் விஷ்னு கல்யானஸ்வனின் என்ற கோவிலையும் கட்டுவித்தனர்.  மம்மா என்பவன் செல்வ்ந்தனாக இருந்தான். அறிவும் தெய்வ நம்பிக்கையும் உள்ளவன் ஆனதால், மம்மஸ்வமின் என்ற வழி பாட்டு ஸ்தலம் அமைத்தான். (ஐந்து சகோதரர்கள் பெயர்கள்) ரஅத்துடன் பல பசுக்களை தானம் செய்தான்.  அவைகளை பராமரிக்க ஐயாயிரம் டினார்களும், நீர் எடுக்கும் குடங்களும் உடன் அளித்தான்.  இவன் ஒருவன் தன பொது நன்மைக்காக செலவழித்தான்.  அதனால் அவனிடம் இருந்த செல்வத்தின் அளவு ஓரளவு கணக்கிட முடிந்தது. மற்றவர்கள் அபகரித்த தனம் எவ்வளவோ, யாரால் சொல்ல முடியும்.

இப்படி அபகரித்த செல்வம் ஒரு ஆண்டியேயே கரைந்தது. உட்பலகன் என்ற மூத்தவனுக்கும் மம்மா என்ற இளையவனுக்கும் சண்டை மூண்டது.  விதஸ்தா ஏரியின் கரையில் ரத்தம் ஆறாக பெருக இருவரும் போர் புரிந்தனர்.  சங்குக என்ற கவி, அறிவுடையவர்களின் ரசனை என்ற சமுத்திரத்திற்கு சசாங்க-நிலவு போன்றவன் என்று வர்ணிக்கப் படுபவர்    இந்த நிகழ்ச்சியை வைத்து புவனாப்யுதயம் என்ற பெயரில் ஒரு காவியம் இயற்றி இருக்கிறார்.

இதற்குப் பின் காலம் பற்றிய குறிப்புகள் கிடைத்தாகச் சொல்கிறார்.

மம்மனின் மகன் யசோவர்மன்  வீரனாக இருந்தான். நக்ஷத்திரங்கள் இடையில் ஸூரியன் போல.  அஜிதபீடா என்பவனை அரச பதவியில் இருந்து விலக்கி, அவனும் மற்றவர்களுமாக அநங்கபீடா என்பவனை அரசனாக்கினர்.  இதற்கும் எதிர்ப்பு உத்பலனின் மகன் சுகவர்மன்  அடிருப்தியுடன் இருந்தான்.  மூண்று ஆண்டுகளுக்குப் பின்  அஜிதபிடாவின் மகனையே கொண்டு வந்தான். இந்த களேபரத்தில், சில அரசு அதிகாரிகள் செல்வந்தர்கள் ஆனார்கள்.  இப்படியும் சிலபாக்கிய சாலிகள், சம்பந்தம் இல்லாத வகையில் செல்வம் அவர்களிடம் சேருகிறது.   சந்தி விக்ரஹம் -போரும், அமைதியும் – சேனாபதி போன்ற பதவி. அந்த பொறுப்பில் இருந்த  ரத்னம் என்பவன் ரத்னஸ்வாமின் என்ற பெயரில் ஒரு கோவிலை கட்டுவித்தான்.  அந்த அளவு அவன் செல்வந்தனாக  ஆகி இருந்தான்..

அரண்மனையில் குதிரைகளை பாதுக்காப்பவன் போன்ற அலுவலர்களும் முடிந்த அளவு அரண்மனை செல்வத்தை அபகரித்தனர்.  இவ்வாறாக கார்கோடக வம்சம் மெள்ள  அழிந்தது.  உட்பலனுடன் சகோதர்களின் வம்சமே வளர்ந்தது.  சுகவர்மா என்பவன் ஓரளவு அறிவுடன் தானே அரசனாக வர இருந்தவனை உடன் இருந்தவர்களாலேயே கொல்லப் பட்டான்.  அவன் மகன் அவந்தி வர்மன் அரசனான்.

அவந்தி வர்மன் உட்பல குலத்தை விளங்கச் செய்தான்.  தன் திறமையால் நல்ல ஆட்சியை அளித்தான்.  தந்தை, பாட்டனார் பாடு பட்டு வளர்க்க செய்த செயல்களின் பலனை இந்த அவந்தி வர்மா அடைந்தான் என புகழப் பட்டான்.    முறையாக அரசனாக அபிஷேகம் செய்து, முடி ஸூட்டும் வைபவம் நடந்தது.

யாரோ பாடு பட்டு சேர்த்த தனம் யாரோ அனுபவிக்க கொடுத்து வைத்துள்ளனர்.  வினாடி நேரத்தில் ஒருவனது செல்வ நிலை ஏறுகிறது அல்லது தாழ்கிறது.   ராஜ்யலக்ஷ்மியின் கடைக் கண் பார்வை யார் மேல் விழுகிறதோ, அவனே மகுடம் தாங்கி அரசன் ஆகிறான். பொற் குடங்களில்  நீர் கொண்டு வந்து தன் தலையில் தாங்க அவந்தி வர்மா  முன் பல பிறவிகளில் நல் வினை செய்திருக்க வேண்டும்.   பேரரசர்கள் அணியும் சந்திர ஸுரியன் போன்ற தாடங்கங்கள் அணிய அவன் செவிகள் புண்யம் செய்தவை போலும்.    திருமகளின்  ஆசனம் போலவே உதய காலத்து  தாமரைகள்  மலர்ந்து இருப்பது போன்ற வெண் குடையின் கீழ் வராசனத்தில் அமர அவள் அருள் பெற்றவன்.

இதுவரை, காஸ்மீரக மகாமாத்ய சம்பக பிரபு என்பவரின் மகனான கல்ஹணன்  (கவியின் பெயர்)  ராஜதரங்கினீ என்ற அவரது காவியத்தின்  நாலாவது  தரங்கம் நிறைவுறுகிறது.

இரு நூற்றாண்டுகள் பன்னிரண்டு ஆண்டுகள்,  ஆறு மாதங்கள் ஆனகாலம் கார்கோடக வம்சம்  பதினேழு  அரசர்களின் அரசாட்சி பற்றிய செய்திகள் இவை. தமிழாக்கம் ஜானகி கிருஷ்ணன்.

ராஜதரங்கினி-2

ராஜதரங்கினி – இரண்டாவது அலை

கோநந்த வம்சம்

அன்னையும் தந்தையும் ஓருருவாக இருந்து அருள் புரியம் மகா தேவனின் மகன்,  ஒரு கையில் வில்லும்,  மனித உடல் பாதி, யானை உடல் பாதி என்று விளங்கும் ஐந்து கரத்தான், யானை முகத்தான் என்று பாடப் படும் பெருமையுடையவன், அன்பே உருவானவன்,  கண நாதன் , வாழ்க.  தாயின் அன்பும், தந்தையின் வீரமும் ஆற்றலும் கொண்டிருப்பதாலேயே எல்லையற்ற சக்தி பெற்றவன் எனக்கு அருள் புரியட்டும். போற்றி போற்றி.

கண் தெரியாத யுதிஷ்டிரன் என்று அழைக்கப்பட்டவன்  அரசனாக வாழ்ந்ததே கனவாகியது. திரும்ப அரசோ, அரண்மனை வாழ்வோ தேவையாக இருக்கவில்லை. தன்னை அடக்கி வாழும் முனிவர்களின் மனோ நிலையை அடைந்து விட்டவன் போகங்களை விரும்பாததில் அதிசயமில்லை.  (நரை அவன் காதுகளில் வந்து சொல்லியது – என்று தமிழில் கம்ப ராமாயணம் எழுதிய கம்பர் தசரத அரசனுக்கு அவன் முதுமையை உணர்த்தி விட்டது என்பார்) அது போல தன் முதுமை நெருங்கி விட்டதை உணர்ந்தான் போலும்.

தன் காதுகளின் பக்கம் நரையைக் கண்டால் கேசம் வெளுக்கத் தொடங்கி விட்டது என்பதை அறியாதவர் யார்?  வனத்தில் இருந்த தவ யோகிகள் அவனுக்கு உபதேசம் செய்தனர்.  இயல்பான நற்குணம் காரணமாக அந்த அறிவுரைகள் அவனுக்கு ஏற்புடையதாக இருந்தது. புலன்களை அடக்கி யோக மார்கத்தில் சுலபமாக தேர்ச்சி பெற்று விட்டான். உலகியல்  விஷயங்களில் ருசியோ, அதற்கு காரணமான ஐந்து புலன்களோ, அரசாட்சியில் இருந்த ஆசையோ, மந்திரிகளுடன் செய்த பேச்சு வார்த்தைகளோ, செயல்களோ எதுவுமே அவன் நினைவில் வந்து சிரமப் படுத்தவில்லை.

அவன் மந்திரிகளே, அடுத்திருந்த ராஜ்யத்தின்  பேரரசனான  விக்ரமாதித்யன் என்பவரின் உறவினனான ப்ரதாபாதித்யன் என்பவனை  ராஜ்யாபிஷேகம் செய்வித்து பட்டம் சூட்டி, ராஜ்ய நிர்வாகத்தை சீராக்கினர். கவி தன் சந்தேகத்தை சொல்கிறார். பெயர்  ப்ரதாபாதித்யன் என்பது பிரபலமானது. சக शक – என்ற ஒரு அரச குலத்தினரை அடக்கிய விக்ரமாதித்யன் தானா என்பது சந்தேகமாக இருக்கிறது. பலருக்கும் இதே குழப்பம் இருந்திருக்கிறது என்பது தெரிகிறது. அவர்கள் அறிந்தவரை கேள்வி பட்டதன் அடிப்படையில் எழுதியிருப்பதால் உறுதியாக சொல்ல முடியவில்லை என்கிறார். ஹர்ஷன் என்ற அரசனின் பெயரும் அவரது ஆட்சியில் இந்த தேசம் இருந்ததாகவும் கூட வதந்தியோ, உண்மையோ ஒரு செய்தி உண்டு.  கிடைத்துள்ள பெரும்பாலான விவரங்கள் மூலம் காஸ்மீர தேசம் ஹர்ஷன் நியமித்து அனுப்பிய மாத்ருகுப்தன் என்பவன் தலைமையில் இருந்தது என்பது நம்பகமாக தெரிகிறது.   இருந்தாலும் அது உஜ்ஜயினியை ஆண்ட ஹர்ஷனா என்பது தெளிவாக இல்லை.  மற்றொரு விவரம், ஹர்ஷ வர்தனன், கான்னோஜ்  என்ற இடத்தில் இருந்ததாக சீன யாத்ரிகர் ஹுவான்-சங்க் என்பவர் குறிப்பிட்டிருப்பது இந்த இருவரில் யார் என்பது கேள்விக்குரியதே.  வலிமையான ஒரு அரசு காஸ்மீர தேசத்தில் அந்த சமயம் இருந்தது என்பது வரை உறுதியாக தெரிகிறது. மணமான புதிதில் தன் மனவியை விருப்பமுடன் நல்ல முறையில் நடத்தும் மணமகன் போல இந்த தேசத்தை கொண்டாடி ஆண்டான் என்றும், தேசம் பல அபிவிருத்திகளை அடைந்தது என்றும் அறிகிறோம்.  முப்பத்திரண்டு ஆண்டுகள் இந்த அரசு, அதன் பின் ஜலௌகா என்பவனும் அதன் பின் அவன் மகனும் ஆண்டனர்.  இதுவும் பொற்காலமாகவே கருதப் படுகிறது.  தனயனும் தந்தை வழியில் பல வகையில் நன்மைகளை  கொண்டு வந்தான்.  ஆரம்பத்தில் நிலவின் குளிர்ச்சியோடு இருந்தான். பின்னால் ஸூரியன் போல தேவைகளை அறிந்து நல்ல  செயல்களை செய்தான் என்பர்.  அவனுக்கு வாய்த்த மனைவி வாக்புஷ்டா – நல்ல வாக்குடையவள்- நல்ல அறிவுடையவள். அவளை தேவமகள் என்று நாட்டு மக்கள் போற்றினர். அவர்கள் மகன் துஞ்சீனன்  பட்டத்துக்கு வந்தான். அவன் மக்களின் அன்புக்கு பாத்திரமானான்.  அவன் பெற்றோர்களிடம் இருந்த மதிப்பு காரணமாக இருந்திருக்கலாம். அந்த சமயம் பூமி வளமாக இருந்து செல்வம் கொழித்ததும் காரணமாக இருந்திருக்கலாம்.  கங்கை ஒரு பக்கம், இளம் பிறை ஒரு பக்கம் என்று தரித்த தூர்ஜடீ என்ற  சிவ பெருமானுடைய அருளால் நாட்டில் வர்ணாஸ்ரமம் முறையாக செயல் பட்டது, அவரவர் தங்கள் குலத் தொழிலை விருப்பத்துடன் முறையாகச் செய்தனர்,  பல வண்ணங்களுடன் இந்திரனின் வில் -வானவில் – தெரிவது போல அந்த ஆட்சி மனதிற்கு இதமாக  இருந்தது என்பர்.  இந்த தம்பதி ஒத்த மனதினராக இருந்து ஸ்ரீ ஹரனுக்கான ஆலயம் துங்கேஸ்வர என்ற அழகிய  ஆலயம் என்பதை கட்டினர்.  அந்த பூமிக்கே அது ஆபரணமாக திகழ்ந்தது.  அதனுடன் கதிகா என்ற பட்டணம்- நகரம் என்பதையும் நிர்மாணித்தனர்.

(மத்வராஜ்யம்- என்ற பகுதியில்,  (காஸ்மீர் இரண்டு பகுதிகளாக வர்ணிக்கிறார்.  இன்றைய ஸ்ரீ நகருக்கு கீழ் உள்ள பகுதி கிரமராஜ்யம் Kanraz என்றும், விதட்சா என்பதன் தலை நகராக  அதன் இரு பகுதிகளிலும் உள்ளது Maraz  மத்வராஜ்யம் )

மத்வராஜ்யம் என்ற பகுதியில் நல்ல வெய்யில் உண்டு.  அதன் பலனாக நிறைய பழ மரங்கள் செழித்து வளர்ந்து நல்ல பலனைக் கொடுத்தன.  எனவே அந்த இடத்தில் பல வகை குறுகிய காலத்தில் பழுக்கும் பழ மரங்கள் நடச் செய்தான்.

மகாகவி எனப்பட்ட சந்த்ரகன் – த்வைபாயன முனி- வியாசருக்கு மறு உருவம் போல அழகிய காவியங்களை இயற்றினார்.  பொது மக்கள் விரும்பி பார்த்து ரசிக்கும் நாட்டிய நாடகங்கள், சுபசிதாவலி என்ற நூல், கல்ஹணன் சொற்படி மகாபாரதத்துக்கு இணையானதாக இருந்ததாம். இவரே தான் மகா கவி காளிதாஸன் புகழ்ந்த சந்த்ரகோமின் – அல்லது சண்டக என்று சீன யாத்ரீகர் சொன்னார். ,  இருவரும் அவரை சிறந்த கவி என்று விவரித்துள்ளனர். . அவர் கவிதைகள்  காளி தாசனுக்கு சமமான காதல், மற்றும்   வீர ரசம் நிறைந்த கவிதைகள்  இன்றளவும் பிரசித்தமாக உள்ளன.

அவர்களின் பிரபாவம் மாஹாத்ம்யம் இவைகளை சோதனை செய்வது போல பொது மக்களால் தாங்க முடியாத பஞ்சம் வந்தது.  பசுமையான வயல்கள், சரத் காலத்தில் பயிர்கள் நிறைந்த வயல் வெளிகள், மழைக்காக காத்திருந்த சமயம்  பாத்ரபத மாதம்-புரட்டாசி – பனி மழை பெய்தது.  காலத்தின் அட்டஹாசம், உலகையே அழிக்கத் துடித்த இயற்கையின் விபரீதம்,  விளையும்,  விளைந்த பயிர்கள் அழிந்தன- முக்கியமாக தானியங்கள் விளைந்த வயல்கள் நாசமாயின. அது தானே உணவு, மனிதனின் பசி தீர்க்கும் மருந்து. அதுவே இல்லையானால்..உயிர் தரிப்பதே கேள்வியானது. 44/398

பயங்கர பஞ்சம்.  பசி, தாகத்தால் வாடி உயிரினங்கள் அனைத்தும் மரணத் தறுவாயில் இருந்தன. பிராகாரங்கள், ஊருக்குள் சாலைகள் எங்கும் கோரமான வறட்சியே – பத்னி ப்ரீதியா, மகன் என்ற அன்பா, தந்தை தாயிடம் மதிப்பா, வயிறு நிரம்பினால் தானே இவையனைத்தும் – அனைத்து மக்களும் உணர்வு என்பதே அற்றவர்களாக பசி ஒன்றே நினைவாக மாறினர்.   பசி என்பது எந்த அளவு கொடுமையானது என்பது அப்பொழுது புரிந்தது.  அதன் தாபத்தில் வெட்கம் பொசுங்கியது. அபிமானம் அகன்றது. தன் குலப் பெருமைக்கு என்ன மதிப்பு?  உணவு உணவு இது ஒன்று தான் தேடல். அஹம்- தான் என்ற எண்ணம் அடிபட்டு  விலகியது. அலக்ஷ்மீ- வறுமையின் கோர தாண்டவத்தில் உலகமே வெறும் தூசாகியது.  உயிர் தொண்டை வரை வந்து நிற்கிறது, ஏதாவது கொடு என்று தந்தை மகனை யாசித்தால், மகன் என்ன செய்வான், தனக்கே இல்லை. தேடக் கிளம்பினான்.  எலும்பு கூடுகளாக ஆன மக்கள்.  உணவைக் கண்டால் அடிதடி வரை போட்டி.  எங்கும்  கண்கள் செருகி காணவே பயங்கரமான உடல்கள்.  பேச்சில் கடுமை சாதாரணமானது.  இந்த நிலை மாறுமா என்ற கேள்வியே நிறைந்த சமயம், இனியும் தாங்க முடியாது என்ற நிலைக்கு தள்ளப் பட்ட உயிரினங்கள், லோக நாதன் கண்ணில் தென்பட்டதோ, அவருடைய கருணையின் ஈரம் கசியத் துவங்கியதோ,  அரசன்  நேரில் வந்தான். தன்னிடம் இருந்த அனைத்தையும் அவர்களுக்கு கொடுத்து உதவினான்.  கடவுளே வந்தது போல அவன் வரவு மக்களுக்கு ஆறுதல் அளித்தது.  விலை மதிப்புள்ள  ரத்தினங்களே கடல் போல நிரம்பியிருந்த பொக்கிஷத்தையே திறந்து வைத்து, தன் அரண்மனையில் உடன் இருந்த மனைவிகள்  மற்றும் உறவினர்களின் நகைகள், மதிப்பு மிக்க பொருட்கள் அனைத்தையும் இந்த மக்களின் உணவை வாங்க செலவழித்தான்.  மந்திரிகளின் சேமிப்பையும் விடவில்லை.  இரவும் பகலும் கிடைத்த உணவு பொருள்  இருந்த இடத்திற்குச் சென்று தானியங்களோ, காய்களோ, பழங்களோ வாங்கி வந்து கொடுத்தான்.  காடுகளில், ஸ்மசானங்களில், வீதிகளில்,  கிடைத்த இடத்தில் வீழ்ந்து கிடந்த மக்கள், எவரையும் விடவில்லை. அந்த நேரத்தில் பசி என்ற பூதம் தான் அனைத்தையும் ஆக்ரமித்திருந்தது.  அதன் பின்னும் கையில் தனம் அனேகமாக தீர்ந்தது எனும் சமயம் மிகவும் துக்கத்துடன் தேவியை துதி செய்தான்.

“தேவி! எங்களுடைய அபசாரம் தான் காரணம் என்றால், என்னை தண்டிப்பாய்,. நிரபராதிகளான இந்த ஜீவன்கள், என்ன செய்தன. இது போன்ற துக்கம் யாருக்கும் வரக் கூடாது. கேட்டதே இல்லையே. திங் மாம்- தன்னையே நொந்து கொள்ளும் சொல்.  அதன்யனா நான். செல்வத்துக்கு அருகதை இல்லாதவனா?, இந்த ஜனங்கள் என் ஆட்சியில் இந்த துக்கம் அனுபவிக்க என்ன காரணம்?  கண்ணால் காண என்னால் பொறுக்க முடியவில்லை. யாரை சரணடைவேன், தாயே, தாங்க முடியாத துக்கம் என்ற கிணற்றில் வீழ்ந்து கிடக்கிறேன், காப்பாற்று, தயவு செய்.
பந்துக்கள் உதவ  வழியில்லை. அவர்களும் இதே நிலையில் பரிதவித்துக் கொண்டு இருந்தால் எப்படி உதவ முடியும்? அனைவரும் எதற்காக வாழ வேண்டும் என்று நினைக்கத் துவங்கி விட்டார்கள். எப்படியோ இது வரை என்னால் முடிந்ததை செய்து விட்டேன். மேலும் எப்படி சமாளிப்பேன்.  காலத்தின் கோர முகம் என்றால் என் ஆட்சியில் ஏன் இப்படி ஆக வேண்டும்?  பூமிக்கு இரக்கமே இல்லையா?  ஒன்றுமில்லாமல் ஆக்கி விட்டாளே.  என் பிரஜைகள் இப்படி பயங்கரமான துன்பக் கடலில் மூழ்கி ஏன் மறைய அனுமதிக்க வேண்டும்?  என்ன உபாயம் செய்வேன். ஸுரிய தேவனும் கண் திறக்க முடியாமல் இந்த பனிப் படலம் தடுக்கிறது. இது தான் கால ராத்திரியோ.  விஸ்வமே அழியும் பிரளய காலமோ. கடக்க முடியாக இமய மலைச் சாரல்கள் பனி நிரம்பி வழியே மூடிக் கிடக்கின்றன.  எந்த திசையும் புலனாகாமல்  ஜனங்கள், என்ன செய்வார்கள்?  என் பிரஜைகள் ஸூரர்கள், அறிவிற் சிறந்தவர்கள்,  உயர் கல்வி கற்றவர்கள்,  அவர்கள் பயிற்சிகள் செய்து பெற்ற தகுதிகள், அறிவு களஞ்சியங்களாக திகழ்ந்தவர்களை காலத்தின் தடுமாற்றத்தால் எந்த திறமையும் அற்றவர்கள் போல தவிக்கிறார்கள்.

எந்த பெண் தான் பொன்னும் மணியுமாக அலங்கரித்துக் கொள்ள ஆசைப் படாமல் இருப்பாள்?  நட்புடன் பேசும் நண்பர்கள் குழாத்துடன் இருக்க விரும்பாத யுவ யுவதிகள் உண்டா?  அவர்கள் தங்களிடையே அமுதம் வர்ஷிப்பது போல பேசிக் கொள்வார்கள். வழிப் போக்கர்கள் வழியில் கிடைக்கும் உபசாரங்களை நினைத்து  வருவார்கள், என்றுமே அவர்கள் எதிர்பார்ப்பு பொய்யானதில்லையே. இந்த தேசத்தில் வசிப்பவர்கள் அனைவருமே சிறந்த குணவான்கள், அவர்களை இப்படி ஆட்டி படைப்பது எனக்கு பொறுக்கவில்லை. நான் என் தேகத்தை நெருப்பில் பொசுக்கிக் கொள்வது தான் வழி   இனியும் எனக்கு என் பிரஜைகள் தவிப்பதைக் காண சக்தியில்லை.  இரவில் நிம்மதியாக உறங்கும் பேறு பெற்ற அரசர்கள் தான் தன்யர்கள் – பாக்யம் செய்தவர்கள்.  என் பிரஜைகளை என் வயிற்றில் பிறந்தவர்களைப் போலவே பாலித்தேன்.  இப்படி அலறி வருந்தியவன், தன் முகத்தை ஆடையால் மறைத்துக் கொண்டு விசித்து விசித்து அழுதான்.  நியாயமான அரசன் அவன்.

 வாக்புஷ்டா என்ற மனைவி அருகில் வந்து சமாதானம் செய்தாள்.  இது போல பெரும் துக்கம் வந்து இயல்பாக சக்தியுடைய அரசனை வருத்தினால் அது அவன் கையை மீறிய இயற்கையின் செயல். உங்களை ஏன் வருத்திக் கொள்கிறீர்கள். என்று சொல்லியவள் தானும், தன்னைப் போலவே இருந்த பல உயர் குலமும், பண்பும் உள்ள பெண்கள் அனைவருமாக பிரார்த்தனைகள் செய்யலானார்கள்.  சத்ய விரதனான  உன்னைப் போன்ற அரசனுக்கு அவன் ஆட்சியை குறை கூறும்படி செய்ய எவனால் முடியும்.  இந்திரன் எவன்? படைத்தவன் எந்த அறிவில்லாதவன்? யம ராஜ என்பவன் என்ன தர்ம வான்?  பதிவிரதையான பெண்கள் தவம் செய்கிறோம்.  நம்பிக்கைக்கு பாத்திரமான மந்திரிகள் பிரார்த்தனை செய்வார்கள். ப்ரஜா பாலனமே தன் கடமை, வேறு எதுவும் அறியாத நல்ல அரசன் உலகுக்கே ஒரு வரம். அரசனே, எழுந்திரு.  நாங்கள் அனவரும் விரதம் மேற் கொள்கிறோம்.  ப்ரஜாபாலனே! உன்னை விட நம் மக்களுக்கு பசி பெரிதல்ல,  எழுந்து வா, எங்களுக்கு தலைமை தாங்குபவனாக இரு. உன் முயற்சிகளை கை விடாதே.  இப்படி உணர்ச்சி பொங்க ஆறுதல் சொன்ன வாக்புஷ்டாவின் சொற்கள் தேவதைகளின் காதில் விழுந்ததோ, ஒரு புறா கூட்டம் அங்கு வந்து விழுந்தது.   ஏதோ உயிர் உள்ளது என்று அதிசயமாக பார்த்த ஜனங்களும் அவற்றை உணவாக கொண்டனர். பிரதி தினமும் அதே போல புறாக்கள் கூட்டம் வந்து விழுந்து அவர்கள் உயிர் உடலில் நிற்க உதவியது தெய்வ செயல் தான்.

.அது ஒரு நல்ல சூசகம் என்றனர்.  வானம் வெளுக்க ஆரம்பித்ததைக் காண மக்களும் அதுவரை தாவர உணவே ஏற்றவர்கள் ஆனதால் மாமிசத்தை உண்ணத் தயங்கியவர்கள் மன பலம் பெற்றார்கள். இதோ விடிந்து விடும் என்ற ஆறுதலை அந்த புறாக் கூட்டங்கள் கொடுத்தன. மெள்ள மெள்ள பனி விலகி, ஸுரியனின் வெப்பம் உடலில் படவும் உயிரினங்கள் பசியை மறந்தனர்.  அரசனும், அரசியும் செய்த பிரார்த்தனைகளும் விரதங்களும் அந்த கோரமான வறட்சியை முற்றிலும் அழித்து விட்டன. 

அக்ரஹாரங்களில் அந்தணர்கள் தெளிவாக வேதம் ஓதினர். வீடுகளின் பத்னி பெண்கள் தங்கள் வேலைகளை மனக் குறைவின்றி செய்யலானர்கள்.  கடிமுஷா என்ற இடத்திலும் ராமுஷா என்ற இடத்திலும்  அக்ரஹாரங்கள் கட்டி வேதம் ஓதும் அந்தணர்களுக்கு கொடுத்தாள். முப்பத்தாறு ஆண்டுகள் வாழ்ந்த பதி மறைந்த பின் சோகத்தால் வாடியவள் கடுமையான ஜுரம் வந்து  வாக்புஷ்டா மறைந்தாள். அந்த பிரதேசத்தை வாக்புஷ்டா வனம் என்றே அழைக்கின்றனர்.  சதிகளுள் சிறந்த சதி அவள் என்று போற்றினர்.  அவள் ஸ்தாபித்த தர்ம சாலையில் இன்றளவும் மக்கள் வந்து வயிறார உண்டு மகிழ்கிறார்கள்.

இந்த இருவருக்கும் சமமாக என்னால் ஒருவனை படைக்க முடியுமா என்று ஐயமுற்றவன் போல படைப்புக் கடவுள் அவர்களுக்கு சந்ததியைக் கொடுக்கவில்லை போலும். .

அறிவுடையவர்கள் கரும்பை உயர்வாகச் சொல்வார்கள்.  அதற்கான பாடுகள் பட்டாலும் அதன் ரஸம் நாக்கில் பட்டவுடன் அது வரை பட்ட சிரமங்கள் மறைந்து விடுமே. அது தான் அமுதம் என்பதற்கு இணையான ரசம்.  இதை கொடுத்த படைப்புக் கடவுளிடம்   மேலும் என்ன வேண்டுவோம்.  ஸூரியனின் கிரணங்கள் எட்டாமல் போக, பனி மூடி, நெடுங்காலம் இருண்டே கிடக்க நேர்ந்து விட்ட பூமி.  தன் பிரஜைகள் படும் சிரமத்தைக் காண பொறுக்காமல் தானே அக்னி பிரவேசம் செய்யத் துணிந்த அரசன். 

அது போல மற்றொரு அரசனும் காஸ்மீர தேசத்தை ஆள வந்தான். .  விஜயா என்ற அந்த அரசன் எட்டு ஆண்டுகள் ஆண்டான்.   விஜயேஸ்வரம் என்ற இடத்தைச் சுற்றிலும்  பல நகரங்களைக் கட்டுவித்தான்.  அவன் மஹீ மஹேந்திரன் – பூமியில் மகேந்திரன் போல இருந்தான். ஜயேந்திரன்  என்ற அவன்  மகன். நல்ல உடற்கட்டு உடையவனாக ஆஜானு பாஹு என்பார்கள், முழங்கால்களை எட்டும் கைகள் உடையவன் என்று பொருள்.  முன் ஒரு காலத்தில் பிரசித்தி பெற்ற ப்ருது என்ற அரசன் இருந்தான். அவன் பூமியில் பல நன்மைகளைச் செய்தான் என்பர். இந்த அரசனும் அவ்வாறே அழைக்கப் பட்டான். அழகிய சொற்களால் கவி அவன் புகழைப் பாடுகிறார். ஆலோல கல்லோல கீர்தி கல்லோல துகூல வலனோஜ்வலாம் – – இப்படி வார்த்தைகளால் அலங்காரமாக வர்ணிக்கிறார்.  இதன் பொருள்: கம்பம் போன்ற புஜங்கள்- பலவான் என்பதைச் சொல்லும்.  அழகிய பட்டாடை காற்றில் பறக்க ஜயஸ்ரீ- வெற்றி என்ற தேவதையை அவன் புகழே சகாயமாக பாதுகாத்தான்.

அத்புதமான ஆற்றலுடைய ஒரு மந்திரி அந்த அரசனுக்கு உதவியாக இருந்தார்.  சாந்திமதி என்ற பெயருடன் புத்திசாலியான மந்திரி. ஆற்றலைப் போலவே பவன் என்ற சிவ பெருமானிடம் பக்தியை பூஷணமாக- ஆபரணமாக  கொண்டவராக விளங்கினார். அவர் அறியாத அரச நீதிகள், உபாயங்கள் எங்குமே இல்லை எனலாம். அரசர்களை மதம் கொண்ட யானை போல என்பர். இங்கும் ஒரு சிலர் அந்த யானையை தன் விருப்பம் போல வளைக்க முயன்றனர்.

அதி புத்திசாலியான மந்திரி அதிகமாக அவனை நம்பக் கூடாது என்பது போல பேசி அரசனிடம் மந்திரி பற்றிய தவறான எண்ணம் தோன்றச் செய்தனர்.  அரசனும் அந்த வார்த்தைகளில் மயங்கி சாந்திமதி என்ற முக்கிய மந்திரியிடம் வெறுப்பை  காட்டினான்.  அரச சபைக்குள் அந்த மந்திரியை வர விடாமல் தடுத்தான். காரணமின்றி கோபத்துடன் செய்த செயலின் பலன்  சாந்திமதி என்ற அறிஞர்  செல்வம் அழிந்து தரித்திரனானான்.  உயிருடன் இருந்தவரை அதிலிருந்து மீளவே  இல்லை. ஆனால் அவரோ. தான் சுதந்திரமானவனாக ஆனதாக மகிழ்ந்தார். சிவ பூஜையில் மனதையும் நாட்களையும் செலவழித்தார்.  வீடுகளில் ஒரு குரல் ஒலித்தது. இந்த அரசு பின்னால் சாந்திமதியின் கைக்கு வரும் என்பதாக.   தானே தான் இந்த வதந்தியை பரப்பியிருக்கிறான் என்று நினைத்து அரசன் அந்த மதி மந்திரியை சிறையில் அடைத்தான்.  அரசனின் மறைவு வரை விடுதலை கிடைக்கவில்லை. கோபக்கனலில் வெந்து கொண்டிருந்தவன், உண்மை நிலையை அறியவே இல்லை.  பலவிதமான வியாதிகளால் அவதிப்பட்டு மறைந்தான்.  அந்த அரசன் மறந்தது தனக்கு மேல் விதி என்ற ஒன்று தன் வினைகளின் கணக்கை வைத்திருக்கிறான். அதன் தண்டனையிலிருந்து தப்பவே முடியாது. யாரானாலும்.  அருகில் மண் குடத்தின் வெண்ணெய், சூட்டில் உருகி இருந்ததை நீராக நினைத்தவன் போல மதி மந்திரியின் அருமையை அறியாதவனாக அவரையும் அழித்தான், தானும் அழிந்தான்,

சாந்திமதி  அனவசியமாக துன்புறுத்தப் பட்டதைக் கண்ட  ஈசான என்ற குரு, தன்னடக்கம் மிக்கவர், எளிதில் உணர்ச்சி வசப் பட மாட்டார் என்றலும்  வருந்தினார்.  காட்டுப் பூக்கள்  மணமின்றி பயனின்றி இருந்தும் பல நாட்கள் இருக்கும். ஸீர்ஷ புஷ்பம் என்ற மணம் மிகுந்த  பயனுள்ள மலர் ஒரே நாளில் வாடி விடும்.  மற்றவர்கள் ஒதுக்கினாலும் அந்த அறிவிற் சிறந்த மதி மந்திரியின் அந்திம கிரியைக்கு அவர் சென்றார்.  எலும்பு கூடாக வற்றி உலர்ந்து விட்ட அவரது சரீரத்தை பார்த்து அடக்கமாட்டாமல் அழுதார்.  மகனே!  உன்னுடைய இந்த நிலையைக் காணவா நான் உயிருடன் இருக்கிறேன் என்றபடி சிதையை காட்டு ஓனாய்களிடம் இருந்து காப்பாற்ற ஒழுங்கு படுத்திய போது நெற்றியில் இருந்த ப்ரும்ம லிபியை படித்தார்.

‘பத்து ஆண்டுகள் சிறை வாசம், அடி பட்டு மரணம் அதன் பின் மறு பிறவியில்லாத ராஜாதி ராஜ பதவி’ – வாங்கி வந்த வரம் என்று பேச்சு மொழியில் பொது மக்கள் சொல்வது – அது தான் நடந்து விட்டிருக்கிறது.  படித்து அதையே மனதில் தீவிரமாக சிந்தித்துக்  கொண்டிருந்தார்.  வாழும் காலத்தில் யாருக்குத் தெரியும். அவர்  யோகி, சாதனைகளை அறிந்தவர் ஆனதால் இந்த செய்தியை புரிந்து கொள்ள முடிந்தது.  வாழ் நாளில் செய்வதை எந்த அளவு எண்ணிச் செய்ய முடிகிறது.  அந்தந்த சமயத்தில் புத்தி அறிவது தான் சுகமோ துக்கமோ.  நல் வினை பலன் உடையவனுக்கு சரியான வழி தென்படுகிறது. அவன் வெற்றியடைந்தான் என்று உலகில் சொல்வது.  பல இடர்களை தாண்டி வந்தவன் என்பது யாருக்குத் தெரியும்.

மணிபுர அர்ஜுன என்பவன் ஒரு சமயம் கொல்லப் பட்டான். அவனை ஒரு நாக பெண் தன் அதிசயமான ஆற்றலால் பிழைக்கச் செய்தாள் என்று ஒரு செய்தி அனைவருக்கும் தெரியும். அதே போல, பரீக்ஷித் ராஜா, துரோண புத்திரனின் பயங்காரமான அஸ்திரம்- ஆயுதம்- அதால் தாக்கப் பட்டான், தாயின் வயிற்றிலேயே குற்றுயிரானவன். அவனை பகவான் ஸ்ரீ க்ருஷ்ணன் காப்பாற்றினார்.

தைத்யர்களால் கசன் சாம்பலாக்கப் பட்டான்.  தார்க்ஷ்யன் என்ற நாக தலைவனால் உண்ணப்பட்டான்.  மறுமுறை பிழைத்து வந்தான். அதை மற்ற யாரால் செய்திருக்க முடியும். அது தெய்வ செயலே.  

தானே இவ்வாறு பலவிதமாக யோசித்து ஆராய்ந்து  கடைசி வரியான அரச பதவி அடைவான் என்பதை நேரில் காண விரும்பி அருகிலேயே தன் குடிலை அமைத்துக் கொண்டு தங்கினார்.  ஒரு நாள் நடு இரவில், நறு மணம் நாசியைத் துளைக்க விழித்துக் கொண்டார். எங்கிருந்து வருகிறது?  தூபங்கள் மணம், வாத்யங்கள் இசைக்கப் படும் சப்தமும் காதில் விழ ஜன்னலைத் திறந்து வெளியே பார்த்தார்.  டமரு நாதமும் ஓங்கி ஒலித்தது.  அந்த மயானத்தின் இருட்டில் கண்கள் பழகி கண்ட காட்சி அவரை மெய் சிலிர்க்க வைத்தது.   பிரகாசமான ஒளி வட்டத்தின் உள்ளே ஒரு யோகினி நின்றிருந்தாள்.  சிதையில் இருந்த சாந்திமதியின் உடலை அவளுடன் வந்திருந்த சிலர் தூக்கிக் கொண்டு போய் ஒரு மரத்தில் சாய்த்து வைத்தனர்.  யாரோ அரச சேவகர்கள் இன்னமும் துரத்துகிறார்கள் என்று எண்ணிய ஈசான குரு, கையில் வாளுடன் அங்கு சென்றார்.

யோகினியின் பரி ஜனங்கள் அந்த உடலின் அங்கங்களை சரியாக பொருத்தினர்.  மிக கவனமாக அங்கங்களை பொருத்தி, கிடைக்காத கால்களை வேறு எங்கிருந்தோ கொண்டு வந்தும் அந்த பெண்கள் மணமகனை அலங்கரிப்பது போல உத்சாகத்துடன் செய்தனர்.  ஒரு சிலர் சாந்திமதியின் ஆவி, வேறு சரீரம் கிடைக்காமல் அலைவதை அறிந்தவர்கள் போல அதைத் தேடிச் சென்றனர்.  அதை கொண்டு வந்து இந்த எலும்புக் கூட்டில் சேர்த்தனர். மேற் பூச்சுகள், மற்றும்  ஏதோ வைத்யங்கள் செய்த பின் அது உயிர் பெற்றது.  தூங்கி எழுந்தவன் போல மதிமந்திரி சாந்திமதி அவர்களை அன்புடன் பார்த்தபடி நின்றார்.

என்ன ஆகும் என்று சிறிது கூட நினத்து பார்க்க முடியாத நிலையில் தான் பாதுகாவலாக அங்கேயே இருப்பதே நன்று என்று நினைத்தவராக ஈசான குரு அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தார். இப்படி அன்புடன் செய்பவர்கள், அவரை எடுத்துக் கொண்டு சென்று விடுவார்களோ என்ற ஐயமே காரணம். கண் மூடி திறப்பதற்குள் யோகினி கூட்டம் மறைய,

அசரீரி குரல் கேட்டது. “ஓ ஈசான குருவே! பயப்பட வேண்டம்.  இந்த தேகம் பழைய படியே சீராக்கப் பட்டு விட்டது.  வஞ்சனையாக இவனுக்கு இழைக்கப்பட்ட உடல் உபாதைகளைத் தவிர இவன் அதே போல பழைய சாந்தி மானே. எங்களுடைய அன்பும் இவனுக்கு காவலாக இருக்க, இவன் ஆர்யராஜா வாக இருப்பான்.  சாந்திமான் அதே போல உலகில் புகழ் பெற்று விளங்குவான்.’

சாந்திமானும் தன் உடலில் திவ்யமான மாலைகளை அணிந்தவனாக, திகைத்தாலும் குருவை அடையாளம் கண்டு கொண்டவனாக வந்து வணங்கினான். கனவில் கூட காண முடியாத நிகழ்ச்சிகளால் வாயடைத்து நின்ற ஈசான குருவும் தன் திகைப்பை உதறி தன் மாணாக்கனான சாந்திமானை அணைத்து ஆசீர்வதித்தார்.  இருவரும் தெய்வ செயல், யாரால் எது எப்படி என்பதை மனிதனால் அனுமானிக்கவா முடியும்.  இப்படி பேசிக் கொண்டிருக்கையிலேயே, நகரத்து மக்கள் விஷயமறிந்து ஓடி வந்தனர்.  குழந்தைகளும் பெரியவர்களும் அதிசயமான இந்த சம்பவத்தைக் கண்டும் கேட்டும் மகிழ்ந்தனர்.  பழைய உருவம் இல்லையே என்ற சந்தேகத்துடன் சிலர் கேள்விகள் கேட்டனர். 

அவர்களே திருப்தி அடைந்து ராஜ்யத்தை ஏற்றுக் கொள்ள வேண்டினர்.  பழைய அரசனும் இல்லை, அவனுக்கு பின் ஆட்சியை ஏற்க மகனும் இல்லை என்பதால் ஒத்துக் கொண்டான். அவர்கள் முறையாக சாஸ்திரங்களில் சொல்லியபடி ராஜ்யத்தில் அபிஷேகம் செய்வித்தனர்.  புது அரசன் என்பதால் சில அறிவுரைகளை பெரியவர்கள், பழைய மந்திரிகள் வழங்குவர். அதற்கு அவசியம் இருக்கவில்லை.

ஊர் விழாக் கோலம் பூண்டு வரவேற்றது.  சேனை வீரர்கள் முன்னும் பின்னும் வாத்தியங்களை இசைத்துக் கொண்டுச் செல்ல, உப்பரிகைகளீல் இருந்து மலர்கள் தூவி ஊர் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்க, அந்த ஊர்வலம் அரண்மனைக்குள் நுழைந்தது.

அசைகளை அடக்கியவன் அந்த உயர்ந்த ஆசனத்தில் தன் கடமை என்பதாகவே ஏற்றுக் கொண்டான்.  காடுகளில் தவம் செய்யும் முனிவர்களின் பக்குவத்தை அடைந்து விட்டவன், சாதாரண போகங்களை விரும்பாததில் அதிசயம் இல்லை. ஒரு துறவி தலையில் கை வைத்து ஆசீர்வதித்த பொழுது தன்னை காப்பற்றிய யோகிணியின் மணம் வர திகைத்து நோக்கினான். மகிழ்ச்சியாக இருந்தது.  சிவ பெருமானின் கோவில் வாசல் படிகளை தான் கழுவி சுத்தம் செய்த பொழுது இந்த மணத்தை அறிந்தோம் என்பது நினைவுக்கு வந்தது.

அடுத்து வந்த நாட்களில் தன் இஷ்ட தெய்வ மூர்த்தியை அபிஷேகம் செய்யும் பொழுது அந்த துறவியின் சாயலைக் கண்டு கொண்டான். சாதாரண துறவி அல்ல, அது பகவான் விஜயேஸ்வரனே . அந்த பெண்கள் வனத்தில் வந்து தன்னை காப்பாற்றியதும் பெண்கள் அல்ல. இவரைப் போன்ற துறவிகள் அல்லது யோகசாதனைகள் செய்தவர்களே.  காட்டு மலர்களில் புண்ய கந்தம் – மணம், தூப தீபங்களின் மணம் இவைகளை அந்த கரங்கள் தன் மேல் பட்ட பொழுது உணர்ந்தேனே என எண்ணினான்.  பூதேச, வர்தமானேஸ, விஜயேச என பல வித துதிகளால் வணங்கப் படும் தேவனே உடன் இருந்து கண்காணிப்பது போல அடக்கத்துடன் ராஜ்யத்தை நிர்வகித்தான்

சிவாலயங்களில் வழக்கம் போல தன் வழிபாடுகளையும் சேவைகளையும் குறைவறச் செய்து வந்தான். அவன் அரச சபையே ருத்ராக்ஷம் அணிந்த சிவ பக்தர்களால் நிரம்பியது. பிறை ஸூடி பெருமானை தியானம் செய்தே அரச செயல்கள் நடந்தன.  ஆயிரம் சிவ லிங்கங்கள் நிறுவுவது என்ற தீர்மானம் சிறப்பாக நடந்தேறியது. விட்டுப் போன நாட்களில் கல் பலகைகளில் வரை படமாக வரைந்து வைத்தனர். அதை இன்றளவும் காணலாம்.   குளங்களில் மலர்ந்த தாமரைகளும் சிவலிங்கத்தை ஒத்திருந்தனவாம்.    நர்மதா நதியை ஒத்த பெரிய குளங்கள் வெட்டி தாமரை வனங்களாக செய்தான்.

நீல உத்பல மலர்கள் நிறைந்த குளங்களில் விடியும் முன் நீராடி சிவ பூஜைகளை செய்து முடித்த பின் அரச சபைக்கு வருவது வழக்கமாக ஆயிற்று.  ஜாகரணம் என்ற இரவு முழுவதும் வழிபாடுகள் செய்வதும், தவசீலர்கள் இணைந்து செய்தனர்.  மாக -மாசி மாத த்து இரவு – சிவராத்திரி  நாடு முழுவதும் அமோகமாக கொண்டாடப் பட்டது

கிராமங்களில் கோவில்களைச் சுற்றி இருந்த இடங்கள் வளமான வயல்களும் வீடுகளுமாக செழிப்பாக அமைத்துக் கொடுத்தான்.  பெரிய லிங்கங்கள், வாயிலில் நந்தி உருவங்கள்,சூலங்களும் அதே அளவு ப்ரும்மாண்டமாக என்று அமைந்தன. தன் உடல் கிடந்த தடTheda என்ற இடத்தில் ஈசானேஸ்வர என்ற பெயரில்  ஒரு கோவிலை நிர்மானித்தான். அந்த இடமும் சாந்திவனம் என பெயர் பெற்றது. 

Theda தட, பீமாதேவி மற்றும் பல இடங்களிலும் மாளிகைகள், அழகான உபவனங்கள், பாடசாலைகள், வழிப் போக்கர்கள் தங்கும் இடங்கள் என்று பலவகையாக வசதிகள் செய்து கொடுத்தான்.  சிவலிங்கங்கள் பல இடங்களில் கோவில்களில் அமைக்கப் பட்டன.

ஐம்பது மூன்று ஆண்டுகள் சிறப்பாக ஆண்டவன், ஒரு வேணிற்காலத்தில் பனியால் ஆன லிங்கங்களைக் கண்டு அதிசயித்தான். காஸ்மீரத்தில் அதுவரை காணக் கிடைக்காத அந்த தரிசனம் அவனுக்கு தன் கடமையை நிறைவேற்றி விட்ட திருப்தியை அளித்தது.   

தனக்கு வாரிசாக ஒரு அரசனை நியமிக்க நினைத்து தகுதியான ஒருவனைத் தேடலானான். யுதிஷ்டிரன் என்ற பாரத காலத்து அரசனின் வாரிசாக வந்தவன், கோபாதித்யா என்பவன், காஸ்மீர தேசத்தை கைப்பற்ற நினைத்து முற்றுகையிட்டான்.

அவன் தந்தை அனுப்பி  ப்ரக்ஜ்யோதிஷா என்பவன் மகளின் சுயம்வரத்திற்குச் சென்றான்.  ராஜ குமாரி அம்ருதலேகா அவனுக்கு மாலையிட்டாள். அந்த சமயம் கரு மேகங்களும் வானத்தில் நிரம்பி அமுதமாக வர்ஷித்தன. இது ஒரு நல்ல சகுனம் என்று மக்கள் நம்பினர். அவன் சக்ரவர்த்தியாக வருவான், வருணனின் அருள் பெற்றவன் என நம்பினர். நீர் வளம் தான் நில வளம் கொண்டு வரும் என்பது இயற்கையின்  செயல். அவன் காஸ்மீர தேசத்துக்கு வந்த சமயம் ஊர் மக்கள் அன்புடன் வரவேற்றனர்.

அதற்குள் ஆர்யராஜாவான சாந்திமான் தன் காலமும் ஆனதை நினைவில் கொண்டு தானாக விலக தீர்மானித்தான். நான் மனமுவந்து பகவான் பூதபாவனனை வணங்கி வழி பட்டேன்.  அவர் அருளால் பல நன்மைகளை அனுபவித்து விட்டேன்.  ராஜ்ய நிர்வாகத்தில் மூழ்கி அத்யாத்மிகமான சாதனைகளை விட்டு விட்டேன் போலும். மழையில் நடக்கும் வழிப் போக்கன் போல தடுமாறினேன், தூக்கத்தால் தன்னை மறப்பது போல இல்லை என்பதை அறிவேன்.  இவ்வாறு நினைத்து தவம் செய்பவர்கள் நிறைந்த இடத்தில் இனி நாட்களை கழிக்க தீர்மானித்து மௌனியாக, நாட்டை விட்டு வெளியேற தீர்மானித்தான்.   மக்கள் சபையைக் கூட்டி தன் தீர்மானத்தை விளக்கிச் சொல்லி விட்டு வெளியேறினான்.  மக்கள் அமைதியாக கண்களின் நீருடன் வழி அனுப்பினர்.  கவ்யூதி என்ற இடத்தில் ஒரு மரத்தடியில் அமர்ந்து, ஒவ்வொருவராக பின் தொடந்து வந்தவரை அழைத்து ஆசிகள் செய்து திருப்பி அனுப்பி விட்டு நடந்து வடக்கு நோக்கிச் சென்றான்.  பின் தொடர்ந்து வந்த மக்களின் கடைசி மனிதன்  வரை உபதேசித்து விட்டு தவசீலர்கள் நிறைந்த குகைக்குள் நுழைந்து விட்டான்.  நதியின் பிரவாகம் தன் வழியில் பிரவகித்துச் செல்லும்.  மெள்ள மெள்ள நீரோட்டம் குறைய ஓடையாக செல்லும். ஆனாலும் தன் பொறுப்பு தீர்ந்தது என்பது போல திருப்தியாக ஆகும். அது போல தன்பிறப்பிற்கான பொறுப்பு நிறைவேறிய திருப்தியை அடைந்தான் எங்கிறார் கவி.

பசுமையான தாவரங்கள் அடர்ந்த வனத்தின் நடுவில் ஒரு தெளிவான குளம். அதன் கரையில், இலைகளை மடித்து கிண்ணம் போல செய்துகொண்டு அதில்  நீரை  நிரப்பி அருகில் வைத்துக் கொண்டான்.   மாலை மயங்கி இரவு வரும் வரையில் அமர்ந்து இருந்தவன், மரத்தின் உதிர்ந்த இலைகளே படுக்கையாக அதில் உறங்கினான்.

மலைச் சிகரங்களின் நிழலில் வெய்யிலின் தாக்கமும் அதிகமாகத் தெரியவில்லை. இடையர் குல பெண்கள், மல்லிகை மலர்க் கொடிகளின் கீழ் அமர்ந்து கல கல வென பேசும் குரல் இனிமையாக கேட்டது.  மலர்ந்த மல்லிகை மலர்களின் மணம் எங்கும் வீசியது. வன தேவதைகள் குழல் ஊதுவது போல இனிமையான நாதம் எங்கும் பரவி இருக்க, அருவிகளின் நீர் விழும் சத்தமும் தாலாட்டு போல அவனை உறங்கச் செய்தன.

திடுமென காட்டு யானைகளின் பிளிறல் தாள வாத்யம் ஓங்கி ஒலிப்பது போல கேட்டது. கொக்குகள் மற்றும் சில பறவைகள் இடையிடையே ஒத்து வாசித்தன போல கூவின. எங்கோ தவளைகள் அடிக் குரலில் ஓசையிட்டது கேட்டது. மூன்று யாமங்கள் கடந்து விட்டதையறிந்து மேற்கொண்டு பிரயாணம் செய்யவே நினைத்தான். மறு நாள் தொடங்கியதை அறிவிக்கும் உதய சூரியனை வணங்கி காலைக் கடன்களை முடித்து தன் வழக்கமான நியமங்களையும் செய்து முடித்து விட்டு  தாமரை மலர்கள் மலர்ந்து  சிரித்து காலை வணக்கம் சொன்னதை ஏற்றுக் கொண்டு, நடக்கலானான்.  முன் பரிச்சயமான சோதரா நீர் ஊற்று அருகே வந்து, அதையும் தாண்டி  நந்திசா என்ற பூத   நாதனின் ஆலயத்திற்கு வந்து சேர்ந்தான்.

நந்தி க்ஷேத்ரம் அது.  மூவுலக நாயகன் முன்னால் வந்து வணங்கிய சமயம் தான் விரும்பியது என்ன என்பது உறைத்தது. அங்கிருந்த துறவிகளும் பக்தர்களும், நெற்றியில் விபூதியும், கழுத்தில் ருத்ராக்ஷமும்,  ஜடையாக சேர்த்து கட்டிய கேசத்தையும் பார்த்து   பரவசமானார்கள்.  சிவ பக்தன்  ஸ்ரீ கண்டன் – கழுத்தில் அடையாளம் கொண்ட சிவ பெருமான் பெயர்-  பாதங்களை வந்து அடைந்து விட்டேன் என்ற ஆறுதல் உண்டாயிற்று. மற்ற துறவிகளுடன் பிக்ஷைக்கு சென்று அவர்களுடன் கிடைத்ததை உண்டு  வாழும் வாழ்க்கையே அமைந்து விட்டது. பிக்ஷைக்கு சென்றால், இல்லறத்து பெண்கள் நல்ல பழங்களும், மற்ற உணவுகளையும் தாராளமாக அவரது பிக்ஷா பாத்திரத்தில் இட்டனர். இதுவும் ஒரு பாக்யமே.

இதுவரை ஸ்ரீ காஸ்மீரக  மகாமாத்யர் ஸ்ரீ சண்டகர் என்ற பிரபுவின் மகன் கல்ஹணன் எழுதிய  ராஜ தரங்கிணியின் இரண்டாவது தரங்கம்-அலை நிறைவுற்றது.

இரு நூற்றாண்டுகள் எட்டு மாதங்கள், முடிந்த வரை இந்த இரண்டாவது தரங்கத்தில் விவரித்து உள்ளவர்கள் ஆறு புகழ் பெற்ற அரசர்களின் வரலாறு.

ராஜ தரங்கிணி- மூன்றாவது தரங்கம்-அலை

இது ஒரு விதமான கவிதை அழகு.நிந்தாஸ்துதி என்பர்.  கடவுள் வணக்கத்துடன் ஆரம்பிக்கிறார்.  அவரை நேரில் பார்த்து சொல்வது போல பாடல்.

இந்த யானைத் தோல் எதற்கு? அதை தூக்கி ஏறி. அதை விட அந்த யானையின் முகத்தில் தோன்றும் முத்துக்கள் மேலும் அழகானவை.  உன் மார்பில் அழகிய அலங்காரமாக விளங்கும். நெற்றியில் எதற்கு இந்த ஜுவாலையுடன் தீ.  அதிலிருந்து இலவசமாக உன் கண்களுக்கு அஞ்சனம் – மை கிடைக்கிறதா?  அடுத்து எதற்கு இந்த பாம்புகள் ஆபரணமா? என்று கேட்கும் முன்  சிவா – பார்வதி அழைக்கிறாள் என்று நகர்ந்து விடுவார்.  அதற்கு முன் உன் வணக்கத்தை சொல்லி விடு.  மாதொரு பாகனான சிவபெருமான் உன்னை காக்கட்டும்.

அரசன் இன்றி இருக்கக் கூடாது என்பது ஒரு நியதி. அதனால் மந்திரிகள் விசாரித்து அறிந்து கொண்டு மக்களுக்கு தெரிவித்தனர்.  அதன் படி மேகவாஹனன்  என்ற  புகழ் பெற்ற  சக்ரவர்த்தியாக விளங்கியவனை அந்த பிரதேசத்து மக்கள் அரசனாக ஏற்றுக் கொண்டனர். அவன் அப்பொழுது தான்  தன் மந்திரிகளுடன் காந்தார தேசம் சென்றவன் திரும்பி வந்து கொண்டிருந்தான்.   

ஆரம்பத்தில் அவன் பொது மக்களுக்கு தேவையானதைச் செய்து ரக்தன்- பிரியமானவனாக ஆனான். ஆனால் சில நாட்களிலேயே,  அவனை முற்றிலும் அறியாத மக்கள் அவனிடம் வைத்த நம்பிக்கையை இழந்தனர்.  துவைத்த ரக்த- சிவந்த துணி, வெளுத்து விடுவது போல அவன் மேல் இருந்த நம்பிக்கையும் வெளுத்தது.  (ரக்தன் – பற்றுள்ளவன், ரக்த சிவப்பு நிறம்)

போதி சத்வரிடமும் ஈடுபாடுடைய அரசன்.  தான் பதவியேற்ற நாளில் இருந்து, சாத்வீகமான கொள்கைகளும், உண்மையையும் அன்பையும் போதித்த போதி சத்வர் கொள்கைகளை அமலுக்கு கொண்டு வந்தான்,  உயர் பதவிகளில் இருந்தவர்கள் டமாரம் அடித்து அரசனின் ஆணையை தெரிவித்தனர்.  பிராணி வதம் கூடாது என்று இறைச்சி தயார் செய்யும் கூடங்களை அப்புறப் படுத்தி விட்டான். அதில் வேலை செய்தவர்களுக்கு அரண்மனை பொக்கிஷத்தில் இருந்து பொருளுதவி செய்து மறுவாழ்வு பெறச் செய்தான்.

ராஜ்யத்தில், ஜைனர்கள் – மார வித்வேஷிணர்கள் என்பர்- இவர்கள் மன்மதனுக்கு விரோதிகள்- பொது மக்களின் இயல்பான  ஆண் பெண் உறவுகளை மறுப்பவர்களே பிரபுக்களாக ஆனார்கள். யாகங்களில் உயிருள்ள பசுக்கள்,ஆடுகளுக்கு பதிலாக வெண்ணெயில் தயார்  செய்த பசு உருவங்கள்   ஹோமங்களில் ஹவிஸாக பயன்படுத்தினர்.

மேகவன என்ற பெயரில் குடியிருப்புகளும், மயுஷ்ட கிராமம் என்பதில் பாடசாலைகள் ஏற்படுத்தினான். இந்த இடங்களில் வைதீக, புத்த மத போதனைகள் நடந்தன.

மனைவி அம்ருத பிரபா வின் பெயரில் புத்த பிக்ஷுக்கள் வசிக்கவும், உயரமான விஹாரங்கள் கட்டுவித்தான்.  அம்ருத பவனம் எனவே அழைக்கப் பட்டன. அவர் தந்தையின் குருவாக ஒரு வெளி நாட்டவர் லோ Lo என்பவர் அவருடைய தாய் மொழியில் ஸ்துன்பா என அழைக்கப் பட்டார்.  அதனால் அது போன்ற விஹாரங்கள் ஸ்தூபங்கள் என்றாயின. லோ ஸ்துன்பா என்பதை அவர் துவக்கி வைத்தார்.

அரசனின் மற்றொரு மனைவி யுகதேவி என்பவள், போட்டிக்கு அழகிய கலை, கணித அம்சங்களுடன் நடவன என்ற இடத்தில் ஸ்தூபங்கள் கட்டுவித்தாள்.  ஒரு பகுதியில் சிக்ஷாசார்யர்கள் என்ற பிக்ஷுக்கள் வசித்தனர். இவர்கள் நியமங்களுடன் மத போதனைகளை செய்பவர்கள்.  மற்றொரு பகுதியில் இல்லறத்தில் உள்ளவர்கள் தங்கள் மனைவி குழந்தைகள், வளர்ப்பு பசுக்கள் இவைகளுடன் வாழ்ந்தனர்.

மற்றொரு மனைவி இந்திர தேவி என்பவள் தன் பெயரில் இந்திர பவனம் என்பதை சதுரமான கட்டிடமும், அருகில் ஸ்தூபம் என்பதையும் கட்டுவித்தாள்.

மற்ற மனைவிகள், காதனா என்பவளும், சம்மா என்பவளும் அழகிய பல  சிற்பங்களுடனும் கலை அம்சங்களுடனும் ப்ரும்மாண்டமான விஹாரங்கள், அவரவர்கள் பெயரில் கட்டுவித்தனர்.

ஒப்பிட்டு பார்க்கையில் இளையவனான இந்த அரசன் பல புதுமைகளை புகுத்தினான். விளையாட்டு அரங்கம் ஒன்றில் தானும் விளையாட்டை ரசித்துக் கோண்டிருக்கும் சமயம் கூட்டத்தில் சல சலப்பு உண்டாயிற்று. யாரோ சிலர் பயத்துடன்  திருடன் திருடன் என்று கத்தினர்.

சேவகர்களைப் பார்த்து, யாரங்கே, திருடனை பிடியுங்கள் என்று ஆணையிட்டான். பயந்து அலறியது நின்றது. ஆனால் திருடன் என்று எவரும் பிடிபடவில்லை.  சில நாட்களுக்குப் பின் தன் பாதுகாப்பு சேவகர்களுடன், சென்று கொண்டிருந்த பொழுது  ஒரு சில அழகிய பெண்கள் அவன் முன் வந்தனர். பேரழகிகள்.  தயாளுவான அரசனும் தன் குதிரையை நிறுத்தி அதில் இருந்தபடியே அவர்கள்  குறையைக் கேட்டான்.   அவர்களும் தலை மேல் கை வைத்து கை கூப்பி வணங்கி விட்டு சொன்னார்கள்.  கருணா நிதே! உங்கள் ராஜ்யத்தில் வெளியார் யாரிடமிருந்து என்ன துன்பம் வரப் போகிறது. அனைத்தும் நலமே.

எங்கள் கணவன்மார்கள் நாகர்கள். ஒரு சமயம் மேகங்களாக மாறி ஸூரியனை மறைத்தனர்.  விவசாயிகள் கவலைப் பட்டனர். திடுமென மழை வந்தால் கதிர் விளைந்து அறுவடைக்கு தயாரான சமயம், மறு பக்கம் நெல் வயல்கள் செழித்து தலை நிமிர்ந்து நின்றவை இதோ கதிர் விட்டு தலை சாய்க்கும் என்ற எதிர்ப் பார்ப்புடன் இருந்தவர்கள். அந்த மேகங்களை இந்த பிரதேசத்திற்கு விரட்டி விட்டார்கள்.  அன்றொரு நாள், கோபத்துடன் ஆணையிட்டீர்கள், அந்த நாகர்களை தண்டியுங்கள் என்று உங்கள் சேவகர்கள் உடனே செயல்படும் முன்  உங்கள் கோபத்தைக் கண்டே அவர்களை பிடித்து சிறை வைத்தனர்.  அதனால் தயவு செய்து எங்கள் கணவன்மார்களை காப்பாற்றுங்கள். என்றனர். அரசன் அதைக் கேட்டு தன் சேவகர்களிடம் அவர்களை விடுவிக்க ஆணயிட்டான்.  நாகர்களும் கட்டு விடுபட்டு வந்து அரசனை வணங்கி அனைவருமாக  விடைபெற்றனர். 60/398

பிராணி வதையை நிறுத்த வேண்டும் என்ற கொள்கையை பரப்ப அரசன் திக்விஜயம் செய்து வர கிளம்பினான்.  சென்ற இடங்களில் மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரித்தனர். ஆங்காங்கு மக்கள் அரசனை  ஜய ஜய என்று சொல்லி வாழ்த்தினர்.  புத்த மத ஸ்தாபகரே பொறாமைப் படும் அளவு அவனுடைய விஜய யாத்திரை வெற்றிகரமாக இருந்தது.  பல இடங்களுக்கும் சென்ற யாத்திரை நீர் ஊற்று உள்ள இடம் வந்து சேர்ந்தனர். அங்கு சேனை வீரர்கள் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். அரசனும் அடுத்து சுற்றி இருந்த தீவுகளை கைப்பற்ற திட்டமிட்டுக் கொண்டிருந்தான். தாளி வனம் நிழலாக இருக்கவும் அனைவரும் சுகமாக அனுபவித்துக் கொண்டிருந்தனர். திடுமென ஒரு அழுகுரல் கேட்டது.  இந்த தேசத்து அரசன் மேக வாகனன் ஜீவ ஹிம்சையே கூடாது என்று சொல்கிறான், நீங்கள் என்னை ஏன்  கொல்லப் பார்க்கிறீர்கள் என்று ஒருவன் சொல்லிக் கொண்டிருந்தான்.

உலையில் இடப்பட்டு சூடான இரும்பு ஆயுதம் தன் மேல் பட்டது போல அரசன் துடித்தான்.  தன்பெயரைச் சொல்லி ஒருவன் அழைக்கிறான் என்பது மட்டுமே குறியாக, சத்தம் வந்த திசை நோக்கிச் சென்றான். அது தேவி சண்டிகையின்  ஆலயம். ஒரு மனிதனை பலி கொடுக்க ஆயத்தங்கள் நடப்பதாக தெரிந்து அரசன் அருகில் சென்று விசாரித்தான். 

அருகில் சென்ற அரசன், அறிவில்லையா உனக்கு? ஏன் இவனை வதைக்கிறாய் என்று வினவினான். அந்த சபரன் – வேடன், அரசனைக் கண்டதும் மிக வருத்தத்துடன் தன்  துக்கத்தைச் சொன்னான். என் மகன் உடல் நலம் இன்றி மரண வாயில் இருக்கிறான்.  இந்த பலியை (உயிர் தியாகத்தை) பாதியில் நிறுத்தினால் அனர்த்தமாகும்.  என் குலம், உறவினர் அனைவரும் பாதிக்கப் படுவர்.  இந்த அனாதை சிறுவனை நடுக் காட்டில் இருந்து கொண்டு வந்தேன்.  என் மகனுக்கு நாங்கள் உறவினர்கள் இருக்கிறோம், எங்கள் கடமை அவனைக் காப்பது. இவனுக்கு யாருமில்லை. இருவரில் யாரைக் காப்பது முக்கியம் சொல்லுங்கள். என்றான்.

அரசன் ‘ ஓ வேடனே! கவலைப் படாதே. அரசனாக எனக்கு உன் மகனை காக்கும் பொறுப்பு உள்ளது. இந்த சிறுவனுக்கு பதிலாக நான் வருகிறேன். என்னை பலி கொடு, இரு பக்கமும் உயிர் பிழைத்து நலமாக இருங்கள் என்று சொல்லியவனைப் பார்த்து அனைவரும் திகைத்தனர்.

சபரனும் திகைத்தவன் தன்னை சமாளித்துக் கொண்டு ‘அரசே! உணர்ச்சி வசப் பட்டு நீங்கள் சொல்வது நியாயமல்ல. மூவுலகிலும் பிறந்தவனின் முதல் கடமை தன்னை காத்துக் கொள்வது. அரசனுக்கு அது இன்னமும் அதிகமாக சொல்லப் படும். சரீரம் தானே தர்ம சாதனம். தன் பிரஜைகளைக் காக்க வேண்டியவன் இப்படி அவசரப் பட்டு ஒரு செயலை செய்வது தகாது’ என்றான்.  இந்த அனாதை சிறுவனை காத்து என் மகனை உயிரிழக்கச் செய்யவா?  அதனால் அரசனே, இந்த சிறுவனுக்காக, என் மகன், என் குலம், உங்கள் ஆட்சியில் உள்ள பல உயிர்களை தியாகம் செய்வீர்களா ?  இந்த செயலால் நீங்கள் பெறப் போவது என்ன? கௌரவமா? புகழா? செல்வமா? தாரம்- மனைவி மக்களா?  உறவினர்கள் மகிழப் போகிறார்களா? தர்மத்தை காப்பதாக சொல்லி உங்கள் முதலாய கடமையான தேச பாலனம் அதை விடுவீர்களா?  இவைகளை அரசன் செய்ய காரணம் அவன் தன் பிராணனை காத்துக் கொள்வதிலேயே அடக்கம்.  அதனால் பிரஜா நாத! தயவு செய்யுங்கள், இந்த க்ஷண நேர ஆவேசத்தை விட்டு யோசியுங்கள்.  உங்கள் ராஜ்யத்தில் பல குழந்தைகளும் பெரியவர்களும், உங்கள் அண்டியிருக்கும் அனைவரையும் நீங்கள் நீடூழி வாழ்ந்து  காப்பாற்றுங்கள். . இந்த சிறுவனுக்காக உங்கள் உயிர் தியாகம் பலன் இன்றிப் போகும். இவனை விட்டு விடுங்கள்.  இந்த தியாகம் வெறும் வாய் சொல்லாக சில நாட்களில் மறக்கப் படும்.

அரசனோ, பிடிவாதமாக, உறுதியாக பதில் சொன்னான். ‘மூடனே! எனக்கே உபதேசம் செய்கிறாயா  – என் உடல் மட்டும்  அழியாமல் நிரந்தரமாக  இருக்கப் போகிறதா?  என்றோ போவது இன்று அழியட்டும். அதனால் ஒரு அனாதை சிறுவன் பிழைப்பான், உன் வேண்டுதலும் நிறைவேறும், உன் குலத்தாரும் உன் மகனோடு பிழைப்பர்,  வழி விடு, என் வாள் என் கையில் இருக்க அதிக நேரமாகாது நான் சொன்ன சொல்லைக் காப்பாற்ற. என்று தன் வாளை உறுவினான்.  சாமுண்டி இருந்த இடம் நோக்கி நின்றபடி கங்கையில் நீராடியவர்கள் அதை உயர்வாக சொல்வார்கள், பாலை வனத்தில் அதைப் பற்றி யாருக்கு என்ன தெரியும்? மேலும் ஒரு வார்த்தையும் பேசாதே. 

வாளை தூக்கிய  கை தூக்கியபடி இருக்க அனைவரும் அதிசயத்துடன் அரசன் தலை மேல் பூ மாரி பொழிந்ததையும் ஏதோ ஒரு தேவதையின் கை அவனுடைய வாள் பிடித்த கையை தடுப்பதையும் கண்டனர்.  திடுக்கிட்டு பார்த்தவன் எதிரில் தேவி சண்டிகாவோ, வேடனோ, அனாதை சிறுவனோ இல்லை. ஒரு தேவன் நின்றிருந்தான். 

நான் லோக பாலர்கள் என்ற இயற்கையின் பாதுகாவலர்களுல் ஒருவன். என்னை வருணன் என்பர் நீருக்கு அதிகாரி. நீ உண்மையான கருணை நிறைந்த மனிதன்.  வானத்து நிலவு போலவே மக்கள் மனதில் நிறையும் நற்குண அரசன்.  தற்சமயம் உன்னை அலங்கரிக்கும் குடையும் கொடியும் என்னுடையவை.  (அரச பதவி)   அதை பூமி அபகரித்தாள்.  அவளுக்கு பக்க பலமாக இருந்தவன் உன்  அந்த நாளய மாமனாராவார்.  ரசாதளத்தில் இருப்பவர்கள்  – நாகர்கள்.  அவர்கள் தான் எங்களுடைய தனித் தன்மை வாய்ந்த சில சக்திகளுக்கு அடிப்படையாக இருப்பவர்கள்.  அதனால்  நாக குலத்தை மீட்க வந்தவன் உன் ஆற்றலை சோதிக்க இந்த தோற்றத்தைக் காட்டினேன். நீ கருணை மிக்கவன் என்பதில் சந்தேகமேயில்லை.

உன் முன்னோர்கள் வசுகுலம் என்பதில் இருந்தவர்கள்  மானிட உலகுக்கு பல தீமைகளைச் செய்தனர்.  பலவித இடையூறுகள், சமயங்களில் பிராண பயம், என்று மக்கள் அவதியுற்றனர். அந்த பாபங்களுக்கு  பரிகாரம் போல உன் குணங்களும் நடத்தையும் உள்ளன.

சேஷன் என்ற ஆதி நாகம் அதன் உடலில் இருந்து பயமும், ஆசையும், மகிழ்ச்சியும்  உலகில் தாய் தந்தைகள் அனுபவிப்பது.  அந்த சேஷனின் உடலில் ஒரு பக்கம் விஷம், ஒரு பக்கம் உயர் மணி என்று விபரீதமான இரு தத்துவங்கள் ஒன்றாக இருப்பது போலவே மனிதனுக்கும் இது போன்ற உணர்வுகள் எதிர் மறையாக இருந்தாலும் தேவையாக இருந்தன. 

தீ யின் ஜுவாலை ஒளியும், வெப்பத்தையும் தரும் அது தானாக  திசைகளில்  ஊடுருவி பரவுவது போலவே  மனித குலத்தின் புகழ் பரவி உலகை வியாபிக்கும். அதன் ஜுவாலையை மனித மனதின் ஆசையுடன் ஒப்பிடுவர்.  தீ கக்கும் புகையே அதிக ஆசை, பள பளப்பான ஜுவாலையே மனித உலகில் அனுபவிக்கும் இன்பங்கள் அல்லது சுகம். அது போலத் தான் உன் வம்சம் இருந்தது.  சில அரசர்கள் தங்கள் செயல்களின் விளைவாக பல க்லேசங்கள்- துன்பங்கள் அடைந்தனர், மழை நாள் போல அலுப்புடன் இருந்தனர்.  மூன்று கோடி உயிர்களை உங்கள் வம்சத்தில் ஒருவன் கொன்று குவித்தான். அவன் வழியில் நீ அஹிம்சையை போதிப்பவனாக வந்தது அதிசயமே. 

சக்ரவர்த்தியான மேகவாஹணன்  அந்த தேலோக வாசியை வணங்கினான்.  கை கூப்பியவனாக துதி செய்தான்.   குடையை மரியாதையாக மதிப்புக்கு உரியவருக்கு தருவது ஒரு மரபு.  தன்னிடம் உள்ள மிக மதிப்புள்ள பொருளை அர்ப்பணிப்பதாக பொருள்.  அப்படி கொடுத்ததை  வருணன் ஏற்றுக் கொண்டான்.

கற்பக மரத்தையும், நல்லவர்களையும் ஒரே அளவு கோலால் மதிப்பிட முடியாது. கற்பக மரம் வேண்டினால் தான் கொடுக்கும், நல்லவர்கள் தாங்களே தேவையறிந்து கேட்கும் முன் கொடுப்பார்கள். பழ மரங்கள் போல, நிழலால் தன்னிடம் வந்தவர்களுக்கு ஆறுதல் அளிப்பதும், பசியாற பழங்களைக் கொடுப்பதும் இயல்பாக அவை செய்கின்றன, அது போல பெரியவர்கள் தாங்களே கண்டு கொண்டு தேவையானதைச் செய்வார்கள் என்று அறிவேன். இருந்தாலும்  நான் தங்களிடம் ஒரு வரம் வேண்டுகிறேன்.  அனுக்ரஹம் செய்ய வேண்டும்.

இந்த பூமி என் கைக்கு வந்தபின் என்னால் முடிந்தவரை இதை நியாயமாக பாலித்து வருகிறேன்.  கடலைத் தாண்டி சில தீவுகள் உள்ளன. அவைகளை என் ராஜ்யத்திற்குள் கொண்டு வர விரும்புகிறேன். இந்த சமுத்திரத்தைக் கடக்க ஒரு வழி சொல்ல வேண்டும். வருணனும்   நீ நீருக்குள் கால் வைத்தால் அந்த இடம் மண்ணாகி வழி கொடுக்கும் என்று வரம் அளித்தான்.

மறுநாள் முடியுமா என்ற ஐயத்துடனேயே அவனுடைய படை வீரர்கள் கடல் கரையோரமாகவே கடலைக் கடந்து லங்கை வரை சென்று விட்டனர்.  அரசனோ குணம் என்ற ரத்தினங்கள் நிறைந்தவன். சமுத்திரமோ ரத்னாகரம் என்றே பெயர் பெற்றது. (உயர்ந்த குணம்- உயர் மணிகள்)  ரோஹணம் என்ற மலையை அடைந்தனர்.  இலங்கையின் அரசன் விபீஷணன் வந்து வரவேற்றான்.  அங்கு பனை மரங்கள் அடர்ந்த்த சோலைகளில் அவன் படையினர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.  சுகமான கடற் காற்றும், மணலும் அவர்களுக்கு புதிது.  அரக்கர் குல தலைவன், விபீஷணன், மனித குல அரசன் மேக வாஹணன், இருவரும் அன்யோன்யமாக பேசிக் கொண்டனர். அரச சபையில் பாடும் வந்திகள் இருவர் பெருமையையும் பாடி மகிழ்வித்தனர்.  இலங்கையை பரிபாலித்து அரக்கர் குலத்துக்கே வழி காட்டியாக விளங்கிய விபீஷணனின் விருந்தோம்பலும் விமரிசையாகவே இருந்தது.  விடை பெறும் சமயம் பல கொடிகள், அந்த நாட்டின் பெருமையையும், அந்த குல பெரியவர்களையும் சித்தரித்த பெரிய பதாகைகள் இவற்றை அன்பளிப்பாக அளித்தான். அவை தான் இன்றளவும் காஸ்மீர தேசத்தில்  அரச யாத்திரைகளில் பயன் படுத்தப் படுகின்றன.  அவர்களுக்கு பிராணி வதம் செய்யக் கூடாது, அஹிம்சையின் உயர்வையும் சொல்லி விட்டு அரசன் நாடு திரும்பினான். 

(கவியின் கற்பனையே இந்த இலங்கை விஜயமும் கடலைக் கடந்ததும் என்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் கருத்து )

 முப்பத்து நான்கு  ஆண்டுகள் ஆண்ட திருப்தியுடன்  அரசன் மேகவாஹணன் மறைந்தான்.  நீண்ட ஆயுள் இல்லாமல் போக, துர்கையின் பலியைத் தடுத்ததுதான் காரணம் என்று அந்த பிரதேச மக்கள் நம்பினர்.  ஆதித்யன் மறைந்தது போல சில காலம் மக்களிடையில் அவன் நினைவு இருந்தது.

அடுத்து ஸ்ரேஷ்டசேனன் என்ற அவன் மகன் அரசனானான்.   ப்ரவரசேனன்,  துஞ்சீன  என்றும் அழைக்கப் பட்டான்.  பலசாலியாக இருந்ததால்  மதிக்கப் பட்டான். பூமி வளமாக இருந்து ஆசிர்வதித்தாள்.  தேவியின் மாத்ரு சக்கரங்கள் என்பதுடன் ப்ரவரேஸ்வர் என்ற ஆலயத்தைக் கட்டுவித்தான்.  சாஸ்திரங்கள், புராணங்களில் சொல்லியபடி பல  பொது மக்களின் நலனுக்கான செயல்களைச் செய்தான். முப்பது ஆண்டுகளே அவன் ஆட்சி.  தான் கட்டிய பிரவேஸ்வர ஆலயத்திற்கு பல நிலங்களையும்  பொருட்களையும் எழுதி வைத்தான்.

அதன் பின் ஹிரண்ய, தோர்மன என்பவர்கள் வந்தனர்.  அந்த அரசர்கள், விவசாயிகள், மற்றும் இல்லறத்தார்களான பொது மக்கள் முப்பது அரசர்கள் வரை அஹிம்சையை கொள்கையாக கொண்டு ஆண்டனர்.

சகோதர்களுக்குள் சச்சரவு வர காரணம் மூத்தவன் ஏராளமான  நாணயங்களை  தன் பெயரை பொறித்து வெளியிட்டான். தோர்மான் அதை எதிர்த்து தானும் தன் பெயர் பொறித்த நாணயங்களை வெளிடலானான். அதனால் வெகுண்ட ஹிரண்யன் அவனை சிறையில் அடைத்தான். பல காலம் சிறையில் இருந்தான். இதற்கிடையில்   இக்ஷ்வாகு பரம்பரையில் வந்த ஒரு அரசனான வஜ்ரேந்திரனின்  மகளான  அவன்  மனைவி அஞ்சனா என்பவள்,பேறு காலத்தை எதிர் நோக்கி இருந்தாள்.  ஹிரண்யனின் ஆட்களால்  இடையூறு வரலாம் என்ற பயத்தால், தோர்மான்  எச்சரித்து தன் இயலாமையால் வருந்தியவனாக அவளை நாட்டை விட்டு  வெளியேறச் சொன்னான்.  அவளும் ஊருக்கு வெளியில் ஒரு குயவனின் வீட்டில் அடைக்கலம் புகுந்தாள், அங்கு ஒரு மகனை பெற்றாள்.  குயவனின் குடும்பத்தில் அவள் அவர்கள் மகளாகவே அன்புடன் நடத்தப் பட்டாள். குயில் குஞ்சுகளை காகம் பாதுகாப்பது போல. 67/398

அந்த குயவ மாதுவும், ராணியும் தாங்கள்  மட்டும் அறிந்த உண்மையை வெகுகாலம் மறைக்க முடியாது என்றும் அறிந்திருந்தனர். பெண் நாகம் தன் குஞ்சை மறைத்தாலும் அதன் தலை மேல் வளரும்  ரத்னம்- உயர் மணி காட்டிக்  கொடுத்து விடும் அல்லவா.  அது போல ப்ரவர சேனின் பேரன்,  பாட்டனார் பெயரையே கொண்டவன் தாயிடம் கேட்டு தெரிந்து கொண்டான் தான் யார் என்பதை.  அரசகுமாரன் குயவ பெண்மணி அன்புடன் காப்பாற்றி வளர்த்தவள், என்ற விவரங்களைத் தெரிந்து கொண்டான். வளர வளர அவன் அந்த இடத்து சிறுவர்களுடன் இணைந்து வாழ முடியவில்லை.  தேஜஸ்வியான அவனுக்கு அவர்கள் ஏற்ற தோழர்களாக எப்படி ஆக முடியும். குளத்தில் முளைத்த  பத்மத்தின் இலைகளே குளத்தின் நீர் தன் மேல் ஒட்டாமல் தள்ளி விடுவது போல.  அவர்களை தவிர்த்து மற்ற உயர் குலத்து சிறுவர்கள், வீரனாக, ஸூரனாக , கற்றவர்களாக இருப்பவர்களே அவனுக்கு உற்ற நண்பர்கள் ஆனார்கள்.  குயவனின் சமூகத்துச் சிறுவர்கள் அதிசயத்துடன் பார்த்தனர்.  விளையாடும் சமயம் அவனை அரசனாக பாவித்தனர். அவனிடம் மண் உருண்டையைக் கொடுத்து பானை செய்யச் சொன்னால் அவன் சிவ லிங்கங்களை தயாரித்தான்.  சிங்ககுட்டி வனத்தில் மற்ற சிறிய வன விலங்குகளின் இடையில் இருந்தாலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்வதில்லையா.

தன் பிறப்பை அறிந்தாலும் அவனைப் பற்றி எப்படி யாரிடம் தெரிவிப்பது என்பது தெரியாமல் அவன் தாயும், வளர்த்த மாதும், குழம்பிக் கொண்டிருந்தனர். அந்த சமயம் சிறுவனின் மாமன் ஜயேந்திரன் யதேச்சையாக அவனைக் கண்டான். ஏதோ வித்தியாசமாகத் தெரிய அந்த சூழலில் அவன் தனித்து தெரிந்ததால், விசாரித்தான். சிறுவர்கள் அவனைப் பற்றி தாங்கள் அறிந்த வரை சொன்னார்கள்.  சாயலை வைத்து தன் சகோதரி, அவள் கணவன் இருவரையும் ஒரு சேர காண்பது கண்டு ஜயேந்திரன், அவன் வசித்த வீட்டிற்குச் சென்றவன் தன் சகோதரியைக் கண்டான். பல நாட்களுக்குப் பின் அவர்கள் ஒருவரையொருவர் அடையாளம் கண்டு கொண்டு கண்ணீர் பெருக உரையாடியதைக் கண்டு, ப்ரவர சேனன்  என்ற அந்த  சிறுவன் யார் இவர்கள் என கேட்க, குயவ மாது அவர்களை அறிமுகம் செய்வித்தாள்.

ப்ரவர சேனன் முழு விவரங்களையும் அறிந்த பின் திகைப்பும், தாங்க முடியாத வருத்தமும் அடைந்தான்.  சொந்த சகோதரன் இப்படியா செய்வான்? மேலும் விவரங்கள் தெரிந்து கொள்ள விரும்பி தானே யாத்திரிகனாகச் செல்வது என்று முடிவு செய்தான். அதற்குள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட அவன் தந்தை உயிரிழந்ததும்,  அதன் பின் மூத்தவனும் தன் முப்பத்து ஒன்றாம் வயதில் கால கதி அடைந்ததும் தெரிய வந்தன.  தாயை சமாதானம் செய்து விட்டு, தான் கிளம்பினான்.  வாரிசு இல்லாமல் மன்னன் மாண்டதால் அரசு குழப்பத்தில் இருந்தது.

அந்த சமயம் உஜ்ஜயினியில் பல மாற்றங்கள் வந்தன. சக்ரவர்த்தியாக விக்ரமாதித்யன் என்பவன் வந்தான்.  ஹர்ஷன் என்ற புகழ் பெற்ற சக்ரவர்த்திக்குப் பின் அவருக்கு சமமாக சொல்லக் கூடிய ஆற்றலுடன் பதவி ஏற்றான்.  செல்வத்தின் அதிபதியான லக்ஷ்மி தேவி, பரி பூர்ணமான ஆசிர்வாதங்களை தன் நான்கு கைகளாலும் அன்புடன் தாராளமாக அளித்தது போல  அவன் அரசு செழித்து விளங்கியது. ஸ்ரீ ஹரியின் அனுக்ரஹமும் சேர, நால்விதமான கடல் சூழ்ந்த பூமியை திறம்பட ஆண்டான்.

செல்வத்தை நல்ல வழியில் செலவழித்தான்.  அறிவுடையோர்களை ஆதரிக்கவும், நாட்டின் முன்னேற்றத்துக்கு தேவையானவைகளைச்  செய்தும் இன்றளவும் அரசன் அல்லது செல்வந்தன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாக, முன்னோடியாக விளங்கினான்.

சகர்கள் என்ற நாட்டின் எல்லை தாண்டிய இடங்களிலிருந்து வந்த எதிரி அரசர்களை வெற்றி கொண்டு, பகவான் விஷ்ணுவின் செயலை எளிதாக செய்து விட்டான் என்று மக்கள் புகழ்ந்தனர்.  எண் திசைகளிலும் அவன் பெயரும் புகழும் பரவி இருந்த பொழுதும் குணவானாக எந்த எளிய பிரஜையும் சுலபமாக அருகில் சென்று தன் தேவையைக் கேட்டு பெறுமளவுக்கு  இருந்தான்.    கம்பீரமும், அனுசரணையுடன் நடந்து கொள்வதும் மக்கள் நலனே கவனமாக இருந்ததாலும்  அத்புதமான அரசன் என்று போற்றப்பட்டான்.  மாத்ருகுப்தன் என்ற  கவி அந்த அரச சபைக்கு வந்து பார்த்து மிகவும் அதிசயித்தான்.  பல அரச சபைகளில் வசித்தவன் ஆனதால் இந்த அளவு கல்வியும், அறிவும், செல்வமும் இருந்தும் எளியனாகவும் எல்லா நற் குணங்களும் அமையப் பெற்றவனாகவும்  அரசன் அரிதாகவே பிறப்பான், பகவானே அவதரித்து வந்தவன் போல இருக்கிறான்.   என்பதை தன் கவிகளில் விளக்கி எழுதினான்.  69/398

நம் நல்வினைப் பயனால்  நமது தேசத்தை ஆள இப்படி ஒரு அரசன் கிடைக்கப் பெற்றோம். இந்த சபையில் அறிஞர்கள், ஆன்மீகம் அறிந்த பெரியவர்கள், கலைஞர்கள்,  எதோ ஒரு துறையில் வல்லுனர்கள் கரம் குவித்து வணங்கவே இல்லை என்பதை கவனித்தேன்.  அரசனே  தகுதி அறிந்து  மதிப்பை தருகிறான் – இது வரை நான் அறியாத ஒன்று.

அனாவசிய பேச்சுக்கள், நடைமுறைகளை அறவே தவிர்த்து விட்டான். அதனால் சபையில்  பொருளின்றி பேசுபவரோ. செயல் இன்றி சுற்றுபவர்களோ இல்லை. அதனால் ராஜ்ய நிர்வாகம் வேகமாக நடக்கிறது.

உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் முழு சுதந்திரமாக செயல் பட முடிகிறது. யாருடையதும் எந்த விதமான  குறுக்கீடுகளும் இருப்பதில்லை என்பதால் நேர்மையாக செயல் படுகிறார்கள். அவர்களுக்கு நியாயமான சம்மானமும் (ஊதியமும்) அவர்கள் தகுதிக்கு ஏற்ப கிடைத்து விடுகிறது. அதனால் திருப்தியாக இருக்கிறார்கள்.  தவிர அரசனும் தானே அவர்களுக்கு முன்னோடியாக எந்த விஷயமானாலும் உடனுக்குடன் செய்து விடுவதால், அவர்களும் அதே போல தங்கள் கடமைகளைச் செய்து விடுகிறார்கள்.

கடுமையான பேச்சே அந்த அரச சபையில் எழாது.  தற்பெருமை பேசுபவர்களோ, தாங்கள் அதிகம் அறிந்தவர்களாக காட்டிக் கொள்ள விழைபவர்களோ, அவர் கண் முன் வரவே முடியாது. இடையில் தங்கள் அபிப்பிராயம் சொல்ல முனைபவர்கள் இருந்தாலும் அவர்கள் சொல் எடுபடாது. 

அனுபவித்து அறிந்தவன் இந்த அரசன். சேவையின் கஷ்ட நஷ்டங்கள் அறிந்தவன். நிறை குடமாக இருக்கும் இந்த அரசனிடம் சேவை செய்ய எனக்கு வாய்த்ததை எண்ணி பெருமைப் படுகிறேன்.  என் லட்சியம் நிறைவேற வழி கிடைத்துள்ளது.  பயமின்றி நான் இங்கு வாழ முடியும். இதுவரை என் ஆற்றலை மதிக்காமல்  அல்லது குறைவாக எண்ணி இருந்த அரச சபைகளில்  இருந்து விலகி வந்து விட்டேன். பொறுத்து இருந்து சரியான நேரத்தில் என்னை வெளிப் படுத்திக் கொள்கிறேன். நானாக விண்ணப்பிக்காமல் என்னை கண்டு கொண்டு அரசன் அழைத்தால் மிக பெருமையாக உணர்வேன். 70/398

அது தான் நடந்தது.  கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டிருந்தாலும் அந்த  கவியின் இயல்பான முதிர்ச்சியையும், கவித் திறமையையும் அரசன் விக்ரமாதித்யன் கண்டு கொண்டான்.  ஏன் தானாக வந்து அறிமுகப் படுத்திக் கொள்ளவில்லை என்றும் யோசித்தான்.  அரச சபையில் உள்ளவர்கள் திறமையை மதிப்பவர்கள்.  திறமை எங்கு இருந்தாலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய விசாலமான . மனப் பாங்கு உடையவர்களே.  பொறுத்து பார்க்கலாம்.

சபையில் உள்ளவர்கள், சிறு சிறு வேலைகளைச் செய்பவர்கள், வாயில் காப்போன் வரை மாத்ருகுப்தனின் கவித் திறமையை கண்டு கொண்டனர்.  அந்த கவிஞருடன் உரையாடுவதே மிக சுவாரஸ்யமான அனுபவமாக இருந்தது.  மாத்ருகுப்தனை சுற்றி ஒரு ரசிகர்கள் கூட்டம் எப்பொழுதும் இருக்கலாயிற்று. வேடிக்கையும் வினோதமுமாக பேசுவது அவர் வழக்கம் ஆனதால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அந்த கூட்டத்தில் இருந்தனர்.  அரசன் இதை குறித்துக் கொண்டான். உயர் மணிக்கு வெளிச்சம் தேவையா என்ன?  இந்த மனிதன் உண்மையிலேயே பெருந்தன்மையுள்ளவன். அரச சபையில் பெண்களிடம் மரியாதையாக இருக்கிறான். வெட்டி வம்பு பேசும் மனிதர்களுடன் சகவாசம் இல்லை. இவனைச் சுற்றி உள்ளவர்கள் அனைவருமே பல காலமாக அரசவையில் சேவை செய்பவர்கள். எவரிடம் எந்த உதவியும் பெறவில்லை. எங்கு தங்கி இருக்கிறான், என்ன உணவு, யாரிடம் பெறுகிறான் என்பது கூட அந்த கூட்டத்தினருக்குத் தெரியவில்லை. ஆனால் தினந்தோறும் அந்த ரசிகர் கூட்டம் அவனுடன் சற்று நேரம் பேசி விட்டு வந்தாலே உத்சாகமாக ஆகிறார்கள் என்பதையும் அரசன் குறித்துக் கொண்டான். சொல்லின் செல்வியான தேவி சரஸ்வதியின் அருள் பெற்றவன்.  விஷயம் அறிந்தவர்களிடம் உரையாடும் பொழுது அந்த இடத்திற்கு ஏற்ப பேசுகிறான்.  முகத்தை பார்த்தே தகுதியை தீர்மானிக்கும் சக்தி உடைய அரசன் இதை அறியாமலா இருப்பான்.

மாத்ரு குப்தனும் அரசனின் குணங்களை அறிந்து கொண்டான். இந்த அரசனிடம் தான்,  தன் வரும் காலம் உள்ளது என்று மனதினுள் தீர்மானித்துக் கொண்டான். திடமான புத்தி, நற்குணங்கள், நிறைந்தவன், கம்பீரமான அரசன் இவன். இனி அலைய வேண்டாம். இங்கேயே இருப்பது நல்லது என்று  நம்பிக்கை வருகிறது. பல அரசர்களை பார்த்து விட்டேன்.  இந்த சபையே புத்துணர்ச்சி தருகிறது. என்று இவ்வாறு எண்ணினாலும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமலும் அதே சமயம் குணவான்களான சபை அங்கத்தினர்களிடம் நெருங்கி பழகியும் வந்தான்.

அரசவை ஆலோசகர்களும் இதைக் கண்டு தாங்களும் மகிழ்ந்தார்கள்.   அரசனிடமும் தெரிவித்தனர்.  அரசனின் பெருந்தன்மையால்  அந்த சபையில் பொறாமை போட்டி என்பவைகள் கூட வர வில்லை. நாளடைவில் உடைகள் கந்தலாகி இருப்பதையும், வெளி தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ற உடைகளோ தேவைகளோ இல்லாமல் என்ன செய்வான் என்ற எண்ணம் தோன்றவும் மனம் வருந்தினான். அளவுக்கு அதிகமாக சோதித்து விட்டோமோ என்ற இரக்கம் வந்தது.  என்ன செய்தால் இதற்கு ஈடாக, எந்த பதவியைக் கொடுக்கலாம் என்று எண்ணியபடியே அன்று இரவு உறங்கச் சென்றான்.  சாதாரணமான கல்வி கற்ற மனிதன் அல்ல. மிகச் சிறந்த யோகியாகவோ, சாதனைகள் செய்தவனாகவோ இருக்கலாம். சொற்களின் பொருள் செறிவு, தெளிவான கருத்துக்கள் என்று அரசவை அறிஞர்களும் சொன்னார்கள்.  அதுவே அரசனுக்கு கவலைக் கொடுத்தது.  என்ன செய்தால் அவமதிப்பாக நினைக்காமல் ஏற்றுக் கொள்வான்.  மிக சிறந்த மரியாதைக்குரிய பதவியைத் தர வேண்டும். அதற்கு ஏற்றவனே.

பருவம் மாறி பனி பொழிந்து மக்களை நடுக்குகிறது. ஸுரியனின் கிரணங்கள் சக்தியற்று போனது போல வெளி உலகம் குளிரினால் அவதிப் பட்டது.  ஸூரியனே குளிர் தாங்காமல் அவசரம் அவசரமாக மலை வாயில் விழுந்தது.-  சீக்கிரமே அஸ்தமித்து- பகல் பொழுது குறைவாக ஆயிற்று.

நிறைய விளக்குகள் ஏற்றி வைத்து பிரகாசமாக இருந்த அரசனின் அறையில் விளக்குகளின் வெப்பம் பரவி அடக்கமாக இருந்தது, திடுமென விளக்குகள் அணையும் தறுவாயில் இருக்க,  அதனால் வெப்பம் குறைந்து விடவும், நடு இரவில் எதேச்சையாக விழித்துக் கொண்ட அரசன் விக்ரமாதித்யன், மாத்ரு குப்தன் நினைவு வர,   தானே அந்த பனியின் கடுமையான சீதளத்தை அனுபவிப்பது போல நடுங்கினான்.

தன் இருப்பிடத்தை விட்டு தேசாந்தரமாக வந்தவன். உற்றார் உறவினரோ, மனைவி மக்களோ அருகில் இல்லாமல் என்ன துன்பப்படுகிறானோ.   பொறுமையை சோதிப்பதாக என்னுடைய எண்ணம் மிகப் பெரிய உடல் உபாதையைக் கொடுத்து விட்டதே. சீ, என்னுடைய அறிவீனம்.  வசந்த காலத்து சோபையானால் பரவாயில்லை. இந்த குளிர் காற்றும், அனைவரும் உடல் நடுங்கி தவிக்கிறோம். மரங்கள் கூட வாடி விட்டன. இவன் எந்த அளவு தாங்குவான். விபரீதமாக எதுவும் ஆகும் முன் காப்பாற்ற வேண்டும். சிந்தாமணியே கொடுத்தாலும், அம்ருதமே கொடுத்தாலும் காலம் கடந்து விட்டால் என்ன பயன்?  மூடன் நான், இந்த அளவா ஒருவன் தகுதியை சோதித்து பார்க்க நினைப்பேன். இதற்கு தகுந்த பரிகாரமாக என்ன செய்வேன்?  உடனே தன் சேவகனை அழைத்தான்.  யாரங்கே? என திரும்பவும் அழைத்தான்.  ஒருவரும் வரவில்லை. மெல்லிய குரல் ஒன்று கேட்டது ‘மகாராஜா! நான் மித்ரகுப்தன் தான் இருக்கிறேன்,   உள்ளே வா என்று அரசனே  அழைக்கவும் மாத்ரு குப்தன் உள்ளே வந்தான்.

சாக்ஷாத் லக்ஷ்மி தேவியே பிரசன்னமாக இருப்பது போன்ற அந்த விசாலமான அறைக்குள்  மாத்ருகுப்தன், நுழைந்தவுடன் ஒரு பிரகாசத்தை விக்ரமாதித்ய அரசன் உணர்ந்தான். விளக்குகளை ஏற்று என்ற அரசனின் கட்டளையை நிறைவேற்றி விட்டு வெளியில் செல்ல ஓசையெழாமல் மென்னடியாக அடியெடுத்து வைத்தவனை, ஒரு நிமிஷம், நில் என்ற அரசனின் குரல் தடுத்தது.

குளிரில் நடுங்கி கொண்டிருந்தவன், அரசனுக்கு முன் நிற்கிறோம் என்ற உணர்வினால் தயக்கம் இவைகளுடன் தள்ளி அமர்ந்தான். அரசன் விசாரித்தான். எப்படி இருக்கிறாய் ? எங்கு வசிக்கிறாய்?  உணவிற்கு என்ன செய்கிறாய்? உடன் யார் யார் இருக்கிறார்கள் ? . நேரம் என்ன? விடிய எவ்வளவு நேரமாகும்?   என்று சர மாரியாக கேட்கவும் தெளிவு வந்து பயம் தெளிந்தவனாக பதில் சொன்னான்  தான் நினைத்தபடியே அரசனே அழைத்து விட்டதால் உத்சாகமடைந்து தீனமாக இருப்பதை விட்டு தன் சுய அறிவும், திறமையும் வெளிப்பட அழகிய ஸ்லோகமாக பதில் சொன்னான்.

குளிர் நடுக்குகிறது. உதடு உலர்ந்து தோலுரிந்த உளுந்து போல வெடித்து விட்டது. பசி ஒருபக்கம் வாட்ட, நான் என்ன வருந்தி அழைத்தாலும் நித்ரா தேவி அருகில் வர மறுக்கிறாள். என்ன செய்ய? நான் ஏதோ அவளை அழைத்ததே அவளுக்கு அவமானம் என நினத்தாளோ, முகத்தை திருப்பிக் கொண்டு வெகு தூரம் சென்று விட்டாள்.  பூமி எப்படி  தான் பொருத்தமான நற்குண சீலனான ஒரு தலைவனை அடைந்து விட்டோம் என்று நிம்மதியாக இருக்கிறதோ, அது போல இரவும் திருப்தியாக உள்ளதே, நீடித்து நிற்கவே நினைக்கிறது போலும்.   இதுவரை கடந்த யாமங்கள் போக விடிவதற்கு ஒரு யாமமும் அரை யாமமும் இன்னும் உள்ளன. (விடிய நிறைய நேரம் இருக்கிறது) (யாமம் – கால அளவு – 2 மணி 24 நிமிடங்கள் கொண்டது ஒரு யாமம். தமிழில் சாமம்.  பேச்சு வழக்கில் ஒரு ஜாமம் என்பர். சாமக் கோழி – விடியற்காலை கோழி கூவும் நேரம், விடிய இரண்டரை மணி நேரம் இருக்கையில் கோழி கூவும் என்பது பொருள்.)

இதைக் கேட்டு மகிழ்ந்து பாராட்டிய அரசன்  கேட்டான்.  இருட்டில் இருந்தவன் சரியான நேரத்தை எப்படி அறிந்தாய்?

याम्याम् – இரவுடன் உதித்து வானத்தில் பவனி வரும் நிலவு இது வரை கடந்து வந்து விட்ட தூரத்தை வைத்து – என்றான்.

பதிலைக் கேட்டு விட்டு, கவீந்திரனை  பழைய இடத்துக்கே அனுப்பி விட்டான். சற்று பொறுத்து யோசித்தான்.

தன்னையே நொந்து கொண்டான். என்ன அறிவின்மை.  குணவான், மிகவும் சிரமப் படுகிறான்.  கவி என்று அறிந்த பின்னும் வெறும் வார்த்தைகளால் நன்றி சொல்லி அனுப்பி விட்டேனே, என்ன நினைத்திருப்பான்.  என் மனதில் அவனிடம் ஏற்பட்டுள்ள ஒட்டுதலும் நம்பிக்கையையும் அவன் எப்படி அறிவான்.  பொருளற்ற பாராட்டுதல்கள், அவ்வளவு தானா இவனுடைய ரசிகத்தன்மை என்று நினைத்திருப்பான். திரும்பவும் அந்த குளிரில் அனுப்பி விட்டேனே.  வெகு நேரம் தூங்கவும் முடியாமல், விடிந்ததும் சரியான உபகாரம்  செய்ய தீன்மானித்தவனாக பொழுதைக் கழித்தான்.  அல்லது அவன் பாடலே சொல்லியதே.  எனக்கு நினைவு வருகிறது. காஸ்மீர தேசம் அரசன் இன்றி இருக்கிறது.  அந்த பூமியை இவனுக்கு கொடுக்கிறேன்- இவன் தான் சரியான பாத்திரம் – அதை நிர்வகிக்கத் தெரிந்த சரியான ஆள். – பல அரசர்கள் வெளிப்படையாக அந்த பிரதேசத்தை தங்களுக்கு தரும்படி கேட்டு வருகின்றனர்.  இனியும் ஏன் தாமதிக்க வேண்டும். 

இந்த தீர்மானம் தோன்றிய பின் அரசன் இரவோடு இரவாக தன் பணியாளர்களை அழைத்தான்.  ரகஸ்யமாக தன் ஒற்றர்களை  அனுப்பினான். காஸ்மீர தேசத்து நிலையை அறிந்து வரச் செய்தான். 74/3984

அவர்களுக்கு நமது சாஸனம்- கட்டளை என்று சொல்லுங்கள்.  மாத்ரு குப்தன் என்பவனை உடனடியாக ராஜ்யாபிஷேகம் செய்து வையுங்கள்.  உடனே அதை எழுத்திலும் கட்டளையாக ஏழுதி மாத்ருகுப்தனிடம் கொடுக்கச் சொல்லி, வாய் வார்த்தையாக அந்த கடிதத்தை  காஸ்மீரத்தின் அரசு அதிகாரிகளிடம் கொடுக்க அரசரின் ஆணை என்று சொல்லச் சொன்னான்.  இரவின் முடிவிலேயே தான் செய்ய வேண்டியதை செய்து விட்ட திருப்தியை அடைந்தான்.

மாத்ருகுப்தனோ. மிக்க மன வேதனையை அடைந்தான்.  அரசனை நேரில் கண்டும் பயனின்றி போயிற்றே.  பாரம் இறங்கியது போலவும் இருந்தது. ஏதோ பெரிய நன்மையை எதிர்பார்த்து இருந்தோம். அதுவே நினைவாக மனதில் உருப் போட்டு வந்திருக்கிறோம். அது இல்லை என்றதும்  ஏமாற்றம் தான் மிஞ்சியது. நமது வழக்கமான வாழ்க்கையைத் தொடருவோம்.  ஆசை தானே,  கிடைத்தாலும் கிடைக்கலாம் அல்லது கிடைக்காமலும் போகலாம் என்பது தெரிந்தது தானே.   அந்த மன உளைச்சல் தீர்ந்தது.  ஆசை என்ற பிசாசு என்னை விட்டகன்றது இனி நிம்மதியாக யோசிக்கலாம். எப்படி இந்த பிரமை என் மனதில் தோன்றியது. அரசன் யார், நான் யாரோ – பொது மக்கள் பேச்சிலிருந்து இந்த மனிதனைப் பற்றி அறிந்தேன் அவனிடம் சேவகம் செய்தால் உயர் பதவிக்கு வருவேன் என்ற எண்ணத்தை என் மனதில் யார் விதைத்தார்கள்.  75/398

மாத்ரு குப்தனுடைய கவி உள்ளம் கொந்தளித்தது. எப்படி நம்பினோம், யார் நமக்குச் சொன்னார்கள். உலகில் வெறும் காற்றை உண்டு வாழும் உயிர்கள் ஊர்வனவான பாம்புகள் அவைகளுக்கு போகின: சுகமாக அனுபவிப்பவர்கள் என்று பெயர்.  யார் கொடுத்தது?

ரீங்காரம் செய்யும் வண்டுகளை விரட்ட மட்டுமே தன் பெரிய காதுகளை ஆட்டும் யானைகளுக்கு நிறைய கேள்வி அறிவு உள்ளவர்களாக சித்தரிக்கும் விஸ்தீர்ண கர்ணா: என்று பெயர்.

சமீ शमी- என்ற மரம் எளிதில் தீ பிடிக்கக் கூடியது. அனைத்து மரங்களின் உள்ளும் தீ என்ற தத்வம் உள்ளது. என்றாலும் சமீ மரம் யாகங்களின் ஹோமத்திற்கு பயன்படுத்தப்படுவது அதன் குணம் காரணமாக. ஆனால் பெயரோ  மிகுந்த அடக்கம் உடையவன் என்பதைக் குறிக்கும் சமீ.

தோன்றியபடி பேசும் பொது மக்கள், அவர்கள் வாக்கில் உண்மை உள்ளதோ இல்லையோ திரும்பத் திரும்ப  பலர்  சொல்வதால்  வெற்று பொருளில்லாத பேச்சு என்பது மறைந்து லோகோக்தி- பழமொழி அல்லது உலக வழக்கு என்ற மதிப்பை பெற்று விடுகிறது.

இதிலும் ஒரு நடப்பு செய்தி, லக்ஷ்மி கடாக்ஷம்- செல்வத்தின் அதிபதியான லக்ஷ்மி தேவியின் அருள் பெற்றவர்களை அண்டி அவர்களுக்கு அருகிலேயே இருப்பவர்கள் நன்மை அடைகிறார்கள் என்பதும் கண் கூடு.  பூமியை ஆளும் அரசன் அவன் எப்படி இருந்தால் என்ன,  யார் கவனிக்கிறார்கள் அவனிடம் செல்வம் உள்ளது, அதில் ஒரு துளி நமக்கும் கிடைக்கலாம் என்ற அல்ப ஆசை மனிதனை அவர்களுக்கு நெருக்கமாக ஆக்கி விடுகிறது.

களங்கம் இல்லாதவன்,  தியாகி,  என்றனர். அரசனிடம் என்ன தவறு.  என் வினைப் பயன்.  என்றோ செய்த புண்ய பாபங்கள், அதன் பலன் அதைத் தான் குறை சொல்ல வேண்டும்.  அது தான் எனக்கு எந்த செல்வமும் கிடைக்க விட்டாமல் தடுக்கிற தடைக் கல்.

தன் அலைகளின் உயர் மணிகளை ஏந்திக் கொண்டு கரையை நோக்கி வரும் சமுத்திரம், காற்றினால் தள்ளப் பட்டு வேறு திக்கில் பிரவகித்தால் அதன் தவறு என்ன? தரையில் காத்திருந்தவனின் பாக்யம், அவன் கைக்கு எட்டாமல் விலகியது – இதில் சமுத்திரம்  அல்லது தானம் கொடுக்க வந்தவன்- தராமல் விட்டு விட்டான் என்று புலம்புவது என்ன நியாயம்?  அவனுடைய கொடைத் தன்மை – அதையா குற்றம் சொல்வோம். மனதால் கூட தர வேண்டாம் என்று நினைத்திருக்க மாட்டான், எதிர் பாராமல் வந்த நஷ்டம், இதில் யாரை குறை சொல்வோம்.  

எந்த ஒரு நிறுவனத்திலும் உயர் அதிகாரிகளிடம் உண்மையோ பொய்யோ சொல்லி அவன் கவனத்தை தன் பால் இழுக்கச் செய்யும் சில சாமர்த்யசாலிகள்  அவர்கள் தகுதியை விட அதிக லாபம் பெறுவர்.  மற்ற பலருடைய விதி, பல விதமான கடினமான சோதனைகளைத் தாண்டி வந்தும் அனத அளவு பயனைப் பெறுவது இல்லை.  இதுவும் நடப்பது தான்.

சிவபெருமானின் சன்னிதியிலேயே  காத்து நிற்கும் பக்தர்கள் விபூதி தவிர வேறு பிரசாதம் பெறுவதில்லை.  அதுவே, அவருடைய வாகனமான விருஷபத்தை பூஜித்து பொன் முதலியவை பெற்று நன்மை அடைவர்கள்.

என்ன யோசித்தும் நான் செய்த தவறு என்ன என்று புரியவில்லை.  இயல்பான நற்குணம், தெளிவான அறிவு  உடைய இந்த அரசனே என்னை கவனிக்காமல் விட்டால் வேறு யார் ஆதரிக்கப் போகிறார்கள்.  முந்தைய இடங்களில் பெயர் பெற்றிருந்தால் அதை சொல்லி அரசர் அருகில் சென்றிருக்கலாம்.  அதுவும் இல்லை.

சமுத்திரத்தின் அலைகள் அடித்து தள்ளி உள்ளுக்குள்ளேயே குமைந்து கொண்டிருக்கும் நீர் திவலைகளை மேகம் எடுத்துச் செல்கிறது.  சமுத்திரம் அதை கண்டு கொள்வதே இல்லை. அங்கிருந்து மழையாக பொழியும் பொழுது ஒவ்வொரு நீர் திவலையையும் ஆவலோடு கை நீட்டி வாங்கிக் கொள்வது போல ஆர்பரிக்கிறது.  அலைகள் அணைத்து அழைத்துச் செல்வது போல புது வரவான மழைத் துளியை ஏந்திச் செல்கிறது.  அந்த துளி மழை நீர் நேரடியாக சமுத்திரத்தின் அடியில் உள்ள சிப்பியிடம் அடைக்கலம் அடைந்து முத்தாக பரிணமிக்கிறது. அதனால் சமுத்திரத்திற்கு பெருமை சேருகிறது.  பின்னால் ஏதோ பெரிய லாபம் என்றால் சின்னஞ்சிறிய பொருள் கூட வரவேற்கப் படுவதே உலகில் நடப்பது.  ஆத்ம ஞானி, தத்துவங்களை மற்றவர்களுக்கு போதிக்கும் ஆசிரியர்கள்  என்ற நிலையில் இருப்பவர்கள்  கூட தனக்கு ஒரு அவமதிப்பு என்றால் மனம் கலங்குவது இயல்பே. 76/398

இப்படி யோசித்து தன்னிரக்கத்தில் மூழ்கி இருந்தவன் விடிந்து விட்டதைக் கூட அறிந்தானோ என்னவோ.  மறு நாள் விடிந்தவுடன் அரசன் தன் பணியாளர்களுக்கு ஆணையிட்டான். மாத்ருகுப்தனை அழைத்து வா.  அந்த பணியாளும்  அவனுடன் இன்னம் சிலரும் ஓடி வந்து அவனை  அரசனிடம்  அழைத்துச் சென்றனர்.  அத்துடன் அவர்கள் பணி முடிந்தது என்று விலகி விட்டனர். தனி ஆளாக மாத்ரு குப்தன் உள்ளே நிழைந்தான்.  எந்த வித எதிர்பார்ப்பும் இன்றி, மனம் இலகுவாகி இருந்தது.

வணங்கி நின்றவனை அரசன் ஏறிட்டுப் பார்த்து விட்டு தன் புருவ அசைப்பினால் அருகில் நின்ற காரிய அதிகாரியிடம்  ஏதோ  ஆணையிட்டான்.

லேகாதிகாரி, எழுதும் வேலை செய்யும் அதிகாரி-  அரசனின் அறிவிப்பு இருந்த  கடிதத்தை அவனிடம் கொடுத்தான்,  தானும் அவனிடம்’ மாத்ருகுப்த! உங்களுக்கு காஸ்மீர தேசம் பற்றித் தெரியும் அல்லவா. அங்கு போய் அங்குள்ள உயரதிகாரிகளிடம் இது என் ஆணை என்று சொல்லிக் கொடுங்கள்.  வழியில் பிரித்து படிக்க வேண்டாம். அவர்களுக்கு அனாவசிய சந்தேகம் வரலாம்.  (என் உடல் பேரில் ஆணை வழியில் பிரித்து படிக்காதே – கவியின் சொற்கள்) அதற்காக என்ன காரணம் கொண்டும் இந்த பத்திரத்தை மறந்தோ, தொலைத்து விட்டோ போய் நிற்க வேண்டாம். ‘

பத்திரத்தில் என்ன இருக்கிறது என்பது தெரியாமல், ஆணை என்று ஏற்றுக் கொண்டான். அடி மனதில் ஒரு உறுத்தல் தோன்றியது. அரச சேவை உண்மையில் தீயின் ஜுவாலையே, ரத்தினம் பதித்த அரச மோதிரத்தாலான  முத்திரையின் ஒளியல்ல என்று தோன்றியது. .  அப்படியே என்று ஏற்றுக் கொண்டு மாத்ரு குப்தன் வெளியேறினான்.

திரும்பி பார்த்தால், எதுவுமே நடக்காதது போல அடுத்து வந்த அதிகாரியுடன் அரசன் பேசிக் கொண்டிருந்தான்.  சிந்தனையும், கவலை தோய்ந்த முகமுமாக கையில் வழி நடைக்கான உணவோ, உடன் வரும் பந்துக்களோ இல்லாமல்  நடந்து சென்று கொண்டு இருந்தவனை  கண்டவர் வியந்தனர். இப்படி ஒரு தூதுவனை அரசன் ஏன் அனுப்ப வேண்டும்.  தனி மனிதனாக செல்பவனைப் பார்த்து பரிதாப் பட்டனர்.  இரவும் பகலும் அரச சபையில் வேலை செய்பவன் தான் என்றாலும் அறிவாளி, அரண்மனையில் எல்லோரிடமும் நல்ல மனிதன் என்று பெயர் பெற்றவன்.  பொறுப்புள்ள பதவி வகிக்க சக்தியுடையவனே.  ஏதோ சாதாரண மனிதன் போல அனுப்பி இருக்கிறானே என்று அரசனின் செயலில் சந்தேகித்தனர்.  அரசனுக்கு இந்த மனிதனுடைய திறமைகள் தெரியாது போலும்.   அருகில் உள்ளவர்கள் தங்கள் அருகாமையால் அவர் கண்களில் திறமைகள் உடையவர்களாக தெரிகிறார்கள் போலும்.

இப்படித்தான் சேஷ நாகம் ஒரு சமயம் ஒரு அசுரனின்  எதிரியான   மகா விஷ்ணுவின் பாதங்களின் அடியில் சுருண்டு கிடந்தது.  ஆஹா, சுமை தூக்க ஏற்ற நபர் கிடைத்து விட்டான் என்று மகிழ்ந்து மகாவிஷ்ணு பூமியை தூக்கி அதன் உடல் மேல் வைத்து விட்டார்.  சதா பூமியின் பாரம் அழுத்த சேஷ நாகம் வேறு வழியின்றி பூமியைத் தாங்கிக் கொண்டிருக்கிறது.  சமயங்களில் அதிக திறமையின் வெளிப்பாடே கூட விபரீதமான பலனைக் கொடுத்து விடும்.

அரசன் அறிந்திருக்க வேண்டுமே. அனைவரும் இவருடைய நகைச் சுவையான பேச்சுக்களால், கவரப்பட்டு சுற்றி சுற்றி வந்தனர். அறியாதவர் யாருமே இல்லையெனும் அளவு பிரசித்தி பெற்று விட்ட கவி.  வான வில்லைக் கண்டு நடனமாடும் மயில்  நினைத்ததாம்? ஆஹா, நானும் அந்த வான வில்லைப் போலவே இருக்கிறேன் என்று மகிழ்ந்ததாம்.  இப்பொழுது இந்திரன் என்னைப் பார்த்தால் என்ன பரிசு தருவான் என்று யோசித்ததாம்.  இந்திரன் என்ன தருவான், மழை மேகங்களை அனுப்பி மழை பொழிய வைத்தான். துளி துளியாக நீர் மயிலின் மேல் பட்டது தான் அது கண்ட பரிசு. இதயத்தில் ஈரமில்லாதவனுக்கு குணம் எது என்றா தெரியும்? தன் காரியம் தான் பெரிது என்று இருப்பான்.

மாத்ரு குப்தன் தன் வழியில் நடக்கும் பொழுது சில நல்ல சகுனங்களைக் கண்டான். ஏனோ மனதில் பாரம் குறைந்து இயல்பான குதூகலம் உண்டாயிற்று. எதற்கு அந்த பிரயாணம், என்ன கிடைக்கப் போகிறது என்ற ஒரு விஷயமும் மனதில் வரவில்லை.  நான் முந்தி, நீ முந்தி என்பது போல அடுத்தடுத்து வந்த சுபமான நிமித்தங்களே களைப்பை போக்கி விட்டன போலவும் ஏதோ ஒரு உதவிக் கரம் கிடைத்து விட்டது போலவும் சிரமங்கள் பாதிக்காமல் நடந்தான்.

 அவன் அறிந்த சாஸ்திரங்களின் படி இந்த பயணத்தின் முடிவில் நல்லதே நடக்கும் என நம்பிக்கை வந்தது. சிறியதே ஆனாலும் இதன் பலன் காஸ்மீரத்தில் என் நல்வாழ்வு துவங்கும். அந்த தேசமே  களங்கமில்லாத புண்ய பூமி.  அதிசயங்கள் எங்கு எப்படி வரும் என்று சொல்லவா முடியும்?  கடக்க முடியாத பாதைகள் போல இருந்தவை நடக்க நடக்க வழி விட்டது போல சுலபமாக ஆயின.  ஆங்காங்கு குகைகள், அவைகளின் அடியில் குனிந்தபடி கடந்து சென்று மீண்டதும்  அந்த பிரதேசத்து வாசிகள் தங்கள் இயல்பான விருந்தோம்பலைச் செய்தனர்.   வானளாவி நின்ற மரங்களின் ஊடே நடந்த பொழுது மனம் உல்லாசம் அடைந்தது.   ஆஹா என்ற பிரமிப்பு.  வனத்தின் அழகு கண்ணுக்கு விருந்தாக ஆயிற்று.   கெட்டியான தயிரை கொட்டி வைத்தது போல மலையின் பரப்பில் வெண் பனி மூடியிருந்தைக் காண பரவசமானான்.  இமய மலை, மகாதேவனின் இருப்பிடம் வந்து விட்டோம் என்று மகிழ்ந்தான்.

மரங்களின் மணம் அதன் விரிசல்களில் இருந்து பெருகிய  மெழுகு போன்ற பொருளின் பெருக்கு வனத்தையே நிரப்பியது. அவைகள் மாதா கங்கையின் நீரை குடித்து வளர்ந்தவை அல்லவா.  காற்று இதமாக வீசி அந்த மணத்தை எங்கும் கொண்டு சென்றது. உலகமே போற்றும்  மலையரசன் ஹிமவான்.  வா வா என்று வரவேற்பது போன்ற அழைப்பு அந்த இயற்கை ஸூழலில் கண்டு கொண்டான்.

தான் வந்து சேர்ந்த இடத்தின் பெயர் க்ரமவர்த்தா என்று தெரிந்து கொண்டான்.  அருகில் இருந்த   காம்புவா என்ற இடம் தற்சமயம் ஸூரபுரம் என்று அழைக்கப் படுகிறது. 

மக்கள் கூட்டமாக நின்றிருந்தனர்.  யாரையோ எதிபார்த்து அந்த பிரதேசத்து முக்யஸ்தர்கள் வந்திருந்தனர்.  அவர்கள் தான் அரசன் சொன்ன மந்திரிகள் போலும் என எண்ணிய மாத்ரு குப்தன் தன் கசங்கிய ஆடையை தவிர்த்து, வெண்ணிற ஆடைகளை அணிந்து கொண்டு, தான் கொண்டு வந்த அரசனின்  ஆணை இருந்த பத்திரத்தை அவர்களிடம் கொடுக்க அருகில் சென்றான்.

வனத்தைக் கடந்து வந்த சமயம் மேலும் சிலர் உடன் வந்தனர். அவர்களும்  சுப நிமித்தங்களைக் கண்டு மகிழ்ந்தவர்களாக   என்ன நடக்கப் போகிறது என்பதையறிய ஆவலுடன் தொடர்ந்து வந்தனர்.  காவல் வீரர்களிடம்  சென்று  ‘விக்ரமாதித்யரின் தூதன் வந்து விட்டான்’ என்றனர்.  அவர்களும் உடனே மந்திரிகளிடம் தெரிவித்தனர்.

திடுமென, வருக வருக என்ற குரல்களும், உள்ளே வாருங்கள் என்ற அழைப்பும் பல இடங்களிலிருந்தும் ஏக காலத்தில் வந்தன. அனைத்து மந்திரிகளும் ஒவ்வொருவராக வந்து தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டு வருக என்றும் நலமா என்றும் விசாரித்துச் சென்றனர்.  மத்தியில் உயர்ந்த ஒரு ஆசனம் கொண்டு வந்து போட்டனர்.  வழக்கமான அதிதி சத்காரங்கள் செய்த பின் மாத்ருகுப்தனை கேட்டனர். அரசனுடைய ஆணை இருந்த பத்திரத்தை தயக்கமும் வெட்கமும் சேர  அவர்களிடம் எடுத்துக் கொடுத்தான்.

அந்த கடிதத்தை தலையில் ஒற்றிக் கொண்டு மரியாதையாக பிரித்தனர்.  அனைவரும் அதைக் காண முன் வந்து ஒருவர் அதன் வாசகத்தை பலமாக படிக்கக் கேட்டனர்.  கேட்கையிலேயே கை கூப்பி வணங்கினர்.

மாத்ருகுப்தன் என்ற மதிப்புரிய பெயர் தங்களுடையதா என்று ஒருவர் வினவினார்.  ஆமாம் என்று சொல்லவும் அவர் முகம் பிரகாசமாகியது.

அவர்களிடையில் பரபரப்பும்,  பல குரல்களில் விசாரிப்பும்  பதில்களும்  அந்த இடமே கல கல என்றாயிற்று.  யார் மகுடாபிஷேகம் செய்யப் போகிறார். எந்த புரோஹிதர்.  தேவையான பொருட்கள் வந்து விட்டனவா என ஒருவரையொருவர்  கேட்டுத் தெரிந்து கொண்டனர்.  சமுத்திரத்தின் அலை பாய்வது போல ஜன சமுகம் காண வந்து நிரம்பியது. மாத்ரு குப்தனை உயர்ந்த ஆசனத்தில்  கிழக்கு நோக்கி அமரச் செய்தனர்.  அபிஷேக தீர்த்தத்தை மந்திரிகள்  மற்ற பெரியவர்கள் தெளித்து அதனால் வந்த ஓசை நர்மதை நதியின் பிரவாகம் போல இனிமையாக கேட்டது. அபிஷேகம் முடிந்து, ஆடை ஆபரணங்கள் அணிவித்து பட்டத்து அரசனின் சிம்மாசனத்தில் அமர்த்திய பின் அவர்கள் ஒரு முகமாக சக்ரவர்த்தி விக்ரமாதித்யரிடம் எங்கள் அரசை பாதுகாக்கச் சொன்னோம். அவர் உங்களை  அனுப்பி இருக்கிறார்.   இனி உங்கள் பொறுப்பு.  நீடூழி வாழ்க, அரச நிர்வாகத்தை செம்மையாக செய்க என்று வாழ்த்தினர்.   அரசனுக்குரிய மரியாதைகளுடன் வணங்கி தள்ளி நின்றனர்.  79/398

இந்த அரசு ப்ல அரசர்களை கண்டு விட்டது.   இது உங்கள்  ஆட்சி. உங்களை யாரும் கட்டுப் படுத்தவோ, குறிக்கிடவோ மாட்டார்கள்.  காஸ்மீர நாட்டை தலைமை தாங்கி நடத்த யாருடைய அனுமதியும் தேவையில்லை,  பிறக்கும் பொழுது யார் தந்தை என்று  தெரிந்து கொண்டா பிறக்கிறோம். அது போல உங்கள் நல் வினைப் பயன் அரசனாக ஆளும்படி வாய்ப்பு கிடைத்துள்ளது.  யாருக்கும் தலை வணங்க வேண்டாம்.  உங்கள் சுய புத்தியை பயன்படுத்தி ராஜ்ய சாஸனம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர்கள் பலவிதமாக அரசனாக ஏற்றுக் கொண்டு உபதேசமாக அல்லாமல் நலம் விரும்பிகளாக சொன்ன சொற்கள் இதமாக இருந்தாலும், தனக்கு இந்த பெருமையை அளித்த தன் மதிப்புக்குரிய அரசன் விக்ரமாதித்யனை எண்ணி அவருடைய பெரும் கருணையை வியந்து மனதினுள் வணங்கினான்.

மாத்ருகுப்தன், மஹீபாலன்- மாத்ரு குப்தன் இனி பூமியை ஆளும் அரசன் என  அறிவிப்பைக் கேட்டு தனக்குள் எண்ணி முறுவல் பூத்தான்.  அன்றிலிருந்து தன் வாழ்வில் இனி நன்மையே என நம்பிக்கை பிறந்தது.

மறு நாள் ஊருக்குள் பிரவேசம் செய்ய ஏற்பாடுகள் செய்தனர்.  தனக்கு அத்புதமான  பரிசாக  ராஜ பதவியே கொடுத்த  மதிப்புக்குரிய அரசன் விக்ரமாதித்யனுக்கு நன்றிகள் சொல்லி பல பரிசு பொருள்களுடன் அவர் அனுப்பிய தூதுவனை திருப்பி அனுப்பினான்.  ஊர்வலமாக சென்ற சமயம் இதன் செழிப்பையும் அழகையும் பார்த்து பேரரசர்  யோசியாமல் கொடுத்து விட்டாரோ, அவருக்கே பொறாமை வரலாம் என ஒரு வினாடி நினைத்தவன் தன்னையே கடிந்து கொண்டான்.  அவருடைய பெருந்தன்மை எங்கே, நான் எங்கே.

மனம் கொள்ளாமல் மகிழ்ச்சியும் நன்றி உணர்ச்சியும் மேலிட மற்றொரு கவிதையை எழுதி மற்றொரு பணியாளன் மூலம்  கொடுத்து பல உயர்ந்த பொருட்களையும் பரிசாகவும் அனுப்பினான்.

 அல்ப அறிவும் சாமர்த்யமும் உள்ள உன் சேவகனான எனக்கு  கூட இந்த அளவு பெரிய பரிசைக் கொடுத்த உங்கள் பெருந்தன்மையை பாராட்ட எனக்கு சொற்களே இல்லை.   என் கண்களில் அதை எண்ணி எண்ணி நீர் வழிகிறது.  சாதாரணமாக காணக் கிடைக்காத  அரிய குணங்களை கொண்டுள்ள உங்களை நினைத்து பெருமைப் படுகிறேன். 

மகாராஜா!  நான் எண்ணியே பார்த்திராத பெரும் பாக்யம். உங்கள் குகத்திலோ, செயலிலோ சிறிதளவு கூட உங்கள் மனதில் உள்ளதை வெளிப் படுத்திக் கொள்ளவும் இல்லை. அனாவசியாமான பேச்சுக்கள் அருகில் கூட வரவில்லை.  ஓசையின்றி தூறலாக ஆரம்பித்து பெரு மழையாக பொழியும் மேகமாக உங்களை நினைக்கிறேன்.  இனிமையான கனிகளைக் கொடுக்கும் பெரு மரம் போல வாரி வழங்கும் வள்ளல்.  உங்கள் அருள் அவைகளை விட மேலானது.

ஸ்ரீ நகருக்குள் பரிவாரங்களோடு நுழைந்தவன் அது வரை இருந்த நிலப் பரப்பே மாறி விட்டதைக் கண்டான்.  அது முதல் நல்லரசனாக, அரச நீதிகளை அனுசரித்து, பரம்பரையாக வந்த அரசை இளம் அரச குமாரன் ஏற்று ஆள்வது போல ஆண்டான்.

இயல்பான திறமையும் அறிவும் உடையவன் ஆனதால் வெகு விரைவில் அரச பொறுப்புகளை உணர்ந்து கொண்டான். தன் ஆற்றலைக் காட்ட வேண்டிய இடத்தில் உறுதியாகவும், கொடைகளை அளிக்கும் சமயம் தேவையறிந்தும் கொடுத்தான்.  யாகங்கள் செய்வதை ஊக்குவித்தான். உயிர் பலியின்றி, மாவும் தயிரும் சேர்த்து  karambakam-kichidi – என்றும் தமிழில் வெண் பொங்கல் என்றும் சொல்லப்படும் அரிசியும் பருப்பும் சேர்த்து செய்த அன்னத்தில் செய்த உருவங்களை ஹோமத்தில்  சமர்ப்பிக்கச் செய்தான்.  அதை மக்களும் விரும்பி சாப்பிடலாயினர். தாராளமாக தக்ஷிணைகள் கொடுத்து அந்தணர்களை நலமாக வாழச் செய்தான்.   அரசன் பொது மக்களின் நலனின் அக்கறையுள்ளவனே, தானும் கஷ்டங்களை அனுபவித்தவன் ஆதலால் நமது தேவைகளை சொல்லும் முன் அறிந்து கொள்கிறான் என்று பாராட்டினர்.  அரசன்  விக்ரமாதித்யர் பார்த்து அனுப்பியவர்  என்பதால் அவரிடமும் மதிப்பு மிகுந்தது.

தன் நாட்டில் பசு வதையை அறவோடு அழிக்க முனைந்தவன் பொன் மணிகளையும் இந்த கரம்பகம் எனும் உணவையும் தானமாக கொடுத்தான்.  நல்ல  அரசனின் செல்வமும் சுரபி என்ற காமதேனுவும் சமம்.  வேண்டியவர்கள் வேண்டியதை உடனே அளிக்கும் காமதேனுவும் அரசனிடம் உள்ள செல்வமும் மக்களுக்காகவே என நம்பிக்கை வளர்ந்தது.

मेण्ठ – மேண்ட என்ற கவி ஹய க்ரீவ வதம் என்ற நூலை எழுதிக் கொண்டு வந்து அரசனிடம் காட்டி பரிசு பெற விழைந்தார். அவர் முழுவதும் படித்துக் காட்டும் வரை பொறுமையாக இருந்த அரசன் எதுவும் விமரிசனமாக சொல்லவில்லை. அவருடைய புஸ்தகத்தின் அடியில் ஒரு தங்க தட்டை வைத்து கொடுத்தான்.  கவிதையின் வாவண்யம் பொங்கி வழிந்து அந்த தட்டில் விழட்டும் என்றான். அவரோ தன் கவிதை ஏற்றுக் கொள்ளப் பட்டது என்று மகிழ்ந்தார். தன் ஊர் திரும்பி வைஷ்ணவர் ஆனதால், பகவான் மதுசூதனன் கோவிலை மத்ருகுப்த ஸ்வாமி என்றழைத்து ஒரு கோவிலைக் கட்டினான்.  இவ்வாறு பலவிதமான செயல்களால் நாட்டு மக்களையும் பாலித்து வந்த அரசன் ஐந்து ஆண்டுகள் முடிய மூன்று மாதங்கள் ஐந்து நாட்கள் கடந்த சமயம்,

தீர்த்த யாத்திரை சென்றிருந்த அஞ்சனாவின் மகன் ப்ரவரசேனன் இதைக் கேள்விப்பட்டான். தனக்கு உரிய அரசு, தன் குலத்தினன் அல்லாத ஒருவன் கைக்கு சென்று விட்டது என்பதையறிந்தான்.  மரத்தின் உள் இருந்து சமயத்தில் அதையே எரிக்கும் அக்னி போல அவன் மனதில் தந்தையை இழந்த துக்கம் மிக அதிகமாக வருத்தியது.  ஸ்ரீ பர்வதம் என்ற இடம் வந்து சேர்ந்தான். பாசுபத வேஷம் தரித்துக் கோண்டான். (பாசுபத – தீவிரமான  சிவ பக்தர்கள், வேஷங்கள் தரித்து தனித் தன்மையுடன்   இருப்பார்கள்- ஆடலும் பாடலுமாக சிவ பூஜை செய்வார்கள். நாட்டிய சாஸ்திரங்களின் படி முறையாக ஆடுபவர்கள். )   ஒரு சித்தர் அஸ்வபதன் என்பவர் பழங்கள் கொடுத்தார். அதை உண்டவனிடம், அவரே சொன்னார். உனக்கு உன் நல் வினைகளின் பயனாக நல்ல எதிர்காலம் உள்ளது. உன் ராஜ்ய அபிலாஷையும் கிடைக்கப் பெறுவாய்.  முயற்சி செய் என்றார்.  பகவான் பிறை சூடி பெருமானை குறித்து தவம் செய் என்று சொல்லிச் சென்றார்.

ஒரு ஆண்டு முழுவதும் அதே போல தவம் மேற்கொண்டவனை பிறை ஸூடி பெருமானான பகவான் மாகேஸ்வரனும் தானே வந்து தரிசனம் அளித்தார்.  அவரோ முன் வந்த சித்தர் போலவே இருந்தார். தவம் செய்து இக லோக சுகத்தை ஏன் கேட்கிறாய்.  ஆத்ம ஞானம் பெறவும், தன்னையறிவதையும் தானே ஞானிகள் வேண்டுவர் என்றார்.  குரலைக் கேட்டதுமே, அவன் அவர் யார் என்று அறிந்து கொண்டான்.  சித்தருடைய உருவத்தில் இருந்ததால் என் மனமும் அதே போல அரச போகத்தை விரும்பியது போலும். அவர் சொன்ன  சொற்களே மனதில் இருந்திருக்கிறது. ஆனால், நீங்கள் சாக்ஷாத் பரமேஸ்வரனே.  பாற்கடலின் கரையில் நின்று  கையளவு பாலை யாசிப்பவன் போல தங்களிடம் என் விருப்பத்தைச் சொல்லி விட்டேன். மகானான தாங்கள் வேண்டியவனுக்கு அல்ப விஷயங்களையா அளிப்பீர்கள்.  என் பெற்றோர் பட்ட கஷ்டங்களை நான் அறிவேன்.  அதனால் என் மனம் ராஜ்யத்தை திரும்பிப் பெறுவதே என் கடமை என்று எண்னியதால் வேண்டி விட்டேன்.

மகாதேவன் அப்படியே ஆகட்டும். உன் ஆசை ராஜ்யத்தை பெறுவது தான் என்றால் அப்படியே ஆகட்டும். அஸ்வபாதர் வழி காட்டுவார். உன் விருப்பத்தை அடைவாய் -இதை சொல்லி கண் முன்னாலேயே   மறைந்து விட்டார்.

அதன் பின் அஸ்வபாதர் என்ற சித்தரிடம் பயிற்சிகள் பெற்றவனாக தன் நாடு திரும்பினான். மந்திரிகளிடம் பேசி நிலைமையை தெரிந்து கொள்ள விழைந்தான். யாருக்குமே மாத்ருகுப்தனிடம் பகை இல்லை. தவிர விக்ரமாதித்ய மகா ராஜா பரிந்துரை செய்து அரசன் ஆனவர்,  அவரை எதிர்த்தால் மகாராஜா கோபிக்க கூடும்.  அவருடன் மோத யாரும் தயாராக இல்லை.  தாமரை மலர்கள் சந்திரோதயத்தை வரவேற்பதில்லை என்பதால் சந்திரனை மற்றவர்களும் விரும்பாமல் இருப்பார்களா? தண்டுக்கு ஆசைப் பட்டு தாமரை செடிகளை நாசம் செய்யும் மதம்  கொண்ட யானைகளை வதை என்றால் என்ன நியாயம் அது.  தங்களுக்கு சமான பலம் இல்லாத இடத்தில், 

யார் தான் தன் பலத்தைக் காட்ட நினைப்பர்,  அவலை நினைத்து உரலை இடிப்பது போல என்று தமிழில் ஒரு வசனம் உண்டு அது போல சந்திரனிடம் மோத சக்தியில்லாதவன் தாமரை மலரை வெறுக்கவா? அல்லது யானையுடன் மோத சக்தியில்லாதவன் தாமரை தண்டை அழிப்பதா? எது சரி.

த்ரிகர்த்தர்கள் என்ற பூமியை வெற்றி கொண்டு திரும்பிய அரசன் மாத்ருகுப்தன், விக்ரமாதித்யரின் கால வசம் அடைந்த செய்தியை அறிந்தான்.  அன்று வெகுவாக பாதிக்கப் பட்டவனாக, உணவு உட்கொள்ளவோ, நீராடி உடை மாற்றிக் கொள்ளவோ கூட தோன்றாமல் குனிந்த தலை நிமிராமல் தன் துக்கத்தை அனுபவித்துக் கொண்டிருந்தான்.  மறு நாள் மாத்ருகுப்தன் இருக்கும் இடத்திற்கு அருகில் ப்ரவரசேனன் வந்து சேர்ந்தான்.  அவன் காஸ்மீர தேசத்தை விட்டு விலகி கிளம்பியவன் சற்று தூரத்தில் தங்கியிருப்பதாக அறிந்து திடுக்கிட்டான்.  சந்தேகம் வந்தது  மாத்ருகுப்தனுடைய எண்ணம்  என்னவாக இருக்கும்? சில நாட்களாக தன் முயற்சியால் மந்திரிகளிடம் பேசியதன் பலனாக அவர்கள் சூழ்ச்சியால் வெளியேற்றி விட்டனரா. அல்லது என்னை பின் தொடருகிறானா? தைரியத்தை வரவழைத்துக் கொண்டு மாத்ருகுப்தனை சந்திக்கச் சென்றான்.  பரஸ்பரம் அறிமுகப் படுத்திக் கொண்ட பின் மெள்ள  விசாரித்தான்.  ராஜ்ய தியாகம் பற்றி விசாரித்தான்.

மாத்ருகுப்தனோ, ஒரு நிமிஷம் தன்னை ஆஸ்வாசப்படுத்திக் கொண்டு, என்னை அரசனாக்கிய       பேரரசன் மறைந்து விட்டார்.  புண்யம் செய்தவர் அவர்.  ஸூரியனுடைய கிரணங்கள் தலைக்கு மேல் இருந்தால் ஸ்படிக கல் தெளிவாகத் தெரியும்.  அதுவே இரவில் வெறும் கல்லே.  அதற்கென்று தனி ஒளி இல்லை அல்லவா.  ப்ரவரசேனன் ஏன், வேறு யாராவது பலசாலியான அரசன் உங்களை எதிர்க்கிறானா?  மாத்ருகுப்தன் சொன்னான்,  அப்படி இல்லை, எங்களை யாரும் அசைக்க முடியாது. அந்த அளவு ஏராளமான பலம் உடையவன் எவருமில்லை. என்னை அவர் பதவி கொடுத்து இந்த அளவு உயர்வாக வைத்தவர்.  கண்ட உடனேயே எதிராளியின் தகுதியை எடை போட அவர் அறிவார். அவருடைய செயல் வெறும் உப்பு மண்ணில் விதைத்த தானிய விதையும் அல்ல, அவர் செய்த ஹோமமும் வெந்து தணிந்து சாம்பலான யாகத் தீயிலும் அல்ல.  

ஆனால் அவரால் நன்மை பெற்று உயர் பதவிகளை அடைந்தவர்கள்  அவருடைய காலடி தடத்தில் தொடர்ந்து செல்லவே விழைவர். அவருடைய குணங்களை பின்பற்றியே வாழ நினைப்பர். மிக குறைந்த அறிவுடையவன் கூட அவருடைய உதவியை மறக்க மாட்டான். அந்த நிழலில் வளர்ந்தவன்  நான். ஸூரிய காந்தக் கல் அஸ்தமனம் ஆனதும் தன் ஒளியை இழப்பது போலவும், சந்திர காந்த கல் விடிந்து சூரியனின் ஒளி பரவும் சமயம் தன் குணமான நீரை பெருக்குவதை நிறுத்தியும் விடும் என்பது நாம் கண் எதிரே காண்பது தானே.  அதனால் வாரணாசி சென்று தவ வாழ்க்கையைத் தொடரப் போகிறேன். தியாகம் தான் இனி என் வழி.  அந்தணனாக என் கடமையும் அதுவே. வாழ்வின் இறுதியில் அனைத்தையும் தியாகம் செய்து விட்டு பகவானின் நினைவாகவே இரு என்பது தானே உபதேசம்.  என்னை வாழ வைத்த தெய்வமாக வந்தவர், அவர் இன்றி உலகமே எனக்கு இருண்டதாக தெரிகிறது. போக வாழ்வும், மன்னன் என மரியாதைகளையும்  பெற்றது அவருடைய அருளால்.  என் மனம் இனியும் இந்த தேசத்து அரசனாக நீடிப்பதை ஏற்கவில்லை.

ப்ரவரசேனன் திகைத்தான். இப்படி கூட ஒரு மனிதன் செய் நன்றி மறவாதவனாக, உயர்ந்த கொள்கைகளுடன்  இருக்க முடியுமா?  கடல் பொங்குவது போல உன் மனதிலிருந்து வந்த சொற்கள்.  உண்மையான உணர்வுகள். ‘அரசனே பூதேவி பாக்யம் செய்தவள். உங்களைப் போன்ற நன் மகன்  அவளுக்கு கிடைத்து விட்டிருக்கிறது. அவளை தன்னுள் அனைத்து செல்வங்களையும் உயர் மணிகளையும் கொண்டவள் என்பார்கள். உங்களைப் போன்ற உயர்ந்த மனிதனை பெற்றவளாக மேலும் அதிக பாக்கியம் செய்தவளாக  பிரகாசமாக ஆகி விட்டாள். 300 ஸ்லொகம்

உங்களை நான் உயர்வாக மதிப்பதாகச் சொல்வது  ஏதோ உபசார வார்த்தையல்ல. என் ஆழ் மனதில் நான் நினைப்பதை சொல்ல தகுந்த சொற்கள் கிடைக்காமல் திகைத்து நிற்கிறேன்.  நீங்கள் தீரன். உடலும் உள்ளமும் தூய்மையாக உள்ள உங்களைப் போல காண்பது அரிது. இந்த சந்திப்பு எனக்கு மிகப் பெரிய பாடத்தை போதித்து விட்டது.

பொதுவாக மக்கள் பெரும் பயனை பெற்று அனுபவிப்பவர். ஆனால் இந்த அளவு வெளிப்படையாக தங்கள்  நன்றியறிதலை சொல்வார்களா, மாட்டார்கள். எனக்கு என் நல் வினைப் பயன் இருந்தது அரசனாக, யதேச்சையாக இவர் கொடுத்தார்,  என்னை தேர்ந்தெடுக்க ஏதோ காரணம் இருந்திருக்கும். அவரது உற்றார் உறவு முறைகளில் எவருக்காகிலும் இந்த பதவியைக் கொடுத்து இருக்கலாமே. என்னிடம் திறமை, ஆற்றல் இருக்கிறது அவர்களிடம் இல்லை போலும்.  அல்லது இன்னும் மேலே போய் அவருடைய ரகசியம் ஒன்று எனக்குத் தெரியும், வெளியில் சொல்லி விடாமல் அதை நான் பாதுக்காக்க  இப்படி ஒரு பெரிய பதவியை கொடுத்து இருக்கிறார் – இப்படித்தான் அறிவிலிகளான மக்கள் சொல்லி சொல்லி தாங்களும் நம்ப ஆரம்பித்து விடுவர்.  அவர்கள் மனசாட்சி அறியும் இவைகள் உண்மையல்ல, கொடுத்தவர் உண்மையான நல்லெண்ணத்துடன்  கொடுத்தார் என்பதை.

உங்களை வணங்கி வேண்டிக் கொள்கிறேன். நற்குணங்கள் உள்ளவர் எனப் பெயர் பெற்ற பலருக்கு முன்னோடியாக நிற்பவர்.  புடம் போட்ட பொன், தேர்ந்தெடுக்கப் பட்ட உயர் மணி,  இவைகளுக்கு சமமாக எங்கிருந்தாலும் பிரகாசிக்கக் கூடியவரே. அதனால்  இந்த ராஜ்யத்தை விட்டு போக வேண்டாம். அரச பதவியை துறக்க வேண்டாம்.  எனக்கும் இதனால் ஒரு பெருமை கிடைக்கட்டும். குணவானான ஒருவன் அருகில் இருப்பதே பெருமை.  முன்னால் பெருந்தன்மை மிக்க சக்ரவர்த்தி உங்களுக்கு கொடுத்த அரச பதவி. தற்சமயம் இதன் பரம்பரையில் வந்தவன் என்ற உரிமையுடையவன் என்ற தகுதியில் என்னிடம் இருந்து பெற்றுக் கொள்ளுங்கள். உங்கள் நற்செயல்கள் தொடரட்டும்.  அன்புடன் நான் சொல்வதை ஏற்றுக் கொள்ளுங்கள்.  அனுக்ரஹம் செய்யுங்கள்.

மாத்ருகுப்தன் மென் முறுவலோடு அதைக் கேட்டு, மெள்ள பேசலானான்.  ப்ரவரசேனனின் சொற்களில் கபடம் இல்லை, உண்மையாகச் சொல்கிறான் என்பதை உணர்ந்தான்.  சொற்கள் அவன் எண்ணத்தை தெரிவித்ததை விட ஆத்மார்த்தமான உண்மை அவன் முகத்திலும், பாவனைகளிலும் அதிகமாக தன் மனதை தொட்டு விட்டதாக உணர்ந்தான். பதில் சொன்னான்.

என் கடந்த காலம் நான் வளர்ந்த சூழ்நிலை உங்களுக்குத் தெரியும், அதே போல உங்களுடைய வாழ்வில் நீங்கள் கடந்து வந்த கடினமான பாதையை நானும் அறிவேன்.

எந்த எதிர்பார்ப்பும் இல்லை, உள்ளொன்று புறமொன்று என்று பேசவில்லை, பேசுபவன் தூயவனானால், அவன் உள் மனதின் சத்யமே சொற்களில் வெளிப்படுகிறது என்பதையும் அறிவேன்.எனவே இப்பொழுது நான் சொல்வது கடுமையாக தோன்றினாலும் தவறாக எண்ண வேண்டாம்.  உலகில் ஒருவனுடைய கடந்த கால நற்செயல்களை மக்கள் சுலபமாக மறந்து விடுவர்.  அவனுடைய சிறிய குற்றங்களையும், இயலாமையும் கூட நினைவில் வைத்திருப்பர். நிகழ் காலம் தான் ஒருவனின் தகுதியை அளக்கும் கருவி.

அரசனாக இருந்தவன், கை தாழ்ந்திருக்க கொடையாக எதையும் பெறுவேனா?  பிரதிக்ரஹம்- தானம் பெறுவது – என்ற செயல்.  செல்வத்தை – அரச பதவியை உங்களிடமிருந்து பெறுவேனேயானால், ஒரே வீச்சில் என் பெருமை அனைத்தையும் இழந்தவன் ஆவேன்.  எனக்கு இதை அளித்தவர் சக்ரவர்த்தி- காணக் கிடைக்காத மகா பெருமைகள் உடையவர்.  நான் மறுக்க முடியாமல் பெரும் பதவியைக் கொடுத்தார்.  சுக வாழ்வு மட்டுமா வாழ்வின் பயன்?  என் மனித தன்மை, செய் நன்றி உணர்வு இவைகள் தொலைந்து போக  பேராசை என்பதாக அறியப் படும்.  மிக மிக சாதாரணமாக ஆவேன்.  இந்த அரச வாழ்வும், பதவி சுகமும் பெரிது என்று நான் விரும்பியிருந்தால் யார் என்னை தடுக்க?  எனக்கு அளித்தவருக்கு நான் என்ன பதில் உபகாரம் செய்தேன்? என் உடலோடு என் நன்றி உணர்வும் அழியும். அதனால் இப்பொழுது ஒரு முடிவை எடுப்போம்.

அந்த மாமனிதரான சக்ரவர்த்தியின் செயலை நான் பின் பற்றுவதாக இருக்கட்டும். தகுதியான ஒருவனின் கையில் இந்த ராஜ்யத்தை, இதன் பொறுப்புகளை ஒப்படைக்கிறேன் என்று எடுத்துக் கொள்வோம். இதில் இரு தரப்பிலும் நன்மையே. நாம் செய்ய வேண்டியதும் இது தான்.  எனக்குப் பின் நல்ல கையில் பொறுப்பை கொடுத்து விட்டு நான் விலகினால், என் வாழ்வு வெறும் அரச போகம் மட்டுமாக வாழ்ந்ததாக ஆகாது. ஒரு நற்செயலை செய்த திருப்தியும், மன நிறைவும் கொள்வேன்.

இதுவரை நீ உரிமையுள்ளவன் உயிருடன் இருக்கிறாய் என்பதே உலகில்  யாருக்கும்  தெரியவில்லை. தெரிந்த பின்னும் உன் செல்வத்தை நான் தொடுவது கூட அபசாரம்.  அதனால் வாரணாசி சென்று துறிவியாக வாழ்கிறேன்.  அனைத்தையும் துறந்து மாத்ருகுப்தன் யதியானான்.  யதி -துறவி.

ப்ரவரசேனன் அரசனானான்.  இந்த தேசம் உங்கள் சொத்து. நான் அதை பாது காப்பவன். இதில் உரிமை கொண்டாடாமல் , அரசாட்சிக்கு மட்டும் பொறுப்பு ஏற்கிறேன்.  ஆண்டு தோறும் அவன் மாத்ருகுப்தன் யதிக்கு உரியது என்று செல்வத்தை அளித்து வந்தான்.  மாத்ருகுப்த யதியும் வாரணாசியில் தான தர்மங்களுக்கு செலவழித்தான்.  அடுத்த பத்து ஆண்டுகள் உயிருடன் இருந்தவரை இருவரும் ஒருவரையொருவர் அறிந்தவர்களாக இருந்தனர்.

மூவரும், சக்ரவர்த்தி விக்ரமாதித்யர், மாத்ருகுப்த யதி, ப்ரவர சேன அரசன்  மூவருமே த்ரிபதகா  –  கங்கை போல காஸ்மீர தேசத்தின் வளர்ச்சிக்கு உதவினர்.

ப்ரவரசேனன் தன் ராஜ்யத்தை சிறப்பாக ஆண்டான். புஜ பலத்தால், படை பலமும் கொண்டு, எதிரிகளை முறியடித்தான். அவனுடைய பெரும் படை கடல் அளவு விஸ்தீர்ணமாகவும், மலையளவு திடமாகவும் இருந்ததாம்.   அகஸ்தியர் என்ற ரிஷி போல நாட்டில் அமைதியை நிலை நாட்டினான்.  சென்ற இடமெல்லாம் வெற்றி பெற்றதோடு, பல நற்செயல்களையும் செய்தான்.

கிழக்கு திசையில் கங்கை கடலில் கலக்கும் இடத்தில், (வங்க தேசத்தில்), காளிந்தி – யமுனை பாயும் இடத்தில்,  மதம் கொண்ட யானைகள் போன்ற தன் சைன்ய வீரர்களுடன்  சென்று அதன் செல்வத்தையும் சிறப்பையும் வளர்த்தான்.  மேற்கில் சௌராஷ்டிர தேசத்தை வென்றான்.  அவர்கள் தேசத்தையும் தன் அரசுடன் இணைத்தான்.   

போரில் வீரத்தைக் காட்டுவது போலவே நாட்டில் நேர்மையாக ஆட்சி செய்தான். தன் வரையில் பற்று இல்லதவனாக துறவு மனப் பான்மையே கொண்டவனாக இருந்ததால் பயமின்றி நினைத்ததைச் செய்ய முடிந்தது. தர்ம விஜயன் எனப் பெயர் பெற்றான். பூமியின் வளம் பெருகியது. அதனால் பூமியில் இந்திரனாக உள்ளான் என்று வர்ணித்தனர்.

சகோதரனே வைரியாக தந்தைக்கு செய்த துரோகத்தை மறக்காமல்,  தனக்குப் பின் சக்ரவர்த்தி விக்ரமாதித்யனின் மகன் ப்ரதாபசிலா – அவனுடைய மற்றொரு பெயர் ஸிலாதித்யா என்பவனை அரசு கட்டிலில் அமர்த்தினான்.  காஸ்மிர ராஜ்யத்து சிங்காசனம் ஒரு சமயம் விக்ரமாதித்யரின் வசம் இருந்தது.  அவன் மகன் மூலம் அதன் திரும்பக் கொண்டு வந்து தன் நாட்டில் ஸ்தாபித்தான். 

மும்முனி என்ற அரசன் ஏழு முறை படையெடுத்து வந்தான். எட்டாவது  முறை அவன் படையுடன் வந்த பொழுது தீவிரமாக போரிட்டு எழ முடியாமல்  தோற்கடித்த கதை பிரசித்தமாயிற்று.  விலங்கை அடிப்பது போல இவனை அடியுங்கள் என்று ஆணையிட்டான். அவனோ, நான் வீரன், என்னை விலங்கு போல அடிக்க வேண்டாம் என்று வேண்டினான்.  சபை நடுவில் மயிலாட்டம் ஆடினான்.  குரலும் மயில் போலவே இருக்கவும், நடிகனாக அவன் திறமையை மெச்சி விடுவித்தான்.  தகுந்த பரிசுகள் கொடுத்து அனுப்பினான்.

பாட்டனாரின் நினைவாக, அவர் பெயரில் ப்ரவரசேன என்ற பெயரில் ஒரு நகரமே கட்டுவித்தான்.

ஒரு சமயம் இரவில் சரியான நக்ஷத்திரம், லக்னம் இவைகளை கவனிக்க, ஸ்ரீநகரின்  நீரூற்றின் மறு புறமாக சென்றவன்  ஏராளமான சிதைகள் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தான்.  மரங்களில் அந்த தீயின் ஜுவாலை வினோதமாக தெரிந்தது. ஏதோ தவறு, என்று யோசித்தவன் எதிரில் சற்று தள்ளி மலையின் உச்சியில் பூதம் போன்ற பெருத்த உடலுடன் ஒருவன் நிற்பதைப் பார்த்தான்.  அவன் சிரித்தது  மலைகளில் எதிரொலித்தது.  என்னுடன் மோத விக்ரமாதித்யனும் இல்லை சூத்ரகனும் இல்லை, நீ தான் அவர்களுக்கு சமமாக உள்ளவன் அகப்பட்டாய், வா வா என்று கொக்கரித்தான்.  தன் ஒரு காலை நீட்டி  இதை பாலமாக பயன் படுத்திக் கொண்டு என் அருகில் வா.  நீட்டிய காலை பயன்படுத்தி மலை மேல் ஏறிய பின்,  அதன் முடிவில் இருந்த படிக்கட்டுகள் வழியே  மேலும்  ஏறிய பின் அந்த காலை வெட்டினான்.  இடம் தற்சமயம் க்ஷுரிகாவாலம்  என அழைக்கப் படுகிறது.

அந்த  பெரு உடல் கொண்டவன் அதை பொருட்படுத்தாமல் சரியான இடத்தையும், கட்டடம் கட்ட துவங்க வேண்டிய சரியான நேரத்தையும் அந்த உயரத்திலிருந்து  கோடுகள் போட்டு காட்டிக் கொடுத்து விட்டு மறைந்து விட்டது. அவன் ஒரு யக்ஷன். சாரிகா என்ற ஊரைச் சேர்ந்தவன் என்பது பின்னால் தெரிந்தது.  அட்ட என்ற பெயருடையவன்.  அந்த கிராமத்தில் யக்ஷன் வரைந்து கொடுத்த வரைபடம் அல்லது நூலால் அடையாளமிட்ட பூமி,  அதில் முதல் காரியமாக, ப்ரவரேஸ்வரம் என்ற பகவானை பக்தியுடன் பிரதிஷ்டை செய்தான்.  ஜயஸ்வாமி என்ற புகழ் பெற்ற சிற்பி,  தானே வந்து பீடத்தில் யந்திரம் என்பதை பிரதிஷ்டை செய்தார்.  வேதாளன்- யக்ஷனை குறிக்கும் சொல்- சொன்ன லக்னத்தில் பூபதியான ப்ரவரேசன், ஸ்தபதி – தலைமை சிற்பியான ஜய என்பவரின் பெயரில் அந்த கோவில் அழைக்கப் பட்டது. நகர பாலனாக வினாயகர்  மேற்கு முகமாகவும், பீமஸ்வாமி கிழக்கிலும் அமைந்தனர்.  சத்பாவாஸ்ரயா -सद्भावाश्रया – என்ற பெயரில் தேவியும், ஸ்ரீ என்ற அடை மொழியுடன் ஐந்து ஐந்து தேவதைகள் ஸ்தாபிக்கப் பட்டனர்.

விதஸ்தாவின் மேல் ஒரு பாலம் கட்டுவித்தான்.  அதன் பின் தான் பாலங்கள், படகு வடிவில் கட்டப் படுவது அறிமுகம் ஆயிற்று.  ஜயேந்திரன் என்ற அரசனின் மாமன், ஸ்ரீ ஜயேந்த்ர விஹாரம் என்பதையும், பெரிய புத்தர் உருவத்தையும் பிரதிஷ்டை செய்தான்.  மோரகா என்ற ஸ்ரீ லங்கையை சேர்ந்த அரசன் தன் பங்காக உலக புகழ் பெற்ற மொரகபவனம் என்பதை கட்டிக் கொடுத்தான்.

பல புகழ் வாய்ந்த (36 லக்ஷம் வீடுகள்)  அந்த ஏரியைச் சுற்றி அமைந்தன. வர்தமான ஸ்வாமின் என்ற ஆலயத்திலிருந்து, விஸ்வகர்மன் என்ற ஆலயம் வரை அவை அமைந்தன.  விதஸ்தாவின்  தென் பகுதியில் ஒரு நகரம், அதன் கடைவீதிகள் முதலிய வசதிகளுடன் கட்டுவித்தான். ஸ்லோகம் -358

அந்த இடத்தில் வானளாவிய மாளிகைகள் கட்டப் பட்டன. பலவித வாகனங்கள்  வந்தன. மழை காலத்தில் நல்ல மழையும் பெய்து கோடையின் முடிவில் சித்திரை மாதம் மலர்கள் நிறைந்து பூமியை மறைத்து  அழகிய காட்சியாக காணப்பட்டன.  அது போன்ற புண்ய பூமி உலகில் வேறு எங்கு காண முடியும்?  அழகிய வசதியான சிந்து நதி தீரம்,  விளையாடும் இடங்கள், அகலமான வீதிகள்.  சில மக்கள் குன்றுகளில் விளையாடியும்,  ஊருக்குள் சில சமயமும் விளையாடி மகிழ்ந்தனர்.  செல்வத்தின் அதிபதியான ஸ்ரீதேவி மகிச்சியுடன் தேவலோகத்துக்கு இணையான அழகையும் வளத்தையும் இந்த பிரதேசத்துக்கு அளித்து விட்டாள்.

விதஸ்தா ஏரியின் நீர் பனித் துளிகளாலும் இயல்பான இனிப்புடன் கூடியதாக இருந்தது.  அதுவும் கடும் கோடையிலும் வீட்டு வாசலில் வேறு எந்த இடத்தில் இது போன்ற இனிப்பு ருசியுடைய குளிர்ந்த குடி நீர் கிடைக்கும்?  ஒவ்வொரு கோவிலும் இரண்டு மைல் தூரத்தில் இருந்தன.  அங்கு வழிபாடுகள் செய்ய அரசு ஏற்பாடுகள் செய்திருந்தன.   ஆயிரக் கணக்கான இடங்களில் விசாலமான மைதானகள் சாகரமோ, வானமோ எனும் அளவு பரந்து விரிந்திருந்தன.

அந்த நகரங்களில் வசித்தவர்கள் அரசன் தான் பெற்ற பிள்ளைகளைப் போல கவனமாக  பரிபாலித்த பிரஜைகள் மன நிறைவோடு அறுபது ஆண்டுகள் சுகமாக   பெரிய சாம்ராஜ்யத்தில் வாழ்வதே பெருமையாக வாழ்ந்தனர். தானே சிவபெருமானின் விபூதியும், நெற்றியில் ஸூல அடையாளமும் தரித்தவனாக அரசன் உண்மையில் பகவானே தானோ என்ற ஐயத்தை  கிளப்பி விட்டான்.   அந்த சமயம் முன்னொரு சமயம் எதிர்ப்பட்ட அஸ்வபாதன் என்ற சித்தன், ஈசானன் சிவ பெருமானின் கட்டளை என்று சொல்லி  ஜயந்தன் என்ற  காஸ்மீர தேச வாசியான அந்தணனை அரசனைக் காண ஒரு கடிதத்துடன் அனுப்பியிருந்தான்,  

வந்தவன் வழி நடையால் களைத்திருந்தான்.  ஊரின் செழிப்பை பாராட்டிய பின்,  வேறு எந்த தேசமும் இதைப் போல  அழகாக இருக்காது. அரசன் ப்ரவர சேனனிடம் இந்த செய்தியை தாங்கிய கடிதத்தை கொடுக்கச் சொல்லி எனக்கு உத்தரவு என்று அதைக் கொடுத்தான்.  அதைக் கொடுத்த பின்  மிகவும் களைத்து இருப்பதால் நான் உடனே திரும்ப முடியவில்லை  என்றான்.  அதனால் என்ன, நான் காபாலிகன் சிவ பக்தன்.  குளத்தில் குளித்து விட்டு வாருங்கள் என்று சொல்லி அனுப்பினான்.

வந்தவன் குளத்தில் இறங்கினான்.  குளத்தின் ஆழம் வரை அமிழ்ந்து சென்றவன்  வெகு நேரம் நீராடினான்.  தான் தன் தேசத்திற்கே திரும்பி வந்து விட்டதில் மகிழ்ந்தான்.   அடடா, கடிதத்தைக் கொடுக்கவில்லையே என நினைத்தவன் ஒரு நீர் இறைக்க வைத்திருந்த குடத்தில் அந்த கடிதத்தை போட்டு விட்டான். 

ப்ரவரசேன ராஜா, தன் தினசரி வழிபாடுகளைச் செய்ய முனைந்தவனாக நீராடி ப்ரவரேஸ்வர ஆலயம் சென்றவன் பகவானுக்கு அபிஷேகம் செய்ய  நீர் நிறைந்த குடத்தை எடுத்தவன், அதில் இருந்த கடிதத்தைக் கண்டான். ‘உன் கடமையை செவ்வனே செய்து விட்டாய். வாழ்க்கை வசதிகளையும் அனுபவித்து விட்டாய். இனி என்ன? சிவபெருமானின் சந்நிதிக்கு வா’  அரசன் மகிழ்ந்தான்.  தேகத்துடன் அவன் கைலாயம் செல்வதை வானத்தில் கண்ட மக்கள்  இரண்டாவது சூரியோதயம் போல இருந்ததாக வர்ணித்தனர்.

ஜயந்தன் பெயரில் அக்ரஹாரங்கள் கட்டப்பட்டன.   செல்வந்தனாகவும் ஆனான். மக்கள் பலகாலம் ப்ரவரேசவர அரசனின் நினைவில் பாடிக் கோண்டிருந்தனர். சிறந்த அரசன். பூதபதியின் பாதங்களை என்றடைந்து விட்டான்- மோக்ஷம் அடைந்து விட்டன் என்பது போன்ற பாடல்கள்.  அவன் சித்தியடைந்த ப்ரவரேஸ்வரர் கோவிலில் இன்றளவிலும் ஒரு வாசல் ஸ்வர்கத்வாரம் என்ற பெயரில் அவன் சென்ற வழியாக மதிக்கப் படுகிறது.     

ப்ரவரசேன – ரத்னப்ரபா தம்பதிகளின் யுதிஷ்டிரன் என்ற மகன்  பட்டத்துக்கு வந்தான்.   நாற்பது ஆண்டுகளுக்கு ஒன்பது மாதம் குறைவாக ஆண்டான்.  சர்வ ரத்னஜய, ஸ்கந்தகுப்த என்ற அரசர்கள் அதன் பின் வந்தனர். சிறந்த ஆலோசகர்களான மந்திரிகள் அமையவும் அவர்களும் பவச்சேத -भवच्द्छेद – என்ற கிராமத்தையும் தேவாலயங்கள், சைத்ய கிருஹங்கள் முதலியன அமைத்தனர்.  பல சித்திகள் பெற்ற ஜயந்தனுடைய மகன் வஜ்ரேந்திரன் என்பவன் மந்திரியாக இருந்தான்.  குமார ஸேனன் முதலிய மற்ற மந்திரிகளும் முதன்மை ஸ்தானத்தில் இருந்தனர்.

பத்மாவதி என்ற மற்றொரு மனைவியிடம் நரேந்த்ராதித்யன் என்பவன் லகானா என்றும் அழைக்கப் பட்டான்.  அவன் நரேந்திரஸ்வாமின் என்ற ஆலயத்தை நிறுவினான்.  அவன் பட்டத்து ராணி விமலப்ரபா.    வஜ்ரேந்திரனின் இரு மகன் களும் வஜ்ரன் , கனகன் என்ற பெயரில் மந்திரிகளாக இருந்தனர்.   தன்னுடைய அரசின் செயல்களையும், விவரங்களையும் வரிசைக் கிரமாக  எழுதி வைக்கும் வழக்கத்தை மேற்கோண்டான்.  அவைகள் பத்திரங்களாக records -பாதுகாக்கப் பட்டன. தன்னுடைய வாழ்நாள் பற்றியும் முன் கூட்டியே அறிந்தவனாக, இன்ன தேதியின் தன் முடிவு என்று எழுதி வைத்திருந்தான். அதன் படி அதே தினத்தில் வானுலகு எய்தினான்.     அவன் இளைய சகோதரன், ரணாதித்யன் அரசனான்.  அவனை மக்கள்  துஞ்சீனன் என்றும் அழைத்தனர்.  அவன் தலையில் சங்கு அடையாளம் இருந்ததை வியப்புடன் பார்த்தனர்.   நிலவின் மேல் பானு- ஸூரியனின் கிரணங்கள் விழுந்தது போல இருந்ததாம்.  பல போர்களில் வென்றான். அவன் வாளுக்கு இரையானவர்கள் பலர். அபூர்வமான ப்ரதாபம் உடையவன். இவன் பூமிக்கு வந்ததே பூ பாரத்தை குறைக்கவோ என்று அஞ்சினர்.  அவன் கையால் மாண்டவர்களின் மனைவிகள் கண்ணீருடன் விஷ்ணு பகவானின் செயல் தானே இது.  இது என்ன பயங்கரமான ரண- யுத்த ஆசை, எங்கள் கணவர்மாரை கபந்தங்களாக ஆக்குவதில் என்ன ஆசை என்று துக்கித்தனர்.  முன் பிறவியில் இவன் தான் அந்த சூதாட்டத்தில் தோற்றவனோ. அனைத்தையும் அதில் தொலைத்தவனோ. அதனால் தான் இந்த அளவு க்ருரமான குணத்துடன் பிறந்திருக்கிறான்.  அனைவரும் வெறுத்தாலும் பயந்து ஒதுங்கியே இருந்தனர்.

ஒரு சமயம் விந்த்யமலையின் தேவதையான ப்ரமரவாசினியை உபாசிக்கச் சென்றான்.  அந்த தேவி சுலபமாக தன்னை தரிசிக்க அனுமதிக்க மாட்டாள் என்பது பொதுவான பேச்சாக இருந்தது,  அதை சோதிக்கவோ என்னவோ, விந்த்யமலை சென்றான்.  வழி முழுவதும் குளவிகளும் தேனீகளும் கொட்டி தீர்த்தன.  ஒவ்வொன்றும் சங்கு புஷ்பம் அளவில் இருந்தன. இருந்தும் விடாமல் மலை மேல் ஏறினான்.  இன்னம் ஐந்து யோஜனை தூரமே என்ற நிலையில், இந்த குளவிகளின் தாக்குதலில் இருந்து தப்ப நினைத்தான். மனித யத்தினத்தில் முடியாது என்று உண்டா என்ன எண்ணியவனாக தன் உடலில் கவசமும் அதன் மேல் எருமைத் தோலையும் அணிந்து கொண்டு அதன் மேலும் பசுவின் சாணியை வைத்து  அடர்த்தியாக பூசிக்  கொண்டவனாக தொடர்ந்தான்.  நேரம் ஆக ஆக சாணியின் ஈரம் உலரவும், மேலும் பசும் சாணியைத் தேடி பூசிக் கொண்டான்.  அது போதாமல் களி மண் கலந்து அடுத்த பூச்சு என்று தொடர்ந்தான்.  இப்படி தன்னை நடமாடும் பூமி போல ஆக்கிக் கொண்டு தீர்மானமாக தன் லட்சியத்தை நோக்கிச் சென்றான். வழி தடுமாறி, இதுவரை  வந்த வழி தெரியாமல் ஒரு குகைக்குள் நுழைந்து விட்டான்.  ஒரே இருட்டு. கண்களை கட்டி விட்டாற் போன்ற நிலை.  அங்கும் குளவிகளின் ரீங்காரம், மரண ஓலம் போல கேட்டது.   களிமண் பூச்சினால் அவைகள் நெடு நேரம் தாக்கு பிடிக்காமல் ஒரு கூட்டம் விழுந்தால் அடுத்த இளைய குளவிகள் வந்து இதற்குள் பாதி உலர்ந்த்திருந்த களிமண்  பூச்சை சிதைத்து விட்டன.

அவைகளின் தாக்குதல்கள் ஒரு பக்கம் இருந்தாலும் சிரமப் பட்டு மூன்று யோஜனை தூரம் கடந்து விட்டிருந்தான்.  மண்ணும் சாணியும் உதிர்ந்து விழ, எருமைத் தோல் மேல் குளவிகள் கொட்டியதில் ரட் ரட் என்ற ஓசை வினோதமாக எழுந்தது.  கரடு முரடான ஓசை. சற்று நேரம் சென்ற பின் அந்த ஓசை இரும்பைத் தட்டுவதால் வருகிறது என்பதை அறிந்தான். அதாவது, எருமைத் தோலும் வழி விட அவை அவனது இரும்பு கவசத்தை பதம் பார்க்கின்றன. தாக்கு பிடிக்க முடியாமல் வேகம்
வேகமாக ஓடினான். கவசமும் கழண்டு விழுந்து விட்டது.  நாலரை யோஜனை தூரம் கடந்து விட்டிருந்தான்.  இன்னும் ஒரு பாதி யோஜனை தூரமே-  அந்த திட சித்தம் உடைய மனிதன் வேகமாக ஓடினான், கைகளாலேயே, விடாமல் பின் தொடர்ந்து துன்புறுத்திய மிகச் சிறிய உருவமேயானாலும் மனிதனால் எதிர்க்க முடியாத  பிறவிகளிடமிருந்து தன்னைக் காத்துக் கொண்டு  ஓடினான்.   கைகளால் கண்களை மட்டுமே பாதுகாக்க முடிந்தது. பயங்கர ஜந்துக்கள் குளவிகளும் மற்ற சிறு கொடுக்கு உடைய பூச்சிகளும் அவன் உடலை பதம் பார்த்தன. தோலுரிந்து எலும்பும் சதையுமாக தொங்க தேவியின் கோவிலை அடைந்தான்.  குளவி கூட்டத்தின் சத்தம் திடுமென மறையவும் அவன் கோவிலை நெருங்கி விட்டோம் என்பதை அறிந்தான்.   தேவியின் சந்நிதியில் தடாலென்று விழுந்தவன் மூர்ச்சையானான்.

தேவியின் கரங்கள் அவனை தடவிக் கொடுத்தன போல இருந்தது. தெய்வீகமான அந்த கை மேலே படவும் அதன் தண்மையில் மனமும் உடலும் குளிர்ந்தவனாக  அமுதமே உண்டவன் போல தன் உடல் பழையபடி ஆரோக்யமாக ஆனதைக் கண்டு கொண்டான்.  சுற்றும் முற்றும் பார்த்தான். தான் நுழைந்தவுடன் பார்த்த தேவி சிங்க வாகனத்தில் அமர்ந்திருந்த கோலத்தில் கண்கள் சிவந்து கோபத்துடன் விழிப்பது போல பயங்கரமாக இருந்தது  என்ற வரை  சந்தேகமே இல்லை. நன்றாக நினைவு வந்தது.  ஆனால் தற்சமயம் யாரும் இல்லை.  தேவியைக் காணவே முடியவில்லை. 412

சற்று தூரத்தில் ஒரு பெண் அழகிய தாமரை மலர் போன்ற கண்களும், கொடி வீடு போல இருந்த ஒன்றின் அருகில் நின்றிருந்தாள்.   அருகில் தமரைக் குளம் அதில் நீரை மறைத்து பூக்கள் பூத்திருந்தன. கழுத்தில் ஒரு முத்து மாலை அலங்கரிக்க, கண் கவர் வனப்பும் மரியாதையுடன் வணங்கத் தோன்றும் கம்பீரமுமாக ஆக இருந்தாள்.  செந்தாமரை இதழ் போன்ற நிறத்தில் பாதங்கள், பிம்பாதரங்கள் – பிம்பம் என்ற மலரின் இளம் சிவப்பு நிறம்- கரு கருவென கேசம்,  முழு நிலவைப் போன்ற வட்டமான முகம், சிங்கத்தைப் போல சிறுத்த இடை, கடவுளர் அனைவரும் இணைந்து கவனமாக செதுக்கிய சிலை போல இருந்தாள்.   

ரணாதித்யன் சற்று கவனமாகவே இருந்தான்.  ஆவலை அடக்கிக் கொண்டு பேசாமல் இருந்த இடத்திலேயே நின்றான்.  மனித பெண்ணா, தேவதையா? அப்சரஸ் என்ற வகை பெண்ணா?

கருணை மேலிட அவனை ஏறிட்டு பார்த்து,   சௌம்ய! சகே! வண்டுகளும், குளவிகளும் கொட்டி வெகுவாக சிரமப்பட்டு விட்டாய் அல்லவா?  சிரமபரிகாரம் செய்து கொள். பின் சொல். என்ன தேவை என்று பிரார்த்திக்க வந்தாய்?

உங்களைக் கண்டதுமே, என் உடல் சிரமங்கள் விலகி விட்டன.  யார் நீங்கள்? அந்த ஆலயத்து தேவி இல்லை. வரம் தருவதாக சொல்ல உங்களுக்கு என்ன தகுதி?

தேவி சொன்னாள். பத்ர!  ஏன் இந்த சந்தேகம்?  நான் பகவதியான தேவியோ, இல்லையோ, அதனால் உனக்கு என்ன?  நானும் வரமருள சக்தியுடையவளே.  அவனோ, தன் கட்டுப்பாட்டை இழந்தவனாக, அவளையே விரும்புவதாகச் சொன்னான்.  அவளோ, துர்புத்தே! இது என்ன அத்து மீறல்? யார் நீ? என்ன தைரியத்தில் இப்படி பேசுகிறாய்?  நீ தேடி வந்தாயே, வேண்டிக் கொள்ள அந்த ப்ரமர வாசினியே நான். மரியாதையாக பேசு.

ஆசை, வெட்கம் அறியாதது தான், ஆனாலும் சுட்டிக் காட்டிய  பின்னும்  தன்னை மாற்றிக் கொள்ளாத அசட்டு பிடிவாதம்.  முன் வினையின் தீய செயல்களின் தொடர்பை வாசனா  என்பர். அதன் செயல் தான் ஒருவனின் குணத்தை நிர்ணயிக்கிறது. அதே பிடிவாதம், அதே முரட்டுத் தனமாக வெறியுடன், நீ தேவி ப்ரமர வாசினியானால், இது ஒன்றைத் தான் நான் யாசிக்கிறேன். வேறு எதுவும் தேவையில்லை. நீ தேவதையா, சாதாரண பெண்ணா எனக்கு பொருட்டல்ல. அழகிய பெண் என் கண்ணில் பட்டாய் அவ்வளவே நான் காண்பது.  நீதான் வாக்கு கொடுத்தாய். அதை நிறைவேற்று. வேறு எதுவும் தேவையில்லை.  உண்மையில் நீ அழகியா, அரக்கியா என்பதைக் கூட நான் தெரிந்து கொள்ள முயலவில்லை. என் கண் முன் தென்பட்ட உருவம்,  அதைத்தான் அடைவேன்.

அவனது தீர்மானமான பதிலைக் கேட்டு தேவி சொன்னாள், அப்படியானால் அது அடுத்த பிறவியில் தான் நிகழ முடியும். இயற்கை நியதிகள் ஒரு பக்கம், மனித தன்மையில்லாத செயல்களின் பலன் கள் ஒரு பக்கம் – உன்னை ஸூழ்ந்து நிற்கின்றன.  முதலில் மனதை சாந்தப் படுத்திக் கொண்டு சத்யத்தை அறிவாய் என்றபடி அந்த உருவம் மறைந்து விட்டது.

என் பிறவி அதற்கு தகுந்ததாக இருக்கவேண்டுமே என்ற கவலையுடன், பிரயாகை சென்று அரச மரத்தின் கிளையில் இருந்து விழுந்து உயிரை விட்டான்.

ரணாதித்யன் அடுத்த பிறவியில் இந்த நிகழ்ச்சிகளை முற்றிலும் மறந்து விட்டிருந்தான். ரணரம்பாவாக வாக தேவியும் பூமிக்கு வந்தாள்.  ரதி சேனா என்ற சோழ தேச அரசன், சமுத்திர கரையில் சந்த்யாவந்தனம் செய்து கொண்டிருந்த பொழுது பள பளக்கும் ரத்தினம் போல ஜொலித்துக் கொண்டிருந்த ஒரு பொருளைக் கண்டான். அருகில் வரவும் அது ஒரு பெண் குழந்தை என்று அறிந்து அளவில்லா மகிச்சியுடன், வளர்க்கலானான்.  வளர வளர, அவள் சாதாரண பெண்ணல்ல என்று தெரிய வந்தது. அவளுக்கு ஏற்ற மணமகனை தேட முயன்றான். எந்த அரச குமாரனும் அவளுக்கு ஈடு இல்லை என்று ஒதுக்கி விட்டான்.

ரணாதித்யாவும் பெண் கேட்டு வந்தான். அரசன் மறுத்த போதிலும் ரண ரம்பா தானே அதை ஏற்பதாக தந்தையிடம் சொன்னாள். மேலும் தான் யார் என்பதையும், பிறந்த காரணத்தையும் சொல்லவும், அவளை தன் நண்பனான குலுதன் என்ற தேச அரசனிடம் அனுப்பி விட்டான்.  ரணாதித்யன் தானே அந்த தேசம் சென்றான்.  திருமணமும் நடந்தது.  ஆனால் அவனால் சகஜமாக அவளை நெருங்க முடியவில்லை. அவளுடைய தெய்வீகத் தன்மையை உணர்ந்த பின்னும் சாதாரண மானிடனாக நடந்து கொள்ள தைரியம் வரவில்லை. பட்டத்து அரசியாக அமர்ந்தாள். ஆனால் மனதளவில் தள்ளியே இருந்தாள்.  இரவானால் ஒரு மாய உருவை வைத்து விட்டு  வண்டாக மாறி பறந்து விடுவாள். 

சிவ பக்தனாக ஆன ரணாதித்யன் இரண்டு சிவன் கோவில்களைக் கட்டுவித்தான்.  பெரிய சிற்பங்களை சிற்பிகள் அமைத்துக் கொடுத்தனர்.  சிலைகளை முறையாக கோவிலில் நிறுவும் சமயம் வெளி  நாட்டிலிருந்து வந்த ஒரு அறிஞர்- வரும் காலம் அறிந்து சொல்பவர்,  இரண்டு லிங்கமுமே குறையுடையது என்று மறுத்து விட்டார்.  கற்களின் இடையில் வாழும் தேரை – தவளை இன ஜந்து- சிலைகளின் உள்ளே உள்ளன என்றார்.

அவர் ஒரு புராண கதையைச் சொன்னார்.  படைப்புக் கடவுளான ப்ரும்மா ஒரு சமயம் பூஜைகள் செய்து கொண்டிருந்தார். அவரிடம் இருந்த மகாவிஷ்ணு, பரசிவன் விக்கிரஹங்களை ராவணன் அபகரித்துச் சென்று விட்டான். தான் உயிருடன் இருந்தவரை இலங்கையில் பூஜித்து வந்தான். அவனுக்குப் பின் அந்த உருவங்கள், வானரங்கள் கைக்கு சென்று விட்டன.  அவைகளும் அந்த உருவங்களுடன் இமய மலைக்குச் சென்றனர். கைக்கு கிடைத்த சமயம் அதன் மேல் இருந்த பற்றுதல் குறையவும், அவைகளை உத்தர மானசா – என்ற இடத்தில் பிரதிஷ்டை செய்து விட்டு சென்று விட்டன.  அந்த ஹரி- ஹர என்ற இருவரின் உருவங்களையும் கொண்டு வந்தால் தான் இங்கு இந்த கோவில் நிறைவு பெறும் எனவும்,  ரண ரம்பா சில சித்தர்களின் உதவியுடன் அந்த உருவங்களை உத்தர மானஸ என்ற இடத்திலிருந்து தருவித்து விட்டாள்.  கடல் நீரில் அவை இருப்பதாக அரசனிடம் சொல்லி தேடச் செய்தாள். அதன் பின் கடலில் இருந்து மீட்டு ஹர-ஹரி என்ற உருவங்கள் நிறுவப் பட்டு கோலாகலமாக பூஜைகள் செய்தனர். ரணேஸ்வர- ரணஸ்வாமின் என்ற பெயருடன் கோவிலின் உள் கர்ப்ப கிரஹத்தில் நிறுவப்பட்டன. 459

தேவி, தன்னிடம் ஈடுபாடு கொண்ட ரணாதித்யனுக்கு ஹாடகேஸ்வரம் என்ற மந்த்ர உபதேசம் செய்து பாதாள சித்தி என்பதை பெறச் செய்தாள்.  இனி என் மேல் இருந்த மோகம் அவனை பாதிக்காது என்றாள்.  பல ஆண்டுகள் திறமையாக ஆண்ட பின் நந்தி சிலா என்ற இத்தில் சாதனைகள் செய்து பல சித்திகளை அடைந்தவனாக சந்திர பாகா என்ற நதியின் பிரவாகத்தில் இருந்த நமுசி பிலம் – நமுசி என்பவனின் குகை – அதில் நுழைந்து விட்டான். இருபத்து ஒன்று தினங்கள் ஆன பின்னும் திரும்பாததால்,  ஊர் மக்கள் தேடிச் சென்றனர். அங்கு தைத்ய – அரக்கர் குல பெண்ணுடன் வாழ்ந்து கொண்டிருந்தவனைக் கண்டனர்.  பாதாள ஐஸ்வர்யம் பெற்றவனாக பல காலம் வாழ்ந்து அந்த குலத்தில் மனம் ஒன்றி இருப்பதை அறிந்த பின் தேவி ப்ரமர வாசினி ஸ்வேத த்வீபம் என்ற இடம் சென்று விட்டாள்.

பல அரசரகளின் சரித்திரம் சொல்லப் பட்டாலும், இரு பரம்பரை மக்கள் மனதில் நிலைத்து நிற்கின்றன. ஒன்று கோ நந்தன் வம்சத்து ரணாதித்யன், மற்றது ரகு வம்சத்து ஸ்ரீ ராமன். என்று கவி சொல்கிறார்.

உலகம் பராக்ரமத்தை போற்றுகிறது. விக்ரமேஸ்வரக்ருத் என்பவரின் மகன் விக்ரமாதித்யா என்ற மகன் மூவுலகிலும் போற்றப்படும் வீரனாக, தீரனாக மதிக்கப் பட்டான்.  அடுத்து அரசனாக ஆனபின்  விக்ரமாதித்யா என்ற புகழ் பெற்றான். அந்த அரசன் பல கோவில்கள் கட்டுவித்தான். இரண்டு மந்திரிகள் இந்திரனுக்கு அமைந்தது போல அமைந்தனர். ப்ரஹ்மன் என்பவன் ஒரு சிறந்த பாடசாலையையும், (பிரும்ம மடம்) கலூனா  गलून -என்பவன்  இயல்பாகவே நற்குணங்கள் மிக்கவனாக இருந்தான். கொடியவர்களை அழித்து மனைவி ரத்னாவளியின் பெயரில் விஹாரங்களையும் அமைத்தனர்.   அதில் புத்தருடைய உருவங்கள் நிறுவப்பட்டன.  ஆரோக்ய சாலா என்பவைகள் உடல் நலம் குன்றியவர்களுக்காக வைத்ய சேவைகளைச் செய்ய நிறுவப் பட்டன.  சிம்ஹரோத்சிகா என்ற கிராமத்தில் மார்தாண்டம் – ஸுரியனுக்கான கோவிலை நிர்மாணித்தான். அம்ருத ப்ரபா என்ற அரசனின் மற்றொரு மனைவி அம்ருதேஸ்வர் என்ற பெயரில் தென் திசையில் ரணேஸ்வர கோவிலுக்கு அருகிலேயே கட்டுவித்தாள்.

அடுத்து அவன் இளைய சகோதரன் பாலாதித்யா என்பவன் பட்டத்துக்கு வந்தான்.  உப்பை தின்றவன் தாகம் வாட்ட, நீருக்கு அலைவது போல அவன் போர்க்களத்தை விரும்பினான்.   தன் உடல் பலத்தில் அசாத்ய நம்பிக்கை கொண்டவன்.  தானே தேடிச் சென்று பல அரசர்களை வென்றான். ஆங்காங்கு ஜயஸ்தம்பம் நட்டுவித்தான். அவை இன்றளவும் கிழக்கு கடற்கரை பிரதேசங்களில் காணப் படுகின்றன.  வங்காளத்தை வெற்றி கொண்டு காஸ்மீரிகள் வாழ காலாம்பி என்ற வாழுமிடம்,  அது தவிர காஸ்மீர அந்தணர்களுக்காக தனோதக்ரம் धनोदग्रमग्रहारम्-  என்ற அவர்கள் வசிக்க இடங்கள் கட்டுவித்தான்.

காஸ்மீரத்தின்  மடவராஜ்யத்தில் அரசன் (मडव राज्यम्)  என்ற இடத்தில் பேட- भेडरा – என்ற அந்த இடத்தைசெல்வம் கொழிக்கச் செய்தான். பல விதமான நிலையான வருமானம் தரும் திட்டங்களால் அங்கு செல்வம் குறையாமல் இருந்தது.

அவன் மனவி பிம்பா என்பவள், சிவந்த பிம்ப  பழம் போன்றே உதடுகள் உடையவள்- பிம்பேஸ்வர் அரிஷ்டோசமன – பொது மக்களின் தீவினையை போக்கும் விதமான அமைப்பை உடையதாக இருந்ததாம்.  உடன் பிறந்த மூவர், கங்க,சத்ருக்ன, மாளவ  என்பவர்களே மந்திரிகளாக இருந்தனர்.  இந்த மூவரும் முறையே, மடங்கள், ஆலயங்கள், பாலங்கள் இவைகளை பொறுப்புடன் கட்டுவித்தனர்.  அந்த அரசனுக்கு உலக அழகியாக எண்ணத் தகுந்த அழகிய பெண் மகவும் இருந்தாள். அங்கலேகா என்ற பெயருடன், கண்டவர் மயங்கும்படியான வனப்பும், மென்மையான அங்க லாவண்யமும் உடையவளாக இருந்தாள்.

ஒரு சமயம் தந்தையுடன் அமர்ந்திருந்தவளைப் பார்த்து அரசவைக்கு வந்திருந்த ஒரு ஆரூடம் சொல்பவர், உன் மருமகன் உனக்குப் பின் அரசனாவான். கோ நந்த வம்சம் உன்னுடன் முடியும் என்றார். பெண் வழியில் ராஜ்யம் போவதாவது. தெய்வம் புருஷகாரேண – விதியை மதியால் வெல்வேன் என்றான்.  தெய்வம் அனுகூலமாக இல்லாவிட்டால் என்ன, என் புஜ பலத்தால் ஜயிப்பேன் என்று ஸூளுரைத்து, மகளுக்கு அரச பரம்பரையில் இருந்து பெண் கேட்டு வந்தவர்களை தவிர்த்தான்.  என் மகளின் அழகுக்கு சமமான உருவ அழகும், ஆரோக்யமும் உள்ள  மனிதனாக தேடுகிறேன் என்றான்.   அவன்  பார்வையில்  குதிரைகளை பாலிக்கும் அரச சேவகன் ஏற்றவனாக தெரிந்தான்.  அரச சம்பந்தம் இருந்தால் கூட ஒருநாள், தனக்கு போட்டியாக வருவான் என நினைத்து, க்ஷத்திரிய குலமே இல்லாத, ஒருவனை மருமகனாக தேர்ந்தெடுத்தான்.  சிற்றரசனாக இருந்தால் கூட ஒரு நாள் ராஜ பதவிக்கு வருவான் என்பதால் காயஸ்தன் என்ற வைஸ்ய குலத்தில் கொடுத்தான்.  ஆனால், துர்லபவர்தனன் என்ற பெயருடைய  அவனோ, தாய் வழியில் கார்கோடக நாகம் ஆசீர்வதித்து அவன் ராஜ பதவிக்கு வர  வேண்டும் என்றே திட்டமிட்டு வளர்க்கப் பட்டவன்  என்பது இந்த அரசனுக்கு தெரிந்திருக்கவில்லை.  அரசனாக வர  இவனுக்கு தகுதியில்லை என்ற ஒரே காரணத்தால் தேர்ந்தெடுக்கப் பட்டவனை உண்மையில் அரச பதவிக்கு வரச் செய்யவே தெய்வ சங்கல்பம் இருந்தது போலும்.

பொறாமையால் ஸூரியனுக்கு சமமாக இருக்க கூடாது என்று நினைத்து அக்னியை புகை மூட்டத்தில் இருக்கச் செய்த விதாதா – ப்ரும்மாவே, சிறு விளக்கில் விளங்கும் ஒளியை சாந்தமாக இருப்பதால் பூமியில் உள்ளவர்கள் அதிகமாக மதிப்பதைக் கண்டு திகைத்திருப்பார்.  அதனால் ப்ரும்மாவே அவமானத்துக்கும் பரிகாசத்துக்கும் ஆளானார் என்று ஒரு புராண கதை உண்டு.  பின்னால் சிகீ – அதன் ஜுவாலை அதிகமாக நல்ல பெயர் பெற்றது.   கோடையின் கடும் தாபத்திற்குப் பின் தீபமும் சாந்தமாக எரியும் தீபம் அதிகமாக விரும்பப்படுகிறது. இயல்பான குணத்தாலும், கூர்மையான அறிவினாலும் துர்லபவர்தனன் நியாயமாகவும், பணிவாகவும் இருந்ததால் மக்களின் கண்களில் அவன் ராஜ ராஜாவாக ஏற்றவனாகவே தெரிந்தான்.  அவனுடைய மேலான அறிவைக் கண்டு ப்ரக்ஞாதித்யன் என்றே பெயர் பெற்றான். (ப்ரக்ஞா- சுயமான அறிவு.)  குபேரனுக்கு சம மான செல்வம் மாமனாரிடம் பெற்றான்.

ஆயினும், அளவுக்கு அதிகமாக பாராட்டி வளர்த்த மகள் அவனிடம் உண்மையாக இல்லை.  கூடா நட்பு, அரண்மனையில் அண்டியிருந்த சில பெண்கள் தவறான வழியைக் காட்டினர்.  பல யுவ யுவதிகள் கூடும் இடங்களில் அவள் தன் கணவனை அவர்களுடன் ஒப்பிட்டு, வெறும் பகட்டில் மயங்கினாள்.  பேரழகியான  இளம் அரச குமாரி, சாதாரண பிரஜையான தனக்கு கிடைக்கப் பெற்றவன், தன் திறமையைத் தவிர பின் பலமாக பொருள் பலமோ, பதவி பலமோ இல்லாதவன் அவளிடம் கடுமையாகவா இருப்பான். அந்த பணிவே அவளுக்கு பிடிக்காமல் போயிற்று.  கங்க என்ற மந்திரி அதை பயன் படுத்திக் கொண்டான்.

அவள் எதிரிலேயே அதிகமாக இருந்தான். அவளுக்கு பிடித்த செயல்களையே செய்து தன்னை அவள் முற்றிலும் நம்பும் படி செய்து கொண்டான்.  மெள்ள மெள்ள தயக்கம் விலக, தன்னிலை மறந்து அவன் கைபாவையானாள்.  எதுவும் தவறாகவே தோண்றாத அளவு அவள் மனதை தன் பால் கொண்டு வந்து விட்ட கங்க மந்திரியின் துர்போதனைகளை மதித்தாள்.  அதற்கு ஏற்றார் போல அந்த:புர பணியாளர்களுக்கு கையூட்டு கொடுத்தும், தன் அதிகாரத்தால், தான் எந்த சமயமும்  அந்த:புரத்தில் அவள் தனியறையில் இருக்கலானான்.

தன் வயதொத்த பெண்களிடம் சிரித்து பேசியும் தன் பண்பும் பெருந்தன்மையும் தெரிய பேசியவள் கணவனிடம் அலட்சியமாகவும், மரியாதையின்றியும் இருக்கலானாள். இந்த இரட்டை வேடம் புரியாமல், அல்லது புரிந்தும் எதுவும் செய்ய இயலாதவனாக, ப்ரக்ஞாதித்யா தவித்தான்.  தவறு செய்கிறாள், தன்னிடம் உண்மையாக இல்லை என்பதே கவலையாக அவனது உடல் நிலையை பாதித்தது.  ஒரு நாள் நள்ளிரவில் அவளுடைய தனி அறைக்குச் சென்றான்.  மாற்றானுடன் கூடி களைத்திருந்தவளைக் கண்டு பொங்கி வந்த கோபத்தால் அவளைத் தண்டிக்கவே நினைத்தான். ஓங்கிய வாளை தாழ்த்தி, திரும்பவும் தூக்கி அழிக்கவே நினைத்தவனின் உள் மனது அறிவுறுத்தியது போலும். அவனுடைய இயல்பான நற்குணம் அவளை தண்டிக்காமல், கோபம் தணிய அவளை ஏன் குறை சொல்ல வேண்டும், செல்வத்திலேயே வளர்ந்து, உலகியலை அறியாமல்  தான் தோன்றியாக இருக்கிறாள். அனைவருமா உலகில் மனக் கட்டுப்படும், நியாய உணர்வோடும் இருக்கிறார்கள். எளிய பெண், சிலருடைய அருகாமை அவளிடம் இந்த மாற்றத்தை கொடுத்து விட்டது என்று யோசித்தவன், வேகமாக வெளியேறினான்.

வணக்கத்துக்குரிய உயர்ந்த மனிதன். கண் எதிரில் கண்டபின்னும்   அவனால் யோசிக்க முடிந்திருக்கிறது. அழகிய கண்களுடையவள் என் மனைவி என்ற பெருமை  கொண்டவனை இதை விட அதிகமாகவா அவமானப் படுத்த முடியும்.

ப்ராக்ஞாதித்யா யோசித்தான்.  எனக்கு துரோகம் என்று ஏன் நினைக்கிறேன்.  அவ்வளவு தானா என அன்பும், இதை துரோகம் என்று அவளை கொல்வதால், எனக்கு என்ன நன்மை.  அன்பு என்பதே ஒரு மரம் அதன் வேர்கள் ஆழமாக பூமியில் மட்டுமல்ல, பாதாளம் ஏழிலும் வேரூன்றியதாக இருக்க வேண்டும். காலத்தால் அழியக் கூடாத பேரன்பு அது.  துவேஷம் -பொறாமையை விலக்காமல் அதை எப்படி பூரணமாக வெளிப்படுத்துவது?  மரத்துக்கு மண் போல ஓரளவு பொறாமையும் அன்பை வளர்க்கவே தேவை. ஆயினும் இதை விடக் கூடாது. தண்டனை கொடுப்பதும் மிக அவசியம். கங்கனுடைய மேலாடையில் எழுதினான். “நினைவிருக்கட்டும்.  உன் செயலுக்கு உரிய மரண தண்டனை காத்திருக்கிறது”

யாருமறியாமல் வெளியேறி விட்டான். விழித்தவுடன் தன் மேலாடையில் இருந்த வாசகத்தை படித்த கங்கன் நடுங்கி விட்டான்.  அனங்கலேகா பக்கம் திரும்பிக் கூட பார்க்காமல் நகர்ந்தான்.  உயிர் மேல் இருந்த பற்று, அத்துடன் இப்படி கூட ஒரு மனிதன் நல்ல குணவானாக இருக்கையில் நான் எங்கே. அதன் பின் தன் விபரீத செயல்களை நினைக்கவும் பயந்து விலகினான்.

பாலாதித்யா முப்பத்தேழு ஆண்டுகள் நல்லாட்சி செய்த பின் மறைந்தான். அவனுடன் கோ நந்த வம்சமும் முடிந்தது.  கங்கன் அரசனுக்கு இறுதி மரியாதைகளைச் செய்தான். அதன் பின் மருமகன் தங்க குடங்களில் கொண்டு வரப் பட்ட பல தீர்த்தங்களாலும்  பேரரசனாக முடி சூட்டப் பட்டான்.

அவன் பிறந்து வளர காரணமாக இருந்த கார்கோடகன் வம்சம்,  ஆதி சேஷனின் ஆசியுடன் கங்கை நதி ஆகாய கங்கையாக இருந்து, பூமிக்கு வந்து பல இடங்களிலும் பாய்ந்து ஓடி கடலில் கலந்து உயிரினங்கள் வாழ பூமியை செழிப்பாக்குவது போலவே அந்த பரம்பரை நெடு நாள் இருந்தது.

(இது வரை ஸ்ரீ காஸ்மீரம்தேசத்து மகா மந்திரியான சம்பக  ப்ரபுவின் மகன் கல்ஹணன் எழுதிய ராஜ தரங்கினீ என்ற நூலின் மூன்றாம் பாகம்- மூன்றாவது அலை நிறைவுற்றது)

ராஜ தரங்கிணி

ராஜ தரங்கினி என்ற பெயரின் பொருள்-  கடற் கரையில் நின்று அலைகளைக் கண்டு ரசித்திருக்கிறோம். நடுக் கடலில் இருந்து ப்ரும்மாண்டமாக, ஓவென்ற இரைச்சலுடன் வரும் பெரிய அலைகள், மெள்ள மெள்ள கரை தட்டும் வரை வந்து,வேகம் குறைந்து கடைசியில் காணாமல் போவதை அலுக்காமல் நெடு நேரம் நின்று ரசித்திருக்கிறோம். வந்த அலை என்ன ஆனது? திரும்ப வந்த இடத்திற்கு போகவில்லை. கரை தட்டியபின் திரும்புவது போல தோற்றம். ஆனால் அத்துடன் அதன் இருப்பே இருப்பதில்லை.   அதே போல பெரிய சாம்ராஜ்ஜியங்கள், அரச குலங்கள்,  பெயரும் புகழும் வாய்ந்தவை, சில நன்மையெ செய்தன, சில அக்கிரமமாக ஆட்சி செய்து தன் பிரஜைகளை துன்புறுத்தின.  ஒரு சில தன் பிரஜைகளுக்கு நன்மையும் எதிரிகளுக்கு துன்பமும் விளைவித்தன. – அனைத்தும் காலமாகிய கரையில் ஒதுங்கிய பின் அதன் நிலை என்ன?   சிறிய பெரிய ராஜ்யங்கள் எதுவானாலும்  தங்கள் காலம் வரையே நினைக்கப்பட்டன.  அவ்வாறே பிரவஹிக்கும் நதியின் அலையை ஒத்த அரசர்களின் வரிசை.   நதி தன் மூல உத்பத்தி ஸ்தானத்திலிருந்து விலகி பல இடங்களையும் கடந்து செல்லும். வழியில் பலவிதமான நிலங்கள், மலைகள், சமவெளிகள், ஒவ்வொரு இடத்திலும் பெயர் வேறு பட்டாலும் , பொதுவான அந்த நதியின் பெயர் நிலைத்து நிற்கும். காவிரியின் கிளை நதி, அல்லது கங்கையின் கிளை நதி என்று பெயர் வருவது போல ஒவ்வொரு கால கட்டத்திலும் புதிதாக தோன்றும் ஒரு ராஜ வம்சம் ஒரு அலை மாத்திரமே.  மனித சமூகத்தில் ஆளும் வர்கம் ராஜ என்ற அடைமொழியுடன் சொல்லப் படுவதால் வந்த பெயர்.  மனித வரலாற்றில் நிலைத்து நின்ற சில அரசர்கள் ஏதோ ஒரு சிறப்பான செயலைச் செய்து பொது மக்களுக்கு நினைவில் நிற்பவர்கள்.  அவர்களை வரிசைப் படுத்தி எழுதிய வரலாற்று  சிறப்பு மிக்க காவியம் ராஜ தரங்கிணி.  . 

 முதல் தரங்கம்: முதல் அலை

கல்பம் என்பது ஒரு கால அளவு. மிக அதிகமான காலம் அல்லது பொதுவாக நிரந்தரம் என்பதைக் குறிக்கும்.  கல்ப தரு – வேண்டியதைக் கொடுக்கும் ஒரு மரம். கல்ப தரு போல வழங்கக் கூடிய குணம் படைத்த ஸ்ரீ ஹரனுக்கு வணக்கம் தெரிவிக்கிறார் கவி. போகி என்ற பாம்புகளே அவருக்கு பூஷணம்  அலங்காரம்.  அதன் தலையில் உள்ள மணிகளே விளக்குகள். முக்தி அளிக்கும் அந்த ஸ்ரீ ஹரனுக்கு நமஸ்காரம்.

அக்னியால் சூழப் பட்ட விரிசடை, .  காதுகளில் குண்டலங்கள் ஒளி வீசி இருக்க, சமுத்திரத்தில் தோன்றிய -விஷம்- கழுத்தில் நிழல் போல தெரிய, அர்த்த நாரீஸ்வரனாக, மான் தோல் உடுத்து உள்ள தேவனின் புகழை வளர்க்கும் விதமாக தக்ஷிணா- வலது பக்கமும், வாம இடது பாகத்தில் தேவியுமாக எங்களுக்கு அருள் புரியட்டும். மற்றொரு பொருள்- வாம- இடது பாகத்தில் உறைபவள் , அவளே தக்ஷிணா- கருணையுள்ளவளாக இருக்கிறாள். .

யாரானாலும்  வணங்கத் தக்கவர்களே. நல்ல கவியின் படைப்பு அமுத துளிகள் போல குணம் உடையதாக அமைய வேண்டும்.  அதன் மூலம் கவி பெறுவது புகழுடம்பு – தனக்கும் மற்றவர்களுக்கும் இடையே நிரந்தரமான பிணைப்பு. வேறு எவர் தான் காலத்தை வென்றவர்? கவி தனது படைப்பினால் காலத்தை வென்று விடுகிறான்.  நடந்ததைக் கண் முன் காட்டுவது போல அவன் காவியத்தை படிப்பவர் உணர்ந்து ரசிக்கிறார்கள் என்பதே அவன் பெரும் பயன்.

பிரஜாபதி என்ற ப்ரும்மாவுக்கு சமமானவன் கவி. ஏனெனில் அவனும் அழகிய படைத்தல் தொழிலைச் செய்கிறான். உலகில் உள்ள அனைத்து  அனுபவங்களையும், உணர்வுகளையும்  தன் எழுத்தில் கொண்டு வந்து விடுகிறான் அல்லவா? அவன் தானே இவைகளை உணர்ந்து அனுபவித்திராவிட்டால், எப்படி எழுதுவான். அது தான் அவனுக்கு திவ்ய த்ருஷ்டி- தெய்வீகமான கண் பார்வை உள்ளது என்பர்.  அவனுக்கு மனதில் ஒரு கண், அறிவுக் கண்  திறந்து கொள்கிறதோ.

நீளமான கதை, அதை ரசிக்கும் படியாகவும் செய்ய வேண்டும்.  படிப்பவர்கள் விரும்பி படிக்கும் படி அழகிய சொற்களும், செய்திகளும் தர வேண்டும்.   ரசிக பெரு மக்கள் விரும்பியபடி என் எழுத்திலும் வஸ்து- கதா வஸ்து அமைய அருள் புரிய வேண்டும். கதா வஸ்து- ரசிக்கும் படியான ஒரு கருத்து.

எதை ரசிப்பார்கள்? குணவானான நாயகன். ராக துவேஷம் என்ற சபலங்கள் இல்லாதவன்.  அப்படி ஒரு கதா நாயகனை சொல்ல ஆரம்பித்துள்ள எனக்கு தேவி சரஸ்வதி சதா வழி காட்டி யாக விளங்க வேண்டும்.

இந்த கதை புதிதல்ல. எனக்கு முன் சிலர் எழுதியோ சொல்லியோ பிரபலமானவையே.  எதற்காக அதையே மறுபடியும் சொல்ல வேணும் என்றால், எந்த பலனையும் உத்தேசித்து அல்ல – இதை மட்டும் வைத்து அறிவுடையோர் இதை மறுக்க கூடாது.  அரசர்களின் அருகில் இருந்து கண்டவர்கள் பலர்.  ஒரு சில அரசர்கள் தங்கள் ஆட்சியில் செய்த நன்மைகள் பல காலமாக அவரை நினைவு படுத்துவதாக அமைந்து விடுவது உண்டு.  காவியம் எழுதுபவர்களுக்கு அவை விஷய தானம் செய்கின்றன.  அதனால் ஏதோ பழம் கதை என்று தள்ள வேண்டாம்.  கடந்த காலத்தில் நடந்த செயல்களின் வர்ணனை என்றாலும் என் முயற்சி காவியத்தின் அமைப்பிலும் அழகிலுமே ஈடுபட்டுள்ளது.  விட்டுப் போன விவரங்களை சொல்வதாக எடுத்துக் கொள்ள வேண்டுகிறேன்..

முதல் பகுதியில் நான் சுருக்கமாக  எனக்கு முன்னோடிகளான கவிகளை குறிப்பிடுகிறேன்.  சுவிரதன் என்பவரின் காவியம் இன்றளவும் வாய் மொழியாகவே பரவியுள்ளது.  அவர் தான் அரசர்களின் கதை என்பதை முதன் முதலில் வெளிப்படுத்தினார்.  அவருடைய பாடல்களில் நாளடைவில் கலப்படங்கள், பிற்சேர்க்கைகள் வந்து விட்டன.  அடுத்து க்ஷேமேந்திரன் என்பவரின்  அரசர்களின் வம்சங்கள் பற்றிய குறிப்புகள். இது பிரபலமானாலும் தோஷம் இல்லை  என உறுதியாக சொல்ல முடியவில்லை.  புர்வசூரி என்பவரின் நூல் நேரில் கண்டதைச் சொல்வதாக உள்ளது.  ராஜ கதை என்ற முன் சொன்ன சுவ்ரதன் என்பவரை அனுசரித்து எழுதப் பட்டுள்ளது.

நீலமுனி என்பவரின் நூல், எனக்கு அனுகூலமாக தெரிகிறது.  இவர் நேரில் கண்டதையும், முன் இருந்த அரச சாஸனங்களில் இருந்தும்,  ஆங்காங்கு கிடைத்த பட்டயங்கள் – அரச ஆவணங்கள் – இவைகளில் இருந்தும், சாஸ்திரங்களை அனுசரித்தும், சாந்தமான உபதேசங்களுடனும்  தங்கு தடையின்றி ஒரே பிரவாகமாக தன் கருத்தை சொல்லி இருக்கிறார்.  இது  பதினொன்றாவது அலை வரை.

பன்னிரண்டாவது வேத சாஸ்திரங்களை மதிக்காமல் அல்லது அதிலிருந்து விலகி வந்த  நமது  பாரத தேசத்து அரசர்கள், அவர்களுக்குப் பின்  நீல முனியின் மதத்தை அனுசரித்து கோ நந்தன் முதலான நால்வர் வந்தனர்.  . அவர்கள் இயற்றிய ஆயிரக் கணக்கான நூல்கள், அரச வம்சாவளி- அரச குலத் தோன்றல்கள்,  ப்ராங்க் மஹா வ்ரதி என்ற நூல் ஹேலா ராஜன் என்ற அந்தணரால் எழுதப் பட்டது.  அவருடைய கருத்தை        பத்ம மிஹரோ என்பவர் பார்த்து அசோகர் என்ற அரசரின் முந்தைய எட்டு லவன் முதலிய அரசர்களின் சரித்திரத்தை தன் நூலில் விளக்கி இருக்கிறார். 11/398.  

பாண்டவர்களின் அபிமன்யுவிலிருந்து அசோகர் வரை ஐந்து சக்ரவர்த்திகள் இருந்திருக்கிறார்கள் என்பர்.  அவர்களில் ஐம்பத்திரண்டாவது தலை முறையில் இருந்து தான் நமக்கு விவரங்கள் கிடைத்துள்ளன.  அதுவும் அரசர்களின் உல்லாசமான வாழ்வு, அவர்களின் தாழ்வுகள் இவைகளை சம்பாஷனைகளாக – நாடகங்களாக ,  சிறு கதைகளாக நாட்டு பாடல்களாக கிடைக்கின்றன.  இவைகளின் நம்பகத் தன்மையை , உறுதியாக எப்படி சொல்வது?  பலர் தங்கள்  அனுபவம், கேள்விகளால் மாற்றியிருக்கலாம்,  சந்தர்பங்கள், கால கணக்குகள்  கவிகளின் மனதுக்கு ஏற்பதாக இல்லை.  நிரந்தரமில்லாத மனித வாழ்வில்,  தாங்களே யோசித்து உணர முடிந்தவர்கள்  சாந்த ரஸம் மேலோங்கி இருப்பதையே சிறப்பாக சொல்வர்.  அதனால் இந்த  என் முயற்சி, என் காவியத்தை சாந்த ரஸமே பிரதானமாக இருப்பதை ரசித்து மகிழுங்கள்.  சிறந்த அமுதம் போன்ற இதை பருகியும், காதுகளால் கேட்டும், ராஜதரங்கிணி என்ற இந்த நூலின் செய்தியை தெளிவாக உணருவீர்கள்.

முன்னொரு காலத்தில் கல்ப ஆரம்பத்தில் இருந்து சதீ என்ற பார்வதி தேவிக்கு சொந்தமான ஒரு  சரஸ் இருந்தது.  அதிலிருந்து கல்பங்கள் –  பூ பாகம்  தோன்றி ஹிமயமலையில் குக்ஷி- வயிற்றில் ஆறு மன்வந்தரங்கள் நீருடன் இருந்தது.   ஒவ்வொரு மன்வந்தரத்திற்கும் ஒருவராக ஆறு மனு என்ற தலைவர்கள்  இருந்தனர்.  அதன் பின் வைவஸ்வத மன்வந்தரம் வந்தது.  அந்த சமயம் பிரஜா பதி- மனு வாக இருந்தவர் காஸ்யபர்.  படைப்புத் தொழிலைச் செய்ய தீர்மானித்த காஸ்யபர்   த்ருஹினன்,  மரங்கள், உபேந்திரன், ருத்ரன் முதலானவர்களை படைத்து  பூ உலகில் பிறப்பு என்ற செயலை துவக்கி வைத்தார்.  அந்த இடத்தில் இருந்த ஜலோத்பவா என்பவனை அழித்து, அந்த ஏரியின் மேலேயே காஶ்மீரம் என்ற ராஜ்யத்தை தோற்றுவித்தார்.  அதை நீல நாகா என்ற நாகர்களின் தலைவன் தன் வசம் வைத்திருந்தான். கடும் வெய்யிலின் தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்ள பயன் படுத்திக் கொண்டிருந்தான்.   நீல குண்டம் என்ற நீர் ஊற்று – அதில் பெருகி வந்த நீர் அவனுடைய பிரஜைகளுக்கு பயன்பட்டு வந்தது. நீருக்குள் இருந்த பூ பாகத்தை வெளிக் கொணர்ந்து  நிர்மலமாக இருந்த அந்த சரஸ்- ஏரி அல்லது பரந்த பொய்கையில்– அதில் கஸ்மீரா -कश्मीरा -என்ற பூமி மண்டலத்தை  கண்டனர்.  அதை வசிக்க ஏற்ற இடமாக  நிறுவினார்.  விதஸ்தா என்று அழைக்கப் பட்ட அந்த நீர் ஊற்று பின்னால் ஜெலெம் என மாற்றப் பட்டது. அந்த இடம் சர்வ நாக என்ற அதிபதியான நீலன் என்பவனால் ஆளப் பட்டது என்ற காரணத்தால்,   அந்த இடத்தை விட்டு விலக சங்கன், பத்மன் என்ற நாக தலைவர்கள்  சம்மதிக்கவில்லை. குகையை நோக்கி ஏராளமான நாகங்கள்  வந்தன, அந்த ருசியான நீரை குடித்து மகிழ்ந்தன.  ஏராளமான ரத்தினங்கள் பொக்கிஷமாக வைக்கப் பட்டிருந்த பூமி, எனவே அதை காவல் காத்தன. அது செல்வத்துக்கு அதிபதியான   தனதனுடைய பிரதேசம் ஆனதால் தனம்- செல்வம் நிறைந்த இடம். அதைப் போலவே அந்த பூமியும் செல்வ செழிப்போடு விளங்கியது.  கருடனிடம் பயந்து ஒளிந்து வாழ வந்த நாகங்கள். அவைகளின் பாதுகாப்புக்காக மறைவிடம் போல  அமைந்த மலை,  பின்னால் கட்டிய கைகளுடன் நிற்பது போல மலையின் பிராகாரங்கள் மலையைச் சுற்றி சுற்றி இருக்கும். அவைகள்   பாதுகாப்பாக இருந்தன.  அங்கு,   புக்தி முக்தி என்ற பலன்களை அளிக்க கூடிய  பகவான் உமாபதி  காஷ்டம்- கட்டையாக (அஸ்வத்த மரமாக)  ரூபத்தை எடுத்துக் கொண்டு தவ கோலத்தில் இருந்தார்.  தொட்டாலே பாபங்களை தீர்க்கும் புண்ய தீர்த்தங்கள் நிறைந்து இருந்த அந்த இடத்தில், சந்த்யா தேவி நீர் வற்றாமல்  இருக்க  மலையில் நீரை வர்ஷித்தாள்.

கண்களால் கண்டாலே, தரிசனமே, புண்ய பாபங்கள் என்ற முரண் பாடுகளைத் தீர்த்து விடும்.  அந்த இடத்தில் ஸ்வயம்பூ  ஈசனுடைய கர்பத்தில் அக்னியாக வந்து அங்கு யாகம் செய்யும் முனிவர்களிடம் இருந்து ஹவிஸ் என்ற யாகத்தில் அளிக்கப் படும் பொருளை ஏற்றுக் கொள்வார். அந்த இடம் ஜ்வாலாபுஜ வனம் என்றே அழைக்கப் பட்டது.   (ஜ்வால தீ ஜுவாலை அதுவே புஜங்களாக – கைகளாக உள்ள வனம்)   பேடகிரி -भेड गिरि-  யின் சிகரத்தில், கங்கை உத்பவம்- வெளிப்படும் வரை  தேவி சரஸ்வதி தானே ஹம்ஸ ரூபமாக அந்த  சரஸ்- பெரிய குளத்தில் தென் பட்டாளாம்.  

ஸ்ரீ ஹரன்- பரமேஸ்வரன் வசிக்கும் இடத்தில் நந்தி தேவர்  வெளி பிராகாரத்தில் வசிக்கலானார்.  வான வெளியில் சஞ்சரிக்கும் கந்தர்வர்கள் ஈசனுக்கு பூஜை செய்து அளிக்கும் சந்தனங்களும் , மற்ற வாசனை பொருட்களும், மலர்களும் அவர் மேலும் விழுந்து தரையில் இரையும். இன்றளவும் அந்த இடத்தில் சந்தனம் மணக்கும் என்று கவி சொல்கிறார்.

தேவி சரஸ்வதியைப் பார்த்து, தரங்கிணீ, மதுமதீ, வாணீ  என்ற கவிகளால் வணங்கப் படும் உப தேவதைகள் அங்கு கூடவே வந்து விட்டன.  சக்ரப்ருத்- மகா விஷ்ணு விஜயேசன், ஆதி கேசவன், ஈசான என அனைவரும் அந்த இடத்தின் அழகில் மயங்கி குடியேறவும் இட பற்றாக்குறை தோன்றி விட்டது என்று சொல்கிறார் கவி. ( பகவான் விஷ்ணுவின் புகழ் பெற்ற ஆலயம் Tsakdar- சக்ரதர,  விஜயேச என்ற இடத்தில் பகவான் சங்கரரின் ஆலயம் உள்ளது. காஸ்மீர தேச வாசிகள் அதை விஜ்ப்ரோர் அல்லது பிஜ்பிஹர என்ற பெயரில் அழைக்கின்றனர்.

அங்கு சஸ்திரங்களுக்கு தேவையில்லை. மலர்கள் அளித்து செய்யப் படும் வணக்கமே சிறப்பு.  மன அடக்கமும், தவமும் போதுமானது.  அந்த பிரதேசத்தில் வசிப்பவர்கள் பரலோகம் பற்றி கவலைப் படுவதில்லை.  பரலோக பயம் என்பது அவர்கள் அறியாததே.  அங்கு சூடான நீருடன் நீராடும் இடங்களும் உண்டு. பனிக் காலத்தில் அதன்  அடியில் முதலைகளும் இராது.  இடரின்றி அமிழ்ந்து குளிக்க வசதியாக இருக்கும்.   கடும் கோடையிலும் தந்தையிடம் (காஸ்யபர்) உள்ள கௌரவத்தால், ஸுரியனின் கிரணங்கள் அதிக வெப்பத்தை அடக்கிக் கொண்டு அங்குள்ளோரை சிரமப் படுத்தாமல் அதிக வெப்பமின்றி ஒளியை மட்டும் தருமாம்.  நீரில் பனித் துகள்கள் இருக்கும். குங்குமப்பூ ஒரு சிறப்பு.  அது அழகிய வண்ணத்தில் தெரியும்.  அங்கு வித்யா- கல்வி, அறிவு உண்டு. உயர்ந்த மாளிகைகள், தேவ லோகத்திலும் துர்லபமான- கிடைக்காத திராக்ஷை என்ற பழ வகை ஏராளமாக விளையும்.

மூவுலகத்திலும் சிறப்பான ரத்தினங்கள் விளையும் மலை என்பதால் அதன் தலைவனான குபேரன்  செல்வ செழிப்பு என்பதன் மறு பெயராக விளங்குகிறான். கௌரீ குரு- ஸ்ரீ ஹரனின் பெயருடன் ஒரு சிகரம், அதில் ஒரு பூ பிரதேசம். அங்கு  கலி யுகம் வந்த பின் கௌரவ, கௌந்தேய என்ற அரச வம்சங்கள் சம காலத்தில் தோன்றின.  14/398

கோ நந்தன் முதல் ஐம்பத்து இரண்டு அரசர்களைப் பற்றி எதுவும் தெரியவில்லை.  நிச்சயம் அந்த இடைப் பட்ட காலத்தில் அரசா0ண்டவர்களின் தவறுதலான நடவடிக்கைகளால்,  காஸ்யபீ பூமியில் எந்த அரசரும் அறிவு மிக்க கவிகளின் பார்வையில் சொல்லத் தகுந்த எந்த நற்செயலையும் செய்யவில்லை  எனலாம்.  அரசர்கள் தங்கள் பராக்ரமத்தால்  ஆட்சி செய்திருந்தால், பிரஜைகள் பயமின்றி இருந்திருப்பர்.  நினைவில் வைத்திருக்கும் படியான நற்செயல்கள் இல்லை. தவிரவும்  கவிகளுக்கு அரச ஆதரவும் இல்லை.  ஆதரவு இல்லாததால் கவிகள் எதுவும் எழுதவும் இல்லை.  (46 ஸ்லோகம்)

யுதிஷ்டிரர் காலத்தில் (இது ஒரு வழக்கம். யாவரும் அறிந்த  ஒரு செய்தியைச்  சொல்லி மேலும் சொல்வது ஒரு மரபு)  காஷ்மீரேந்திரனாக கோநந்தன்  கங்கை ஒரு பக்கம் பெருகி வளமாக்க, கைலாசம் ஒரு திசையில் பாதுகாப்பாக இருக்க, அவைகளின் அருளால்    தான் அடைந்த பதவி அந்த பிரதேசத்தின் அரசாட்சி, என உணர்ந்தான்.  தன் நன்றியையும் வணக்கத்தையும் தெரிவிப்பது போல,  ப்ரதாபியாக, திறமையாக ஆண்டான் .  சேஷ என்ற நாக விஷத்தால் தாக்கப் பட்ட பூதேவி, கோநந்தன் என்ற இந்த அரசனிடம் பாதுகாப்பாக இருந்தாள் என்று கவிகளின் வர்ணனை.

ஜராசந்தன் உதவிக்கு அழைத்ததால், இந்த கோநந்தன், கம்சாரி- கம்சனின் எதிரி – ஸ்ரீ கிருஷ்ணனின் மதுரா நகரை முற்றுகையிட்டான்.  பெரும் படையுடன் சென்றான். காலிந்தி நதியின் கரையில் தன் சேனைகளை முகாமிட்டு வைத்து விட்டு சென்றான்.  ஆனால் தோற்று யாதவர்கள் சிரிக்கும் படியாயிற்று. சிறந்த வீரர்கள் என்ற அவர் படை வீரர்களும் பரிகசிக்கப் பட்டனர்.  அப்படியும் தன் சேனை வீரர்களை காப்பாற்ற நினைத்து கொடியில் கலப்பையை உடைய வீரனான  பலராமனுடன் மோதினான். விடாமல் போரிட்டாலும், கடைசியில் விழுந்தான்.  யாதவர்கள் ஜய கோஷம் செய்தனர். காஸ்மீர ராஜா மண்ணை கவ்வினான்.  ஆயினும் வீரனுக்குரிய மரணம். யுத்த பூமியில் மரணம் சிறப்பாக சொல்லப் படுகிறது.  நல்ல க்ஷத்திரியன்- அரச குலத்தவன் – வீர்களுக்கான தேவ லோகத்தை அடைந்து விட்டான் என்று பாராட்டு பெற்றான்.

ஸ்ரீமான் தாமோதரன் என்ற அவன் மகன் அந்த தேசத்தின் அரசனானான்.  வளமான நாடு கைக்கு வந்தும் தந்தையின் வதம் காரணமாக மனம் உடைந்து போனவனாக நிம்மதியின்றி இருந்தான்.  தன் மானம் உடைய வீரன். சிந்து தேசம் அதன் அருகில் காந்தார தேசத்தினர் கன்யா ஸ்வயம் வரத்தில் கலந்து கொள்ளச் சென்றவன், தானே யாதவர்களை வம்புக்கு இழுத்து, தன் கர்வத்தை காட்டினான். அந்த அடாவடிச் செயலால் சற்று பொறுத்தனர். வெகு தூரத்தில் இருந்து வந்தவன் என மதிப்பு கொடுத்தனர்.  பெரும் கூட்டமாக யாத்திரை சென்றது. கொடிகளுடன் குதிரை வீரர்களும், மற்றவர்களும் செல்ல வானமே புழுதியால் நிறைந்தது போல ஆயிற்று. 

அங்கு சக்ரதர என்ற இடத்தில் தன் கர்வத்தால் உயிரிழந்தான். அவன் மனைவி  கருவுற்றிருந்ததை அறிந்த யது குல பதி, ஸ்ரீ க்ருஷ்ணன், யசோவதி என்ற அந்த பெண்ணை அரசியாக முடி சூட்டி வைத்தார்,  இதனால் மனத் தாங்கல் அடைந்த மந்திரி வர்கங்கள், மற்றும் அரச அலுவலர்களிடம் ஸ்ரீக்ருஷ்ணன் சொன்னார். காஸ்மீரா தேவி பார்வதியின் தேசம். அங்கு அரசனாக வருபவன் சிவ பெருமானின் அருள் பெற்றவனாகவே இருக்க முடியும். துஷ்டனே ஆனாலும் அங்கு அரசனாக வருபவனை அலட்சியம் செய்யலாகாது.  பெண் அரசியாவதா என்று நினைக்க வேண்டாம். அவளை பிரஜைகளுக்கு தாயாக பாருங்கள்.  அதன் பின் பிரசவ காலம் வந்ததும் குல கொழுந்தாக ஒரு மகனை யசோவதி பெற்றாள். அரச புரோஹிதர்கள் குழந்தைக்கு செய்ய வேண்டிய ஜாத கர்மாக்களைச் செய்து முப்பாட்டனார் கோநந்தன் பெயரை வைத்தனர்,  பிறவியிலேயே அந்த குழந்தை  ஒருவள் பாலூட்டி வளர்க்கும் பெற்ற தாய், மற்றவள் அரச லக்ஷ்மி என்பவள்  இருவரையும்  அடைந்து விட்டான் என்று மகிழ்ந்தனர். எதிர்த்த மந்திரிகள் போட்டி போட்டுக் கொண்டு குழந்தையை காண வந்தவர்களுக்கு தானங்கள்  செய்தனர்.  செயற்கையாக அதனிடம் அன்புடையவர்களாக காட்டிக் கொள்வதில் முனைந்தனர். பாலன் என்பதால் குரு பாண்டவர்கள் அவனை தங்கள் உதவிக்கு அழைக்கவில்லை.

அடுத்து லவன் என்பவன் அரசனாக வரும் வரை அரச பரம்பரை பற்றிய செய்திகள் மறதி என்ற  மகா சமுத்திரத்தில் மூழ்கி விட்டன போலும்.  ஐம்பத்திரண்டு அரசர்கள் இடையில் இருந்ததாக ஊகிக்கிறார்கள்.

இந்த லவன் என்ற அரசன் பெரும் படையை வைத்திருந்தான். அந்த படையின் ஆரவாரமே பொது மக்களை அலறி ஓட வைத்ததாம். லோலோர்  என்ற நகரை நிர்மாணித்தான். எட்டு கோடி கல்லால் ஆன வீடுகளை அதில் கட்டினான் என்பர். அந்தணர்கள் அறிஞர்களுக்கு அக்ரஹாரங்கள் என்ற வாழ்விடங்கள் அமைத்துக் கொடுத்தான்.  குசேசயன் என்ற அவன் மகன், அதன்பின் அவன் மகன் ப்ரதாப குசலன் என்பவன் முறையே அரச பதவியை வகித்தனர்.  காகேந்திரியன் என்ற அவன் மகன் நாக குலத்துக்கு யமனாக இருந்தான்.  எண்ணற்ற நாகங்களை அழித்தான். காகிகுன khagikhuna, Musa மூசா  என்ற நகரங்களை நிர்மாணித்தான். அதன் பின் மிகச்சிறந்த  வீரனும், நல்ல குணங்களும் உடைய அவன் மகன் சுரேந்திரன் என்பவன் பட்டத்துக்கு வந்தான்.   மென்மையாக பேசுவான் என்பதால் பிரஜைகளால் விரும்பப்பட்டான்.   Darat  என்ற நகரத்துக்கு அருகில் Saura என்ற இடத்தில்  தன் மாளிகையை கட்டிக் கொண்டான். அதற்கு நரேந்திர பவனம் என்று பெயரிட்டான்.  சந்ததி இன்றி இறந்தான்.

அவனுக்கு பின் அரச குலத்தவன் அல்லாத கோதாரா Godhara –என்பவனை, தானே  தனக்கு பின் அரசனாக நியமித்து ராஜ்யத்தில் முடி ஸூட்டி விட்டிருந்தான்.  அவன் ஹஸ்திசாலா – என்ற நகரத்தை நிர்மாணித்தான் – அதில் அந்தணர்களை குடியேற்றினான்.  அதன் பின் அவன் மகன் சுவர்ணன் என்பவன்,  செல்வந்தனாக இருந்தான். சுவர்ணம்- தங்கம் தானமாக கொடுத்தான் என்பர். கேரள தேசத்தில்  சுவர்ண மணி என்ற கால்வாயை வெட்டி நீர் பெருகச் செய்தான்.  அவன் மகன் ஜனகன் என்பவன்.  முதல் ஜனகன் போலவே பிரஜைகளுக்கு பல நன்மைகள் செய்தான்.  அந்தணர்களுக்கான  விஹாரம் , ஜாலோரம் என்ற அக்ரஹாரங்களை நிர்மாணித்தான்.  சசீநரன் என்ற அவன்  மகன்  ச சீபதி எனப்படும்  இந்திரனாகவே மதிக்கப் பட்டான்.  ஸ்ரீமான் – செல்வந்தனாகவும், குறையின்றி நல்லாட்சியை அளித்தான் .   சசினாரனுடன் அந்த வம்சமும் முடிந்தது. 

 அதன் பின் சகுனியின்  சகோதரியின் மகன் சில தலைமுறைகளுக்குப் பின் வந்த ஒரு அரசன், அசோகன் என்ற பெயருடன் சத்ய சந்தனாக, வளம் மிகுந்த பூமியை நியாயமாக ஆண்டான்.  புத்த/ஜைன (இரண்டுமே ஜின என்று குறிப்பிடப்படுகிறது)  மதத்தை தழுவியவன். சாந்தனாக   ஸுஸ்கலேத்ர, விதஸ்தார என்ற இடங்களில் ஸ்தூபங்களை கட்டுவித்தான்.  விதஸ்தாரத்தில் காட்டிய தர்மாரண்ய விஹாரம் என்ற சைத்ய மண்டபம்,  மிக உயரமாக இருந்ததால் பொது மக்கள் அண்ணாந்து பார்த்தால் கூட அதன் மேல் பாகம் காண முடியவில்லை என்பார்களாம்.  ஸ்ரீநகரீ என்ற பெரிய பிரசித்தமான அழகிய நகரை கட்டியவனும் அவனே. 104- 19/398

விஜயேச என்ற சிவன் கோவிலில் ப்ராகாரங்கள் இடிந்து போனதை செப்பனிட்டு, அழகுற அமைத்தான்.  கோவிலையும் கற்கோவிலாக கட்டினான்.  அருகிலேயே இரண்டு புது கோவில்களையும் எழுப்பி, அசோகேஸ்வரா என்ற பெயரில் பகவான் ஸ்ரீ ஹரனை பிரதிஷ்டை செய்தான்.    மிலேச்சர்கள் என்ற வெளி நாட்டினர் வந்து அழித்து சின்னா பின்னமாக்கிய நகரை  புதுப்பித்தான்.  தானும் தவம் செய்து பகவான் பூதேசனை வணங்கி அவர் அருளால் நன் மகனைப் பெற்றான்.  அவன் அரசனானான். ஜலௌகன் என்ற பெயரில் பூலோகத்தில் இந்திரனாக மதிக்கப் பட்டான்.

குணவான் ஆனதால் புகழ் பெற்றான்.  அதுவே அமுதம், அதனால் ப்ரும்மாண்ட மண்டலமே சுத்தமாயிற்று என்று கொண்டாடப் பட்டான்.  எங்கும் பாடலாக அவன் பெயர் பரவியது.  தேவலோகத்தினரும் ஆச்சர்யம் ஆச்சர்யம் என்றனர்.  பொன்னாக்கும் வித்தை அல்லது அதற்கான மூல பொருள் அவனிடம் இருந்தது.  அதை தனக்காக மட்டும் இல்லாமல், பொதுவான பிரஜைகளின் நன்மைக்காகவே பயன் படுத்தினான். 

நாக சரோவரம்- என்ற நீரூற்று, அதை ஸ்தம்பிக்கச் செய்து உள் நுழைந்து  நாகர்களின் குறைகளைக் கேட்டான்.  அவர்களுக்கு தேவையான வசதிகளைச் செய்து கொடுத்து விட்டு வெளியில் வந்தான். அந்த காலத்தில் புத்த மதம் பரவ ஆரம்பித்திருந்தது.  அரச சபையில்  சிறந்த  வேதாந்த சித்தந்தாங்களில்  நிபுணர்கள் இருந்தனர். அவர்களைக் கொண்டு புத்த மத பிரசாரகர்களை வாதம் செய்து வென்றதோடு, அந்த அறிஞர்கள் அவர்களுக்கு  நல்ல உபதேசங்கள் செய்தனர்.  தேவையின்றி அவர்கள் ஏளனமாக பேசியதைக் கண்டிக்கவே இந்த வாத பிரதிவாதங்கள என்றனர்.  அரசன் எப்பொழுதும் போல விஜயேஸ்வரனையும், ஜ்யேஷ்டேசா , நந்திகேஸ்வரேசன் என்ற  தன் தேசத்து பரமேஸ்வர ரூபங்களையே வணங்கி வந்தான். வாக்கு தவறாதவன் என்பதால் பொது மக்களின் நம்பிக்கையை பெற்றான்.  கிராமங்கள் தோறும் வேகமாக ஓடும் குதிரைகள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன.  அவசர தேவைகள், செய்திகள் சொல்ல அவை பயன்பட்டன.   அந்த ஓட்டம்  தரையில் ஊர்ந்து செல்லும் நாகங்களுக்கு இடையூறாக இருந்தது. நாகர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி அந்த குதிரைகளுக்கு தடை விதித்தான்.  அதனால் மகிழ்ந்த ஒரு நாகன் அரசனை தன் தோளில் தூக்கிக் கொண்டு செல்லவும் தயாரானான்.  20/398

மிலேச்சர்கள் என்ற நாட்டின் எல்லைக்கு அப்பாலிருந்து வந்த படையை தடுத்து அவர்களை வென்றதால் புகழ் பெற்றான்.  பாரத தேசம் முழுவதும் திக்விஜயம் செய்தான்.   கடல் சூழ்ந்த (பெரும் கடலே சூழ்ந்து உள்ள பூமி  அதன் இடையில் அணியும் மேகலா என்ற ஆபரணமாக  பெரும் கடலே இருப்பதாக வர்ணனை)  இவைகளுக்கிடையில் வாணிபம்,  செல்வத்தை பெருக்க தேவையான செயல்களை கவனிக்காமல் விட்டதால் அவனது அரசாட்சி மிக சாதாரணமான ஒன்றாக கணிக்கப் பட்டது. இத்தனைக்கும் அரசபையில் ஒரு உயர் நீதிபதி இருந்தார். பொருளாதாரம் அந்த துறையில் சிறந்தவர் பொறுப்பில் இருந்தது. ஒருவர் பொக்கிஷத்தை கவனிக்க இருந்தார்.  படைகளை மேற்பார்வையிட்டு பயிற்சிகள் அளிக்க வீரர்கள் இருந்தனர்.  வெளி நாட்டுக்கு தூதுவர்களாக செல்பவர், ஆலோசனை சொல்லும் புரோஹிதர், ஜோதிடம் அறிந்தவர்கள் என்று பலரும் தேர்ந்த  திறமையுள்ளவர்களே.  அனைவரும் அரசனிடம் பெரு மதிப்பும் வைத்திருந்தனர்.  அவர்களுடன் பதினெட்டு துறைகளை ஏற்படுத்தி அதன்  நிர்வாக ஏற்பாடுகளை கவனிக்கச் செய்தான்.  பொது மக்களும் தங்கள் குலத் தொழில்களை அதைச் சார்ந்த செயல்களை செய்துகொண்டு வசதியாக வாழ்ந்தனர்.  நிலம், தொழில் சம்பந்தமான  வழக்குகள் விசாரிக்கப் பட்டு உடனடியாக தீர்ப்புகள் பெற்றனர்.  தர்மாத்யக்ஷன், தனாத்யக்ஷன், கோசாத்யக்ஷன் –  தர்மத்தை- நியாயம் , செல்வ நிலை, பொக்கிஷம் என்ற மூன்று துறைகளுக்கும் அரசனே தலைமை வகித்தான்.  யாக காரியங்களைச் செய்வதை அறிந்த ஏழு பேர் அந்த துறையை நிர்வகித்தனர்.

வாரபால, அக்ரஹார என்ற குடியிருப்புகளுக்கு நிறைய செலவிட்டான். ஈசான தேவி என்ற மனைவியின்  பொறுப்பில், சப்த மாத்ருக்கள்- தேவியின் ஏழு ரூபங்கள் கோவில்களில் பிரதிஷ்டை செய்யப் பட்டன. வியாசருடைய மாணவரான ஒருவர் நந்தி புராணம் என்பதை விவரித்துச் சொன்னார். அதன் படி அந்த இடங்களில் பூஜைகள் நடந்தன.  ஸ்ரீ நகரில்   ஜ்யேஷ்ட ருத்ரன், என்ற பெயரில் மகா தேவனான ஈசன் கோவில் கட்டப் பட்டது.  திடுமென நினைவு வந்து. ஸொதர என்ற நீரூற்றில் நீராடி செய்து வந்த தன் பழைய நியமங்களை விட்டு வெகு தூரம் வந்து விட்டதாக வருந்தினான்.  வழக்கமான தன் நந்தீஸ்வர என்ற பரமேஸ்வரனுக்கு செய்து வந்த வழிபாடுகளைத் தொடர தீர்மானித்தான்.  அந்த சமயம் நீர் வற்றியிருந்த ஒரு குளம் அல்லது ஏரியில் ஊற்றுக் கண் திறந்தது போல தெளிந்த நீர்  பெருகி குளம் நிரம்பியது.  மகேசனே அவன் குறையைத் தீர்த்து விட்டான்  என பெரிதும் மகிழ்ந்தான்.  நந்தீசனே தான் இங்கும் ஜ்யேஷ்ட ருத்ரன் என்ற பெயரில் அருள் பாலிக்கிறார் என்று அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.  இது போன்ற அதிசயங்கள் மனித யத்தினத்தில் முடியுமா?

ஒரு நாள், வெளியில் சென்று கொண்டிருக்கும் பொழுது,  வழியில் எதிர்பட்ட ஒரு முதியவள் உணவை யாசித்தாள். அரசன் கொடுத்த சாத்வீகமான உணவை மறுத்து விட்டு மாமிசாகாரம் வேண்டினாள்.  அரசனோ மாமிச ஆகாரத்தை அறவே தவிர்த்து விட்டவன் . அரசனை அனுசரித்து மக்களும் சாகாஹாரிகளே.  அதனால் இந்த நாட்டில் மாமிசம் கிடைக்காது, தேவையானால் என் உடலில் இருந்து எடுத்துக் கொள் என்று சொன்னான்.  அந்த முதியவள் தன் வேடத்தை களைந்து விட்டு அரசனை பாராட்டினாள், ‘அரசனே, நீ போதி சத்வனே  என்றாள். அரசன் பதில் அளித்தான்.  தாயே, நான் சிவ பக்தன், சைவ சித்தாந்தங்களின் படி வாழ்பவன். யார் போதி சத்வன் எனவும், அந்த முதியவள் சொன்னாள். என்னை புத்த மதத்தினர் அனுப்பினர்.  உன் சபையில் தோற்ற பௌத்தர்கள் கோபித்துக் கொண்டு க்ருத்திகா என்ற என்னை அனுப்பினர்.  அந்த தேசத்தில் நாங்கள் போதி சத்வரை கடவுளாக நம்பி வாழ்பவர்கள்.  உலகில் சரா சரங்களும், உயிரினங்களும் போதி சத்வரால் தோற்றுவிக்கப்பட்டன என்று அறிந்து கொள்.  உலகில் துன்பங்கள் இல்லாமல் வாழ போதி சத்வரை சரண் அடைவது தான் வழி. குற்றம் செய்தவர்களையும் மன்னிக்கும் குணம் அவருடையது. சில துஷ்டர்கள்  முன் நீ அளித்த எங்கள் விஹாரங்களை சிதைத்து விட்டனர். மஹா சாக்யன் என்ற அரசன் தான் காரணம் என்றாள்.

அரசன் சொன்னான்.  அந்த அரசனே மஹாசாக்யன் – அறிவாளி தான். உங்கள் துன்பங்கள் அவனைக் கண்டதும் நீங்கி விடும்., கவலைப் படாமல் போ. மீதியை நான் கவனிக்கிறேன் என்று சொல்லி அனுப்பி வைத்தான். அரசனும்   வாக்கு கொடுத்த படி விஹாரம் அமைத்துக் கொடுத்தான். 

நந்தி க்ஷேத்ரம் என்ற இடத்தில் கல்லால் ஆன மிகப் பெரிய ஆலயம் கட்டுவித்தான். பூதேசன் என்ற சிவபெருமானை பிரதிஷ்டை செய்வித்து, பூஜைகள் நல்ல படியாக நடக்க வேண்டிய பொருளுதவியும் செய்தான்.  பல ஆபரணங்களையும் அளித்தான். கர்ப்ப க்ருஹம்- பகவான் உள்ள இடம்- அதிலேயே அமர்ந்து, புலனடக்கி  ப்ரும்மாசனம் என்பதில் அமர்ந்து யோக முறையில் பல நாட்கள்  தவம் செய்வதில் இருந்தான்.   பின், கனக வாஹிணி என்ற நதியில் ஸ்னானம் செய்து விரதத்தை முடித்தான். மனம் மகிழ்ந்த அரசன் ஜ்யேஷ்ட ருத்ரன்- ஆடலரசன் என்பதால் பல நாட்டிய நங்கைகளை கோவிலுக்கு  பூஜா காலங்களில் பாடியும் ஆடியும் சேவை செய்ய அனுப்பினான்.  இந்த விதமாக தானும் மனைவியுமாக அந்த ஈஸ்வர தியானத்திலேயே இருந்து முக்தி அடைந்தனர்.  கிரிஜாபதியின் சரணங்களை அடைந்தனர்.

அசோகனுக்குப் பிறகு தாமோதரன் என்பவன் ஆட்சிக்கு வந்தான். இவனும் சிவ பக்தனாகவே இருந்தான். செல்வம் அவனிடம் தானே வந்து நிறைந்தது.  ஸ்ரீ ஹரனின் பக்தன் என்பதால் குபேரன்- தனதன்- செல்வத்துக்கு  அதிபதி தானே வந்து நட்புடன் இருந்து அவனுக்குத் தேவையான செல்வ செழிப்பை பெறச் செய்து விட்டான் என பின்னால் மக்களிடையே பாடலாக பரவியது.  குஹ்யகர்கள் என்ற அவனது சேவகர்களும் அரசனுக்கு ஆதரவாக இருந்தனராம்.  தன் பெயரில் ஒரு நகரை கட்ட முனைந்தான்.  பாதி கட்டிய சமயம் பெரும் வெள்ளம் வந்து அதை மூழ்கடித்தது.  பின்னாலும் இப்படி தண்ணீரால் துன்பம் வராமல் இருக்க யக்ஷர்களின் உதவியுடன் குத்தா Gudda- என்ற இடத்தில் கற்களைக் கொண்டு ஒரு பெரிய அணையை கட்டினான்.  அதிலிருந்து நீர் வசதி செய்து கொடுத்து ஸூத என்ற இடத்தில் தன் பெயரில் தாமோதர ஸூத என்ற பெரிய நகரை நிர்மாணித்தான்.  அதனால் பிரஜைகள் பல நன்மைகளை பெற்றனர்.

முன் ஒரு முறை நீத்தார் கடனைச் செய்யும் முன் நதிக் கரைக்கு சென்று கொண்டிருந்தவனை பார்த்து ஒரு சிலர் உணவை யாசித்தனர்.  தன் மூத்தாருக்கான நீர்க் கடனை செய்து விட்டு வரும் வரை அவர்களை காத்திருக்கச் சொன்னான். அவர்களோ, தங்கள் யோக சக்தியால், இதோ நதியைக் கொண்டு வந்து விட்டோம், நீராடி, உன் மூத்தோருக்கான நீர் கடனை செய்து விட்டு வா என்றனர். அதை ஏதோ மாயா ஜாலம் என்று எண்ணி அரசன் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. சற்றுப் பொறுங்கள், என்று சொல்லி விட்டு தன் செயலில் மூழ்கி இருந்தான்.  அவர்களும் சபித்து விட்டு சென்று விட்டனர். அதன் பின் பிராயச் சித்தமாக ஒரே நாளில் முழுவதுமாக ராமாயண பாராயணத்தைக் கேட்டு சாப விமோசனம்  பெறுவாய் என்றனராம். அவனும் அவ்வாறே செய்து சாப விமோசனம் பெற்றான்.  அது வரை சர்பமாக நதிக்குள் கிடந்தானாம். இன்றளவும் அந்த நதியில் நீராடுவோர், சர்பத்தின் உஷ்ணமான சுவாசம் நீருக்குள் தெரிவதாக சொல்கிறார்களாம்.

அதன் பின் ஹஸ்கன், ஜுஸ்கன், கனிஷ்கன் என்ற பெயர்களில் அரசர்கள் அந்த தேசத்தை ஆண்டனர்.  அவர்களும் தங்கள் பெயர்களில் நகரங்களை நிர்மாணித்தனர். ஜுஷ்கனுடைய தலை நகரம் ஜுஷ்க புரம். ஜயஸ்வாமி புரம் என்ற இடத்தையும் கட்டினான். துருஷ்க வம்சத்தினர் என்றாலும் நியாயமாக இருந்தனர்.  ஜுஷ்கன் ஆரம்பித்த மடங்கள், சைத்ய க்ருஹங்கள் இவைகளை முழுதுமாக கட்டி முடித்தனர். அதற்கும் முந்தைய ராஜ்யங்கள் அழிந்து காஸ்மீர மண்டலம் கை மாறியது.  பெரும்பாலும் பௌத்தர்களே வசித்தனர்.  நூற்று ஐம்பது ஆண்டுகள் வரை சாக்ய சித்தர் என்ற பௌத்த பிக்ஷு  தலைமையில் அவர்கள் செல்வாக்குடன் இருந்தனர். அவர் மறைவுக்கு பிறகு அந்த மதம் மெள்ள மெள்ள தன் பெரும்பான்மையை இழந்தது.

போதி சத்வருடைய தேசம் என்றே சொல்லப் பட்ட இந்த பிரதேசத்தில் ஒரு அரசன் நாகார்ஜுனன் என்பவன் ஸ்ரீமானாக, நல்ல முறையில் ஆண்டான். அதன் பின் கண்டகோட்ச என்பவன் அரசனான். அவன் காலத்தில் அக்ரஹாரம்  என்ற வாசஸ்தலங்களை நிறுவினான்.  அவன் ஆட்சி அமைதியாக இருந்தது.  அதன் பின் அபிமன்யு என்பவன் அரசனானான்.   அவன் சிறந்த வீரனாகவும், ஆற்றலுடையவனாகவும் இருந்ததால்  மற்றொரு இந்திரன் என அழைக்கப் பட்டான்.  அபிமன்யுபுரம் என்ற நகரத்தை நிர்மாணித்து அழகிய சிவன் கோவிலையும் ஏராளமான செல்வமும், அசையா சொத்துக்களும் அளித்து சிறப்பாக பூஜை ஏற்பாடுகளை செய்வித்தான்.

சந்த்ராசார்யர் முதலியவர்களுடன்  பதஞ்சலி என்ற மதிப்புக்குரிய பெரியவர்,  அந்த தேசம் வந்து மகாபாஷ்யம் என்ற நூலை இலக்கண விவரங்களை தெளிவுபடுத்தி அங்கு இருந்தபடி எழுதினார்.

( பதஞ்சலி என்பவருடைய பிரசித்தமான நூல், பாணிணீ என்பவர் எழுதிய சமஸ்க்ருத இலக்கண நூலுக்கு விரிவுரை.  இவர் தான் யோகம், வைத்யம் இவைகளை முதன் முதல் பல ஆராய்ச்சிகள் செய்து வகைப் படுத்தினார்.  உடல் ஆரோக்யம், மொழி, யோகம் என்ற பல வகைகளிலும் இவர் முன்னோடியாக பல நூல்களை எழுதி  உள்ளார்  என்பது பிரசித்தமான வரலாறு. )  

பௌத்தர்கள் பிரபலமாக இருந்த நாகார்ஜுனரின் ஆட்சி காலம் அது.  நாகார்ஜுனன் போதி சத்வரின் நெருங்கிய சிஷ்யர்.  பல வித வாதங்கள், அந்நாட்களில்  இருந்த ஆன்மீக கொள்கைகளில் சிறந்த வித்வான்களோடு வாதம் செய்து புத்த மத பிரசாரம் செய்தார்.  நீலபுராணம் என்ற நூலை எழுதி அது வரை வழக்கத்தில் இருந்த நாக மத வழக்கங்களை கண்டித்து எழுதினார்.  அவர்கள் செய்து வந்த யாகங்கள் அனைத்தையும் குறை கூறி, எழுதினார். அந்த சமயம் காஸ்மீர தேசம் பெரும் பனிப் புயலுக்கு ஆளாகியது, ஆண்டு தோறும் அது அதிகரித்து எவரும் வாழ முடியாத நிலை உண்டாயிற்று.  விளைச்சல் இல்லை.  உணவின்றி பலர் மடிந்தனர். பௌத்தர்கள், முன் இருந்த நாக வம்சத்தினர்  அனைவரும் வெளியேறி வேறு இடங்களுக்குச் சென்றனர்.  யாகங்கள் செய்து வந்த நாகர்கள் தங்கள் சாதனைகளின் பலத்தால் பிழைத்தனர்.

காஸ்யபருடைய வம்சத்தில் வந்த சந்திர தேவன் என்பவன்  க்ஷேத்ர தேவதை – குல தெய்வம் – நீலா என்ற தேவதையை அந்த பிரதேசத்தை காப்பாற்ற வேண்டும் என  வேண்டிக் கொண்டு கடும்  தவம் செய்தான்.  தவத்தை மெச்சி நீல லோஹிதன் எனும் பகவான் பரமேஸ்வரன்,  ப்ரத்யக்ஷமாகி – நேரில் தோன்றி பனிக்கட்டிகளால் வந்த பாதிப்பை விலக்கி விட்டார்.  அதன் பின்  அந்த தேசத்து பூர்வீகர்கள் வழக்கம் போல சாஸ்திர சம்பிரதாயங்களுடன் தங்கள் வாழ்வை அமைத்துக் கொண்டனர். 

முதலில் வந்த யக்ஷர்களின் படையெடுப்பை  முதல் சந்திர தேவன் முறியடித்தான்.  தற்சமயம்  இரண்டாவது சந்திர தேவன் பௌத்தர்கள் தலையீட்டை சமாளித்தான் என்று சொல்லி மகிழ்ந்தனர்.  அதன் பின்  மூன்றாவது கோநந்தன் பட்டத்துக்கு வந்தான்.  முன் போலவே தீர்த்த யாத்திரைகள்,  யாகங்கள், மற்ற வைதீக செயல்களை முன் போலவே தொடர்ந்து செய்தனர்.  அரச உதவியுடன் இவைகள் மறு மலர்ச்சி பெற்றதால், பிக்ஷுக்களும் விலகி விட்டனர்.  தவிர, பனிப் புயல் அவர்களை மிகவும் வதைத்து விட்டிருந்தது.

நாம் நினைப்பது போலவா நம் பிறப்பும் வாழ்வும் அமைகிறது? பிரஜைகளின் நல்வினைப் பயனாக  அவர்களுக்கு சாதகமான அரசும், வாழ்க்கை வசதிகளும், வழக்கங்களும் அமைகின்றன.  யார் எங்கிருந்து ஆணையிடுகிறார்கள் என்று யாரால் சொல்ல முடியும்?  தன் பிரஜைகளை துன்புறுத்துபவன் தானே வம்சத்தோடு அழிகிறான்.  அழிந்ததை திரும்பவும் பழையபடி நிலை நிறுத்துபவன் வம்சம் வளருகிறது.  அவனை ராஜ்ய லக்ஷ்மியும் கை விடுவதில்லை.  இந்த பிரதேசத்தின் வரலாறு ராஜ குலத்தினருக்கு பாடமாக விளங்கும். பின் வந்த  காலத்து அரசியல் வாதிகளும் அறிவுடையவர்களாக இருந்து, சிந்திக்கத் தெரிந்தவர்களாக  நல்லது, தீயது என்று பகுத்து அறிந்து கொண்டு, தங்கள் காலத்தை அனுசரித்து புதியனவைகளை சேர்த்தும் ஆண்டதால் இந்த வம்சம் தழைத்தது. பூமியும் மகிழ்ந்து வளமாக ஆக்கி ஆசீர்வதித்தாள்.  சித்தர்களின்  ஆலோசனைகளை மதித்து ஏற்றுக் கொண்டனர்.  சேனைத் தலைவர்கள் உண்மையாக இருந்தனர். ரகு வம்சம் ஆதியில் இருந்தது போலவே  கோநந்தன் வம்சமும் சிறந்து விளங்கலாயிற்று.  காஸ்மீர தேசத்தை  இந்த வம்சத்து அரசர்கள்  பல ஆண்டுகள் ஆண்டனர். (5 முன்னூறு வருஷங்கள் 15 நூற்றாண்டுகள்))ஆண்டனர்.

கோநந்த  வம்சத்தின் ஒரு அரசன் பெயர் விபீஷணன்.  அவன் ஐம்பத்து நாலு ஆண்டுகள் ஆண்டான்.

அடுத்து தந்தையும் தனயனுமாக ராவண, இந்திரஜித் என்ற பெயரிலேயே முப்பதைந்து வருஷம், ஆறு மாதங்கள் தந்தையும், அடுத்த முப்பது வருஷம் தனயனுமாக ஆண்டனர்.

ஆதி ராவணன் பூஜித்த சிவலிங்கம், வடேஸ்வரன் -वटेश्वर-  வட விருக்ஷம் – தான் தவம் செய்ய ஆல மரமாகவே உருவம் எடுத்துக் கொண்டு இருந்த இடம் பின்னால் வடேஸ்வரர்  என்ற லிங்கமாக  ஆயிற்று என்றும் அதை ஆதி ராவணன் பூஜித்தான் என்பதும் வரலாறு.   அதில் இளம் பிறையின் ஒளிக் கீற்று இன்னமும் புலப்படுவதாக தெரிகிறது.  அதை இந்த வம்சத்தினர் பக்தியுடன் பூஜித்தனர். அதில் தெரியும் புள்ளிகளும் கோடுகளும் வரும் காலத்தின் நிகழ்ச்சிகளை கோடியிட்டு காட்டுவதாக நம்பப் படுகிறது.  நாற் கோணமாக அமைக்கப் பட்ட ஒரு மடம், அதில் இந்த சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து அரச குலத்தினரின் தனிப்பட்ட குடும்பச் சொத்து (தாயாத-ancestry) என்று எழுதி வைத்துள்ளனர்.

இரண்டாவது விபீஷணன் என்று அழைக்கப் பட்ட காஸ்மீர ராவணனின் மகன் முப்பத்தைந்து ஆண்டுகளும் ஆறு மாதங்களும் பதவியில் இருந்தான்.  அவன் மகன் கின்னரன் எனப் பட்டான். அவன் பதவிக்கு வந்தான்.  அவனை பொறுத்தவரையில் ஒழுக்கமும், நற்குணங்களும் நிறைந்த சீலவான் என்றே புகழப் பட்டிருந்தான். ஆனால் பிரஜைகளின்  வினப்பயன் என்று தான் சொல்ல வேண்டும் பல விபரீதமான நிகழ்ச்சிகள் நடந்தேறி அவன் பெயரை கெடுத்தன. ராஜ்யத்தில் கின்னர கிராம விஹாரம் என்பதில் வசித்த  ஒரு புத்த மத துறவி அரசனின் ஆசை நாயகியை தன் யோக பலத்தால் அபகரித்துச் சென்று விட்டான். 

 அந்த கோபத்தால், பல விஹாரங்களை தரை மட்டமாக்க ஆணையிட்டான்.   மடத்தின் அடுத்த நிலையில் இருந்த மத்யம மடம் என்பதன் அலுவலகர்கள், அந்தணர்களுக்கு  அந்த கிராமத்தை அளித்து குடியேறச் செய்து விட்டான். நகரை பலவிதமாக அழகுற அமைத்தான். மலர் நிறைந்த உப வனங்கள், ஊர் நடுவில் கால்வாய் அமைத்து உல்லாசமாக படகுகளும் என உல்லாச பயணிகளை கவர பல ஏற்பாடுகளைச் செய்தான். அதன் பலனாக பலர் வந்து போகவும், அவன் பொக்கிஷம் நிறைந்தது. வியாபாரம் செழித்தது.  சுவர்க லோகம் போல  என்று வர்ணித்தனர். குபேரனுக்கு சமமான தனவானாக ஆனான். விதஸ்தாவின் மணல் வெளியை அழகுறச் செய்தான்.

அந்த இடத்தில் சுத்தமான நீர், இயற்கையாக அமைந்த அமைதியான இடம், எனவே வெகு காலமாக சுஸ்ரவன் என்ற நாகம் வசித்து வந்த து. அதன் தன் சொந்த குளமாக எண்ணி இருந்த து.   ஒரு சமயம் விசாகன் என்ற அந்தணன் வெகு தூரம் நடந்து வந்த  களைப்பினால், அந்த குளத்தில் சிரம பரிகாரம் செய்து கொள்ள இறங்கினான்.  நீரை கையால் எடுத்து குடித்து விட்டு அருகில் இருந்த மரத்தின் அடியில்  சிரம பரிகாரம் செய்து கொண்டான்.  உண்ணும் முன் செய்யும் சில வழக்கமான பிரார்த்தனைகள் இவற்றை செய்து விட்டு, தான் கொண்டுவந்திருந்த உணவை கையில் எடுத்துக் கொண்டு மரத்தடியில் அமர்ந்தான்.  குளத்து நீரில்  இருந்த ஹம்சங்கள் கூக்குரலிட்டது பெண்களின் கால் நூபுரங்கள் ஒலித்தது போல கேட்கவும், திடுக்கிட்டு எதிரில் யார் என பார்த்தான். இரு பெண்கள் அழகிய நீல நிற கண்களுடன் ஒருவள், மற்றவள் வேறு விதமான அழகுடைய கண்களும், கர்ணிகார, பத்ம ராக இவைகளின் வாசனை பொருட்களால் அலங்கரித்துக் கொண்டவர்களாக. அழகிய உடல் வண்ணமும் வாளிப்பும் கண்களைக் கவர நின்றிருந்தனர்.  இருவரும் நீல நிற மேலாடை (shawl)அணிந்திருந்தனர். 28/398

வந்தவர்களுக்கு விருந்தினர்கள் வந்தால் செய்யும் உபசாரங்களைச் செய்தான். இலைகளை குவித்து குளத்திலிருந்து சுத்தமான நீரை கொண்டு வந்து பருக கொடுத்தான். அவர்கள் அமர்ந்த பிறகு விசிறிக் கொள்ள பனை ஓலையாலான விசிறியைக் கொடுத்த பின் விசாரித்தான்.  வெட்கத்துடன் அவர்கள் எதிரில் அமரவும் தயங்கியவனாக,  உங்களைக் கண்டதில் மிக்க மகிழ்ச்சி.  இந்த இடத்தில் வசதியற்ற புல்லில் அமரச் சொல்வதில் எனக்கு தயக்கம் உண்டாகிறது. இந்த எளிய உணவை பகிர்ந்து கொள்ளுங்கள்  என்று தன் உணவையும் கொடுத்தான்.  உங்கள் தகுதிக்கும் மென்மையான உடல் வருந்த இந்த எளியவன் இருக்கும் இடம் வந்தது எதற்கோ என்று தெரிந்து கொள்ள ஆவல் மேலிடுகிறது. இது அந்தணர்களின் இயல்பான குணம். தவறாக நினைக்க வேண்டாம். சொல்லலாம் என்றால் சொல்லுங்கள்.  இது என்ன உணவா, இது என்ன ஆசனமா என நினைக்க வேண்டாம். இந்த சத்து மாவு- வழி போக்கர்கள் கொண்டு செல்லும் மாவால் ஆன பண்டம்-  அவர்களும் அதை விரும்பி உண்டு நீரையும் குடித்தனர்.ஆஹா, என்ன சுத்தமான குளிர்ந்த நீர் என்று பாராட்டவும் செய்தனர்.  தானே விசிறியால் வீசி அவர்களுக்கு களைப்பு நீங்க செய்த பின், என் நல்வினைப் பயனே, இன்று உங்கள் அறிமுகம் கிடைத்தது.  கல்யாணிகள்,உங்களை பெற எந்த ஜாதி புண்யம் செய்துள்ளது? இப்படி களைத்து போகும் வரை நடந்து வர என்ன காரணம் ? ருசியாக இருக்காது, இருந்தாலும் விரும்பி சாப்பிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி.

அவர்கள் சொன்னார்கள்.  சுவர்சனுடைய புத்ரிகள். எங்கள் தந்தையால்  வித்யாதர தலைவனுக்கு வாக்களிக்கப் பட்டவர்கள் நாங்கள் இருவரும். என் பெயர் இராவதி, இவள் சந்திர லேகா என் இளையவள். அதற்கு மேல் எங்களுக்கு தெரியாது. தந்தை அறிவார்.  ஜேஷ்டா  ( ஆனி மாதம்)  க்ருஷ்ண பக்ஷ துவாதசியன்று தக்ஷகன்  யாத்திரை என்ற காரணத்துடன் வருவான். அவனை நீங்கள் சுலபமாக அடையாளம் கண்டு கொள்ள முடியும். அவன் தான் வித்யாத்ரேந்திரன். நாங்கள் இருவரும் அவன் இரு பக்கங்களிலும் இருப்பதைக் காண்பீர்கள்.  சொல்லி முடித்தவர்கள் கண் முன்னாலேயே மறைந்தார்கள்.

சில நாட்களில் யாத்திரை என்ற பெயரில் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். அந்த பெண்கள் சொன்ன அடையாளங்களை வைத்து- சுருள் சுருளான ஆன கேசம், தலையில் நீர் வழிந்து கொண்டிருக்கும் என சொல்லியிருந்தனர்-  அந்த நாகனைக் கண்டு கொண்டான். 28/396

அவனும், அந்த பெண்கள் சொல்லியிருந்தார்கள் போலும், அவனை அடையாளம் கண்டு கொண்டு அருகில் வந்து பேசினான்.  நல் வரவு என்று சொல்லி சற்று நேரம் பேசிக் கோண்டிருந்தான். நடுவில் ஏதோ தோன்றியது போல, அந்தணனிடம் தன் குறையைச் சொன்னான்.  (அவனோ காற்றை புசிப்பவன், ஸ்வஸன- மூச்சுக் காற்று அதுவே அவன் உணவு.) நெருங்கிய நண்பன் போல, ‘ ப்ரும்மன்! ஒரு சில தன் மானம் மிக்கவர்கள், செய்யும் செயலை ஆராய்ந்து நல்லது பொல்லாது அறிந்து செய்பவர்கள்.  அளவறிந்து உண்பவர்கள், அல்லது அனுபவிப்பவர்கள், தங்கள் துக்கத்தை வெளிக்காட்டிக் கொள்வதில்லை.  நல்ல மனம் கொண்டவர்களும் கூட உதவி செய்ய வசதியோ, ஆற்றலோ இல்லாமல் போனால் வருத்தம் தெரிவிப்பார்கள். உண்மையாகவே வருந்தினாலும் தான் இவன்  துன்பம் குறையுமா?  அவர்களையும் மன வருத்தம் அடைய செய்தது தான் பலன்.  அதுவே பலசாலியாக, வசதியாக உள்ளவன் கேட்டால் அவனையே திருப்பி குறை சொல்வான்.  உனக்கு புத்தியில்லை, திறமையில்லை என்பான். மந்த மதி தற் பெருமை பேசுவான்.  பரிகாரமாக சில மட்டமான உபாயங்களைச் சொல்வான்.  சற்று நேரம் அவனுக்கு பொழுது போக்கு. எளியவன் ஒருவன் அகப்பட்டான், அவனைச் சீண்டி வேடிக்கை பார்ப்பது ஒரு ரகம்.  அல்லது கதை கேட்பது போல எப்படி இந்த துன்பம் வந்தது என்று ஆதி முதல் விசாரிப்பான்.  தன்னால் முடிந்த ஆறுதல் சொல்வான், அல்லது பரிதாபம் தெரிவித்து விட்டு நகர்ந்து விடுவான்.  அவனைப் பொறுத்தவரையில் மற்றவர்களிடம் பேச ஒரு விஷயம் கிடைத்தது அவ்வளவே.  எனவே மனதில் உயிருள்ளவரை, அல்லது முடிந்தவரை தன் துக்கத்தை வைத்துக் கொள்வதே நன்று.  மனம் வருந்தி தகிப்பது போல இருக்கும். அதனால் என்ன, ஒரு நாள் சிதையுடன் அதுவும் மறையும்.  எவன் தான் தன் மகன், மனைவி, பணியாள் இவர்களின் முகத்தைப் பார்த்தே மனதில் என்ன இருக்கிறது என்று யோசிப்பான். வாய் விட்டு சொன்னால் அன்றி வெளிப் பார்வைக்கு தெரியுமா?

பயிரை பாதுக்காக்கும் நாகங்கள் தாங்கள் அதன் பலனை அனுபவிப்பது இல்லை. ஒரு சில துறவிகள் அதை காவல் காக்கின்றனர்.  சிலர் சிகையுடன், சிலர் மழித்த தலையுடன் இருப்பர். புதிதாக அறுவடையாகும் வரை அவர்கள் விரதம் என்றும், முதல் தானியம் அவர்களுக்கே என்பது போலவும் ஒரு வழக்கத்தை அனுசரிக்கிறார்கள்.  அவர்கள் நாகங்களால் பயிர் அழியும் என்பது போல அவைகளை வதைக்கிறார்கள்.  இந்த ஒரு முறை அவர்கள் விரதம் முடியும் முன் புதிய தானியம் எங்களுக்கு கிடைக்கச் செய்.  எதற்கு என்பது புரியாமலே அந்தணன் சம்மதித்து பயிரை காவல் காவல் காத்துக் கொண்டிருந்த துறவிகளின் கவனத்தை தன் பால் இழுத்துக் கொண்டு அவர்கள் விரதம் பங்கமடையச் செய்தான்.  நாகராஜனோ,  புயல் வரச் செய்து நிலத்தில் பயிர்கள் எதுவும் மீதமில்லாம் அடித்துச் செல்ல செய்து விட்டான்.  உண்மையில் பயிர்களை காப்பது யார் என்று தெரிவிக்கவே.  உள்ளபடி நாகங்களுக்கான பங்கை தர மறுக்கும் நிலத்தின் உரிமையாளர்களும் அதன் பின் மனம் திருந்தி நாகர்களுக்கு உரிய பாகத்தை தரலாயினர். 30/398 

நாகர் தலைவன் அந்த அந்தணருக்கு நன்றி தெரிவிக்க தன் இருப்பிடமான குளத்தின் அடியில் இருந்த பாதாள மாளிகைக்கு அழைத்துச் சென்றான். அங்கு பலவிதமான போஜனங்கள், மற்ற வசதிகளுடன் மகிழ்ச்சியுடன் கவனித்துக் கொண்டான்.  நாக கன்னிகைகள் இருவரும் அன்புடன் உபசரித்தனர். தினமும் ஒரு புது அனுஒபவம். தினமும் புதிதாக ஒரு விஷயம் அவர்களிடம் அறிந்தான். சில காலம் இருந்த பின் தன் இருப்பிடம் செல்ல அனுமதி பெற்று கிளம்பினான்.  நாக ராஜன் ஏதாவதி பிரதி பலனாக தருகிறேன் எனவும், சந்திர லேகா என்ற இளையவளை யாசித்தான்.  அது எப்படி சரி வரும் என்ற சந்தேகம் இருந்தாலும், தருவதாக சொன்னதால் அவளையும், ஏராளமான தனம், ரத்தினங்களுடன் அளித்தான்.

அந்த செல்வத்துடன் அந்த நாக பெண்ணுடன் தன் ஊரான மஹா நரபுரம் வந்து சேர்ந்தான். அந்தந்த உத்சவ காலங்களில் சிறப்பாக உத்ஸவங்கள்  செய்து மகிழ்ச்சியுடன் இருந்தான். புஜகேந்திரனின் மகளும் அனுசரணையாக இருந்தாள். தன் நற்குணங்களாலும், அன்பினாலும் அவனுக்கு தகுந்த மனைவியாக வாழ்ந்தாள். ஒரு சமயம், வீட்டின் உப்பரிகையில் நின்றிருந்தாள்.  கட்டவிழ்த்துக் கொண்டு ஓடி வந்த ஒரு குதிரை கீழே முற்றத்தில் உலரப் போட்டிருந்த தானியத்தை கண்டு உண்ணலாயிற்று.  வேகமாக வந்தவள் தலையில் அணிந்திருந்த முகத்திரை நழுவியதை ஒரு கையால் பிடித்துக் கொண்டு, மற கையால் அந்த குதிரையை அடித்தாள். அதுவும் பாதி உணவை கவ்விய வாயுடன் அகன்றது. ஆனால் நாக ராஜனின் மகள் கை பட்ட இடம் சுவர்ணமாக ஒரு கறை அதன் முதுகில் தென்பட்டது. யதேச்சையாக நகர் வலம் வந்து கொண்டிருந்த நர தேசத்து என்ற அரசன், யார் அந்த பெண் என்று தன் ஒற்றர்கள் மூலம் விசாரித்தான். அந்தணருடைய மனைவி என்று அறிந்த பின்னும் அவன் மனம் அவளிடம் ஈடுபாடு கொண்டது. காமனின் வசம் ஆனவனுக்கு மனதில்  காமம் உன்மத்தமான வாரணம்- யானையே அலைக்கழிப்பது போல வாட்டியது.  அபவாத பயம் அங்குசமாக தடுத்து நிறுத்தியது போல சில காலம் சென்றது.  அதே கவனம், அதே சிந்தனை, மேன் மேலும் வளர்ந்த ஆசை, அவளைப் பற்றியே விசாரனைகள்.  அந்த குதிரை வந்ததும், அதன் மேல் பட்ட சுவர்ண கறையும் அவனுக்கு தெரிவித்தனர்.  அரசனுக்கு அனுகூலமான செய்திகளைச் சொல்லியே தன் காலத்தை ஓட்டுபவர் எவ்வளவு மனிதர்கள்  உள்ளனர்.  மெள்ள மெள்ள தயக்கமும் நீங்கியது. சில அரண்மனை பெண்களை தூது அனுப்பினான். அதுவும் பலன் இல்லை.  தானே  வந்து அவள் கணவனான  அந்தணனை வேண்டினான். அந்த அளவுக்கு ஆசை வெட்கமறியாதது.

அவனும் மறுக்கவே, நாக கன்னியை அபகரிக்க ஆணையிட்டு சேவகர்களை அனுப்பினான்.  வாசலில் காவலர்கள் முற்றுகை இட்ட சமயம், பின் வழியாக அவளையும் அழைத்துக் கொண்டு நாக லோகமே சென்று விட்டான். நாக ராஜன் அளவில்லா கோபத்துடன் தன் இருப்பிடத்திலிருந்து வெளி வந்து இடியும் மின்னலுமாக மழையுடன்  அந்த நகரமே இருண்டு போகச் செய்தான்.   பயங்கரமான காற்று வீச, எங்கிருந்தோ கற்கள் வந்து விழ, அந்த   நகரமே  ஒட்டு மொத்தமாக அழித்தது. 32/398

எரிந்து பொசுங்கிய பிராணிகளின், மனிதர்களின் உடல்கள்,   ஆடைகளும், கொடிகளும் மயிலின் இறகு போல வண்ண மயமாகத் தெரிய, விதஸ்தா என்ற அந்த நகரம் அலங்கோலமாக காட்சி   அளித்தது.  முன் ஒரு சமயம் சக்ரதரன்- சக்கரத்தை கையில் வைத்துள்ள பகவான் மகா விஷ்ணு, தன்னை சரணடைந்தவர்களை காக்க, தன் கை சக்கிரத்தால்  பூமியை அழிக்க வந்த  மது கைடபர்களுடன் செய்த  யுத்தத்தை நினைவுறுத்தியது. 

பயங்கரமான இந்த அழிவைக் கண்ட நாகர் தலைவன் மிகுந்த வேதனைக் குள்ளானான். அந்த இடத்தை விட்டே விலகினான்.  வெகு தூரம் சென்ற பின் ஒரு மலையின் அடிவாரத்தில் ஒரு பெரிய ஏரியை கட்டுவித்தான். அதில் பால் போல வெண்ணிற நீரை நிறைத்தான். அமர்நாத் யாத்திரை செல்பவர்கள் இன்றளவும் அந்த ஏரியை தரிசித்து விட்டுச் செல்கிறார்கள்.

மாமனாரின் அருளால் தானும் நாகனாக மாறி விட்ட அந்தணன் பெயரில், மருமகனுக்கான ஏரி என்றே அழைக்கின்றனர்.  பிரஜைகளை காப்பதாக சபதம் செய்து பதவி ஏற்கும் அரசர்கள் விதி வசத்தால், அல்லது தங்கள் புத்தியின் விபரீதத்தால், இத்தகைய அழிவையும் கொண்டு வந்து விடுகிறார்கள். ஒரு  காரணமும் இன்றி, தாங்களே எமனாக  ஒட்டு மொத்தமான ஒரு நகரம் அழியச் செய்வோம் என்று மனதால்  கூட  நினைத்து  இருப்பார்களா?  இன்றளவும் அந்த நகரம் வற்றி உலர்ந்து பரிதாபமாக காட்சி அளிக்கிறது. ஏரி மட்டும் இந்த வரலாற்றை நினைவுறுத்துவது போல   இன்றும் நிலைத்திருக்கிறது.  அருகில் உப சக்கரதரம் என்று அருகில் ஒரு ஊர் அமைந்துள்ளது.

அரசனின் தவறான ஆசை மட்டும் தானா இந்த அளவு அழிவுக்கு காரணம்?  மற்றான் மனைவியை ஏன் நாடவேண்டும், அது தவறு என்று தானே ராவணன் சரித்திரமும் கேட்டிருக்கிறோம். அங்கும் இதே போலத் தான் மொத்தமாக அழிந்தனர். பிரஜைகள் என்ன தவறு செய்தனர்? அது தான் இன்றளவும் விடை தெரியாத புதிர்.

நாற்பது ஆண்டுகள் முடிய சில மாதங்களே இருந்த நிலையில் அந்த அரசனின் ஆட்சி முடிந்தது.  சில ஆண்டுகளுக்குப் பின் அந்த கின்னரபுரம் பழையபடி தனது வளமான நிலையை திரும்பப் பெற்று கந்தவர்களின் நகரம் போல பெருமை பெற்றது.

யார் செய்த நல் வினையோ, அரசனின் ஒரே  மகனை  அவனை வளர்க்கும் பொறுப்பில் இருந்த தாத்ரி, தன்னுடன் விஜயக்ஷேத்ரம் என்ற இடத்துக்கு அழைத்துச் சென்றிருந்தாள். அதனால் அவன் பிழைத்தான்.  சித்தன் என்ற பெயருடன் அரசாட்சியை ஏற்றான்.  வேணிற் காலத்தில் வறண்ட நிலங்களை மழை வர்ஷித்து மேகங்கள் காப்பது போல அந்த பூமியை சீராக்கி வளமுறச் செய்தான்.  தந்தையில் அருகில் இருந்தவன் ஆனதால் ஆட்சி முறைகள் அறிந்திருந்தான். அவனுடைய முடிவும் ஒரு பெரிய பாடத்தை கற்றுக் கொடுத்திருந்தது. தன்னளவில் ஒழுக்கமும், நேர்மையான குணங்களுடனும் வாழ்ந்தான். உடல் நலம் பேணுவதிலும் கவனம் செலுத்தினான்.  ஆபரணங்களையும் தவிர்த்தான். பிறை ஸூடி பெருமானுக்கு மட்டுமே ஆபரணங்களும், அலங்காரமும்.  தந்தையிடம் பல நல்ல குணங்கள் இருந்தனவே. அவைகளை மட்டும் ஏற்றுக் கொண்டான். சம்சாரம் அசாரம் என்று உபதேசங்களை அறிவான். மத்திய வயது போக விலாசங்களுக்கு என்பர், ஆயினும் அவன் தன் கட்டுப்பாட்டை இழக்காமல் இருந்தான். சேற்றில் இந்துவின் பிரதி பிம்பம்  மாசடைந்தால் வானத்து நிலவில் தொற்றிக் கொள்ளுமா என்ன? 33/398

ராஜ குலத்தினருக்கு இது ஒரு வர பிரசாதம். நேர்மையாக, பிரஜைகளின் நலனே கவனமாக ஆண்டால், பரலோகம் பற்றி அவனுக்கு கவலையே வேண்டாம்,  தானாக நல்ல கதி அடைவான் என்பது நியதி. அதனால் தர்ம வழியிலேயே தன் அரசாட்சியை செய்தான். அறுபது ஆண்டுகள் நலமாக இருந்து நல்லாட்சியைக் கொடுத்தவன் இயற்கை எய்தினான்.  தேகத்துடனே  சிவலோக பிராப்தி அடைந்தான் என்பர். 

அவன் தந்தையிடம் சேவகர்களாக இருந்தவர்களும் நல்ல கதியை அடைந்தனர்.  ஒரு செடி அதன்  மேல் வைத்த பாரத்தால் மேல் நோக்கி வளர முடியாமல் கவிழ்ந்தே இருந்தை யாரும் கவனிக்கவில்லை.  பருவம் வந்ததும் மலர்கள் வரவும் அனைவரின் கவனத்தையும் இழுத்து  விடும் என்பது நாம் நேரில் காணும் உண்மை. அது போல அரச அல்லது அலுவலக சேவகர்கள் தங்கள் மேலதிகாரிகளுக்கு பதில் சொல்ல வேண்டியவர்கள். அதைச் செய்வதில் தங்கள் விருப்ப வெறுப்புகளைச் சொல்லவா முடியும். ஆனாலும் காலம் அவர்களை கை விடுவதில்லை. செய்யும் தொழிலே தெய்வம் என இருப்பவர்கள் தங்கள் கடமையைச் செய்தவர்களாவர். அதனால் அவர்கள் நன்மையே அடைந்தனர் என்று கவி சொல்கிறார்.    தேவலோகத்தில் அரசனை படஹம் என்ற வாத்தியங்களை வாசித்து வரவேற்றனராம். அவனுக்கு உத்பலாக்ஷ-  உத்பலம் – நிலவின் வருகையுடன் மலரும் மலர்- அது போன்ற கண்களுடையவன் என்று புகழ்ந்தனராம்.

அவன் மகன் ஹிரண்யாக்ஷன் என்பவன்.  தன் பெயரில் ஒரு நகரத்தை கட்டினான் அல்லது அந்த நகருக்கே தன் பெயரைச் சூட்டினான்.  அவனும் முப்பதேழு ஆண்டுகள்,  ஏழு மாதங்கள்  ஆண்ட பின் அவன் மகன் ஹிரண்ய குல என்பவன் பட்டத்துக்கு வந்தான்.  ஹிரண்யோத்சன், வசு குலன் என்று இருவர் சந்ததியர்.

 அறுபது ஆண்டுகள் இவர்களின் ஆட்சி நீடித்தது. அதன் பின் மிலேச்சர்கள் என்ற பாரத தேசத்து எல்லை தாண்டி வாழ்ந்த குலத்தினர், படையெடுத்து வந்தனர். பெரும் போர் மூண்டது. மிஹிரகுலன் என்ற அடுத்த தலைமுறை அரசனாக வந்தவன் கடுமையாக போரிட வேண்டி இருந்தது.  தென் திசை தான் யமனுக்கு. ஆனால் வட திசையில் இருந்த வந்த எதிரிகளுக்கு இவனே தென் திசையாக- யமனாக இருந்து விட்டான் என்று பாடினர்.  கழுகு போலவும், காகம் போலவும் குறி தவறாது இரையைக் கண்டவுடன் வந்து பிடிப்பது போல, இவன் எதிரி படையின்  நடுவிலும் முக்கியமான வீரர்கள் தலைவனை கண்டு கொள்வான் என்பராம்.  ராஜகுலத்து வேதாளம் என்றும் பெயர் பெற்றான்.  நல்லன செய்வதிலும் சிறந்தவன். சிறுவர்கள், குழந்தைகளை தயவுடன் பார்த்தான். பெண்களை மதிப்புடன் நடத்தினான். முதியவர்களிடம் மரியாதையுடன் நடந்து கொண்டான்.  அந்த அளவு எதிரி சைன்யத்தை அழித்தவன் என்பது இன்னொரு முகம்.   போரில் தயங்காமல் வீரத்தைக் காட்டுவதும் அரசனுக்குரிய ஒரு குணமே.

இன்னது தான் செய்வான் என்ற கணிக்க முடியாத குணம். ஒரு சமயம் தன் அந்த:புரத்தில் மனைவி அணிந்திருந்த  மேல் ஆடையில் மார்பகங்களின் பகுதியில்  பொன்னால் வேலைபாடு செய்திருந்தைக் கண்டு பெரும் கோபம் கொண்டான்.  அது இலங்கையில் தயாரித்த  ஆடை என்று பணிவிடை செய்யும் பெண் சொன்னாள்.  அந்த ஆடையில் பொன்னால் அந்த நாட்டு அரசனின் பாதம் பொன் இழைகளால் வரைய பட்டிருந்த து.  என் மனவியின் மார்பில் அந்த பாதங்கள்  இருப்பதா என்று ஆத்திரம்.   அது தான் அந்த கோபத்துக்கு காரணம்.  உடனே படைகளுக்கு  உத்தரவிட்டான். இலங்கையை முற்றுகையிடுவோம் என்று முழங்கினான். பெரும் படை யானைகள் மத ஜலம் பெருக ஓடி வந்தன.  .

சிங்கள தேசத்தில் ஆடைகள் நரேந்திரன் எனும் அட்சியில் உள்ள அரசனின் பாதங்கள் வரைவது வழக்கமாம்.  பணிப் பெண் சொன்னாள். யமுனைக் கரையில் நடப்பது போல சுலபமாக மகா சமுத்திர கரையை அடைந்து விட்டன.

தன் மனைவியின் ஆடையில் அவன் பாதச் சுவர்டுகளைக் கண்ட ரோஷம் அவனை நடத்திச் சென்றது.   

தூரத்தில் இருந்தே பெரும் படையைக் கண்ட இலங்கா வாசிகள், இது என்ன திரும்பவும் ராம ராவண யுத்தமா எனக் கலங்கினர்.  தோற்ற அரசனை விலக்கி புது அரசனை நியமித்தான். அந்த நகரத்து மக்களும் ஸூரியனின் கிரணங்களுடன் இருப்பது போன்ற கை வேலை செய்த ஆடைகளை, துணிகளை கொண்டு வந்து கொடுத்தனர். திரும்பும் வழியில் சோழ, கர்ணாட, நர்மதைக் கரையில் குஜராத்தை அடையும் முன் லாட என்ற பிரதேசம் என்று அங்கு இருந்த  அரசர்கள்  இந்த  மாபெரும் படையின் அளவைக் கண்டே எதிர்த்து போரிட வரவில்லை. அதை வைத்தே  திரும்பி ஊர் வந்த பின்  அவர்கள் எதிர்க்காதாலேயே தோற்றார்கள் என்று அறிவித்து விட்டான்.

காஸ்மீர  தேசத்து நுழை வாயிலில் விழுந்த ஒரு யானையின் பிளிறலால் முதலில் மகிழ்ந்தான். பின் என்ன தோன்றியதோ, நூறு பலசாலிகளான யானைகளை வீழ்த்தி விட்டான். தான் தோன்றித் தனமாக நடந்த இந்த நிகழ்ச்சி அவனுடைய நிலையற்ற குண குறைவு என்று கவி சொல்கிறார்.  இது போல பல அசட்டுத் தனமான செய்கைகளை சொல்லாமல் விடுகிறேன்,  பல நற்குணங்களுக்கு இடையில் ஒரு சில துஷ்டத்தனம், அதை வர்ணிப்பானேன்.  சுண்டு விரலில் பட்ட காயம் போல  பாபிகளைப் பற்றி பேசுவது கூட அனாவசியம் என்ற தன் எண்ணம் என்று சொல்கிறார்.

எதனால் அப்படி ஒரு களங்கம் போல ஒரு துர்குணம் வாய்த்தது என்பதை யாரால் அனுமானிக்க முடியும்?   அவனே  ஸ்ரீநகரத்தில் மிஹிரேஸ்வர் என்ற சிவ பெருமானுக்கு பெரிய கோவிலைக் கட்டுவித்தான்.  ஹொலாட என்ற இடத்தில் மிஹிரபுரம் என்ற நகரத்தை கட்டுவித்தான்.  காந்தார தேசத்து சில வறிய அந்தணர்கள் அவனிடம் அக்ரஹாரம் எனும் தாங்கள் வாழ வீடுகளை தானமாக  பெற்றனர்.  வறுமை காரணமாக இருக்கலாம் அல்லது அவர்களுடைய அறிவும் அந்த அளவே இருந்திருக்கலாம்.

கரு மேகம் வானத்தை மூடினால் மயில்கள் மகிழ்ந்து ஆடும்.  அதே சமயம் தூய வெண்ணிறம் கொண்ட ஹம்ஸங்கள் வசந்த காலத்து நிர்மலமான வானத்தில் நிலவைக் கண்டு மகிழும்.  தானம் கொடுப்பவனுக்கும், கை நீட்டி வாங்குபவனுக்கும் இடையே இப்படி ஒரு ஒற்றுமை  இருப்பது இயல்பே.

அந்த அரசனை பூமியில் பிறந்த பைரவன் என அழைத்தனர். கடைசி காலத்தில் தன் வினைகளின் பயனாக பல நோய்கள் கண்டு வருந்தி மறைந்தான். மறைந்தவனைக் குற்றம் சொல்லக் கூடாது என்று ஒரு சிலர் அவன் செய்த நற்செயல்களைச் சொல்லி, துஷ்டனாக இருந்தாலும் நிறைய தானம் செய்தான் என்பதை பெரிதாகச் சொல்லி   தான் செய்த பாப செயல்களின் பலனையே அனுபவித்து மறைந்தான் என்றனர்.

கொள்கையில்லாத DARDS-दारद- BHATTA-भाट्ट – பாட்ட, மிலேச்சர்கள் என்ற பலர் விடாது காஸ்மீர தேசத்தை ஆக்ரமித்து அதன் இயல்பான ஆன்மீக வாழ்வை சிதைத்தனர்.  அவர்களுடன் உக்ரமாக போராடி விரட்டினான்.  காந்தார தேசத்து அந்தணர்களுக்கு விஜயேஸ்வர என்ற இடத்தில் வீடுகள் கொடுத்தான்.  தன் உயிரையே நாட்டுக்காக தியாகம் செய்தான் என்று போற்றுவோரும் இருந்தனர்.  அரசனுக்குரிய மரியாதைகளுடன், தகனம் செய்தனர்.   சிங்கத்தின் கம்பீரம் தான் போற்றத் தக்கது. அதன் கொல்லும் குணம் அல்ல  என்பது இவர்கள் வாதம்.  நாக ராஜனின் கோபன் தகித்து விட்டது என்றும் சொல்வர். இப்படி நாட்டு பாடல்களில் இடம் பெற்றான்.

சந்திர குல்யா நதியின் போக்கை மாற்றிய பொழுது நடுவில் ஒரு பாறை தடுத்தது.   அரசன் அதை அகற்ற தேவதைகளை வேண்டி தவம் செய்தான். அவன் கனவில் ஒரு செய்தி வந்தது. பரி சுத்தமான ஒரு  பெண் தொட்டால் நகரும் என்பதாக. உடனே ஊரில் உள்ள அனைத்து பெண்களையும் அழைத்து தொடச் செய்தான். கடைசியில் ஒரு ஏழை குயவன் குலத்துப் பெண் தொட்டு அது நகர்ந்து வழி விட்டது.  குல மகளிர் யாரும் இந்த செயலில் தேறவில்லை என்பதால் ஏராளமான பெண்களை அவர்கள் கணவன் மார்கள், சகோதர்கள், பெற்ற குழந்தைகளுடன் வெட்டிச் சாய்த்தான். – இப்படி ஒரு பாடல்.

இந்த கதை எப்படியோ, ஆனால் அவன் காரணமின்றி பல பிரஜைகளை வெட்டி சாய்த்தான் என்பது வரை நிஜம் என்று சொல்வர்.  இந்த அளவு குணமில்லாதவன் என்று தெரிந்தும் மக்கள் ஏன் அவனை விட்டு வைத்தனர்.  அவன் வணங்கி வழி பட்ட கடவுளர்கள் அவனுக்கு இந்த அனுமதியை அளித்திருக்கின்றன என்று பேசப்பட்டது.

அவன் மகன் BAKA- பகன் என்பவன் அரசனான். பிரஹ்லாதன் போல இவனும் நியாயமான குணவான்.  இவனும் எந்த சமயம் மாறுவானோ என்ற பயத்துடனே பிரஜைகள் வாழ்ந்தனர். ஆனால் வேணிற்காலத்து கடும் தாக்கத்துக்குப் பின் பெரு மழை வந்தது போல இவனால் பெரிதும் ஆறுதல் அடைந்தனர்.  தர்மம் தழைத்தது என்று மகிழ்ந்தனர்.  இருண்ட குகையிலிருந்து வெளி வந்தால்  தூரத்தில் வெளிச்சம் தென் படும் என்பது (இது ஒரு மறைச் சொல்) என்றனர்.

இந்த அரசன்  நியாயமாக  ஆண்டான். பகவதி என்ற கால்வாயை நிர்மாணித்தான். அதன் கரையில்,  பகஸ்வப்ரா -भकश्वभ्रा -என்ற இடத்தில் உள்ள சிவன்  கோவிலில் சிவ பெருமானை பகேச-भकेश-  என அழைத்தான்.  லவனோத்சவம்  என்ற நகரை நிர்மாணித்தான்.  அறுபத்து மூன்று ஆண்டுகள், பதின் மூன்று நாட்கள் ஆண்டான். தன் மகன் கள், அவர்களின் சந்ததியர் என்று அனைவரும் அருகில் இருக்க விடியற்காலையில் மறைந்தான்.  மழை பெய்து அவன் மறைவை வானமும் கொண்டாடியதாம்.

க்ஷிதிநந்தன்  என்ற அவன் மகன் பட்டத்துக்கு வந்தான். முப்பது ஆண்டுகள் வாழ்ந்தான். அதன் பின்  வசுநந்தன் என்ற அவன் மகன் அடுத்த ஐம்பத்திரண்டு ஆண்டுகளும் இரண்டு மாதங்களும் ஆண்டான். அவன் ஸ்மர சாஸ்திரம் என்ற நூலை எழுதி புகழ் பெற்றான். அவன் மகன் நர, அக்ஷ என்ற அவன் பின் வந்த அரசர்கள், சில காலம் தொடர்ந்து  அறுபது ஆண்டுகள் ஆண்டனர். அதன்  பின் Gopadhidhyan – கோபாதித்யன் வந்தான். அவன் காலத்தை பொற்காலம் என்பர்.  தனது நாட்டை அதைச் சுற்றி இருந்த தீவுகளுடன் சிறப்பாக பாலித்தான்.  நல்ல ஆளுமையும்  செயல் திறமையும் உடையவனாக இருந்ததால் அவன் காலத்தில் பிரஜைகள் தங்கள் தொழில்களைச்  செய்து கொண்டு செழிப்பாக வாழ்ந்தனர்.

அக்ரஹாரங்கள் என்ற வாழ்விடங்கள், பலருக்கும் கட்டிக் கொடுத்தான்.  ஸாமங்காச, கோல, காகிகா , ஹடிக்ரமா , ஸ்கந்தபுரம், ( Samangasa, khOla, Khagika, Hadigramaa, skandhapura)  என்பவை முக்கியமானவை.  Gopa hill-  கோபா மலை என்ற இடத்தில் ஜியேஷ்டேஸ்வரா  என்ற சிவன் கோவிலும், ஆதியிலிருந்து அங்கு வசித்த அந்தணர்களுக்கு அதுவரை தானம் வாங்க மறுத்தவர்கள் என்பதால் வற்புறுத்தி கோப அக்ரஹாரம் என்ற வாழ்விடங்கள் அமைத்துக் கொடுத்தான்.

அங்கும் வர்ணாசிரம நியமங்களை அனுசரிக்காத பலருக்கு, புக்ஷீரவாடிகா என்ற இடத்தில் வீடுகள் கட்டிக் கொடுத்தான்.  பூண்டு முதலிய மறுக்கப்பட்ட பொருட்களை உண்ட அந்தணர்கள் உட்பட பயனடைந்தனர்.

மற்ற இடங்களில் இருந்தும் சாஸ்திரங்கள் அறிந்தோடு, அதன் நியமங்களுடன் வாழ்ந்த அந்தணர்களை அழைத்து வந்து அவர்களுக்கு வேண்டிய தேவைகளை நிறைவேற்றியும், அக்ரஹாரங்கள் கொடுத்தும் காஸ்மீர தேசத்தில் நிம்மதியாக வாழச் செய்தான்.  உத்தமனான லோக பாலன் என்று புகழப் பட்டான்.  பிராணி வதம் செய்யாமல் யாகங்களை செய்வித்தான்.  அறுபது ஆண்டுகள் முடிந்து ஆறு நாட்களே ஆன நிலையில் தன் நற்செயலகளின் பலனாக தேவ லோகம் சென்றான் என்பர்.

அவன் மகன் கோகர்ணன் என்பவன் அரசனானான்.    

கோகர்னேஸ்வர என்ற பெயரில் கோவிலை கட்டி புகழ் பெற்றான். ஐம்பத்து எட்டு ஆண்டுகளும் முப்பது நட்களும் அவன் ஆட்சி நீடித்தது.

அவன் மகன் நரேந்திராதித்யன் கிங்கிலான் என்று அழைக்கப் பட்டான். அவனும் பூதேஸ்வரர் ஆலயம் கட்டி மேலும் குருவின் அருளால் உக்ரேஸ்வரர் என்ற கோவிலும் தேவியின் ஸ்ரீ சக்ரம் உடைய கோவில்களையும் கட்டினான். முப்பத்தாறு ஆண்டுகளும் நூறு நாட்களும் வாழ்ந்தான்.  அந்த வயதிலேயே நல்லாட்சியை கொடுத்து மக்களின் நன்மதிப்பை பெற்றான்.

அவன் மகன் யுதிஷ்டிரன் என்ற பெயரில் பட்டத்துக்கு வந்தான். மிக சிறிய கண்கள் காரணமாக கண் தெரியாதவன் என்ற பொருளில் அந்த अन्ध- குருடன் யுதிஷ்டிரர் எனப்பட்டான்.  தந்தை வழி வந்த சுலபமான ராஜ்யம், அதை நிதானமாக ஆண்டான்.  முன் இருந்த அரசர்களின் செயல்களை அருகில் இருந்து அறிந்தவன் ஆனதால் விவரம் தெரிந்து அரசாட்சியை சிறப்பாக செய்தான்.  அரச பதவியும், செல்வமும் அவன் புத்தியை மாற்றி விட்டன போலும். மதிக்க வேண்டியவர்களை மதிக்காமலும், அருகில் வித்வான்களாக இருந்தவர்களை கண்டு கொள்ளாமலும் வெறும் துதி பாடும் வீணர்களின்  சொல்லை பெரிதாக விரும்பினான்.  அனுபவம் மிக்க ஆலோசகர்கள் வேறு வழியின்றி அந்த அரசை விட்டு விலகினர்.  யோகிகள் அனைவரையும் சமமாக பார்க்கலாம். ஆனல் அரசு பொறுப்பில் இருப்பவன் அவ்வாறு அனைவரையும் அருகில் வர விடக் கூடாது.  அரசின் நலம் விரும்பிகளா, இல்லையா என்பதை அவர்கள்  தன்னை நெருங்கும் முன் தெரிந்து கொண்டு நல்லவர்களை அருகில் சேர்த்தும், மற்றவனை  அவனறியாமல் விலக்கியும் வைக்கத் தெரிய வேண்டும் என்பது அரச நீதி.  

துதி பாடுபவர்கள் கூட்டம் அவன் அறிவின்றி செய்த செயல்களையும் புகழ்ந்தனர், அந்த புகழ்ச்சியில் நியாயமாக செய்ய வேண்டியதை மறந்தான்.  பெண்களிடம் அதிக ஈடுபாடு கொண்டு மயங்கி தன் நிலை மறக்கும் சாதாரண குடி மகனாக ஆனான்.  எதிரில் ஒருவனை பாராட்டுவதும், பின்னால் தவறாக பேசி சிரிப்பதும்  போன்ற தன் அறியாமை வெளிப்பட பேசிய பேச்சாலும், தவறான கொள்கைகளாலும் அரசன் என்ற சொல்லுக்கு தகுதியில்லாதவனாக ஆனான்.  சந்தர்ப வாதிகளான அந்த வீணர்கள் அரசன் பெயரில் தாங்கள் அதிகாரம் செய்தனர்.  அரண்மணை நடை பாதைகளில் அவர்களே நிரம்பியிருந்தனர். ராஜ்யம் பல நூறாக பிளந்து வீழ்ந்தது.

அரசன் விழித்துக் கொண்ட பொழுது காலம் கடந்து விட்டிருந்தது. கோபுரத்தின் உச்சியிலிருந்து தலை குப்புற விழுந்தவன் போல ஆனான்.  திரும்ப வந்து சீராக்க முன் இருந்த ஆலோசகர்கள் யாரும் முன் வரவில்லை. பிரஜைகள் போர் கொடியுடன் வீதிக்கு வந்தனர். அரசன் துரத்தி அடிக்கப் பட்டான். ஊருக்கு வெளியில் வந்து தன் தேசத்தின் நிலையை பார்த்தவன்  திகைத்தான். தானிய கிடங்குகள் இருந்த இடங்கள் வெறிச்சோடின. எங்கும் குப்பையும் அராஜகமும். இந்த போராட்டத்தில் அரண்மனையின் உள்ளேயே இருந்த பெண்டிர் அலங்கோலமாக ஓடி வந்து அவனைச் சுற்றி  நின்று வசை பாடினர்.  நெல்லிக்காய் மூட்டை  விழுந்து சிதறியது போல அவனைச் சுற்றி இருந்தவர்கள்  விலகி பல திக்குகளிலும் மறைந்தனர். அவனுடைய பொக்கிஷம் துரோகிகளான நண்பர்களாலேயே ஸூரையாடப்பட்டன.  இவ்வாறு சிறப்பாக ஆரம்பித்த அவனது அரசாட்சி,  பெரும் பள்ளத்தில் விழுந்து மறைந்தது.

செய்வதறியாது நடந்தான். அனுசரணையான பட்ட மகிஷி என்ற ராணி மற்றும் சில மனைவிகள் உடன் வந்தனர்.   அடர்ந்த காட்டுக்குள் கால் போன படி நடந்தனர். ஆரம்பத்தில் இருந்த பயமும் களைப்பும் இப்பொழுது இல்லை. ஒரு வகையில் காட்டின் பசுமையையும், பல விதமான மணமிக்க பச்சிலைகள், மலர்கள், இலை துளிர்களையும் கவனித்து பார்த்து உடல் நலமும் மன நலனும் அடைந்தனர்.  கழுகுகள், ராஜ்யத்தைக் கவரவே சுற்றி வந்திருக்கிறார்கள் அந்த கொடிய வேட தாரிகள் என்பது புரிந்தது. இது வரை கவனியாது இருந்த, அல்லது ஒரு பொருட்டாகவே  நினைக்காத வன விலங்குகள் அருகில் வந்து ஆறுதல் சொல்வது போல அமர்ந்தன.  பறவைகள் கூட்டமாக வந்து தங்கள் குரலில் ஏதோ சொல்லி சமாதானம் செய்வது போல சுற்றி வந்தன.  அரசனும் அவன் மனைவிகளும் சற்று தெளிவு பெற்றவர்களாக இவைகளை அரண்மனை வாசல் வரை கூட வர விட்டதில்லையே,  பேரி என்ற பெரிய தாள வாத்தியம் அதன் ஓசைக் கேட்டே  பறவைகள் பயந்து விலகும்.  மதம் கொண்ட யானைகள் மீது பவனி வரும் பொழுதும் அதன் மேல் கொடி அசைந்து நிழல் தர  நகரில் உலா வந்த அரசிளம் குமரிகள்.  வீட்டின் உள்ளேயே இருந்து பகலா இரவா என்பது கூடத் தெரியாமல் வாழ்ந்தவர்கள்.

ராஜ்யம் கை விட்டுப் போன பின் தான் அரசன் சிந்திக்க ஆரம்பித்தான் போலும்.  ஆன்மிக சிந்தனைகள் வந்தன. கண்களில் நீருடன் மலர்களும் அட்சதையும் தெளித்து வழி அனுப்பிய நகரத்து சாதாரண பிரஜைகளின் அன்பு மெய் சிலிர்க்க வைத்தது. முடிந்தவரை அனுபவித்து விட்டு கிடைத்ததை சுருட்டிக் கொண்டு போன வேட தாரிகளை அருகில் வைத்து போஷித்தோமே என்று வருந்தினான்.

சிரம பரிகாரமாக ஒரு மரத்தடியில் அமர்ந்து கிளைகளில் ஓடிக் கொண்டும் ஏறி இறங்கிக் கொண்டும் இருந்த வானரங்களின் செய்கை தனக்கு ஏதோ உபதேசம் செய்வது போல உணர்ந்தான்.   மலையின் சிகரங்களில் தேவையான பழங்களும், கொடிகளில் காய்களும்  தங்களுக்கு இருப்பதை இவை தெரிவித்தனவோ.  மலையில் வழி அமைத்துக் கொண்டு நடந்து சென்ற பொழுது பழைய வாழ்வை நினைத்து அரண்மனைப் பெண்கள் அலைந்து களைத்து விட்ட சமயம் பூமி பாலர்கள் என்ற அந்த பிரதேசத்து தலைவர்கள், முக்யஸ்தர்கள் அன்புடன் நல் வரவு சொல்லி, உபசாரமாக பேசி, உணவும் நீரும் அளித்து அவர்கள் ராஜ்யத்தை  விட்டு வெளியேறியதையே மறக்கச் செய்து விட்டனர்.  சுஜனா: மிக நல்ல மக்கள், தன் ராஜ்யத்தின் ஒரு பகுதியில் இப்படியும் மக்கள் இருக்கிறார்கள் என்பதை அறியாமல் போனோமே என நினைக்கும் அளவு அவர்கள் விருந்தோம்பல் இருந்தது.

இதுவரை, காஸ்மீரக மகாமாத்ய சம்பக பிரபு என்பவரின் மகனான கல்ஹணன்  (கவியின் பெயர்)  ராஜதரங்கினீ என்ற அவரது காவியத்தின் முதல் தரங்கம் நிறைவுறுகிறது.

நற்பதாயிரம் ஆண்டுகளும், ஒன்பது திங்களுக்கும்  சற்று அதிகமான காலம் இந்த முப்பத்தெட்டு அரசர்களின் அரசாட்சி பற்றிய செய்திகள் இவை.

மரமும் மனிதனும்

மாதுள மரத்தில் ஒரே ஒரு பழம் மட்டும் உச்சாணிக் கிளையில் இருக்கிறது. மற்ற பழங்கள் பறிக்கப் பட்டோ, தானே விழுந்தோ மறைந்த நிலையில் பருவ மாறுதலால் இலைகள் உலர்ந்து விழுந்து அடுத்து துளிர்களும் வந்த நிலையில் இந்த பழம் மட்டும் ஏதோ சத்யத்துக்கு கட்டுப் பட்டது போல இன்னமும் மரத்தில் தங்கி இருக்கிறது.   பல நாட்கள் நாங்கள் யாரும் கவனிக்கவில்லை.  பசுமையான இலைகளுக்கு நடுவில் இது மட்டும் ஏன் தனித்து நிற்கிறது. ஆன படி ஆகட்டும். அதை யாரும் பறிக்க வேண்டாம் என்று தீர்மானித்தோம். ஒரு மாதம் ஆன பின்னும் அப்படியே இருக்கவும் எங்கள் கவனத்தை இழுத்தது.

மனிதன் மாதிரி தான் போலும். ஒரு சிலர் நூறு வயது வரை இருப்பார்களே, அது போல இதுவும் record break  பண்ணப் போகிறது போலும்.  அசையும் அசையா பொருட்கள் யாவும் ஒரே விதமான பரமாணுக்களால்   ஆனவையே என்று நமது சாஸ்திரங்கள் சொல்கின்றன.  ஒரு சமஸ்க்ருத கவி தனது கதா நாயகியை வர்ணிக்கிறார்.  உலகை படைத்தவன் சௌந்தர்யம், லாவண்யம் என்பவைகளுக்கான பரமாணுக்களை ஏராளமாக பயன் படுத்தி  இந்த பெண்ணை படைத்து விட்டார்  போலும் என்று வர்ணிக்கிறார்.

மரங்களுக்கும் உற்றார், பகைவர் என்று உண்டு என்று சுபாஷ் பாலேகர் என்ற புகழ் பெற்ற இயற்கை விவசாய விக்ஞானி. அவர் மாமரங்களை ஆராய்ந்து ஒரு பட்டியல் கொடுத்திருக்கிறார்.  மாமரத்துடன் நட்புடன் வளரக் கூடிய தாவரங்கள், நெல்லி, கொய்யா, இலந்தை , சீதா பழம், மாதுளை கருவேப்பிலை, வாழை, பாப்பாளி, இவை தவிர ஆமணக்கு, மிளகாய், இஞ்சி, சாமந்தி பூ, கொடியில் காய்க்கும் காற்கறிகள்.  துளசி, வெந்தயக் கீரை, புதினா போன்றவை.  மாமரம் நடும் பொழுது மற்ற மரங்களை அதனுடன் நடுவது இல்லை. இந்த நட்பு வகை மரங்கள் சக ஜீவிகள். இவைகளின் பழுக்கும் காலங்களும் வெவ்வேறாக இருக்கும். இயற்கை சீற்றங்களை தாங்கும் சக்தி இவைகளுக்கு இருக்கும். இடைப் பயிராக இவைகளை நட்டால்  சக ஜீவன், சமயத்தில் உதவியாக இருக்கும்.  தவிர ஆண்டு முழுவதும் ஏதோ ஒரு மரமோ, செடியோ விளைச்சல் கொடுக்கும். கட்டைகள் தேவையான சமயம் கிடைக்கும். மரத்தின் நிழலும் பயனுள்ளதாக இருப்பதோடு, இவைகளில் உள்ள சில  மித்ர பூச்சிகள், மாமரத்தில் வரும்  பூச்சிகளை அழிக்கும் தன்மை உடையவை. எனவே இயல்பாக பூச்சி ஒழிப்பு செயலை இவை செய்து விடும்.

அந்த அளவு மனிதனால் செய்ய முடியுமா?  நட்பாக இருக்கலாம்.  சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ளலாம்.  உடல் நிலை கெட்டால் என்ன செய்ய முடியும்.  வருத்தப் படுவதைத் தவிர வைத்யர் தான் துணை.  ஆதரவாக பேசி, உடன் இருந்து கவனித்துக் கொள்ளலாம்.  இந்த ஒற்றை மாதுளம் பழத்திற்கும் தற்சமயம் நலம் விரும்பிகள்  எவரும் அருகில் இல்லை போலும்.

குடும்ப நண்பர் ஒருவர் சில காலமாக நடக்க முடியாமல் வீல் சேரில் இருக்கிறார்.  மற்றபடி  பேசுகிறார்,  செய்தி அனுப்புகிறார்,  ஊர் விஷயங்களை டிவியில் பார்த்து தெரிந்து கொள்கிறார். இந்த ஒரு குறை தான். தொண்ணூறு வயது வரை தானே கார் ஓட்டினார். யோகா பயிற்சி செய்வார். நன்றாக உடை உடுத்து, கோவில் உத்சவங்களுக்குச் செல்வார்.  இப்படி கால் பயன் இல்லாமல் போனதால் மனம் உடைந்து போய் விட்டார். இரு குடும்பத்துக்கும்  இந்திய நாட்டினர்  என்ற ஒற்றுமை தான். மொழி வேறு, செல்வ நிலை வேறு. வயது ஒரு காரணம் நட்பு வளர.

 இரண்டு ஆண்டுகளுக்கு முன் எங்கள் குடும்பத்  தலைவர்  இவரை விட இரண்டு வயதே இளையவர்,   இயற்கை எய்தினார். அந்த இழப்பு அவரை அதிகம் பாதித்து விட்டது.  என்ன  சமாதானம்  நம்மால் சொல்ல முடியும்.  இறைவனை வேண்டுவதைத் தவிர.